
உனக்கே உனக்காக ...
ஒரு கவிதை!
உன்னைப்பற்றியா...? - இல்லை
உனக்காகவா?
உன்னைப்பற்றி
எழுதவேண்டுமானால்...
மன்னித்துக்கொள்ளடி!
எனக்கு
கவிதையைப்பற்றி
கவிதை எழுதத்தெரியாது... (! ...ஐஸ் )
உன்னைப்பற்றிய கவிதைகளில் -
சில உளறல்கள்...
சில நிஜங்களின் தடுமாற்றங்கள்;...
சில தயக்கம்...
வெளிவந்துவிடுமோ என்ற
அச்சத்தில்...
மொத்தத்தை சொல்லாமல்
மிச்சத்தை உளருகிறேன்
பெண்ணே!
உன் தலைக்கனம் பற்றி
கல்லூரியில் சிலர் கனைக்க
நானோ
ஆண்கள் செய்தால் கிண்டல்
பெண்கள் செய்தால் தலைக்கனமா?
என
பெண்ணுரிமை பேசிய - என்னை
சந்தேகமாய் பார்த்த
என் வகுப்பறை தோழிகள்...
எத்தனை பேருக்கு
வாய்த்துவிடப்போகிறது...?
தன்
கல்லூரி நண்பர்களோடு
கடைசிவரை பயணித்திட...
நண்பனாகவோ
அலுவலகத் துணையாகவோ..
பக்கத்துவீட்டுக்காரனாகவோ..
வாழ்க்கைத்துணையாகவோ (?)..
எனக்கும் வாய்க்கும்
என நம்பிக்கையிருக்கிறது..
நீ கடைசிவரை
ஒரு தோழியாக!
என் வாழ்க்கையில் கடைசிவரை
ஆரஞ்சு மிட்டாய்க்காக
ஆகஸ்டு 15 -ஐ எதிர்நோக்கும்
பள்ளிச்சிறுவனைப்போல...
ரமலான் முதல் நோன்பில்
நோன்பு திறக்கும் நேரம் காத்திருக்கும்
ஓரு முகம்மதியனைப்போல¸
சின்ன சின்ன
எதிர்பார்ப்புகள் ,
காத்திருப்புகள்,
எல்லாருடைய வாழ்க்கையிலும் உண்டு
ஆனால்
காத்திருக்கும்போது
எதுவுமே வருவதில்லை
காதல் முதல்..
கட்டபொம்மன் பேருந்து வரை!
உன்
துப்பட்டா பற்றி
தூர்தர்ஷனில் சொன்னார்களாமே?
அப்படியா ... ?
முதன்முதலில்
உன்னைப்பற்றிய
எதிர்பார்ப்புகளை கொடுத்ததே
உன் துப்பட்டாதான் தெரியுமா ?
துப்பட்டாவின் பின்புறம்
நீ இடுகின்ற முடிச்சில்
மாட்டிக்கொணட...
மாணவர்களில் நானும் ஒருவன்!
ஒற்றை இருமலை
இரட்டையாய் ( ? ) எதிரொலிக்கும்...
நம் கல்லூரி வராண்டா
மீசையில்லாத முகத்தோடு
உன் முன்
அசடு வழிந்தபடி நின்ற
மாடிப்படி ஏரியா,
கடந்து செல்லும்பொழுதெல்லாம்
உளவு பார்க்கத் தூண்டிய
கம்ப்யூட்டர் லேப்,
உன்
நோட்டுப்புத்தகத்திலிருந்து
காகிதம் வலிக்காமல்
கிழித்தெடுத்த
கண்ணதாசன் கவிதை...,
கொடுத்து அனுப்புவதில் நேசமல்ல - என்று
நான் திருப்பி அனுப்பிய
வாழ்த்து அட்டையை
நேரில் கொடுத்து
நேசமுணர்த்திய நாட்கள்,
இப்படி உன்னை ஞாபகப்படுத்துகின்ற....
துப்பட்டா..
கல்லூரி வராண்டா..
மாடிப்படி ஏரியா..
கம்ப்யுட்டர் லேப்..
கிழித்த கவிதை..
வாழ்த்து அட்டை..
என
உயிறற்றவைகளை கூட...
மறக்கமுடியவில்லை!
உன் முகம் மறந்திடுவேனென்று...
புகைப்படம் அனுப்பி
புண்படுத்திவிட்டாயடி!
ஆகவே
திருப்பித்தர மாட்டேன்
உன் புகைப்படத்தையும்
அந்த நினைவுகளையும்!
மழைவிட்ட பிறகும்
சூரியன் வரும்வரை
தூறலாய் விழுந்துகொண்டிருக்கும்...
இலைத்துளி சாரல்போல்,
உயிர் மறையும்வரை...
சொட்டுசொட்டாய்
வழிந்துகொண்டேயிருக்கும் ...
உன் நினைவுகள் !
- ரசிகவ் ஞானியார்