Saturday, July 30, 2005

நியுட்டன் மூன்றாம் விதி



எங்கள்
கரடுமுரடான
சாலைகள் எல்லாம்...
சரியாக வேண்டும்!
மத்திய அரசே! ஒரு
மந்திரியை மட்டும்...
ஊருக்குள் அனுப்பு!

-ரசிகவ் ஞானியார்-

Friday, July 29, 2005

காதல் ஒரு எச்சரிக்கை



அபாயம் தொடாதீர்கள்!
இது
அதிக மின்திறன் உடையது!
----
தயவுசெய்து
முன்னேறி செல்லவேண்டாம்
இங்கு ஆழம் அதிகம்!
----
பார்த்து செல்லுங்கள்
குழி தோண்டப்பட்டுள்ளது!
----
கவனம்
அபாய வளைவு!
----
ஜாக்கிரதை !
திருட்டு அதிகம் இங்கே
தொலைந்த பொருளுக்கு...
நாங்கள் பொறுப்பல்ல!
-------
- ரசிகவ் ஞானியார்

கசப்பு



அப்பா சொல்லு
அப்பா சொல்லு
அ..ப்..பா

டுர்ர்ர்ர்ர்ர்…
இங்க பாரு காரு

டிக்..டிக்..டிக்
இங்க பாரு பொம்மை

ஸ்..ஸ்..
இங்க பாரு சென்ட்

அப்பா சொல்லு
அப்பா சொல்லு

மூன்று வயசு குழந்தை...
மூச்சு திணறி சொல்லிற்று!

மா..மா.

- அட போங்கடா
நீங்களும் உங்க துபாயும்


- ரசிகவ் ஞானியார்

Thursday, July 21, 2005

என் கல்லூரி தோழியே

நேற்று நானும் கல்லூரி நண்பன் காஜாவும் ஒரு புத்தகம் வாங்குவது சம்பந்தமாக நாங்கள் படித்த கல்லூரி சென்று பைக்கில் திரும்பிகொண்டிருந்தோம்.

தன் மனைவியை பின் சீட்டில் வைத்துக்கொண்டு குழந்தையை முன்னால் வைத்துக்கொண்டு சென்று கொண்டிருக்கிறான் அந்த கணவன். எங்களை கடந்து செல்ல முற்பட்டது அந்த பைக்…..தற்செயலாய் கவனித்தேன் ….

அட நம்ம சீமா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) எங்கள் கல்லூரி தோழி… நன்றாக முகத்தை ஏறிட்டுப்பார்த்தேன்..அவளேதான்..புன்சிரிப்பு செய்யலாமா என்று நினைக்கையில்- அவளோ பார்த்துவிட்டு சட்டென்று பயந்தபடியே முகத்தை திருப்பிக்கொண்டாள்..

எனக்கு சூழ்நிலை புரிந்து கொண்டது.

நான் காஜாவிடம் "டேய் வண்டியை ஸ்லோ பண்ணுடா"

"எதுக்குடா"

"பண்ணுடா சொல்றேன்…"

அவன் பைக்கை மெதுவாக்கி "எதுக்குடா " என கேட்டான்

"இல்லடா நம்ம கூட படிச்சாள சீமா ஞாபகமிருக்கா"

"ஆமாடா ஞாபகமிருக்கு..அதுக்கு என்ன?"

"அவதான் அதோபோய்க்கிட்டு இருக்கா அவ புருஷனோட…"

"டேய் சொல்லவேண்டியதுதானேடா " என்று கூறி பைக்கை விரட்டினான்

"டேய் டேய் ஸ்லே பண்ணுடா வேண்டாம்டா..பாவம் அவ புருஷனோட போறா..அவ புருஷன் எதையும் சாதாரணமா எடுத்துக்கிற ஆளா இருந்தா நம்மை பார்த்து விஷ் பண்ணியிருப்பா
ஆனா பயந்து பயந்து போறாடா… நாம் விஷ் பண்ண அதை அவ புருஷன் பார்க்க..தப்பா நினைச்சுட்டான்னா…பாவம்டா அவ லைஃப் வம்பா போயிரும்…" - நான்

"ஓ அதான் ஸ்லோ பண்ண சொன்னியா…சரி சரி எனக்கு தெரியாதுடா.. சரி பார்த்து சுமார் 6 வருஷம் ஆயிருக்குமே…இப்ப எப்படியிருப்பான்னு பார்க்கலாம்னு பார்த்தேன் " - என்று வண்டியின் வேகத்தை குறைத்தான்

"கல்லூரியில் எவ்வளவு கலகல வென்று சிரித்து மாடர்னா இருப்பாள்….இப்பொழுது கிராமத்து பொண்ணு மாதிரி இருக்காடா…"

அதோ .. எங்களை விட்டு தூரத்தில் சென்று திரும்பிபார்த்தாள் லேசாக...
திரும்பி பார்த்தது அவள் மட்டுமல்ல என் நினைவுகளும்தான்…

யாரோ எழுதிய கவிதை ஒன்று ஞாபகத்தில் வந்து போனது..

நாம் காதலர்களல்ல

ஆனால்

நட்பை காதலித்தோம்

- யாரோ

……………..நினைவுகள் பின்னோக்கி ஓடியது…

அவளது கைப்பையில் இருந்து ஒரு கடிதத்தை மஸ்தான் எடுத்தான்;.

"டேய் வேண்டான்டா பர்ஸனலா இருக்கம் வச்சுருடா..அவ வந்துற போறாடா "– நான்

"டேய் பயப்படாத…இந்த இந்த லட்டரை படி..நான் வேற ஏதாவது இருக்கான்னு தேடுறேன்.."
- மஸ்தான்

அது அவளுடைய காதலனால் அவளுக்கு எழுதப்பட்ட கடிதம். காதல் உருக்கத்தில் வழிந்து எழுதப்பட்ட கடிதம் அது..
( அந்த காதலனைத்தான் இப்போது கைப்பிடித்திருக்காளான்னு தெரியாது )

படித்துவிட்டு அப்படியே பிரித்தது தெரியாமல் வைத்தோம்..அவள் வகுப்பறைக்கு வந்து தன் கைப்பையை பார்த்து உடனே எங்கள் பக்கம் திரும்பி ஒரு முறை முறைத்தாள்..வேறு எதுவும் கேட்கவில்லை…பின் எனது ஆட்டோகிராப் நோட்டில் எழுதினாள்..

"நீ என்னுடைய பர்ஸனல் விஷயத்தில் தலையிட்டாய்..நான் எதை சொல்ல வருகிறேன் என்று நீ புரிந்திருப்பாய் என நினைக்கிறேன். அந்த விஷயம் மட்டும்தான் உன்மீது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஆனால் இப்பொழது எனக்கு உன்னுடைய நட்பு கடைசிவரை வேண்டும். "

என்று எழுதியிருந்தாள்….இப்படி கடைசிவரை நட்பு வேண்டும் என எழுதியவளா? இப்படி
பாதிவழியில் பைக்கில் செல்லும்போதே கழட்டிவிட்டுவிட்டாள்…?

நானும் நண்பன் செய்யதலியும் கடைசி நாளில் அவளது வீட்டிற்கு போனபோது கூட அவள் வருத்தத்தோடு கூறினாள்…

"எவ்வளவு ஜாலியா போச்சுது காலேஜ் லைஃப்…...? நேத்துதான் தயங்கிதயங்கி காலேஜ் வந்தது மாதிரி இருந்துச்சு..இப்ப பார் கடைசி நாளில் வந்து நிற்கிறோம்…ம் என்ன செய்ய …எப்படியும் இந்த ஊருக்குள்ளதானே இருக்கபோறோம்…எப்பவாது சந்தித்துக்கொள்ளலாம்.. "

என்று கூறியவள் இப்பொழுது பாருங்கள்….அவள் என்ன செய்வாள் பாவம்…?

"என்னடா இப்படி கண்டுக்காம போறா "– காஜா

"அவ சூழ்நிலை அப்படி இருக்கலாம்.அவ என்னடா செய்வா "– நான்

"எத்தனை கணவன்மார்களுக்கு தங்கள் மனைவியின் தோழர்களை சாதாரணமாய் எடுத்துக்கொள்ள முடிகிறது? "– நான்

"நாம காலேஜ்ல படிக்கும்போது நமக்கும் எத்தனை கேர்ள்ப்ரண்ட்ஸ் இருந்திருக்கும்…அது மாதிரிதான அவளுக்கும்…இத ஏன்டா புரிஞ்சிக்க மாட்டேன்கிறாங்க…ம்ம்"

-ஒரு பெருமூச்சோடு கூறினான் காஜா..

நீ
புன்னகைக்காமல் சென்றாய்
நட்பு அழுதுகொண்டிருக்கிறது


சீமா தூரத்தில் சென்று ஏக்கத்தோடு திரும்பிபார்த்தது என் மனசை ஏதோ செய்தது.

"ஞானி என்னை மன்னிச்சுருடா…நாம காலேஜ்ல நட்போட இருந்திருக்கலாம்..ஆனா இப்ப எனக்கு கல்யாணம் ஆயிருச்சு..இப்ப நான் உன்னய விஷ் பண்ணினா எம் புருஷன் யதேச்சயா பார்த்து..அது யாருடி ரோட்டுல போறவன பார்த்து கை காட்டுற… அப்படின்னு கேட்டான்னா நான் என்ன சொல்ல முடியும்…? "

என்று அவளின் அந்த தூரத்து பார்வை என் இதயத்தில் வந்து கெஞ்சி மன்னிப்பு கேட்பதுபோல இருந்தது.

இப்படி இந்தியாவில் எத்தனை சீமாக்களோ…..? தோழமையை தவளாக நினைக்கும் எத்துணை கணவன்களோ…?


என் இனிய தோழியே!
உன்
பிறந்த நாளுக்கு
வாழ்த்து அட்டை அனுப்புவதை
இரண்டு விஷயங்கள் தடுக்கலாம்

ஒன்று உன் திருமணம்
மற்றொன்று என் மரணம்



இதயம் நெகிழ்வுடன்

ரசிகவ் ஞானியார்

Monday, July 18, 2005

கானல் கனவுகள்




துபாயில் தூங்கி...
இந்தியாவில் விழிக்க ஆசை!
முடியுமா...?

எனக்குத்தெரியாமல்
என் சட்டைப்பைக்குள்
பணம் வைக்கும் தந்தை எங்கே..?

தனக்குப்
பசியெடுக்கும்பொழுதெல்லாம்
என்னை சாப்பிட வற்புறுத்தும்
தாய் எங்கே?

தோழிகள் வீட்டுக்கு
போன் செய்து கொடுக்கும்
தங்கை எங்கே?

என்னால்
திட்டப்படுவதற்காகவே இருக்கும்
தம்பி எங்கே?

வெட்டித்திண்ணையில் பேச,
கூட்டம் கூட்டமாய் சுற்ற,
கிண்டலடித்து மகிழ,
ஆறுதல்படுத்த,
கண்ணிர் துடைக்க,
நண்பர்கள் எங்கே...?

இப்படி
தனியாகப் புலம்பி புலம்பி
தண்ணீர் இல்லாத
பாலைவனத்திற்கு
கண்ணீரைக் கடன்கொடுத்தபடி...
கனவுகளுடனே
தூங்கப்போகிறேன்.

மறுநாள் காலைப்பொழுதில்,
நான் துபாய் வந்ததே - வெறும்
கனவுதான் என்று...
காலம் சாமாதானப்படுத்த,
என் தாய் வந்து
தேநீர் கோப்பையுடன்
எழுப்பிவிட மாட்டாளா...?

துபாயில் தூங்கி
இந்தியாவில் விழித்துவிட
மாட்டேனா...?

அரபிக்கடலின் அலைகள் - என்னை
கன்னியாகுமரியில்
கரைசேர்த்துவிடாதா...?

ஏக்கத்துடனே...
விழித்துப்பார்த்தால்...

மீண்டும் அதே
பாலைவனச்சூட்டிலே
பயணம் தொடர்கிறது...
FM கேட்டுக்கொண்டே


- ரசிகவ் ஞானியார் -

Saturday, July 16, 2005

தீயில் கருகிய ரோஜாக்கள்





"அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் என்னைப் போட்டு
தீயின் சூட்டைப் போக்கு ! "

இது
மழலைப் பாட்டல்ல...
எரியும்பொழுது கதறிய
மழலைகளின் மரணப்பாட்டு!

தாயின் தழுவல் போதாதென்றா - இந்தத்
தீயின் தழுவல் ...?

நெருப்போடு நீ வெந்த...
நிஜத்தை கேட்டு
பொறுப்போடு ஓடி வந்தேன்
பெத்த மகனே!

உன்னை
கறுப்போடும் கரியோடும்...
கண்ட காட்சி!
என்
கருப்பையின் துடிப்பெல்லாம்...
நின்றே போச்சு!

தீபாவளிக்குத்தானே...
பட்டாசு கேட்டாய்!
ஏன் நீ
தீபாவளிக்கு முன்னே...
பட்டாசு ஆனாய் ?

உன்னை
மதிப்பெண் பட்டியலில்தான்...
தேட நினைத்தேன் - ஆனால்
மார்ச்சுவரி பட்டியலில்...
தேட வைத்துவிட்டாயே ?

மகனே!
பள்ளிமுடிந்ததும்...
பொருட்காட்சிக்குப் போகலாமென்றாய்?
ஆனால் இங்கே
உடல் காட்சியாக நீயே...

வாழை இலைகளில்...
உணவா ? உயிரா?

அக்கினிக்குஞ்சுகள் எல்லாம்...
அக்கினியிலேயே அழிந்துவிட்டார்களே ?

புரியும்படி பாடம் நடத்த சொன்னால் ...
எரியும்படி நடத்திவிட்டார்கள் !

என்னை
வீட்டுப்பாடம் செய்யச் சொல்லி...
அடம்பிடித்தவன்- இன்று
வீட்டில் படமாக...

பத்திரிக்கையில்
உன் புகைப்படம் வர...
ஆசைப்பட்டது உண்மைதான் !
இப்படியா
"புகையோடு" வருவது ?

விறகுக்குப் பஞ்சமென்று என்
சிறகை சிதைத்த நெருப்பே!
முட்களை விட்டுவிட்டு - ஏன்
ரோஜாப்பூக்களை கருக்கினாயோ?

இனி நீ
தீக்குச்சியைக்கூட தீண்டக்கூடாது!

தீயே
சமையல் கட்டிற்குள்ளே உன்
சாமராஜ்யம் முடிந்துவிடக்கூடாதென்றா...
உலகப் பத்திரிக்கையில்
இடம்பிடித்தாய்?

புகழுக்காக...
புழுக்களை எரி! - ஆனால்
பூக்களை விட்டுவிடு!

சமையல் நெருப்பு கூட - மகனின்
சாவையை ஞாபகப்படுத்துவதால்
நான் இனிமேல்
சமைக்கப்போவதில்லை!

தீக்குள் விரல்விட்டேன் நந்தலாலா - எனைத்
தாக்கும் சூடுதனைத் தாங்குவேனோ? -இங்கே
பூக்கள் கரிந்தனவே என்செய்வேன்? -அந்தச்
சூட்டின் வலிதனை எனக்கும் தாராய்!

மடியில் விளையாடிய பிள்ளைதனை...
மாடியில் வைத்து எரித்தாய் - ஒரு
பிடியு மில்லாத வாழ்க்கை இனி
நொடிகள் நகர்வது எங்கே?

மகனே!
நிச்சயமாய் ...
இன்றுதானப்பா உணர்கிறேன் - உன்
பிரசவ வேதனையை...

" அம்மா இங்கே வா! வா!
ஆசை முத்தம் தா! தா!
இலையில் என்னை போட்டு...
தீயின் சூட்டைப் போக்கு ! "

அந்த
ஒன்றாம் வகுப்பு அறையிலிருந்து...
இன்னமும்
கேட்டுக்கொண்டேயிருக்கிறதாம்...
ஓரு சோக ஒலி!


ரசிகவ் ஞானியார்

Friday, July 15, 2005

காதலிசம்

தயவுசெய்து யாராவது
என்னை
காதலித்து ஏமாற்றுங்களேன்.
ஒரு
கவிதை புத்தகம்
வெளியிடவேண்டும்

ரசிகவ் ஞானியார்

Thursday, July 14, 2005

காதலிசம்

என்
நூறுகிராம் இதயத்திலே
நொண்டி அடித்துச் சென்றவளே!
நீ
தத்திச்சென்ற
தடயங்களலெல்லாம்...
ஒரு
வாடகைவீட்டுக்காரனைப்போலவே
வெளியேற மறுக்கிறது!


- ரசிகவ் ஞானியார்

Tuesday, July 12, 2005

காதலிசம்

என்
ஐஸ்கிரீமை நீயும்
உன்
ஐஸ்கிரீமை நானும்
சாப்பிட்டதில்..
சளிபிடித்துவிட்டது
நம் காதலுக்கு!

- ரசிகவ் ஞானியார்

Friday, July 08, 2005

காதலிசம்...

நீ
முத்தமிட்ட இடத்தை
சலூன்காரன் கூட
தொட்டுவிடக்கூடாது!

வளர்ந்து விட்டது
தாடியும் காதலும்…

ரசிகவ் ஞானியார்

Wednesday, July 06, 2005

தொலைத்தல்

உன்னை
சந்திக்க வரும்பொழுதெல்லாம்
எதையாவது
தொலைத்துவிடுகிறேன்.

முதல்நாள்
உன் வீட்டிற்கு வந்தபோது
செல்போன்

மறுநாள்
உன் அலுவலகம் வந்தபோது
கீ செயின்

இப்பொழுது
இதயம்

ரசிகவ் ஞானியார்

இதய நொண்டி

"ஏலே நொண்டி"
மூன்று சக்கர வாகனத்திலிருந்து
முகம் திருப்பினேன்
அங்கே ஓர்
இதய நொண்டி!


- ரசிகவ் ஞானியார்

Tuesday, July 05, 2005

காதலிசம்

நீ
அனுப்பிய
எஸ்எம்எஸை கூட
அழிக்க முடியவில்லையடி

எப்படி அழிப்பேன்
உன்
நினைவுகளை?




அஸ்க்கு புஸ்க்கு
நீ
கேட்டால்கூட
தரமாட்டேன் போடி
நான் உன்மீது
வைத்த காதலை


நீ
பக்கம் அமர்ந்து வர
ஒரு
கார் வேண்டும்
அதற்கு முன்
உன்
காதல் வேண்டுமடி

- ரசிகவ் ஞானியார்

Monday, July 04, 2005

ஓடுவதற்கு முன் ஒரு நிமிஷம்

சைனாவுக்கு போகவேண்டுமானாலும்
சைக்கிளிலேயே செல்லும் என் தந்தை
என்னைப்
பக்கத்து தெருவிற்குக் கூட
பைக்கில் போக சொல்லுகிறார்

இவரை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
---

தேர்வு சமயங்களில்
இரவு முழுவதும்
படித்துக்கொண்டிருப்பதோ நான்
விழித்துக் கொண்டிருப்பதோ என் தாய்!

அவளை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?

---

அலுவலகம் செல்லும் அண்ணன்
மடித்து வைத்த சட்டையை
வெட்டியாய் ஊர்சுற்ற போகும் நான்
அணிந்துகொண்டாலும்
ஆனந்தப்படுவானே?

அவனை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?

---

நான்
செலவுக்கு பணம் கேட்கும்பொழுது – தான்
நகை வாங்க வைத்திருக்கும் பணத்தை கூட
புன்னகையோடு தருவாளே
என் தங்கை!

அவளை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?

---

கோபத்தில் தம்பியை அடித்துவிட
அது அப்பாவரும் நேரம் என்பதால்
என்னை காட்டிக்கொடுக்காமல்...
அழுகையை அடக்கி கொள்வானே?

அவனை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?

---

இப்படி
எனக்காக அழுவதற்கு
எத்தனையோ இதயங்களிருக்க
என்னை அழவகை;கும்
நீ எனக்கு
வேண்டாமடி!

---

* - ரசிகவ் ஞானியார்

Saturday, July 02, 2005

குளோனிங் கவிதை

நீ காற்று
நான் மரம்
என்ன சொன்னாலும்
தலையாட்டுவேன்

நீ விஐபி
நான் வீரப்பன்
எப்பொழுது வேண்டுமானாலும்
கடத்திவிடுவேன்

நீ ஊழல்
நான் அரசியல்வாதி
உன்னை விட்டு
பிரியவே மாட்டேன்

நீ அரியர்ஸ்
நான் மாணவன்
கல்லூரி முடிந்தாலும்
உனைப் பார்ப்பேன்

நீ மதம்
நான் இந்தியன்;
உன்னோடு நான்
இரத்தம் சிந்துவேன்



இதயம் நெகிழ்வுடன்

ரசிகவ் ஞானியார்

தேன் கூடு