கல்லூரியைப்பற்றி எழுதி நாளாகி விட்டதால் இன்று ஞாபகத்தை கல்லூரி வளாகத்திற்குள் கொண்டுபோகின்றேன்
எல்லா கல்லூரிகளிலும் கலை விழாக்களுக்கென்றே ஒரு கோஷ்டிகள் இருக்கும்.
அவர்களில் நடனம் ஆடுபவர்கள் - மிமிக்ரி செய்பவர்கள் - நாடகம் இயற்றி நடிக்க வைக்கும் மினி இயக்குனர்கள் - பாடல் பாடுபவர்கள் - பேச்சாளர்கள் -கவிதை எழுதுபவர்கள் என்று தனிப்பட்ட குழு இருக்கும்
எங்கள் கல்லூரியிலும் அப்படிப்பட்ட குழு இருந்தது. எனக்கு கவிதை மேடைகளில் அல்லது இலக்கிய சம்பந்தமான சபைகளில் மட்டும்தான் கவிதை பாடுவேன்.
கவிதை - பேச்சுகள் எல்லாம் எனக்கு போரடித்துப்போக நான் நாடகங்களிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். பக்கத்து கல்லூரிகளில் நடைக்கும் கலைவிழாக்களில் பங்கு பெறுவோம். அந்த நாட்கள் எல்லாம் மிகவும் ஜாலியாக இருக்கும். ஏனென்றால் கல்லூரிக்கும் போகத் தேவையில்லை வருகைப்பதிவும் கிடைத்துவிடும்.
மெடிக்கல் கல்லூரியில் ஒரு அனைத்துக் கல்லூரி கலைவிழா ஏற்பாடு செய்யப்பட்டது. எங்கள் கல்லூரியில் இருந்தும் சென்றிருந்தோம்.
அனைத்து கல்லூரிகளில் இருந்தும் மாணவ - மாணவிகள் கலை நிகழ்ச்சிக்காக வருவார்கள்.
ஹாய் எப்படி இருக்கீங்க..
இன்னிக்கு என்ன புராகிராம் பண்றீங்க நீங்க..
உங்க பர்ண்ட் போன விழாவுக்கு வந்தாங்களே அவங்க வரலையா
ஐஸ்வர்யா ராய் வரைலயா..
ஹலோ என்ன கிண்டலா? இருங்க.. அவகிட்ட சொல்லி கொடுக்கிறேன்..
அவளுக்கு ப்ராக்டிகல் இருக்கு வரமுடியலையாம்..
இன்னிக்கு என்ன பாட்டு பாடுறீங்க நீங்க..
கிழக்குச்சீமையில படத்துல ஒயிலா பாடும் பாட்டு - பாடப்போறேன்..
என்று எங்கு பார்த்தாலும் வழியல்கள் - கொஞ்சல்கள் - ஜொள்ளுகள் கலந்து புகை மூட்டமாகவே இருக்கும். புகை மூட்டத்தில் எதிரில் வருகின்ற நண்பர்கள் கூட அடையாளம் தெரியாது. கடந்து சென்ற பிறகு திட்டிக்கொண்டு போவார்கள்
டேய் பிரபா..அவனைப்பாரேன் கடலை போட்டுகிட்டு இருந்தா கண்தெரியாதுன்னு நினைக்கிறேன்..கண்டுக்காம இருக்குறான் டா..
இருடா நமக்கு ஒரு நேரம் வராமையா போகும்..
பொருமிக்கொண்டே சென்றனர். நண்பர்களுக்குள் சிறு சிறு பகைமைகளும் வளர்க்கும் இந்தக் கடலை சாகுபடிகள்.
வௌ;வேறு கல்லூரிகளில் இருந்து வருகின்ற தேவதைகளை பின்தொடர்ந்தபடி சகாக்களின் கூட்டங்கள்.
நாய் துரத்தி வருவதைப்போல காதர் ஓடி வந்தான்
ஞானி ஞானி..உனக்கு மேட்டரு தெரியுமா..பிஏ தங்கத்துரை இருக்கான்ல ..அவன் அந்த ராணி அண்ணா காலேஜ் பொண்ணு இருக்குதுல..கவிதை நல்லா எழுதுமேடா..அந்த வெள்ளைக்காரி.. அவகிட்ட குட்மார்னிங்னு சொல்லியிருக்கான்..அவ மதிக்காம போய்ட்டா..இவன் மூஞ்சி போன போக்கை பார்க்கணுமே..
என்று அவன் அவமானப்பட்டதை சிரித்தபடி கூறினான்..
நானும் அவனுடன் சேர்ந்து சிரிக்க அதோ தங்கத்துரை போரில் கவசக்குண்டலம் பிடுங்கப்பட்டு நிராயுதபாணியாகி திரும்ப அனுப்பப்பட்ட மன்னனைப்போல வெறியோடு வந்து கொண்டிருந்தான்..
காதர்.. சிரிக்காதடா.. அவன் வர்றான்..
நாங்கள் சிரிப்பை அடக்கிக்கொள்ள அதனையும் மீறி வந்த புன்னகை நாங்கள் சிரித்துக்கொண்டிருந்தோம் என்பதை காட்டிக்கொடுத்தன.
நாயே..எல்லார்கிட்டேயும் பரப்பிட்டியா விசயத்தை..என்று காதரிடம் கேட்டான்
அவனோ இல்லைடா நான் சும்மா இவன்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்..
எனக்கும் தெரியும்ல உன்னய பத்தி..என்று அவனைத் திட்டிவிட்டு சொல்லுகின்றான்
அவளுக்கு இன்னிக்கு ப்ரைஸ் கிடைக்கலைன்னு நினைக்கிறேன்..அதான் மூடு மாதிரியா போறாடா.. வேற ஒண்ணும் இல்லை என்று சமாதானப்படுத்திக்கொண்டு சென்றான்.
படிக்காதவன் படத்தில் என் தங்கச்சிய நாய் கடிச்சிட்டுப்பா என்று புலம்பும் ஜனகராஜ் போல அவன் மனசு புலம்பிக்கொண்டிருந்தது எனக்கு மட்டும்தான் தெரியும்..
என்ன தலைப்பு கவிதைப் போட்டிக்கு இதோ ஒரு எஸ்டிசி தேவதை வந்து என்னிடம் கேட்க
நானோ காதரிடம் டேய் என்ன தலைப்புடா..உனக்குத் தெரியுமா..
ஏதோ அக்கினின்னு ன்னு ஆரம்பிக்குடா..- காதர்
அக்கினியில் வெந்த அன்னங்கள் ன்னு நினைக்கிறேன்..ஏன் உங்களுக்கும் அதே தலைப்பா.. -
ம் உங்களுக்கும் அதே தலைப்பா..என்று நான்; கேட்க
அப்படித்தான் நினைக்கிறேன்..நீங்க எப்படி எழுதப்போறீங்க..
நான் பெண்களின் துயரங்கள் பற்றி எழுதலாமென இருக்கின்றேன்...
நீங்க..
அங்கு ஒரு கடலை சாகுபடி விதைக்கப்படுவதை உணர்ந்த காதரின் வயிற்றிலிருந்து வந்த எரிச்சல் என் கையை கிள்ளியது. எங்கள் நிகழச்சிக்கான ஒத்திகைக்காக நேரம் ஆகியதால் விடைபெற்று கிளம்பி விட்டோம்
நாங்கள் விளம்பரக் கிண்டல் என்ற ஒரு நிகழ்ச்சி செய்வதாக இருந்ததால் அதற்கான ஒத்திகையில் ஈடுபட்டோம்.
எங்களுக்கான நிகழ்ச்சி ஆரம்பமானது.. முதல் விளம்பரம் ஹமாம் சோப்புக்கான விளம்பரம்.. அந்த விளம்பரத்தைக் கிண்டலடித்தோம்
ஹமாம் சோப்பு விளம்பரம் ஒன்றை கவனித்திருப்பீர்கள்.
ஒரு ஆமை மெல்ல மெல்ல நகரும். அப்பொழுது ஒரு சிறுவன் அம்மாவிடம் அம்மா அம்மா கல் நகருது என்க அம்மாவோ அது கல்லு இல்லைப்பா அது இயற்கையோட படைப்பு..என்று விளக்குவார்கள். அப்படின்னா இயற்கை நமக்கு என்ன பண்ணிருக்கு என்று சிறுவன் கேட்க..அம்மாவோ இதோ ஹமாம் சோப்பு என்று சோப்பைக் காட்டுவார்கள்..பின் நேர்மைன்னா என்னம்மா என சிறுவன் கேட்க நேர்மைன்னா ஹமாம்..
அந்த விளம்பரத்தை கிண்டலடித்தோம். காதர் மைக்கைப்பிடித்தான் ..
"என் இனிய கல்லூரி நண்பர்களே" என ஆரம்பித்தான்.
ஓ ஓ ஓ பெரிய பாரதிராஜாஜாஜாஜா என்று கத்தினார்கள்.
எங்களுக்கும் அவன்தான் எப்போதும் பிண்ணணிககுரல் கொடுப்பான். நாங்கள் வாய் மட்டும்தான் அசைப்போம்..
சுடலை துள்ளிக்குதித்துக்கொண்டு வந்தான்..
அம்மா அம்மா அங்க பாரு கல்லு நகருது என்று ராஜாவைக் கை காட்டினான்.
அப்பொழுது ராஜா முதுகைக் குனிந்து முழங்காலை தரையில் ஊன்றி தவழ்ந்து தவழ்ந்து சென்றான்
அப்பொழுது சேலை அணிந்து கொண்டு அம்மா வேடத்தில் ஜோதி நின்று கொண்டிருந்தான்.
அது கல்லு இல்லைடா..உங்கப்பன்டா..சட்டையைக் கழட்டிப்போட்டு படுத்துக் கிடக்காருடா..
நேர்மைன்னா என்னம்மா?
அது உங்கப்பா பரம்பரையிலே இல்லைடா..
ஹமாம் சோப்பு.. என்று பிண்ணனியில் பலமாய் ஒலிக்கும்
பின் அஜால் குஜால் அல்வா..
ஒவ்வொரு ஆசிரியர்களும் நாங்கள் தயாரித்த அஜால் குஜால் அல்வாவை சோதனையிட வருகிறார்கள் என்ற காதர் சத்தம் போட்டு கூற
நான் மற்றும் ராஜா மற்றும் சுடலை ஆகியோர் ஆசிரியர்கள் போல் வேடமணிந்து அல்வாவை எடுத்து சாப்பிடுவது போல நடிக்கின்றோம்..
இப்பொழுது அல்வா எப்படி இருக்கின்றது என்று பார்ப்போமா..?
அல்வாவைப்பற்றி நீங்க என்ன சொல்றீங்க..எப்படியிருக்கு அல்வா.. என்று ஒவ்வொருவரிடமும் காதர் கேட்க நாங்கள் வாயைத்திறந்து சொல்ல முடியதது போலவும் வாய் திறக்கமுடியாமல் கஷ்டப்படுவதைப்போலவும் நடிக்க ஆரம்பித்தோம்.
உடனே காதர் ஆம் இதன் பெருமையை வாய் திறந்து சொல்ல முடியாது
பிகர்களுக்கு முன்னால் எக்ஸாம் மார்க்கை சொல்லுகின்ற ஆசிரியர்களை பழிவாங்க சரியாண தருணம் ..வாங்கிக்கோங்க மாணவர்களே அஜால் குஜால் அல்வா..என்று சொல்ல சரியான கைதட்டல்
கைதட்டல் சப்தத்திற்கிடையே
டேய் ஞானி அங்க பாருடா.அந்த ரைட் சைடுல..இங்கேடா.. மூணாவது வரிசை டா..
- காதர் பக்கத்தில் வந்து கிசுகிசுத்தான்
ம் ராணி அண்ணா காலேஜ் பொண்ணு..அதுக்கு என்ன இப்போ
- நான்
இல்லைடா.. எழுந்து நின்னு கைதட்டுது பாரு..
- காதர் சரியாக கவனித்துச் சொல்கின்றான்
அட நாயே இதெல்லாம் சரியா கவனிச்சு சொல்லு.. மைக்கை பிடிடா.. மைக்கை பிடிடா..
விளம்பரம் தொடர்கின்றது
காதலர்கள் பீச்சில் எதிர் எதிர் திசையில் அமர்ந்திருப்பது போல் ராஜாவும் சுடலையும் அமர- இந்த முறை ராஜாவுக்கு பெண் வேடம் ( கேட்டு வாங்கிக் கொண்டான் ) நான் அவர்கள் அருகே சென்று என்ன பண்றீங்க ரெண்டு பேரும் என்று கேட்க நாங்க ஒருத்தரை ஒருத்தர் பார்க்காமலையே லவ் பண்றோம் என்று ராஜா குழைந்து பெண் போல சொல்ல
அப்படியா இந்தாங்க அஜால் குஜால் அல்வா சாப்பிடுங்க என்று நான் பெண் வேடத்தில் இருக்கும் ராஜாவிடம் கொடுக்க அவன் சாப்பிட்டு விட்டு என்னுடன் வந்து விடுகின்றான்.
ஆம் அஜால் குஜால் அல்வா காதலர்களையும் மாற்றிவிடும் உடனே வாங்கிக்கோங்க.. - காதர் பிண்ணனியில் எடுத்துவிட நான் வாய் அசைக்க..
கடைசி இருக்கையில் இருந்து விசில் பறக்கிறது .
அடுத்து பராசக்தி வசனம் போல நடித்துக் காட்டினோம். அந்தப்பதிவைக் கூட ஏற்கனவே பதிந்திருக்கின்றேன்.. எங்களுக்கு அடுத்தடுத்து ஜான்ஸ் மற்றும் பராசக்தி - எஸ்டிசி போன்று கல்லூரிகளிலிருந்தும் பல நிகழ்ச்சிகள் செய்வதற்கு ஆயத்தமாயினர்
நானும் இடையில் கவிதைப்போட்டிக்குச் சென்று அக்கினியில் வெந்த அன்னங்கள் என்ற கவிதையை எழுதிவிட்டு வந்தேன்.
அந்தக் கவிதையில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.
சீதை இனிமேல்
சிதைக்குச் செல்லமாட்டாள்
சந்தேகப்பட்டால்
இராமன் தீக்குளிக்கட்டும்
நாங்கள் காதர் சுடலை ராஜா மற்றும் எங்கள் கல்லூரி நண்பர்களோடு பார்வையாளர்கள் பகுதியில் சென்று அமர்ந்து கொண்டோம்.
ஆங்காங்கே கடலைகள் விசில் சப்தங்கள் என்று தூள் கிளப்பிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு ராணி அண்ணா கல்லூரிப் பெண் ஒருத்தி ஏதோ ஒரு பாட்டு என்ற பாடலைப் பாட ஆரம்பிக்க தங்கத்துரை - நான் - ராஜா - சுடலை நான்கு பேரும் எழுந்து அமைதியாக முன்னால் சென்று தோப்புக்கரணம் போட எல்லாரும் ஓ வென கத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
பின்னர் தமிழ் ஆசிரியர் தனியாக எங்களை அழைத்து கண்டிக்க ஆரம்பித்து விட்டார்
அந்தப்பொண்ணு பாடும்போது நீங்க போய் தோப்புக்கரணம் போட்டீங்களா..
இல்லை சார் சம்மா கேலிக்குத்தான்..
நம்ம காலேஜ் பற்றி தப்பா நினைக்க மாட்டாங்க.. ஏன் பேரைக்கெடுக்குறீங்க..ஜாலி பண்ண வேண்டியதுதான்..ஆனா மத்தவங்க மனச நோகடிக்க கூடாது..
சாரி சார்..
நான் ஒரு ப்ரண்டாத்தான் சொல்றேன்..புரிஞ்ச்சுக்கோங்க.. ன்னு சொல்லிவிட்டு போய்விட்டார்.
அறிவுரை வாங்கிவிட்டு வந்துகொண்டிருக்கின்றேன்..இங்க பாருங்கப்பா ராஜா பெஞ்சு மேல் ஏறி நின்று ஆடிக் கொண்டிருக்கின்றான்.. அட கிளம்பிட்டாங்களா மறுபடியும்..
இந்தப் பருவத்தில் என்ன சொன்னாலும் விளையாட்டாகத்தான் தோன்றும். மாணவப்பருவத்தில் கேட்ட அறிவுரைகளை நாங்கள் மற்றவர்களுக்கு சொல்லுகின்ற நிலைகள் வரும்பொழுதுதான் அந்த அறிவுரைகள் புரிய ஆரம்பிக்கும்.
-ரசிகவ் ஞானியார்
10 comments:
ரகசிவ் ,இப்போது தெரிகிறது நீங்கள் எப்படி இத்தனை பேரை கவர்ந்தீர்கள் என, படிச்சு படிச்சு சிரித்தேன்
அப்புறம் ஒயிலா பாடும் பாட்டு சீவலபேரி பாண்டின்னு நினைக்கிறேன்..என்ன சரி தானே
அருமையான அனுபவம் ரசிகவ்!
ரெம்ப நாள் கழித்து உங்களின் பழைய பாணீ எழுத்து நடை!
நானெல்லாம் உங்களை பார்த்துத் தான் வலைப்பக்கம் படிக்க ஆரம்பித்தேன்,
இதோ இப்பொழுது "உங்கள் நண்பன்" என்று தனிப்பக்கம் வேறு!
பெயர்க் காரணம் கூட உங்கள் நிலவின் தாக்கம் தான்!
உங்கள் கல்லூரி வளாகத்தை சுற்றிய மனநிறைவுடன் எனது கிராமத்திற்க்கும் உங்களை அழைக்கின்றேன்! வரவும்,
http://unkalnanban.blogspot.com/2006/08/blog-post_115570806362340979.html
அன்புடன்...
சரவணன்.
நன்றி கார்த்திக்.
//சீதை இனிமேல்
சிதைக்குச் செல்லமாட்டாள்
சந்தேகப்பட்டால்
இராமன் தீக்குளிக்கட்டும்//
நல்ல கவிதை வரிகள்! ரசிகவ்,
அன்புடன்...
சரவணன்.
நல்ல நடைங்க! கல்லூரியில் இருக்கும்போது நமக்கு சரின்னு படறது எல்லாம் இப்போ கேலியாத்தெரியுது. போன வாரம் கல்லூரிக்கு போய் பார்த்தபோது, மனசுக்குள்ள ஒரு வெறுமைதான் வந்துச்சு. ராஜா மாதிரி துள்ளித்திரிந்த அந்த இடத்துல இப்போ யாரென்றே நம்மை தெரியாமல் பசங்க கண்டுக்காம கடந்து போகிறபோது, சே இனி இங்கே வரவே கூடாதுன்னு மனசுல விழுந்துருச்சு.
தேன்கூடு போட்டிக்கு நான் எழுதிய கவிதை(!?) உங்க தலைப்பு மாதிரியே இருக்க பயந்துட்டேன்.இதோ அந்த் கவிதைப்பக்கம்
வே ஞானி,
திருநெல்வேலிக் கல்லூரி வாழ்க்கய நியாபகப் படுத்திட்டீரே... உம்ம மாரியே நானும் எங்க பயக்களோட சேந்து விளம்பரமெல்லாம் பண்ணிருக்கேன். பச்சக் கிளிகளான சாரதா காலேஜ் பிள்ளேள், STC பிள்ளேள் எல்லாம் நம்மள பாசத்தோட லுக்கு விட பதிலுக்கு நாம லுக்கு விடததுன்னு அருமயான நாட்கள் வே....
:-)
படித்தேன் ரசித்தேன்..
//போன வாரம் கல்லூரிக்கு போய் பார்த்தபோது, மனசுக்குள்ள ஒரு வெறுமைதான் வந்துச்சு.//
ம் அது சரிதான் இளா...எனக்கு கூட இந்த அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றது. நான் ஒரு காலத்தில் விளையாடித் திரிந்த அந்த கல்லூரி வளாகத்திற்குள் இப்பொழுது யார் யாரோ சுற்றுவதைப் பார்க்கும்போது மனது பொறாமையாக இருக்குது..
//பச்சக் கிளிகளான சாரதா காலேஜ் பிள்ளேள், STC பிள்ளேள் எல்லாம் நம்மள பாசத்தோட லுக்கு விட பதிலுக்கு நாம லுக்கு விடததுன்னு அருமயான நாட்கள் வே.... //
ம் நன்றி நெல்லைக் கிறுக்கன்
அடி வாங்குன கதையெல்லாம உண்டு போல இருக்குது :)
//
மனதின் ஓசை said...
:-)
படித்தேன் ரசித்தேன்.. //
பார்த்தேன் ரசித்தேன்
Post a Comment