
நான் 1998 ம் வருடம் பெங்களுர் லால்பாக்கிற்கு உறவினர்களுடன் வந்திருக்கின்றேன். அப்பொழுது உள்ள கற்பனையிலையே இருந்திருக்கலாம். நண்பர்களின் வற்புறுத்தலின் காரணமாக சமீபத்தில் அங்கு செல்ல நேரிட்டது. ஏண்டா போனோம்னு வருந்துகின்றேன்.
பெங்களுர் லால்பாக்கிற்கு நீங்கள் உங்களுக்குத் தெரிந்த எல்லா மொழிகளிலும் எவ்வளவு கெட்ட வார்த்தை இருக்கின்றதோ அவ்வளவு கெட்டவார்த்தையை கொண்டு அழைக்கலாம்.
யாருடைய படுக்கை அறைக்குள்ளோ நுழைந்துவிட்டதைப்போன்ற உணர்வினைத் தருகின்றது. மிக மிக மிக மிக மோசமான செய்கைகளில் காதலர்கள் இல்லை இல்லை வெளி உலகத்திற்கு அப்படி அடையாளப்படுத்திக் கொண்ட விபச்சாரர்கள் அவர்கள்.
உள்ளே நுழையும்பொழுதே ஒரு ஜோடி முத்தங்கள் பரிமாறிக்கொண்டிருக்கின்றனர். அதனைக் கண்டே ஆத்திரமாய் வந்தது. என்னடா பொது இடம் கூட பார்க்காமல் இப்படி நடக்கின்றார்களே என்று?
ஆனால் உள்ளே சிறிது தூரம் சென்று விட்டு திரும்பிய பொழுது அந்த ஜோடிதான் இருப்பதிலையே மிகவும் நாகரிகமான ஜோடி என்று உணர வைக்கும் அளவுக்கு உள்ளே மோசமான நிகழ்வுகள்.
ஒரு மரத்தின் உச்சியில் இருந்து ஒரு காதல் ஜோடி கதைத்து கொண்டிருக்கின்றார்கள் ஒருவேளை மிக உயர்ந்த காதல் என்று சொல்கின்றார்களே அது இதுதானோ?

நாங்கள் ஒரு ஜோடியை கடந்து சென்றோம். அந்தப்பையனுக்கு 16 வயது கூட இருக்காது. தன் வயதை ஒத்த ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தான்.
பேசிக்கொண்டிருந்தான் என்பதை விடவும் உரசிக்கொண்டிருந்தான் என்று சொல்லலாம்.
ஆனால் நெருங்க நெருங்க மனம் துடித்துப்போனது. எந்த செய்கைகள் பொது இடங்களில் வைத்து செய்யக்கூடாதோ- அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.
அந்த இடத்தை கடந்து செல்ல எங்களுக்கு கூச்சமாக இருந்தது. நாங்கள் பார்த்துவிட்டால் அவர்களுக்குத்தான் அவமானம், ஆனால் அவர்கள் என்ன நினைத்தார்கள் என்றால், நாங்கள் கடந்து சென்றால் எங்களுத்தான் அவமானம் என்ற நினைப்பில் அலட்சியமாய் தங்களது பணியை தொடர்ந்தார்கள்.
நான் அவர்கள் கேட்கும் தூரத்தில் சென்று "ஹலோ போலிஸ்" என்று எனது செல்போனில் உரக்க கூறி இங்கு விபச்சாரம் நடப்பதாகவும் உடனே வரும்படியாகவும் சத்தம் போட்டு பேச அவர்கள் மட்டுமல்ல பக்கத்தில் மறைந்து இருந்த இன்னொரு ஜோடியும் அவசர அவசரமாய் இடத்தை காலி செய்தார்கள்.
சாதாரணமாய் கடந்து செல்பவர்களே இந்தக் காட்சிகளெல்லாம் காணும்பொழுது கர்நாடகா அரசின் காதுகளுக்கு இது எட்டாமலா இருக்கும்? ஏன் இதனை அலட்சியப்படுத்துகின்றார்கள்?
பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொள்ளும் இதுபோன்றவர்களை அலட்சியப்படுத்தினால் அவர்களுக்கு இது சரிதானோ என்ற தோற்றத்தைதான் ஏற்படுத்தும். அது மட்டுமல்ல அந்தத் தலைமுறையினரை பார்த்து வளருகின்ற மற்றவர்களும் அதனையே பின்பற்ற தொடங்கிவிடுவர். இவங்கள எல்லாம் கண்டிப்பதற்கு ஒரு வழியும் இல்லையா..?
தயவுசெய்து பெங்களுர் வந்தால் லால்பாக்கிற்கு போகவேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் கைவிட்டு விடுங்கள்.
லால்பாக்கில் மட்டுமல்ல பொது இடங்களில் கூட இந்த அத்து மீறல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றது. பேருந்து நிறுத்தங்களின் ஓரங்களில் உடல் உரசல்கள் விடைபெறும் பொழுது தழுவல்கள் முத்தங்கள் மேலைநாட்டுக்குள் நுழைந்து விட்டோமோ என்ற பிரமிப்பைத் தருகின்றது.
வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கின்றார்களோ இல்லையோ வீதிக்கு ஒரு காதலர்கள் தோன்றுகின்றார்கள். உண்மையான காதலர்களாகவே இருக்கட்டுமே அதற்காக இப்படியா பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொள்வது..?
ஓவ்வொரு பேருந்து நிறுத்தங்களின் மறைவிலும் தவறுகள் நடக்கின்றது. அவர்கள் ஆண் பெண் நட்பின் பெருமையை வெளிப்படுத்துவதாக இருந்தால் தைரியமாக மறைவுக்கு வெளியே நின்று பேசலாமே?
நான் தங்கியிருந்த பிடிஎம் பகுதியில் ஒரு பெண்கள் விடுதியின் வாசலில் சரியானக் கூட்டம். இளம் வயது வாலிபர்கள் நாயைப் போல காவல் நிற்கின்றார்கள். முத்தங்கள் எல்லாம் சுவாசிப்பதைப்போல அனிச்சை செயலாக பரிமாறப்பட்டு வருகின்றது.
திருநெல்வேலியைச் சார்ந்த எனக்குத் தெரிந்த நண்பி ஒருவர் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கின்றார். ஒருநாள் அவர்கள் கம்பெனியில் பார்ட்டி என்று தனது தாயாரையும் அழைத்துச் சென்றிருக்கின்றார்கள்.
தமிழ்நாட்டில் கலாச்சார பெருமை வாய்ந்த ஒரு ஊரில் இருந்து வந்து அங்கு வேலை பார்க்கும் சில தமிழ்பெண்டிர்கள் தனது சக தோழர்களுடன் தோளில் கை போட்டுக்கொண்டு பேசுவதும், பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு ஜோக் அடிக்கின்ற சாக்கில் தொடைகளைத் தட்டுவதுமாக, மிக சாதாரணமாக மிக மிக சாதாரணமாக விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவர்கள் கொதிப்படைந்து அந்தப் பெண்களைக் கண்டித்திருக்கின்றார்கள்.
ஏம்மா நீ எந்த ஊர்ல இருந்து வந்தேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா?..இங்கு வந்தா என்ன இப்படித்தான் இருக்கனும்னு சட்டமா என்ன..? இனிமே நீ இப்படி இருப்பதைப் பார்த்தால் நான் உங்க வீட்டுக்குத் தகவல் அனுப்பிருவேன் என்று சத்தமிட்டிருக்கின்றார்கள்.
சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்தால் என்ன கலாச்சார சீர்கேட்டினையும் கிரகித்துக் கொள்ளவேண்டும் என்கிற எழுதப்படாத சட்டமேதும் இருக்கின்றதா என்ன? அவர்கள் வேலை பார்ப்பது வேண்டுமானால் அமெரிக்க கம்பெனிக்காக இருக்கலாம் ஆனால் அவர்கள் வசிப்பது இந்தியாவில்தான் என்பதை ஏனோ மறந்து போகின்றார்கள்.
இங்குள்ள கலாச்சார மோகம் நம்மவர்களை மிகவும் மாற்றி விடுகின்றது. எத்தனையோ பெண்கள் குடும்பத்தை காப்பாற்றும் கட்டாயத்தில் இங்கு வந்து வாழ்க்கையோடும் கலாச்சாரத்தோடும் நாகரீகமாய் போராடிக்கொண்டுமிருக்கின்றார்கள். ஆனால் இந்தக் கடலுக்கு மத்தியில் அந்த நீரத்துளிகள் காணாமல் போய்விடுகின்றன.
- ரசிகவ் ஞானியார்