
அகரமுதல எழுத்துக்கெல்லாம்
அகதிகளென்று பெயராம்!
சிறை வைக்கப்பட்ட எங்கள்
சீதைகளை மீட்க...
இராமன்களே மறுத்துவிட,
அனுமர்கள் மட்டும்
அவ்வப்போது தீக்குளிக்கின்றார்கள்!
நாகரீக மாற்றத்தில்
குகை மனிதன்
புகை மனிதனாகுகின்றான்
எல்லைத் தாண்டுதல்
எவருக்குமே அனுமதியில்லாதபொழுது,
எப்படி நுழைந்தாய்
மிருக எல்கைக்குள்?
வீசுபவனும் வலிகள் உணர்ந்தால்
ஹைட்ரஜன்கள் என்றோ
ஆக்சிஜன்களாக்கப்பட்டிருக்கும்
உன்
கழுகுப் பார்வைக்கு
காதுகள் இருந்திருந்தால்
ஓலச்சப்தங்கள் கேட்டிருக்கலாம்
உன்னைப்போலவே அங்கே
மனிதர்கள்தான் வாழ்கிறார்கள்
பதுங்கு குழிகளை
பிய்த்து எறியும் உன்
தேர்களின் நகர்வுகளில்
சிதைந்து போவது
மனித உடல்களா?
விதைகளா?
புரிந்து கொள்
உன்
செல்லில் செத்துப்போனது
புத்தன் மட்டும்தான்
உனக்கு
சொர்க்கம் காத்திருப்பதாய்
தோன்றுகின்ற கனவுகள்
கண்ணிவெடியில் பதிந்துள்ள
கால்கள் போலத்தான்!
உனக்கு வருங்காலமா?
வெறுங்காலமா?
இனிவரும் நாட்கள்
பிரதிபலிக்கும்
நம்புகிறோம்
நீயும் எழுப்பப்படுவாய்...
முத்துக்குமரனும் எழுப்பப்படுவான்
- ரசிகவ் ஞானியார்