Sunday, October 14, 2007

ரசிகவின் ரம்சான் நினைவுகள்

Photo Sharing and Video Hosting at Photobucket

எப்பொழுதுமே எதிரப்பார்ப்புகள் மட்டுமே சுகத்தினை தருகின்றது. ரம்சான் நாளை வரும் நாளை வரும் என்று எதிர்பார்த்தலில் உள்ள ஆனந்தம்; ரம்சான் வந்துவிட்டால் வடிந்துவிடும்.
இதோ அப்படி எதிர்பார்த்து காத்திருந்த ரம்சான் இன்று வந்துவிட்டது.

வரவுகள் இல்லாமல் செலவுகள் மட்டுமே செய்துகொண்டிருந்த இளவயது ரம்சானை விடவும் வரவு செலவுகளை நிர்ணயிக்கும் பொறுப்பில் இருக்கும்பொழுது வருகின்ற இன்றைய ரம்சானில் அந்த இன்பம் கொஞ்சம் குறைந்துதான் போகின்றது.

மறுநாள் ரம்சான் என்றாலே முந்தைய இரவில் தூக்கமே வராது மறுநாள் வெள்ளிக்கிழமை என்றவுடன் வியாழக்கிழமை இரவினில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருக்கும் அந்த துபாய் நாட்களைப் போலவே.

இன்றைய ரம்சானில் என் சிறுவயது ரம்சான் ஞாபகங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளப் பிரியப்படுகின்றேன்.

மனித ஆந்தைகள்

முன்பெல்லாம் நண்பர்கள் நாங்கள் ரம்சான் பண்டிகையின் முந்தைய இரவில் நேரம்போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருப்போம்.

மனித ஆந்தைகளாட்டம் இரவினில் மேலப்பாளையம் பஜார் சாலைகளில் சுதந்திரமாக சுற்றித்திரிந்து, திறந்திருக்கும் கடைகளில் டீ குடித்துவிட்டு, கடைசிவரை விற்றுக்கொண்டிருக்கும், சட்டைகளை பார்த்து" இந்த சட்டைகளை வாங்கியிருக்கலாமே அந்தச் சட்டையை வாங்கியிருக்கலாமோ?" என்று, வாங்கும் எண்ணங்கள் இல்லாமலையே கவனித்துக்கொண்டிருப்போம் வெயிலுக்காக ஷாப்பிங் சென்டருக்குள் நுழைபவர்களைப்போல.

இப்பொழுதெல்லாம் ரம்சானுக்கு முந்தைய இரவில் முன்பு போல பேசுவது கிடையாது. கொஞ்சம் தாமதமாகிவிட்டாலே மனைவியின் திட்டுதலுக்கு பயந்து ஓடிவிடுகின்றார்கள். ( எல்லா இடத்திலையும் அப்படித்தானோ..?)

பேருந்துக் கலாட்டா

டவுணில் சென்று துணியெடுக்க போவதே ஒரு பிக்னிக் மாதிரிதான் செல்வோம். மொத்தமாக ரம்சானுக்கு முந்தைய ஒரு வாரத்தினில் ஒருநாளினை குறித்துக்கொண்டு அன்று நண்பர்கள் படை சூழ புறப்பட்டுவிடுவோம். செல்லுகின்ற வழியில் நண்பர்களோடு செய்கின்ற கூத்துக்கள் சொல்லிமாளாதவை. ஒருமுறை சுமார் பத்து பேரை திரட்டிக்கொண்டு தயிரா கொட்டு என்ற இசைக்கருவியை எடுத்துக்கொண்டு சென்றோம்.

பேருந்து புறப்பட்ட நொடியிலிருந்து நன்றாக தாளம் போடத்தெரிந்த நண்பன், இறந்தவர்களுக்கு அடிக்கப்படும் இசையை அடிக்க , அந்த இசையின் மயக்கத்தில் நண்பர்களில் சிலர் கத்த, சிலர் ஆட்டம் போட, நடத்துனருக்கும் - ஓட்டுனருக்கும் சரியான கோபம்.

பேருந்தில் சரியான கூட்டம் வேறு அதுவும் எங்கள் வயதை ஒத்த நிறைய நண்பர்கள் எங்களோடு சேர்ந்து கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதால் அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

இருவரும் பேருந்தை விட்டு கீழே இறங்கி வந்து, பின்படிக்கட்டு அருகே வரை வந்து பின் டயரை சோதிப்பது போல நோட்டம்விட்டுவிட்டு "இப்படி கத்துனா வண்டியை எடுக்க முடியாது பார்த்துக்கோங்க" என்று வானத்தை பார்த்து சொல்லிவிட்டு மீண்டும் பேருந்தை கிளப்பினார்கள்.

அவர்கள் பேசாமல் இருந்திருந்தாவலாவது நாங்கள் தாளமிடுவதை நிறுத்தியிருக்க கூடும் ஆனால் அவர்களின் அந்த வடிவேலு பாணி செய்கை எங்களுக்குள் மேலும் குஷியை ஏற்படுத்த தாளத்தின் சத்தம் இன்னமும் அதிகமாகியது. பின் பேருந்தில் பயணித்த வயதான சக பயணி ஒருவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க தாளத்தை நிறுத்திவிட்டோம். செம குஷியாக கழிந்தன அந்த நாட்கள்.

நேர்மை = ஐஸ்வண்டிகாரன்

ரம்சான் பண்டிகை என்றால் தொழுகை முடிந்தவுடன் புதுத்துணியின் அழகினை அனைவருக்கும் பறைசாற்றிவிட்டு நண்பர்களோடு கூடி நின்று தெருவுக்குள் நுழைகின்ற ஐஸ்கிரீம் வண்டிதான் ஞாபகத்திற்கு வரும்.

ரம்சான் அன்று அந்த ஐஸ்கிரிம் வாங்கிச் சாப்பிடாவிட்டால் ரம்சானே பூர்த்தி அடையாததுபோல இருக்கும். முதலில் யாரும் ஐஸ்கிரீம் வாங்க மாட்டார்கள். யாரேனும் முதலில் வாங்கினால் எங்கே மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டுமோ எனப்பயந்து அமைதியாக இருந்து விடுவார்கள். பின்னர் யாராவது ஒரு சுயநலக்கார நண்பன் வாங்கி தனியே சாப்பிட ஆரம்பிக்கும்பொழுதுதான் மற்றவர்களுக்கும் ஞானயோதயம் ஏற்பட்டு ஒவ்வொருவராக வாங்குவார்கள்.

அதிலும் அதிகமாக காசு வைத்திருப்பவனை ஐஸ்கிரீமைப் போலவே அவனுடைய காசும் கரையும் வரையிலும் அனைவருக்கும் வாங்கித் தரச் சொல்லி நச்சரித்துவிடுவோம்.

அதில் சுவாரசியமாக சம்பவம் என்னவென்றால், எங்கள் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஒரு வருடம் முந்தி ஒரு ஐஸ்வண்டிக்காரனிடம் வைத்த பாக்கியை அடுத்த வருடம் வந்த அதே ஐஸ்கிரீம் வண்டிக்காரனிடம் வசூலித்துவிட்டார்கள். நீண்ட நாட்கள் அந்த சம்பவத்தைப் பற்றியே சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தோம். அந்த வீட்டுக்காரனின் ஞாபகத்தை மெச்சுவதா அல்லது அந்த ஐஸ்கிரீம் வண்டிக்காரனின் நேர்மையை மெச்சுவதா?

ரம்சான் விளம்பரம்

ரம்சானில் ஆங்காங்கே ஒலிப்பெருக்கி விளம்பரங்கள் ஒலித்துக்கொண்டிருக்கும். அந்த விளம்பரத்தின் வார்த்தைகளும் அது அமைந்துள்ள விதமும் நகைச்சுவையாக இருக்கும்.
ஒரு விளம்பரம் கேளுங்களேன்..ஒரு பீடியின் விளம்பரத்தில்

"அவர் ------------ மார்க் பீடியை வாங்க கடைக்கு குடு குடு குடு குடு குடு குடு குடு குடு குடு குடு குடு குடு குடு வென் ஓடினார். "

"ஆம் அவர் விரும்பிப் பிடிப்பது ---------------- மார்க் பீடிகள் "

வேறு வார்த்தைகள் கிடைக்காமல் குடு என்கிற வார்த்தையிலையே அந்த விளம்பரத்தை ஓட்டிவிடுவார்கள். அப்பொழுதுதான் எங்களுக்குள்ளும் ஒரு திட்டம் தீட்டினோம். அடுத்த ரம்சானில் எப்படியாவது இதுபோன்ற ஒரு விளம்பரத்தை நண்பர்கள் நாம் இணைந்து மிகச் சிறப்பாக நடத்துவோம் என்று முடிவு செய்யப்பட்டது.

உழைப்பும் வெற்றியும்

நாங்கள் எதிர்பார்த்த அடுத்த ரம்சானும் வந்துவிட்டது. நண்பர்கள் சுமார் 1 மாதம் முன்பாகவே வேலையை ஆரம்பித்தோம். அனைத்து கடைகளிலும் சென்று விளம்பரம் சேகரிக்கத் தொடங்கினோம். நாங்கள் இளைஞர்கள் என்பதால் வித்தியாசமாக செய்வார்கள் என்று நம்பி எங்களிடம் விளம்பரங்கள் வந்து குவிந்தன.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்பு தரப்பட்டது.


பொறுப்புகளை எடுத்தாயிற்று அதனை சிறப்பாக செய்து பெயர் எடுக்கவேண்டும் என ஆசைப்பட்டு அனைவரும் கடுமையாக உழைத்தோம்.

நான் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் சரியான வார்த்தைகளை எழுதி கோர்த்துக்கொண்டிருந்தேன்.

சிலர் மதுரைக்கு சென்று அங்குள்ள ஒரு விளம்பர நிறுவனத்தில் நான் எழுதி வைத்திருந்த விளம்பரங்களை இனிமையான குரலில் ஒரு பெண் மூலமாக பேச வைத்தார்கள். பேச வைத்தார்கள் என்பதை விடவும் பாட வைத்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும் அந்த அளவிற்கு இனிமையாக இருந்தது அந்த விளம்பரங்கள்.

முதன் முறையாக விளம்பரங்கள் ஒரு பெண் மூலமாக சொல்லப்படுவதால் மற்ற விளம்பர நிறுவனங்களும் எங்களை ஆச்சர்யத்தோடு பார்த்தன. அதிலதான் யார் கண்டு பட்டுச்சோ தெரியல? ஒரு பிரச்சனை உருவாயிற்று.

வியாபாரமும் பிரச்சனையும்

ரம்சான் முதல் நாள் அன்று ஒலிப்பெருக்கி எல்லாம் கட்டி விளம்பர கேசட்டை ஓடவிட்டோம். போகின்ற வருகின்றவர்களெல்லாம் வந்து வாழ்த்திவிட்டுச் சென்றார்கள். முதன் முயற்சியே வெற்றியை தேடி தந்தது என்று எங்களுக்குள் உற்சாகம் கரைபுரண்டது.

அன்று மாலை ஒரு தொலைபேசி பூத் வைத்திருப்பவர் அவர் கடைக்கு முன்பு கட்டியிருந்த ஒலிப்பெருக்கிகளை அகற்றுமாறு மிரட்டிவிட்டுச் சென்றார். இளரத்தம் அல்லவா..? எங்களுக்கு கோவம் பொத்துக் கொண்டு வர அந்த ஒலிப்பெருக்கிகளை கழற்றி விட்டு அவர் கடைக்கு மிகவும் அருகில் அவர் கடையை நோக்கி சத்தங்கள் செல்லுவது போல வைத்துவிட்டோம். "இப்ப என்ன செய்வே.? இப்ப என்ன செய்வே..? "

அந்தப் படுபாவி போலிஸில் புகார் கொடுத்துவிட்டான். எங்களுக்கோ இவ்வளவு சீரியஸாக விசயம் செல்லுப்போகிறது என்றும் , சும்மா விளையாட்டாக செய்யப்போய் இப்படி வம்பில் மாட்டிவிடுவோம் என்றும் தெரிந்திருக்க நியாயமில்லை.

எந்நேரமும் எங்கள் அலுவலகத்திற்கு போலிஸார்கள் வருவார்கள் என்பதால் விசயம் தெரியாத ஒரு இளிச்சவாய நண்பனை மட்டும் வைத்துவிட்டு நாங்கள் வசூலுக்குச் சென்றோம் .

போலிஸார் வந்து எங்கள் அலுவலக வாசலில் நின்று கொண்டு கடையில் இருந்த நண்பனிடம் அந்த டேப்ரிக்கார்டரை எல்லாம் எடுத்து ஜீப்பில் வைக்கச் சொல்லுமாறு உத்தரவிட ,

அந்த நண்பனோ, "முதலாளி வெளியே போயிருக்கார் சார்" என்க, இன்ஸ்பெக்டருக்கு கோவமே வந்துவிட்டது.

"நான் சொல்லுறேன்.....முதலாளி வரணுமா..? எடுடா டேப்ரிக்கார்டை" என்று அதட்ட அவன் பயந்து போய் ஒலிப்பெருக்கிகளை அணைத்துவிட்டு டேப்ரிக்கார்டர்களையெல்லாம் எடுத்து போலிஸ் ஜீப்பில் வைத்துவிட்டான். போலிஸார் அவனையும் ஏற்றிக்கொண்டார்கள்.

மறைந்து இருந்து இதனைக் கவனித்துக் கொண்டிருந்த நானும் என் நண்பனும் ஓடிப்போய், "சார் சார் நாங்க அனுமதி வாங்கித்தான் சார் நடத்துறோம்..எங்களுக்கு கவுன்சிலரை தெரியும் சார் என்க.. "

"அவர் என்ன முதலமைச்சரோ ..ஸ்டேஷனுக்கு வந்து வாங்கிக்கோங்கடா" என்று அனைத்தையும் பறித்துக்கொண்டு சென்றுவிட்டனர்.

பின்னர் கவுன்சிலரை அழைத்துக்கொண்டு சமாதானம் செய்யப்பட்டு அவர்கள் பறித்துச் சென்றதை வாங்கிக்கொண்டு வந்தோம்.

3 நாட்கள் விளம்பரத்திற்குப் பதிலாக ஒரே நாளில் விளம்பரத்தை முடித்துக்கொண்டாலும் அந்த ஒருநாளில் நாங்கள் போட்ட விளம்பரத்திற்காகவே அனைவரும் 3 நாட்களுக்குண்டான பணத்தையே கொடுத்தனர் .

அந்த வயதில் ஆரம்பித்த வியாபாரமும் அதன் வெற்றியும் சந்தித்த பிரச்சனைகளும் எங்களுக்கு நிறைய அனுபவத்தைக் கற்றுத் தந்தது.

எத்துணை ரம்சான் வந்தாலும் எங்களுக்கு சிறந்த அனுபவம் கற்றுத் தந்த அந்த ரம்சானை எங்களால் இன்னமும் மறக்க முடியாது

பிரியாணிக்குள் மனிதநேயம்


ரம்சான் அன்று எங்கள் வீட்டில் அதிகமாக பிரியாணி சமைப்பார்கள். வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடுவார்களோ இல்லையோ மற்றவர்களுக்கு கொடுத்து விடுவதில் என் தந்தைக்கு அப்படியொரு ஆனந்தம்.

எதேச்சையாகவோ இல்லை எங்களை சந்திக்க வீட்டுக்கு வருகின்ற நண்பர்களோ அந்தப் பிரியாணியில் இருந்து தப்பிக்க முடியாது.

"பொங்கல் -தீபாவளிக்கு அவங்க தராங்க, நாம கொடுக்கலைன்னா நல்லாயிருக்காது " என்று அவருடைய மற்ற மாற்று மதச் சகோதரர்களுக்கெல்லாம் கொடுத்துவிடுவார்.

என்னுடைய கல்லூரி ஆசிரியர் இராமையா சார் அவர்களுக்கு நான் ஒவ்வொரு ரம்சானும் தவறாமல் சென்று பிரியாணி கொடுப்பதை அவர் என்னுடைய திருமணத்தில் வந்து மேடையில் சொன்னபோது எனக்கு மிகுந்த கூச்சமாகிவிட்டது.

பிரியாணி கொடுப்பது ஒரு முக்கியத்துவமே அல்ல ஆனால் பிரியாணியைத் தாண்டிய என் தந்தையின் மனிதநேயம் என்னை எப்பொழுதும் வியப்பில் ஆழ்த்தும்.

Photo Sharing and Video Hosting at Photobucket

இன்றைய ரம்சானுக்கும் பிரியாணி தயாராகிவிட்டது எவர் எவருக்கெல்லாம் கொடுத்துவிடவேண்டும் என்ற பட்டியலும் தயாராகி விட்டது.

ஆகவே நான் கிளம்புறேன் தாமதமாகக் கொடுக்கச்சென்றால், என் தந்தை கோவப்படுவார். நான் வர்றேங்க…

உங்களுக்கும் பிரியாணி வேணுமுன்னா அடுத்த ரம்சானுக்கு என் வீட்டுக்கு வாங்க..இல்லையெனில் முகவரி கொடுங்க பார்சலில் அனுப்புறேன்….

அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.

- ரசிகவ் ஞானியார்

10 comments:

குசும்பன் said...

நண்பரே உங்களுக்கு போன் செய்யவேண்டும் என்று நினைத்து உங்கள் பதிவில் நம்பர் இருக்கா என்று தேடி பார்த்தேன் இல்லை!!! இருந்தாலும் பரவாயில்லை

ரமதான் வாழ்த்துக்கள்!!!

////உங்களுக்கும் பிரியாணி வேணுமுன்னா அடுத்த ரம்சானுக்கு என் வீட்டுக்கு வாங்க..இல்லையெனில் முகவரி கொடுங்க பார்சலில் அனுப்புறேன்….///

ஊரில் இருந்தாலவது பிரியாணி கிடைச்சு இருக்கும் போல நான் கொடுத்து வெச்சது அம்புட்டுதான்!!!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//நண்பரே உங்களுக்கு போன் செய்யவேண்டும் என்று நினைத்து உங்கள் பதிவில் நம்பர் இருக்கா என்று தேடி பார்த்தேன் இல்லை!!! இருந்தாலும் பரவாயில்லை//

என்னுடைய ப்ளாக்கில்தான் இருக்கின்றது நண்பா...எனக்கு தனிமடல் அனுப்புங்கள் நான் தொலைபேசி எண் தருகின்றேன்..

அடுத்த தடவை ஊருக்கு வந்தா வீட்டுக்கு வாங்க ரம்சான் இல்லாவிட்டாலும் பிரியாணி தருகின்றேன்... :)

cheena (சீனா) said...

இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள் நண்பரே !! சிறு வயதில் மதுரை கே.புதூரில் சாம்பியன் சைக்கிள் கடை வைத்திருந்த / வைத்திருக்கும் அப்துல்லா பாய் வீட்டு பிரியாணி சாப்பிட்ட நினைவு வருகிறது.

தனசேகர் said...

மிகச் சுவாரசியமான .. அனுபவபூர்வமான பதிவு .. :)

இனிய ரமலான் வாழ்த்துக்கள் ரசிகவ் .. :)

இந்த வருட ரமலான் அனுபவத்தையும் எழுதிங்கள் :)

தனசேகர்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//cheena (சீனா) said...
இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள் நண்பரே !! சிறு வயதில் மதுரை கே.புதூரில் சாம்பியன் சைக்கிள் கடை வைத்திருந்த / வைத்திருக்கும் அப்துல்லா பாய் வீட்டு பிரியாணி சாப்பிட்ட நினைவு வருகிறது.//

நன்றி சீனா...

அதற்குப் பிறகு எங்குமே பிரியாணி சாப்பிடலையா நண்பா... :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//தனசேகர் said...
மிகச் சுவாரசியமான .. அனுபவபூர்வமான பதிவு .. :)

இனிய ரமலான் வாழ்த்துக்கள் ரசிகவ் .. :)

இந்த வருட ரமலான் அனுபவத்தையும் எழுதிங்கள் :)//


நன்றி தனசேகர்

இந்த வருட அனுபவம் பதிவு எழுதும் அளவிற்கு இல்லை நண்பா...

Anonymous said...

nice thoughts rasikav


- kumar

Anonymous said...

ஒவ்வொரு ரம்சானும் இராமையா சார்க்கு பிரியாணி கொடுத்த நீ எனக்கு அல்வா கொடுத்திட்டி யே நண்பா

சுடலைமணி
9894747631
sudalaimani06@yahoo.co.in

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ஒவ்வொரு ரம்சானும் இராமையா சார்க்கு பிரியாணி கொடுத்த நீ எனக்கு அல்வா கொடுத்திட்டி யே நண்பா
சுடலைமணி//

நான் கடலை போடுறவங்களுக்கெல்லாம் பிரியாணி தரமாமட்டேனாக்கும். :)

ILA (a) இளா said...

பல விஷயங்களை கிளறி விட்டுட்டீங்க. ஹ்ம்ம். அதெல்ல்லாம் அந்த காலம். விடுங்க. பசுமையான நினைவுகள்...

தேன் கூடு