Thursday, January 10, 2008

எங்க ஊரு மாதவப்படையாச்சி



திருநெல்வேலி மேலப்பாளையம் சந்தை பேருந்து நிலையம் அருகே நான் கல்லூரி செல்கின்ற நாள் முதலாய் கவனித்துக்கொண்டுதானிருக்கின்றேன் இந்த முதியவரை. ஒரு ஹோட்டலில் சர்வராக பணிபுரிந்து கொண்டு இருக்கின்றார்.

குறிப்பிட்ட நேரத்தில் திடீரென்று வெகுண்டு மிரண்டு வெறித்தனமாய் கத்திக்கொண்டிருப்பார். ஆனால் யாருக்கும் எந்த இடைஞ்சலும் செய்யமாட்டார். ஒரு பெரும் கூட்டத்தையே மிரட்டுவது போல அவருடைய கத்தல் இருக்கும்.

ஏய்..ட்டுர்…ஏ…ய்.. ஏ…….ய்.. என்று கைகளை மேலும் கீழும் அசைத்துக் கத்துவார். இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் கத்திக்கொண்டே ஓடுவார்.

இவர் அப்படி கத்தும்பொழுது கடந்து செல்லும் நபர்கள் பேருந்தில் பயணிப்பவர்கள் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் பேருந்துக்கு காத்து நிற்பவர்கள் என்று அனைவரின் கவனமும் இவர் பக்கம்தான் திரும்பி பார்த்து பின் சகஜ நிலைக்கு திரும்பி விடுவார்கள்.

ஆனால் இவருடைய கத்தல் தொடரந்து நீடிக்காது சுமார் ½ மணி நெரத்திற்குப் பிறகு இவரும் சகஜ நிலைக்குத் திரும்பி தனது வேலைக்குத் திரும்பி அந்த ஹோட்டலில் விட்டுப்போன தனது பணியை அமைதியாய் தொடர்ந்து செய்வார்.

அவரா கத்தினார் என்று நினைக்கத் தூண்டும் அளவுக்கு தனிது பணியை தொடர்ந்து செய்து மற்றவர்களை ஆச்சர்யப்படவைப்பார். அவருக்கே தெரியாது அந்த குறிப்பிட்ட நேரத்தில் அவர் கத்தியது.

ஹோட்டல் நிர்வாகமும் அவருடைய கத்தலுக்குப் பழகிப்போய் அவருக்குண்டான கத்தல் நேரத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிடும். சாப்பாடு நேரம் போல அவருக்கு கத்தல் நேரம் வழங்கப்பட்டிருக்கிறது என்பது சோகமான நிலை.

பழகிப்போனவர்களுக்கு இவருடைய கத்தல் ஒரு பைத்தியக்காரனின் கத்தலாகத்தோன்றும். ஆனால் புதிதாய் பார்ப்பவர்கள் கொஞ்சம் மிரண்டுதான் போவார்கள்.

ஆனால் இந்தக் கத்தலுக்குப் பின்னால் ஏதாவது ஒரு காரணம் இருக்குமோ என்று என் மனம் உறுத்திக்கொண்டே இருக்கும். ஒருவேளை மகன்கள் கைவிட்டிருப்பார்களா? அல்லது யாராவது மிரட்டிருப்பார்களா? இல்லை? ? ? ? ?…என்று நிறைய கேள்விக்குறிகளோடுதான் அவர் கத்துதலைப் கவனித்துக்கொண்டிருப்பேன். ஆனால் அவரிடம் கேட்கின்ற தைரியமில்லை.

சென்ற வாரம் ஊருக்குச் சென்றபொழுதும் அதுபோல அந்த மனிதர் கத்திக்கொண்டிருந்தார்.

ஏய்..ட்டுர்…ஏ…ய்.. ஏ…….ய்..

நான் அவரை நிறுத்தி கேட்டுவிடலாம் என்ற தைரியத்தில் மெல்ல பக்கத்தில் சென்றேன். என்னைப்பார்த்து அதே கத்துதலைத் தொடர்ந்து பின் வேறு பக்கமாய் திரும்பி கத்திக்கொண்டே சென்று விட்டார்.

விசாரித்த வரையில் அவர் ஏதோ ஒரு பயங்கரமான சம்பவத்தை அவர் கண்ணெதிரே கண்டிருக்கின்றார் அதிலிருந்து அவர் இப்படித்தான் திடீர் திடீரென்று கத்திக்கொண்டு ஓடுவார் என்று சிலர் கூறுகின்றனர்.
எனக்கு உறுத்திக்கொண்டே இருக்கின்றது.

ஒரு நாள் அவர் சகஜநிலைக்குத் திரும்பி பணிபுரிந்து கொண்டு இருக்கும்பொழுது அவரிடமே கேட்டுவிடலாமோ என்று தோன்றுகின்றது.

இதுபோல பேருந்து நிலையம் அருகே இல்லை சாலையோரங்களில்; அழுக்கு ஆடைகளோடு சுற்றிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவர் பின்னாலும் மாதவப்படையாச்சி போல ஏதாவது ஒரு கதை இருக்க கூடும்.

- ரசிகவ் ஞானியார்

2 comments:

cheena (சீனா) said...

உண்மை - நிகழும் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஒரு அடிப்படைக் காரணம் இருந்தே ஆக வேண்டும். அது யாருக்குமெ தெரியாது / புரியாது

கதிர் said...

//இதுபோல பேருந்து நிலையம் அருகே இல்லை சாலையோரங்களில்; அழுக்கு ஆடைகளோடு சுற்றிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவர் பின்னாலும் மாதவப்படையாச்சி போல ஏதாவது ஒரு கதை இருக்க கூடும்.//

கண்டிப்பா இருக்கும். அவங்க அப்படியே பிறந்து வந்துடலயே!
ஒவ்வொருத்தருக்கு பின்னாலயும் நாம் ஆச்சரியப்படற அளவுக்கு ஒரு விஷயம் இருக்கும்.

தேன் கூடு