Monday, June 06, 2005

கண்ணீரில் எரியும் குத்து விளக்குகள்

ஆணாகப் பிறந்ததாலே
ஆவின் பால் குடிக்காமல்
பெண்ணாகப் பிறந்ததாலே...
சாவின் பால் குடிக்கின்றோம்!

பல்கலைக்கழகப் பட்டங்கள் கூட...
பெயருக்குப் பின்னால்தான்
வாழாவெட்டி
தாசி
மலடி
விதவை
இந்தப் பல்லுடைந்துபோன
பட்டங்களோ
பெயருக்கு முன்னால்
பேரொளி வீசுகிறது!

ஒரு நீர்க்குமிழியை
உடைப்பதைவிடக்
குறைந்த நேரத்திலேயே
எங்கள்
மனதைச் சிதைத்து விடுகின்றனர்

வரதட்சணையுடன் வந்தால்
குளிப்பதற்கு நல்லெண்ணெய்
வெறுங்கையுடன் வந்தால்
எரிப்பதற்கு மண்ணெண்ணெய்

நாங்கள்
வாழ்க்கையென்ற இரயிலிலே
முதல் ஸ்டாப்பிலேயே
இறக்கிவிடப்பட்டவர்கள்

நாங்களும் ஒரு
டைட்டானிக் தான்
முதலிரவன்று
பிரமாண்டமாக வர்ணிக்கப்பட்டாலும்
பின்னாளில்
மூழ்கத்தானே போகிறோம்

நாங்களும் ஒரு
கால்பந்து தான்
பிறந்து வீட்டிற்கும்
புகுந்த வீட்டிற்கும்
அடித்து அடித்து விரட்டினாலும்
தப்பியோட வழியில்லாமல்
மீண்டும் அந்த
மைதானாத்திற்குள்ளேயே
ஓடி வருவோம்

நாங்கள் ராணி என்றால்
நீங்கள் ராஜா
நாங்கள் தேவி என்றால்
நீங்கள் தேவன்
பெருமைப்படும்பொழுது மட்டும்
உங்களுக்குப் பொதுவுடமை

ஆனால்
நாங்கள் தாசி என்றால்
நீங்களென்ன தாசனா?
நாங்கள் மலடி என்றால்
நீங்களென்ன மலடனா?
சிறுமைப்படும்பொழுது மட்டும்
ஏனோ தனியுடமை?

இனியொரு
புரட்சி செய்வோம்

சீதை இனிமேல்
சிதைக்குச் செல்லமாட்டாள்
சந்தேகப்பட்டால்
ராமன் தீக்குளிக்கட்டும்

மாதவியைத் தேடிச்சென்றால்
கோவலனுக்கும் டைவர்ஸ் நோட்டிஸ்

வெட்கத்தையும் நாணத்தையும்
விகாரத்து செய்து விட்டுத்
தண்ணீரில் எரியும்
தணலாகக்
கண்ணீரில் எரியும்
குத்துவிளக்காக மாறுவோம்

-ரசிகவ் ஞானியார்

3 comments:

Ganesh Gopalasubramanian said...

நிலவு நண்பா

உன் வார்த்தைகள் பொறி பறக்கின்றன

//
நாங்களும் ஒரு
டைட்டானிக் தான்
முதலிரவன்று
பிரமாண்டமாக வர்ணிக்கப்பட்டாலும்
பின்னாளில்
மூழ்கத்தானே போகிறோம்
//

கலக்கிட்டீங்க....... லக்கலக்கலக்கலக்கலக்கலக்கா

Vijayakumar said...

கவிதை சூப்பர். நானும் ஒரு வாட்டி... லக்கலக்கலக்கலக்கலக்கலக்கா

வீ. எம் said...

Super !!

nachunu sollirukeenga sir !! arumai !

V. M

//சீதை இனிமேல்
சிதைக்குச் செல்லமாட்டாள்
சந்தேகப்பட்டால்
ராமன் தீக்குளிக்கட்டும் //

தேன் கூடு