அப்பொழுது தூரத்திலிருந்து ஒருவன் எங்களை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தான். நானும் அவனை கவனித்துக்கொண்டே இருந்தேன். திடீரென எங்களைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்து எங்களை நோக்கி வந்தான்.
பக்கத்தில் வந்து "டேய் என்னைத் தெரியலையடா நான் ஆவுடையப்பன்டா..பிஎஸ்ஸி க்ளாஸ்மேட்" என்க அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது. படிக்கின்ற காலத்தில் உள்ளதை விட, இப்பொழுது நன்கு முதிர்ச்சியடைந்து குண்டாகி இருந்ததால் அடையாளமே தெரியவில்லை.
"டேய் நான் ரொம்ப நேரமா கவனிச்சிக்கிட்டு இருக்கேன்..உங்கள எங்கோ பார்த்த மாதிரி இருக்கே என்று. அந்த அளவுக்கு ஆள் மாறிப் போய்டீங்கடா" என்றான்.
"ஆமாடா அப்ப அப்பாவியாக இருந்தோம் இப்ப அப்பாக்களாக இருக்கின்றோம் நீயும்தாண்டா ,ஆள் ரொம்பவே மாறிப்போய்ட்ட..இங்க உட்காருடா" என்று அவனுக்கு ஒரு இருக்கைளை ஒதுக்கி கொடுத்தோம்.
வழக்கமாய் பழைய கல்லூரி நண்பர்களைச் சந்திக்கும்பொழுது என்னவெல்லாம் பேசிக்கொள்வோமோ அதுவெல்லாம் பேசிக்கொண்டோம்.
அவன் இப்ப என்ன பண்றான்..?
இவன் அமெரிக்கா போய்ட்டான்.
ஒருத்தன் கத்தாரில் இருக்கான்..
இவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு..
படிக்காம சுத்திக்கிட்டு இருந்த ஒருத்தன் நம்ம காலேஜ்லயே வாத்தியாராகிவிட்டான்..
அரியர்ஸ் போட்ட அவன் இப்ப தலைமையாசிரியரா இருக்கான்.
"நம்ம கூட படிச்ச பொண்ணு இப்ப பி எச் டி முடிச்சிட்டு புத்தகம் எழுதுறா" என்று ஒவ்வொருத்தரையும் அலசிக்கொண்டிருக்க இன்னொரு நண்பன் டேனி மண்டபத்திற்குள் நுழைந்தான்.
"டேய் ஆயுசு நூறுடா உனக்கு" என்று அவனையும் அழைத்து கும்மியடிக்க ஆரம்பித்தோம்.
"இப்ப அப்பா காலேஜ் அம்மா காலேஜா மாறிட்டுடா" என்று வருத்தத்தோடு கூறினான் டேனி.
"ஆமாண்டா நம்ம படிக்கும்பொழுது பி எஸ் ஸி 40 பசங்களுக்கு 8 பொண்ணுங்க இருந்தாங்க.. இப்ப 40 பொண்ணுங்களுக்கு 3 பசங்கடா.. பாவம் பசங்ச அமைதியா வந்துட்டு போகவேண்டியதுதான்..சத்தம் காட்ட முடியாது" என்றேன்..
"ஆமாடா இப்ப எலக்ஷன்ல கூட சேர்மன் பதவி பையன்களுக்கும் செகரெட்டரி பதவி பொண்ணுங்களுக்கும் கொடுத்திருக்குடா" என்றான் டேனி
அப்படியே பேசிக்கொண்டிருந்தோம். இந்த பேச்சின் சுவாரசியத்தில் திருமண விழாவே மறந்து விட்டது. எல்லாரும் மணமக்களை ஆசிர்வதிப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள்.
நாங்களும் மெல்ல வரிசையில் நுழைந்து பரிசுப் பொருளினை கொடுத்துவிட்டு நானும் காஜாவும் மாப்பிள்ளையின் கையில் 1 ரூ நாணயத்தையும் கொடுத்தோம். மேடை என்று பார்க்காமல் சிரித்துவிட்டான் மாப்பிள்ளை பய.
"டேய் என்னடா 1 ரூ?" என்று மாப்பிள்ளை பவ்யமாய் காதினுள் கிசுகிசுக்க, நானோ, "சிவாஜி படத்துல ரஜினி 1 ரூபாய்லதான் பெரிய ஆளா வருவாராம்டா..அதனால நீயும் பெரிய கோடிசுவரனாவேடா" என்று சொல்லிவிட்டு மேடையை விட்டு இறங்கினோம்.
மறுபடியும் கும்மியடிக்க ஆரம்பித்தோம். நினைவுகள் கல்லூரியை நோக்கி செல்ல ஆரம்பித்தது. "கல்லூரியின் ஆரம்பத்தில் பெஞ்சை உடைச்சிட்டு பைன் கட்டினோமோ ஞாபகம் இருக்கிறதா?" என்று ஆவுடையப்பன் ஆரம்பிக்க ,
"அடப்பாவிகளா அதுல என்னய மாட்டிவிடப்பார்த்தீங்களே ? " டேனி சிரிக்க ஆரம்பித்தான்., மறுபடியும் நினைவுகள் பெஞ்சை உடைத்த நாட்களுக்கு சென்றது
நினைவுச் சக்கரம் மெல்ல சுழல்கின்றது டொய்ங்..டொய்ங்..டொய்ங்... ( ஃப்ளாஷ் பேக் போகப் போறேன்பா.. )

கல்லூரி ஆரம்பநாட்கள் அது. ஒரு மதிய இடைவேளியில் எல்லாரும் சத்தம் போட்டுக்கொண்டு கிண்டலடித்துக்கொண்டு இருந்தோம். அப்பொழுது குஷியில் முன் வரிசையில் உள்ள பெஞ்சை வேகமாக ஆட்ட, டேனியோ பெஞ்சின் மீது ஏறி ஒரு குதி குதித்தான். அவ்வளவுதான் க்றீச்.. பெஞ்சு உடைந்து போய்விட்டது.
உடனே அப்பொழுது வந்த ராஜ்குமார் உடைந்த பகுதியினை எடுத்து மாடியிலிருந்து கீழே வீசினான்.
இப்பொழுது கேமிரா கீழ் தளத்திற்கு செல்கின்றது. பிகாம் ஆசிரியர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருக்க உடைந்த பெஞ்சின் துண்டு ஒன்று கீழ் வருவதைப் பார்த்தார். ஒருவேளை பறக்கும் தட்டோ? என்ற ஆச்சர்யத்தில் அவர் கவனமாய் உற்றுப் பார்க்க அந்தத் துண்டு எங்கள் வகுப்பறை பகுதியிலிருந்து வருகிறதை கவனித்தார். உடனே கோபப்பட்டு பிரின்ஸ்பாலிடம் சென்று புகார் கொடுக்க எங்கள் வகுப்பு மாணவர்கள் ,மாணவிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டோம்.
உடைத்தவன் யாரென்று பெரும்பாலும் எல்லாருக்கும் தெரிந்தாலும் யாருமே யாரையுமே காட்டிக்கொடுக்க முன்வரவில்லை. அதாங்க நட்பு....
உடனே அனைத்து பெற்றோர்களுக்கும் அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பப்பட்டுவிட்டது. எங்கள் வீட்டிற்கும் அந்தக் கடிதம் வந்தது. இதோ அந்தக் கடிதம்..

நான் எனது தந்தையின் நண்பர் ஒருவரை அழைத்துச் சென்றிருந்தேன். ஒரு சிலர் வாடகைக்கு அப்பாக்களையும் மாமாக்களையும் பிடித்துக் கொண்டு வந்தனர்.
ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டு சுற்றி நின்று ஆளாளுக்கு பிய்த்து எடுத்துக் கொண்டிருந்தார்கள். இதில் ஒரு மாணவன் மயங்கியே விழுந்து விட்டான்.
ஒரு மாணவன் மயங்கி விழுந்து விட்டான் என்ற செய்தி உள்ளே செல்வதற்காக காத்துக்கொண்டிருந்த எங்கள் காதுகளுக்கு தெரிய வர, எல்லாருக்கும் தொடை நடுக்க ஆரம்பித்தது. வந்திருந்த வாடகை அப்பாக்களும் ,மாமாக்களும் சிலர் தலைதெறிக்க ஓட ஆரம்பித்தனர். அவர்களை கெஞ்சிக்கொண்டு நமது சில மாணவர்கள். ஒரே ஜாலியா இருந்தது போங்க..
நான் உள்ளே அழைக்கப்பட்டேன். முதல்வர் - துணை முதல்வர் - செயலாளர் - பொருளாளர் - என்று முக்கால்வாசி ஆசிரியர்கள் கொலைவெறியோடு அமர்ந்திருந்தனர். "அடப்பாவிகளா தனியா வர்ற பசுவை குதற இத்தனை சிங்கங்களா..?"
நான் உள்ளே சென்றவுடனையே, எனது கணித ஆசிரியர் ஒருவர் அன்பாய் அழைத்தார்.
"தம்பி ஞானியார் இங்கே வாங்க.."
"நல்ல பையன் சார்...இவன் பொய் சொல்ல மாட்டான்" என்று என்மேல் பெரிய ஐஸ்கட்டியை வைத்துவிட்டு பக்கத்தில் அழைத்தார்.
நானும் மெதுவாய் சென்றேன். எனது காதினுள் மெதுவாக "நீயாவது சொல்லுப்பா யார் பெஞ்சை உடைச்சா..?"
நானும் மெதுவாக அவரது பாணியில் காதுக்குள், "எனக்குத் தெரியாது சார்..நான் அந்த நேரத்துல அங்க இல்லை..சாப்பிட வெளியே போய்ட்டேன்.."
உடனே சத்தத்தை அதிகப்படுத்தினார். "எல்லாருமே இப்படியே சொன்னா அப்ப யார்தான்பா அந்த நேரத்துல இருந்தா..பெஞ்சு தானா பறந்துச்சா.."
அவர் சத்தம் அதிகப்படுத்தியவுடன் ஆளாளுக்கு குதறினார்கள். இந்தக் கல்லூரியின் அருமை பெருமை தெரியுமா..? என்று ஆரம்ப கால அசோகர் வரலாறு, அசோகரோடு சேர்ந்து இவர்கள் மரம் நட்டது, என்றுபாடம் எடுக்க ஆரம்பித்து இடை இடையே எனக்கும் என்னுடன் வந்த அப்பாவின் நண்பருக்கும் அறிவுரைகள்.
நான் முகத்தை சோகமாக மாற்றிக்கொண்டு வெளியே வந்ததைப் பார்த்து எனக்கு பின்னால் உள்ளே போக வந்திருப்பவர்கள் கதிகலங்கினர். "என்னடா அப்படி என்னதான் நடக்குதோ உள்ளே?" என்று.
அனைவருக்கும் காதுகளில் ரத்தம்தான்..
இறுதியில் எங்களின் உறுதியும் ஒற்றுமையும்தான் ஜெயித்தது. யாருமே உடைத்தவனை காட்டிக்கொடுக்கவில்லை. இறுதியில் அனைவருக்கும் ஆளுக்கு 300 ரூ அபராதம் விதித்தார்கள்.
நான் இனிமேல் இதுபோன்ற தவறுகள் செய்ய மாட்டேன் என்று உறுதி அளிக்கின்றேன் என்று மன்னிப்பு கடிதம் எழதி கொடுத்து எப்படியோ உள்ளே நுழைந்தாயிற்று.
மறுபடியும் நினைவுகளிலிருந்து மீண்டு திருமண மண்டபத்திற்கு வந்தாயிற்று. பெஞ்சை உடைத்த டேனி இப்பொழது சொல்லிக்கொண்டிருந்தான்.
"டேய் யாருமே என்னய காட்டிக்கொடுக்கல, அது சந்தோஷம்தான் ஆனால் ஒருநாள் முந்தியே என்னுடைய வீட்டிற்கு வந்து டேய் எப்படியாவது நீ ஒத்துக்கடா என்று எத்தனை பேர் கெஞ்சுனாங்க தெரியுமா?" என்ற உண்மையை இப்பொழு உடைத்தான்.
அவ்வளவு வீரமா யாருமே உடைக்கலைன்னு சொன்னவங்க டேனி வீட்டுல வந்து கெஞ்சியதை நினைத்து இப்பொழுது சிரித்துக்கொண்டிருந்தோம்.
அந்த நினைவுகளை நினைத்து மகிழ முடியுமே தவிர அந்தக் காலத்திற்குள் சென்று மீண்டும் வாழவா முடியும்..? மகிழ்ச்சியான சந்தர்ப்பங்களை அசைபோடுவது மனதுக்கு ஒரு வித அமைதியைத் தருகின்றது.
-ரசிகவ் ஞானியார்