சென்னையைப் பற்றி தனது ஞாபகங்களை எழுதிய அகிலனின் பதிவுகள் எனக்குள்ளும் சென்னை ஞாபகங்களை தூண்டிவிட்டது. சென்னை என்ற வார்த்தைக்கு எப்பொழுதுமே ஒரு பிரமாண்டம் இருக்கத்தான் செய்கின்றது.
தலைநகரம் என்பதால் மட்டுமல்ல நடிகர்களின் கோட்டை என்பதால் சென்னைக்கு எப்பொழுதுமே மவுசுதான். இளவயதில் சென்னை என்றாலே அது பணக்காரர்களுக்கு மட்டும்தானோ என்று எண்ணத்தோன்றியது.
சென்னையிலிருந்து வருடத்திற்கு ஒருமுறை எங்கள் ஊருக்கு வந்துசெல்லும் எனது சொந்தங்களை விண்ணிலிருந்து வருபவர்களைப் போல வியந்து பார்த்திருக்கின்றேன். சென்னைப் பலகாரம் - சென்னை சாக்லேட் என்று ஒவ்வொரு முறையும் அவர்கள் கொண்டு வருவதால் சென்னையைப் பார்க்க வேண்டுமென்கிற ஆவல் எனக்கு அதிகம் ஏற்பட்டது.
நான் எட்டாம் வகுப்பு படிக்கும்பொழுதுதான் எனது உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக முதன்முதலில் சென்னையை எட்டிப்பார்த்தேன். மெரினா பீச் - கலங்கரை விளக்கம் மாமல்லபுரம் என்று செம குஷியாக சுத்தினேன்.
கப்பல்கள் வழிதவறிச் செல்லாமல் இருப்பதற்காக அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கத்தில் நான் வழிதவறிச் சென்றுவிட்டேன். சில அடி தூரம் சென்று விட்டு திரும்பி பார்த்தால் என்னை கைபிடித்து அழைத்து வந்த அம்மாவையோ உறவினர்களையோ அந்தக் கூட்டத்தில் என்னால் காண முடியவில்லை.
அழுகை வேறு முட்டிக்கொண்டு வருகின்றது. பின் அங்கேயே சில நிமிடங்கள் சுற்றிக்கொண்டிருந்தேன். ஒருவழியாக கண்டுபிடித்துவிட்டேன். இதில் என்ன வேடிக்கை என்னவென்றால் நான் காணாமல் போனதோ பின் மீண்டும் இணைந்ததோ அவர்களுக்கு எதுவும் தெரியாது..
எங்களது நண்பன் ஒருவன் சிறுவயதிலையே வீட்டை விட்டு வெளியேறி சென்னையில் உறவினர்களுடன் வியாபாரத்தை கவனித்து வந்தான். அவன் ஒவ்வொரு முறை சென்னையில் இருந்து வரும்பொழுதும் அவனைச்சுற்றி ஒரு கூட்டம்தான்.
"நான் டீ குடிச்சிக்கிட்டு இருந்தேன். அப்போ ரஜினிகாந்த் சாதாரணமா நடந்து போவார்..நாங்க கண்டுக்கவே மாட்டோம்.."
"விஜயகாந்த் பக்கத்துல நின்று புகைப்படம் எடுத்திருக்கேன் தெரியுமா.."
"தினமும் எங்க கடைக்கு முன்னாலதான் சினிமா சூட்டிங் நடக்கும்..எங்களுக்கு அது பழகிப்போச்சு யாருமே பார்க்க மாட்டோம்.."
"ஒருநாள் எங்க கடைக்கு நடிகர் செந்தாமரை வந்தார் தெரியுமா..?"
என்று அவன் கதையளந்து கொண்டே செல்வான். அது உண்மையோ பொய்யோ சோதித்து பார்க்கின்ற வயது இல்லை. அப்படியே நம்பிவிடுவோம்.
நாங்கள் நடிகர்களை என்றாவது ஒருநாள் பார்க்க மாட்டோமா? சினிமா சூட்டிங் எப்படி நடக்கிறது என்று காண்போமா? என்ற ஆவலில் இருக்கின்றோம் ஆனால் இவன் என்னடா வென்றால் இவற்றைச் சுற்றியே வாழ்ந்து வருகின்றான். நடிகர்களை பார்த்தும் இவ்வளவு அலட்சியமாய் இருக்கின்றான் என்று அவன் மீது பொறாமைப் படுவோம். இதற்காகவேனும் சென்னையில் பிறந்தோமா என்று தோன்றும்.
அது மட்டுமல்ல,
"மெட்ராஸ்ல பேருந்தில் பெண்கள் பக்கத்துல உட்கார்ந்தாலும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க தெரியுமா? "
என்று சென்னைப் பெண்களின் நாகரீகம் பற்றி அதிகமாய் பேசுவான். அதில் மயங்கி சென்னைக்கு செல்லத் துடித்தவர்கள் பலபேர்
"நான் பைக்கை எடுத்தேன்னா சும்மா 100ல தான் பறப்பேன். அப்படியே ரவுண்டு அடிச்சிதான் பைக்கை எடுப்பேன். பைக் சும்மா ப்ளைட் மாதிரி பறக்கும் தெரியுமா?" என்று தன்னைப் பற்றியும் அடிக்கடி அவன் பாடிய சுயபுராணம் ஒருநாள் உடைந்தது.
எங்கள் நண்பன் ஒருவனின் பைக்கை ஒருநாள் கொடுத்து அவன் சொன்ன ஹீரோத்தனத்தை செய்யச்சொன்னோம். அவன் முதலில் தயங்கினான். பின் தன் ஹீரோயிஸம் கெட்டுவிடக்கூடாதே என்று பைக்கை எடுத்தான். அவ்வளவுதான் எங்களுக்கெல்லாம் சிரிப்பு வந்துவிட்டது. ஆமாங்க பைக்கை ஓட்டவே தெரியலை..தடுமாறி தடுமாறி சென்றான்.
அப்புறம் வந்து, "இந்த மண்சாலைக்கெல்லாம் இந்த பைக் சரிப்படாது" என்று மழுப்ப ஆரம்பித்தான். இப்படி சென்னை சென்று விட்டு வருபவர்களின் ஹீரோயிஸமும் சென்னையைப் பற்றிய ஆவலை அதிகப்படுத்தியது.
பின் படிப்பு சம்பந்தமாக வேலை சம்பந்தமாக சென்னைக்கு அடிக்கடி செல்ல நேரிட்டது. ஒவ்வொரு சம்பவங்களையும் சொல்ல ஆரம்பித்தால் இந்த ஒரு பதிவு போதாது. கன்னித்தீவு கதை போல நீண்டு கொண்டே இருக்கும்.
ஆனால் அந்த சிறு வயது ஆவல் இப்பொழுது துளி கூட இல்லை. எல்லாம் போலித்தனமான நகர வாழ்க்கையாக மாறிவிட்டது.
ஒரு பக்கம் பார்த்தால் பிரமாண்டம் பிரமாண்டம் பிரமாண்டமான வளர்ச்சி. மறுபக்கம் பார்த்தால் 3 வேளை உணவு முறையை 1 வேளையாக மாற்றிக்கொண்டு திரிகின்றவர்கள்.
கைநிறைய பணம் இருந்தும் செலவழிக்கத் தெரியாத / வீண் விரயம் செய்கின்ற இளைஞர்கள் இருக்கின்ற இதே சென்னையில்தான் இன்னமும் காலையில் நாஷ்டாவுக்கு வழியில்லாவிட்டாலும், மடிப்பு கலையாத ஆடையில் பசியோடு நேர்முகத்தேர்வுக்கு சென்று கொண்டிருக்கும் இளைஞர்களும் இருக்கின்றார்கள்.
- ரசிகவ் ஞானியார்
13 comments:
ஆனால் அந்த சிறு வயது ஆவல் இப்பொழுது துளி கூட இல்லை. எல்லாம் போலித்தனமான நகர வாழ்க்கையாக மாறிவிட்டது.
உண்மதாங்க. . . . .
//செலவழிக்கத் தெரியாத / வீண் விரயம் செய்கின்ற இளைஞர்கள் இருக்கின்ற இதே சென்னையில்தான் இன்னமும் காலையில் நாஷ்டாவுக்கு வழியில்லாவிட்டாலும், மடிப்பு கலையாத ஆடையில் பசியோடு நேர்முகத்தேர்வுக்கு சென்று கொண்டிருக்கும் இளைஞர்களும் இருக்கின்றார்கள்.
//
அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி, அதன் அருகினில் ஓலைக் குடிசை கட்டி.... சென்னை நகரமென்று பெயரும் இட்டால்...
Today s chennai's birthday.
you have written an article about the craze we have towards chennai at this time.
Nice.
இந்த அலட்டல் நண்பன் மாதிரி எல்லா ஊருலேயும் சிலர் இருக்காங்கப்பா.
இங்கே ஒரு நண்பர் அவரைப்பற்றித் தெரியாத மற்ற இந்திய நண்பர்களுக்குத் தன்
செல்வத்தைப் பற்றி அளந்து விடுவார். 'கார்லே எப்பவுமே ரெண்டாயிரம் டாலர் கேஷா
வச்சுக்கிட்டே இருப்பேன்'ன்னு.
பாவம், ஒரு நாள் தற்கொலை செஞ்சுக்கிட்டார்.
எங்கே பார்த்தாலும் கடன் வாங்கி வச்சுருந்தாராம்(-:
Happy Birthday Chennai!
ம்ம்ம்ம்ம்ம்.. நல்லா ஏமாத்திட்டீங்க...
தலைப்பை பாத்து என்னவோ ஏதோ என்று ஓடியாந்து பாத்தா.......
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
எனக்கு பொய் சொல்றது புடிக்கும். அதனால உங்க பதிவு நல்லா இல்ல.
உங்களைப் போன்றே சிறுவயதில் சென்னையை பிரமிப்பாக பார்த்தவன்தான் நானும். பிறகு சென்னையிலேயே நான்காண்டுகள் வாழ்ந்த போது அந்த பிரமிப்புகள் பொடிந்து போய் விட்டன. பிரமிப்புகளின் இடத்தைப் பல நிதரிசனங்கள் நிரப்பி விட்டன.
முதலாவது சென்னை என்றும் மாறுவதில்லை. நாம் மாறுகிறோம். நமது பார்வைகள் மாறுகின்றன. சென்னை அப்படியேதான் இருக்கிறது ஒரு பெரும் நகரின் அத்தனை குணாதிசயங்களோடும்.
மக்கள் தொகை, தண்ணீர்ப் பிரச்சினை, கோடை வெயில், மாசுபட்ட சுற்றுச் சூழல், வேலையின்றிருக்கும் ஆட்டோ மீட்டர்கள் -- இவற்றைத் தாண்டியும் சென்னை வசிக்கத்தக்க நல்ல ஊர்களில் ஒன்றாகத்தான் இருக்கிறது. மழைக்காலத்தில் நன்றாகவே மழை பெய்கிறது. மழைக்காலம் தொடங்கி பிப்ரவரி இறுதி வரையிலும் இதமான தட்பவெப்ப நிலைதான். கோடையில் வந்து குவியும் மாம்பழங்கள் கொடுமையைச் சற்றே குறைக்கின்றன.
சென்னையிலும் நல்ல உள்ளங்கள் நிறைய இருக்கின்றன. சென்னையின் விளிம்புகளைக் கூட காணாமல் நகரிலேயே வசித்து வரும் சில அப்புராணி மனிதர்களைக் கண்டு நான் வியந்திருக்கிறேன். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போக வேண்டுமென்றால் “வழக்கமா எவ்வளவு சார் கொடுப்பீங்க?” என்று விசாரித்து அதையே வாங்கிக் கொள்ளும் ஆட்டோக்காரர்கள் நிறைய பேரை சந்தித்திருக்கிறேன்.
அடையார், கிண்டி, தி.நகர், மயிலாப்பூர் போன்ற இடங்களின் பசுமை சென்னை சிங்காரச் சென்னையாக்கப்படலாம் என்பதற்கு நம்பிக்கை அடையாளங்கள். ஆனால் சிங்காரச் சென்னையை முன்வைத்தவர்களின் ஆட்சி நிரந்தர முடிவை எட்டும் வரை இந்த நம்பிக்கை பொய்த்தே கிடக்கும்.

// வெங்கட்ராமன் said...
ஆனால் அந்த சிறு வயது ஆவல் இப்பொழுது துளி கூட இல்லை. எல்லாம் போலித்தனமான நகர வாழ்க்கையாக மாறிவிட்டது.
உண்மதாங்க. . . . .//
நன்றி வெங்கட்ராமன்
//princenrsama:அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி, அதன் அருகினில் ஓலைக் குடிசை கட்டி.... சென்னை நகரமென்று பெயரும் இட்டால்... //
நல்லாத்தான் இருக்கும்..மேயர்கிட்ட அனுமதி வாங்கணுமே..? :)
//Anonymous said...
Today s chennai's birthday.
you have written an article about the craze we have towards chennai at this time.
Nice. //
பெயர் தெரியாவிட்டாலும் இதயம் நன்றாகவே புலப்படுகின்றது..நன்றி
//துளசி கோபால் said...
இந்த அலட்டல் நண்பன் மாதிரி எல்லா ஊருலேயும் சிலர் இருக்காங்கப்பா.
பாவம், ஒரு நாள் தற்கொலை செஞ்சுக்கிட்டார்.
எங்கே பார்த்தாலும் கடன் வாங்கி வச்சுருந்தாராம்(-:
Happy Birthday Chennai! //
அய்யோ பாவம்...அவருக்கு என்ன கஷ்டமோ..?
நன்றி துளசியம்மா..
// விஜயன் said...
எனக்கு பொய் சொல்றது புடிக்கும். அதனால உங்க பதிவு நல்லா இல்ல. //
எனக்கு உண்மை சொல்றது பிடிக்காது..
அதனால உங்க விமர்சனம் சரியில்லை. :)
//ஏவிஎஸ்: ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போக வேண்டுமென்றால் “வழக்கமா எவ்வளவு சார் கொடுப்பீங்க?” என்று விசாரித்து அதையே வாங்கிக் கொள்ளும் ஆட்டோக்காரர்கள் நிறைய பேரை சந்தித்திருக்கிறேன். ?//
நல்ல மனிதர்களை சந்திக்கும் பாக்கியம் தங்களுக்கு கிடைத்திருக்கின்றது
Post a Comment