Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Tuesday, February 18, 2014

உயிர்த்தெழுதல்



முகம் மறைத்தபடி கைதாகும்
அழகிகளின்
விடுதிகளில் எல்லாம்
புறவாசல் திறந்தே இருக்கின்றது

முன்வாசலில் உயிர்த்தெழுபவர்கள்
இயேசு வருவதற்குள்

கல்லெறிகின்றார்கள்

Sunday, January 26, 2014

மற்றும் நான்


கைப்பேசி,
கடவுச்சீட்டு,
சஞ்சி,
நான் கூட
சேர்ந்துகொண்டேன்
தொலைத்து விடக்கூடாதென்கிற
பட்டியலில்


- ரசிகவ் ஞானியார்

Saturday, January 25, 2014

கண்ணாடி பெட்டியை உடைக்கும் கண்ணீர்கள்






புன்னகையோடு வரவேற்கின்ற
விமான பணிப்பெண்கள் ...
முன் இருக்கையிலிருந்து
சிரிக்கின்ற குழந்தை...
பக்கத்து இருக்கை பயணிகள் ...
சோகத்தை
யாரிடமுமே கடத்திவிடாமல்
இயல்பு மறைக்கும் அந்தப் பயணத்தில்,
நான்
கண்ணாடி பெட்டியை உடைக்கும்
கண்ணீர்கள் சுமப்பவன் என....
தெரிந்திருந்தால்
நிச்சயமாய்  அறிவித்திருக்க மாட்டார்கள்
Have a pleasant journey
என்று...

- ரசிகவ் ஞானியார்

Tuesday, December 08, 2009

ஒவ்வாமை



உன்னிடமிருந்து
களவாடப்பட்டுவிடுகின்ற
ப்ரியங்கள்
பறவைகளாகி...
என்னை கேலி செய்கின்றது!
ப்ரியங்களை வெடுக்கென்று
புடுங்கி விடுகின்ற..
பக்குவமில்லை எனக்கு!

நான் நண்பனாகவே ...
இருந்திருக்கலாம்தான்!

- ரசிகவ்


Sunday, February 01, 2009

இனி வரும் நாட்கள்...




அகரமுதல எழுத்துக்கெல்லாம்
அகதிகளென்று பெயராம்!

சிறை வைக்கப்பட்ட எங்கள்
சீதைகளை மீட்க...
இராமன்களே மறுத்துவிட,
அனுமர்கள் மட்டும்
அவ்வப்போது தீக்குளிக்கின்றார்கள்!


நாகரீக மாற்றத்தில்
குகை மனிதன்
புகை மனிதனாகுகின்றான்

எல்லைத் தாண்டுதல்
எவருக்குமே அனுமதியில்லாதபொழுது,
எப்படி நுழைந்தாய்
மிருக எல்கைக்குள்?

வீசுபவனும் வலிகள் உணர்ந்தால்
ஹைட்ரஜன்கள் என்றோ
ஆக்சிஜன்களாக்கப்பட்டிருக்கும்


உன்
கழுகுப் பார்வைக்கு
காதுகள் இருந்திருந்தால்
ஓலச்சப்தங்கள் கேட்டிருக்கலாம்
உன்னைப்போலவே அங்கே
மனிதர்கள்தான் வாழ்கிறார்கள்

பதுங்கு குழிகளை
பிய்த்து எறியும் உன்
தேர்களின் நகர்வுகளில்
சிதைந்து போவது
மனித உடல்களா?
விதைகளா?


புரிந்து கொள்
உன்
செல்லில் செத்துப்போனது
புத்தன் மட்டும்தான்


உனக்கு
சொர்க்கம் காத்திருப்பதாய்
தோன்றுகின்ற கனவுகள்
கண்ணிவெடியில் பதிந்துள்ள
கால்கள் போலத்தான்!

உனக்கு வருங்காலமா?
வெறுங்காலமா?
இனிவரும் நாட்கள்
பிரதிபலிக்கும்

நம்புகிறோம்
நீயும் எழுப்பப்படுவாய்...
முத்துக்குமரனும் எழுப்பப்படுவான்

- ரசிகவ் ஞானியார்

Sunday, January 18, 2009

நலம் விரும்பிகள்





தயவுசெய்து
பட்டாசு வெடிக்காதீர்கள்
தீக்காயம் ஏற்படலாம்

நாங்கள்
அணுகுண்டு போடுகிறோம்

- ரசிகவ் ஞானியார்

Saturday, January 03, 2009

என் பாவம் கடவுளுக்குப் பிடித்திருக்கிறது


நான் பாவப்பட்டவனா?
புனிதப்பட்டவனா?

புனிதங்களின் பாவத்தோற்றம்
உன்
உணர்வுப்பிழையே

உனக்குப் பாவம்
எனக்குப் புனிதம்

பாவத்தின் சம்பளம்
என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும்
ஒவ்வொரு குளியலும்
என்னை புனிதமாக்கிவிடும்

மெல்ல ஊடுருவும்
பேய்களோடும் சிலநேரம்
போராடவேண்டியதிருக்கின்றது

என்னை பாவம் செய்யவிடாமல்
பாவம் செய்துவிடாதே

என் பாவம் கடவுளுக்குப்
பிடித்திருக்கிறது

- ரசிகவ் ஞானியார்

Wednesday, October 08, 2008

அழகான பிரிவு





நீ மறைத்தாலும் வெளிபட்டுவிடுகின்ற...
பிரிவின் துயரினை,
நடிக்கத் தெரியாத
கண்ணீரையெல்லாம்...
ஏன் உடன் சுமந்து வருகின்றாய்?

அன்பின் திரவவடிவமான
அந்த
நீர்த் திவலைக்களுக்காகவாவது,

கிளம்புவதற்கான விநாடிகள்
கணக்கிடப்படும் தருவாயில்
பாம்பின் பின்னலையொத்த
விரல்களின் ஸ்பரிசத்திற்காகவாவது...

பேருந்து புறப்பட்டுவிட்ட பொழுதிலும்
வழித்தடங்களில்..
நின்று கொண்டு
எனக்காக நீ காட்டுகின்ற
டாட்டாக்களுக்காகவாவது,

அதுபோன்றதொரு
அழகான பிரிவினை
எதிர்பார்க்கின்றேன்

- ரசிகவ் ஞானியார்

Thursday, September 11, 2008

அன்பென்றே பெயர்


என் மீது படர்ந்திருக்கும்
உன் கோபங்கள்...
எப்பொழுதாகினும் விலகிவிடும்!
விலகும்வரை
நீயிருக்கும் பட்டினிதான்
நம் காதலின் வெற்றி!

- ரசிகவ் ஞானியார்

Friday, August 22, 2008

மழை தேவதை

கோபம் நீங்குகின்ற
நொடியினில்...
பொழிகின்ற அந்த மழைக்காகவேனும்
கோபப்பட்டுக்கொண்டேயிரு
மழை தேவதையே!

- ரசிகவ் ஞானியார்

கோபம்

கடுங்கோபத்தில்
உன்னைப் பார்க்காமல்
அமர்ந்திருக்கின்றேன்
நீ பார்க்கும் கோணத்தில்
என் முகம் வைத்துக்கொண்டு


ரசிகவ் ஞானியார்

Tuesday, July 29, 2008

வானிலை அறிக்கை


என் ஞாபகம்
அதிகப்படுவதாய்
நீ அனுப்புகின்ற
குறுந்தகவல்,
அங்கே
மழைபொழிந்துகொண்டிருப்பதற்கான ...
வானிலை அறிக்கை

- ரசிகவ் ஞானியார்

Friday, July 25, 2008

எதிர்வினை



"இன்றைய குண்டுவெடிப்பு
சேதம் குறைவுதான்

ஒரே ஒரு பெண் மட்டும் இறந்தாள்"

அலட்சியமாய் சொல்லும்
அரசாங்கத்திற்குத் தெரியுமா?

பிணத்தின் முன்
கதறிக்கொண்டிருக்கும்
குழந்தையின் துயரம்

- ரசிகவ் ஞானியார்

Thursday, July 24, 2008

புத்தனுக்கும் இரவு உண்டு







உன் வீட்டை சூறையாடுபவன்
மன்மதனாக இருக்ககூடும்
உன் அல்குல் தைவரலோ
காந்திக்காக

உனக்கு வயிறு
எனக்குப் பசி

பசியில் உழலும் எனக்கு
உன்
வயிறு பற்றிய வருத்தமில்லை.

பழிபோடுவதற்கு
எதுவோ இருக்கையில்
என்
தவறுகள் வெள்ளமாகிக்கொண்டிருக்கின்றன

ச்சீ போடி
நீ ஒரு விலைமாது
சூரியஒளியில் நான்
புத்தனாகின்றேன்

- ரசிகவ் ஞானியார்

(அல்குல் தைவரல் : காதலனோடு களவு கொள்ள விருப்பப்பட்ட பெண் அதனைத் தெரிவிக்க வெட்கப்பட்டு தனது உடல் மெய்ப்பாடுகளால் தெரிவிக்கும் நிலை.)

வெயில் பிடித்தவள்




சாளரம் ஊடே நுழைகின்ற
கற்றைகளின் துளியொன்றினை
பிடிபொருளென நினைத்து
பிடிக்க முயற்சித்து
பிடிக்க முயற்சித்து
தோற்றுவிடுகிறது
அவள்
பல் முளைக்கா பருவம்

கற்றைகளை விளக்குமளவுக்கு
கற்கவில்லை நான்

கதிரவனே நீ
கற்றைகளுக்குப் பதிலாய்
கடிபொருளை அனுப்பேன்

எப்பொழுதும் தோற்கவேகூடாது
என்
வெயில் பிடித்தவள்


- ரசிகவ் ஞானியார்

Wednesday, July 23, 2008

திண்ணையர்கள்


அந்த
வீடுகளில் எல்லாம்
பெரும்பாலும்
நிசப்தங்கள் மட்டுமே
வாழுகின்றன

கொஞ்சம் விலகிக்கொள்ளுங்கள்
திண்ணையில் யாரோ
முனகிக்கொண்டிருக்கின்றார்கள்

அவர்கள் ஒரு காலத்தில்
அப்பா அம்மாக்களாய்
வாழ்ந்தார்களாம்

- ரசிகவ் ஞானியார்

கணிப்பொறிலிசம்

Thursday, July 17, 2008

தமிழுக்கு தமிழ் என்றே பெயர்



"நீங்க தமிழா?
நீங்க தமிழா?"

மொழி தெரியாத ஊரின்
பேருந்து நிலையத்தில்,
காற்று தத்தெடுத்து என்
காதுக்குள் அனுப்பியது!
வரிசையாய் விசாரித்து வரும்
அந்தக் குரலை!

சொந்த ஊரில் மிதித்துவிட்டு...
வந்த ஊரின் தமிழ்கேட்டு
மெச்சிப்போய்,
தமிழை வரவேற்க ஆயத்தமானேன்.

"ஊருக்குப் போக காசில்லை
பணம் தாங்க சார்"
- தமிழ் கண்ணீர் சிந்தியது

"க்யா, க்யா
தமிழ் நகி மாலும்"
- ஏதோ என்னால் தமிழுக்கு முடிந்த உதவி

தமிழ் தலைகுனிந்து சென்றது

- ரசிகவ் ஞானியார்

Wednesday, July 16, 2008

கிட்டப்பார்வை




என்றேனும்
விசாரித்திக்கின்றீர்களா
இரயில் பயணத்தின்
சக பயணியை?

உங்கள் வீட்டிற்கு
பால்போடுபவனின்
பெயர் தெரியுமா?

பக்கத்து வீட்டுக்காரனின்
விசும்பலுக்கு
காரணம் என்ன?

பெற்றோர்களின்
பிறந்த நாள்
கேட்டதுண்டா?

நாளைக்கு காலையில்
நாஷ்டாவுக்கு
காசு இருக்கிறதா?

நீ பேசிக்கொண்டேயிரு
அணுசக்தி ஒப்பந்தம் பற்றியும்
..........................
.......................


- ரசிகவ் ஞானியார்

தேன் கூடு