Monday, June 06, 2005

கால் நனைத்தவர்கள்- III

மன்சூர் வாப்பா

என் நண்பனின் தந்தை

உன்னை ஞாபகப்படுத்தி பார்க்கையில்

சிங்கப்ப+ர் வேட்டி
எலக்ட்ரானிக் கருவிகள்
வாசற்படிவரை வருகின்ற வாசனைதிரவியம்

இவைகள் தான்
நினைவுகளில் சுற்றுகிறது

தொலைக்காட்சியை
அறிமுகப்படுத்தியது...
மால்கோனி!

எனக்கு
அறிமுகப்படுத்தியது...
மன்சூர் வாப்பா!

என் வயது குழந்தைகளோடு
உன் வீட்டு வாசற்படியில் எடுத்த
ஒரு
சிரித்த புகைப்படம்தான் என்
சின்ன வயது ஞாபகம்

பத்திரப்படுத்த முடிந்தது
ஞாபகம் மட்டும்தான்
புகைப்படம் அல்ல

அந்த
புகைப்படம் தேடி
எத்துணை நாளாய் அலைந்திருக்கிறேன் தெரியுமா?

இன்னும்
தேடிக்கொண்டுதானிருக்கிறேன்
சோகமில்லாமல் சிரிக்கின்ற
அந்த நாட்களை...

நான்
சோகமில்லாமல் சிரத்த
கடைசி சிரிப்பு...
அதுவாகத்தான் இருக்கும்!

------------


குரும்புரம்மா

எங்களுரின்
முதற் பெண்மணி
தொலைக்காட்சி பார்ப்பதற்கு
காசு வசூலிப்பதில்...!


மொழி புரியவிட்டால்கூட
அசைவுகள் கண்டு
கைதட்டுவதற்காக
காசு கொடுத்து பார்த்த நாட்கள்!

ஒரு
காசில்லா மாலைநேரத்தில்
ஜன்னல் கம்பிக்களுக்கிடையே
ஒளியும் ஒலியும்
ஒளிந்து நின்று பார்த்தபொழுது

நீ
விரட்டி விரட்டி விட்டாய்

ஒரு
ஆட்டினைப்போல
நாங்கள்
திரும்பி திரும்பி வந்தோம்

கடைசியில்
வெற்றி எங்களுக்குதான்

ஆம் நீ
ஜன்னல் கம்பிகளுக்கு
திரையிட்டுவிட்டாய்

இப்பொழுது நினைத்துபார்த்தால்
எத்துணை வெட்கமாயிருக்கிறது

இப்பொழுது
நீ இருந்தால்
காசு வாங்காமல்
காட்டியிருப்பேன்!

என் வீட்டிலும்
தலைக்கொம்புகள் போல் முளைத்த...
ஆண்டனா கம்பிகளையும்,...
கலர் டிவியையும்...

-----------------------

மாரி

என்
பால்யவயது
பருவ சிநேகிதன்

அவன் பெயர் இன்னமும்
ஞாபகத்திலிருக்கிறது

ஒரு
மரக்கடையின் ஊழியனா ? முதலாளியா?
ஞாபகத்திலில்லை

அவனுக்கு தெரிந்து சிலமுறை...
தெரியாமல் பல முறை ...
அவன்
கல்லாபெட்டிக் காசுகள்
என் உணவுக்குழாயுக்குள்
தஞ்சம் புகுந்திருக்கிறது

அவன்
பசியாறும் வேளை
நான் சென்றால்
பாதிப்பங்கு எனக்குத்தான்

தினமும் பள்ளிசெல்லுமுன்
எனக்கான இடத்தில்
எப்பொழுதுமே வைத்திருப்பான்
ஒரு பத்துபைசா...
அவன் இல்லாவிட்டாலும் கூட!

ஒருநாள்
பள்ளி செல்லுமுன்
பத்துபைசாவிற்காய் நின்றபோது
வித்தியாசமாய்
அம்பது பைசா கொடுத்தான்...

ஏறிட்டு பார்த்தால்
அழுதபடி முத்தம் தந்தான்

அந்த முத்தத்தின் அர்த்தம்
மாலையில் தெரிந்தது
ஆம்
கடன் தொல்லையால்
தீக்குளித்துக் கொண்டானாம்.!

அந்த மாரி

பள்ளி போகும் வயசில்
அவன் முகமும் - அன்பும் மட்டும்
ஞாபகத்திலிருந்தது

எல்லா கல்வியறிவும் கிடைத்த பிறகு
அவன் மதம் மட்டும்தான்
இப்பொழுது ஞாபகம் வருகிறது

இந்த கல்வியறிவு எனக்கு தேவையா?

-------------------------

- ரசிகவ் ஞானியார்

No comments:

தேன் கூடு