Wednesday, December 24, 2014

பிசாசு


உங்கள் கண் முன்னால் எந்த உயிராவது பிரிவதை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா..? தன் கண் முன்னால் ஒரு உயிர் பிரிவதை பார்க்கின்றவர்கள்தான் உண்மையில் மரணப்பட்டு போகின்றார்கள்...
மரணம் இப்படித்தான் இருக்கும் என்பதை அவர்களுக்கு அது உணர்த்திவிடும்........ அதுவும் கண்முன்னால் நிகழ்கின்ற ப்ரியமானவர்களின் மரணம் அவர்களது வாழ்க்கையில் ஒரு வலியாகவே பின் தொடர்ந்து கொண்டிருக்கும்.....
கைகளை பற்றியபடி தன்னுடைய மரணத்தை கண்களின் வழியாக கடத்திவிட்டு உயிர்விட்டு விடுகின்ற, ஒரு பெண்ணின் ஞாபகத்துடன் அலைகின்ற ஒரு வயலின் இசைக்கலைஞனின் இசை வழியாக ஆரம்பிக்கின்றது கதை........ பிசாசு....


காதல் வந்து மரணத்தில் முடிகின்ற கதைகளுக்கு மத்தியில், மரணம் வந்து காதலில் முடிகின்ற கதை இது....ஒரு கலங்காத நீரோடையைப் போல, இயக்குநரின் வழக்கமான கால்களின் பதட்டத்துடன் பயணிக்கின்றது .......
வீட்டை விட்டு பிரிந்து சென்ற மகளின் ஞாபகத்தில் அழுகின்ற தந்தைகளுக்கு மத்தியில், செத்து போன மகளை பிசாசாய் கண்டு, "வந்துறுமா வீட்டுக்கே வந்திருமா...ஏம்மா இங்க இருக்கே?" என்று புலம்பும் ராதாரவியின் நடிப்பும் அந்த காட்சியும் தமிழ் சினிமா இதுவரை கண்டிராதது....
ஆட்டோ ஓட்டுனரிடம் சென்று "இது என்ன நிறம் சொல்லுங்க?" என்று கதாநாயகன் கேட்கும் காட்சி, மூளைக்காரர்களுக்கு மட்டுமே முதல் முறை பார்த்தவுடன் புரியும்.... எனக்கு புரிந்தது...
பச்சை குடத்தின் ஓட்டை வழியாக தண்ணீர் ஒழுகிக் கொண்டிருக்கின்ற காட்சி சாதாரணமாக தெரிந்தாலும், கதையின் முடிச்சுகளும் அங்கேதான் கசிந்து கொண்டிருப்பதை மறைமுகமாக உணர்த்துகின்றது....
"நதி போகும் கூழாற்கற்கள் பயணம்" பாடலில் உள்ள வயலின் தந்திக் கம்பிகளின் நுனி, இமைகளின் இழைகளைத் தொட்டு கண்ணீர் வரவழைக்கின்றது...
வாழ்க்கையின் பிடிப்புகளற்று ஒரு விதமான ஏக்கத்தில் சுவற்றில் சாய்ந்து கொண்டிருக்கும் கண் தெரியாத ஒரு தம்பதி...அவர்களின் பாதம் தொட்டு கிடக்கின்ற குச்சிகள்...
பிச்சை பாத்திரத்தை ஏந்திக்கொண்டிருக்கும் அந்த சிறுமி......
கடவுள்களை விற்றுக்கொண்டிருக்கும் ஒரு வியாபாரி....
நாற்றமடிக்கும் பாதையில் பூக்களை விற்றுக்கொண்டிருக்கும் ஒரு பெண்மணி...
பாதைகளைக் கடக்கும் பாதங்கள்........
பாத்திரத்தில் காசு போடுகின்ற கைகள்...

வயிறு காற்றடைத்த பையாக மாறிவிடக்கூடாதென்று, மூச்சினை பலூனுக்குள் பரிமாற்றம் செய்து விற்கின்ற ஒரு மாற்று திறனாளி.......

பீடா கறை படிந்த சுவற்றில் படுத்துக்கொண்டிருக்கும், உறவுகளால் கைவிடப்பட்ட ஒரு பிசாசைப் பெற்ற முதியவர்...........
இப்படி அந்தப் பாடலின் காட்சிகள் நம்மை சுரங்கப்பாதைகளின் எல்லா திசைகளிலும் ஓட வைக்கின்றது.... அன்றாடம் நம் கண்கள் அலட்சியமாய் கடக்கின்ற மனிதர்கள் அவர்கள்.... இனி சுரங்கம் கடக்க நேரிட்டால் நின்று கவனிக்க தோன்றும்....
கால் வலிக்க நின்று, பாடி பிச்சையெடுத்த துட்டுகளை பறிக்க முயற்சிக்கும் ரவுடிகள் மட்டுமல்ல, சமுதாயத்தில் எதிர்த்து போராட முடியாத எளியவர்களிடமிருந்து, அவர்களின் உரிமையை பறிக்க முயல்பவர்கள் எல்லாரும் பிசாசுகளே என்பதை அந்த சுரங்கப்பாதையின் நிகழ்வுகள் மூலம் மிஷ்கின் அருமையாய் உணர்த்தியிருப்பார்...
பிசாசினைப் பார்த்து வருகின்ற பயத்தினை விடவும்... முழு முகத்தையும் காட்டாமல் பாதி மறைத்த தலைமுடியுடன் வருகின்ற கதாநாயகனை பார்த்துதான் கொஞ்சம் பயம் வருகின்றது... 
வழியில் கிடக்கும் மனிதர்களை
வலியில்லாமல் கடப்பவர்கள் பிசாசுகள்...

Thursday, August 28, 2014

ஊத ஆரம்பிக்கும் முன்னரே வெடித்துப் போகும் பலூன்கள்

தொடர்ந்து முகநூலில் வந்து விழுகின்ற சில மரணச் செய்திகள் வாழ்க்கையைப் பற்றிய பிடிமானத்தையும் அதிகரிக்கின்றது "அட! வாழ்ந்து என்ன ஆகப் போகின்றது" என்கிற கவலையையும் தோன்றச் செய்கின்றது. .

சென்ற வாரம் பேருந்து மோதி நடந்த மேலப்பாளைய நண்பரின் மரணம். அவரோடு எனக்கு பழக்கமில்லை எனினும் இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்கும்பொழுது சந்தித்திருக்கின்றோம்.....எங்கேனும் நின்று கடக்கின்ற தெருவில் சலாம் சொல்லியிருக்கின்றோம்.....

இனி அடுத்த முறை ஊருக்கு செல்லும்பொழுது அந்த முகம் எந்த தெருக்களிலும் சாலைகளிலும் எனக்கு தென்படவே போவதில்லை என்பதை நினைத்து பார்க்கும்பொழுது முகங்களை மறைத்து நியாயதீர்ப்பு நாளில் எழுப்பும் கடவுளின் மந்திரத்தில் இனி எவர் வேண்டுமானாலும் மாட்டக்கூடும் அடுத்த ரேண்டம் நம்பரில் யார் மாட்டக்கூடும்..?......

யாருடைய முகங்கள் எப்பொழுதிலிருந்து மறையப்போகின்றது என்கிற பயம் இன்னமும் அதிகரிக்கின்றது.

அதுபோல நேற்றும் ஒரு நண்பனின் மரணச்செய்தி...எனது பால்ய காலத்தில் நாங்கள் இருந்த ஹாமீம்புரம் இரண்டாம் தெருவில் நெருங்கிப் பழகிய நண்பன்... என்னுடைய வயதுதான்.....திடீரென்று ஹார்ட் அட்டாக்... நம்பவே முடியவில்லை....

துபாயில் சில வருடம் வேலை பார்த்தான்.... அவனை துபாயில் சந்தித்திருக்கின்றேன். குடும்பத்தை விட்டு பிரிந்து பொருளீட்ட சென்று விட்டு,

பெற்ற குழந்தையின் வளர்ச்சியை கண் முன்னே காணாமல்......,
குழந்தை முதன் முதலாய் பள்ளிக்கு அடி எடுத்து வைக்கும் பொழுது அழுதுகொண்டே செல்லும் பிரிவை காணாமல்..... ,etc....

சின்ன சின்ன நிகழ்வுகளையெல்லாம் வாழத் தவறிய வாழ்க்கையை , காலத்தின் நிர்ப்பந்தத்தால் அயல்தேசத்தில் வாழ்ந்துவிட்டு,.ஊரில் வந்து இப்பொழுதுதான் செட்டில் ஆக முயற்சித்துக் கொண்டிருக்கின்றான்....... ஆனால் முந்திக்கொண்டது மரணம்.....ஊத ஆரம்பிக்கும் முன்னரே வெடித்துப் போகும் பலூன்களைப் போல...

"அப்புறமாய் வாழ்ந்து கொள்ளலாம்" என்று நினைத்து வந்தவனை மரணம் வந்து எல்லாவற்றையும் மாற்றிவிட்டது......... இனி எந்த விசாவையும் நீட்டிக்க முடியாது..... .... அவனுக்காக இனி எந்த அரபாபும் காத்திருக்கப் போவதில்லை........

அவனுடன் ஒரே அறையில் தங்கியவர்கள் ,
அவனுடன் துபாய் சாலையில் சுற்றியவர்கள்.... ,
ஜெபல் அலியில் அவனோடு சேர்ந்து வேலை தேடியவர்கள், எல்லாம் துபாயில் தங்களது அறையில் கட்டிலில் அமர்ந்து அவனுடைய மரணத்திற்காக ஒரு சொட்டு கண்ணீர் விட்டு, அவனைப் பற்றிய பேச்சுக்களின் இறுக்கத்தில் இரண்டு நாட்களை கழிக்க சிரமப்படலாம்..... அவ்வளவுதான்

மீண்டும் அதே பாலைவன வாழ்க்கையை வாழத் தொடங்கிவிடலாம்.. வேறு என்ன செய்ய முடியும்..? "அவர்களும் அப்புறமாய் வாழ்ந்து கொள்ளலாம்" என்று வாழ்க்கையை தள்ளிப் போட்டவர்கள்தான்.....ஆனால் முகம் மறைவது நிற்கப்போவதில்லை.....

நாம் வாழ்க்கையைப் பற்றிய எத்தனை எத்தனை கனவுகளோடு சுற்றிக்கொண்டிருக்கின்றோம்....இனிமேல் தான் வாழவே ஆரம்பிக்க வேண்டும் என்பது போல் இருக்கின்றது......

நமக்குண்டான எல்லா பிரச்சனைகளையும்
ஒரு புள்ளியாக்கி விடுகின்றது, எல்லாவற்றையும் உடைத்துவிடுகின்றது இதுபோன்ற மரணச் செய்திகள்.

எதற்கு இப்படி ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருக்க வேண்டும்..?இருக்கின்ற நாட்களில் குடும்பத்துடன் செலவழித்து விடலாமா..? திடீர் திடீரென்று காணாமல் போய்விடுகின்ற முகங்களின் பட்டியலில் நாமும் நம்மை சுற்றியுள்ளவர்களும் ஒரு நாள் வந்து விடக்கூடும் ....

இன்னமும் எவ்வளவோ தூரம் கடந்து எத்தனையோ மலைகளை கடந்து ஆயிரம் கடல்களைத் தாண்டி நமக்கான மரணம் இருப்பதாக ஒரு கற்பனையில் இருக்கும்பொழுது இதோ அது பக்கத்தில்தான் இருக்கின்றது என்று ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கின்றது...........

ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்ளாமலையே இந்த உலகம் விட்டு பிரிந்து விடக்கூடிய சந்தர்ப்பங்கள் வந்துவிடுமா..? மரணத்திற்காக நம்மை எப்படி தயார் படுத்திக்கொள்வது..? கேள்வி கணக்குகள் கேட்கப்படுகின்ற நாளில் நமக்கு மறந்து போய்விட்டால் என்ன செய்வது? என்கிற மறுமையின் கவலைதான் மேலோங்கி நிற்கிறது இந்த மாத சம்பளம் வரும் வரையிலும்....

மறுபடியும் வாழ்க்கை எப்பொழுதும் போலவே பயணிக்கின்றது அடுத்த ஒரு மரணம் வரைக்கும்;... :(

- ரசிகவ்

Tuesday, February 18, 2014

உயிர்த்தெழுதல்முகம் மறைத்தபடி கைதாகும்
அழகிகளின்
விடுதிகளில் எல்லாம்
புறவாசல் திறந்தே இருக்கின்றது

முன்வாசலில் உயிர்த்தெழுபவர்கள்
இயேசு வருவதற்குள்

கல்லெறிகின்றார்கள்

Sunday, January 26, 2014

மற்றும் நான்


கைப்பேசி,
கடவுச்சீட்டு,
சஞ்சி,
நான் கூட
சேர்ந்துகொண்டேன்
தொலைத்து விடக்கூடாதென்கிற
பட்டியலில்


- ரசிகவ் ஞானியார்

Saturday, January 25, 2014

கண்ணாடி பெட்டியை உடைக்கும் கண்ணீர்கள்


புன்னகையோடு வரவேற்கின்ற
விமான பணிப்பெண்கள் ...
முன் இருக்கையிலிருந்து
சிரிக்கின்ற குழந்தை...
பக்கத்து இருக்கை பயணிகள் ...
சோகத்தை
யாரிடமுமே கடத்திவிடாமல்
இயல்பு மறைக்கும் அந்தப் பயணத்தில்,
நான்
கண்ணாடி பெட்டியை உடைக்கும்
கண்ணீர்கள் சுமப்பவன் என....
தெரிந்திருந்தால்
நிச்சயமாய்  அறிவித்திருக்க மாட்டார்கள்
Have a pleasant journey
என்று...

- ரசிகவ் ஞானியார்

Monday, September 30, 2013

கடைசியில் கௌபத்துல்லா பாயும் ஜனாஸாவாகிவிட்டார்..... :(அப்பாவைப்பற்றி எழுத வேண்டும் என நீண்ட நாட்கள் நினைத்திருந்தேன். ஆனால் அப்பாவை எழுதும் தருணம் இப்படி வந்து கிடைக்குமென எதிர்பார்க்கவேயில்லை...  செப்டம்பர் 13- 2013 ஒரு வெள்ளிக்கிழமையின் தொழுகைக்கு பிறகு அப்பா தங்குவதற்கு 6 அடிக்கு மேல் தர மறுத்துவிட்டது இந்த பூமி...
கைச்சுமைகள் எதுவுமின்றி அதிகமான இதயச்சுமைகளோடு ப்ரியமானவர்களின் மரணத்திற்காக அயல் தேசத்திலிருந்து வீடு திரும்புதலின் வலி மிகவும் கொடுமையானது.


வரும் வழியிலெல்லாம் அழுகையை அடக்கி வைத்துக்கொண்டு, இயல்பாய் புன்னகைத்துக் கொண்டு, கடைசியாய் வீடு வந்து சேர்ந்து, கண்ணாடிப்பெட்டியை உடைக்கும் கண்ணீர்களை சிதறும் தருணத்தை எழுதும் வார்த்தைகள் நனைந்தே இருக்கின்றன....

என் வீட்டின் முதல் இலையுதிர்காலம் இது.....குஞ்சுகள் இரை தேட கற்றுவிட்டதால் கூட்டின் பாதையை தொலைத்து திசை மாறி சென்றுவிட்டது ஒரு பறவை...
மேலப்பாளையம் ஹாமீம்பள்ளி தெரு அருகே உள்ள அந்த கபர்ஸ்தானில் எந்த இடத்தில் அப்பாவிற்காக குழி தோண்டப்பட்டதோ அந்த இடத்தின் மீது அப்பா எத்தனையோ முறை உலா வந்திருக்கின்றார் அந்த தெருவின் ஒவ்வொரு மரணத்திற்கும்.....அவர் முன்நின்று செய்த எல்லாமுமே அவருக்காக செய்யப்படுகின்றது 


இசக்கி முத்து வீட்டு மனைக்கும் தெற்கே

முப்பிடாதி வீட்டு மனைக்கும் வடக்கே
அபுபக்கர் வீட்டு மனைக்கும் கிழக்கே

இப்படித்தான் தான் விற்கின்ற வாங்குகின்ற மனையின் பத்திரம் எழுதுவதற்காக என்னை எழுத வைத்து எழுத்துப் பயிற்சி கற்று தந்திருக்கின்றார் அப்பா....


சென்ட் - தச்சு – சதுர அடி போன்ற வார்த்தைகள் எல்லாம் அப்பா மூலமாகத்தான் எனக்கு அறிமுகமாயின.... அதுபோலத்தான் இந்த ஆறடியின் வலியும்...
"அவர் வாங்கி விற்ற

சதுர அடிகள் எல்லாம்
பத்திரங்களாய் இருக்கிறது..
அவர் தூங்கி விட்ட
ஆறடி தவிர"


எதிர்பாராத திருப்பங்களுடன்தான் வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கின்றது ஆனால் மரணம் மட்டும்தான் திருப்பத்தில் விழவைத்து வாழ்க்கையை நகர்த்துகிறது... எவ்வளவு கவனமான பயணமாக இருந்தாலும் நிச்சயமாய் ஒவ்வொருவரும் அந்த திருப்பத்தை சந்தித்தே தீரவேண்டும்...
நான் வெகுதூரத்தில் இருக்கிறேன் என்பதை அவர் உணரக்கூடாது என்பதற்காகவே அவருக்கு உடம்பு சரியில்லை என்று கேள்விபட்டால் கூட, எந்த ஊரில் இருந்தாலும், அவர் முன்னால் வந்து நின்றுவிடுவேன்.. சென்ற முறை ஊருக்கு செல்லும்பொழுது கூட "அடுத்த மாதம் வந்துவிடுகிறேன்" என்று சொல்லிவிட்டுதான் கிளம்பினேன்.. ஆனால் அதற்குள்ளாகவே அவர் பயணம் தீர்மானிக்கப்பட்டு விட்டது 


ஒவ்வொரு பிரிதலிலும் அவர் விழிகள் ஏக்கத்துடன்தான் இருக்கும்...சுறுசுறுப்பான எப்பொழுதும் பரபரப்பாய் உழைத்துக்கொண்டிருக்கும் அப்பாதான் என் நினைவில் எப்பொழுதுமே நிற்கின்றார்... அப்படிபட்டவரை அப்படி படுக்கையிலையே படுத்திருக்கும் நிலையை எதிர்கொள்ளவே எனக்கு தர்ம சங்கடமாய் இருக்கும்....
"அப்பா நான் கிளம்புறேன்பா" என்று அவர் விழி பார்த்து விடைபெறும்பொழுதெல்லாம் "அப்படியா கிளம்பிட்டியா?..இன்னும் கொஞ்சம் இருக்கமாட்டாயா?" என்ற ஏக்கம்தான் அவர் விழிகளில் தெரியும்..


"இன்னும் இரண்டு நாளில் சரியாகிவிடும்" என்றுதான் என்னிடம் கடைசியாக பேசினார்... அந்த இரண்டு நாட்களைத்தான் இன்னமும் தேடிக்கொண்டிருக்கின்றேன். :(


சைக்கிளில் சுற்றிய காற்று அவர்.. ஊரின் ஒவ்வொரு தெருக்களிலும் அவர் சைக்கிள் டயர் பதியாத அச்சுக்களே இருந்திருக்காது.


அவரது சைக்கிள் யாத்திரைதான் சொந்தமாய் ஒரு வீட்டை எழுப்பியது. தனது சைக்கிளின் சுழற்சியில்தான், எங்களது வறுமையை பஞ்சராக்கினார்..


"உன் சைக்கிள் சுழற்சி தான் 

எனக்கு பைக் வாங்கிக் கொடுத்தது...
நீ மிதித்த சுவடுகள் 
சைக்கிள் பெடலில் அல்ல !
என் இதயத்தில்தான் 
அதிகமாய் பதிந்திருக்கிறதப்பா!"

அவரது சைக்கிள் பயணித்த அம்பைரோடு - அவரது உடலை வைத்திருந்து வி.எஸ்.டி பள்ளி  - அவரை அடக்கம் செய்த ஹாமீம்பள்ளி தெரு கபர்ஸ்தான்.....இப்படி அவருடைய இறுதி பயணத்தில் அவரை சுமந்து செல்லுகின்ற பாதைகள் எல்லாமே அவருடைய ஞாபகத்தை மீட்டிக்கொண்டேயிருந்தது...


அவரை அடக்கம் செய்த கபர்ஸ்தான் வழியாக அப்பாவோடு சைக்கிளில் பெல் அடித்துக்கொண்டே, அப்பாவின் சைக்கிளின் பின்புறம் பயணித்துக்கொண்டே சிறுவயதில் எத்தனைமுறை பயணித்திருக்கின்றேன். 


அவரை கடைசியாய் மண்துகள்கள் மறைக்கும்முன் 

"கடைசியாக முகத்தை பார்க்கிறவர்கள் பார்த்துக்கொள்ளுங்கள்" என்று பக்கீர்ஷா சொன்னபொழுது நானும் பார்த்தேன்...ஆனால் எனக்கு அது கடைசியல்ல... உடலை மூடும் சக்தி மட்டுமே பக்கீர்ஷாக்களுக்கு உண்டு... நினைவுகளை அல்ல...

மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து மீண்டுவந்தபொழுது கூட அந்த பரபரப்பிலும் ஒரு மஞ்சப்பை எடுத்து வந்து தனது வைத்தியத்திற்கு ஆன செலவை வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்.... அவருக்கு அதில் ஒரு கர்வமான பெருமை தான் யாரையும் நம்பியில்லையென்று... கடைசி வரையிலும் எங்களுடைய கைகள் உயர்ந்ததேயில்லை...


சென்றமுறை ஊருக்குவந்தபொழுது கூட கொஞ்ச நேரம் பக்கத்தில் அமர்ந்து பேசலாம் என நினைத்தேன்..

"ப்ளீஸ் அப்பா நீங்க மட்டும் செத்து போகக்கூடாது என்னப்பா" என கெஞ்சும் தங்கமீன்கள் செல்லம்மாவைப்போலவே விளையாட்டுத்தனமாய் இருந்துவிட்டேன் என் அப்பாவுக்குமா மரணம் வந்துவிடப்போகிறதென்று...

பேச வேண்டியதை ப்ரியமானவர்களிடம் அப்பொழுதே பேசிவிடுங்கள்.. காலம் தாழ்த்தினால் மறுபடியும் அவர்களுடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் இல்லாமலேயே போய்விடக்கூடும்..."காலி மனைகளில் எல்லாம் 

வீட்டை நிரப்பினார். 
இப்பொழுது அவரில்லாமல் 
வீடு காலிமனையாகிவிட்டது.."

"கௌபத்துல்லா பாய் இருக்கார்ல அவர் தெருதான்"....

"கௌபத்துல்லா பாயோட பையனா....?" இப்படி கௌபத்துல்லா பாய் என்பதையே லேணட்மார்க்காக ஏற்படுத்தி வைத்திருந்தார்.... 

அப்படி அழைத்த ப்ரியமானவர்கள் எல்லாம் கடேசி நேரத்தில் "ஜனாஸாவை தூக்குங்க" என்று சொல்லிய தருணத்தில் நான் நின்றிருக்க கூடாதுதான்....


கடைசியில் கௌபத்துல்லா பாயும் ஜனாஸாவாகிவிட்டார்..... :(


"வீடு...நிலம் ...

பணம் ...சொந்தம்...
உலகக் காரணிகள்
எவையும் நம்மைப் 
பிரித்துவிடவில்லை
விதிவிலக்கானது மரணம்"

ரேசன் அட்டையில் இருந்து அப்பாவின் பெயர் நீக்கப்பட்டாலும் எப்பொழுதுமே என் பாஸ்போர்ட்டின் முதற் பெயராக அழைக்கப்பட்டு கொண்டே இருப்பார் ஒவ்வொரு விமான நிலையத்திலும்..


மரணத்திற்கு வாழ்க்கையை முடிக்கின்ற சக்தி இருக்கிறதே தவிர உறவுகளை அல்ல...


"கன்னிமாரா குளத்திற்கும் கிழக்கே

வி.எஸ்.டி பள்ளிவாசலுக்கும் வடக்கே
ஹாமீம் பள்ளி தெருவுக்கும் மேற்கே
அப்பா புதைக்கப்பட்டுள்ளார்...

என்னுடைய நினைவுகளின்

எல்லா திசைகளிலும்
அவர் விதைக்கப்பட்டுள்ளார்..."

அவர் தூங்கிக்கொண்டிருக்கும்பொழுதெல்லாம் அவரது அறைக்கு சென்று சிறிது நேரம் உற்று கவனித்து மூச்சு விட்டுக்கொண்டுதானிருகின்றாரா என்று உறுதிபடுத்திக்கொண்டுதான் வெளியில் செல்லுவேன்... 


இப்பொழுதும் அவர் இறந்து விட்டது நான் நடுநிசியில் கண்ட ஒரு கனவேயன்றி வேறில்லையென அவரது அறையில் இன்னமும் தூங்கிக்கொண்டிருக்கின்றார் என்றுதான் சமாதானப்பட்டுகொண்டிருக்கின்றேன்...


எனக்கு தெரியும்

எவர் வீட்டிலிருந்தும் கடுகு கிடைக்காது என்று!
இறுதிநாள் நம்பிக்கையில்தான்
இதயம் சமாதானப்படுகிறது..
 - ரசிகவ் ஞானியார்x

Monday, September 03, 2012

சென்னை


சின்னவயதில் எல்லாம் சென்னைக்குச் செல்வது பாரீன் செல்வதைப் போல இருக்கும். சென்னையில் இருந்து வருபவர்களை வித்தியாசமாய் பார்ப்போம்.

அவர்கள் நாகரீக உலகில் வாழ்ந்து வருகிறார்கள் நாம் இன்னமும் கிராமத்தில் தான் கிடக்கின்றோம் என்ற எண்ணம் ஏற்படும்.


அது மட்டுமல்ல சென்னையில் இருந்து வந்தவர்கள் நான் ரஜினியைப் பார்த்தேன் பா..சாதாரணமா ரொட்டுல நடந்து போவாரு நாங்க கண்டுக்க மாட்டோம்.. ஒரு நாள் விஜயகாந்தைப் பார்த்தேன்..நடு ரோட்டுவ ஷுட்டிங் நடக்குது.. அப்புறம் இந்த நடிகரை இங்க வச்சுப் பார்த்தேன்..என்று கதையளக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

அவர்கள் பொய் சொல்லுகிறார்கயோ இல்லையோ தெரியாமல் அதனை ரசித்து வாய் பிளந்து கேட்க ஆரம்பிப்போம்.

நான் முதன் முதலில் 8 வயது இருக்கும் பொழுது உறவினரின் திருமணத்திற்காக சென்னை சென்றேன். வெளியில் செல்லும்பொழுதெல்லாம் தலையை திருப்பிப் பார்த்துக்கொண்டே வருவேன் எங்கேனும் ஷுட்டிங் நடக்கிறதா ஏதாவது நடிகர்கள் தென்படுகிறார்களா என்று..ம்ஹும்.. அப்புறம் தான் தெரிந்தது அவர்கள் கதையளந்திருக்கிறார்கள் என்று..

கலங்கரை விளக்கம் சென்று விட்டு திரும்பும்பொழுது நான் காணாமல் போய்விட்டேன்.. அங்குமிங்கும் தேடினேன்..யாரையும் காணவில்லை..5 நிமிடமாவது அழுதிருப்பேன்.. அப்புறம் அம்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்..இதில் என்ன கூத்து என்றால் நான் காணாமல் போனதோ அழுததோ யாருக்குமே தெரியாது என்னைத் தவிர..
-----------------------------------------------------
சென்னைக்கு ஒரு தடவை பிஎஸ்ஸி முடிந்த பிறகு துபாய் வேலைக்கான இன்டர்வியு எங்கள் கல்லூரியிலிருந்து எங்கள் வகுப்பில் இருந்து 5 பேர் அனுப்பப்பட்டோம்.
இன்டர்வியுக்கு ஒருநாள் முந்திதான் எங்களுக்கு தகவல் வந்ததால் 5 பேர் கொண்ட குழவாக அன்று மாலையே கிளம்பினோம அவசர அவசரமாய் கிளம்பினோம். கிடைத்த பேருந்தில் ஏறிக்கொண்டோம்.


நானும் காஜாவும் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டோம். அப்பொழுது ஒருவர் வந்து ஹலோ வழியில யாராவது செக்கிங் கேட்டாங்கன்னா நாங்க எல்லாம் உறவினர்கள் ஒரு கல்யாணத்திற்கு போகிறோம் என்று சொல்லுங்கள் என்று பயமுறுத்தினான்..

அவன் அவ்வாறு சொன்ன பிறகுதான் தெரிந்தது அந்தப் பேருந்து பயணிகளை ஏற்றுவதற்கு அனுமதி பெறாத பேருந்து என்று..

நாங்களும் அந்த நபரைப் பார்த்து மாமா மச்சான் என்று அழைக்க ஆரம்பித்தோம். ஆமா நீங்க தானே உறவவினர்கள்னு சொன்னீங்க..அதுக்குத்hhன் இப்படி அழைக்கின்றோம்..என்று கூற பேருந்தே கலகலப்பானது.

சரி நம்ம நேரம் என்று பயணத்தைத் தொடர்ந்தோம். எங்களுக்கு எதிர் இருக்கையில் உள்ள ஒரு நபர் தனது காலடியில் சூட்கேஸை வைத்துக் கொண்டு அதனை பாதுகாக்க படாத பாடு பட்டார்.

நானும் காஜாவும் கவனித்து விட்டோம். சும்மா சீண்டிப்பார்க்கலாம் என்று முடிவெடுத்து நான் காஜாவிடம்

காஜா அங்கே பார் ..நாம ரெண்டு பேரும் அந்த சூட்கேஸையே  உற்றுப்பார்ப்போம்.. என்ன?

உடனே விளையாட்டை ஆரம்பித்தோம். நானும் காஜாவும் அவரது சூட்கேஸை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தோம். விழிகளை எங்கேயும் அசைக்கவில்லை.. அவர் ஒரு சமயத்தில் எங்களை கவனித்து விட்டார்

என்னடா நம்ம சூட்கேஸையே பார்க்குறானுங்க ..திருடங்களா இருக்குமோ என்று சந்தேகப்பட்டு அந்த சூட்கேஸை காலடியில் மேலும் திணிக்க ஆரம்பித்தார்..

நாங்கள் விடவில்லை..அவர் ஒரு கட்டத்தில் எரிச்சலடைந்து ஒரு செயினை எடுத்து ( நாய் கழுத்தில் கட்டுவது போல உள்ள செயின்) சூட்கேஸை இருக்க கட்டி காலடியில் வைத்துக்கொண்டார்.

எங்களுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை..அந்த நேரத்தில் அவருடைய முகத்தில் தெரிந்த பயத்தை இன்னமும் மறக்க முடியாது.

இப்படி கேலியும் கிண்டலுமாக காலை 12 மணிக்குத்தான் சென்னை வந்தடைந்தது அந்தப் பேருந்து.. ஆனால் இன்டர்வியு 10 மணிக்கு இனிமேல் குளித்து உடைமாற்றி போவது புத்திசாலித்தனமல்ல என்று நினைத்து நண்பர் வீட்டில் தங்கிக்கொண்டு மறுநாள் செல்ல முடிவெடுத்தோம்.

மறுநாள் அந்த அலுவலகத்திற்கு சென்றால் வாட்ச்மேன் உள்ளையே விடமாட்டேன்கிறான்..
என்னைக்கு இன்டர்வியு

நேற்று 10 மணிக்கு

எங்களை எரிச்சல் கலந்த புன்னகையில் பார்த்து கூறினான்..அட நேத்து இன்டர்வியுக்கு இன்னைக்கு வந்திருக்கீங்களா..?

எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி இன்டர்வியுவில் கலந்து கொண்டு வந்துவிட்டோம்..  இன்னமும் அந்த சென்னை நிகழ்வுகளை மறக்க முடியாது.
அப்புறம்  ப்ராஜக்ட் வேலை இன்டர்வியு என்று சென்னைக்கு அடிக்கடி பயணம் செய்ய வேண்டியதாயிற்று. இப்பொழுதும் தொடர்கின்றது. நடிகர்களைப் பார்த்ததாக கதையளந்தவர்களை இன்று கைகளில் கிடைத்தால் நான் அவர்களிடம் கதையளப்பேன் அந்த அளவிற்கு சென்னை அனுபவங்கள் அதிகம். 

-  ரசிகவ் ஞானியார்

தேன் கூடு