Thursday, March 01, 2007

ஒரு நாடு கடத்தப்பட்டவனின் தன் வரலாறு( தொடர் 7)

இவ்வாறு ஒரு மாதம் கழிந்தது இறுதியில் முஸபர்பூரில் குண்டு வெடித்ததோடு எங்கள் தோட்டத்தின் ஆயுளும் முடிவுற்றது.

அந்த நாள் நெடுங்காலம் நினைவிலிருக்கும் எனக்கு. அது சித்திரை மாதம்.அநியாய வெயில். நாள் முழவதும் அலைந்து திரிந்துவிட்டு தோட்டத்துக்குள் திரும்பியபோது என் கை கால் வயிறு எல்லாம் என்னை ஒரே குரலில் சபிக்கத் தொடங்கிவிட்டன. சாட்ஜாத் எமதர்ம ராஜாவே என்னை விரட்டி வருவது போன்ற உணர்வு. என் கூட்டாளிகளுக்கும் அநேகமாக இதே நிலைதான். வயிற்று பசி வேறு எங்களை களைப்பில் ஆழ்த்தியது. வெளியில் சுற்றிவிட்டு வந்தவுடன் பரிமாறப்பட்ட தட்டுக்கு முன்னால் உட்கார நாங்களென்ன வீட்டிலா இருக்கின்றோம்? நாங்களே சமைக்க வேண்டுமே..

அன்று சனியனின் கோபப்பார்வை எங்கள் மீது விழுந்திருக்க வேண்டும். ஆம் பொங்கிய பானையை வடிகட்டும்பொழுது கை நழுவி பானை கீழே விழுந்து உடைந்து போனது. சோற்றுப்பருக்கைகள் மண்ணில் சிதறி விட்டன. அன்று எங்கள் தலையெழுத்தில் சாப்பாடு இல்லை என்று நினைத்துக்கொண்டு வயிற்றில் 3 குத்து விட்டுவிட்டு குப்புறப்படுத்துக் கொண்டேன்.

ஆனால் பாரீன் விடாமுயற்சிக்காரன் என்பதால் மறுபடியும் சமைக்க முயன்றான்.

விறகு காலியாகிவிட்டதால் பத்திரிக்கைகளை எரித்துச் சோறு சமைக்கத் தொடங்கினான்.

அப்பொழுது கல்கத்தாவிலிருந்து எங்கள் நண்பன் நடனமாடிக்கொண்டே ஓடிவந்து அந்த செய்தியைக் கூறினான். ஆம் எங்கள் தோட்டத்தைச் சோதனையிட வரப்போகிறார்கள் என்று. மறுநாள் காலையில் எல்லாரும் ஆளுக்கொரு திசை சென்றுவிடவேண்டும் என தீர்மானித்து உறங்கச் சென்றோம்.

மணி சுமார் 4 இருக்கும். உடல் புழுக்கத்திலும் கொசுக்கடியிலும் நான் தூக்கம் வராமல் புலம்பிக்கொண்டிருந்தேன். தடதடவென்று கதவு தட்டப்பட்டது. பாரீன் தான் கதவைத்திறந்தான். அறிமுகமற்ற ஓர் ஐரோப்பிய குரல் கேட்டது


"உன் பேரு ?"


"பாரீந்திரக் குமார் கோஷ் "


உடனே உத்தரவு பிறந்தது. "இவனைப்பிடிச்சுக் கட்டு "


பாரதவிடுதலையின் முதல் கட்டத்திற்கு இங்கேயே முற்றுப்புள்ளி எனப் புரிந்துவிட்டது எனக்கு. உள்ளே நுழைந்த போலிஸ்காரர்கள் இருட்டாக இருந்ததால் கைகளில் அகப்பட்டவர்களையெல்லாம் பிடித்துக்கொண்டு இருந்தார்கள்.

இப்பொழுது தப்பித்தால்தான் தப்பித்தது என்று இன்னொருகதவு வழியே வராண்டாவிற்கு வந்து சேர்ந்தேன்.நாற்புறமும் கைகளில் விளக்கேந்தி காவல் காக்கிறார்கள்.சமையலறையின் உடைந்த சன்னல் வழியே கீழே குதிக்கலாம். ஆனால் வெளியே எட்டிப்பார்த்ததில் கீழேயும் 2 போலிஸ்காhர்கள் நிற்பது தெரியவந்தது
ஐயோ என்ன கஷ்டம். அதிருஷ்டம்கெட்டவன் பார்க்குமிடமெல்லாம் கடல் கூட வற்றிப்போய்விடும்

வராந்தாவின் ஒரு கோடியில் ஒரு சிறு அறை இருந்தது. அதில் ஓட்டை உடைசல்கள் போட்டு வைக்கப்பட்டிருந்தன். அதில் ஒரு ஜன்னல்திரையில் ஒரு கிழிந்த சாக்குத் திரை தொங்கிக்கொண்டிருந்தது. அதன் பின்னால் சென்று ஒளிந்து கொண்டேன்.
அதன் பின்னே ஒளிந்துகொண்டேன் . இரவு நீண்டு கொண்டே இருந்தது. கடைசியில் காகம் கரையும் ஒலி கேட்டது. மெதுவாக ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தேன். சில அறிமுகமில்லாத முகங்கள் கூட தென்பட்டன.


வெள்ளைக்கார சார்ஜண்டுகள் அங்குமிங்கும் சவுக்குடன் அலைந்து கொண்டிருந்தனர் . அங்கே எனது கூட்டாளிகள் குளத்தங்கரை அருகே கைகள் கட்டப்பட்ட நிலையில் வரிசையாக உட்கார வைக்கப்பட்டிருந்தனர். அதில் நடுவில் உட்கார்ந்திருக்கும் உல்லாஸ்கர் மட்டும் ,அலைந்து கொண்டிருந்த இன்ஸ்பெக்டரின் எடை 3 மணு இருக்குமா அல்லது மூன்றரை மணு இருக்குமா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தான்

மணி 6 அடித்தது. 7 அடித்தது. நான் அப்போதும் திரைக்குப் பின்னால் மறைந்து இருந்தேன் பர்தா அணிந்த முஸ்லிம்பெண்ணைப் போல . அந்த எசமானர்கள் என்னை மறந்துவிட்டனர் என்று நினைத்தேன். ஆனால் இந்த நம்பிக்கை வெகுநேரம் நீடிக்கவில்லை. பூட்ஸ் சப்தங்களின் அறை அதிர அந்த இன்ஸடபெக்டர் நானிருந்த அறையின் கதவைத்திறக்க நான் மூச்சு சப்தம் கூட வெளியே கேட்காமல் மறைந்திருந்தேன்.


ஆனால் துரை என்னருகே வந்து திரையை விலக்கி என்னைக் கண்டவுடன் மகிழ்ச்சியில் "Hurra ஹ{ர்ரா" என்று கத்த ஆரம்பித்துவிட்டேன். ஆஹா என்மீது என்ன அன்பு.. :)


அவன் சத்தம் கேட்டவுடன் அவனுடைய காவலாளிகள் 5 பேர் என்னிடம் ஓடிவந்து ஒருவன் கைளை பிடித்தான் ஒருவன் காலைப் பிடித்தான் ஒருவன் தலையைப்பிடித்தான். பிறகு என்னைத் தோளில் சுமந்து என் கூட்டாளிகளுக்கு நடுவே எனக்கொரு இடம் கொடுத்து உட்கார வைத்தார்கள்.


என் கைகளை கட்டிப்போட வந்தான் ஒருவன் .
அட நான் வந்தேமாதரம் அலுவலகத்தில் வேலைபார்த்தபொழுது என்னை , "பாபு ,பாபு" என்று சலாம் போட்டு டீ கொண்டு வந்து கொடுத்தவன்.
பாவம் அவன் என் கைகளைக் கட்டும்பொழுது கூச்சப்பட்டு தலையை திருப்பிக் கொண்டான்.

நள்ளிரவில் நாங்கள் புதைத்து வைத்த துப்பாக்கி குண்டுகள் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டன.இன்னும் ஏதேனும் இருக்கிறதா என எங்களது பையன்களை இன்ஸ்பெக்டர் சித்திரவதை செய்வதைக் கண்ட பாரீன், இன்ஸ்பெக்டர் ஜெனரல் பிளெடன் துரையிடம் புகார் செய்தான் அவனோ சரித்துக்கொண்டே புகாரை ஊதித் தள்ளிவிட்டு சொன்னான் "நீங்கள் எங்ககிட்ட ரொம்ப எதிர்பார்க்க கூடாது. "


எங்களை வெவ்வேறு போலிஸ்ஸடேஷன்களில் வைத்திருந்தார்கள். அதிருஷ்டவசமாக 3 பூரி கொடுத்தார்கள்.மறுநாள் சிஐடி ஆபிசுக்கு கொண்டு செல்லும்பொழுதுதான் பார்த்தேன் எங்களோடு தொடர்பில்லாத பலரும் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.

எங்களிடம் வாக்குமூலங்கள் வாங்க முயற்சி செய்தார்கள். ஆனால் அது பலிக்கவில்லை.

கைதானதால் எங்களுக்கு ஏற்பட்டிருந்த பரபரப்பு தணிந்து விட்டது. பையன்கள் முகம் வாடிப்போய் இருந்தது. ஒருவன் என்னிடம் வந்து சொன்னான்.

"அண்ணா பசிக்கொடுமை தாங்க முடியல்ல நேத்துப்பூரா சோறு கிடைக்கல்ல பகல்லே கொஞ்சூண்டு பொரி மட்டும் கொடுத்தாங்க "


(தொடரும்)


- ரசிகவ் ஞானியார்

No comments:

தேன் கூடு