Thursday, March 01, 2007

ஒரு நாடு கடத்தப்பட்டவனின்தன் வரலாறு ( தொடர் 5)

அந்த நேரத்தில் பாரீனிடமிருந்து கடிதம் வந்தது. உடனே திரும்புங்கள் என்று.

திரும்பி வந்து பார்த்தால் தோட்டம் பரபரப்பாக இருந்தது. புதிய இளைஞர்கள் பலர் சேர்ந்திருந்தார்கள்.

அதில் உல்லாஸ்கர் என்ற இளைஞன், ரஸ்ஸல் என்ற துரை, வங்காளி இளைஞர்களைத் தரக்குறைவாக பேசிவிட்டான் என்று கக்கத்தில் செருப்பை மறைத்து வைத்துக் கொண்டு ரஸ்ஸலை செருப்பால் அறைந்துவிட்டு கல்லூரியை விட்டு நின்று விட்டான்.

பின் பம்பாய் பொறியியல் கல்லூரியில் படித்துகொண்டிருந்தவன் நாட்டின் சுதந்திர வேட்கை சூடுபிடித்துக் கொண்டதால் இந்த தோட்டம் வந்து சேர்ந்தான்

அப்போது கிங்ஸ்போர்டு என்ற துரை, சுதேசி பத்திரிக்கைகாரர்கள் ஒவ்வொருவராக கைது செய்து சிறையில் அடைத்துக்கொண்டிருந்தான். யாரிடம் போனாலும் அவர்கள் சொல்லுவார்கள் : சீ இதை இனிமேல் அனுமதிக்க கூடாது. சில பேரோட தலைiயாவது சுட்டுத்தள்ளவேண்டியதுதான் என்று .


சரி அப்படியே ஆகட்டும் கலந்தாலோசித்து முடிவு செய்தோம். யாரை தீர்த்துக்கட்டலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கையில், இருக்கிற துரைகளிலேயே கொஞ்சம் பெரிய தலை வைசிராய் ஆண்ட்ரு பிரேஸர்தான். ஆகவே இதை முதலில் சுட்டுத்தள்ளவேண்டும் என முடிவு செய்யப்பட்டது.


வைசிராய் வருகின்ற வண்டியின் அடியில் டைனமைட் வைப்பதற்காக ஒரு டைனமைட்டை சோதித்து பார்க்க விரும்பினோம். ஆனால் அது புஸ்வாணமாகப் போனது.

இன்னொரு சந்தர்ப்பத்தில் அதற்குண்டான வழிமுறைகள் செய்து குண்டுகளை மண்ணில் புதைத்துவிட்டு இரயில் வருவதற்காக காத்திருந்தோம். ஆனால் வைசிராயின் நல்லநேரம் குண்டு நிபுணருக்கு காய்ச்சல் வந்துவிட்டது. மற்றவர்களோ இந்த அறிவில் பூஜ்யம் . ஆகவே குண்டுகள் இயக்கத்தெரியாமல் இயக்கி லேசாக வெடித்து தண்டவாளத்தில் சிறு சேதம் அவ்வளவுதான்.

பின் இரயிலுடைப்பு படலத்திற்காக யாரையோ பிடித்து அவர்களுக்கு 10 ஆண்டுகள் நாடு கடத்த உத்தரவிட்டார்கள்.


அந்த நேரத்தில் தோட்டத்தில் போலிஸ் கண்காணிப்பு அதிகமாகி விட்டதால் அதிக இளைஞர்கள் இங்கு இருப்பது ஆபத்து என்று நானும், உல்லாஸ் மற்றும் 4 இளைஞர்கள் நாட்டை சுற்றிப்பார்க்கலாமென்று கல்கத்தாவிலிருந்து கயா வழியாக பாங்க்கிபூர் சென்றோம். அங்கே உதாஸி மதப்பிரிசை; சார்ந்த ஒரு துறவியோடு இணைந்து கொண்டோம்.


இவர்கள் தலையில் நீண்ட சடை சாம்பல் பூசிய உடம்பு இடுப்பில் ஒரு கம்பளித்துண்டு. கஞ்சாக்குழல் ஒருவர் மாற்றி ஒருவர் கையில் இருந்துகொண்டேயிருக்கும். இந்தக்குழவின் தலைவர் 108 முறை கஞ்சா இழுத்தபின்தான் இவர்களது வாயிலிருந்து பேச்சு வருமாம். :)


இந்த துறவிகளுக்கிடையே இரண்டு சிறுவர்களை பார்த்தேன். ஒருவருக்கு பத்து பன்னிரெண்டு வயது இருக்கும். இன்னொருவனுக்கு பதினைந்து பதினாறு வயது இருக்கும்.

இந்த சின்ன வயதில் உலக வாழ்க்கை என்பது கானல் நீர்தான் என்று இவர்கள் புரிந்து கொண்டார்களா என்ற ஆச்சர்யத்தில் அவர்களிடம் கேட்டேன். பிறகு தெரிந்து கொண்டேன் அவர்கள ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாம். துறவியாகிவிட்டால் வயிறு நிறைய சாப்பாடு கிடைக்கும் என்று இவர்களுடைய பெற்றோர் துறவியாக்கிவிட்டார்களாம்.


நெய் சொட்டும் பஞ்சாபி சப்பாத்தியும், பரும்பும் சாப்பிட்டு சாப்பிட்டு எனது உடலில் மெருகு ஏறிவிட்டது. மாணிக்தாலா தோட்டம் சென்று புரட்சி செய்வதை விடவும் இங்கேயே இருந்து விடலாமா என்று கூடத் தோன்றியது.


ஆனால் மோசமான தலையெழுத்தோடு பிறந்தவனுக்கு இவ்வளவு சுகம் பொறுக்குமா?


தோட்டத்துக்கே திரும்பி வந்துவிட்டோம்.
நாங்கள் அங்கே சென்ற பொழுது பாரீன் இல்லை. அவன் சூரத் காங்கிரஸ் மாநாட்டிற்கு சென்றுவிட்டான். முpதவாத தீவிரவாத அதி தீவிரவாத எல்லாத் தலைவர்களும் சூரத்தில் கூடியிருந்தனர் பாரீன் அவர்களோடு உரையாடினான்.

திரும்பி வந்த வேகத்தில் சொன்னான்:
" திருடங்க , திருட்டுப்பசங்க "

நாங்கள் எல்லாரும் கேட்டோம் "ஏன் ஏன் ?"


பாரீன் சொன்னான் :

"அந்தக் கூட்டாளிங்க இவ்வளவு நாளா ஜம்பமா சொல்லிக்கிட்டிருந்தாங்க. -நாங்க எல்லாரும் தயார் வங்காளத்திற்காக காத்திட்டிருக்கோம்னு-

அங்கே போய் பார்க்குறேன் எல்லாம் வெறுஞ்சவுடால் ஒரு இடத்திலேயும் ஒண்ணும் இல்லை.

தலைவர்கள் சும்மா நாற்காலியிலே உக்காந்துட்டு நாட்டாமை பண்றாங்க. ஒண்ணு ரெண்டு பசங்க உருப்படியா ஏதாவது முயற்சி செய்யறாங்க அதுவும் தலைவர்களுக்குத் தெரியாமே.. தடியன்களை நல்லா திட்டிட்டு வந்துட்டேன் "

பரவாயில்லை அவங்க நம்ம வழிக்கு வந்தால் நல்லது. இல்லாட்டி நாம தனியாவே முன்னேறுவோம். நாம அஞ்சே வருசத்துல வங்காளத்துல கொரில்லாப்போர் தொடங்கிடுவோம் இன்னிலிருந்து தொண்டர்களைச் சேர்க்கத் தொடங்கிடுங்க ..

(தொடரும்)
- ரசிகவ் ஞானியார்

No comments:

தேன் கூடு