Thursday, August 10, 2006

முதன் முதலாக அரசியல்வாதிகளுக்கு மத்தியில்

தமிழ்நாடு மருத்துவ சேவை சங்கத்தின் அடிக்கல் நாட்டு விழாவிற்காக மாண்புமிகு அமைச்சர் டி. பி. ஏம் மைதீன்கான் அவர்களை அழைத்திருந்தார்கள். என்னையும் வாழ்த்துரை வழங்குவதற்காக அழைத்திருந்தார்கள்.

வாழ்த்துரைக்காக அமைச்சரைப் பற்றிய தகவல்களை சேகரிக்கவேண்டும் என்ற ஆவலோடு தகவல்களை சேகரித்து கிண்டலும் கேலியுமாக கவிதை நடையில் எழுதி வைத்திருந்தேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் சந்திக்கின்ற மேடை இது.

இரண்டு நாட்களுக்கு முன்பாகவே அமைச்சர் பற்றிய தகவல்களை அவரது உறவினரும் எனது கல்லூரி நண்பருமான சித்திக் என்பவரிடம் தொலைபேசி செய்து சேகரித்து வைத்திருந்தேன்.

அரசியல் வேஷ்டிகளில் மட்டுமே
கறை உடையவர்
கட்சியிலும் வாழ்க்கைளில்
என்றும்
கறை படியும் என்ற கவலை இனி இல்லை

---
இவர் அடிப்படையில்
வேளாண்மைக் குடும்பத்திலிருந்து
வந்திருப்பவர்

---

சூரியன்
இவரது
வாழ்க்கையையும் உயர்த்தியிருக்கின்றது
விவசாயத்தையும் உயர்த்தியிருக்கின்றது

---

இறுதியாய் ஒரு செய்தி
அதிர்ச்சி அடைய வேண்டாம்
இவருக்கும் ஒரு பொடா சட்டம் …காத்துக்கொண்டிருக்கின்றது
ஆம்
மேலப்பாளைய மக்களின்
இதயங்களில் மாட்டிக்கொண்டு
எப்பொழுதுமே வெளிவரவே முடியாத
அன்பெனும் பொடா சட்டத்தில்
சிறைபட்டுக் கொண்டிருப்பார்

---

என்று வழக்கமான வஞ்சப்புகழ்ச்சி அணியில் சுமார் 4 பக்கத்திற்கு நகைச்சுவையாகவும் மக்கள் ரசிக்கும்படியாகவும் எழுதிய வைத்து விட்டு பேசுவதற்கான தருணத்திற்காக காத்திருந்தேன்..

பயமாக இருந்தது. ஏனென்றால் நான் கல்லூரி மேடைகளில்தான் அனைவரையும் கவருவதற்காகவும் - வெட்டி ஹீரொத்தனத்திலும் கிண்டலாக பேசியிருக்கின்றேன். ஆனால் இது அரசியல் மேடை இங்கு எனது பேச்சுக்கள் எடுபடுமா என்று தெரியவில்லை.

விழா அன்று காலை 11 மணிக்கு சென்று வந்திருந்த சில பெரியவர்களுக்கு மரியாதை செலுத்தி விட்டு முதல் வரிசையில் சென்று அமர்ந்தேன்.

பக்கத்தில் உள்ள ஓர் வக்கீல் அவருக்கு சம்பந்தா சம்பந்தா இல்லாமல் ஏதேதோ கேட்டார். நானும் சில மேடைகளில் பார்த்திருக்கின்றேன். மேடையில் அமர்ந்திருப்பவர்கள் தங்களை பெரிய ஆளாக காட்டிக்கொள்வதற்காக பக்கத்தில் இருப்பவர்களின் காதினில் ஏதோ பேசி சிரித்துக்கொண்டிருப்பார்கள். எல்லா மேடைகளிலும் இந்தச் செயல் வழக்கமாக நடைபெறுவதுண்டு.

அதுபோல சில தொழிலதிபர்கள் - சில அரசியல்வாதிகள் -உள்ளுர் பிரபலங்கள் என்று அறிமுகங்கள் கிடைத்தன.

குறிப்பிட்ட நேரத்திற்கு அமைச்சர் வந்துவிட எல்லாருக்கும் அவர் வணக்கம் சொல்லி கைகுலுக்கி விட்டு ; என்னடா அரசியல் மேடையில் டிசர்ட்டும் ஜுன்ஸ் பேண்ட்டோடு ஒரு இளைஞன் என்று என்னை ஆச்சர்pயமாக பார்த்தாhர். பின்னர் என்னிடமும் கைகுலுக்கி விட்டு போது பக்கத்தில் இருப்பவரிடம் என்னைப்பற்றி கேட்க - அவரோ நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ள எனது பெயரை சுட்டிக்காட்டி இவர் பெயர் ரசிகவ் ஞானியார் என்று அறிமுகப்படுத்தினார்.

அமைச்சரின் பின் வரிசையில் நான் அமர்ந்திருந்தேன். வழக்கமான அரசியல் முலாம் பூசுதல்கள் ஆரம்பித்தது. இங்கிருந்து வந்திருக்கும் இவர்களே - அங்கிருந்து வந்திருக்கும் அவர்களே என்று அனைவரும் இதே பல்லவியைப்பாட எனக்கு எரிச்சல் முட்டிக்கொண்டு வந்தது. அமைச்சருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

அவர் மேடையில் பேசுபவரைப் பார்த்து சரி சரி வரவேற்றது எல்லாம் போதும் விசயத்திற்கு வாங்கப்பா என்று கிண்டலோடு கூற கூட்டத்தில் சிறிய சிரிப்பலை. ஆனாலும் அந்த பேசிக்கொண்டிருந்து அந்த உள்ளுர் அரசியல்வாதி விடவில்லை. அமைச்சர் எரிச்சலாகி பின்னால் திரும்பி எங்களைப்பார்க்க நான் ஒரு புன்முறுவல் தந்தேன்.

பின் என்னிடம் ஏதோ கேட்க எனக்கு சரியாய் காதில் விழவில்லை. என்ன சார்..? என்ன சார்..? என்று எனது சீட்டில் இருந்தபடியே கேட்க - நான் இருந்த இடத்தில் இருந்தபடியே பதில்சொல்வதைக்கண்டு எரிச்சல் அடைந்த அமைச்சரின் பக்கத்தில் உள்ள ஒரு நபர் என்னைச் சைகையில் முன்னால் வரும்படி அன்பாய் எச்சரிக்க நான் முன்னால் சென்று அமைச்சர் அருகே குனிந்து என்ன சார் என்க..?

உங்களை புதுசாப் பார்க்குறேன் இங்க..? நோட்டீஸில் இளம்கவிஞர் ரசிகவ் ஞானியார்னு போட்டிருக்கே..? நீங்க கவிஞரா..?

ஆமா சார் அப்படித்தான் சொல்லிக்கிறாங்க..என்று நக்கலாய் பதில் அளிக்க அவர் புன்முறுவல் செய்தார்.

சரி ஞானியார்தான் உன்னுடைய உண்மையான பெயரா..? என்ன அர்த்தம்?

ஞானின்னா எல்லாம் அறிந்தவன்னு அர்த்தம் சார் - ஆனா என்னுடைய பெயர் மட்டும்தான் ஞானி..என்று நான் கூற

மறுபடியும் ஒரு சிறிய புன்னகையை வீசினார். சரி நீ ஏதோ புத்தகம் வெளியிட்டிருக்கிறதா சொன்னாங்க அந்தப்புத்தகம் இப்ப இருக்கா..

அய்யோ நான் கொண்டு வரலைங்க..நான் உங்களுக்கு அப்புறமா தரேன்..

சரி கண்டிப்பா தரணும் என்று அவர் கூற நான் என்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்தேன்

அமைச்சரிடம் பேசிவிட்டு வந்ததால் ஏதோ தமிழ்நாட்டின் மாசுக்கட்டுப்பாட்டைபற்றி முழுமையாக நான் அமைச்சரிடம் விவாதித்ததைப்போன்ற எண்ணத்தில்
கூட்டத்தில் உள்ள எல்லாரும் என்னையே பார்ப்பது போன்ற உணர்வில் என்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்தேன்.

இதற்கிடையில் எனக்கு வரவேண்டிய தேநீர் என்னுடைய இருக்கையைத்தாண்டி சென்று கொண்டிருந்தது.

ஒரு நாள் முழுவதும் வேண்டுமானாலும் தேநீர் குடித்துக்கொண்டே இருப்பேன் நான். அந்த அளவிற்கு தேநீர் பைத்தியம் நான். இப்படி இருக்கையில் என்னைக் கடந்து சென்றுவிட்டதே தேநீர் என்று கடுப்பில் இருந்தேன்.

மறுபடியும் கேட்பது நாகரீகமல்ல. அப்பொழுது திடீரென்று ஒரு பையன் வந்து என்னிடம் தேநீர் கோப்பையை நீட்ட - எனக்கு மகிழ்ச்சி கார்ப்பரேஷன் குழாய் காற்றைப்போல பீறிக்கொண்டு வந்தது.

ச்சே நம்ம ஊருப்பசங்க பாசக்காரனா இருக்காங்களாப்பா

அமைச்சர் மைதீன்கான் பேச ஆரம்பித்தார். ஆனைவரையும் வழக்கமான அரசியல் பாணியில் அவரும் வரவேற்று பேசும்பொழுது தம்பி ரசிகவ் ஞானியார் என்று கூற

அட அவர் வயசு என்ன?..என்னுடைய வயசு என்ன? தம்பின்னு சொல்லி அவருடைய வயசைக் குறைச்சிக்கிட்டாரே..

என்று எனக்குள் சின்ன பொறாமை.



மக்களுக்கு செய்த பணிகள் - குறை நிறைகள் - எதிர்காலத்திட்டங்கள் என்று நிறைய உபயோகமாகப் பேசினார்.

அப்பொழுது நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் என்னிடம் வந்து தம்பி பேசுவதற்குண்டான நேரம் குறைவாகத்தான் இருக்கின்றது. இன்னொரு அரசியல் பிரமுகர் ஒருவரும் பேசவேண்டியதிருக்கின்றது. நீங்களும் பேச வேண்டியதிருக்கிறது. ஆனால் நேரமில்லை. யாராவது ஒரு ஆள்தான் பேசமுடியும்.

அவரைப் பேச வைக்கலாமா..? மன்னிச்சுக்கோங்க..

சரி அந்த உள்ளுர் அரசியல் பிரமுகர் ஏதாவது முக்கியமாக பேசுவார் என்று நினைத்து சரிங்க பரவாயில்லை..அவர் பேசட்டும்.. என்று நான் பேச வைத்திருந்த காகிதத்தை மடித்து ஏமாற்றத்துடன் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அடுத்து பேசுவதற்று அழைக்கப்பட்ட அந்த அரசியல்வாதியின் பேச்சை உற்று நோக்க ஆரம்பித்தேன்.


கடுமையான வேலைப்பணியிலும் வந்திருக்கும் அமைச்சர் மைதீன் கான் அவர்களே..

வக்கீல் திரு அபுபக்கர அவர்களே

நெல்லை பில்டர் அசோசியேசன் தலைவர் அமானுல்லா அவர்களே...

...
...

தம்பி; ரசிகவ் ஞானியார் அவர்களே ( நோட்டிஸில் உள்ளதை அப்படியே வாசித்தார் )

அனைவரையும் வரவேற்கின்றேன் என்று தனது நீண்ட கருத்துள்ள உரையை முடித்துவிட்டு அமர்ந்தார். ச்சே இப்படி இவர் பேசுவார்னு தெரிஞ்சா நாம பேசியிருக்கலாமே என்று நான் பட்ட வயிற்றெரிச்சலில் மைக்கில் புகை வந்ததை நானும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும்தான் கவனித்தோம்.


பின் விழாவிற்கு வந்தவர்களை கவுரவிக்கும் வண்ணம் போர்வை போடும் படலம் ஆரம்பித்தது.

இந்த பொன்னாடையை இவர் அவருக்குப் போடுவார்
அவர் இவருக்குப் போடுவார்
என்று சொல்லிக்கொண்டே மருத்துவச்சேவை சங்க உறுப்பினர் திரு..... அவர்கள் ரசிகவ் ஞானியார்க்கு போடுவார் என்று கூற ஆச்சர்யப்பட்டேன். அட நம்மையும் மதிச்சு போடுறாங்களேப்பா என்று எனக்குள் ஒரு கர்வம்.

இந்த பொன்னாடைன்னு சொல்லும்பொழுதுதான் ஞாபகம் வருது. காலேஜ்ல ஒருமுறை அப்படித்தான் மாணவர்ப்பேரவை செயலராக இருக்கும்பொழுது பொன்னாடையை எனக்கு போர்த்தினார்கள். நான் உடனே

பொன்னாடை என்று சொல்லிவிட்டு தள்ளுபடித்துண்டை போர்த்தியதற்கு நன்றி..நன்றி..நன்றி..என்று நான் மைக்கில் சொல்ல மாணவர்கள் உற்சாகத்தில் கைதட்ட பிரின்ஸ்பால் ஒரு முறை முறைச்சாரே பார்ப்போம்..அப்புறம் தனியா கூப்பிட்டு ரெய்டு விட்டதெல்லாம சொல்லமுடியாத கதைங்கோ..

சரி அத விடுங்க..இங்க இந்த விழாவுல அதே பொன்னாடைன்னு சொன்னதால எனக்கு அந்த காலேஜ் ஞாபகம் வந்திடுச்சு..


விழா முடிந்து அனைவரும் கிளம்புகின்ற சமயத்தில் அமைச்சரிடம் அனைவரும் கைகுலுக்கி விடைபெற நானும் அமைச்சரிடம் கைகுலுக்கி விடைபெறும் தருவாயில் அவரிடம் ஹேப்பி பர்த்டே சார் என்க..அவரோ ஆச்சர்யப்பட்டு எனக்கா பிறந்த நாளா என்க..

ஆமா சார் 19.07.1947 உங்க பிறந்த நாள்..இன்னும் 3 நாள் இருக்கு சார் என்க

எப்படித் தெரிஞ்சுது உங்களுக்கு என ஆச்சர்யமாய் கேட்க

இண்டர்நெட்ல இருந்து தகவல் சேகரித்து எடுத்தேன் சார்..பார்லிமெண்ட் புரொபைல்ல இப்படித்தான் இருக்கு..என்று நான் சீரியஸாய் கூற

ச்சோ அது சும்மா கொடுத்ததுப்பா என்று சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே சென்றார்.

அட நடிகைகள் தான் வயச மறைப்பாங்கன்னு பார்த்தா..அரசியல்வாதிகளும் அப்படித்தானா..என்ற ஆச்சர்யத்தோடு நானும் விடைபெற்று கிளம்பிவிட்டேன்.

சும்மா சொல்லக்கூடாதுங்க மற்ற பந்தா காட்டுகின்ற அமைச்சர்களுக்கு மத்தியில் இவர் மிகவும் எளிமையாக நடந்து கொண்டது என்னை மட்டுமல்ல அனைவரையும் மிகவும் கவர்ந்தது.
இவர் தனது பேச்சில் கூட குறிப்பிட்டார்

கடுமையான பணிகளுக்கு மத்தியில் நான் வந்திருப்பதாக யாரோ கூறினார்கள்..ஆனா அப்படியெல்லாம் ஒண்ணுமில்லைங்க..சும்மா தான் இருந்தேன்..எந்த கடுமையான பணியும் இல்லை..யாருக்காக வரப்போகிறேன்.? மக்களுக்காகத்தானே..? நீங்க கொடுக்கிற கார் - நீங்க கொடுக்கிற பெட்ரோல் - நீங்க கொடுக்கிற பாதுகாப்பு-- நீங்க ஆணையிட்டா வந்து நிற்கப்போகிறேன்...

என்று வெளிப்படையாக சொல்லும் தைரியம் எந்த அமைச்சருக்கு வரும் சொல்லுங்க..


தொகுதியில் எந்தப்பிரச்சனை என்றாலும் தயக்கம் காட்டாமல் என்னை அணுகலாம் என்று வாக்களித்தார்.

அனைவரிடமுமு; பொறுமையாய் மனுக்களை வாங்கி எளிமையாக பழகிச்சென்ற அமைச்சர் மைதீன் கான் அவர்கள் எனக்கு மிகவும் வித்தியாசமான அமைச்சராகவே தெரிந்தார்.

அது மட்டுமல்ல திடீரென்று உள்ளுர் மருத்துவமனைக்கு சென்று விசிட் அடித்து அன்று சரியான காரணமில்லாமல் பணிக்கு வராமல் இருந்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆணையிட்டுவிட்டு சென்றிருக்கின்றார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் எந்த அளவிற்கு தொகுதி மக்கள் மீது அக்கறை செலுத்தியிருக்கின்றார் என்று.

இவரைப்பின்பற்றி மற்ற அரசியல்வாதிகளும் இருந்தால்; தொகுதிகள் மட்டுமல்ல தமிழ்நாடே முன்னேறும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை..



- ரசிகவ் ஞானியார்

4 comments:

Anonymous said...

Hello Gnani nee kaluviyirrukkira vakeel vera yaarumalla namma dubai room mat shafiyoda chinna vappathaan
anyway shaafi aruvaaloada voorukku varra 15 th augusut varuhhirran jaaakirathai

veru athum vishesham vunda ?

reply me email

tskhaaja@yahoo.com

yours
Nijam,DXB

குழலி / Kuzhali said...

ரசிகவ், திரைப்படங்களில் ஆரம்பித்து பத்திரிக்கைகள் மற்றும் பல பல செவி வழி செய்திகளாக அரசியல்வாதிகளை பற்றி பொதுவாகவே ஒரு விதமான தப்பான பிம்பம் உருவா(க்)கிவிட்டது, எல்லோரையும் போல அவர்களும் ஓரளவு நெருக்கத்தில் பார்க்கும் போது நல்ல விதமாகவே பழகுவார்கள்....

நன்றி

Gnaniyar @ நிலவு நண்பன் said...

நன்றிப்பா..

கழுவ கழுவத்தான் பாத்திரங்கள் சுத்தமாகின்றன என்பதை நண்பர் ஷாபிக்கு சொல்லவும்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//எல்லோரையும் போல அவர்களும் ஓரளவு நெருக்கத்தில் பார்க்கும் போது நல்ல விதமாகவே பழகுவார்கள்.... //


நன்றி குழலி..

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான். ஆனால் எத்தனையோ பேர் வெளியில் நல்லவர்களாகவும் திரைமறைவில்; மோசமானவர்களாகவும் இருக்கின்றார்கள்.

தேன் கூடு