Saturday, August 11, 2007

பிணத்தோடு விளையாடி.. பிணத்தோடு உறவாடி..



செத்த பிணத்தைச் சுற்றி
அழுதபடி
சாகப்போகின்ற பிணங்கள்


- யாரோ


இக்கவிதையின் அர்த்தங்களை அவ்வளவு எளிதாய் நாம் அலட்சியம் செய்ய முடியாது. மரணம் நமக்கு நெருக்கமானவர்களுக்கு வரும்பொழுதுதான் நாம் உணர ஆரம்பிக்கின்றோம் நமக்கும் ஒருநாள் வந்திடுமோ என்று?

தினம் தினம் செத்த பிணத்தை சுற்றி நிற்கின்ற சாகப்போகின்ற பிணங்களைப் பார்த்து அதிர்ச்சியில் வந்திருக்கின்றேன்..

ம்....மருத்துவக்கல்லூரியில் பிணங்களோடு தங்கள் வாழ்க்கையைக் கழித்துக்கொண்டிருக்கும் பிணவறைப்பகுதி ஊழியர்களையும் மருத்துவர்களை பற்றியும்தான் குறிப்பிடுகின்றேன்.

Photo Sharing and Video Hosting at Photobucket

சென்ற மாதம் (15-07-07) திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் பிணவறைப்பகுதியில் பணிபுரியும் மருத்துவர் ஒருவரின் கணிப்பொறியை சரிசெய்வதற்காக நண்பருடன் சென்றிருந்தேன். அரசாங்க மருத்துவமனை என்றாலே உள்ளே செல்வதற்கு ஒரு தயக்கம் இருக்கும். அதுவும் பிணவறைப்பகுதி என்றால் கேட்கவா வேண்டும்.

Photo Sharing and Video Hosting at Photobucket

எத்தனையோ அழுகுரல்களையும், சோக ஓலங்களையும் கேட்டு சலித்துப்போன அந்தக் கட்டிடம் அமைதியாக காட்சியளித்தது. இரயில் மோதி விபத்துக்குள்ளான உடல்கள் - பேருந்தில் நசுங்கிய மனிதர்கள் - தற்கொலை செய்து கொண்டவர்கள் என்று எத்தனையோ பிணங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அந்தப் பிணவறையை மெல்ல எட்டிப்பார்த்தபடி பயத்தோடும் திகிலோடும் கடந்தேன். உடல் லேசாய் சிலிர்த்துக் கொண்டது.
பிணங்கள் ஏதேனும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறதா? என்று லேசாய் எட்டிப்பார்த்தேன் நல்லவேளை எதுவுமில்லை.. இன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் பிணத்திற்கும் விடுமுறையோ?

அந்தக் கட்டிடத்தின் முன்னால் வந்து நிற்கும்பொழுதே பைக் - கைகள் - இதயம் என்று அனைத்துமே நடுங்க ஆரம்பிக்கின்றது. உள்ளே செல்வதற்கு 1 சதவிகிதம் கூட தைரியமில்லாமல் அந்த இடத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டே தயங்கி தயங்கிதான் சென்றேன்.

Photo Sharing and Video Hosting at Photobucket

நான் கல்லூரியில் படிக்கும்பொழுது இந்தச் சாலை வழியாகத்தான் கிண்டலடித்தபடி செல்லுவோம். ஆனால் இந்த பிணவறைப்பகுதியை கடக்கும்பொழுது மட்டும் அனைவருமே தன்னிச்சையாக மௌனமாகிவிடுவோம். எப்பொழுதும் வாயிலில் யாராவது ஒருவரோ அல்லது ஒரு சிறு கூட்டமோ தங்கள் உறவினர்களை, பிரியமானவர்களை இழந்து சோகத்துடன் பரிதவித்துக் கொண்டிருப்பார்கள்.

ஒருநாள் பரிட்சை நேரத்தில் இந்த இடம் வழியாக கடந்து சென்றபொழுது ஒரு பெண்மணியின் பயங்கற கதறல் ஆர்ப்பாட்டம். யாரையோ இழந்து ஓலமிட்டுக்கொண்டிருந்தார்கள். அந்தக் காட்சியை கண்டு மனசு உறைந்து விட்டது. பரிட்சை அறையிலும் அந்தக் காட்சியே திரும்ப திரும்ப வந்து கொண்டிருக்க எதையும் எழுத பிடிக்காமல் ஆசிரியரிடம் நிலைமையைச் சொல்லி அப்படியே பேபப்ரை மடித்து கொடுத்தேன். அந்த ஆசிரியரோ, பரிட்சை எழுதாததற்கு நான் கூறிய வித்தியாசமான காரணத்தை ஆச்சர்யமாய் பார்த்தபடி சரி அதுக்கென்ன அடுத்த தடவை பார்த்துக்கொள்ளலாம்" என்று கூறிவிட்டார். என் நிலைமைய புரிந்து கொண்ட அந்த ஆசிரியருக்கு நன்றிகள் .

அதன்பிறகு அந்த வழியாக செல்வதை பெரும்பாலும் தவிர்த்துக்கொள்வேன். எதற்காக அந்தச் சம்பவத்தை சொல்கிறேனென்றால் சாதாரணமாக கடந்து சென்றதற்கே மனதில் இத்தனை ரணங்கள் என்றால் அங்கேயே பிணவறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு எப்படி இருக்கும்?. எனக்கு சென்றுவிட்டு வந்த நிமிடத்திலிருந்து பித்து பிடித்தது போல இருக்கின்றது. எதையும் சாப்பிடத் தோன்றவில்லை

Photo Sharing and Video Hosting at Photobucket

மூளை ,எலும்பு, கை, கால், தலை என்ற வார்த்தைகளை நாம் கசாப்புக் கடைகளில்தான் உபயோகிப்போம் ஆனால் தினம் தினம் இந்த வார்த்தைகளை மனித உறுப்புகளோடு ஒப்பிட்டு மனிதர்களிடமிருந்து பிரித்தெடுத்து ஒட்டி.. .....ச்சே கேட்கும்பொழுதே ஜீரணிக்க முடியவில்லை..

நீங்கள் எப்பொழுதேனும் கோழிக்கறி வாங்குவதற்கு கோழிக்கடைக்குச் சென்றிருக்கின்றீர்களா? சென்றால் கண்டிருக்க கூடும். கோழிகள் மொத்தமாக அடைபட்டிருக்கும்.
கடைக்காரன் ஏதாவது ஒரு கோழியை எடுக்க முற்படும்பொழுது எல்லாக் கோழிகளும் அப்படியே பதுங்கி பயந்து மூலையில் சென்று ஒட்டிக்கொள்ளும். அவற்றில் ஒன்றைப் பிடித்து மற்ற கோழிகளின் கண்முன்னாலையே அதனை அறுத்து பல பாகங்களாக பிரித்தெடுக்கும்பொழுது அந்தக் கோழிகளுக்கு எவ்வளவு மிரட்சி கண்களில் தெரியும் தெரியுமா..? நான் பலமுறை கவனித்திருக்கின்றேன். அறுக்கப்பட்ட கோழியின் வலியை விடவும் அதனைப் பார்த்துக்கொண்டிருக்கும் மற்ற கோழிகளுக்குத்தான் வலிகள் அதிகம்

இதே நிலைமைதான் இந்தப் பிணவறையில் வேலைபார்ப்பவர்களுக்கும். தினம் தினம் ஏதாவது ஒரு பிணத்தைப் பிரித்தெடுத்து தைக்கும்பொழுது தான் வாழ்கின்ற நாட்களில் இவ்வளவு ஆட்டம் போடுகின்றோமே? நமக்குள் இருப்பதும் இதுபோன்ற வெற்று எலும்புகள் ,சதைகள் , இரத்தப் பிடிப்புகள்தானே என்று உணர்ந்துகொள்வார்கள்.

அங்குள்ள ஊழியர் ஒருவர் கூறினார்

"தம்பி! நேத்து ஒரு பிணம் வந்துச்சு ஆளைப்பார்த்தா முறுக்கு மீசையோடு சும்மா திடகாத்திரமா இருந்தார். ஆனால் சாதாரணமாக நாங்கள் கிழித்து தைத்துக்கொண்டிருந்தோம். வாழும்பொழுதுதான் நீ நான் என்று மல்லுக் கட்டிக்கொண்டு நிற்கின்றோம். ஆனால் இப்ப பாருங்க எல்லாருக்கும் இந்த நிலைமைதான்" என்று அவர் சாதாரணமாக சொன்னாலும் அவருடைய பேச்சில் நிறைய பக்குவம் தெரிந்தது.

"ச்சே என்ன வாழ்க்கைப்பா இது" என்று சலித்துக்கொண்டார். .

1 கிலோ சர்க்கரை, அரை கிலோ பருப்பு, 1 லிட்டர் எண்ணெய் என்று பட்டியலிடுவது போல இங்கேயும் பட்டியலிட்டுக்கொண்டிருக்கிறார்கள் எப்படி தெரியுமா?

------------------------------------ஜனவரி-- பிப்ரவரி-- மார்ச்-- ஏப்ரல்

விபத்து ------------------------5------------ 1------------2----------- 3

தூக்கு -----------------------1------------- 3 - - -------NIL----------7

விஷம் ---------------------- 4

எரிந்தவர்கள் ------------------4--------------3 -

கொலை ---------------------------------------1---------- - 2


இப்படி பட்டியலிட்டிருக்கின்றார்கள். பார்த்ததும் அதிர்ந்து போய்விட்டேன். இதில் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் ஒரு நிஜ படத்தை தொங்கவிட்டிருக்கின்றார்கள். சென்ற வருடம் மட்டும் 800 க்கும் மேற்பட்ட பிணங்கள் வந்தது. இந்த வருடம் இப்பொழுதே அந்த எண்ணிக்கை வந்துவிட்டது என்று வளர்ச்சி விகிதத்தை பட்டியலிடுகின்றார்.

வருடங்கள் வாரியாக, மாதங்கள் வாரியாக எழுதப்பட்டிருந்தது செத்தவர்களின் எண்ணிக்கையையை.
சாதிக்கலவரம், மதக்கலவரம், காதல்தோல்வி, விபத்து, வரதட்சணை கொடுமை ,பழிக்குப் பழி என்று எத்தனையோ காரணங்கள் அங்கே. ஆனால் இறந்தவர்களின் மதங்கள், சாதிகள், எல்லாம் எழுதப்படவில்லை வெறுமனே பிணம் அவ்வளவுதான்..


சாலையில் எங்கேனும் விபத்தைக் காண நேர்ந்தாலே அது ஜீரணமாக 1 நாள் ஆகின்றது.

பிணத்தோடு விளையாடி
பிணத்தோடு உறவாடி
பிணத்தோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே


என்று பிணங்களோடு வாழ்நாளைக் கழிக்கின்ற அந்த ஊழியர்களை நினைத்து பரிதாபப்படத்தான் தோன்றுகின்றது. ஆனால் பிணத்தோடு பணிபுரிந்து சிலருக்கு இதயம் மரத்துப் போகின்றது. பிணம் வாங்க வருபவர்களிடம் அவர்களின் துக்கத்தை அலட்சியப்படுத்திவிட்டு பணத்தையே முதன்மையாக கருதும் சில ஊழியர்களைத் தவிர மற்றவர்கள் பார்ப்பது தொழில் அல்ல தியாகம் எனலாம்..

- ரசிகவ் ஞானியார்

8 comments:

Unknown said...

பிணங்களோடு வாழும் அந்த மனிதர்களைப் பற்றிய பதிவு அருமை!

மனிதர்கள் உயிரந்தால் பிணம்... பிணத்தோடு அந்த மனிதர்கள் ..... ஹ்ம்ம்ம்

Jazeela said...

:-( ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு இறப்பு அது நமக்கு இழப்பில்லாத வரை மகிழ்ச்சிதான்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//தஞ்சாவூரான் said...
பிணங்களோடு வாழும் அந்த மனிதர்களைப் பற்றிய பதிவு அருமை!

மனிதர்கள் உயிரந்தால் பிணம்... பிணத்தோடு அந்த மனிதர்கள் ..... ஹ்ம்ம்ம் //

நன்றி தஞ்சாவூரான்...

தத்துவம் எல்லாம் சொல்ல ஆரம்பிச்சுட்டீங்க... :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// ஜெஸிலா said...
:-( ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு இறப்பு அது நமக்கு இழப்பில்லாத வரை மகிழ்ச்சிதான். //

நமக்கு இழப்பில்லாத ஒரு மரணம் நமக்கு மகிழ்ச்சியைத் தராது ஜெஸிலா...அதுவும் ஏதாவது ஒரு சஞ்சலத்தை ஏற்படுத்தவே செய்யும்...

riya said...

பிண அறையின் ஊழியரின் மன நிலையும், மற்ற சாதரன மனிதனின் மனநிலையும் எப்படி இருக்கும் என்பதை தாங்கள் மிக அருமையாக பதிவு செய்துள்ளீர்கள். தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்...

நன்றி...

Ur's riya - (Al Daghaya)
Dubai.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//riya said...
பிண அறையின் ஊழியரின் மன நிலையும், மற்ற சாதரன மனிதனின் மனநிலையும் எப்படி இருக்கும் என்பதை தாங்கள் மிக அருமையாக பதிவு செய்துள்ளீர்கள். தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்...//


பிணவறையில் வேலை செய்யாதவர்கள் சாதாரண மனிதர்களா...?.பதிவு உங்களை அதிகமாகவே பாதித்திருக்கிறது ரியா....நன்றி

riya said...

நான் குறிப்பிட்டுள்ள சாதாரன மனிதர்களுடைய மனநிலை என்பது உங்களுடைய மனநிலையை தான்.

தாங்கள் பதிவு செய்தவை.
(நான் கல்லூரியில் படிக்கும்பொழுது இந்தச் சாலை வழியாகத்தான் கிண்டலடித்தபடி செல்லுவோம். ஆனால் இந்த பிணவறைப்பகுதியை கடக்கும்பொழுது மட்டும் அனைவருமே தன்னிச்சையாக மௌனமாகிவிடுவோம்)

தாங்கள் சாதாரன மனிதர் இல்லையா?? தாங்கள் எப்பொழுது பிணவறையில் வேலைக்கு சேர்ந்தீர்கள்?

Ur's riya - (Al Daghaya)
Dubai.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//riya said...
நான் குறிப்பிட்டுள்ள சாதாரன மனிதர்களுடைய மனநிலை என்பது உங்களுடைய மனநிலையை தான். //

நம்முடைய மனநிலைன்னு பொதுவாச் சொல்லுங்க ரியா.... :)

தேன் கூடு