Monday, February 27, 2006

பிப்ரவரி 27 - மனிதர்களைத் தின்னும் விழா





பிப்ரவரி 27 - மனிதர்கள் இந்த நாளை அவ்வளவு சீக்கிரமாய் மறந்து விட மாட்டார்கள்.

சபர்மதி ஆற்றில் இரத்தங்கள் ஓடியது. இல்லை இல்லை இரத்தங்களின் ஊடே சபர்மதி ஆறு ஓடியது.
தேடினார்கள்... தேடினார்கள்... கிடைக்கவேயில்லை . கடைசியில் ஆயுதங்களின் முனைகளில் கண்டெடுக்கின்றார்கள் மனிதநேயத்தை.

சொந்த நாட்டில் அகதிகளாக்கப்பட்ட கொடுமை . பிறந்து வளர்ந்த தாய்மண்ணில் , இடமில்லை வெளியேறுங்கள் என்ற கோஷத்தில் அநாதையாக்கப்பட்டு தெருவில் வீசி எறியப்பட்ட மக்கள்.

இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் இதயம் வெளியில் வந்து உட்கார்ந்து அழுதுவிட்டுச் சென்று அமர்ந்து கொள்ளும்.

அந்த சம்பவம் நடைபெற்ற அன்று நான் நண்பர்களுடன் சென்னை அயனாவரத்தில் எம்சிஏ ப்ராஜக்ட் செய்துகொண்டிருந்தேன். அன்று காலையில் தான் தகவல் கேள்விப்பட்டு நண்பன் பசீரிடம் கூறினேன்.

"டேய் குஜராத்ல கலவரம்டா..ரொம்ப கவலையா இருக்கு "- நான்

"ம் நானும் கேள்விப்பட்டேன்..என்ன செய்ய..? ப்ரே பண்ணிக்கலாம்டா" - பசீர்


எங்களுடைய வருத்தங்களை பகிர்ந்து கொண்டு அன்று காலையில் கோடம்பாக்கத்தில் உள்ள அந்த சாப்ட்வேர் நிறுவனத்திற்கு சென்றுவிட்டோம். எனக்கு மனசு கேட்கவில்லை. ப்ராஜக்டிலும் கவனம் ஓடவில்லை.

அவர்கள் சாவார்களா - பிழைத்துக் கொள்வார்களா ? என்ற பதட்டத்தில் ஜாவா மனதில் ஏறவில்லை. இதே பேச்சுதான் ஆபிஸ் முழுவதும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

G.U.J.A.RA.T.H என்ற எழுத்துக்களைத் தவிர கம்ப்யூட்டர் பலகையில் எல்லா எழுத்துக்களும் அழிந்து போயின.

மவுஸிலிருந்து நெருப்பு எரிகிறது. கணிப்பொறி வொயர்களைக் காணும்பொழுது தொப்புள் கொடிகள் ஞாபகத்தினுள் வந்து போனது.

என்னால் தவறுதலாய் எழுதிய எழுத்துக்களைக் கூட Delete செய்ய முடியவில்லை. அவர்கள் எப்படி மக்களை Delete செய்கிறார்களோ ?

கலவரத்தின் பாதிப்பு மிகவும் மோசமாய் இருப்பதாக சன் தொலைக்காட்சியில் ஒளி பரப்பிக்கொண்டு இருந்தார்கள். இதயத்திற்குள் உடலில் உள்ள இரத்தங்கள் எல்லாம் வந்து அடைத்துக்கொண்டு இருண்டு விட்டது போன்ற உணர்வு. கண்களின் வானத்தில் கண்ணீர் மழையை வரவழைக்கத்தான் இதயங்களில் மேகமூட்டமோ..?


அன்று இரவு நான் பசீரிடம் கலந்தாலோசித்து குஜராத்தின் அமைதிக்காக இறைவனிடம் வேண்டிக்கொண்டு எல்லோரும் நோன்பு இருப்பதாக முடிவெடுத்தோம்.

அந்த அறையில் ஹரி - வேல் - பாதுஷா - பசீர்- நான் ஆகிய 5 பேர் தங்கியிருந்தோம். மறுநாள் நோன்பு இருப்பதாக நான் பசீர் மற்றும் பாதுஷா மூவரும் முடிவெடுத்தோம்.
மறுநாள் நோன்புக்காக இரவு உணவை தயார்செய்து கொண்டு தூங்கப் போனோம்.

அப்பொழுது வேல் என்னிடம் தனியாகக் கேட்டான்.

"டேய் எப்போதும் ரம்ஜான் நேரத்துல இருப்பீங்கள்ல அதுமாதிரிதான் இப்பவும் இருப்பீங்களா..? எத்தனை மணி வரைக்கும்..? எச்சில் கூட முழுங்கக் கூடாதா..? " என்று அவன் அக்கறையாய் கேட்டுக்கொண்டே இருந்தான்.

திடீரென்று மெல்லிய குரலில் தூங்க முற்பட்டுக்கொண்டிருந்த நண்பர்களின் காதினில் கேட்டு விடாதபடி ,

"டேய் நம்ம 5 பேர் இருக்கோம்..எங்ககிட்டயும் சொன்னா நாங்களும் நோன்பு இருப்போம்;ல..பிரிச்சிட்டீங்களடா" என்று கேட்டபொழுது எனக்கு அழுகையே வந்து விட்டது.

"சாரிடா... நீயா வந்து என்கிட்ட நோன்பு இருக்கிறேன்னு சொன்னா நான் வேண்டாம்னு சொல்லப்போறதில்லை..ஆனா நான் கேட்டு நீ மறுத்திட்டேனா..அப்புறம் நமக்குள்ள மனஸ்தாபம் ஏற்பட்டுவிடும்டா..அதான் நானா கேட்க முடியலைடா.. "

அவன் கேட்டது எனக்குள் மனசு உறுத்திக்கொண்டே இருந்தது. மறுநாள் அதிகாலையில் எங்களை நோன்பு இருப்பதற்காக எழுப்பி விட்டது ஹரிதான்.

ஆனால் வேல் தூங்கிக் கொண்டு இருந்தான். அவன் நோன்பு இருக்கட்டுமா என்று கேட்டதே அவன் நோன்பு வைத்தமாதிரி..ஆகவே அவனை நான் தொந்தரவு படுத்தவில்லை..

வேல் தூங்கிவிட்டான் ஆனால் எனக்குள்

வேதனைகள் மட்டும் தூங்கவே இல்லை. அவன் அப்படி கேட்டது மனசை உறுத்திக்கொண்டே இருந்தது.


பின்னர் வந்த நாட்களில் குஜராத்தில் கலவரம் மெல்ல மெல்ல அடங்கி விட்டது எனக் கேள்விப்பட்டோம். ஆனால் பாதிப்புகள் தான் பயங்கரமாக இருந்தது.

பத்திரிக்கைகளில் அந்த சம்பவங்களை படிக்கக் கூட எனக்குத் தைரியம் வரவில்லை. ஆனால் பாதிப்புக்குள்ளாகிப்போன அந்த குடும்பங்கள் - கண்ணெதிரே அந்த அட்டூழியங்களை கண்டவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்..?

ஆகவே அந்த மிருகங்கள் தனது தவறை உணர்ந்து திருந்தவேண்டும் என்றும் இனிமேல் இப்படி ஒரு சம்பவம் இந்தியாவில் நடைபெறவே கூடாது என்றும் இறைவனைப் பிரார்த்திப்போமாக!

இரண்டு இதயங்களை தின்றுவிட்ட காதலர்தினத்தையெல்லாம் ஞாபகம் வைத்து கொண்டாடுகிறோம். ஆனால் மனிதர்களை தின்றுவிட்ட இந்த சோகதினத்தையும் அனைவரும் கண்டிப்பாய் ஞாபகம் வைத்திருக்க வேண்டும் என்பதே இந்தப் பதிவின் நோக்கம்.


இந்தக்கவிதையை ஏற்கனவே வெளியிட்டு இருந்தாலும்; மீண்டும் இந்த தருணத்தில் வெளியிடுவது அவசியம் எனப்பட்டதால் வெளியிடுகின்றேன்.







மனிதநேயம்


பெயர் : மனிதநேயம்

தோற்றம் : நபிகள் புத்தன் இயேசு பிறந்த நாட்கள்

மறைவு : குஜராத் கலவர நாளில் ( பிப்ரவரி 27 - 2002 )



நபிகள் - புத்தன் - இயேசுவின்
நம்பிக்கைகுரிய மகனான
மனிதநேயம்..
குஜராத்தில்
அகால மரணமடைந்துவிட்டதால்
அன்னாரின் இறுதிசடங்கில்
அனைவரும்
தீக்காயத்தோடு
கலந்துகொள்ளுமாறு
இதயக் காயத்தோடு அழைக்கிறோம்.



-ரசிகவ் ஞானியார்







7 comments:

Anonymous said...

manithargalai thinnum vizha...

manathai pisainthathu..nanri rasikav..

- v. kumaran

Amar said...

இத்தனைக்கும் ஒரே தீர்வு சொல்லட்டுமா ?

The Famous 2nd Ammendment of US Constitution.

Every man shall have the right to bear arms - for self defence and to protect his country.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

நன்றி குமரா..


//Every man shall have the right to bear arms - for self defence and to protect his country.//

சமுத்திராவின் தீர்வு யோசிக்கப்பட வேண்டிய ஒன்று

Sathish Mayil said...

நம் நாட்டின் வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு வடுவாக குஜரத் கலவரம் இருக்கும். அதை நினைத்து பார்த்தால், இப்படியும் மூர்க்கத்தனமாக மனிதர்கள் இருக்க முடியுமா என்று வியக்க வைக்கிறது.
இதையெல்லாம் மாற்ற வேண்டும், மாற்றுவோம் ஞானியர்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Mayil said...
நம் நாட்டின் வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு வடுவாக குஜரத் கலவரம் இருக்கும். அதை நினைத்து பார்த்தால், இப்படியும் மூர்க்கத்தனமாக மனிதர்கள் இருக்க முடியுமா என்று வியக்க வைக்கிறது.
இதையெல்லாம் மாற்ற வேண்டும், மாற்றுவோம் ஞானியர். ////



மயிலாக இருந்தாலும் சிங்கம் போல கர்ஜித்ததற்கு நன்றி

Anonymous said...

animals like lion, tiger, cheetah or any animal will never kill another same kind animal for soverignity or survival. but man with sixth sense kills another man in the name of god/religion.think deeply.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//animals like lion, tiger, cheetah or any animal will never kill another same kind animal for soverignity or survival. but man with sixth sense kills another man in the name of god/religion.think deeply. //

பெயர் சொல்ல மறந்தாலும் உங்கள்
மனசு தெரிகிறது

தேன் கூடு