Monday, September 03, 2012

சென்னை


சின்னவயதில் எல்லாம் சென்னைக்குச் செல்வது பாரீன் செல்வதைப் போல இருக்கும். சென்னையில் இருந்து வருபவர்களை வித்தியாசமாய் பார்ப்போம்.

அவர்கள் நாகரீக உலகில் வாழ்ந்து வருகிறார்கள் நாம் இன்னமும் கிராமத்தில் தான் கிடக்கின்றோம் என்ற எண்ணம் ஏற்படும்.


அது மட்டுமல்ல சென்னையில் இருந்து வந்தவர்கள் நான் ரஜினியைப் பார்த்தேன் பா..சாதாரணமா ரொட்டுல நடந்து போவாரு நாங்க கண்டுக்க மாட்டோம்.. ஒரு நாள் விஜயகாந்தைப் பார்த்தேன்..நடு ரோட்டுவ ஷுட்டிங் நடக்குது.. அப்புறம் இந்த நடிகரை இங்க வச்சுப் பார்த்தேன்..என்று கதையளக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

அவர்கள் பொய் சொல்லுகிறார்கயோ இல்லையோ தெரியாமல் அதனை ரசித்து வாய் பிளந்து கேட்க ஆரம்பிப்போம்.

நான் முதன் முதலில் 8 வயது இருக்கும் பொழுது உறவினரின் திருமணத்திற்காக சென்னை சென்றேன். வெளியில் செல்லும்பொழுதெல்லாம் தலையை திருப்பிப் பார்த்துக்கொண்டே வருவேன் எங்கேனும் ஷுட்டிங் நடக்கிறதா ஏதாவது நடிகர்கள் தென்படுகிறார்களா என்று..ம்ஹும்.. அப்புறம் தான் தெரிந்தது அவர்கள் கதையளந்திருக்கிறார்கள் என்று..

கலங்கரை விளக்கம் சென்று விட்டு திரும்பும்பொழுது நான் காணாமல் போய்விட்டேன்.. அங்குமிங்கும் தேடினேன்..யாரையும் காணவில்லை..5 நிமிடமாவது அழுதிருப்பேன்.. அப்புறம் அம்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்..இதில் என்ன கூத்து என்றால் நான் காணாமல் போனதோ அழுததோ யாருக்குமே தெரியாது என்னைத் தவிர..
-----------------------------------------------------
சென்னைக்கு ஒரு தடவை பிஎஸ்ஸி முடிந்த பிறகு துபாய் வேலைக்கான இன்டர்வியு எங்கள் கல்லூரியிலிருந்து எங்கள் வகுப்பில் இருந்து 5 பேர் அனுப்பப்பட்டோம்.
இன்டர்வியுக்கு ஒருநாள் முந்திதான் எங்களுக்கு தகவல் வந்ததால் 5 பேர் கொண்ட குழவாக அன்று மாலையே கிளம்பினோம அவசர அவசரமாய் கிளம்பினோம். கிடைத்த பேருந்தில் ஏறிக்கொண்டோம்.


நானும் காஜாவும் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டோம். அப்பொழுது ஒருவர் வந்து ஹலோ வழியில யாராவது செக்கிங் கேட்டாங்கன்னா நாங்க எல்லாம் உறவினர்கள் ஒரு கல்யாணத்திற்கு போகிறோம் என்று சொல்லுங்கள் என்று பயமுறுத்தினான்..

அவன் அவ்வாறு சொன்ன பிறகுதான் தெரிந்தது அந்தப் பேருந்து பயணிகளை ஏற்றுவதற்கு அனுமதி பெறாத பேருந்து என்று..

நாங்களும் அந்த நபரைப் பார்த்து மாமா மச்சான் என்று அழைக்க ஆரம்பித்தோம். ஆமா நீங்க தானே உறவவினர்கள்னு சொன்னீங்க..அதுக்குத்hhன் இப்படி அழைக்கின்றோம்..என்று கூற பேருந்தே கலகலப்பானது.

சரி நம்ம நேரம் என்று பயணத்தைத் தொடர்ந்தோம். எங்களுக்கு எதிர் இருக்கையில் உள்ள ஒரு நபர் தனது காலடியில் சூட்கேஸை வைத்துக் கொண்டு அதனை பாதுகாக்க படாத பாடு பட்டார்.

நானும் காஜாவும் கவனித்து விட்டோம். சும்மா சீண்டிப்பார்க்கலாம் என்று முடிவெடுத்து நான் காஜாவிடம்

காஜா அங்கே பார் ..நாம ரெண்டு பேரும் அந்த சூட்கேஸையே  உற்றுப்பார்ப்போம்.. என்ன?

உடனே விளையாட்டை ஆரம்பித்தோம். நானும் காஜாவும் அவரது சூட்கேஸை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தோம். விழிகளை எங்கேயும் அசைக்கவில்லை.. அவர் ஒரு சமயத்தில் எங்களை கவனித்து விட்டார்

என்னடா நம்ம சூட்கேஸையே பார்க்குறானுங்க ..திருடங்களா இருக்குமோ என்று சந்தேகப்பட்டு அந்த சூட்கேஸை காலடியில் மேலும் திணிக்க ஆரம்பித்தார்..

நாங்கள் விடவில்லை..அவர் ஒரு கட்டத்தில் எரிச்சலடைந்து ஒரு செயினை எடுத்து ( நாய் கழுத்தில் கட்டுவது போல உள்ள செயின்) சூட்கேஸை இருக்க கட்டி காலடியில் வைத்துக்கொண்டார்.

எங்களுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை..அந்த நேரத்தில் அவருடைய முகத்தில் தெரிந்த பயத்தை இன்னமும் மறக்க முடியாது.

இப்படி கேலியும் கிண்டலுமாக காலை 12 மணிக்குத்தான் சென்னை வந்தடைந்தது அந்தப் பேருந்து.. ஆனால் இன்டர்வியு 10 மணிக்கு இனிமேல் குளித்து உடைமாற்றி போவது புத்திசாலித்தனமல்ல என்று நினைத்து நண்பர் வீட்டில் தங்கிக்கொண்டு மறுநாள் செல்ல முடிவெடுத்தோம்.

மறுநாள் அந்த அலுவலகத்திற்கு சென்றால் வாட்ச்மேன் உள்ளையே விடமாட்டேன்கிறான்..
என்னைக்கு இன்டர்வியு

நேற்று 10 மணிக்கு

எங்களை எரிச்சல் கலந்த புன்னகையில் பார்த்து கூறினான்..அட நேத்து இன்டர்வியுக்கு இன்னைக்கு வந்திருக்கீங்களா..?

எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி இன்டர்வியுவில் கலந்து கொண்டு வந்துவிட்டோம்..  இன்னமும் அந்த சென்னை நிகழ்வுகளை மறக்க முடியாது.
அப்புறம்  ப்ராஜக்ட் வேலை இன்டர்வியு என்று சென்னைக்கு அடிக்கடி பயணம் செய்ய வேண்டியதாயிற்று. இப்பொழுதும் தொடர்கின்றது. நடிகர்களைப் பார்த்ததாக கதையளந்தவர்களை இன்று கைகளில் கிடைத்தால் நான் அவர்களிடம் கதையளப்பேன் அந்த அளவிற்கு சென்னை அனுபவங்கள் அதிகம். 

-  ரசிகவ் ஞானியார்

Sunday, August 26, 2012

காவல்துறையின் அலட்சியமும் அதிகாரத்தின் மிரட்டலும்


சுமார் இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது பதிவு எழுதி. வேலைப்பளு சோம்பேறித்தனம் எல்லாம் சேர்ந்து ப்ளாக்கையே Black-ஆக்கி விட்டது.... இனி கொஞ்சம் கொஞ்சமாய் எழுத ஆரம்பிக்கலாம் என்கிற முயற்சிதான் இந்தப் பதிவு....


ஆகஸ்ட் 20-2012, மாலை 8  மணி, தச்சநல்லூர் அருகே கரையிருப்பு பகுதியில் நின்று கொண்டிருந்தது  அந்தப்பேருந்து .

திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு கிளம்பிய அரை மணி நேரத்துக்குள்ளாகவே  நின்று போன அதிர்வில் பேருந்திலிருந்து முழித்துக்கொண்ட பயணிகள் கொஞ்சம் கொஞ்சமாய் இறங்க ஆரம்பித்தனர்.

"என்னடா வண்டிய அதுக்குள்ள சாப்பிட போட்டுடானுங்களான்னு " எட்டிப்பார்த்தா,

 அட ஙொக்கா .மக்கா....யாரோ பேருந்துக்கு அடியிலிருந்து சில வொயர்களை இழுத்துக் கொண்டிருந்தனர்..... சரி  ரிப்பேர் சரி பண்ணிடுவாங்கன்னு  வெயிட் பண்ணினோம்....

நேரம் ஆக ஆக பேருந்து அடியிலிருந்து அதிகமான வொயர்கள் வெளி வர ஆரம்பித்தன... அப்படியே சரி பண்ணினாலும் இது உருப்படியா போய் சேருமான்னு டவுட் வர ஆரம்பிச்சுது....

"சார் என்ன ஆச்சு ? எப்போ கிளம்பும்.... ?"
"தெரியல சார்.... "
"  தெரியலையா...?சார் எப்போ கிளம்புன்னாவது சொல்லுங்க...." அவரிடமிருந்து சரியான பதில் இல்லை....அப்பொழுதுதான் பஸ்ஸின் நம்பர் பிளேட்டை கவனித்தேன்.... சில அழிக்கப்பட்டு அதற்கு மேல் ஸ்டிக்கர் .......

சக பயணி ஒருவர் டிரைவரிடம்," சார் ஓனர் நம்பர் கொடுங்க" என்று கேட்டு கால் செய்தார்....

"சார் உங்க வண்டி பாதியில நின்னுடுச்சு....எப்போ சரியாகுன்னு டிரைவருக்கும் தெரியல..எங்களுக்கு ஏதாவது மாத்து ஏற்பாடு பண்ணுங்க சார்...பெண்கள் குழந்தைகள் எல்லாம் இருக்காங்க.."

"இல்லை சார்..வேற வண்டில்லாம் இல்ல அந்த வண்டி சரியானபிறகு அதிலையே நீங்க கிளம்புங்க..."

"சார் சார் லேட்டாச்சு சார்...காலையில வேலைக்கு போகணும்....பணத்தையாவத திருப்பி கொடுங்க..."

"ஏய் நீ யார் பேசுற...நான் யார் தெரியுமா...நான் எம்எல்ஏவாக்கும்... "    என்று தன் சுயபுராணம் பாட ஆரம்பித்துவிட்டார்... எந்த ஜென்மத்துல எம்எல்ஏவா இருந்தாரோ தெரியவில்லை....

பேசிய சக பயணி டென்ஷனாகிவிட்டார்..... அவர் ஏதோ மீடியா துறையில் இருப்பதால்....பக்கத்து போலிஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து நிலைமைய விளக்க அவர்கள் வந்து விட்டார்கள். இரண்டு மூன்று ஜீப்கள் சர் சர்ரென்று வந்து நின்று விட்டது....

பயணிகள் நிலைமையை புரிந்து கொண்ட இன்ஸ்பெக்டரும் நிலைமையை புரிந்து கொண்டு டிரைவரிடம்," பணத்தை திருப்பி கொடுங்க இல்லைனா வண்டிய ஸ்டேஷனுக்கு வண்டிய கிளப்பு" என்று அதட்டிக்கொண்டிருந்தார்...

பின் நாங்கள் , "சார் மொதல்ல நாங்க கம்ப்ளைண்ட் தர்றோம் சார் வாங்கிக்கோங்க"  என்க,
அவரோ "இல்லை இல்லை வண்டி எங்கிருந்து கிளம்புச்சோ அங்குள்ள ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் கொடுங்க" என்றார்

சரி இப்ப வண்டி திருவனந்தபுரத்திலிருந்து கிளம்புச்சுன்னு வைங்க..நாங்க திருநெல்வேலியிலிருந்து திருவனந்தபுரம் போக முடியுமா என்ன..? என்னா லாஜிக்பா..?

நாங்களும் அவர் சொல்வதும் சரிதான் என்று திருநெல்வேலி போலிஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து நிலைமையை விளக்க அவர்களோ , "சம்பவம் எந்த இடத்தில நடந்துச்சோ அங்கே கம்ப்ளைண்ட் கொடுங்க" என்றார்...

அட! என்னப்பா ஒரு கம்ப்ளைண்ட் எடுக்குறதுல அப்படியென்ன இவங்களுக்கு கஷ்டம் வந்து விடப்போகிறது.... ? யார் வேண்டுமானாலும் கம்ப்ளைண்ட் எந்த இடத்தில் வேண்டுமானாலும் எடுக்கலாம் அதனை டேட்டாபேஸில் பதிவு செய்து அது எந்த பகுதியோ அந்தப் பகுதிக்கு ஆட் டோமெடிக்காக டிரான்ஸ்பர் செய்ய முடியாதா என்ன..?
எவ்வளவோ பண்றோம் இதைப் பண்ணமாட்டோமா என்ன? சாப்ட்வேர் திமிர் கொஞ்சம் எட்டிப்பார்த்தது

ஒருவருக்கொருவர் அலட்சியப் படுத்தவே, பயணிகள் பொறுக்க முடியாமல் ஆத்திரத்தில் கிளம்பி விட்டார்கள்...

சிலர் மட்டும் எங்களுக்குள் முடிவு செய்து தச்சநல்லூர் போலிஸ் ஸ்டேஷன் சென்றோம்... அவர்களோ இன்னமும் விடாப்பிடியாய் இருந்தார்கள்.. மறுபடியும் ஆரம்பித்து விட்டார்கள் "வண்டி எங்கிருந்து கிளம்பியதோ அங்குதான் கம்ப்ளைண்ட்.."

இது என்னடா கோழியிலிருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா என்கிற குழப்பதை;தை விடவும் சிக்கலான பிரச்சனையாக இருக்கின்றதே என்று காத்திருந்தோம் காத்திருந்தோம்...

26 பயணிகள் 15 ஆக குறைந்து போனார்கள்....நேரம் இரவு 11 மணி ஆனது.... அவர்கள் கம்ப்ளைண்ட் வாங்குவதாய் இல்லை... பின் மீடியாத்துறையை சார்ந்த அந்தப்பயணி மட்டும் தன்னை வண்டியின் ஓனர் கொலை மிரட்டல் விட்டதாக தனிப்பட்ட கம்பளைண்ட் ஒன்றினை எழுத ஆரம்பித்தார்...

இதற்குள் வண்டியின் ஓனர் போன் செய்திருப்பார் என்று நினைக்கின்றேன் அந்த போலிஸ் ஸ்டேஷனுக்கு...

அந்த இன்ஸ்பெக்டர் மறுபடியும் வந்து  "அதுதான் ஆன்லைன்ல பணம் இரண்டு நாள்ல வாபஸ் வந்துறுன்னு சொல்றாங்கள்ல..பின்ன என்ன பிரச்சனை? "

அங்க ஆஃப்லைன்ல ஏதோ நடந்திருக்கும் போல. ( ஆனால் இன்று வரை பணம் வந்து சேரவில்லை)  "கம்ப்ளைண்ட் எதுவும் வாங்க முடியாது" என்று பிடிவாதமாய் இருந்தார்.

பயணிகள் 15 லிருந்து 6 ஆக குறைந்தது. எம் எல் ஏ பயமும் காவல்துறையின் அலட்சியமும் அவர்களை கொதிப்படையச் செய்ய புலம்பிக்கொண்டே சென்று விட்டார்கள்.

இந்தச் சம்பவத்திற்கு யார் பொறுப்பு..?

காவல்துறை புகார்களை வாங்கவில்லையென்றால் யாரிடம் செல்வது..?

ஆன்லைனில் எல்லா பரிவர்த்தனைகளும் நடைபெற்றதால் SMS Message தவிர வேறு சாட்சிகள் இல்லை. அந்தச் சாட்சி போதுமானதா..?




-    ரசிகவ் ஞானியார்

தேன் கூடு