Sunday, February 26, 2006

சதக் கல்லூரியிலிருந்து துபாய் வரை..

அன்று காலையில் (23.02.06) சலிம் தொலைபேசி செய்திருந்தான்.

"அண்ணே நாளைக்கு நம்ம சதக் காலேஜ் பழைய நண்பர்கள் சந்திப்பு கூட்டம் துபாய் கஃல்ப் ஏர் பில்டிங்கில் உள்ள கார்பார்க்கிங்கில் வைத்து நடக்குதுன்னு என்னோட ப்ரண்டு ஒருத்தன் சொன்னான்..உங்க போன் நம்பர் கேட்டாங்க..கொடுக்கவா.."

இது என்னடா கதையா இருக்கு..? யாராவது தேன் சாப்பிட அடம்பிடிப்பாங்களா..? கல்லூரின்னு சொன்னாலே மீண்டும் இளைமையெல்லாம் திரும்பி வந்திடுற மாதிரி ஒரு பீலிங்..இதுக்குப் போய் நம்ம கிட்ட அனுமதி கேட்கிறாங்களப்பா..? பாசக்காரனா இருக்காங்களே..?

"சரி என்னுடைய நம்பரைக் கொடு" என்று சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்து விட்டேன்.

மனம் கல்லூரி நாட்களுக்குள் சென்றது. எப்போதோ எங்கேயோ எந்த காலக்கட்டத்திலோ படித்த நண்பர்கள் ஏதோ பிழைக்க வந்த இடங்களில் மறுபடியும் சந்திப்பது என்பது மனம் கிளர்ச்சியூட்டும் செயல்களில் ஒன்று.

சில நண்பர்கள் போனுக்கு மேல் போன். யாருடய முகங்களும் ஞாபகம் இல்லை. ஆனால் தெரிந்த மாதிரி காட்டிக்கொண்டு ம் வருகிறேன் என்று சொல்லிவிட்டேன்.

அந்த தவ்ஹீத் என்ற ஜுனியர் மாணவன் தொலைபேசி செய்து "அண்ணே நீங்க இருப்பீங்கன்னு தெரிஞ்சா உங்களுக்கும் ஒரு பொறுப்பு கொடுத்திருக்கலாம்" என்று சொல்ல

"இல்ல பொறுப்பல்லாம் காலேஜ்ல கிடைச்சதோட போதும்..நான் கண்டிப்பா கூட்டத்திற்கு வருகிறேன்" என்று வாக்களித்தேன்.

அந்த தவ்ஹீத் என்ற மாணவன் என்னுடைய அடுத்த செட்..அவன் கல்லூரி நாட்களில் விளையாட்டுத்தனமாக கேண்டீனில் நண்பர்கள் கூட்டத்தோடு கிண்டலடித்துக்கொண்டு இருந்தவனா இப்படி பொறுப்பாய் இருக்கின்றான்..

காலேஜ் நேரத்துல எவ்வளவுதான் சேட்டை செய்தாலும் காலேஜ் முடிஞ்சு வந்தவுடன் காலேஜ் மேல ஒரு பாசம் இருக்கத்தான் செய்யுது பாருங்களேன்..

நானும் தில்சத் என்னும் என்னுடைய ஜூனியர் மாணவனும் அங்கு சென்றிருந்தோம் .மதிய தொழுகைக்குப் பிறகு அந்த கல்ப் ஏர் பில்டிங் அருகே சென்றோம். அட நாங்கள் தான் முதல் ஆட்களாக இருக்க கூடும்..? யாருமே வரவில்லையே..?

மற்ற பொதுவான விழாக்கள் அல்லது கலைநிகழ்ச்சிகள் என்றால் விழா ஆரம்பித்தவுடன் அல்லது முடியும் தருவாயில்தான் போவேன். ஆனால் இது கல்லூரி நண்பர்கள் சம்பந்தமான விழா என்பதால் ஆரம்பிக்கும் முன்னரே வந்து காத்துக் கிடந்தேன்.

"என்ன தில்சத்..யாரையுமே காணோம்..ஒருவேளை கேன்சல் ஆகிடுச்சா.. "

அப்பொழுது 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்து "சதக் காலேஜ்" என்று வந்து கூற "ஆமா" என்று கூறி நாங்கள் அறிமுகப்படுத்திக்கொண்டோம்.

அவர் எங்களுக்கு பல வருடங்களுக்கு முந்தைய சீனியர். எப்போதோ படித்த எங்கள் கல்லூரி மாணவரை பார்ப்பது சந்தோஷமாக இருந்தது.

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் வர ஆரம்பித்தது. நான் முகங்களை கவனிக்க ஆரம்பித்தேன். நம்ம க்ளாஸ் மேட் யாராவது வர்றாங்களா..இல்லை நம்ம காலகட்டத்துல படிச்சவங்க யாராவது வர்றாங்களா என்று.

என்னுடைய க்ளாஸ் மேட் யாருமே வரவில்லை. ஆனால் ஒரு பையன் வந்து கைகுலுக்கி "என்னண்ணே எப்படி இருக்கீங்க..நீங்க இங்கேயா இருக்கீங்க..?" என்று ஆச்சர்யமாக கேட்டான். மிகவும் பழக்கப்பட்டவன் போல பேசினான்.

நானும் அவனிடம் "எனக்கு முகம் அடையாளம் தெரியுது ஆனா நீங்க எந்த செட்டுன்னு தெரியலையப்பா.. "

"அட நான் உங்களுக்கு அடுத்த செட்டுண்ணே..லைப்ரேரியன் இருக்கார்ல அவரோட பையன்.. "

எனக்கு அப்பொழுதுதான் அடையாளம் தெரிந்தது.

அந்த கல்லூரி நூலகத்தில் லைப்ரேரியனாக பணிபுரிந்த அவரை என்னவெல்லாம் தொந்தரவுப் படுத்தியிருக்கின்றோம்..

சிலநேரம் எடுத்த புத்தகங்கள் தொலைந்து விட அதற்கு பைன் கட்டாமல் இழுத்தடிப்பது ,

புத்தகம் எடுப்பதற்காக நூலகம் சென்ற நாட்களை விடவும் சைட் அடிப்பதற்காக சென்ற நாட்கள் தான் அதிகம்.

அந்த நினைவுகளில் மூழ்கியவனை இன்னும் சில நண்பர்களின் கைகுலுக்கல்களில் நினைவு கலைந்தேன்.

"அண்ணே..நான் பி.எஸ்.ஸி மேத்ஸ் "

"அண்ணே..நான் பி.காம்..நீங்க பைனல் இயர் படிக்கும்போது நான் பர்ஸ்ட் இயர்.. "

"நீங்க காலேஜ் செகரெட்டரிதானே..இங்கயா இருக்கீங்க..? வந்து எவ்வளவு நாளாகுது? "

என்று ஆளாளுக்கு வந்து கைகுலுக்க கல்லூரியில் இருப்பது போன்ற உணர்வு எனக்கு. அந்த கல்லூரி வராண்டாதான் ஞாhபகம் வந்து போனது.

சீனியர் ஜூனியர் மாணவர்களுக்கிடையே கேலி கிண்டல்கள் பண்ணிக்கொண்டு திரிந்த கலகலப்பான நாட்கள் அழகாய் நினைவுகளில் குதித்து கும்மாளமிடுகிறது.


பின்னர் அனைவரும் உட்கார்ந்து மதிய உணவு சாப்பிட ஆரம்பித்தோம்.

"எல்லாரும் சாப்பிடுங்கப்பா "- அந்த சீனியர் மாணவர் முன்னால் நின்று கூற

"ஹலோ அந்த பச்சடியை எடுங்க.. "

"இங்க கொடுங்க..இங்க கொடுங்க.. "

"என்னங்க இதுல மட்டனே இல்ல..இன்னொரு பிரியாணி பாக்ஸை எடுங்க.. "

"அவர்கிட்ட ரெண்டு பாக்ஸ் வைக்காதீங்கப்பா..அவர் காலேஜ் டைம்லேயே அதிகமா தின்பார்.. "

என்று மரியாதையான கலாட்டாக்களோடு சாப்பிட ஆரம்பித்தோம். அது எங்களின் கேண்டீன் நாட்களை ஞாபகத்தில் கொண்டு வந்தது.

கல்லூரி கேண்டீனில் சாப்பாடு நேரத்தில் சமையல்காரரிடம், "கெஸ்ட் வந்திருக்காங்க " என்று சொல்லி 4 அல்லது 5 தட்டுகளில் சாப்பாடு வாங்கி வந்து அறைக்குள் சென்று ஹாஸ்டலில் இருக்கும் நண்பர்கள் வெளியில் இருந்து வரும் நண்பர்கள் என்று மொத்தமாக உட்கார்ந்து அவரவர் காதல் கதைகளைப் பற்றி கிண்டலடித்துக்கொண்டும் மதியம் கட் அடித்து விட்டு என்ன சினிமா போகலாம் என்று விவாதித்துக் கொண்டும் சாப்பிடுவோம்.

அப்போது உள்ள நாட்களுக்கும் இப்போது உள்ள நாட்களுக்கும் என்ன ஒரு வித்தியாசம் என்றால் கல்லூரி நாட்களில் வாடா, போடா என்று பேசியவர்கள் இப்பொழுது வாங்க, போங்க என்று மரியாதையோடு நக்கலடிக்கிறார்கள் அவ்வளவுதான்.

பின்னர் உணவுக்குப் பிறகு கூட்டம் ஆரம்பித்தது. முதலில் ஒவ்வொருவராய் முன்னால் சென்று தங்களைப் பற்றியும் தாங்கள் கல்லூரியில் படித்த காலக் கட்டங்கள் மற்றும் எந்தப் பிரிவு என்பதைப் பற்றியும் சிறு விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

ஒருவர் எழுந்து உற்சாகமாய் தான் 1972 ல் சதக் கல்லூரியில் படித்ததாக கூற நான் கூட்டத்திலிருந்து சப்தமிட்டேன்

"அய்யோ.. அப்போ நான் பிறக்கவே இல்லைங்க.. "

கூட்டத்தில் சிரிப்பலை..அவரும் பதிலளித்தார்

"நான்தானப்பா கல்லூரியின் முதல் செட்..அப்பல்லாம் கல்லூரி ரொம்ப மோசமா இருந்துச்சி..சரியான ரோடு இல்லை..தண்ணி வசதி இல்லை..நல்லவேளை அந்த கஷ்டத்தையெல்லாம் நீங்க அனுபவிக்கவில்லை.."என்று கூறினார்..

அப்பொழுதுதான் எனக்கு எங்கள் கல்லூரியின் இப்போதைய பிரமாண்ட வளர்ச்சிக்கு பின்னால் இத்துணை சோகக்கதைகள் இருக்கிறது என்பது தெரிய ஆரம்பித்தது..

அந்தக்கூட்டத்தில் கல்லூரி ஆரம்பித்த போது படித்த மாணவனும் வந்திருக்கிறார். தற்போதுதான் முடித்த கடைசியாகப் படித்த மாணவன் தில்சத் என்பவரும்
வந்திருந்தார்..அதைக் கண்டு ரொம்ப புல்லரித்துப் போய்விட்டோம்..

பின்னர் ஒவ்வொருவராய் தங்களைப்பற்றி சுய அறிமுகம் செய்தார்கள். என் முறை வந்தது

என் பெயர் ஞானியார்

1996- 1999 ம் ஆண்டு பிஎஸ்ஸி மேத்ஸ் படித்தேன்..

1999 ல் மாணவர்ப்பேரவை செயலாளராக இருந்தேன்


இப்போ 4 வருஷமா இங்க துபாய்ல பணிபுரிகின்றேன்.



நம்ம கூட்டம் இந்த
கார்பார்க்கிங்கல நடந்தாலும்
எனக்கென்னவோ
நாமெல்லாம்
காலேஜ் பார்க்கிங்ல இருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங்
. ( சிரிப்பு )



என்று சொல்லிவிட்டு அமர முற்பட்டேன். ஒருவர் குறுக்கிட்டு ஞானியார்..எந்த ஊருன்னு சொல்லலேயில்லையே..?

மேலப்பாளையம் என்று பதிலளித்தேன்.

இன்னொருவர் வந்து தன்னுடைய பெயரை மட்டும் கூறிவிட்டு அமர முற்பட உடனே கூட்டத்தில் இருந்து சலசலப்பு

"அட எந்த வருசம் நீங்க.".என்று சில சீனியர் மாணவர்கள் சப்தமிட..

அவரோ தன்னுடைய கூட்டத்தில் இருந்த தனது தோழர் எவரிடமோ எந்த வருசம்பா..என்று
கேட்டு பின் சொன்னார்.

படிச்ச வருஷம் கூட மறந்திடுச்சோ..என்று எல்லோரும் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்.

பின்னர் ஒவ்வொருவராய் வந்து சுய அறிமுகம் செய்து கொண்டார்கள். கல்லூரி நினைவுகள் - கல்லூரி ஆரம்பித்த சூழ்நிலை - ரிடையர்டு ஆகிப்போன ஆசிரியர்கள் - ஆரம்பத்தில் உள்ள பிரின்ஸ்பால்கள் - கல்வியின் முன்னேற்றம் - வருங்கால முன்னேற்றத்திற்கான வழிமுறைகள் என்று பல விஷயங்கள் விவாதித்தோம்.

பின்னர் உறுப்பினர் படிவம் எல்லாரும் நிரப்பிக் கொடுக்கும்படி சொல்லப்பட்டது. பக்கத்தில் உள்ள பாதுஷா நிரப்பிக்கொண்டே பக்கத்தில் உள்ளவனை பார்க்க

"அட இது காலேஜ் சம்பந்தமான கூட்டம்தான்பா..அதுக்காக இந்த படிவத்தைக் கூடவா காலேஜ் மாதிரியே பிட் அடிக்கிறது"

என்று கிண்டலடித்து அனைவரிடமும் படிவத்தை வாங்கி உரியவரிடம் சேர்ப்பித்தேன். பின்னர்
யாருக்காவது இதுபற்றி ஏதாவது கருத்துக்கள் இருந்தா சொல்லவும் என்று கூற அவரவர்கள் ஒரு ஆலோசனை கூறினார்கள்.

நான் பக்கத்தில் இருந்த சலீமிடம் ,
" பிரியாணியில மசாலா அதிகம் இருந்திருக்கலாம்னு சொல்லட்டா "என்று அவனுடைய காதை கடிக்க உடனே அடக்க முடியாமல் சிரித்துவிட்டான்.

"சும்மா இருங்கண்ணே..இதுக்குத்தான் உங்க பக்கம் இருக்கவே கூடாது.. "என்று செல்லமாய் கோபித்துக் கொண்டான்.


ஒருவர் எழுந்து கூறினார். "நம்ம ஏன் சதக் காலேஜன்னு ஜிமெயிலிலோ அல்லது யாகூவிலோ ஒரு குழுமம் ஆரம்பிக்கக் கூடாது?" ( அட மறுபடியும் குழுமமா..? )

"இப்ப நாங்க எல்லாருக்கும் தனிப்பட்ட முறையில் மெயில் அனுப்பிகிட்டு தான் இருக்கோம். போன மீட்டிங் போட்டோவை கூட நாங்க யாகூவில் வைத்திருக்கிறோம்" என்று தவ்ஹீத் விளக்கமளித்தான்.
நானும் என்னுடைய ஜூனியர் மாணவர் பாதுஷாவும் முன்னால் சென்று- தில்சத் என்ற மாணவரை கூட்டத்திற்கு தலைமையேற்றவரிடம் அழைத்துச்சென்று

"இவர் பெயர் தில்சத்..நம்ம காலேஜ்ல சென்ற வருடம்தான் பி.காம் முடிச்சிருக்கார்..இப்ப இங்க விசிட் விசாவில வந்து வேலை தேடுகிறார்..பாவம் இரண்டு விசிட் விசா மாற்றியும் இன்னும் வேலை கிடைக்கவில்லை..ரொம்ப கஷ்டப்படுகிறார்..மறுபடியும் இவரால திரும்பி ஊருக்கும் போக முடியாது...
அதனால் இவருக்கு வேலை வாங்கி கொடுக்க யாராவது உதவி புரிஞ்சாங்கன்னா..அது நம்ம கல்லூரிக்கு செலுத்துற நன்றிக்கடனாக இருக்கும் என்று கேட்டுக்கொண்டோம் "


பின் அவர் அனைவரிடமும் இதுபற்றி சொல்லுவதாகவும் அந்த மாணவரின் பயோடே;டாவை எல்லோருக்கும் அனுப்புவதாகவும் உறுதியளித்தார். பின்னர் நான் விழாவிற்கு தலைமையேற்று எல்லா பொறுப்புகளையும் அக்கறையோடு செய்கின்ற புகாரி மற்றும் தவ்ஹீத் என்ற இரண்டு ஜூனியர் மாணவர்களிடமும் தில்சத்தின் வேலை விசயமாக சொல்ல ,

உடனே புகாரி மற்றும் தில்சத் இருவரும் "தில்சத்தின் பயோடேடாவை கண்டிப்பாக இங்கு வந்திருக்கும் எல்லாருடைய மெயில் முகவரிக்கும் அனுப்பி வைக்கிறோம். அது மட்டுமல்ல யாருடைய அலுவலகத்தில் என்ன வேலை வந்தாலும் உடனே தகவல்கள் அனுப்புகிறோம்" என்று உறுதியளித்தார்கள்.

அவர்களின் பதில் எனக்கு கொஞ்சம் நம்பிக்கையை தந்தது. பின்னர் ஒரு சீனியர் மாணவர் ஏதோ ஒரு நிறுவனத்தில் அக்கவுண்டட் வேலை இருப்பதாகவும் நாளை அந்த நிறுவனத்திற்குச் சென்று தன்னுடைய பெயரைக் கூறி நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளுமாறும் சொன்னார்.

தில்சத்தை விடவும் எனக்கு நம்பிக்கை பிறந்தது. அவருக்கு கண்டிப்பாய் வேலை கிடைக்கும் என்று. இப்போது தில்சத்தின் பயோடேடா சுமார் 50 க்கும் மேற்பட்டவர்களின் கைகளில் இருக்கின்றது. ஆகவே யாராவது ஒருவர் எந்த நிறுவனத்திலாவது பரிந்துரை செய்யமாட்டார்களா..?

பின்னர் பொறுப்பாளர்கள் நியமிக்கும் பணி நடந்தது. இந்த நபரை செயலாளராக நியமிக்கிறேன் என்று ஒருவரின் பெயர் வாசிக்கப்பட

மற்றொருவர் எழுந்து இதை நான் வழிமொழிகிறேன் என்று எழுந்து கூறிவிட்டு அமர்ந்துவிட.

நான் வெளிநடப்பு செய்கிறேன் என்று நானும் மெல்லியதாய் சப்தமிட சுற்றியுள்ள நண்பர்கள் சிரித்துக்கொண்டே என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள். (என்ன இவன் விiளாயட்டுத்தனமாகவே இருக்கான்னு நினைச்சிருப்பாங்களோ என்னவோ )

பின்னே என்னங்க..? இது என்ன அரசியல் மீட்டிங்கா.. ? வழிமொழிகிறேன்..ஆமோதிக்கிறேன்னு சொல்றதுக்கு..அதான் சும்மா கிண்டலடித்தேன்.

பின்னர் அவரவர்களுக்குண்டான பொறுப்புகளை பிரித்துக் கொடுத்தார்கள். பக்கத்தில் உள்ள சலீம் வந்து கிசுகிசுத்தான்..

"அண்ணே நீங்களும் ஒரு பொறுப்புல இருங்கண்ணே..பாருங்க தவ்ஹீத் உங்களைப் பார்த்துதான் கை நீட்டுறான்..உங்களையும் பொறுப்புல சேர்த்திடுவான்னு நினைக்கிறேன்.. "

"அட போங்கப்பா ரூமில பருப்பு சமைக்கவே தெரியல பொறுப்பை வச்சு என்ன செய்ய?" என்று அவனிடம் கிண்டலடித்தேன்..

தவ்ஹீத் வந்து என்னிடம், ஏதாவது பொறுப்பு எடுத்துக்கிறீங்களா என்று கேட்டதற்கு நான் மறுத்துவிட்டேன்.

பொறுப்புகளை பிரித்துக்கொடுத்துவிட்டு ஆண்டுச் சந்தாவாக ஆளுக்கு குறைந்தது 100 திர்ஹம் செலுத்தவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டு ஆங்காங்கே கூட்டம் கூட்டமாய் நின்று பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு பிரிந்து விட்டோம்..

மறுபடியும் கல்லூரி நாட்கள் யாருக்கும் திரும்பி வரவே போவதில்லை. இதுபோன்ற பழைய நண்பர்கள் அமைப்பை ஏற்படுத்தி அந்த நாட்களின் நினைவுகளை பகிர்ந்து கொள்வதுதான் ஒரு வடிகாலாக அமைகின்றது.

ஆனால் ஒரு கல்லூரியின் கதை என்ற திரைப்படம் மாதிரி அப்போது படித்த அனைத்து நண்பர்களையும் ஒன்று திரட்டி ஒரு மணி நேரமாவது அவர்களோடு முந்தைய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டு லூட்டி அடிக்க மாட்டோமா என்று ஆசையாக இருக்கிறது.

ஆனால் யார் யாரெல்லாமோ எங்கெங்கு இருக்கிறார்களோ..?


நான் நண்பர்களுக்கு எழுதிய ஆட்டோகிராப்பில் கூட இப்படித்தான் முடித்திருப்பேன்..


இனிமேல்
எந்த வீதிகளில்
எந்த இரயில்வேஸ்டேஷனில்
எந்த பிளாட்பாரத்தில்
எந்த பஸ்ஸ்டாண்டில்
எந்த ஊரில்
எந்த நாட்டில்
எந்த சாப்ட்வேர் கம்பெனியில்
எந்த சூழ்நிலையில்
மீண்டும் சந்திப்போமோ?

அந்தச் சூழ்நிலையில்
நீ பணக்காரனாகவோ..
தொழில் அதிபராகவோ..
அதிகாரியாகவோ..
எப்படி மாறிப்போனாலும்
பதவிகளையெல்லாம் மறந்துவிட்டு
நட்பை மாற்றாமல் வாருங்கள் போதும்..



- ரசிகவ் ஞானியார்

2 comments:

Anonymous said...

can i change this title as "nilavunanban to my heart"..


jolly article rasikov...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

நன்றி பெயர் தெரியா புண்ணியவானுக்கு..

தேன் கூடு