Tuesday, December 13, 2005

தவமாய் தவமிருந்து







தவமாய் தவமிருந்து படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே நேற்று பார்த்து முடிந்தாகிவிட்டது.
ஒரு படம் பார்த்து முடிந்தவுடன் அதன் பாதிப்புகள் ஒரு நாளாவது நம்மை தாக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு மணி நேரமாவது அந்த படத்தைப்பற்றி நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள வைக்க வேண்டும்.

எனக்கு இரண்டு அனுபவமே கிடைத்தது. நண்பர்களோடு அந்தப்படத்தின் பாதிப்பை பற்றி நீண்ட நேரம் பகிர்ந்து கொண்டேன்.

மிகுந்த கஷ்டங்களுக்கிடையேயும் தனது பிள்ளைகளை தவமாய் தவமிருந்து வளர்த்து படிக்க வைத்த ஒரு தந்தையின் கதை இது.

நமது குடும்பத்தில் அல்லது பக்கத்து வீட்டில் அல்லது நமது வீதியில் எங்கேயோ அந்தச்சம்பவம் நடந்திருக்கக் கூடும். அந்த அளவிற்கு காட்சி அமைப்புகள் யதார்த்தமாய் அமைக்கப்பட்டு இருக்கின்றது. ஒரு திiரைப்படம் பார்த்த உணர்வே இல்லை.

தனது பிள்ளைகளை சைக்கிளில் பக்கத்தது டவுண் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் காட்சியில் அழகான கால மாற்றத்தைக் காட்டியுள்ளார். பள்ளிப்போகும்போது டவுசர் அணிந்த சிறுவர்கள் பின் பள்ளி படிப்பு முடிந்து பாலிடெக்னிக் - கல்லூரி என்று போகும்போது பேண்ட் அணிந்துகொண்டு அப்பாவின் சைக்கிளில் அமர்ந்துகொண்டு பேசிக்கொண்டே செல்லும் காட்சியில் நம்மையும் அந்த சைக்கிளை துரத்திக்கொண்டே செல்ல வைத்திருக்கிறார்

கல்லூரியில் படிக்கும் சேரன் அப்பாவை பின்னால் வைத்துக்கொண்டு மூச்சிறைக்க அழுத்திக்கொண்டு வரும்காட்சியில் சேரனை விடவும் நமக்கு அதிகமாய் மூச்சு வாங்க வைப்பது இயக்குனர் சேரனின் திறமை.

சேரனின் அண்ணனின் மகள் குழந்தைக்கு பெயர் வைக்கும் உப்பு சப்பில்லாத பிரச்சனையில்தான் குடும்பம் சிதறுண்டு போகிறது

குழந்தைக்கு குஷ்பு என்று மருமகள் பெயரிட

"அது என்ன குஷ்பு - கூரைப்பூன்னு சொல்லிகிட்டு என்ன கண்றாவி பெயர்டா" இது என்று அவனது அம்மா சொல்லும் காட்சி நம் வீட்டில் நடைபெற்ற பெயர் சூட்டும் நிகழ்ச்சி கண்ணில் நிற்கிறது.

தனது அண்ணன் அவனது மனைவியின் பேச்சைக் கேட்டு தனிக்குடித்தனம் போவதாக அப்பாவிடம் சண்டை போட்டுவிட்டு போகும் காட்சி மிக இயல்பானது.




"என்னடா உன் தம்பிக்கு இன்னமும் படிப்பு முடியல..அவனுக்கு படிப்பு முடியும் வரையிலாவது நீ ஒரு ஒத்தாசையா இருக்கவேண்டாமடா"

- ராஜ்கிரண்

"ஆமா எல்லாத்தையும் உங்களுக்கே தந்துட்டா.என் புள்ளையோட எதிர்காலம் என்னாவது?" என்று மருமகள் முந்திக்கொண்டு சொல்ல,

இந்தக்காட்சி யில் நமக்கு அந்த மருமகள் மீது ஒருவித எரிச்சல் வருகிறது. அது மருமகளாய் நடித்த அந்த புதுமுகத்தின் நடிப்பு திறமை.

பின்னர் வாய்த்தகறாறில் அண்ணன், தந்தையை திட்டிவிட அடிக்க வந்த அம்மாவை தள்ளி விடும் காட்சியாகட்டும் இடிந்து உட்காரும் தந்தைக்கு ஆறுதல் காட்சிகளிலும் இயக்குனர் சேரனின் திறமையை பாராட்டாமல் இருக்க முடியாது.

இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் நாம் கண்கூடாக காணும் காட்சி.



கல்லூரியில் தன்னுடன் படிக்கும் பெண்ணுடன் குருப் ஸ்டெடி பண்ணும்பொழுது இளைமை மோகத்தில் தவறு செய்து விட, அந்தப்பெண்ணின் கர்ப்பம் வெளியே தெரிந்து அவமானப்பட்டுவிடக்கூடாது என்று ஊரைவிட்டு ஓடிவிடத்துணியும் காட்சி நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.

அண்ணன் தனிக்குடித்தனம் செய்து சில நாட்கள்தான் ஆகியிருக்கும் அந்த நேரத்தில் சேரன் தான் காதலித்த பெண்ணோடு ஓடிப்போவதற்காக அப்பாவிடம் வந்து,



அப்பா அவசரமா ஒரு நேர்முகத்தேர்வுக்கு கோயம்புத்தூர் வரை போகணும் என்று பொய் சொல்லும்போது கூட

"அப்படியா..செலவுக்கு பணம் இருக்கா..என்று கேட்டுவிட்டு 500 ரூபாய் பணத்தைக் கொடுத்துவிட்டு இது போதுமாப்பா.."என்று கேட்கும்போது எந்த மகனுக்குத்தான் அழுகை வராமல் இருக்கும்.?ஆனால் சேரன் அதிகமாய் குலுங்கியிருக்கிறார்.

ஓடிப்போய் சென்னைக்கு சென்று ( எல்லாரும் ஓடிப்போனா சென்னைக்குதானப்பா போறாங்க..வேற இடமே இல்லையா..? ) நண்பன் ஒருவன் உதவியோடு வாடகை வீட்டில் தங்குகிறர்.

தனது பி இ படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் தனது அப்பாவின் தொழிலான அச்சகத்துறையில் தனக்குரிய அனுபவத்தை கூறி வேலை கேட்கிறார்

சரி நேர்முகத்தேர்விலுமா..அழுது கொண்டிருப்பது..? வேலை செய்யும் போது அந்த இயந்திரத்தில் கைகள் பட்டு கிழித்துவிட அப்பொழுது முதலாளி, "என்ன" என்று கேட்க "ஒன்றுமில்லை" என்று சொல்லும் போது கூட அழுகிறார்.

( சேரன் நீங்க அழுகுறது நல்லாயில்லை ..உங்க கதையில் எங்களுக்கு அழுகை வருகிறது.. ஆனால் உங்க கண்களின் அழுகையை பார்க்கும்போது சிரிப்புதான் வருகிறது..தயவுசெய்து மாத்துங்களேன்..

இந்தப்படத்திற்கு தவமாய் தவமிருந்து என்று பெயர் வைப்பதை விட.. அழுதுகொண்டே உச்சரிக்கும் தொனியில்..அ..ப்..பா என்று வைக்கலாம்.. )

ஒருநாள் அவனது அப்பாவே மகனைத்தேடி வந்து "ஏம்பா இப்படி பண்ணினே..? " என்று கண்களில் மகனை நினைத்து ஏங்கிய கண்களுடன் கேட்கும்போது தந்தை மீது மதிப்பு வைத்திருக்கும் எல்லா மகன்களுக்கும் அழுகை வந்துவிடும்.




அவரிடம் நடந்த உண்மையைக் கூறி அழுகிறார்..அழுகிறார்.. அழுகிறார்..அழுகிறார்..அழுகிறார்.. அழுகிறார்..


அந்த இடத்தில் ராஜ்கிரணின் நடிப்பு மிக அருமை..

"உங்க அம்மா உன்னைய பெத்த சமயத்தில நானும் செலவுக்காக எவ்வளவு கஷடப்பட்டிருப்பேன் தெரியுமா..? என் கஷ்டத்தை நீயும் படக்கூடாதுடா.."

என்று கூறிக்கொண்டே குழந்தையின் கைகளில் பணத்தை திணிக்கும் காட்சி

கிளம்பும்போது ,

"எம் பசங்களுக்கு நான் ஏதோ குறை வச்சுட்டேன் போல இருக்கு அதுதான் இரண்டு பேருமே சொல்பேச்சை மீறிப்போய்டாங்க ..நீயாவது உம் பிள்ளைய நல்லா வளர்த்துக்கோப்பா "

என்று சொல்லும் காட்சியும் மனதைப் பிசைந்துவிடுகிறது.

மீண்டும் தனது வீட்டிற்கு திரும்பி விடலாம் என்று நினைத்து சொந்த ஊருக்கு திரும்பும்போது அவனது வீட்டு வாசலில் கைக்குழந்தையோடு நிற்க அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் காட்சியிலும் சரி..

"சரி..பையன் தப்பு பண்ணினது பண்ணிட்டான்..அதான் உன்னண தேடி வந்துட்டான்ல..சேர்த்துக்க தெய்வானை..என்ன இருந்தாலும் அவன் நீ பெத்த புள்ளதானே.."


என்று அவனது அம்மாவிடம் சில பாட்டிகள் சமாதானம் சொல்வதும் அனுபவித்து படம்பிடித்திருக்கிறார்

பின்னர் மதுரையில் வேலை கிடைத்து ஒரு ப்ளாட் பிடித்து அம்மா அப்பாவோடு தங்கும் காட்சிகளில் நடுத்தர குடும்பத்தின் நிகழ்வுகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்



சேரனும் அவனது மனைவியும் வேலைக்கு கிளம்பும்போது அவர்களது மகள் "ம்மா தள்ளும்மா ..ம்மா தள்ளும்மா" என்று குட்டி சைக்கிளில் அமர்ந்துகொண்டு சொல்வது எல்லா வீட்டிலும் நடக்கின்ற நிகழ்வு. அந்த சின்ன விசயத்தை கூட பதிந்திருக்கிறார்

பின்னர் சேரன் மகளின் காது குத்துக்கு அண்ணனை அழைப்போம் என்று கூறி அண்ணனை பார்க்க அவனது வீட்டிற்குச் செல்லும் போது அவனது மனைவி பெயருக்கு "வாங்க" என்று வரவேற்பது, நமக்கு பிடிக்காத வீட்டிற்கு போகும்போது அவர்கள் எப்படி நம்மை வரவேற்பார்களோ அதேபோல இருந்தது

பின்னர் தாய் இறந்து விட அந்த பழைய கிராமத்து வீட்டிலையே தங்குவதுதான் அவளுக்கு நான் செய்கின்ற மரியாதை என்று தந்தை அடம்பிடிக்க வாரத்துக்கு ஒருமுறை, மாதத்துக்கு ஒருமுறை வந்து போகிறார்.

45 வருடமாக தன்னுடய சுக துக்கங்களில் பங்கு எடுத்துக்கொண்ட தன்னுடனையே பயணித்த ஒரு ஜீவனின் இழப்பு அவரை மிகவும் பாதித்துவிட்டது என்று சேரன் சொல்லும்போது நம் மனதுக்குள்ளும் ஒரு சோகம் பபடருகிறது.

அண்ணன் வந்து தனக்கு வீடுகட்ட 1 லட்சம் தேவைப்படுகிறது என்று அந்த அவர்கள் வாழ்ந்த வீட்டைவிற்று விட்டு பணம் கேட்க,

"இதில் உன் தம்பிக்கும் பங்கு இருக்கேப்பா" என்று ராஜ்கிரண் சொல்ல

"அவன்தான் வசதியா இருக்கானே..அவன மட்டும் இஞ்சினியரிங் படிக்க வச்சீங்க..என்னய பாலிடெக்னிக்தானே படிக்க வச்சீங்க.. எனக்கு மட்டும் குறை வச்சிட்டீங்கள்ப்பா? .."என்று அவன் கேட்பது எந்த தந்தையையும் நிலைகுழையச்செய்துவிடும்

இவ்வளவு வருடமாக மகனை கஷ்டப்பட்டு படிக்க வச்சு ஆளாக்கியதற்கு ஒரு அர்த்தமே இல்லாமல் போய்விட்டதே..நமது இவ்வளவு வருட வாழ்க்கையே வீணாகிப்போய்விட்டதே என்ற ஆதங்கத்தில் அந்த ஒரு சொல்லின் சூடு தாங்காமல் இறந்து விடுகிறார் அவர்..

சாகும் தருவாயில் சேரனை அழைத்து "உனக்கும் நான் ஏதாவது குறை வச்சிட்டேனோ?" என்று கேட்பது ரொம்பவும் மனதைப் பாதிக்கிறது

இப்படியான ஒரு சோகத்தில் படம் முடிந்து போகிறது..இல்லை இல்லை அந்த தனிமனிதனின் வாழ்வு முற்றுப் பெற்று விடுகிறது..

கடைசிக் காட்சிதான் பஞ்ச்.. சேரனின் குழந்தைகள் ,

எனது தாத்தாவின் பெயர்........

அவர் ------------------ ஆண்டு பிறந்தார்.

அவரது மனைவியின் பெயர்... ....

அவர் சிவகங்கையில் ஊருக்கு வெளியில் உள்ள ஒரு அச்சத்தில் வேலை பார்த்து வந்தார்.

அவருக்கு இரண்டு மகன்கள்..

என்று சரித்திரக் கதை படிப்பது போலஅவனது குடும்பத்தின் வரலாற்றை படித்துக்கொண்டிருப்பது போல படம் முடிகிறது.

அதுவும் சரிதான் எத்தனை பேருக்கு தனது முப்பாட்டனார் வரலாறு தெரிந்திருக்கிறது? யாருடயை வரலாறையெல்லாம் மனப்பாடம் ஆக்குகிறோம்..நமது சொந்த வரலாற்றை அநேகம் பேருக்கு தெரிந்து வைக்கும் ஆவல் இல்லை.. கூடிய மட்டும் ஒரு தலைமுறையையாவது ஞாபகம் வைக்க வேண்டும்...

-ரசிகவ் ஞானியார்

14 comments:

யாத்ரீகன் said...

படத்தை முடித்தவிதம் அருமையோ அருமை..

ராஜ்கிரணுக்கு ஒர் மைல்கல்...

என்னையும் அறியாமல், ஆரம்ப பள்ளி காட்சிகளில் கண்கலங்கிவிட்டேன்..

-
செந்தில்/Senthil

வெளிகண்ட நாதர் said...

படம் இன்னம் பாக்கலை, ஆனா, நீங்கள் எழுதிய விமர்சனமும், அந்த நிழல் படங்களும், ஏற்கனவே சேரனின் ஆட்டோகிராப் பட நினைவுகளும், ராஜ்கிரண் பத்தி சொல்லவே வேணாம் அவருடய எதார்த்த நட்டிப்புகளைப் பார்த்தவங்கிற முறையில, என் கண்களில் நீர் வந்தட்தென்னமோ மறுக்கமுடியாத உண்மை. இந்தவாரம் முடிவை எதிர்நோக்கி இருக்கிறேன், இந்தப் படத்தை காணும் ஆவலில்!

Anonymous said...

Can any one in Tami Nadu tell about movie'e commercial progress?

சினேகிதி said...

ahha ungada review vasichaudanye padam parkanum pola iruku.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

விமர்சனத்தை விமர்சித்த அனைவருக்கும் ( கண் கலங்கியவர்களுக்கும் )என் நன்றி..

G.Ragavan said...

ஒரு + போட்டாச்சு. :-)

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

கல்லூரியில் தன்னுடன் படிக்கும் பெண்ணுடன் குருப் ஸ்டெடி பண்ணும்பொழுது இளைமை மோகத்தில் தவறு செய்து விட, அந்தப்பெண்ணின் கர்ப்பம் வெளியே தெரிந்து அவமானப்பட்டுவிடக்கூடாது என்று ஊரைவிட்டு ஓடிவிடத்துணியும் காட்சி நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.

வரும். இந்த வயதில் வரும். அதுவே நாளை நாமும் ஒரு தகப்பனாகி, கஷ்டத்திலும், பஞ்சத்திலும் வீட்டில் பட்டினி கிடந்தாவது நம்மைப் போல் நமது மகளும் படிப்பறிவில்லாமல் இருந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் கடன் வாங்கியாவது மகளை படிக்க அனுப்பும் போது இது போல் ஒருவனுடன் காதல் என்ற பெயரில் "குருப் ஸ்டெடி பண்ணும்பொழுது இளைமை மோகத்தில் தவறு செய்து" தன் "கர்ப்பம் வெளியே தெரிந்து அவமானப்பட்டுவிடக்கூடாது என்று" அவனுடன் "ஊரைவிட்டு ஓடிவிடத்துணியும்" போது அவர்களின் கஷ்டத்தைப் பார்த்து இதே கண்ணீர் வர வேண்டும். வருமா சகோதரரே!

கசுக்காக எப்படி வேண்டுமானாலும் நடிக்கும், இந்த "சமுதாய சீர்திருத்தவாதிகளின்" கிளிசரின் நடிப்பை நீக்கள் பார்த்து ரசித்தது காணதென்று அவர்களுக்கு மேலும் வருமானத்தை உண்டாக்கி கொடுக்கும் முறையில் இலவச விளம்பரம் கொடுக்கிறீர்களே இது நியாயமா?. ஏற்கெனவே அப்பாவி தமிழன் தனது உடல் உழைப்பில் ஒரு பகுதியை இவர்களுடைய "சமூக (காசு) அக்கறைக்கு" கொடுப்பது காணாதா?

திரை மறைவில் ஒரு வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டு அந்த வாழ்க்கைக்கு தேவையான பொருளாதாரத்தை பாவப்பட்ட ஏழை மக்களிடமிருந்து சுரண்டி பிழைக்கும் இவர்களின் இந்த கிளிசரின் நாடகத்தை "யதார்த்த" வாழ்க்கையோடு ஒப்பிட்டு நீங்கள் எழுதியதால் தான் நான் இவ்வாறு எழுத நேர்ந்தது.

உங்களுடைய இந்த சிலாகிப்பான எழுத்துக்களை கண்ட பிறகு இதற்காகவே தன் சம்பாத்தியத்தில் சிறு பகுதியை எந்த பிரயோஜனமும் இல்லாத இந்த இக்குப்பைகளை பார்ப்பதற்கு ஒருவன் செலவளித்தால் அதற்கு என்றாவது ஒருநாள் நீங்கள் பதில் கூற வேண்டி இருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா?

ஏதாவது எழுத வேண்டும் என்பதற்காக சமுதாயத்தை சீரழிக்கும் திரையை குறித்து தான் எழுத வேண்டுமா? பொழுது போக்கிற்கு நீங்கள் காண்கிறீர்கள் எனில் அதனை உங்களோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அல்லது குறைந்த பட்சம் பொழுது போக்கு விமர்சனத்தோடு மட்டுமாவது நிறுத்திக் கொள்ளுங்கள். தயவு செய்து அதனை யதார்த்த வாழ்க்கையோடு ஒப்பிட்டு நோக்கி இது போன்ற தவறு செய்பவர்களை நியாயப் படுத்த முயற்சிக்க வேண்டாம்.

ஒரு தந்தையின் மனவேதனை இது போன்ற ஒரு பெண்ணுக்கு நீங்கள் தந்தையாகும் பொழுது தான் உங்களுக்கு புரியும். அது வரை இது போல் காதல் என்ற பெயரில் பெண்களை சீரழிக்கும் கயவர்களின் கண்ணீர் தான் உங்களுக்கு பெரிதாகப் படும்.

வேதனைப் படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

மிகுந்த வருத்தத்துடன்,

இறை நேசன்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

இறைநேசன் அவர்களே உணர்சிவசப்படாதீர்கள். நான் கூற வந்தது என்ன..?

காதலியோடு ஓடும் காட்சி கண்ணீரை வரவழைக்கிறது என்றால் அந்த காட்சியை ரசித்து எழுதியது அல்ல..

அவன் நேர்முகத்தேர்வுக்கு போகிறேன் என்று தந்தையிடம் பொய் சொல்லிவிட்டு காதலியோடு ஓடிப்போகும் காட்சியைத்தான் கண்ணீர் வரவழைத்தது என்றேன்.

எவ்வளவு கஷ்டப்பட்டு அவனை படிக்க வைத்திருப்பார்.?

அந்த மகனோ பெற்றோர்களை அம்போ என்று விட்டு விட்டு போகிறானே என்ற வருத்தம்தான் கண்ணீர் வரவழைத்தது

நீங்கள் எந்த தந்தையின் பொறுப்பில் இருந்து பார்க்கின்றீர்களோ நானும் அதே தந்தையின் பொறுப்பில் இருந்துதான் பார்க்கின்றேன் இறைநேசா..

இந்தப்படம் எந்த ஆபாச காட்சிகளையும் மக்களுக்கு எடுத்துரைக்கவில்லையே ?

ஒவ்வொரு மகனும் தன்னுடைய பெற்றோர்களுக்கு உரிய கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றுதானே சொல்லுகிறது.

வருத்தப்படுவதற்கு இதில் எதுவுமில்லை சகோதரா..

தங்களுடைய அவசரமான புரிந்துணர்வுக்காகத்தான் வேதனைப்படுகின்றேன்.

சிங். செயகுமார். said...

நண்பரே ஞானி! சம்மந்த பட்ட திரைபடம் சிங்கையில் வினியோகம் இல்லை , இருந்தும் சில காட்சிகள் பார்தேன். சமுதாய நிகழ்வுகள் அப்படியே பதிக்க பட்டுள்ளது. எல்லோருமே பாத்திரமாக வழ்ந்துள்ளனர்.ஊரில் கண்ணால் கண்ட நிகழ்வுகள் திரையில் பார்க்கும் போது பழைய ஞாபகங்கள். சபாஷ் சேரன்!.

கவிமதி said...

இறைநேசன் அவர்களே உணர்சிவசப்படாதீர்கள்.

கதைகளைவிட்டு சதைகளை மட்டுமே நம்பி எடுக்கப்படும் படங்களுக்கு மத்தியொல் சேரன்,தங்கர்பச்சான்,சீமான் போன்ற சமூக உணர்வுள்ள இயக்குனர்கள் மக்களின் வாழ்க்கையினை பதிவாக்குவது பாராட்டப்பட வேண்டியதுதான்

தனக்கு ஏற்பட்ட தாக்கத்தை நம்முடன் பகிரெதுக்கொண்டுள்ளார் ஞானியார் இதை படித்டுவிட்டு திரையில் பார்ப்பதும் பார்க்காமல் போவதும் அவரவர் விருப்பம்

ஞானியார் விமர்சன்ம் எழுதாவிட்டாலும் திரைப்படம் ஓடும். சமூக உணர்வுள்ள படைப்பாளியை பாராட்டுவது நம் கடமையல்லவா அதிதான் ஞானி செய்திருக்கிறார் அவ்வளவுதான்

ஞானியின் விமர்சனத்தால் படம் பார்த்த நிறைவு ஏற்பட்டுவிட்டது. இது அந்தத படத்திற்கு நட்டமா? இலாபமா?

கவிமதி said...

இறைநேசன் அவர்களே உணர்சிவசப்படாதீர்கள்.

கதைகளைவிட்டு சதைகளை மட்டுமே நம்பி எடுக்கப்படும் படங்களுக்கு மத்தியில் சேரன்,தங்கர்பச்சான்,சீமான் போன்ற சமூக உணர்வுள்ள இயக்குனர்கள் மக்களின் வாழ்க்கையினை பதிவாக்குவது பாராட்டப்பட வேண்டியதுதான்.

தனக்கு ஏற்பட்ட தாக்கத்தை நம்முடன் பகிர்ந்துக்கொண்டுள்ளார் ஞானியார். இதை படித்துவிட்டு திரையில் பார்ப்பதும் பார்க்காமல் போவதும் அவரவர் விருப்பம்.

ஞானியார் விமர்சனம் எழுதாவிட்டாலும் திரைப்படம் ஓடும். சமூக உணர்வுள்ள படைப்பாளியை பாராட்டுவது நம் கடமையல்லவா அதைதான் ஞானி செய்திருக்கிறார் அவ்வளவுதான்.

ஞானியின் விமர்சனத்தால் படம் பார்த்த நிறைவு ஏற்பட்டுவிட்டது.
இது அந்தத படத்திற்கு நட்டமா? இலாபமா?
தோழரே.

கவிமதி said...

தோழர்கள் பார்வைக்கு திரு.சு.ப.வீ அவர்களின் திரைவிமர்சனம்
இங்கே

http://thenseide.com/cgi-bin/Details.asp?fileName=Current&newsCount=16

Gnaniyar @ நிலவு நண்பன் said...

///ஞானியின் விமர்சனத்தால் படம் பார்த்த நிறைவு ஏற்பட்டுவிட்டது.
இது அந்தத படத்திற்கு நட்டமா? இலாபமா?
தோழரே.////

// சமுதாய நிகழ்வுகள் அப்படியே பதிக்க பட்டுள்ளது. எல்லோருமே பாத்திரமாக வழ்ந்துள்ளனர்.//

விமர்சனம் தந்த சிங் செயகுமார் அவர்களுக்கும் கவிமதி அவர்களுக்கும் எனது நன்றிகள்.

தேன் கூடு