Tuesday, October 10, 2006

சௌதிக்கு வேலைக்கு வரும் தாய்க்குலங்களுக்கு



TAFAREG குழுமத்தில் இருக்கின்ற நண்பர் லக்கி ஷாஜகான் அவர்கள் எனக்கு அனுப்பிய என்னை மிகவும் பாதித்த இந்த நிகழ்ச்சியை விழிப்புணர்க்காக வலைப்பதிவர்களின் பார்வைக்கு வைக்கின்றேன்.

சௌதிக்கு வேலைக்கு வரும் தாய்க்குலங்களுக்கு...
-


நாலைந்து வாரத்திற்கு முந்தைய ஒரு வியாழக்கிழமை .. இரவு 12 மணிக்கு டீவியில் படம் பார்த்துக் கொண்டே தூக்கத்துக்கு முயற்சி செய்து கொண்டிருந்த வேளையில் இருந்தபோது செல்பேசி அழைத்தது. இந்நேரத்துக்கு யாராக இருக்கும் என்று பார்த்தால் அழைப்பில் இருந்தது சித்தப்பா...

"யாரோ ஒரு தமிழகத்துப் பெண்மணி - சௌதிக்கு வேலைக்கு வந்தவர் என்ன பிரச்னைகளோ தெரியவில்லை , வேலை பார்க்கும் அரபி வீட்டிலிருந்து ஓடி வந்து பத்தாவில் அந்தப் பெண்மணியின் உறவினர் வீட்டில் அடைக்கலம் ஆகியிருப்பதாகவும், அந்த உறவினர் சித்தப்பாவை சந்தித்து, அந்தப் பெண்மணியை ஊருக்கு அனுப்பி வைக்க என்ன வழி என்று கேட்க, தூதரகத்தை அணுக ஆலோசனை கூறிவிட்டு உதவிக்கு என்னை கைக்காட்டியிருப்பதாகவும் நாளை அவர்களைப் போய் சந்திக்கும்படியும் சொல்ல" மறுநாளே நண்பர் ஒருவருடன் நான் அந்தப் பெண்மணியை அவர் உறவினர் வீட்டில் வைத்து சந்தித்தேன் .
* * *

பொதுவாகவே வளைகுடா நாடுகளுக்கு குறிப்பாக சௌதி அரேபியாவிற்கு தமிழகத்தை சேர்ந்த பெண் மணிகள் வேலைக்கு வருவதில்லை.

விசா வழங்கப்படுவதில்லையா அல்லது நம் தாய்க்குலங்கள் விரும்புவதில்லையா என்று நெடுநாளாகவே எனக்கு ஒரு சந்தேகம் உண்டு . திருநெல்வேலியை சேர்ந்த ஃபாத்திமா பீவிக்கு( பெயர் மாற்றியிருக்கிறேன் ) கல்யாண வயதில் இரண்டு பெண்கள். எந்தவித அனுசரணையும் உறவுகளிடம் பெரிதான அளவில் உதவிகளும் கிடைக்கப் பெறாத ஒரு வறட்சியான தருணத்தில் சௌதியில் வீட்டு வேலைக்கு ஆள் தேவை - டிராவல்ஸில் விசா இருக்கிறது என்று கேள்விப்பட்டு அதீதமாய் தகுதிக்கு மீறிய கடன் சுமையோடு பணம் கட்டி சௌதி வந்து இறங்கி விட்டார் ஐம்பது வயதான ஃபாத்திமாபீவி.

இது போல் வீட்டு வேலை செய்ய வந்த பெண்களை சௌதி பாஷையில் "ஹத்தம்மா " என்று அழைக்கிறார்கள். வேலைக்கு வந்த சௌதி வீட்டில் அந்த சௌதியின் மகள் திருமணம் வரை ஃபாத்திமா பீவி வேலை பார்த்திருக்கிறார் .பின்பு அந்த சௌதி அவரை தன் சகோதரி வீட்டில் வேலை பார்க்க கொண்டு போய் விட அந்த புதிய வீட்டில் ஏற்கனவே இன்னும் நான்கு பணிப்பெண்கள் . கென்யா, ஃபிலிப்பைன் , இந்தோனேஷியா,இலங்கை என்ற நான்கும் நான்கு தேசம் .இதல்லாது நம் தமிழத்தை சேர்ந்த ஓட்டுனர் வேலை பார்க்கும் இளைஞரும் ஒருவர் .

பத்து வருடங்களுக்கு மேலாக அந்த வீட்டில் வேலை பார்த்து வரும் மூத்த - சீனியர் கிரேடு - வேலைக்கார அம்மணி-இந்தோனேஷிய பெண்மணிக்கு ஃபாத்திமா பீவியை கண்டாலே ஆவதில்லை . நாயை வேலை சொன்னால் அது வேறெதையோ வேலை ஏவுமாம் என்று சொல்வது போல் அந்த சௌதி பெண்மணி சொல்லும் வேலைகளை ஃபாத்திமா பீவியிடம் செய்ய சொல்லிவிட்டு ஹாயாக இருந்திருக்கிறார் இந்தோனேஷியப் பெண்மணி .

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சம்பளம் என்ற விதிமுறையில் ஃபாத்திமாபீவிக்கு முன்பு வேலை பார்த்த இடத்தில் சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது .. ஆனால் இங்கு வந்த பிறகு அது மூன்று மாதத்திற்கு ஒரு முறை சில போது நினைத்துக் கொண்டால் தருவது என்றெல்லாம் சம்பளம் அலைக்கழிக்கப்படிருக்கிறது .

சௌதி பெண்மணியும் - ஃபாத்திமா பீவியும் நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டு தானே எஜமானி போல் அதிகாரம் செய்து வந்திருக்கிற இந்தோனேஷிய பெண்மணிக்கும் - நம்மூர் ட்ரைவருக்கும் ஏதோ Understand இருந்திருக்கிறது (கஷ்டம்டா சாமி.. ) . அதனால் அந்த ட்ரைவரும் ஃபாத்திமா பீவியை இந்தியர்தானே - தமிழ்நாடுதானே என்றெல்லாம் பார்க்காமல் ஃபாத்திமா பீவியை ஏமாற்றவும் ஆரம்பித்திருக்கிறார் .

அவரிடம் ஃபாத்திமா பீவி தான் வாங்கிய சம்பளத்தை கொடுத்து ஊருக்கு அனுப்ப சொல்ல முதல் தடவை மட்டும் அந்தப் பணம் வீட்டுக்குப் போயிருக்கிறது . அதற்குப் பின் அனுப்பியவை என்ன ஆனதென்றே தெரியவில்லை. நான் பணம் அனுப்பி வைத்தேன்.. கிடைக்காததுக்கு நான் என்ன பண்ண முடியும் என்ற ரீதியில் பேச ஆரம்பித்திருக்கிறார் அந்த ட்ரைவர் .வெளி நாட்டில் தமிழனுக்கு தமிழன் தான் எதிரி என்று கேள்விப்பட்டிருக்கிறேன் .. அந்த ட்ரைவர் நிரூபித்திருக்கிறான்.

ஒரு காலகட்டத்துக்கு அப்பால் ஃபாத்திமா பீவிக்கு தொந்தரவுகள் அதிகமாக ஆரம்பித்திருக்கிறது

சாப்பிடும் உணவில் குளோரக்ஸ் ஊற்றித் தந்து சாப்பிடச் சொல்லியது அதில் ஒரு உச்சபட்ச கொடுமை . இதற்கிடையே அந்த சௌதி பெண்மணியின் பெண் குழந்தைகளை பள்ளியில் விட்டு அழைத்து வருவது அந்த ட்ரைவரின் கடமைகளில் ஒன்று . அந்த குழந்தைகளிடம் இவன் ஏதோ பாலியல் தொந்தரவு செய்ய முயன்றிருக்கிறான். அதை குழந்தைகள் வந்து சொல்ல அவனை கண்காணிக்க அந்த சிறுமிகளுடன் ஃபாத்திமா பீவியையும் குழந்தைகளுடன் சேர்த்து அனுப்பி வைக்க கடுப்பான ட்ரைவர் சிறுமிகளை விட்டு வரும்போது காரை கன்னாபின்னாவென்று ஓட்டி கண்டபடி பயம் காட்டி இனிமே நான் போகவில்லை என்று ஃபாத்திமா பீவி கதறிக் கொண்டு சௌதி பெண்மணியிடம் சொல்லுமளவிற்கு செய்திருக்கிறான் .

இதைப் புரிந்து கொள்ளாத சௌதி பெண்மணியும் நான் சொன்ன வேலையை செய்ய முடியாதா என்று அடித்து அவள் பங்குக்கும் காயப்படுத்தியிருக்கிறாள் . முன்னைவிட ஃபாத்திமா பீவி மீதான தாக்குதல்கள் வலுப்பெற தொடங்கியிருக்கின்றன .
எதேச்சையாக ஒரு நாள் தன் அத்தை வீட்டுக்கு வந்த முன்னாள் சௌதியின் மகள்

- ஃபாத்திமா பீவியைப் பார்த்து அவர் நிலை கண்டு பரிதாபப்பட்டு மறுநாளே தந்தை வீட்டிலிருந்து ஃபாத்திமாபீவியின் பாஸ்போர்ட்டை எடுத்து வந்து தந்து அங்கிருந்து எப்படியாவது போய்விடுமாறு சொல்லி உதவி செய்து விட்டு போக அந்த வீட்டிலிருந்த மற்றொரு இலங்கை தேசத்து பணிப்பெண் அந்த வீட்டை விட்டு வெளியேற கையிலிருந்த காசு தந்து உதவி செய்ய ஃபாத்திமா பீவி டாக்ஸி ஏறி பத்தா வந்து விட்டார் .
* * *

முகத்தில் கிழிக்கப்பட்ட காயங்களுடனும்,தூக்கங்கள் பார்த்து வெகு நாளான, சோர்ந்து போயிருந்த ஃபாத்திமா பீவியைப் பார்க்க மனம் வேதனையில் கசிந்து போனது .. என் அம்மா வயது பெண்மணி.. சம்பாதிக்கும் பொருட்டு வந்து இப்போது ஊருக்கு போனால் போதும் என்றிருக்கிறார் . அவரின் பாஸ்போர்ட்டை வாங்கி பரிசோதித்தேன். அப்போதுதான் இன்னொரு திகைப்பான தகவலும் தெரிந்தது.. அவர் வந்து இரண்டு வருடங்கள் முடிவடைந்தும் இன்னும் இக்காமாவே அடித்து தரவில்லையாம் ..

எந்த ஏரியாவில் வேலை பார்த்தார் என்று எந்த விபரமும் சொல்லத் தெரியவில்லை .டாக்ஸியில் ஏறி இங்கு வந்து சேர டாக்ஸி ட்ரைவர் ஐம்பது ரூபாய் பெற்றுக் கொண்டதாக சொன்னார். ஒரு மணி நேரம் பயணித்த தூரம் இருக்கலாம் என்றார்..இதை தவிர என்னால் வேறெந்த தகவலும் அவரிடமிருந்து பெற முடியவில்லை .
உடனே இது தொடர்பாய் பணிகளை செய்து கொண்டிருக்கும் மூத்த நண்பர் ஒருவரை செல்பேசியில் தொடர்பு கொண்டு ஆலோசித்தேன்.

அவர் வழிகாட்டியதன் பேரில் காரியத்தில் இறங்க மளமளவென்று வேலைகள் நடக்க ஆரம்பித்தது . இந்திய தூதரகத்தை தொடர்புகொண்டு இது போல் பிரச்னைகளுக்கு சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரியிடம் பேசினேன் . அவர் ஆலோசனையின் படி இந்தியத் தூதரகத்துக்கு முன்னால் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு அழைத்து வரச் சொல்ல அதே போல் நண்பர் ஒருவரின் காரில் அவரை அழைத்து செல்ல அங்கு காத்திருந்த இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஃபாத்திமா பீவியை ஒப்படைக்க அவர்கள் அவரை தம் வாகனத்தில் ஏற்றி இந்திய தூதரகம் கொண்டு சென்றார்கள் .

அங்கு நடக்க வேண்டிய சம்பிரதாயங்கள் சட்டப்படி வேகமாய் நடைபெறத் தொடங்கியது. இந்திய தூதரகத்தில் சரணடைந்த ஒரு மாதத்துக்குள் நிச்சயம் ஊர் போய் சேர்ந்து விடலாம் என ஒரு அதிகாரி உறுதியளித்தார் .பத்தா வந்து எந்த இடத்தில் ஃபாத்திமா பீவி அடைக்கலமானாரோ அந்த இரக்கமுள்ள மனிதர்களே அவருக்கு விமான பயண சீட்டும் எடுத்து தந்திருந்தார்கள் . அதை ஃபாத்திமா பீவி நன்றியுடன் நினைவு கூறும்போதுதான் இன்னொரு விவரமும் தெரிந்தது .. அடைக்கலம் கொடுத்த அந்த குடும்பம் அவருக்கு உறவினர்கள் இல்லையாம்..

பத்தாவில் வந்து இறங்கிய இடம் அந்தவீட்டுக்கு எதிரே என்பதால் விவரம் கேட்கப் போய் ஆறுதலாய் அரவணைக்கப்பட்டு - உபசரிக்கப்பட்டு - உதவி செய்யப்பட்டிருக்கிறார் ஃபாத்திமா பீவி. யாதும் ஊரே யாவரும் கேளிர்.

தற்போது இந்திய தூதரகத்தின் விசாரணையிலும் , ஊருக்கு அனுப்பபடும் முன்னேற்பாட்டிலும் இருக்கும் ஃபாத்திமா பீவி நலமுடன் அவர்கள் வசம் இருந்தாலும் , ஊருக்கு சென்ற பின்பு அவர் எதிர்கொள்ளவிருக்கும் கடன் போன்ற பிரச்னைகள் ஏராளம் . காசு வாங்கி ஆளை ஏற்றிவிட்டால் சரி என இருக்கும் ஏஜென்ஸிகள் கொஞ்சம் மனிதாபிமானத்துடன் செயல்பட்டிருந்தால் இந்த பிரச்னைகளை எல்லாம் தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது . இனியாவது பொருளீட்ட அரபு தேசம் வரும் நம் தாய்நாட்டு சகோதரிகள் இது குறித்து சிந்திப்பார்களா ..?

பின்னுரையாய் சில சங்கடங்கள்

.
1. இகாமா அடிக்காமலேயே இரண்டு வருடங்கள் வேலை பார்த்தாலும் ஊர் திரும்ப இதில் சில சட்ட சிக்கல்கள் இருப்பதாக இந்திய தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .எனவே ஃபாத்திமா பீவி சம்பிரதாய விசாரணை முடிந்து ஊர் திரும்ப ஒரு மாதமாகலாம் என தெரிகிறது. நாங்கள் ஃபாத்திமா பீவியை ஒப்படைத்த போது குறைந்த பட்சம் அவர் மாற்று உடை கூட எடுத்து வரவில்லை.ஒரு மாத காலம் எப்படி இருக்கப் போகிறார் என்று தெரியவில்லை .

2. தமிழ் சினிமாவின் சாகஸ கிளைமாக்ஸ் போல் ஃபாத்திமா பீவியை அழைத்துக் கொண்டு இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கும் வரை நானும் நண்பரும் ஒரு பெரும் அவஸ்தைக்குள்ளானோம் . வழியில் எங்கேனும் காவல்துறை குறுக்கிட்டால் என்ன சொல்வது அல்லது நாங்கள் சொல்லும் காரணத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்ன செய்வது என்ற கலக்கமே காரணம் .. நிறைய பேர் இது போன்ற நிலைப்பாடு உள்ளவர்களுக்கு உதவி செய்ய மனமிருந்தும் ஒதுங்கிப் போவது இதனால் தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது .

3. நேபாளிப் பெண் கொலை வழக்கில் கொலையாவதற்கு முன் அந்த பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்தமைக்காக டாக்டர் ஒருவரும் ,அவர் மனைவியும் தற்போது சிறையில் இருப்பது அனேகமாய் எல்லோருக்கும் தெரிந்திருக்கலாம் . இதற்குப் பின் எப்படி எல்லோருக்கும் இது போன்று ஓடி வந்த நிலையில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய முன் வர முடியும்..?

4.இந்திய தூதரகம் வசம் இருக்கும் ஃபாத்திமா பீவி தன் வீட்டுக்கு போன் செய்து வர இன்னும் ஒரு மாதமாகும் என சொல்ல அவர்களின் பிள்ளைகள் இங்கு அவர் தங்கியிருந்த வீட்டினர்க்கு போன் போட்டு சீக்கிரம் வர ஏற்பாடு செய்யுங்கள் என நச்சரிக்க அவர்கள் என்னை அழைத்து எப்போது போவார்கள் ..எப்போது போவார்கள் என கேட்க ஏண்டா இதில் இறங்கினோம் சாமி என்றாகி விட்டது.. வேலியில் போன ஓணானை........

5.ஃபாத்திமா பீவியை இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கும் அன்று ஹுஸைன் மரைக்காயர் இறப்பு சான்றிதழ் பெறுதல் உள்ளாக மேலும் மூன்று பொது சேவைக்காய் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்ததை பார்க்க அங்குள்ள சில பணியாளர்கள் காசுக்காக வேலை செய்யும் ஏஜெண்டாக என்னை நினைத்து 'ட்ரீட்' செய்தது கொஞ்சம் மனதை வலிக்க செய்தது . பொது வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா என்று கவுண்டமணி பாணியில் மனதை தேற்றிக் கொண்டு வேலை முடிந்தால் சரி என்று வந்து விட்டேன் .
* * *

அரபுதேசம் முழுக்க இது போல் ஆயிரத்தெட்டு பிரச்னைகள்.. பிரச்னைகளுடனே இருக்கும் லட்சக்கணக்கான இந்தியர்கள் என இந்திய தூதரகம் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகள் ஏராளமிருப்பதாகவும், நிறைய பிரச்னைகள் எந்த முடிவையும் நோக்கிப் போகாமல் இழுவையிலேயே இருப்பதாகவும் இந்திய தூதரகம் தொடர்புடைய நண்பர்கள் சிலர் சொல்ல வருத்தமாய் இருக்கிறது. எல்லாம் விரைவில் தீர்க்கப்படும் என்று நம்புவோம்.
ஃபாத்திமா பீவி நல்ல முறையில் விமானம் ஏறி தாயகம் இறங்கிவிட்டார் என்ற நல்ல செய்திக்குப் பின்னால் உடனடியாக நான் செய்தது- இந்த பதிவிடும் வேலைதான்....

சம்பளப் பிடித்தம் உறுதியான மூன்று காலை நேரங்கள், ஆங்காங்கே செல் பேசிய செலவுகள் என பொருளாதார ரீதியாய் எனக்கும் கொஞ்சம் இழப்புகள் இருந்தும் சில கண்ணீர் துளிகள் துடைக்கப்படும் பின்பு ஏற்படும் சந்தோஷத்திற்கும் திருப்திக்கும் முன்னால் அதெல்லாம் பெரிதாய் தெரியவே இல்லை .சக மனிதர்க்கு பரஸ்பர உதவி செய்யும் வாய்ப்பை பெறுவதற்கு இன்னும் எவ்வளவு ரிஸ்க் வேண்டுமென்றாலும் எடுக்க தயாராகவே இருக்கிறேன் நான் ...இறைவன் போதுமானவன் .
* * * * * * *

21 comments:

கசி said...

மனசு ரொம்ப கஷ்டமா போயிட்டுது.

நன்மனம் said...

//சக மனிதர்க்கு பரஸ்பர உதவி செய்யும் வாய்ப்பை பெறுவதற்கு இன்னும் எவ்வளவு ரிஸ்க் வேண்டுமென்றாலும் எடுக்க தயாராகவே இருக்கிறேன் நான் ...இறைவன் போதுமானவன் .//

எல்லாம் வல்ல இறைவன் துணை இருக்க பிரார்திக்கிறேன்.

Anonymous said...

mika mika nanRi nanpare! naan solvathellam agentkalai nambi engum pokavendam enpathuthaan. ungal irakka kunaththirku en manappoorva nadrikal marrum vaalththukkal.

வடுவூர் குமார் said...

திருமதி ஃபாத்திமா பீவிக்கு உதவி செய்ததற்கு நன்றி.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

அப்பெண்மணிக்கு உதவிய நண்பர் லக்கி ஷாஜஹானுக்கு வாழ்த்துக்கள் போய் சேரட்டும்..நன்றி

Hariharan # 03985177737685368452 said...

நல்ல முன்னுதாரணமான செயல். தெய்வம் மனித உருவில் வந்து இம்மாதிரி உதவிகள் செய்யும்.

நிலவு நண்பன் இங்கு கிருஷ்ணா என்ற பெயரில் பின்னூட்டமிட்டிருப்பது போலிப்பயல்!

அன்புடன்,

ஹரிஹரன்

Mani said...

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

விமர்சனம் தந்த அனைவருக்கும் நன்றி

இந்த தமிழ் பெண்மணிக்கு பாஸ்போரட் கொடுத்து உதவிய அரபி பெண்மணியின் செயலை மறக்க கூடாது.

"அல்லாஹ் தம் அடியார் யார்க்கேனும் உதவ நினனத்தால் அதை தம் அடியார்கள் மூலமாகவே நிறைவேற்றி விடுகிறான் "

Anonymous said...

great job keep it up

Muse (# 01429798200730556938) said...

Tip of an ice berg.

Anonymous said...

Manathai migavum paathitha katurai, thangal sevaikku, hats off :)

Jeyapalan said...

// என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்? //

மணியின் பின்னூட்டத்தில் பெரிய கருத்து இருக்கிறது. இதை ஒரு இயக்கமாகவே இந்தியாவில் நடத்த வேண்டும். இந்தியர்களே உள்ளூரில் மதிப்போடு வாழுங்கள்.
பள்ளிக் கூடங்களில் அடிப்படை மனித உரிமை பற்றிக் கற்பித்தால், பிற்காலத்திலாவது இது போல் இன்னல்களுக்குள் மக்கள் சிக்க மாட்டார்கள்.

Santhosh said...

//சம்பளப் பிடித்தம் உறுதியான மூன்று காலை நேரங்கள், ஆங்காங்கே செல் பேசிய செலவுகள் என பொருளாதார ரீதியாய் எனக்கும் கொஞ்சம் இழப்புகள் இருந்தும் சில கண்ணீர் துளிகள் துடைக்கப்படும் பின்பு ஏற்படும் சந்தோஷத்திற்கும் திருப்திக்கும் முன்னால் அதெல்லாம் பெரிதாய் தெரியவே இல்லை .சக மனிதர்க்கு பரஸ்பர உதவி செய்யும் வாய்ப்பை பெறுவதற்கு இன்னும் எவ்வளவு ரிஸ்க் வேண்டுமென்றாலும் எடுக்க தயாராகவே இருக்கிறேன் நான் ...இறைவன் போதுமானவன் .//
அருமையான வரிகள் நிஜமும் கூட.

ரொம்ப நல்ல வேலை செய்து இருக்கிங்க நிலவு நண்பன். பாராட்டுக்கள்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

உதவி செய்தது நான் அல்ல. சௌதியில் இருக்கும் நண்பர் ஷாஜஹான் என்பவர்தான்.


விமர்சனம் தந்தவர்களுக்கு என் நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இப்பெண்ணின் துயர் துடைக்க முற்ப்பட்டோரின் பெருந்தன்மையைப் பாராட்டுகிறேன்.
யோகன் பாரிஸ்

கதிர் said...

சம்பாதிக்க வரும் பெரும்பாலானவர்களுக்கு பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது
ஆனால் எப்படியாவது சமாளித்துவிடுவார்கள் ஆண்கள், பெண்கள் நிலைதான் பாவம்
தக்க சமயத்தில் உதவிய ஷாஜகானுக்கு நன்றிகள் பல.

நாகை சிவா said...

நண்பா,
நெகிழ வைத்து வீட்டீர்கள்.
உன் சேவை தொடர்க என்றும்
வாழ்த்துக்கள்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

நாகை சிவா, தம்பி மற்றும Johan-Paris-ன் வாழத்துக்கள் லக்கி ஷாஜகானுக்கு சென்றடையட்டும்

Anonymous said...

மனதை பாதித்து விட்டது..
நல்ல விழிப்புணர்வு கட்டுரைதான் இது
இந்த பணியை செய்த லக்கி ஷாஜஹானுக்கும் வெளியிட்ட உங்களுக்கும் பாராட்டுக்கள்

Unknown said...

நல்லவர்கள் சிலர் உள்ளார் எனில் இல்லார்க்கும் பெய்யும் மழை.
ஸ்ருதீ

Divya said...

உங்கள் சேவையை மனதாரப் பாராட்டுகிறேன்

தேன் கூடு