Saturday, November 25, 2006

நெல்லையை மிரட்டும் இரண்டு

நெல்லையில் சமீபகாலமாக இரண்டு விசயங்கள் மக்களை பயமுறுத்திக்கொண்டு வருகின்றது. ஒன்று தொடர் கொள்ளை மற்றொன்று தொடர் மழை இரண்டையுமே தடுக்க முடியாமல் அதிகாரிகள் தவித்துக்கொண்டு இருக்கின்றனர்.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் என்பது புதிய செய்தி அல்ல. எந்த ஆற்றில் தண்ணீர் வற்றினாலும் தாமிரபரணியில் மற்றும் தண்ணீர் வற்றவே செய்யாது. அதனால்தான் வற்றாத ஜீவநதி என்று பெயர் பெற்றது. ஒவ்வொரு மழைக்காலங்களிலும் கரையோர மக்கள் எச்சரிக்கப்படுவார்கள். ஆனால் இந்த முறை ஊரையே எச்சரிக்கவேண்டிய நிலை வந்திருக்கின்றது.

Photobucket - Video and Image Hosting

பல குளங்கள் ஒன்றாக உடைந்து நெல்லையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்களை அவதிக்கு உண்டாக்கி வருகின்றது. ஆற்றில் சென்று குளிப்பவர்கள் வீட்டின் வாசலில் குளிக்கின்றார்கள்.

Photobucket - Video and Image Hosting

நேற்று தாமிரபரணி பாலத்தை நண்பனோடு கடக்கும்பொழுதே பாலத்தின் உயரத்தை தொடவா வேண்டாமா என்று பட்டிமன்றம் நடத்தியபடியே தண்ணீர் வேகமாக சென்று கொண்டிருந்தது.

பாலத்தை கடக்கும்பொழுது கிழே நிற்பவர்கள் எறும்பு போல காட்சி அளிப்பார்கள். அந்தப்பாலத்தையே மூழ்கடிக்கும் வண்ணம் தண்ணீர் வந்திருக்கிறது என்றால் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் எவ்வளவு ஆழம் இருந்திருக்கும் என்று.


நண்பனோடு பாலத்தில் நின்றுகொண்டு வெள்ளத்தை வேடிக்கைபார்த்துக்கொண்டு இருக்கும்பொழுதே காவலர்கள் வந்து எச்சரித்தனர். தம்பி நிற்காதீங்க..போங்க..போங்க... என்று.
என்னடா வெள்ளம் பார்க்க விடமாட்டேன்கிறாங்கன்று எரிச்சலடைந்தபடியே சென்றுவிட்டேன்.

ஆனால் சில மணி நேரத்திற்குப்பிறகு நாங்கள் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பகுதிகளை மூழ்கடித்தபடி கரைபுரண்டு வெள்ளம் வந்துகொண்டிருக்கிறது என்ற செய்திகேட்டு சென்று பார்த்தால் பாலத்தின் இந்தப்புறம் கொடிகள் கட்டப்பட்டு யாரையும் அனுமதிக்கவில்லை. நெடுஞ்சாலைத்துறையும் காவல்துறை அதிகாரிகளும் சுற்றிக்கொண்டிருந்தனர்.

நெல்லை குற்றாலம் சாலைகளில் கழுத்து அளவிற்கு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது. சுற்றியுள்ள டவுண் பேட்டை பகுதிகள் நெல்லையில் இருந்து துண்டிக்கப்படும் அளவிற்கு ஒவ்வொரு வீடுகளிலும் சாதி மதம் பார்க்காமல் வெள்ளம் புகுந்து கடல்களின் நடுவே தீவு போல அந்தப்பகுதிகள் காட்சி அளித்தது.



Photobucket - Video and Image Hosting

வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட மக்களை தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி மீட்டு வந்தனர். இன்னும் கொஞ்சம் மழை பெய்தால் அவ்வளவுதான் அந்தப்பகுதியே முற்றிலுமாக மூழ்கடித்துவிடும்.

இதுபோன்ற வெள்ளத்தை நான் 1992 ம் ஆண்டு தான் கண்டிருக்கின்றேன். எனது ஊரில் உள்ள 50 க்கும் மேற்பட்ட தெருக்களில் தண்ணீர் ஓடியது. திருநெல்வேலி பேருந்து நிலையம் எல்லாம் வெள்ளத்தில் மூழ்கியது. ஆனால் அந்த வெள்ளத்திற்கு இது கொஞ்சம் பரவாயில்லை.

மழை வருவதற்கு முன்பே வடிகால்கள் வெட்டுதல் மற்றும் குளங்களை எல்லாம் சீரமைத்தல்; போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் வெள்ள அபாயங்களிலிருந்து தப்பிக்கலாம். வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று அலட்சியமாக இருப்பதனால்தான் இப்படி மாட்டிக் கொள்ள வேண்டியதிருக்கிறது. இதன்பிறகாவது அதிகாரிகள் மெத்தனமாக இருக்காமல் மழைக்காலம் வரும் முன்பே தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களா?

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு

A wise man in peace time prepares for a war
(இதை யாராவது சரியாக தமிழில் மொழிபெயர்ங்களேன் )

அடுத்து தொடர் கொள்ளை..

சமீப காலமாக தொடர் கொள்ளைகள் அதிகரித்துவிட்டன. நகரின் ஒதுக்குப்புறங்களில் மட்டும் நடந்திருந்தால் மக்கள் நிம்மதியாக இருந்திருப்பார்கள் ஆனால் 24 மணிநேரமும் விழித்துக்கொண்டிருக்கும் திருநெல்வேலியின் பேருந்து நிலையம் அருகே கூட கொள்ளைகள் நடந்திருப்பது மக்களை பீதியில் இருக்க வைத்திருக்கிறது

நெல்லையில் கட்டபொம்மன் நகர் சாந்தி நகர் ரஹ்மத் நகர் அன்பு நகர் - ஸ்டேட் பேங்க காலனி பேட்டை நெல்லை ஜங்ஷன் - பாளை பஸ் நிலையம் என்று கொள்ளைகள் தொடரந்த வண்ணம் இருக்கின்றது.

Photobucket - Video and Image Hosting

பெரும்பாலும் ஆள் இல்லாமல் பூட்டிக்கிடக்கின்ற வீடுகளில்தான் இதுபோன்ற கொள்ளைகள் நடைபெறுகின்றது. அதுவும் வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்று விட்டு திரும்பும் 1 மணிநேர இடைவெளியில் கூட வீட்டைத்திறந்து கொள்ளையடித்து சென்று விடுகின்றது. ஒரே தெருவில் ஒரே நாளில் இரண்டு மூன்று வீடுகளில் கூட கொள்ளைகள் நடந்திருக்கின்றது.

பாளையங்கோட்டை அன்புநகர் அருகே ஆள் இல்லாமல் பூட்டிக் கிடக்கும் வீட்டின் பின்புறம் வழியாக கதவை கொள்ளையர்கள் நோண்டிக்கொண்டிருந்தபொழுது பின்புறம் உள்ள வீட்டில் உள்ள ஒரு பெண்மணி டாய்லெட் செல்ல, பின்புற கதவை திறந்தபொழுது இரண்டுபேர் கதவை திறக்க முயன்று கொண்டிருப்பதைக் கண்டு, யாரு ..என்று கேட்க அவர்கள் தப்பித்து ஓட ஆரம்பித்தனர்.

அந்தப் பெண்மணியிடம் விசாரித்தபொழுது எனது கணவரே ஒரு போலிஸ்காரர்தான். மாறுவேடத்தில் நெல்லையில் உள்ள கொள்ளையனைப் பிடிக்க சுற்றிக்கொண்டிருக்கின்றார். எனது வீட்டின் பின்புறமே திருடன் வந்திருக்கின்றான் பாருங்களேன்..

பின்பு காவலர்களின் கெடுபிடி அதிகரித்ததைக் கண்டு நெல்லையின் இன்னொரு பகுதியான பேட்டைக்கு அந்தக் கொள்ளை கும்பல் இடம்பெயர்ந்திருக்கின்றது.

பேட்டையில் உள்ள ஒருவர் வீட்டை பூட்டிவிட்டு வங்கிக்கு சென்றபொழுது அந்த நேரத்தில் வந்து வீட்டின் முன்புற கதவை உடைத்திருக்கின்றனர் தாங்கள் உடைப்பது யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக அங்கு காய்ந்து கொண்டிருந்த சீலையை திரைச்சீலை போல வீட்டின் கதவு முன்பு கட்டி கதவை உடைத்து கொள்ளையடித்திருக்கின்றனர்.

பாருங்களேன் அந்த நபர் இத்தனை மணிக்கு வங்கிக்கு செல்லுவார் என்று தெரிந்து வந்து கொள்ளையடித்துவிட்டு சென்றிருக்கின்றனர்.

பின்பு பாளை மகாராஜா நகர் பகுதியில் விஞ்ஞானி ஒருவர் குடும்பத்தோடு கோயிலுக்கு சென்று திரும்புவதற்குள் அவரது வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளார்கள்.

திருநெல்வேலி பேருந்து நிலையம் அருகே உள்ள வெல்கம் என்ற போட்டோ ஸ்டுடியோவில் இரவு 12.30 மணிக்கு கொள்ளையடித்துள்ளனர். அதில் என்ன வேடிக்கை என்றால் 12 மணிக்குத்தான் கடை ஊழியர்கள் கடையை அடைத்த விட்டுச் சென்றிருக்கின்றனர்

போலிஸார்களின் கண்களில் மண்ணைத்தூவி விட்டுவிட்டு கொள்ளையடித்துக்கொண்டிருக்கும் அந்தக்கும்பலை பிடிக்கும் தீவிர முயற்சியில் நெல்லை கமிஷனர் உமா கணபதி சாஸ்திரி அவர்கள் புதிய புதிய திட்டங்களை வகுத்து கொள்ளையனை பிடிக்க முழு முயற்சி எடுத்துக்கொண்டிருக்கின்றார்.

கொள்ளை நடக்கும் பகுதிகளில் வாகனசோதனை போலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.மற்றும் தெருவுக்கு ஒரு போலிஸ் என்பது போல எங்கு பார்த்தாலும் போலிஸ்மயமாக காட்சி அளிக்கின்றது.

ஒன் டு ஒன் என்ற புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி பழைய குற்றவாளிகளை கணக்கில் எடுத்து அவர்கள் ஒரு போலிஸ் வீதம் அவர்களது நடமாட்டங்களை கண்காணிக்கின்றனர்.

Photobucket - Video and Image Hosting

மேலும் கொள்ளையனைப்பற்றி மக்கள் கொடுத்த அடையாளங்களை கம்ப்யூட்டரில் வரைந்து அவற்றை பொது இடங்களில் ஒட்டியுள்ளனர். அவன் சிவப்பாக உயரமாக இருக்கும் அந்த நபர் வடமாநிலங்களை சேர்ந்தவனாக இருக்குமோ என்று போலிஸார்களுக்கு துப்பு கிடைக்க நெல்லையில் சாலையோரமாய் கடை வியாபாரம் வைத்திருக்கும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களிடம் துளைத்து துளைத்து விசாரிக்கின்றனர்.

Photobucket - Video and Image Hosting

ஒரு வீடு பூட்டி கிடக்கிறது என்று எப்படி கொள்ளையர்களுக்கு தகவல் கிடைக்கின்றது. அவர்கள் தெருத்தெருவாக பகல் நேரங்களில் கண்காணிக்கின்றார்களா? அல்லது அவர்களுக்கு யாராவது தகவல் கொடுக்கின்றார்களா என்று விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.

இங்கே நெல்லையில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டதை உணர்ந்த கொள்ளையர்கள் மெதுவாக இடம் பெயர்ந்து தென்காசி மேலகரத்தில் ஒரு வீட்டில் கொள்ளை நடத்தியுள்ளனர். உடனே காவலர்கள் உஷாராகி தென்காசி டு நெல்லை பேருந்துகள் வாகனங்கள் என்று சோதனைகளில் இறங்கியுள்ளனர்.

இறுதியாக அவனைப்பற்றிய தகவல் தெரிவிப்பவர்களுக்கு பரிசு என்று பொதுமக்களுக்கு அறிவிப்பு கொடுக்க ஆரம்பித்திருக்கின்றார்கள். வீட்டை பூட்டிவிட்டு வெளியூர்களுக்கு செல்லுபவர்கள் அருகிலுள்ள காவல்துறைக்கு தகவல் தெரிவியுங்கள் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

ஆனால் ஆலயம் போகும்போது - ஷாப்பிங் போகும்போது - வங்கிக்கு போகும்போது என்று ஒவ்வொரு முறையும் காவல்துறையிடம் தகவல் தெரிவித்துக்கொண்டா இருக்க முடியும்?

இப்பொழுது மழை வெள்ளத்தினால் அந்தக் கொள்ளைகள் கொஞ்சம் குறைந்திருக்கின்றது. ஒருவேளை நிலைமையின் பதட்டத்தை குறைக்க கொள்ளையர்கள் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றார்களோ என்னவோ..?

கொள்ளை நடக்கின்ற பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் தானியங்கி வீடியோ கேமிராக்களைப் பொருத்தி கண்காணிக்கலாம். ஆனால் இதள் மூலம் கொள்ளையர்கள் பிடிபடுவார்களோ இல்லையோ தவறு செய்யும் மற்றவர்களும் பிடிபட்டுப் போவார்கள்.

வெள்ளச் சேதமும் கள்ளச் சேதமும் இப்பொழுது குறைந்து கொண்டு வருகின்றது.

நடைபெற்ற தொடர்கொள்ளையினால் நெல்லை மக்கள் இன்னமும் பயத்தில் தான் இருக்கின்றார்கள். நிம்மதியாக வீட்டை பூட்டி விட்டு செல்லமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக வடியத்தொடங்கிவிட்டது. போக்குவரத்துகள் எல்லாம் சீராகிக்கொண்ட இருக்கின்றது. ஆனால் கடைசியாக கிடைத்த தகவல்படி நேற்று ( 24.11.06) பாளையங்கோட்டையில் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற ஒருவரது வீட்டில் கொள்ளை நடந்துள்ளது.
தொடர்மழை - தொடர் கொள்ளை
ஆள் இருக்கின்ற வீட்டிலும் நுழைந்துவிடும்

ஆள் இல்லாத வீட்டில்தான் நுழைவான்

பகல் இரவு என்று நேரகாலம் பார்க்காமல் வரும்
பெரும்பாலும் இரவில்தான்

கையில் கிடைத்ததை அள்ளிக்கொண்டு ஓடும்
விலையுயர்ந்த பொருள் - பணம் என்று தேடிப்பிடித்து
சுருட்டுவான்

எவ்வளவு மக்கள் கூடி நின்று எதிர்த்தாலும்
தகர்த்துவிட்டு நுழையும் மக்கள் கூடி நின்று எதிர்த்தால் ஓடிவிடுவான்



யாருக்கும் பயப்படாது - காவல்துறைக்கு பயப்படுவான்

தனிப்படை அமைத்தால் தனிப்படையும் தண்ணியில்தான்!
தனிப்படை அமைத்தால் ஒருவேளை பிடிபடலாம்

வரும்முன் வானிலை அறிக்கையில் சொல்லிவிடுவார்கள்

மக்களின் மனநிலை அறிக்கைதான் சொல்லும்

வீட்டுக்குள் இருக்கும்போதும் பயம்
வீட்டைவிட்டு வெளியே சென்றால் பயம்.

வருவது தெரிந்தால் மாடிக்கு சென்று விடவேண்டும்
வருவது தெரிந்தால் வாசலுக்கு வந்துவிடவேண்டும்

வந்தால் இடம் சுத்தமாகிவிடும் -

வந்தால் பொருட்கள்
சுத்தமாகிவிடும்


பாதுகாப்பு கோரி கடவுளிடம் பிரார்த்திக்கலாம்
பாதுகாப்பு கோரி காவல்துறையிடம் புகார்
கொடுக்கலாம்.



இந்த தொடர் கொள்ளையை தடுக்க எவ்வாறெல்லாம் நடவடிக்கை எடுக்கலாம் என்று நண்பர்கள் தங்களுக்கு உண்டான யோசனையை தெரிவித்தால் காவல்துறைக்கு உதவியாக இருக்கும்.


- ரசிகவ் ஞானியார்

8 comments:

நெல்லை சிவா said...

நேரடி விசிட் செய்த மாதிரி இருந்தது ரசிகவ்.

மழை நிற்க ஆரம்பித்து விட்டது என்று கேள்விப் பட்டேன்.

தொடர் கொள்ளை, தடுக்கப் பட வேண்டிய ஒன்று.

ஜியா said...

நான் ஏதோ 'இரண்டு' படத்தைப் பற்றித்தான் கூற வருகிறீர்களோ என்று நினைத்தேன். மழையைப் பற்றி வீட்டிலிருந்து தகவல் கிடைத்தது. கொள்ளையைப் பற்றி உங்கள் பதிவிலிருந்துதான் தெரிந்து கொண்டேன். இரண்டுக்கும் வழி தீர இறைவனை வேண்டுகிறேன்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//நெல்லை சிவா said...
நேரடி விசிட் செய்த மாதிரி இருந்தது ரசிகவ்.

மழை நிற்க ஆரம்பித்து விட்டது என்று கேள்விப் பட்டேன்.

தொடர் கொள்ளை, தடுக்கப் பட வேண்டிய ஒன்று. //



கருத்துக்கு நன்றி...
சரி எப்போ நேரடி விசிட் பண்ணப்போறீங்க..:)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Zia said...
நான் ஏதோ 'இரண்டு' படத்தைப் பற்றித்தான் கூற வருகிறீர்களோ என்று நினைத்தேன். மழையைப் பற்றி வீட்டிலிருந்து தகவல் கிடைத்தது. கொள்ளையைப் பற்றி உங்கள் பதிவிலிருந்துதான் தெரிந்து கொண்டேன். இரண்டுக்கும் வழி தீர இறைவனை வேண்டுகிறேன். //


பிரார்த்தனைக்கு நன்றி...

வீட்டில் சொல்லி எச்சரிக்கையாக இருக்கச் சொல்லுங்கள்

தாணு said...

ரசிகவ்
நெல்லையிலா இருக்கிறீர்கள்? தி-லி யில் வெள்ளம் என்பதே குறிஞ்சிப் பூ மாதிரி,அப்படியே ஜங்க்ஷனில் வந்தாலும் ஹைகிரவுண்டுக்கு எதுவும் வராதுன்னு கல்லூரியில் படித்த காலங்களில் பேசிக் கொள்வது உண்டு. எங்க ஊர் பக்கமும் ஆத்தூர்-முக்காணி பாலம் மூழ்கி வெளியே எங்கும் போக முடியலைன்னு அக்கா போன் பண்ணியிருந்தாங்க.
அந்தக் கொள்ளை விஷயம்தான் தாங்க முடியலை. இரவு ஆட்டம் சினிமா பார்த்துட்டு கூட போப்புலர் , ரத்னா தியேட்டரிலிருந்து பெண்கள் மட்டுமே கூட ஜாலியா நடந்து வருவோம். வன்முறையும் அராஜகமும் அடிமட்டத்துக்குள்ளும் புரையோடிக்கொண்டிருக்கிரது

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//அந்தக் கொள்ளை விஷயம்தான் தாங்க முடியலை. இரவு ஆட்டம் சினிமா பார்த்துட்டு கூட போப்புலர் , ரத்னா தியேட்டரிலிருந்து பெண்கள் மட்டுமே கூட ஜாலியா நடந்து வருவோம். //

ஆமா தாணு நான் நெல்லையில்தான் இருக்கின்றேன்.

நீங்க நொன்ன நிலாக்காலங்கள் எல்லாம் அந்தக்காலம்பா..இப்போ ரொம்ப மாறிப்போச்சு

ஜி said...

என்ன நண்பரே!

ரொம்ப நாளா ஒரு மெஸேஜையும் காணோம்...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ஜி said...
என்ன நண்பரே!

ரொம்ப நாளா ஒரு மெஸேஜையும் காணோம்... //



நேரம் கிடைக்கவில்லை நண்பா....

தேன் கூடு