தவித்த வாய்க்கு ...
தண்ணீர் கொடுப்பது தமிழன் பழக்கம்!
தாகம் தீருமுன்...
தட்டிவிடுவதுதான் உங்கள் வழக்கமோ?
நாங்கள்
தண்ணீர் கேட்டால்
இரத்தம் தருகின்ற...
உங்கள் பெருந்தன்மைதான் என்னே!
நாற்காலிகள்
நகர்ந்துவிடக்கூடாதென்றா
அருவியின் வெள்ளத்தில்...
அணை கட்ட முயல்கின்றீர்கள்?
நீங்கள் தண்ணீர் சேமிக்க…
நாங்கள் அணை கட்டிக்கொடுத்தோம்!
நாங்கள் கண்ணீர் சேமிக்க…
நீங்கள் அணை கட்டுகின்றீர்கள்!
தலைமுடியை வெட்டுவதற்கெல்லாம்
உங்களிடம்…
அனுமதி கேட்டால்,
எங்கள்
தலைமுறைகள்...
பட்டுப்போய்விடும்!
கடந்து சென்ற காலத்தையும்…
கடந்து வந்த நீரையும்…
திருப்பி எடுக்க
எவனும் பிறக்கவில்லை!
யாருடைய மொழி சிறந்தது
என்பது
இன்னொரு பக்கம் இருக்கட்டும்!
ஆனால்
வலி உணரும் தோல்கள்தான்
இருவருக்கும்!
- ரசிகவ் ஞானியார்