
உணவு, உடை, இருப்பிடம் போன்ற அத்தியாசியத்தேவைகளோடு இப்பொழுது அடம்பிடித்து இடம்பிடித்துக் கொண்டது செல்போன்.
தகவல் பரிமாற்றங்களின் வளர்ச்சி பிரமிக்க வைக்கின்றது. யாரை வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் அவர்கள் சுவிட்ச் ஆப் செய்யாதவரை.
இப்பொழுது இரண்டே இரண்டு வகை மனிதர்கள்தான் இருக்கின்றார்கள்
தொடர்பு வெளிக்கு அப்பால் இருப்பவர்
தொடர்பு எல்கைக்குள் இருப்பவர் எனக்கு செல்போன் பரிச்சயமானது 1999 ம் ஆண்டு பிஎஸ்ஸி முடித்தவுடன் எர்செல் நிறுவனத்தில் பணிபுரியும்பொழுது எனக்கு செல்போன் தரப்பட்டது.
கைகளில் உலகமே வந்து விட்டதைப்போல குதித்தேன். ஆனால்
நமக்கே தெரியாமல் நம்முடைய சுதந்திரத்தை பறிப்பதில் இந்த செல்போன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதை அப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன். பின்னர் எம்சிஏ கிடைத்தவுடன் அந்தப் பணியை விட்டவுடன் செல்போனோடு எனது தொடர்பு முடிந்துபோனது.
பின்னர் பணி நிமித்தமாக 2002 ம் ஆண்டு சூன் மாதம் துபாய் சென்றபொழுது எனது தங்கையின் கணவர் செல்போன் பரிசளித்தார். அது 3310 நோக்கியா மாடல்.
பின்னர் வாய்ஸ் ரெக்கார்டிங் மற்றும் எப் எம் வசதி உள்ள இன்னொரு நோக்கியா மொபைல் வாங்கினேன். பின்னர் 6600 வாங்கினேன். அதுவும் ப்ளுடூத்தின் வழியாக எந்தப் பொறாமைப்பிடித்தவனோ வைரஸ் பாய்ச்சிவிட அதனையும் மாற்றி தற்பொழுதுவரை 6310 என்ற மொபைல்தான் கைக்குள் அடக்கமாயிருக்கின்றது.
துபாயில் நல்ல வேலையில் இருக்கும் எனது நண்பன் ஒருவன் நீண்ட நாளாக செல்போன் வாங்காமல் இருந்து 6 மாதங்களுக்கு முன்புதான் செல்போன் வாங்கினான்.
அவனிடம்
"சாதாரண கூலித்தொழிலாளி கூட செல்போன் வைத்திருக்கின்றான். ஆனால் நீ இன்னும் வாங்கவில்லையே ஏன் ?" என்று கேட்டபொழுது,
அவன் கூறினான்.
"செல்போன் வைத்திருந்தால் எப்பொழுது வேண்டுமானாலும் நான் எங்கே இருந்தாலும் எனது முதலாளி அழைக்கக் கூடும்.
நாம் எப்போதும் யாருடைய கண்காணிப்பில் இருப்பது போல தோன்றுகிறது. நமது சுதந்திரம் பறிபோனது போல உணர்கின்றேன். நிம்மதியாய் இருக்கமுடியாது"
அதுவும் ஒருவகையில் உண்மைதான். கழுத்தில் மாட்டப்பட்டிருக்கும் செல்போன் கழுத்தை மட்டுமல்ல நம்மையும் ஒரு சிறிய வட்டத்திற்குள் கொண்டு வந்துவிடுகின்றது. இது சிலருக்கு வளர்ச்சியாகவும் சிலருக்கு தொந்தரவாகவும் தெரிகின்றது.
இப்பொழுது நீங்கள் வரும்பொழுது கூட சாலையில் கவனித்திருக்க கூடும். யாராவது ஒருவர் தலையை ஒருக்களித்தபடி செல்போனில் பேசியபடி பைக்கில் பயணம் செய்வதை.
அது பந்தான்னு சொல்றதா இல்லை அவசரம்னு சொல்றதா தெரியவில்லை.
இப்பொழுதெல்லாம் தனியாகப் பேசிக்கொண்டிருந்தால்
செல்லக்கிறுக்கனா அல்லது
செல் கிறுக்கனா? என்பதைக் கண்டறிவது கஷ்டம்தான்.
அப்புறம் இந்த மிஸ்கால் சமாச்சாரம்.
"டேய் நான் அந்த இடத்திற்கு வந்தவுடன் மிஸ்கால் கொடுக்கிறேன். நீயும் வந்திடு "
"சரிடா அப்படின்னா நான் ஆபிஸை விட்டுக் கிளம்பும்பொழுது மிஸ்கால் கொடுக்கின்றேன் "
என்று காசை மிச்சப்படுத்த எங்கேயும் எப்போதும் மிஸ்கால் கொடுத்தே தகவல்கள் பரிமாறப்பட்டது.
சாப்பிடும் முன் - உறங்கும் முன் - கல்லூரிக்குள் நுழைவதற்குமுன் - கல்லூரியை விட்டு வெளியே வரும்பொழுது - வீடு வந்து சேரும்பொழுது என்றுடிபொழுது - அதிகமாய் காதலர்கள் மிஸ்காலை பரிமாறிக் கொள்கின்றார்கள்.
இப்படி மாத்திரை சாப்பிடுவது போல சாப்பிடும் முன் - சாப்பிட்ட பின் என்று நேரம் காலம் இல்லாமல் மிஸ் கால் கொடுக்கின்ற பெருமை காதலர்களைச் சாரும்.
காதலித்துப்பார்
முதல் மிஸ்டு காலும் அவள்தான்
முதல் டயல்டு காலும் அவள்தான்புதிதாய் திருமணம் ஆனவர்களுக்கும் இதுபோன்ற மிஸ்கால் வர ஆரம்பிக்கும்.
அது உண்மையில் மிஸ்கால் அல்ல மிஸஸ்கால்.துபாயில் எனது அலுவலகத்தில் என்னுடன் வேலை பார்த்த பாகிஸ்தானிய
நண்பன் சாஜித் என்பவன் எனக்கு அடிக்கடி மிஸ்கால் கொடுத்து தொந்தரவு செய்து கொண்டே இருப்பான். நான் அவனை பலமுறை எச்சரித்திருக்கின்றேன். ஆனால் அவன் கேட்பதாய் தெரியவில்லை.
நாளடைவில் மிஸ்காலின் தொந்தரவுகள் அதிகமாகியது. நான் மேனேஜரோடு அவரது அறையில் பேசிக்கொண்டிருக்கும்பொழுது , சில சமயம் மீட்டிங் நேரத்தில் என்று அடிக்கடி மிஸ்கால் கொடுக்க ஆரம்பித்தான். நான் எரிச்சலுற்று அவனிடம் ,
"சாஜித் வேண்டாம் மிஸ்கால் கொடுக்காதே..மேனேஜர் எரிச்சல் அடைகிறார்..
அவர் அறைக்கு செல்லும் போது மட்டுமாவது மிஸ்கால் கொடுக்காம இரேண்டா " என்க
அவன் எனது பேச்சினை அலட்சியப்படுத்தினான்..
"அடிக்கடி மிஸ்கால் கொடுக்காதே அப்புறம் நீ வருத்தப்படுவே "என்று கடைசியாய் எச்சரித்தேன். அவன் கண்டு கொள்ளவே இல்லை. நான் என்ன செய்துவிட முடியும் என்ற தைரியத்தில் இருந்து விட்டான்
நான் ஒருநாள் மாலையில் Yahoo சாட்டிங்கில் சென்று அவனது செல்நம்பரை குறிப்பிட்டு
"நான் 22 வயது அழகி..துபாயில் தனியாக இருக்கின்றேன்..எனக்கு யாராவது கம்பெனி கொடுங்கள்" என்று அடிக்கடி டைப் செய்து அனுப்பினேன்.
அன்று இரவிலிருந்து அவனுக்கு போன் வர ஆரம்பித்துவிட்டது. நான் தினமும் அவனுடைய தொலைபேசி எண்ணைக் குறிப்பிட்டு , மறுபடியும் மறுபடியும் சாட்டிங்கில் எழுத ஆரம்பிக்க, அவனுக்கு உலகத்தின் எல்லா மூலைகளிலிருந்தும் தொந்தரவு செய்து கால்கள் வர ஆரம்பித்துவிட்டன.
சில சமயம் அலுவலகத்தில் இருக்கும்பொழுது கூட அவனுக்கு போன் வர ஆரம்பிக்க, அவன் கடைசியாய் எரிச்சலுற்று செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டான்.
பின் அவனக்கு நிலைமை புரிந்து விட்டது .அதற்கு காரணம் நான்தான் என்று.
என்னிடம் வந்து கோபமுற்றான். என்னிடம் சரியாய் பேசவும் மாட்டான். பின்னர் அவனாகவே வந்து மன்னிப்பு கேட்டான்.
"நான் கிண்டலுக்தானடா மிஸ்கால் கொடுத்தேன் நீ ஏண்டா இப்பஎடி பண்ணின" என்று ஒரு நாள் என்னிடம் வந்து கேட்க,
" நானும் கிண்டலுக்குத்தான்டா பண்ணினேன்" என்று சமாதானமாகிப்போனோம்.
அந்தச் சம்பவத்திற்குப்பிறகு என்னுடைய தொலைபேசியில் மிஸ்கால் பகுதியில் அவனுடைய எண்ணை நான் இதுவரை கண்டதே இல்லை.
சில அறுவை ஆசாமிகளிடம் இருந்து தப்பிக்க செல்போனில் ரிங்டோனை ஆன் செய்து போன் வருவது போல பாசாங்கு செய்து தப்பிவிடுவது என்னுடைய வழக்கம்.
இன்றைய கால ஓட்டத்தில் அவசர தகவல் பரிமாற்ற சாதனமாக செல்போன்கள் விளங்குகின்றது. ஆள் பாதி, ஆடை பாதி என்பது போல செல் போன் இல்லாத மனிதனை காணுவது அரிதாக இருக்கின்றது.
அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யவே கஷ்டப்படுகின்ற ஒருவன் கூட ஒருநாளாவது செல்போன் வாங்க மாட்டோமா என்றுதான் லட்சியங்கள் வைத்திருக்கின்றான்.
பாரதி இருந்திருந்தால்,
தனியொருவனுக்கு செல்போன் இல்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று பாடலை இக்காலகட்டத்திற்கு ஏற்றவாறு மாற்றிப் பாடியிருப்பான்.
செல்போன்கள் உலகத்தை சுருக்குவது மட்டுமின்றி நமது சுதந்திரத்தையும் சுருக்குகின்றது என்பது உண்மைதான். இனி வரும் காலத்தில் மனிதனின் பெயர்களுக்குப் பதிலாக எண்களே பெயர்களாக மாறப்போகிறது நிச்சயம்.
"ஹலோ நீங்க 98420xxx423 "
"நேத்து 98421xxx109 ஐ பார்த்தேன்டா 98420xxx845 யோடு போய்கிட்டு இருக்கான். அவனை 98420xxx786 இடம் சொல்லிக்கொடுக்கப் போறேன் பாரேன்.. "
அப்படின்னு பேசுகின்ற காலம் வரத்தான் போகிறது பாருங்களேன்.
தூரத்தில்
கழுத்தில் பட்டையடிக்கப்பட்ட
நாய் ஒன்றினை
அழைத்து செல்கின்றான் ஒருவன்
ஏதோ உறுத்தவே ...
உற்று நோக்குகின்றேன்
கழுத்தில் செல்போன்.-ரசிகவ் ஞானியார்