Sunday, February 12, 2006

காதலின் வாழ்த்துப்பா

நான் பேருந்து கூட்டத்தில்...
சுமையோடு நிற்கும் தருணம்
என் கைவலியை
காணமாட்டாது..
நோட்டுப் புத்தகம் வாங்கி
வைத்துகொண்டாய்!
நோட்டுபுத்தகம் உன்கையில்...
இதயமோ படிக்கட்டில்!

என் பெயர்
தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில்...
நான் பார்க்காத தருணமாய் - என்
நோட்டுப்புத்தகம் திருப்பினாய்!

முன்பக்கப் பெயரையும்...
பின் பக்கக் கவிதையும் படித்துவிட்டு
புன்னகைத்துச் சொல்கிறாய்...
முன்பக்கக் கவிதை நன்றாக இருப்பதாய்!
அந்தக் கவித்துவத்தில்
ஆரம்பித்திருக்குமோ என் காதல்?

நீ ஒவ்வொருமுறை என்
பெயர்சொல்லி அழைக்கும்போதும்...
என் அணுவுக்குள்...
அணுகுண்டு வெடிக்கிறது!
ஹார்மோன்களுக்குள்...
கபடி ஆட்டம்!

இதயமும், மூளையும் ...
தொட்டுப் பிடித்து விளையாடுகிறது!
இந்த இரசாயன மாற்றங்களில்
தோன்றிவிட்டதோ என் காதல்?

உன் தோழிகளோடு பேசிக்கொண்டே...
என்னையும் நோட்டம்விட்ட
ஒரு தருணத்தில்
நான் எதேச்சயாய் பார்த்துவிட்டேனென்று,
உதடு கடிக்கிறாய்...
விழி மருட்டுகிறாய்..
நாகரீகமாய் சிரிக்கிறாய்...
தோழிகளிடம் ஏதேதோ உளருகிறாய்!
அந்த உளறல்களில்...
தெளிவடைகிறதா என் காதல் ?

மூதாதையர்களின் பெயர்களையெல்லாம்...
துருவித் துருவி விசாரித்ததன் நோக்கம்
அம்மாவுக்குத் தெரிந்திருக்காது!
நீ என்
பெயரின் அர்த்தம் கேட்டதால்தான் என்று!
அந்த அர்த்தம் கேட்டதன்...
அர்த்தத்தில் இருக்கிறதா என் காதல் ?

நீ யாருடனாவது...
பேசிச் சிரிக்கும்பொழுது
எனக்கு அழுகை வருகிறதே,
அந்த அழுகையில் இருக்கிறதா என் காதல் ?

நான் கவிதை பாடுகின்ற
ஒவ்வொரு மேடையிலும்...
கைதட்டலை ஆரம்பித்துவைப்பாயே?
அந்த கைதட்டலோடு
கலந்திருக்கிறதா என் காதல்?


நான் மேடையில் நிற்கும்பொழுது
சட்டை கலைந்தால்..
தலைமுடி கலைந்தால்..
சரிசெய்யச் சொல்லி - நீ
சைகை காட்டியதில்...
இதயம் கலைந்துவிட்டது...
அந்த சைகையில்...
பதுங்கியிருக்கிறதோ என் காதல்?

வருகைப்பதிவேட்டை விடவும்...
உன் வருகையை
உறுதிப்படுத்துவது நான்தான்!
ஒருவேளை
உனக்காக நான் சொன்ன...
ஆஜரில் இருக்கிறதோ
என் காதல் ?

எனக்குத் தெரியாமல்
என் அரியர்ஸ் விசாரித்தாயே..?
அந்த அக்கறையில்
இருக்கிறதா என் காதல் ?

நீ வரவில்லையென்றால்
பிரச்சனையா...
காய்ச்சலா...
நிச்சயதார்த்தமா? - என
ஏதேதோ துடிக்கிறதே மனசு...?
அந்த
துடிப்பில் இருக்கிறதோ என் காதல் ?

பேசிக்கொண்டே
நடந்து செல்லும் சாலையில்
தற்செயலாய்...(?)
தோளிடித்துக் கொண்டாலும்
மன்னிப்பு கேட்கத் தோணவில்லையே...
இருவருக்கும்...
அந்த நெருக்கத்தில் இருக்கிறதோ
என் காதல் ?

கல்லூரி சுற்றுலா சென்ற ...
ஒரு பேருந்து பயணத்தில்,
எல்லோருக்கும் தெரியும்படியாய் - என்
தோளில் சாய்ந்துவிட்டு...
யாருக்குமே தெரியாமல் - என்
மனசில் சாய்ந்தாயடி!
அந்த ஸ்பரிசத்தில்
இருக்கிறதோ என் காதல்?

திடீரென
ஒருமையில் இருந்து...
பன்மையில் அழைக்க ஆரம்பித்தாயே?
அந்த மரியாதையில்
ஆரம்பித்திருக்குமோ ?

உன்னைப் பிடித்த காரணத்தினாலேயே...
உன் வீடு, உன் தெரு...
உன் கைப்பை ...
உன் உதட்டுச் சாய கம்பெனி...
உன் தோழி உட்பட...
எல்லோரையும் பிடிக்கிறதே,
அந்தப் பிரியத்தில் இருக்கிறதா...
என் காதல் ?

நாம் காதலிப்பதாய்...
கல்லூரியே சொல்கிறது!
ஆனால்
நீயும், நானும் மட்டும்தான்...
இதுவரை சொல்லிக்கொண்டதில்லை!
அந்த மௌனத்தில் ...
மறைந்திருக்கிறதோ நம் காதல் ?

எதில் இருக்கிறதோ தெரியாதடி...?
ஆனால்
உன் இதயத்திலிருக்கும் என்ற
நம்பிக்கையில்
உன்னை காதலித்துக்கொண்டிருக்கிறேன்...
இரு கால்களை இழந்தவனின்
கைத்தடியைப் போல ...



- - ரசிகவ் ஞானியார்

18 comments:

Anonymous said...

kavithaiyaleye oru kaadhal kathai! nalla irukku but kaadhalaiyum seekiram sollidungo. intru seiya veendiyathai intre seithidanum athuvum nalla kaariyam entraal.....
Vazhthukkal Rasigav.

Anonymous said...

kavithaiyaleye oru kaadhal kathai! nalla irukku. kaadhalaiyum seekiram sollidungo. nalla kaariyangalai seekiram seiyanum.
vazhthukkal Rasigav

இரா.ஜெகன் மோகன் said...

அழகாக செதுக்கியுள்ளீர்கள் இந்த வாழ்த்துப் பாவை! அருமை!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

ஆர்த்தி மற்றும் பெயர் தெரியாத புண்ணியவானுக்கும்

கவிதையின் விமர்சனத்திற்கு நன்றி

நாமக்கல் சிபி said...

கவிதை மிகவும் அருமையாய் இருக்கிறது நிலவு நண்பன். ஒவ்வொருவருக்குள்ளும் இது போன்ற பழைய நினைவுகள் ஒளிந்துகொண்டிருப்பதுண்டு.

Anonymous said...

//நாம் காதலிப்பதாய்...
கல்லூரியே சொல்கிறது!
ஆனால்
நீயும், நானும் மட்டும்தான்...
இதுவரை சொல்லிக்கொண்டதில்லை//

இப்படித்தான் சும்மா கிடப்பவங்களை சீண்டி விட்டுறுவாங்க.. அப்புறம் அதனாலயே காதல் செய்ய வேண்டி இருக்கும். :)

அன்புடன்
கீதா

Gnaniyar @ நிலவு நண்பன் said...

என்ன கீதா இவ்வளவு ஆதங்கப்படுறீங்க அனுபவம் போல இருக்கு

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//கவிதை மிகவும் அருமையாய் இருக்கிறது நிலவு நண்பன். ஒவ்வொருவருக்குள்ளும் இது போன்ற பழைய நினைவுகள் ஒளிந்துகொண்டிருப்பதுண்டு.
//



நன்றி சிபி..அப்படியே உங்க ஞாபகங்களையும் எடுத்து விடுறது

கைப்புள்ள said...

//மூதாதையர்களின் பெயர்களையெல்லாம்...
துருவித் துருவி விசாரித்ததன் நோக்கம்
அம்மாவுக்குத் தெரிந்திருக்காது!
நீ என்
பெயரின் அர்த்தம் கேட்டதால்தான் என்று!//

இப்ப நான் கேட்கறேன் சொல்லுங்க. நான் முதல் முறை கேள்வி பட்ட பெயர் தங்கள் பெயர். ரொம்ப நாளாக் கேட்கணும்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆட்சேபணை இல்லையென்றால் சொல்லுங்கள்.

கவிதை வழக்கம் போல ரொம்ப நல்லாருக்கு. புதுக்கவிதைக்குள் ஒரு காதல் புதினம்.

சிங். செயகுமார். said...

"நீ வரவில்லையென்றால்
பிரச்சனையா...
காய்ச்சலா...
நிச்சயதார்த்தமா?"


நெஞ்சத்தில்
நெருடல் போராட்டம்?
நேரில் கண்டால்தானே
வருடல் கொண்டாட்டம்!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// கைப்புள்ள:இப்ப நான் கேட்கறேன் சொல்லுங்க. நான் முதல் முறை கேள்வி பட்ட பெயர் தங்கள் பெயர். ரொம்ப நாளாக் கேட்கணும்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆட்சேபணை இல்லையென்றால் சொல்லுங்கள். //


ரசிகவ் என்னோட பட்டப்பெயர் இல்லைப்பா..நானாக வைத்த பெயர்;

என்னுடைய அம்மா பெயர் ரசினா
அப்பா பெயர் கவ்பத்துல்லாத..ஆகவே இரண்டு பெயரிலமிருந்து முதல் 2 எழுத்தை எடுத்து என்யோட ஒட்டிக்கிட்டேன்பா..அவ்வளவுதான்

நவீன் ப்ரகாஷ் said...

ஞானி,

இது கவிதையில்லை
காதல் !

படர்ந்த பனியினூடே
செல்லும்போது
பற்கள் தடதடப்பதைப்போல்
உங்கள் கவிதையினூடே
செல்லும்பொழுது
காதல் குளிரில்
இதயம் படபடக்கிறது !

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ஞானி,

இது கவிதையில்லை
காதல் !//


இது காதலல்ல நண்பா சில உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு

//உங்கள் கவிதையினூடே
செல்லும்பொழுது
காதல் குளிரில்
இதயம் படபடக்கிறது !//

எனக்கு இதயம் நெகிழ்கிறது

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//நெஞ்சத்தில்
நெருடல் போராட்டம்?
நேரில் கண்டால்தானே
வருடல் கொண்டாட்டம்! //


உங்க லவ்வை உங்க காதலிகிட்ட சொல்லிட்டீங்களா ஜெயக்குமார்
( மாட்டிக்கிட்டீங்களா)

Darren said...

ilainargal kanieen(female) manathai(heart)
araaintha(research) alavuku...

kaninien(computer) manathai(CPU) arainthu irunthal ....
Ethanayo bill-gates gal india vil irunthu irupargal...

Enn nadu indru valarasu agi irukum...

Thudipana vayathil thruu pidithu poi vidugirathay enn india ilainar samuthaiyam...

Indru evalovo paravaillai

kathal, vazkaien irandam katathuku vanthu vitathu...

Athanalo enavo India munerugirathu...

Kathlum munaetrum epozthavathu....

Antha oru kathulikaga ..vazkaie

tholaithavargal ethani Ilainargal.....

Vazvatharkaga...

iraakirargal(sagirargal)?????

Adaaa pongapaaaaa.......

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Dharan said...
ilainargal kanieen(female) manathai(heart)
araaintha(research) alavuku...

kaninien(computer) manathai(CPU) arainthu irunthal ....
Ethanayo bill-gates gal india vil irunthu irupargal...//




நன்றி தரண்..தமிங்கிலத்துல கலக்குறீங்க..தயவுசெய்து தமிழில் தட்டச்சு செய்யுங்களேனன்.

பொன்ஸ்~~Poorna said...

என் கணினி செட்டிங்க்ஸில் தான் ஏதாவது ப்ரச்சனையா? வேறு ஏதாவது பக்கம் திறந்தபடி உங்கள் கவிதையைப் படிக்கலாம் என்றால், என்னை மட்டும் கவனி என்று ரொம்ப தான் அடம்பிடிக்கிறது..

//நீ வரவில்லையென்றால்
பிரச்சனையா...
காய்ச்சலா...
நிச்சயதார்த்தமா? - என
ஏதேதோ துடிக்கிறதே மனசு...?
//

இது தான் எனக்கு ரொம்ப பிடிச்ச வரி.. அனுபவிச்சுத் தான் எழுதி இருக்கீங்க..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//poons said...


இது தான் எனக்கு ரொம்ப பிடிச்ச வரி.. அனுபவிச்சுத் தான் எழுதி இருக்கீங்க.. //



இதே அனுபவம் உங்களுக்கும் இருக்கோ..?
அதான் லயிச்சு போய் விமர்சனம் பண்ணியிருக்கீங்க

தேன் கூடு