நான் அன்றிரவு எனது ஊரான சந்தன் நகர் போக தீர்மானித்து விட்டேன்.
ஹெளரா இரயில் நிலையம் சென்று 10.30 இரயிலைப் பிடிக்கலாம் என முடிவு செய்தேன். ஆனால் எப்படி செல்வது? கல்கத்தா தெருக்களை மறந்து விட்டேன். சுற்றியலைந்து நான் ஹெளரா ஸ்டேசன் சென்றபொழுது ரயில் போய்விட்டது.
என்ன செய்ய? சியாம் பஜாரில் எனது மாமனார் வீடு இருப்பது ஞாபகம் வந்தது. அங்கு சென்று இரவைக் கழிக்க தீர்மானித்தேன். நான் அங்கு போய் கதவை தட்டியபொழுது மணி 12 ஆகியிருக்கும். வாயிற்கதவை இரண்டு மூன்று முறை தட்டியபிறகும் பலனில்லை. பின் கல்கத்தா தெருக்களில் அலைஞ்சு திரிஞ்சு இராத்திரியை கழிச்சுடலாம் என நினைத்தேன்.
அப்படியே நடந்து கொண்டிருந்தேன். எனக்குள் ஒரு மகிழ்ச்சி 12 வருடங்களுக்குப் பிறகு ரஸ்தா தெருக்களில் சுதந்திரமாக நடக்கின்றேன். பக்கத்தில் ஜெயிலர் இல்லை ஆபிஸர் இல்லை சிறை அதிகாரி இல்லை. கடந்த கால பந்தம் அறுந்து விட்டது. புதிய பந்தம் இன்னமும் ஏற்படவில்லை. இன்று உலகத்தில் உண்மையிலையே நான் தனியாக விடப்பட்டிருக்கின்றேன். ஆனால் இந்தத் தனிமையில் வேதனையின் கருமை படிந்திருக்கவில்லை. மனதுள் மகிச்சிதான் பூரித்துப் பொங்குகிறது.
சியாம் பஜாரிலிருந்து சர்க்குலர் சாலை வழியாக சியால்தா ஸ்டேஷன் பக்கம் போனேன். பணிரெண்டு ஆண்டுகள் செருப்பு போடவில்லை. ஆகவே புதுச்செருப்பு காலைக் கடித்தது.
செருப்பை கழட்டி கக்கத்தில் வைத்துக்கொண்டு நடந்தேன்.
எனது கக்கத்தில் உள்ள பொட்டலம் கண்டு ஒரு பாராக்காரன் நான் எங்கிருந்து வருகிறேன் எங்கே போகிறேன் என விசாரித்தான் நான் அந்தாமானிலிருந்து வந்திருக்கும் மாஜி கைதி என்று சொல்லிவிடலாமா என்று யோசித்தேன். நான் எவ்வளவு உண்மையானவன் என்று இப்படி காட்டிக்கொள்ளவேண்டாமே? ஏற்கனவே ஒரு தடவை உண்மை பேசியதற்குத்தான் 12 ஆண்டுகள் அனுபவித்தேன்.
அவனிடம் பொய் சொன்னேன். நான் காளிகாட்டிலிருந்து வருகின்றேன். சியால்தா போய்க்கிட்டு இருக்கேன்.
பாராக்காரன் என் கக்கத்து பொட்டலத்தை பார்த்துவிட்டு கேட்டான் நீ ஒரியாக்காரனா என்று
நான் மிகவும் கஷ்டப்பட்டு சிரிப்பை வரவழைத்துக் கொண்டு ஆம் என்றேன்.
பிறகு அவனது அனுமதி பெற்று அவனுக்கு சலாம் போட்டுவிட்டுமறுபடி நடந்தேன். இரவு 1 மணிக்கு ரயிலைப் பிடித்த நான் சியாம் நகர் ஸ்டேஷனை அடைந்தபொழுது மணி இரண்டாகிவிட்டது.
பின் படகில் அந்த அதிகாலையில் கங்கையைக் கடந்து எங்கள் ஊர் கரைக்கு வந்தபொழுது மணி சுமார் 3. தெருக்கள் ஆள் அரவமற்று சூன்யமாகி இருந்தன.
தெருமுனைகளில் மண்ணெண்ணெய் விளக்குகள் மங்கலாக எரிந்து கொண்டிருந்தன. என் வீட்டு வாசலுக்கு வந்து பார்த்தால் வீட்டின் தோற்றம் முற்றிலுமாக மாறப்பட்டிருந்தது.
ஜன்னல் கதவுகளைத் தட்டி தம்பிகளின் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டேன். ஜன்னல் கதவு திறந்தது. எனக்கு மிகவும் பரிச்சயமான பெண் குரல் நீ யாரு?
கூடவே இன்னொரு ஜன்னல் கதவும் திறக்கப்பட்டு என் தாயும் இதே கேள்வியைக் கேட்டாள்.
எவன் திரும்பி வருவானென்ற நம்பிக்கையை எல்லோரும் இழந்துவிட்டார்களோ அவன் திரும்பி வந்துவிட்டானென்பதை நம்பத் துணிவு வரவில்லை அவர்களுக்கு .
பின் அடையாளம் காணப்பட்டு வீட்டுக்குள் நுழைந்தேன். வீட்டுக்குள் ஒரே கலகலப்பு. குழந்தைகளின் கூட்டம் கண்களைக் கசக்கிக் கொண்டு என்னைச் சூழ்ந்து கொண்டது. இவர்கள் யார்? இவர்கள் எவரையும் எனக்குத் தெரியாதே?
ஒரு சிறுபையன் தூரத்தில் நின்றவாறு ஆ என்று வாயைப்பிளந்து என்னை பார்த்துக்கொண்டிருந்தான். என் தம்பிப் அந்தப் பையனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தான்.
"இவன் உங்க பிள்ளை "
நான் அப்படியே அதிர்ச்சியடைந்தேன். நான் வீட்டை விட்டு வெளியேறியபோது அவனுக்கு வயது ஒன்றரை இப்பொழுது அவனுக்கு பதிமூன்று
மறுபடியும் புதிதாய் தோன்றும் பழைய உறவுகள் மகிழ்ச்சி என்று குடும்ப வாழ்க்கைக்குள் சாதாரண மனிதனாய் நுழைந்து விட்டேன்.
படகோட்டியே இந்த தடவை எந்தக் கரையில் கொண்டு சேர்க்கப்போகின்றாய்?
நிறைவுரை
மீண்டும் குடும்ப வாழ்க்கைக்கு திரும்பிய உபேந்திரநாத் பாரீனுடன் இணைந்து மிகப்பிரபலமான வாரப்பத்திரிக்கையான ஆத்ம சக்தியை வெளியிடத்தொடங்கினார்.
சிறிது காலத்திற்குப்பிறகு ஆத்மசக்தி நின்று விட்டது
பின் பார்வேர்டு லிபர்டி அம்ருதபஜார் பதிரிகா தைனிக் பசுமதி முதலிய பத்திரிக்கைகளில் வௌ;வேறு சமயங்களில் நிருபராக பணியாற்றி தம் இறுதிக்காலம் வரையிலும் பத்திரிக்கை துறையிலேயே இருந்து 1950 ம் ஆண்டு ஏப்பரில் மாதம் உயிர் நீத்தார்.
அடிமைத்தனத்திலிருந்து நாம் இப்பொழுது மீண்டு சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதற்கு காரணம் இதுபோன்ற போராட்ட வீரர்களால்தான் இதுபோல எத்தனையோ பேர் தமது வாழ்க்கையை இழந்து உறவுகளை இழந்து கஷ்டப்பட்டிருக்கின்றார்கள்.
சிலரின் வரலாறுகள் குறிப்புகள் அரசு ஆவணங்கள் மூலம் தெரிய வருகின்றது. ஆனால் உலகிற்கு தெரியாமலையே எத்தனையோ பேர் நமக்காக சிந்திய இரத்தத்தை நாம் மறந்து விடக் கூடாது.
- ரசிகவ் ஞானியார்
No comments:
Post a Comment