வந்துகொண்டிருக்கிறது காதலர் தினம். என்ன எழுதலாம் ..?
இதுவரை என் வாழ்க்கையில் என்னைக் கடந்துசென்ற உண்மைக் காதல்கள் - காதல் தோல்விகள் - இனக்கவர்ச்சியில் காதலாகி ஓடிப்போன காதலர்கள் - காதல் தற்கொலைகள் என்று விதவிதமான காதல்கள் பற்றி எழுதலாம் என்று நினைத்தேன். நீங்களும் ரசியுங்களேன் இந்தக் குளத்தில் காதல் எறிந்துவிட்டு சென்றவர்களை..
அ..ஆ
என்னைச் சுற்றி நிகழ்ந்த முதல் காதல் என்னுடைய பள்ளியின் சீனியர் மாணவன் யூனுஸ். அவன் ஒரு பெண்ணிடம் காதல் கடிதம் கொடுக்கப்போய் தலைமையாசிரியரிடம் பிடிபட்டு பின்னர் அவனை தலைகீழாக கட்டிவைத்து அடித்தார்கள். அந்த யூனுஸ் அப்போது 8ம் வகுப்புதான் படித்துக்கொண்டிருந்தான்.
பின்னே என்னங்க ஆசிரியரின் மகளுக்கே காதல் கடிதம் கொடுத்தால் விடுவார்களா என்ன? பின்னு பின்னுன்னு பின்னிட்டாங்க.. பிறகு அவனை பள்ளியை விட்டே அனுப்பிவிட்டார்கள். அந்த யூனுஸின் நண்பனைக் கூட இங்கே சில இடங்களில் பார்த்தால் அதைப்பற்றி கேட்பேன்.
ஆசியரின் மகளை காதலித்தான்
ஆசி கிடைக்கவில்லை
தலைகீழாக அடித்ததில்
தரையில் சிதறியது காதல்
பந்தல் குழிக்குள் காதல்
எனக்கு ஞாபகம் தெரிந்த அடுத்த காதல் ஜோடி வீரபத்ரன் - ஆர்த்தி
வீரபத்ரன் என்னுடைய பத்தாவது வகுப்பு பள்ளித்தோழன். தினமும் நான் வீரபத்ரன் - பாலகுமார் ராஜா என்று பள்ளி முடிந்ததும் ஒன்றாக சைக்கிளையும் விழிகளையும் தாவணித்தேவதைகளை பின்தொடர்ந்து உருட்டியபடி பேசிக்கொண்டே வந்து கொண்டிருப்போம்.
வீரபத்ரன் - விஜயகாந்தின் நிறத்தில் ஆறடி உயரத்தில்; இருப்பான். அவனது தந்தை திருமண வீட்டிற்கு பந்தல் கட்டும் வேலை செய்து வருபவர்.
ராஜா - எனக்குத்தெரிந்து பாளையங்கோட்டையிலிருந்து எங்கள் ஊருக்கு படிக்க வந்த முதல் மாணவன். அவனது தந்தை அரசாங்க அலுவலகர்
பாலகுமார் - புளியங்குடி பக்கத்தில் இருந்து வந்து எங்கள் ஊரில் அவனது உறவினர் வீட்டின் மாடியில் தங்கிப் படிப்பவன். அந்த வீட்டின் எதிர்வீடுதான் ஆர்த்தியின் வீடு. அவளும் எங்கள் பள்ளியில்தான் படிக்கின்றாள்
தினமும் பள்ளி முடிந்து நடந்து வரும்பொழுது ஆர்த்தி தனது சக தோழிகளுடன் எங்களின் பேச்சுக்கள் எட்டும் தூரத்தில் நடந்து சென்று கொண்டிருப்பாள். எப்படித்தான் லவ் பத்திக்சோ தெரியாதுங்க..அப்பல்லாம் எனக்கு விவரம் தெரியாத வயசு..அட நம்புங்க..உண்மைதான்..
அடிக்கடி வீரபத்ரனும் ஆர்த்தியும் ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்துக் கொள்வது தூரத்தில் சென்ற பிறகு கைகாட்டிவிட்டு விடைபெறுவது இதெல்லாம் காதல்தான்னு எனக்கு அன்னிக்கே தெரியாதுங்க..
ஆனால் பாலகுமாரனும் வீரபத்ரனும் ஒருவருக்கொருவர் எங்களை விட்டுவிட்டு ரகசியம் பேசிக்கொள்வார்கள். வீரபத்ரன் அடிக்கடி பாலகுமாரைப் பார்க்க அவன் தங்கியிருக்கும் வீட்டிற்குச் செல்வான். ஏன்னா எதிர்வீட்டுலதானே அவனோட தேவதை தங்கியிருக்கு
ராஜா கூட என்னிடம் சந்தேகமாய் கேட்பான். "ஞானி என்னடா வீரபத்ரனும் பாலகுமாரனும் ஏதோ இரகசியமா பேசிக்கிறாங்கடா..என்னன்னு தெரியல.."
ராஜா கொஞ்சம் உஷார் பார்ட்டி. கண்டுபிடித்து என்னிடம் சொல்லிவிட்டான். "டேய் ஞானி! வீரபத்ரனும் ஆர்த்தியும் லவ் பண்றாங்கடா.."
எனக்கு பயங்கர ஷாக். ராஜா என்னிடம் அந்த விசயத்தை சொன்ன பிறகு காதல் என்ன நிறம்..? எப்படியிருக்கும்..? அது வந்தால் என்ன ஆகும்..? எப்படி வருகிறது? என்பதை எல்லாம் 2 நாட்கள் தூக்கத்தை தொலைத்து அலசியிருக்கின்றேன்.
நெருங்கியவர்கள் மரணமடையும்பொழுது நமக்கும் மரணம் உண்டு என்று ஒரு பயம் வருமே அதுபோல நெருங்கிய நண்பனின் காதல் என்னையும் கிளர்ச்சியடையச்செய்தது மட்டுமின்றி காதல் பற்றிய முதல் அறிமுகத்தையும் தந்தது.
எனக்கு வீரபத்ரனிடம் கேட்பதற்கு தயக்கம். ஆகவே பாலகுமார் வீட்டிற்குத் தேடிச்சென்று விசயத்தை கேட்டேன். அவன் முதலில் பயத்தில் மறுத்தான் பின் உண்மையை உளறிவிட்டான்.
மறுநாள் வழக்கம்போல நாங்கள் பள்ளி முடிந்து வந்துகொண்டிருக்கின்றோம். எனக்கு அப்பொழுது வீரபத்ரனும் ஆர்த்தியும் மட்டுமே தனியாய்த் தெரிந்தார்கள். சினிமாவின் கதாநாயகர்கள் கதாநாயகிகள் எல்லாம் ஞாபகத்தில் வந்து போயினர்
காதலித்துப்பார்
பார்க்கும் படத்திலெல்லாம்
நீயே கதாநாயகன்
அவளே கதாநாயகி
அவள் தந்தையே வில்லன்
பத்தாம் வகுப்பு இறுதிப்பரிட்சை நெருங்கியது. தமிழ் பரிட்சை அன்று காலையில் பள்ளிக்கு வரும்பொழுதே அந்த அதிர்ச்சியான தகவல் வந்து சேர்ந்தது.
ம் அதான்ங்க..நம்ம வீரபத்ரன் இருக்கான்ல..அவன் ஆர்த்தியை கூட்டிட்டு ஓடிப்போய்ட்டான்பா..
எனக்கு ஆச்சரியமாகவும் பயமாகவும் இருந்தது. எந்த நம்பிக்கையில் அவர்கள் ஓடிப்போயினார்கள் என்ற ஆச்சரியமும் வீரபத்ரன் ஓடிப்போன செய்தியைப்பற்றி நம்மிடம் விசாரிப்பார்களோ என்ற பயமும் அதிகமாகியது.
நல்லவேளை அவர்கள் ஓடிப்போன செய்தியைப்பற்றி பாலகுமார் பள்ளி நிர்வாகத்திடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் சொல்லிவிட்டதால் நான் தப்பித்தேன்.
பிறகு இரண்டு நாள் கழித்து அவர்கள் தூத்துக்குடியில் அகப்பட்டுக்கொண்டார்கள்.
வீரபத்ரன் சிறையில் அடைக்கப்பட்டு ஒருவாரம் கழித்து இருதரப்பினர்களுக்கும் சமாதானம் பேசப்பட்டு வெளியில் விடப்பட்டான்.
எங்கே போனார்கள்? எங்கு தங்கினார்கள் என்பதைப் பற்றியெல்லாம் விசாரிக்கும் பக்குவம் அந்த பயமான சூழ்நிலையில் எனக்கு தோன்றாமல் போயிற்று.
பின் அந்த ஆர்த்தியை பக்கத்திலுள்ள அவர்களின் மாமா வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள்.
கொஞ்ச நாள் கழித்து வீரபத்ரனை ஊரில் சில இடங்களில் எங்கேயாவது கண்டால் நான் ஒதுங்கி போக ஆரம்பித்தேன். அவனது தந்தையின் பந்தல் செய்யும் தொழிலில் அவன் பிசியாகிவிட்டான். எங்கேயாவது கண்ணில்பட்டால் என்னைக்கண்டு ஒரு புன்சிரிப்பு சிரிப்பான். அவ்வளவுதான்.
சமீபத்தில் கூட நான் விடுமுறையில் ஊரில் இருந்தபொழுது ஒரு தெருவில் பந்தல் போட்டுக்கொண்டிருந்தவனை அழைத்துச் சென்று அவனுடைய நலம் - தொழில் நிலைமை எல்லாம் விசாரித்துச் சென்றேன்.அவனுக்கும் கல்யாணம் ஆயிடுச்சுங்க..நல்லபடியா இருக்கான்..
அந்த ஆர்த்தியும் ஒரே ஒரு தடவை அவர்கள் தெருவை கடந்துசெல்லும்போது பார்த்தேன். கல்யாணம் முடிந்து உடல் குண்டாகி முக அடையாளமே மாறிப்போய்விட்டாள். அவளுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. இல்லை தெரியாதது போல் நடித்திருப்பாள் என்று நினைக்கின்றேன்.
எனக்கு என்ன தோன்றியது என்றால் அந்தச் ஆர்த்தியின் திருமணத்தில் நம்ம வீரபத்ரன் பந்தல் போட வந்தால் எப்படியிருந்திருக்கும். இதே சூழ்நிலை சினிமாவில் வந்திருந்தால் ஒரு சோக பாட்டை எடுத்து விட்டிருக்கலாம்.
இவன்
பந்தலையெல்லாம்
பக்குவமாய்தான் போட்டான்
ஆனால் தன்
காதலைத்தான்
கந்தலாக்கிவிட்டான்
இனக்கவர்ச்சியா? - இதயக்கவர்ச்சியா?
ஆப்டெக் படிக்கும்பொழுது மருதகுளம் என்ற ஊரில் இருந்து படிக்க வந்த அகிலன் என்பவன் எனது ஊரில் இருந்து படிக்க வந்த வந்த ரீனா என்ற இந்திக்காரப் பொண்ணின் மீது லேசாக காதல் வiலையை வீசினாhன். அவளைப்பற்றியே எப்போதும் பேசிக்கொண்டிருப்பான். அந்த இந்திக்காரப் பெண்ணிற்கு தமிழ் சுத்தமாக தெரியாது என்பதால் நாங்கள் அந்தப்பெண் பக்கத்தில் வரும்பொழுது ஏதாவது பேசி கிண்டலடிப்போம்.
ஒரு நாள் நானும் அகிலனும் தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கும் பொழுது அந்த ரீனாப்பொண்ணும் தண்ணீர் குடிக்க வந்தாள்.
"டேய் என்னடா பையா ..ஆள் சூப்பரா இருக்கே..? உங்கப்பன் என்ன பண்றான்டா..?" என்று அந்தப்பெண்ணை பார்த்து கேட்க..
அவளோ.."வாட்..வாட்.."என்று திணறி உளறி பின் சென்றுவிட்டாள்.
அரைமணிநேரம் கழித்து ஆப்டெக்கின் மேலாளர் எங்களை அழைத்து கண்டித்தார்.
"இந்தப் பாருங்க அந்தப்பொண்ணு பெரிய இடம். கிண்டல் பண்ணாதீங்க..அப்புறம் பிரச்சனையாயிடுச்சுன்னா எனக்குத் தெரியாதுப்பா சொல்லிட்டேன்..."
என்று நாசூக்காக கண்டித்தார்.
அதன்பிறகு அந்த ரீனாவை நாங்கள் கிண்டலடிப்பதைக் குறைத்துக்கொண்டோம். அகிலனும் ரீனாவும் எதிரெதிரே கடக்கும்போது முறைப்பதோடு சரி. மோதலில்தான் காதல் ஆரம்பிக்கும் என்று சொல்வர்கள். ஆனால் அகிலனுக்கும் ரீனாவுக்கும் இடையில் எதுவுமே நடக்கவில்லை. அவளும் கோர்ஸை பாதியிலேயே விட்டுவிட்டு கிளம்பிவிட்டாள்.
அந்த அகிலன் தற்பொழுது சென்னையில் பணிபுரிந்து கொண்டிருப்பதாக கேள்விப்பட்டு ஒருமுறை சென்று பார்த்தேன். அதன்பிறகு அவனைப்பற்றிய தகவலே இல்லை.
ஆனால் அவன் அவள் மீது வைத்தது காதல் அல்ல. அவளின் உடை நடை அழகு கண்டு உணர்ச்சிவசப்பட்டுப்போன ஒரு இனக்கவர்ச்சிக் காதல்தான்.
மருதகுளப் பையனின்
இதயக்குளத்தில்
கல்லெறிந்தது காதல்!
ரீனா மீது வைத்த காதல்
வீணாகிப் போனதப்பா
உயிர்க்காதல் இது பெயர்க்காதல்
என்னுடைய கல்லூரிகாலம் முதல் இப்பொழுது வரை நல்ல நண்பனாக இருந்து வரும் அந்த ஜகூபா.இவனுடைய காதல் என்னைக் காயப்படுத்திய காதலும் கூட. இந்தக்காதல்தான் என்னை கவிஞனாக்கியது.
பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் பிஎஸ்ஸி கணிதம் படித்துக்கொண்டிருந்தபொழுது இன்னொரு பிரிவைச்சார்ந்த அமி என்ற பெண்ணின் மீது அவனுடைய காதல் வகுப்புத் தோழிகளின் ஆதரவுகளோடு அமோகமாக வளர்ந்தது.
முதலில் அந்தப் பெண்ணின் பெயரை காதலிக்க ஆரம்பித்தான். பின் அவள் உயிரைக் காதலிக்க ஆரம்பித்து விட்டான்.அவளின் பிறந்தநாளுக்கு கவிதைகள் வாழ்த்து அட்டைகள் ரோஜாப்பூக்கள் என களை கட்டியது.
- காதல்
வாழ்த்து அட்டை வியாபாரியை..
வாழ வைக்கிறது!
ரோஜாப்பூக்களை..
குடிசைத்தொழிலாக்குகிறது!
அந்தப்பெண்ணனின் வீட்டிற்கு சென்று அவளது தாயாரின் கருணையையும் மதிப்பையும் பெற்று சுமுகமாய் வளர்ந்த அந்தக்காதல் கடைசியில் அந்தப்பெண்ணிற்கு வெளிநாட்டில் இருக்கும் மாப்பிள்ளையின் வடிவில் வந்தது அவர்களது காதலின் எதிரி.
"நீ நாங்கள் சொல்கிற மாப்பிள்ளையை கல்யாணம் செய்து கொள்ளவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்வோம் " என்று அவர்களது பெற்றோர் மிரட்டினார்களா என்று தெரியவில்லை ஆனால் அந்தப்பெண் கடைசியில் மனசு மாறிவிட்டாள்.
நாங்களும் கடைசி வரை போராடினோம் . அந்தப்பெண்ணின் உறவினர் ஒருவரிடம் அந்தப்பெண்ணிற்கு விருப்பம் இல்லை வீட்டில் உள்ளவர்கள்தான் கட்டாயப்படுத்துகிறார்கள் என்று நிலைமையை விளக்கி அந்த உறவினரையும் அழைத்துச் சென்று எல்லோர் முன்னிலையிலும் கேட்கும் பொழுது
"அவனை நான் காதலிக்கவே இல்லை ச்சும்மா ப்ரண்ட்சிப்தான்" என்று சொல்லிவிட்டாள்.
அந்தக்கடுப்பில்தான் நான் எழுதினேன் ஒரு கவிதை..
காதல் யாரையும் ஏமாற்றுவதில்லை
ஆனால்
காதலிகள்தான்..
அதன் பிறகுதான் உணர்ந்தேன். அவனது காதலி அவனை ஏமாற்றிவிட்டதற்காக எல்லோரையும் நாம் குறைகூறக் கூடாது என்று. எத்தனையோ காதலர்கள் காதலித்து பெண்களை ஏமாற்றிவிட காதலிகள் - காதலன் வீட்டுமுன் போராட்டம் என்று எத்துணை செய்திகளில் படித்திருக்கின்றோம்
கடைசியில் எனது நண்பன் எனக்கு ஒரு கடிதமும் தனது காதலிக்கு கொடுத்து விடவேண்டும் என்று ஒரு கடிதமும் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்ய முயன்று தூக்க மாத்திரைகளை விழுங்கிவிட்டான். நல்லவேளை அவனது தாய் உடனே கவனித்து விட்டதால் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றி விட்டார்கள்.
தற்கொலையைப்போல
இழிவான செயல் எதுவுமில்லை
ஆகவே
காதலிக்காதீர்கள்
பின்னர் தந்தையின் சுடுசொற்களுக்கு இடையேயும் சமுதாயத்தின் பழிசொற்களுக்குpடையேயும் தடுமாறி போராடி வெற்றி பெற்று தற்பொழுது சென்னையில் வெப் டிசைனராக பணிபுரிந்து கொண்டிருக்கின்றான். உலக நாடுகளிலிருக்கும் பல நிறுவனங்களுக்கு Freelancer webdesigner - ஆக பணிபுரிந்து கொண்டிருக்கின்றான்.
என்னால் இன்னமும் மறக்கமுடியாது என்னிடம் அவன் இப்படி புலம்பியதை :
"டேய் அவ இப்பவும் விதவையாய் வந்தால் கூட நான் ஏற்றுக்கொள்வேன்டா.."
'பாருங்க..எந்த அளவுக்கு அந்தப் பெண்ணை காதலித்திருப்பான் அவன்.? ஆனால் இப்படி ஏமாத்திட்டுப் போயிட்டாளே அவள்..'
அதுவும் நல்லதுக்குத்தான். இறைவன் ஒரு சோகத்தை கொடுத்து கெட்டவர்களையும் நல்லவர்களையும் எனது நண்பனுக்கு அடையாளம் காட்டிவிட்டான்.
காதலிக்கு கல்யாணம்
இவன்
காதல் விதவையானது
எனது நண்பன் ஜகூபாவுக்கு இன்னும் 2 மாதங்களில் திருமணம் நடக்கவிருக்கிறது. என்ன ஒரு ஆச்சர்யமென்றால் எந்தப் பெயரை விரும்பி அந்தப்பெண்ணைக் காதலித்தானோ அதே பெயருள்ள பெண்ணே இவனுக்கு மனைவியாக அமையப்போகின்றாள்.
செங்கோட்டையைப் பூர்வீகமாக கொண்ட சிங்கப்பூரில் செட்டிலான ஒரு குடும்பத்தில் இருந்து அவன் விரும்பிய பெயர் கொண்டவளே உயிர் நிரப்ப வரப்போகிறாள். இப்போது அவளோடு இணையத்தில் இதயத்தை தொலைத்துக்கொண்டிருக்கின்றான்.
ஆனால் நான் இன்னமும் எனக்குள் கேட்டுக்கொண்டே இருக்கின்றேன். எவ்வளவு தீவிரமாய் எனது நண்பனைக் காதலித்த அந்தப்பெண் கடைசி நேரத்தில் மனம் மாறிய காரணம் என்ன..? பலவந்தமா இல்லை பணபந்தமா?
பெயரைக் காதலித்து - அவளின்
உயிரைக் காதலித்தான்
அவளோ
பெயருக்கு காதலித்துவிட்டு
உயிரைப் பறிக்க நினைத்தாள்.
இதயக்கோட்டையில் சிக்கிய செங்கோட்டைக்காரன்
அடுத்து ஜெயச்சந்திரன் - சிவகாமி . இவர்களும் என்னுடைய கல்லூரியில் படித்தவர்கள்தான். ஜெயச்சந்திரன் பிஏ ஆங்கில இலக்கியம். செங்கோட்டையைச் சார்ந்தவன். சிவகாமி பிஎஸ்ஸி வேதியியல். திருநெல்வேலியைச் சார்ந்தவள்.இவர்களின் உண்மையான பெயரையே இங்கு குறிப்பிட்டிருக்கின்றேன். ஏனென்றால் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார்கள்.
கல்லூரியின் ஆரம்ப காலகட்டத்தில் அந்த ஜெயச்சந்திரன் ஒரு பேருந்தில் வைத்து சிவகாமிக்கு காதல் கடிதம் கொடுக்கும்பொழுதே நான் கவனித்துவிட்டேன். அவளிடம் காதல் கடிதம் கொடுக்க முற்பட்டு அவள் அதை வாங்க மறுக்க பின் அந்தக்கடிதம் ஒரு பாட்டியின் கைகளில் மாட்ட இப்படி சுவாரசியமாக ஆரம்பித்தது அந்தக்காதல்
நான் எனது நண்பர்களோடு கல்லூரியின் வராண்டாவிலும் பேருந்திலும் அவனுடைய காதலியை கிண்டலடித்ததாக அவன் என்னை வந்து கண்டித்த பொழுதுதான் அவனுடைய காதல் எனக்கு தெரிய வந்தது.
இதோ இந்தச் சுட்டியில் பாருங்களேன் அவனுடைய காதல் கதையை :
http://nilavunanban.blogspot.com/2005/06/blog-post_30.html
சமீபத்தில் அந்த ஜெயச்சந்திரனை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு சிக்னலில் வைத்து பார்த்தேன். அவசரத்தில் கைகாட்டிவிட்டு சென்று விட்டான். அவனுடைய தொலைபேசி எண்ணை நண்பனின் மூலமாகப் பெற்று அவனைத் தொடர்பு கொண்டு பேசினேன். கல்லூரியில் படித்த பழைய நண்பர்களை இப்படி எதிர்பாராத விதமாக எங்கேயாவது காணும்போது மனம் குழந்தையைப் போல ஓடிச்சென்று கல்லூரி வாழ்க்கைக்குள் சென்று வெளியே வர மறுக்கிறது.
செங்கோட்டையிலிருந்து இவனை
காலம் அழைத்து வந்ததா
காதல் அழைத்து வந்ததா?
வழிமறித்து வலி பெற்றான்
அடுத்த காதல் சுலோச்சனா - முத்துக்குமார். சுலோச்சனா பிஎஸ்ஸி கணிதம் பிரிவைச்சார்ந்தவள். முத்தக்குமாரோ பிகாம் படித்து வந்தான்.
எப்பொழுதும் நான் - எனது நண்பன் மஸ்தான் - சுலோச்சனா எல்லோரும் மாலையில் கல்லூரியை விட்டு பேருந்து நிலையம் வரை ஒன்றாக பேசிக்கொண்டுதான் வருவோம். ஒருநாள் அப்படித்தான் வந்துகொண்டிருக்கும்பொழுது எனது ஊரைச் சார்ந்த பிரபாகர் என்னையும் மஸ்தானையும் வழிமறித்து ஏதோ பேச வேண்டுமென கூற நாங்கள் சுலோச்சனாவை பார்த்து "நீ போ நாங்கள் வருகிறோம் '" என்று விழியசைத்துச் சொல்லிவிட்டு அவனிடம் என்ன என்று கேட்க அவனோ எங்களிடம் சம்பந்த சம்பந்தமில்லாமல் உளறினான்.
நான் புரிந்து கொண்டேன். எங்களது வகுப்புத்தோழி சுலோச்சனா வை அவர்களது நண்பன் முத்துக்குமார் விரும்புகின்றான். இன்று அவன் அவளிடம் காதல் கடிதம் கொடுப்பதாக ஏற்பாடு .
ஆகவேதான் எங்களை தாமதமாகப் போகச்செய்வதற்காக இந்த பிரபாகர் எங்களை வழிமறித்து ஏதேதோ உளருகின்றான். அந்த சந்தர்ப்பத்தில் சுலோச்சனாவிடம் சென்று ,முத்துக்குமார் காதல் கடிதத்தை நீட்டியிருக்கின்றான்.
பின்னர் சுலோச்சனா பயந்து போய் எங்களிடம் வந்து அந்த முத்துக்குமாரை தனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லுமாறு கேட்டுக்கொள்ள நாங்கள் அதனை அவனிடம் சொல்ல பின்னர் முத்துக்குமார் எங்களிடம் வந்து அந்தப்பெண்ணிடம் மன்னிப்பு கேட்பதாக கூற ஒருவழியாய் முடிந்துவிட்டது அந்தக்காதல்.
கல்லூரி முடியும் வரையிலும் அவள் தன்னிடம் வந்து காதலைச் சொல்வாளா என்று கடைசிவரை காத்துக்கொண்டிருந்தான் அந்த முத்துக்குமார்.
இப்பொழுது அந்த சுலோச்சனாவுக்கும் கல்யாணம் முடிந்து வடநாட்டில் செட்டில். இவன் இன்னமும் இந்த வடை நாட்டில்தான் சுற்றிக்கொண்டிருக்கின்றான்.
http://nilavunanban.blogspot.com/2005/12/blog-post_113402856530374224.html
வழி மறித்து
காதல் சொன்னான்
வலி பொறுத்து
காத்து நின்றான்
இதயம் கல்லானது
பாதம் முள்ளானது
பஞ்சரானது காதல்
அடுத்து ஞாபகம் வர்ற காதல் ..யாரு..? ம்..ம்..நம்ம குமார். இவன் கல்லூரி விடுதியில் தங்கி பிஏ ஆங்கில இலக்கியம் படித்துக்கொண்டிருந்தான். பிஎஸ்ஸி கணிதம் இரண்டாம் ஆண்டு படித்த ஒரு பொண்ணை ஒரு தலையாக காதலித்து தறுதலையாகிப்போனான்.
ஒருநாள் நான் கல்லூரி முடிந்து நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தபொழுது சைக்கிளில் வேகமாக என்னிடம் வந்து ஐ லவ் யூ என்று கத்துகிற ஒரு சிறிய கருவியை கொடுத்து சோதனையிடச் சொன்னாhன். எதற்காக அந்தச் சோதனை என்று அப்புறம் தான் தெரிந்தது. அந்தப்பெண்ணை பின்தொடர்ந்து அந்தக் கருவியின் மூலமாக தன் காதலை தெரிவிக்கத்தான் அந்த முயற்சி.
அடப்பாவிகளா அழகான மொழி இருக்கிறது. பேசக்கூடிய திறன் இருக்கிறது. வாயைத்திறந்து காதலிக்கிறேன்னு சொல்ல வேண்டியதுதானேடா..
தினமும் அவள் பின்னால் சைக்கிளில் துரத்திக்கொண்டே சென்று அவளை குறிப்பிட்ட எல்லை வரை வழியனுப்பிவிட்டுத்தான் வருவான்.
ஒருநாள் அவன் காதலிக்கின்ற பெண்ணின் வகுப்பறைத்தோழன் என்னிடம் வந்து அந்தக் குமார் அந்தப்பெண்ணின் கைப்பையில் காதல் கடிதம் ஒன்றை வைத்துவிட்டான் என்றும் அந்தப்பெண் பிரின்ஸிபாலிடம் புகார் கொடுக்கப்போவதாகவும் சொல்லி என்னிடம் வந்து அந்தக் காதல் கடிதத்தைக் கொடுத்தான்.
இதோ அந்தக் காதல் கடிதம்
ஹலோ பெனா.....
உங்ககிட்ட பேசணும் என்று ரொம்ப நாளாக ஆசைப்பட்டுக் கொண்டிருந்தேன். பட் பேசறதுக்கு முடியல. நான் 2 வாரத்துக்கு முன்னாடி ஒரு தடவை சைக்கிள்ல போய்ட்டு இருக்கும்போது நம்ம காலேஜ் கேட் பக்கத்துல நான் ஏ கொஞ்சம் நில்லு என்று சொன்னேன்.
மறுநாள் உங்களோட பீலிங்ஸ் எல்லாம் என்னை திட்டினதாவே இருந்தது. நான் அப்படி சொன்னதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ப்ளீஸ் வெரி சாரி..
நியு இயர்க்காக கிரீட்டிங்ஸ் உங்களோட ப்ரண்ட்ஸ் பேக்ல வைச்சிருந்தேன். அதுல கெஸ் மி ன்னு எழுதியிருந்தேன். நீங்க கெஸ் பண்ணுணீங்களா? பண்ணியிருப்பீங்கன்னு நினைக்கிறேன். கடைசியா நான் கேட்பது உங்களிடம் ஒருமுறையாவது பேசணும் என்பதுதான். எனக்கு ஒரு சான்ஸ் தருவீங்களா? நீங்க என்னிக்கு டிசைட் பண்றீங்களோ அன்னிக்கே பேசிக்கலாம். உங்ககிட்ட பேசறதுக்காக பலதடவை டிரை பண்ணிப்பார்த்தேன்.
பட் உங்களோட பீலிங்ஸ் என்னைப் பேசவிடாமல் பண்ணிவிட்டது. எனக்கு உங்ககிட்ட பிடிச்சதே உங்களோட கண்கள் மற்றும் அந்த கிரீன் கலர் சுடிதார்தான். அந்த டிரஸ்ல நீங்க ரொம்பவே அழகா இருக்கீங்க.
என் நேம் என்னன்னு உங்களுக்கு தெரியாது. ஆனால் இப்ப என்னோட நேம் எழுதியிருக்கிறேன். ப்ளீஸ் நான் அன்னிக்கு சொன்னதுக்கு மறுபடியும் உங்ககிட்ட சாரி கேட்டுக்கறேன்.
எனக்காக ஒரு சான்ஸ் உங்ககிட்ட பேசறதுக்கு தருவீங்கன்னு நினைக்கிறேன். எங்கிட்ட சொல்ல உங்களுக்கு ஏதாவது ப்ராபளம் இருந்தா உங்களோட போன் நம்பர் தாங்க இல்ல என்னோட போன் நம்பர் 540405 நாளைக்கு 6 மணிக்கு மேல் உங்களோட போனுக்காக காத்துக்கொண்டிருப்பேன்.
நீங்க பேசினால் எனக்கு ஒரு சான்ஸ் இருக்குன்னு நினைத்து கொள்ளுவேன். ப்ளீஸ் எனக்காக என்கிட்ட ஒருமுறை பேசுங்க இல்ல பேசுறததுக்கு ஒரு சான்ஸ் தாங்க.
கே. குமார்
அந்தப்பெண் குமாரைப்பற்றி பிரின்ஸ்பாலிடம் புகார் கொடுக்கப்போகிறேன் என்று கூறியதால் அவளிடம் சென்று நான் இனிமேல் குமார் அப்படி செய்யமாட்டான் என்று சமாதானப்படுத்திவிட்டு அந்தக்குமாரையும் அழைத்து ஆறுதலும் சமாதானமும் சொன்னேன்.
இந்தக்கடிதம் அந்தப்பெண்ணால் படிக்கப்பட்டுவிட்டது என்று அவன் நினைத்துக்கொண்டிருக்கின்றான். ஆனால் அந்தக்கடிதத்தை நான்தான் இதுநாள் வரையிலும் பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றேன்
இதோ அது பற்றியான சுட்டி:
http://nilavunanban.blogspot.com/2005/08/blog-post_112377262506374689.html
அவள் சைக்கிளில்
முள் குத்தினால்..
இவன் இதயம்தான்
பஞ்சராகும்!
நண்பா!
நீ துரத்தி சென்ற
அவள் சைக்கிள் தடத்தில்
எத்தனை பாதங்கள் பதிந்தாலும்
இன்னமும்
உன் இதயத்தில்
ஒட்டிக்கொண்டிருக்குமடா..
ஈரமண்ணில் பதிந்து போன
லாரியின் தடம்போல.
இலக்கியம் படிக்க வந்து
இதயம் இழந்தவன் இவன்.
இதய டைரக்டர்
ராஜா-சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் பி ஏ ஆங்கில இலக்கிம் படித்தான். கல்லூரியில்; கவிதை மேடைகளில் உலா வந்த இவன் என்னுடன் இணைந்து பானிபட் இதயங்கள் என்ற கவிதைப்புத்தகம் வெளியிட்டான். அந்தப் புத்தகம் வெளியிடும்பொழுதுதான் அவனுடைய காதல் பற்றி எனக்கு தெரியவந்ததது.
ராஜா எப்போதும் விளையாட்டுத்தனமாகவே இருப்பான். பயங்கர சேட்டைக்காரன். அவனுக்கு நாங்கள் பேய்ராஜா என்று பட்டப்பெயர் வைத்திருக்கின்றோம். செங்கோட்டை தான் இவனது சொந்த ஊர். இங்கு விடுதியில் தங்கிப் படிக்கின்றான்.
அவன் ஜான்ஸ் கல்லூரியில் எம் ஏ ஆங்கில இலக்கியம் படித்துக்கொண்டிருந்தபொழுது திருநெல்வேலி மார்கெட்டில் ஒரு அறை எடுத்து நண்பர்களோடு தங்கியிருந்தான். அந்த அறையில் வைத்துதான் எங்களின் புத்தகம் வெளியிடுவதற்கான திட்டங்களும் முயற்சிகளும் ஆரம்பித்தன.
அவனுடைய காதலியின் பெயர் ஞாபகத்திலில்லை. நாங்கள் அந்தப்பெண்ணை பல்குனி பதக் என்றுதான் அழைப்போம். தலைமுடியை ஆண்கள் போல அலங்கரித்திருப்பாள். பார்ப்பதற்கு ஆல்பம் பாடகி பல்குனி போல இருப்பதால் அந்தப் பெயர் வைத்தோம்.
அவர்களுடைய காதல் எனக்கு குழப்பமாகவே இருக்கும். எப்பொழுது எப்படி ஆரம்பித்தது என்று எனக்குத் தெரியாத. ஆனால் ஏதோ ஒரு கலைவிழாவுக்காக குஜராத் சென்றபோது ஆரம்பித்தது என்று நினைக்கின்றேன். கலைவிழாவில் ஆரம்பித்த காதல் கடைசியில் கலைந்தே போய்விட்டது.
எங்களுடைய பானிபட் புத்தக முயற்சிகளிலும் சின்ன சின்ன உதவிகள் செய்திருக்கின்றாள். திடீரென்று அவனைத் தேடி அந்த அறைக்கே வந்து விடுவாள். நாங்கள் பலமுறை கண்டித்திருக்கின்றோம்.
"டேய் அறைக்கு எல்லாம் அழைத்து வராதே.. பக்கத்துல எல்லாம் பேமிலியா இருக்கு..தப்பா நினைச்சுக்குடுவாங்கடா.." ஆனால் அவனோ அதனை அலட்சியப்படுத்தினார்கள்.
அந்த அறையில் மூர்த்தி - ராஜா -நான் - ரூபன் மற்றும் சில நண்பர்களும் தங்கியிருந்தோம்.
மூர்த்தி அந்த பல்குனி பதக்கை அக்கா அக்கா என்றுதான் அழைப்பான். அவன்மீது அவள் அதிகமான பாசம் வைத்திருந்தாள்.
எங்களுடைய பானிபட் இதயங்கள் புத்தக வெளியிட்டு விழாவில் எங்கள் புத்தகத்தில் ஓவியம் வரைந்து கொடுத்த மூர்த்தி , கவிதை வெளியிட்டு விழா அன்று காலையில் கலெக்டருக்கு மாலை வாங்கி வருவதற்காக சென்றவன் பாளையங்கோட்டை சாலையில்
விபத்துக்குள்ளாகி விட்டான்.
எங்களுக்கு விழா முடிந்தவுடன்தான் அந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. பதறிப்போய் நாங்கள் மருத்துவமனை சென்றபொழுது எங்களுக்கு முன்னரே பல்குனி பதக் வந்து அமர்ந்து அந்த மூர்த்தியின் பக்கத்தில் அமர்ந்திருந்தாள்.
நாங்கள் அந்த மருத்துவமனையே கதியென்று கிடந்தோம். வெளியிட்டு விழாவில் விற்ற புத்தகத்தின் பணத்தை எல்லாம் அவனுடைய மருத்துவச் செலவுக்காக செலவழித்தோம்.
மூர்த்தி செங்கோட்டையைச் சார்ந்தவன் ஆகவே அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வரும்வரையிலும் அந்த பல்குனி பதக்தான் ஒரு தாயுள்ளத்தில் உதவி செய்துகொண்டிருந்தாள்.
பல்குனி பதக்கின் நகை ஒன்றை ராஜா வாங்கி அடகு வைத்துவிட்டான். என்ன காரணத்திற்காக என்று தெரியவில்லை. ஒருநாள் பல்குனி பதக் அவளது தந்தையுடன் வந்து நின்று அவள் நகைகளை திருப்பிக் கேட்க ராஜாவும் நானும் சென்று அடமானம் வைத்த நகைகளை மீட்டு அவளிடம் கொடுத்தோம்.
அந்தச் சம்பவத்தின் பிறகு அந்தப்பெண்ணும் அங்கு வருவதே இல்லை. ராஜாவும் சினிமாவில் இயக்குநராகும் கனவோடு சென்னையில் இன்னமும் சுற்றிக்கொண்டிருக்கின்றான்.
ஏனென்று தெரியவில்லை ராஜா அவளிடம் ஒரு ஒட்டுதல் இல்லாமலே இருந்தான். அவள்தான் இவன் மீது உயிரையே வைத்திருந்தாள்.
இதயம் இயக்கும்
பெண்ணை சுற்றுகின்ற
காதலர்களுக்கு மத்தியில்
சினிமா இயக்குவதற்காய்
சென்னையைச் சுற்றுகின்றான்
ஒரு
கலை விழாக் காதல்
கலைந்து விட்டது
காதல் ஓர் அழையாத விருந்தாளி
இந்தக்காதல் நெல்லை டவுணின் ஆரம்பித்தது. அந்த பையன் இந்து மதத்தைச் சார்ந்தவன். அந்தப்பெண்ணோ இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவள்.
இருவருக்கும் காதல் தீ பற்றிக்கொள்ள அந்தப்பையன் இஸ்லாம் மதத்திற்கு மாறி அந்தப்பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்பட்டான். அதற்கு இருவர் வீட்டிலும் கடுமையான எதிர்ப்பு.
எனக்கு பழக்கப்பட்ட ஒரு கட்சியின் முக்கிய பிரமுகராக இருந்த ஒருவர் அந்தக் காதலனை இஸ்லாம் மதத்திற்கு மாற்றி இருதரப்பினருக்கு பொதுவாக இருப்பவர்களை அழைத்து அவர்களின் திருமணத்தை நெல்லை பேட்டையில் உள்ள ஒரு மசூதியில் வைத்து நடத்தி வைத்தார்
என்னுடைய தங்கையின் திருமணம் நடைபெற்ற அந்த நாளில்தான் அந்த காதல் ஜோடியின் திருமணமும் நடந்தது.
நான் என்னுடைய தங்கையின் திருமணத்திற்காக அந்த பிரமுகரையும் விருந்துக்கு அழைத்திருந்தேன். அவரும் என்னுடைய தங்கையின் திருமண விருந்திற்கு வந்திருந்தார்
. எப்படி தெரியுமா...? அந்த காதல் ஜோடிகளின் திருமணவிழாவில் பங்கு கொண்ட நண்பர்களையும் அந்த காதல் ஜோடிகளையும் அழைத்துக்கொண்டு வேனில் வந்திருந்தார்.
வேனில் வந்து வீட்டு வாசலில் இறங்கும் போதே எனக்கு பகீரென்றது. "என்னடா இப்படி வந்து நிற்கிறாரே" என்று.
எங்கள் வீட்டில் இந்த விசயம் தெரிந்தால் அவ்வளவுதான் பெரிய பிரச்சனையாகிவிடும் ஏனென்றால் எனது தாயாருக்கு இந்தக் காதல், கீதல் ,மண்ணாங்கட்டி எல்லாம் பிடிக்காத விசயம்.
ஆகவே நிலைமையைச் சமாளிக்க என் பெற்றோரிடம் இவர்கள் சமீபத்தில் திருமணமாணவர்கள்தான் எனது நண்பர்கள் என்று கதை சொல்லி அனைவருக்கும் விருந்து வைத்தேன்.
அவர்கள் சென்ற பிறகு எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு விசயம் தெரிந்து தாம் தூம் என்று குதிக்க ஆரம்பித்து விட்டார்கள். வசமாக வாங்கிக் கட்டிக் கொண்டேன்.
அழையாத விருந்தாளிக்கு
விருந்து
மனசுக்கு காதல்தான்
மருந்து
ஒரு தலைக் காதல்
எனது கல்லூரியில் படித்த அந்தப்பெண்ணிற்கு பூர்வீகம் செங்கோட்டை. அவளது தந்தை
அரசாங்க அலுவலராக திருநெல்வேலியில் வேலைபார்த்து வந்ததால் இங்கேயே அவளது குடும்பம் செட்டிலாகியது. அவளது பெயர் சமானா.
அவளது கல்லூரியில் படித்த ஒரு சீனியர் பையனை நேசித்தாள். அந்தச் சீனியர் பையன் பெயர் சுபைர். அவன் கல்லூரியில் கவிதை மேடைப்பேச்சு இலக்கியப்பற்றோடும் கிண்டல் - கேலி என்று விளையாட்டுத்தனமாகவும் திரிந்தவன்.
சுபைர் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபொழுது சமானா முதல் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருந்தாள்
முதலாண்டும் மூன்றாம் ஆண்டும்
காதலுக்குத் தெரியாதே!
ஆகவே
தன் இதயத்தில்
அவனை வைத்து ஆண்டாள்
இவள்
காதலனுக்காய் காத்திருந்த
கம்ப்யூட்டர் "ஆண்டாள் "
அந்தப்பெண் அவனுடைய குறும்புத்தனத்தையும் அவனது மேடைப்பேச்சின் நக்கல்களையும் அவளது வகுப்புத் தோழர்கள் மூலமாய் கேள்விப்பட்டு அவன் மீது ஒருதலைக் காதல் கொண்டாள்.
அவளது வகுப்புத்தோழர்கள் அந்த சுபைரைப்பற்றி அடிக்கடி குறிப்பிட்டு பேச மெல்ல மெல்ல சமானாவின் மனதுக்குள் காதல் வந்து ஓலைக்குடிசைப் போட்டு உட்கார்ந்து கொண்டது தேங்கிய தண்ணீரில் படர்ந்த பாசிகளைப்போல.
அவன் மற்ற வகுப்பு மாணவிகள் நடந்து செல்லும் போது அவர்களின் பின்னால் நின்று ஒருமுறை பாட்டு படிக்க அந்த அதனைக்கண்ட இந்தப்பெண்ணின் தோழிகள் இவளிடம் "சுபைர் அந்தப் பொண்ணுங்களை கேலி பண்றான் பாரு.."என்று அவர்களுக்குள் பேசிக்கொள்ளும் போதெல்லாம்
"அவள் காலேஜ்ல கேலி கிண்டல் எல்லாம் சகஜம்தான் .அதெல்லாம் தப்பா.."என்று அவனுக்கு வக்காலத்து வாங்கியே பேசத் தொடங்க அவளது வகுப்பில் உள்ள மற்ற தோழிகளுக்கும் அவள் சுபைரைக் காதலிப்பது அந்தச் சம்பவங்கள் மூலமாக தெரிய ஆரம்பித்தது.
அவளது தோழிகள் சுபைரிடம் அவளது காதலைச் சொல்ல கட்டாயப்படுத்திய போதெல்லாம் அவள் தயக்கம் காட்டியிருக்கின்றாள். அவனிடம் காதலைச் சொல்ல அவளுக்கு தைரியமில்லை.
ஏனென்றால் அவன் கல்லூரியின் மாணவர்ப்பேரவையில் ஒரு பொறுப்பாளனாக இருக்கின்றான். சமானாவிடம்; பழகுவது போலத்தான் அவன் மற்ற பெண்களிடமும் பழகுகின்றான். அவனிடம் தன் காதலைச் சொன்னால் தவறாக நினைத்துக் கொள்வானோ என்று பயம் கலந்த தயக்கத்துடன் இருந்திருக்கிறாள்
ஆனால் அதற்குள் அந்த சுபைரின் கல்லூரி வாழ்க்கையும் முடிந்துவிட்டது. அவனிடம் இதயம் வாங்க முடியாதவள் ஆட்டோகிராப் மட்டும் வாங்கி வைத்துக் கொண்டாள்.
அந்த ஆட்டோகிராப் கூட அவனிடம் நேரடியாக சென்று வாங்க முடியாமல் தன் வகுப்பு தோழனை விட்டு தான் யாரென்று காட்டிக்கொள்ளாமல் வாங்கியிருக்கிறாள்.
பின் அந்த சுபைரும் சுமார் ஒரு வருடம் கழித்து அந்த கல்லூரிக்கு ஒரு கவிதைகள் விழா சம்பந்தமாக வந்தபொழுது தன் காதல் சொல்லும் தருணம் இதுதானென்று நினைத்து அவனிடம் தன் வகுப்புத் தோழர்கள் மூலமாக அவள் தன் காதலைத் தெரியப்படுத்த சுபைர் திருப்தியளிக்கும் விதமாய் அவளுக்கு பதிலளிக்கவில்லை.
அவளுடைய காதலின் தீவிரம் அறிந்து அவளது வகுப்புத் தோழன் சுபைரிடம் வந்து அவள் அவனைத் தீவிரமாக விரும்புவதாகவும் உணரச்சிவசப்பட்டு தவறாக முடிவு கூட எடுத்துவிடக்கூடும் என்றும் கூறி சுபைரை அவள் சந்திக்க விரும்புவதாகவும் கூறினான்.
ஆனால் சுபைரோ இன்னொரு பெண்ணை காதலித்துக் கொண்டிருக்கின்றான் அவளிடம் தன் காதலை வெளிப்படையாக சொல்ல முடியாமல் தவிப்புகளில் போராடிக் கொண்டிருந்தான்
காதலை எடுத்துச் சொன்னால்
மறுத்திடுவாளோ என்று
அவள் காதலிப்பாள் என்ற
கற்பனையிலேயே
உயிர்வாழ்கின்றான்.
அந்தச் சூழ்நிலையில் அவனுக்கு தெரியாலையே ஒரு பெண் அவனை தீவிரமாக காதலிப்பது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
காதலித்த பெண்ணுக்காய்
காத்திருந்தான் !
காத்திருந்து ஒருத்தி
காதலித்தாள் !
சுபைரும் அவளை ஒரு நண்பனின் வீட்டில் வைத்து சந்தித்து தான் வேறொரு பெண்ணைக் காதலிக்கின்றேன் என்று முகத்திற்கு நேராக கூறினால் எங்கே மனமொடிந்து தவறான முடிவு எடுத்து விடுவாளோ என்று அவளிடம் நாசூக்காக தனக்கு பல பொறுப்பு இருப்பதாகவும் ஆகவே வாழ்க்கையில் செட்டில் ஆக நாட்கள் ஆகும் எனவும் சில சால்ஜாப்பு காரணங்களை கூறி காலம் சம்மதித்தால் பார்ப்போம் என்று தெளிவாய்க் குழப்பி விட்டு சென்றுவிட்டான்.
பின் வெளிநாட்டில் சுபைருக்கு வேலை கிடைத்துவிட அவன் பறந்துவிட்டான். ஆனால் சமானாவின் காதலோ கசாப்புக்கடைக்குள் சிக்குண்ட ஆடாய் தவித்துக்கொண்டிருந்தது.
சுபைர் சொல்லிவிட்டுப்போன - காலம் சம்மதித்தால் பார்க்கலாம் - என்ற ஒற்றை வார்த்தைகளை வைத்துக்கொண்டு அவன் தன்னை காதலிப்பதாக நினைத்துக்கொண்டு அவனது வீட்டிற்கு தொலைபேசி அடிக்கடி செய்து பேசியிருக்கின்றாள் சுபைரின் நண்பனிடம் அவன் எப்பொழுது திரும்பி வருவான் என்று நச்சரித்திருக்கிறாள்.
இதற்கிடையில் சமானாவின் வீட்டில் அவளின் திருமண ஏற்பாடு செய்யப்பட்டபொழுது அதனை ஒதுக்கி வீட்டில் உள்ளவர்களிடம் உண்மையைக் கூற அவர்களோ சமானாவை அவமானப்படுத்தி அவளின் கண்ணீரை ஒட்டு மொத்தமாய் உருவியிருக்கின்றார்கள். அவளும் முடிந்தவரை போராடியிருக்கின்றாள். சுபைரை தொடர்பு கொள்ள அவளால் முடியவில்லை.
இறுதியாக அவள் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்ய சம்மதித்திருக்கின்றாள். இன்னும் 2 மாதங்களில் அவளுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது.
கடைசியாக அவள் சுபைருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கின்றாள்.
வாழ்வின் எல்லா சந்தர்ப்பத்திலும் சுபைரைக் காண விரும்பியவள்
தன் வாழ்நாளில் இனிமேல் எந்த சந்தர்ப்பத்திலும் இறந்து போனால் கூட அவனை சந்திக்கவே விரும்பவில்லை என்று கடிதம் எழுதி யிருக்கின்றாள்.
சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் வந்த சுபைர் அதனை படித்து மிகவும் நொறுங்கிப்போய்விட்டான். தன்னால் ஒரு பெண் இந்த அளவிற்கு மனம் கொதித்துப் போயிருக்கின்றாள் என்பதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளைக் கண்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என துடித்திருக்கின்றான் .
ஆனால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள அவளை மறுபடியும் சென்று சந்திப்பது புத்திசாலித்தனமல்ல என நினைத்து அமைதியாயிருந்திருக்கின்றான் மனதில் எழுந்த காயங்களின் சுனாமி அலைகளை தனக்குள்ளே வாங்கிக்கொண்டு..
அவள் தவறான முடிவு எடுத்துவிடக்கூடாதென்று அவளின் காதலை நாசூக்காய் தவிர்த்த சுபைரின் மீது தவறு இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவன் அந்தப் பெண்ணிடம் தான் இன்னொரு பெண்ணைக் காதலிப்பதாக முதலிலையே கூறியிருந்தால் அவள் தனது காதலை இந்த அளவிற்கு வளர்த்திருக்கமாட்டாள்.
விளையாடிக் காதலியுங்கள்
தயவுசெய்து
காதலோடு விளையாடாதீர்கள்
காதல் ரவுடி
இவனும் என்னுடைய கல்லூரிக்காலத் தோழன்தான். தூத்துக்குடி வஉசி கல்லூரியில் பிரச்சனை செய்ததால் அங்கிருந்து விலக்கப்பட்டு எங்கள் கல்லூரியில் வந்து இரண்டாம் ஆண்டில் சேர்ந்தான்.
பார்ப்பதற்கு நடிகர் சூர்யா போல இருப்பான். சில பெண்கள் கூட அவன் காதுபடவே அவனை சூர்யா என்று அழைப்பது எனக்கு வயிற்றெரிச்சலாக இருக்கும்.
நான் கல்லூரி மாணவர்ப்பேரவை செயலாளராக வருவதற்காக பெரும் முயற்சிகள் மேற்கொண்டான். எதற்கெடுத்தாலும் சண்டைக்கு நிற்பான். சரியான கோபக்காரன். ஆகவே அவனை நாங்கள் ரவுடி பசூல் என்று அழைப்போம்.
கல்லூரிக்கு திடீரென்று ஒரு பெண்ணை அழைத்து வருவான். "யாருடா இது "என்று கேட்டால்
"இது என்னுடைய மாமாப்பொண்ணுடா" என்று சொல்லுவான்.
அவன் யாரைக் காதலித்தான் என்று கடைசிவரைக்கும் எனக்கு தெரியாது. சமீபத்தில் நான் விடுமுறைக்கு ஊருக்கு சென்றபொழுதுதான் கேள்விப்பட்டேன். அவனைக் காதலித்த முதலாண்டுப் பெண்ணை அந்தப்பெண்ணின் வீட்டில் உள்ளவர்களின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டான் என்று.
அந்தப்பெண்ணின் வீட்டில் அவளுக்கு திருமணம் நிச்சயித்து விட்டார்கள் என்று இவனுக்கு தொலைபேசி செய்து அவள் கூற இவன் சினிமாப்போல ஆட்களோடு அவளின் சொந்த ஊரான செங்கோட்டையில் சென்று அவளை அழைத்துக் கொண்டு வந்து இவனுக்கு தெரிந்தவர்கள் வீட்டில் தஞ்சம் வைத்தான்.
பிறகு பெண்வீட்டார்கள் ஒரு படையோடு திருநெல்வேலிக்கு வந்து ,
"அந்தப்பெண்ணை எங்கள் கண்ணில் காட்டுங்கள் அவள் போகச்சொன்னால் நாங்கள் போய்விடுகிறோம் "
என்று கூற பசூலும் தனக்குண்டான படைகள் மற்றும் போலிஸ் துணையோடு அந்தப்பெண்ணை அழைத்து வந்து அவர்கள் முன் நிறுத்த
அந்தப்பெண்ணின் தந்தை கொதித்து போய் "ஏண்டி இப்படி குடும்ப மானத்தை வாங்குற" என்று புலம்பி அந்தப்பெண்ணை அடிக்க வர இவர்கள் தடுத்து பின்னர் தகறாறு - போலிஸ் - சமாதானம் என்று பெரிய போராட்டத்திற்குப்பிறகு பெண் வீட்டார்கள் சென்று விட்டார்கள்
இரண்டு வாரம் கழித்து நெல்லையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைத்து அவர்களின் திருமணம் இனிதே நடைபெற்றது. அந்தப் பெண்ணின் பெற்றோர்களும் வந்து ஆசிர்வதித்து விட்டு சென்றதுதான் சுவாரசியமான விசயம்.
அவனுடைய காதல் கதை சினிமா சம்பவத்தையும் மிஞ்சுவதாக இருந்தது. நாங்கள் படித்த கல்லூரியின் அருகேதான் தற்பொழுது ஒரு வீட்டை வாங்கியிருக்கின்றான்.
கையில் காய்கறி கூடைகளோடு வியர்க்க வியர்க்க நாங்கள் படித்த அதே கல்லூரி அருகே அவன் நடந்து சென்ற பொழுது அவனைப்பார்த்த எனது நண்பனிடம் அவன் கூறியிருக்கின்றான்
டேய் மாப்ள கல்யாணம் மட்டும் பண்ணிடாதீங்கடா என்று..
( அப்படி என்னப்பா கஷ்டமிருக்கு கல்யாணத்தில )
ரவுடியின் மனசில்
காதல் வந்தது.
காதலில்
ரவுடியாகிப்போனான்.
தெருக்காதல்
தெருவில் ஆரம்பித்து தெருவிலையே போராடி தெருவிலேயே திருமணம் முடித்த ஒரு காதல் கதை இது.
அவன் பெயர் செ.சா. ப்ளே மேட் ( Playmate)- க்ளாஸ் மேட் ன்னு ( classmate) சொல்வாங்களே அதுபோல இவன் என்னுடைய ஸ்ட்ரீட் மேட் ( street mate) என்னுடைய சிறு வயதிலிருந்து இப்பொழுது வரை பிரியாத மாறாத நண்பனாக இருந்து வருபவன். ( ஆனா கல்யாணம் முடிஞ்சவுடன வீட்ட விட்டு வெளிய வரமாட்டேன்கிறான் )
அந்தப்பெண் வசதியான வீட்டைச் சார்ந்தவள் . ஆனால் செ.சாவோ மிடில்க்ளாஸ்தான்.
அந்தப்பெண் சைக்கிள் ஓட்ட பழகிய நாட்கள் முதலாய் இவன் அவளிடம் காதல் பழகியிருக்கின்றான்.
அவர்களின் காதல் நாளடைவில் எங்கள் தெருவுக்கே தெரிய ஆரம்பித்தது. ஆனால் என்னிடம் காதல் விசயமாக எதுவுமே சொல்ல மாட்டான். மறைத்து மறைத்து இரகசியமாய் வைத்திருப்பான்.
ஒருநாள் நானும் செ.சாவும் எங்கள் தெரு அருகே உள்ள கம்ப்ய+ட்டர் சென்டர் ஒன்றில்
இருந்தபொழுது அந்தப்பெண்ணின் மாமா வந்து அவனை மிரட்டிவிட்டுச் சென்றார். அப்பொழுதுதான் எனக்கு காதலின் தீவிரம் தெரிய ஆரம்பித்தது. அதன்பிறகு இரண்டு பேர் வீட்டிலும் எதிர்ப்பு.
வசதியான வீடாக இருந்தபொழுதும் அந்தப் பெண்ணோ செ.சாவை கட்டிக்கொள்வதில் மிகவும் உறுதியாக இருந்ததால் அவர்களின் காதல் ஜெயித்தது. சென்ற வருடம்; நான் வெளிநாட்டில் இருக்கும்போது அவர்களின் திருமண அழைப்பிதழ் வந்தது.
காதலில் பெண்கள் உறுதியாக இருந்தால் கண்டிப்பாய் அந்தக்காதல் ஜெயித்துவிடும் என்று அவர்களின் காதல் மூலம் உணர்ந்தேன்
காதல்
தெருவில் முளைத்ததா?
இல்லை
கருவிலேயே முளைத்ததா?
மரணம் - அவளின் திருமண பரிசு
என்னுடைய தெருவுக்கு எதிர் தெருக்காரன். இவன் பெயர் பகீரதன். இவன் காதல்; செத்துப்போய்விட்டது ! காதல் மட்டுமல்ல இவன் கூடத்தான்.
திருநெல்வேலி ஜான்ஸ் கல்லூரியில் பிஎஸ்ஸி பாட்டனி படித்துக்கொண்டிருந்தான். என்னுடைய ஒண்ணாம் வகுப்பு க்ளாஸ் மேட் வேறு.
பக்கத்து தெருதான் என்றாலும் கல்லூரி கலை விழாக்களின் மூலம்தான் இவனிடம் அதிகமான பரிச்சயம் ஏற்பட்டது. விழாக்களில் அவனுடைய கல்லூரி சார்பாக கலந்து கொண்டு ஆட்டம் பாட்டம் நாடகம் என்று கலக்குவான்.
பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த கல்லூரி கலைவிழாக்களில் கலந்து கொள்ளும் அந்தப் பெண்ணை விரும்பினான். அவனுடைய காதல் பற்றி எனக்கு முழுமையாக தெரியாது. அவனுடைய காதலைப்பற்றி அலசி கேட்கும் அளவிற்கான உரிமைகள் நான் எடுத்துக்கொள்ளவில்லை. அவனுடைய நண்பர்கள் மூலமாகத்தான் அறிந்தேன்.
சுமார் 4 வருடங்களுக்கு முன்பு நான் சென்னையில் பராஜக்ட் முடித்துவிட்டு ஊருக்கு திரும்பிவரும்பொழுது ஒருநாள் என் அண்ணனைத் தேடி வீட்டிற்கு வந்தான். என்னுடைய அண்ணனும் அவனுக்குப் பழக்கம் என்பதால் ஏதோ ஒரு விசயத்திற்காக வந்திருக்கின்றான். அப்பொழுதே அவனைக் கவனித்தேன்..காதல் தோல்விக்குண்டான அறிகுறியான தாடியோடு திரிந்தான்.
என் அண்ணன் கூட என்னிடம் கேட்டான்
"டேய் பகீரதன் ஏண்டா ஒரு மாதிரியா இருக்கான்.. என்ன பிரச்சனை?"
"எனக்குத் தெரியல..நான் கேட்டுச் சொல்கிறேன் "என்று சொல்லிவிட்டு அவனது நண்பனிடம் விசாரித்தேன்.
அவன் காதலிக்கும் பெண்ணிற்கு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை திருமணமாம். அதனால்தான் அவன் அத்துணை சோகத்தோடு திரிகின்றான் என்று கேள்விப்பட்டேன்.
அவனைப்பார்த்து ஆறுதல் சொல்லலாமென்று அவன் வீட்டிற்கு இரண்டுமுறை சென்றேன். ஆனால் சந்திக்க முடியவில்லை.
மறுநாள் காலையில் அவனே வீடு தேடி வந்தான். மிகவும் ஜாலியாக இருந்தான்
"என்ன ஞானி வீட்டிற்கு தேடி வந்தியா..? என்ன விசயம்.. "
என்னடா இவ்வளவு ஜாலியா பேசுறானே என்று தயங்கி தயங்கி கேட்டேன்.
"அந்த லவ் மேட்டரா..அவளுக்கு வர்ற ஞாயிற்றுக்கிழமை கல்யாணம்டா..நானும் எவ்வளவே ட்ரை பண்ணினேன்..ஆனால் முடியல..சரி விடுடா "
நானும் அவன் போக்கில் பேசினேன்..
"அதுக்குத்தான்டா தேடி வந்தேன்...சரி விடுடா அந்தப்பெண்ணுக்கு கொடுத்து வைக்கலைன்னு நினைச்சுக்கோ ..அவ்வளவுதான்.. "
"அட இதுக்குத்தான் தேடி வந்தியா..நான் அதை எப்பவோ மறந்திட்டேன்..சரிடா..பார்ப்போம்.. "
அவன் என்னிடம் பேசிய கடைசி வார்த்தை அதுதான். அந்தப்பெண்ணின் திருமண நாளான அந்த ஞாயிற்றுக்கிழமையில் அவன் விஷம் சாப்பிட்டு இறந்து விட்டதாக கேள்விப்பட்டு நொறுங்கிப் போய்விட்டேன்.
ச்சே தனக்கு கிடைத்த இந்த வாழ்க்கையையே நாசமாக்கும் அளவிற்கா இந்த காதல் அத்துணை தீவிரமானது.
சமீபத்தில் தேவைதையைக் கண்டேன் படத்தில் தனுஷ் நீதிபதியை நோக்கி பேசுவதுபோல ஒரு காட்சி "
5 ரூபா கொடுத்து சோப்பு வாங்கினாலும் அந்த சோப்பு தரமானதா இல்லைனா அதற்கு போராடுற சட்டமும் இருக்கு நீதியும் கிடைக்குது. ஆனா 50 வருசம் என்கூட வாழுறேன்னு தலையில அடிச்சி சத்தியம் பண்ணிட்டு என்னை ஏமாத்திட்டா..அவள தண்டிக்க சட்டம் இல்லையான்னு சொல்ற காட்சி யும்
இவளத்தான் கல்யாணம் பண்ணப் போறோம்..இவ கூடத்தான் இப்படி இருக்கப்போறோம்..அப்படி இருக்கப்போறோம்னு மனசுல கற்பனை வளர்த்துட்டு அவ நமக்கு கிடைக்கலைன்னு தெரிஞ்சா ஏதோ எல்லோரும் என்னைய விட்டுட்டு போன மாதிரி நான் அனாதையாயிட்ட மாதிரியும் ஒரு பீலிங்.. என்று கதறும் காட்சியும்
வசனங்கள் முட்டாள்தனமா தெரிஞ்சாலும் அந்தக் காட்சியில யாரோ ஒரு பாதிக்கப்பட்டவனோட நெஞ்சுக் குமுறல் தெரியுது.
அது போன்ற பாதிப்பில்தான் பகீரதனும் தன்னோடு பழகிவிட்டு அவள் யாருடனோ வாழப்போவதை தாங்க முடியாமல் அவளின் திருமண நாளன்று விஷம் குடித்து இறந்து போய்விட்டான். அவள் பிறந்தாளுக்கெல்லாம் எவ்வளவோ பரிசு கொடுத்திருக்கின்றான். ஆனால் அவளின் திருமண நாளுக்கு இவன் கொடுத்த பரிசு இவனுடைய மரணம்..
எனது பக்கத்து தெருவாக இருந்தாலும் கூட அவனுடைய இறுதி சடங்கில் கலந்து கொள்ளும் மன வலிமை எனக்கு இல்லாமல் போனது.
இரண்டு பேர் வீட்டிலும்
கட்டப்பட்டது
அவளுக்கு தாலி
இவனுக்கு பாடை
---
இரண்டு பேர் வீட்டிலும்
தீ மூண்டது
அங்கே விருந்துக்காய்
இங்கே விறகுக்காய்
---
இருவருக்குமே முதல் அனுபவம்..
அவளுக்கு முதல் இரவு
இவனுக்கு முதல் மரணம்..
---
என்
மனமென்ற பாடையிலே - உன்
காதல் வந்து..
கால்நீட்டிப் படுத்திருக்கிறது!
உன் கூந்தல் வாசனைகள்தான்
ஊதுபத்தியாய்..
---
நில் ! கவனி ! காதலி ! ஓடு!
என்னுடைய எம்சிஏ தோழியின் பெயர் ரஞ்சனி. திருநெல்வேலி என்ஜிஓ காலனியைச் சார்ந்தவள். பெயரை மட்டும் மாற்றியிருக்கின்றேன். ஆனால் அந்த காதல் நிகழ்வுகளை மாற்றாமல் தருகின்றேன்.
அவளுடைய பள்ளிப் பருவத்திலிருந்தே சிவா என்ற ஒரு பையனை காதலித்திருக்கின்றாள். எப்படி காதல் ஆரம்பித்தது என்று சுற்றி வளைக்கவே வேண்டாம் ரஞ்சனியின் பக்கத்து வீட்டில் வசிப்பவன் சிவா. பின்னே காதல் ஆரம்பிக்காம இருக்குமா..?
எம்சிஏ இரண்டாம் ஆண்டில்தான் அவளின் காதல் எனக்கு தெரிய ஆரம்பித்தது . ஒருநாள் மதிய இடைவேளையில் கடலை வியாபாரம் செழிப்பாய் நடந்து கொண்டிருந்த ஒரு தருணத்தில் அந்த சிவா வந்து நின்றான்.
கொஞ்சம் கருப்பாக சராசரி உயரத்தில் சண்டைக்கோழி படத்தின் ஹீரோ விஷால் மாதிரி இருந்தான்.
கொஞ்சம் தள்ளி தனது பைக்கை நிறுத்திவிட்டு இவளைப்பார்த்து புன்னகைத்தான் . ரஞ்சனியும் எங்களிடம் ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு அவனை நோக்கி நகர்ந்தாள்.
"டேய் யாருடா அது "- நான் பக்கத்தில் நின்ற ரபீக்கிடம் கேட்க
"அவன் பேரு சிவாடா..அவள லவ் பண்றான்..ரஞ்சனி எங்கிட்ட சொல்லியிருக்கா.. "
- ரபீக் கிசுகிசுத்தான்
"அட இத முதல்ல சொல்லவேண்டாமா..நான் அவளோட அண்ணன்னு நினைச்சு பயந்துட்டேன்டா..அவன் வழியும்போதே நினைச்சேன் ..சம்திங் ராங்ன்னு.. "
"ஹலோ சிவா..மிஸ்டர் சிவா..சௌக்கியமா.."- சிவாவைப்பார்த்து கத்தினேன்
சிவா எங்களைப்பார்த்து சிரித்துக்கொண்டே கை காட்டினான்..உடனே ரஞ்சனி சிவாவை அழைத்துக்கொண்டு எங்கள் பக்கம் வந்து அறிமுகப்படுத்தினாள்..
"எல்லோரையும் அறிமுகம் செய்திட்ட..அந்த சிவா யாருன்னு நீ
சொல்லவேயில்ல.." - நான் கிண்டலடிக்க
"இது என்னோட ப்ரண்ட் "- ரஞ்சனி
"டேய் பாருங்கடா..ப்ரண்ட்டாண்டா..ஹலோ ப்..ர..ண்..ட் "என்று கத்தினோம்.. அதன் பிறகு அந்த சிவா அடிக்கடி வர ஆரம்பித்தான். அவளைப் பார்க்க அடிக்கடி வந்து கொண்டிருந்தால் ஆசிரியர்கள் யாரும் சந்தேகப்பட்டுவிடுவார்களோ என்று பயந்து எங்களைப் பார்க்க வருவது போல வந்து அவளையும் பார்த்து விட்டுச் ஜொள்ளுவான் சாரி செல்லுவான்
ஒருமுறை நாங்கள் ரஞ்சனியின் வீட்டிற்கு விருந்துக் செல்லும்பொழுது அவர்கள் வீட்டில் எல்லோரையும் அறிமுகப்படுத்தி வைத்தாள். அப்படியே அந்த சிவாவின் வீட்டையும் காட்டினாள். தொட்டபடி இருக்கின்றது அந்த சிவாவின் வீடும் இருவரின் இதயமும்.
"சிவா வீட்டுக்கும் நாங்கள் போகலாமா.. "- நான் கேட்டேன்
"இல்ல ஞானி...சிவா என்னய லவ் பண்றது வீட்டுல இப்பத்தான் பிரச்சனை கசிய ஆரம்பிச்சிருக்கு..எங்க அண்ணனுக்கு வேற விசயம் தெரிஞ்சி அந்த சிவாவோட ப்ர்ண்டையெல்லாம் முறைச்சிக்கிட்டு இருக்கான்..இப்ப நீங்க அவன் வீட்டுக்கு போனீங்கன்னா சந்தேகம் வந்திடும்..ப்ளீஸ்.. போக வேண்டாம்.. "
- கெஞ்சினாள்
காதல்
கெஞ்சவும் வைக்கிறது!
கொஞ்சவும் வைக்கிறது!
வாழ்க்கையில்
நஞ்சு வைக்காமல் இருந்தால்..
நல்லதுதான்!
அந்த நேரம் ரஞ்சனியின் அண்ணன் உள்ளே வர எல்லோரிடமும் அவள் அண்ணனை அறிமுகப்படுத்தினாள். அந்த ரஞ்சனியின் அண்ணனை திருநெல்வேலி ஜங்ஷனில் வைத்து பைக்கில் முந்திச் செல்லுகின்ற ஒரு தருணத்தில் நான் அவனிடம் வாய்த்தகறாறு செய்திருக்கின்றேன்.
அவள் அண்ணன் என்னைப்பார்த்து முறைத்துக்கொண்டே சென்றுவிட்டான். பின் ரஞ்சனியிடம் விசயத்தை சொன்னேன்.."உங்க அண்ணனோட போனவாரம் ஜங்ஷன் பஸ்ஸ்டாண்டுல வைத்த வாய்தகறாறு வந்தது அதான் முறைக்கிறான்னு நினைக்கிறேன் "என்று கூற எல்லோருக்கும் சிரிப்பு..
கல்லூரி முடியும் தருவாயில் அவளுடைய காதல் விசயம் அவள் வீட்டுக்கு தெரிய வந்ததால் வீட்டில் அவளை கண்காணிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
பின்னர் நான் 2003 ம் ஆண்டு துபாயில் இருக்கும்பொழுது எனக்கு ஒரு நண்பியிடம் இருந்து மின்னஞ்சல் வந்தது. அதில் ரஞ்சனி சிவாவுடன் எங்கேயோ ஓடிவிட்டாள் என்றும் - ரஞ்சனியின் பெற்றோர்கள்; எனது வீட்டின் தொலைபேசி எண் கேட்டதாகவும் அதற்கு ஞானி துபாய் போய் 6 மாதம் ஆகிறது என்றும் தான் சொன்னதாக எழுதியிருந்தாள்.
(அடப்பாவிகளா..விருந்துக்குதானடா வந்தேன்..இப்படி ஆப்பு வச்சிட்டீங்களடா )
பின்னர் நான் ரஞ்சனியின் நெருங்கிய தோழிகளிடம் மின்னஞ்சல் அனுப்பி அவர்கள் சென்ற இடத்தை கண்டுபிடித்தேன். வேற எங்கே போவாங்க..நம்ம தலைநகர் சென்னைக்குத்தான்..
இப்பொழுது இருவரின் வீட்டிலும் சம்மதம் பெற்று மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.
காதலித்து
ஓடிப்போனாலும் ,
காதல்
ஓடிப்போகவில்லை.!
ஊரு விட்டு ஊரு வந்து
கோவில்பட்டியில் இருந்து வந்து திருநெல்வேலியில் ம.சு பல்கலைக்கழகத்தில் என்னுடன் எம்சிஏ படித்தான் மோகன். பாளையங்கோட்டையில் இருந்து வந்து எம்சிஏ வகுப்புக்கு வந்த அந்தப்பெண்ணின் பெயர் சலினா . நாங்கள் எல்லாரும் நட்பாகத்தான் பழகிக்கொண்டு இருந்தோம். ஆனால் எப்படி பத்திகிச்சின்னு தெரியாதுங்க..
முதல் வருடத்தில் ஒருவருக்கொருவர் நக்கல்; அடித்துக்கொண்டும் - கூட்டமாய் கடலை வியாபாரம் செய்து கொண்டும் - எழுதவதற்குச் சோம்பல் பட்டு சலினா போன்ற நன்றாக படிக்கும் மாணவிகளின் நோட்ஸ்களை எல்லாம் எடுத்து ஜெராக்ஸ் எடுத்துக்கொள்வது- என்று விளையாட்டுத்தனமாய் திரிந்து கொண்டிருந்தோம்.
நாங்கள் எப்படி அந்த சலினாவிடம் நட்பாக பழகினோமோ அதே நட்பில்தான் மோகனும் பழகி வந்தான் என்று தவறாக நினைத்துக்கொண்டோம். எல்லோர் மனதிலும் நட்பு இருந்தது. அவன் மனதில் மட்டும் காதல் வந்து தொட்டு பிடித்து விளையாடியது.
நான் இருவருக்கும் நேர்ந்த காதல் மாற்றங்களை கொஞ்சம் கொஞ்சமாய் கவனித்தேன். ஒருநாள் மோகன் எல்லோருக்கும் அவனுடைய அண்ணனின் திருமண அழைப்பிதழை வந்து கொடுத்தான். கண்டிப்பாய் எல்லோரும் வரவேண்டும் என்று உத்தரவிட்டான்.
திருமணம் கோவில் பட்டியில் வைத்து நடைபெறுவதால் பெண்தோழிகளால் அவ்வளவு தூரம் வரமுடியாது நாங்கள் மட்டும்தான் போகவேண்டும் என்று நினைத்தேன்.
ஆனால் சலினாவோ நானும் எனது தோழியோடு திருமணத்திற்கு வருகிறேன் என்று கூறியபொழுதே எனக்கு சந்தேகம் வந்தது.
சரி அந்த அளவிற்கு நட்புக்கு மதிப்பு கொடுக்கின்றாள் என்று நான் அந்த விசயத்தை அலட்சியப்படுத்தினேன்.
அலைபாயுதே படத்தில் ஷாலினி புடவை கட்டிக்கொண்டு மாதவன் வீட்டிற்கு வருவாளே . அத மாதிரி சலினாவும் மோகன் வீட்டிற்கு வந்தாள்.
திருமண விழா நடந்து கொண்டிருக்கும்பொழுது மோகனின் கோவில்பட்டி நண்பர்கள் சிலர் தூரத்தில் இருந்து சலினாவைக் கைகாட்டி ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். பக்கத்தில் மோகனும் நின்று கொண்டிருந்தான் மறைந்தபடி.
எனக்கு அப்பொழுதுதான் சந்தேகம் துளிர் விட ஆரம்பித்தது. சரி இதுதான் என்னோட கேர்ள்ப்ரண்ட் என்று அவனது கிராமத்து நண்பர்களிடம் பெருமையாய் சொல்லியிருப்பான் என்று நினைத்தேன்.
பிறகு ஒருநாள் வகுப்பறையில் மோகன் சலினாவிடம் அவள் நோட்டைக் கேட்டான்
"சலினா அந்த கிராப் தியரி (Graph theory) நோட்டைக் கொடு..நான் எழுதிட்டு நாளைக்கு தர்றேன்.. "
"ஏன் நீங்க க்ளாஸ்ல நடத்தும்போதே எழுதவேண்டியதுதானே.."என்று செல்லமாய் கோபப்பட்டுகொண்டே தனது நோட்டைக் கொடுத்தாள்
அடுத்த நொடியே கல்லூரியில் பள்ளியில் பார்க்கில் பீச்சில் உலவிக்கொண்டிருந்த காதல் தேவதை என்னிம் ஓடோடி வந்து டேய் ஞானி இந்த ரெண்டு பேரும் வல் பண்றாங்கடா என்று காதில் காதல் ஓதிவிட்டு சென்றுவிட்டாள்.
ஏனென்றால் எங்களையும் மோகனையும் எப்பொழுதும் வாடா..போடா என்று ஒருமையில்தான் அழைத்துக்கொண்டிருந்தாள். ஆனால் திடீரென்று பன்மையில் அவனை மட்டும் வாங்க ..போங்க என்று அழைக்க ஆரம்பித்தாள்.
அவளுடைய காதல் யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்று நினைத்திருந்தால் அவள் புத்திசாலித்தனமாக எங்கள் எல்லோரையும் வாங்க , போங்க என்று அழைக்க ஆரம்பித்திருக்கலாம். ஆனால் அவனை மட்டும் அழைக்க ஆரம்பித்ததால்தான் எங்களுக்கு தெரிய ஆரம்பித்தது.
மறுநாள் சலினா லேப்பில் இருந்தபொழுது ஒரு கவிதை ஒன்றை எழுதிக் கொடுத்தேன்
அந்தகவிதையில் அவளுடைய காதல் எனக்கு எப்படி தெரிய ஆரம்பித்தது என்பதை
ஒவ்வொரு சம்பவமாக எழுதியிருப்பேன். கவிதை வரிகள் எனக்கு ஞாபகத்திலில்லை. நில வரிகள் மட்டும் ஞாபகத்திலிருக்கின்றன
"வாடா போடா "
ஒருமைகள் எல்லாம்
"வாங்க போங்க "
மாறிப்போனதில்
காதல் உணர்ந்தேன்.
கைமாறியது
நோட்டுக்கள் மட்டுமல்ல
இதயங்களும்தான்
என்று சில பஞ்ச் வரிகளை வைத்து 4 பக்கத்திற்கு மிகாமல் ஒரு கவிதை எழுதினேன். பின்னர் உண்மையை சொல்லிவிட்டாள்.
"ப்ரண்ட்சுன்னு சொல்லிகிட்டு திடீரென்று காதலிக்குறோம்னு சொன்னா நீங்க எல்லாம் தப்பா நினைச்சுக்குவீங்கன்னுதான் மோகன் யாருகிட்டேயும் சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டார் "என்று கூறினாள்.
அது எப்படியம்மா தப்பா நினைப்போம்.. நட்புக்கும் காதலுக்கும் இடைவெளிகள் மிக மிக குறைவு.
நட்பு காதலானால் சந்தோசம் மிஞ்சும். ஆனால்
காதல் நட்பானால் சோகமே தஞ்சம்.
அதன்பிறகு நாங்கள் சென்ற சுற்றுலாவில்தான் அவர்களின் காதல் எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்தது. பின்னர் வகுப்பறையில் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மோகனின் முன்னால் கிண்டலடித்து பாடுவோம்
ஊரு விட்டு ஊரு வந்து..
பெப்பப்பே...
காதல் கீதல் பண்ணாதீங்க
விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி - நாங்க
இத்தணை பேரு அட உங்களை நம்பி
மற்றவர்களெல்லாம் நாங்கள் சும்மா கிண்டலடித்துப் பாடுகிறோம் என்றுதான் நினைத்தார்கள். ஆனால் மோகனும் செலினாவும் மட்டும் புரிந்து கொண்டு சிரித்துக்கொண்டிருப்பார்கள்.
இப்பொழுது மோகன் சென்னையில் வேலைபார்த்துக்கொண்டு இருக்கின்றான். சலினாவோ திருநெல்வேலியில் ஆசிரியையாகி இருக்கின்றாள்.
மோகனுடைய வீட்டில் அவன் சம்மதம் வாங்கிவிட்டான். ஆனால் சலினா வீட்டில்தான் அவளுடைய அக்கா மற்றும் தம்பிகளைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது. தெரிந்தால் பிரச்சனையாகிவிடும் என்று பயந்தகொண்டிருக்கிறார்கள்.
என்னப் பிரச்சனை..? எல்லாம் மதப்பிரச்சனைதான். மோகன் இந்து மதம் சலினாவோ கிறித்தவ மதத்தைச் சார்ந்தவள். அவள் பெற்றோர்கள் தீவிர மத நம்பிக்கை உடையவர்கள்.
அவர்களின் காதல் எந்தப் பிரச்சனையுமின்றி திருமணத்தில் முடியவேண்டும்.
நட்பை
நசுக்கிவிட்டு
காதல் வந்து
கட்டில் போட்டுக்கொண்டது.
தோழியை காதலியாக்கியதில் தவறில்லை ஆனால்
காதலைத்தான் தோல்வியாக்கக்கூடாது
கிசுகிசுப்பில் நொந்த நட்பு
நீ என்னைக் காதலிக்கிறாயடா..? என்று எந்தப்பெண்ணாவது உங்களிடம் கேட்டால் எப்படியிருக்கும்?
எனக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது அந்தப்பெண் என்னிடம் கேட்டபொழுது. கல்லூரியில் எல்லோரிடமும் பழகுவது பேலத்தான் நான் அந்தப்பெண்ணிடமும் பழகினேன்.
அந்தப்பெண் மிகவும் அமைதியான பெண். யாரிடமும் தேவையிருந்தால் தவிர மற்ற விசயங்கள் பேச மாட்டாள். நான் அவளிடம் உரிமைகள் அதிகம் எடுத்து பழகியதால் என்னிடம் மற்றவர்களை விடவும் அதிகமாக பழகினாள். இது என்னைச் சுற்றியுள்ள நண்பர்கள் வட்டத்திலும் அவளைச் சுற்றியுள்ள தோழிகள் வட்டத்திலும் கிசுகிசுப்பை உண்டாக்கியது.
ஆனால் அந்த கிசுகிசுப்பை அந்தப்பெண்ணும் பொருட்படுத்தவில்லை. நானும் இதெல்லாம் காலேஜ் லைப்ல சகஜம்தான் என்று அலட்சியப்படுத்திவிட்டேன்.
என்னுடைய நண்பர்களில் ஒருவன் அவளிடம் நான் அவளைக் காதலிப்பதாக நாசூக்காக கூற அவளுக்கு சந்தேகம் வந்துவிட்டது. ஆகவேதான் என்னிடம் அந்த வார்த்தையைக் கேட்டாள்.
என்ன ஞானி உண்மையைச் சொல்லு..நீ என்னைக் காதலிக்கிறாயா..? என்று கேட்டபொழுது நான் தடுமாறித்தான் போய்விட்டேன்.
"ஏன் இப்படி கேட்கிற.?. "- நான்
"இல்ல சில பேர் அப்படித்தான் பேசிக்கிறாங்க..அதான் கேட்டேன்.. "- அவள்
"இந்த பாரு..உனக்கே தெரியும் நான் எல்லோர்கிட்டேயும் சகஜமாகத்தான் பேசுவேன்..உன்னை லவ் பண்ணுவதாக இருந்தால் நான் நேரடியா உன்கிட்டேயயே சொல்லியிருப்பேனே..நான் ஏன் மறைக்கணும்..எப்பவும் நீ எனக்கு நல்ல பர்ணட்பா..அவ்வளவுதான்.".என்று கூற
"எனக்கும் தெரியும் ஞானி..அதனால்தான் நேரடியாக் கேட்டேன்..சாரி..நான் ஏதும் தப்பா கேட்டிருந்தா மன்னிச்சுக்கோ.."- அவள்
"இல்ல..பரவாயில்லை..உனக்கே தெரியும் பசங்கள பத்தி..சும்மா கடலை போட்டுகிட்டு இருந்தாலே..லவ்வுன்னு சொல்லிருவாங்க... "- நான்
எனக்கு என்ன சந்தேகம் என்றால் அவள் மனதில் ஒருவேளே காதல் இருந்திருக்குமோ என்று? துடிக்கின்ற காதல் தும்மலைப்போன்றது எப்பவும் வரலாம் எவர் கண்டார்? என்ற பாடல்தான் ஞாபகம் வருகின்றது.
நட்பு வந்ததும் காதல் வந்ததா
காதல் வந்ததால் நட்பு நொந்ததா?
குளத்தைக் கலக்கியவர்கள்
இந்தக்குளத்தில் காதல் எறிந்தவர்களைப் பற்றிச் சொல்லிவிட்டேன். ஆனால் இந்தக்குளமே காதலாகிப்போனதை சொல்லும் தருணம் இன்னும் வரவில்லை.
என்
கவிதை கண்டு
காதலித்தவர்கள் மத்தியில்..
நான்
கவிதை எழுதி
காதலித்தவள்
நீ ஒருத்திதானடி!
காதல்கள் குப்பை தொட்டியில் விழுந்ததைக் கேள்விப்பட்டிருப்பீர்கள் . ஆனால் குப்பைத்தொட்டியில் இருந்து ஆரம்பித்த காதலைக் கேள்விப்பட்டதுண்டா..? என்னுடைய காதலும் அப்படித்தான் ஆரம்பித்தது.
இவ்வளவு நேரம் என் குளத்தில் காதல் எறிந்தவர்களின் காதல்களை நீங்கள் கவனித்திருப்பீர்களென்றால் பெரும்பாலான காதல்கள் தென்காசி - செங்கோட்டை போன்ற பகுதிகளைச்சுற்றியே அமைந்திருக்கின்றது.
வருடா வருடம் குற்றால அருவியின் சீசனுக்கு தன் காதல் காயங்களின் கண்ணீரைக் கலந்த ஜகூபா தென்காசியைச் சேர்ந்தவன். அவன் மனைவியாகப்போகிறவளுக்கு செங்கோட்டை.
சிவகாமியின் செல்வன் ஜெயச்சந்திரன் செங்கோட்டைக்காரன்
சைக்கிளை துரத்தி இதயத்தை பஞ்சராக்கிய ஆங்கில இலக்கியம் படித்த குமாருக்கு செங்கோட்டை.
காதலில் மட்டும் அரியர்ஸ் வைக்காத ரவுடி பசூலின் காதலி செங்கோட்டைக்காரி
காதல் வாய்ப்பை கைநழுவ விட்டுவிட்டு இயக்குநர் வாய்ப்புக்காக சென்னையில் சுற்றிக்கொண்டிருக்கும் ராஜா செங்கோட்டைக்காரன்
சுபைரை ஒருதலையாய் காதலித்து இதயம் சமாதானமில்லாமல் திரிகின்ற சமானாவுக்கு பூர்வீகம் செங்கோட்டை.
இப்படி செங்கோட்டையைச்சுற்றியே நிகழந்துள்ள என் வாழ்க்கையின் காதல் அனுபவங்களுக்கு என்ன காரணமாக இருக்கக் கூடும்? ஒருவேளை என்னுடைய வாழ்க்கைத்துணைக்கும் செங்கோட்டைக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ..?
இந்தக்குளத்தில் முகம் பதிக்க வரும் அந்த நிலவுக்காக காத்திருக்கின்றான் இந்த நிலவு நண்பன். கல்லெறிந்து காதல் கலங்குமா இல்லை காதல் எறிந்து கற்கள் ஒடியுமா என்பது காலத்தின் கைகளில்.
இறைவன் நாடினால் ஒருநாள் மிஸ் கால், மிஸஸ் கால் ஆகும்போது திருமண அழைப்பிதழ் வரும் ஆசிர்வதிக்க காத்திருங்கள்.
இந்தக்காதலர்தினத்தில்
அதிகமாய் விற்கப்படப்போவது
ரோஜாப்பூக்களா?
விஷப்பாட்டில்களா?
- ரசிகவ் ஞானியார்
Monday, February 13, 2006
இந்தக்குளத்தில் காதல் எறிந்தவர்கள்
Sunday, February 12, 2006
காதலின் வாழ்த்துப்பா
சுமையோடு நிற்கும் தருணம்
என் கைவலியை
காணமாட்டாது..
நோட்டுப் புத்தகம் வாங்கி
வைத்துகொண்டாய்!
நோட்டுபுத்தகம் உன்கையில்...
இதயமோ படிக்கட்டில்!
என் பெயர்
தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில்...
நான் பார்க்காத தருணமாய் - என்
நோட்டுப்புத்தகம் திருப்பினாய்!
முன்பக்கப் பெயரையும்...
பின் பக்கக் கவிதையும் படித்துவிட்டு
புன்னகைத்துச் சொல்கிறாய்...
முன்பக்கக் கவிதை நன்றாக இருப்பதாய்!
அந்தக் கவித்துவத்தில்
ஆரம்பித்திருக்குமோ என் காதல்?
நீ ஒவ்வொருமுறை என்
பெயர்சொல்லி அழைக்கும்போதும்...
என் அணுவுக்குள்...
அணுகுண்டு வெடிக்கிறது!
ஹார்மோன்களுக்குள்...
கபடி ஆட்டம்!
இதயமும், மூளையும் ...
தொட்டுப் பிடித்து விளையாடுகிறது!
இந்த இரசாயன மாற்றங்களில்
தோன்றிவிட்டதோ என் காதல்?
உன் தோழிகளோடு பேசிக்கொண்டே...
என்னையும் நோட்டம்விட்ட
ஒரு தருணத்தில்
நான் எதேச்சயாய் பார்த்துவிட்டேனென்று,
உதடு கடிக்கிறாய்...
விழி மருட்டுகிறாய்..
நாகரீகமாய் சிரிக்கிறாய்...
தோழிகளிடம் ஏதேதோ உளருகிறாய்!
அந்த உளறல்களில்...
தெளிவடைகிறதா என் காதல் ?
மூதாதையர்களின் பெயர்களையெல்லாம்...
துருவித் துருவி விசாரித்ததன் நோக்கம்
அம்மாவுக்குத் தெரிந்திருக்காது!
நீ என்
பெயரின் அர்த்தம் கேட்டதால்தான் என்று!
அந்த அர்த்தம் கேட்டதன்...
அர்த்தத்தில் இருக்கிறதா என் காதல் ?
நீ யாருடனாவது...
பேசிச் சிரிக்கும்பொழுது
எனக்கு அழுகை வருகிறதே,
அந்த அழுகையில் இருக்கிறதா என் காதல் ?
நான் கவிதை பாடுகின்ற
ஒவ்வொரு மேடையிலும்...
கைதட்டலை ஆரம்பித்துவைப்பாயே?
அந்த கைதட்டலோடு
கலந்திருக்கிறதா என் காதல்?
நான் மேடையில் நிற்கும்பொழுது
சட்டை கலைந்தால்..
தலைமுடி கலைந்தால்..
சரிசெய்யச் சொல்லி - நீ
சைகை காட்டியதில்...
இதயம் கலைந்துவிட்டது...
அந்த சைகையில்...
பதுங்கியிருக்கிறதோ என் காதல்?
வருகைப்பதிவேட்டை விடவும்...
உன் வருகையை
உறுதிப்படுத்துவது நான்தான்!
ஒருவேளை
உனக்காக நான் சொன்ன...
ஆஜரில் இருக்கிறதோ
என் காதல் ?
எனக்குத் தெரியாமல்
என் அரியர்ஸ் விசாரித்தாயே..?
அந்த அக்கறையில்
இருக்கிறதா என் காதல் ?
நீ வரவில்லையென்றால்
பிரச்சனையா...
காய்ச்சலா...
நிச்சயதார்த்தமா? - என
ஏதேதோ துடிக்கிறதே மனசு...?
அந்த
துடிப்பில் இருக்கிறதோ என் காதல் ?
பேசிக்கொண்டே
நடந்து செல்லும் சாலையில்
தற்செயலாய்...(?)
தோளிடித்துக் கொண்டாலும்
மன்னிப்பு கேட்கத் தோணவில்லையே...
இருவருக்கும்...
அந்த நெருக்கத்தில் இருக்கிறதோ
என் காதல் ?
கல்லூரி சுற்றுலா சென்ற ...
ஒரு பேருந்து பயணத்தில்,
எல்லோருக்கும் தெரியும்படியாய் - என்
தோளில் சாய்ந்துவிட்டு...
யாருக்குமே தெரியாமல் - என்
மனசில் சாய்ந்தாயடி!
அந்த ஸ்பரிசத்தில்
இருக்கிறதோ என் காதல்?
திடீரென
ஒருமையில் இருந்து...
பன்மையில் அழைக்க ஆரம்பித்தாயே?
அந்த மரியாதையில்
ஆரம்பித்திருக்குமோ ?
உன்னைப் பிடித்த காரணத்தினாலேயே...
உன் வீடு, உன் தெரு...
உன் கைப்பை ...
உன் உதட்டுச் சாய கம்பெனி...
உன் தோழி உட்பட...
எல்லோரையும் பிடிக்கிறதே,
அந்தப் பிரியத்தில் இருக்கிறதா...
என் காதல் ?
நாம் காதலிப்பதாய்...
கல்லூரியே சொல்கிறது!
ஆனால்
நீயும், நானும் மட்டும்தான்...
இதுவரை சொல்லிக்கொண்டதில்லை!
அந்த மௌனத்தில் ...
மறைந்திருக்கிறதோ நம் காதல் ?
எதில் இருக்கிறதோ தெரியாதடி...?
ஆனால்
உன் இதயத்திலிருக்கும் என்ற
நம்பிக்கையில்
உன்னை காதலித்துக்கொண்டிருக்கிறேன்...
இரு கால்களை இழந்தவனின்
கைத்தடியைப் போல ...
- - ரசிகவ் ஞானியார்
Thursday, February 02, 2006
இறுதியஞ்சலி

நீ என்னை
காதலிக்காவிட்டாலும்
பரவாயில்லையடி!
இறுதியஞ்சலிக்கு
வைக்கப்பட்டிருப்பவனை
பார்த்து செல்பவன் போலவாவது
என்னை பார்க்கவிடேன்..
***
என்
மனமென்ற பாடையிலே - உன்
காதல் வந்து..
கால்நீட்டிப் படுத்திருக்கிறது!
உன் கூந்தல் வாசனைகள்தான்
ஊதுபத்தியாய்..
***
பிறந்தாளுக்கு
பூ தர வருவாயா..?
மரணத்திற்கு
மலர்வளையம் வைக்க வருவாயா..?
எப்படியாவது இருக்கட்டுமடி
உன் வருகை
-ரசிகவ் ஞானியார்
Monday, January 30, 2006
என் வழி....வயித்துவலி

ஹாய் ,
என்னுடைய பெயர் 'இளையதளபதி' விஜய். என்னுடைய தந்தையின் பேனரில் நான் தற்போது 'ஆதி' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளேன். ஆனால் படம் பயங்கர பிளாப் ஆகி நான் மிகுந்த நஷ்டத்தில் இருக்கின்றேன்.
மைக்ரோசாப்ட் நிறுவணம் இந்த துயரத்திற்கு உதவுவதாக வாக்கு கொடுத்துள்ளது. நீங்கள் இந்த மின்னஞ்சலை உங்களது உறவினர்களுக்கு நண்பர்களுக்க அனுப்பினால் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு மெயிலுக்கு 10 பைசா வீதம் எனக்கு தந்துகொண்டிருக்கும்.
தயவுசெய்து எனக்கு உதவுங்கள். நிச்சயமாக நான் இனிமேல் என்னுடைய தந்தையின் பேனரில் நடிக்கவே மாட்டேன்.
அதுமட்டுமல்ல நான் இனிமேல் பஞ்ச் டயலாக்கும் பேசமாட்டேன். தயவுசெய்து தயங்காதீர்கள்.
இது உங்களுக்கு சாதாரண மின்னஞ்சல்தான் ஆனால் எனக்கும் இந்த தமிழ் சினிமாவுக்கும் நீங்கள் செய்கின்ற மிகப்பெரிய உதவி இது.
அன்புடன்,
சொல்லி அடிப்பதில் கில்லி
சொல்லாம அடிப்பதில் திருப்பாச்சி
சும்மா சுழன்று சுழன்று அடிப்பதில்
சிவகாசி ...............
சிவகாசி .................
சிவகாசி ...............
உங்கள் விஜய்
(விஜய் ரசிகர்கள் கோவப்படுறது எனக்குத் தெரியுது ஆனா இது என்னோட கைவண்ணம் இல்லைங்கோ..எனக்கு வந்த மின்னஞ்சலை தமிழ்படுத்தினேன் அவ்வளவுதான் )
இப்படிக்கு
என் வழி ... வயித்து வலி..
ச்சே எனக்கும் பஞ்ச் டயலாக் பத்திகிச்சுங்க..
-ரசிகவ் ஞானியார்
Sunday, January 29, 2006
எங்களை சாக விட்டுடாதீங்க அங்கிள்


இதோ இந்தப் படத்தில் காணும் இரண்டு குழந்தைகளையும் பாருங்களேன். என்ன பள்ளிக்கு டாட்டா காட்டிச் சென்ற உங்கள் வீட்டுக் குழந்தைகள் ஞாபகம் வருகின்றதா?
மேலிருக்கும் சிறுவனின் பெயர் செய்யது தனிஷ் வயது 13 அவனது சகோதரியின் பெயர் மரியம் செய்யது வயது 10 அவர்கள் இருவரும் IISR ( International Indian School in Riyadh ) ல் சிறந்த மாணவர்களாக விளங்குகிறார்கள்.
தனிஷ் அந்தப்பள்ளியில் படிப்பில் 7வது இடத்திலும் அவனது தங்கை மரியம் 6 வது இடத்தில் இருக்கின்றாள்.அதுமட்டுமல்ல மரியம் பள்ளியின் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் கோல்டு மெடலிஸ்ட் வேறு.
அதுவல்ல இங்கு பிரச்சனை. அந்தப் பெருமை அவர்களுக்கு எப்போதுமே கிடைக்குமா என்பதுதான் பிரச்சனை
தினமும் காலையில் இந்த இரண்டு குழந்தைகளும் பதறிப்போய்தான் படுக்கையைவிட்டு எழுந்திருக்கிறார்கள். இவர்கள் காலையில் உணவு இல்லாமல் பள்ளிக்குச் செல்லக்கூடும். ஆனால் ஒரு ஊசி போடாமல் செல்வதில்லை. அந்த ஊசியை மறந்து பள்ளிக்குச் சென்றால் அவர்களுக்கு மரணம்தான் நேரிடும்.
அதுபோல மாலையில் பள்ளி முடிந்ததும் சிட்டுகளாய் பறவைகளாய் மகிழ்ச்சியாய் ஓடிவரும் மற்ற குழந்தைகளை போல இல்லை. ஊசி பயத்தில்தான் வருகிறார்கள். இரவு படுக்கைக்கு செல்லும் முன் அவர்களின் வயிற்றில் ஒரு ஊசி ஏற்றப்படுகிறது.
காலை எழுந்ததும் ஊசி
கனிவு இழக்கும் உடல்வலி
மாலை வந்ததும் ஊசி
மகிழ்ச்சி மறந்த தூக்கம்
என்று பாரதி இருந்திருந்தால் இவர்களுக்காய் மாற்றி பாடியிருப்பான்
உடலுக்குள் தினமிரண்டு
ஊசி - இவர்களின்
பருவத்தில் பிடித்ததப்பா
பாசி?
வலிகளுடைய அந்த இரண்டு ஊசிகள்தான் அவர்கள் உயிர்வாழ தினமும் தேவையான காரணிகள். 8 மணி நேரத்திற்கு ஒருமுறை அவர்களின் வயிற்றில் அந்த ஊசி செலுத்தப்படாவிடில் அவர்களுக்கு மரணம் நேரிடும். என்ன இதயத்தை யாரோ புடுங்கி எரிமலையில் எறிவது போன்ற உணர்வு தோன்றுகிறதா..? ஆமாம் அவர்கள் மரணத்தோடு தொட்டு பிடித்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.
மகிழ்ச்சியாய் குழந்தைகளை முத்தமிடலாம். மரணம் முத்தமிட விடலாமா..?
தனிஷ் மற்றும் மரியம் இருவரும் தலசீமியா ( Thalassemia) என்ற நோயினால் பிறவியிலிருந்தே பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஹீமோகுளோபினைப் பாதிக்கும் இந்த பிறவி நோய் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை முழுங்கிவிடும்.
ஒவ்வொரு நாளும் அந்தக்குழந்தைகள் மற்ற குழந்தைகளைப்போல பள்ளியில் விளையாடுவதற்குதான் ஆசைப்படுகின்றன. ஆனால் தலசீமியா நோயிலிருந்து தங்களை காத்துக்கொள்ள செலுத்தப்படுகின்ற டெஸ்பிரல் என்ற உயிர்காக்கும் அந்த ஊசி யினால் அவர்களால் மற்ற குழந்தைகள் போல இருக்க முடியாது என்று கவலையோடு சவுதி பத்திரிக்கைக்கு ( Saudi Gazette) பேட்டி அளித்துள்ளார் அந்தக்குழந்தைகளின் தாயார் ஜெய்ரின் ஹாபிஷ் .
8 மணி நேரம் தாக்குபிடிக்கும் அந்த ஊசி செலுத்தப்படும் முறையினைப்பற்றி தெரிந்துகொள்ள மாதக்கணக்காய் பயிற்சி எடுத்து இருக்கிறார் அந்தத் தாய் ஜெய்ரீன்.
நம் குழந்தைகள் வருடத்திற்கு ஒருமுறை தடுப்பு ஊசி போடுவதற்கே அவர்கள் செய்கின்ற சேட்டைகள் - அடம்பிடித்தல், இத்தனையும் மீறி அவர்களை தடுப்பு ஊசி செலுத்தப்படும் இடத்திற்கு அழைத்துச்சென்று கை ,கால்களை உதைத்து திமிரும் குழந்தைகளுக்கு ஊசி செலுத்த எத்துணை போராட்டங்கள்? நாம் மேற்கொள்ள வேண்டியதிருக்கிறது.
ஆனால் அந்தத் தாயின் நிலைமையை நினைத்துப்பாருங்கள் தினமும் இரவு அவர்கள் போராட வேண்டியதிருக்கிறது. தினமும் அந்த குழந்தைகள் இரவு நெருங்க நெருங்க தனக்கு ஊசி செலுத்தப்படும் நேரம் நெருங்கிவிட்டதை அறிந்து கடிகாரத்தை பீதியோடு பார்ப்பதை கண்டு வேதனையடைந்து கொண்டிருக்கிறாள் அந்தத்தாய்.
ம்மா ம்மா வேண்டாம்மா ப்ளீஸ்மா ..இன்னைக்கு மட்டும் போட வேண்டாம்மா ..வலிக்குதும்மா என்று கதறும் குழந்தைகளின் கெஞ்சல்களை பொருட்படுத்தாமல் அவர்களின் வயிறு அல்லது கை அல்லது கால்களின் வழியாக அந்த ஊசியைச் செலுத்துகிறாள் அந்தத்தாய்.
அவளுக்குத் தெரியும் குழந்தைகளின் கெஞ்சலுக்காக மனமிரங்கி அந்த ஒருநாள் செலுத்தாவிடில் என்றைக்குமே செலுத்த முடியாது என்று.
மருத்துவர்களின் ஆலோசனைப்படி அந்தக் குழந்தைகளுக்கு அந்த ஊசி செலுத்தினால்தான் அவர்களின் உயிரக்கு உத்திரவாதம். இது அவர்களின் தற்காலிக தீர்வுதான். ஆனால் நிரந்தர தீர்வுக்கு ஒரே வழி bone-marrow transplant அறுவைச்சிகிச்சைதான் .
ஆனால் இந்த அறுவைச்சிகிச்சைக்குண்டான செலவு மிகவும் அதிகம் . அந்தக்குழந்தைகளின் தந்தை செய்யது ஹாபிஷ் ஜன்னல் திரைகள் தயாரிக்கும் வியாபாரம் செய்து வருகிறார். மாதம் சவுதி ரியால் 2000 சம்பாதிக்கின்ற ஒரு சிறு வியாபாரி. அவரால் அந்தச் செலவுகளை ஈடுகட்ட முடியாது
அந்த அறுவைச்சிகிச்சைக்கு சவுதி ரியால் மதிப்பு 170000 (இந்திய மதிப்பு சுமார் 2 மில்லியன் ரூ ) தேவைப்படும். அந்தத் தந்தையினால் இந்த ஊசிக்குண்டான செலவுகளையே ஈடுகட்ட முடியவில்லை
ரியாத்தில் உள்ள ஆர்எம்சி மருத்துவமனையில் ஒருதடவை இலவசமாக அந்த ஊசியும் மற்றும் blood Transfusion ம் நடந்தது. அதன்பிறகு மற்ற நாட்டுக்காரர்களுக்கு இலவசமாக அந்தச்சிகிச்சையை அவர்கள் அளிக்க மறுத்துவிட்டனர்.
மகாராஷ்டிராவைச் சோர்ந்த ஹாபிஷ் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உதவிகள் மூலமாகத்தான் தன் குழந்தைகளுக்கு அந்த உயிர் காக்கும் ஊசியை செலுத்திக்கொண்டிருக்கிறார். உதவிசெய்த நண்பர்கள் எவ்வளவு காலம்தான் உதவிசெய்யக்கூடும். ?
ஆகவே அவர்கள் இப்போது கேரளாவில் உள்ள சில பொது நல அமைப்புகளையும் அவர்களது குழந்தைகள் படித்த IISR பள்ளியையும் அனுகி நாடியுள்ளார்கள். 10000 மாணவர்கள் படிக்கின்ற அந்தப் பள்ளியில் ஒவ்வொரு குழந்தையும் சவுதி ரியால் 20 கொடுத்தால் கூட தங்களது குழந்தைகளின் அறுவைச்சிகிச்சைக்கு பணம் சேர்த்துவிடலாம் என்று பள்ளி நிர்வாகத்திடமும் குழந்தைகளின் பெற்றோர்களிடமும் சில சமூக அமைப்புகள் மூலமாக கெஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்.
சமூக அமைப்புகள் அந்தக் குழந்தைகளை மருத்துவச் செலவு மிகவும் குறைவாக உள்ள வேலூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளுமாறு பரிந்துரைத்திருக்கிறார்கள்.
நீங்களும் யாராவது இந்தக்குழந்தைகளின் துயரத்தில் பங்கு கொள்ள விரும்புகிறீர்களா. இதோ இந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.
செல்பேசி - 0507910906 ( ஹாபிஷ்)
வீட்டு எண் : 01-2135062.
தங்களது பண உதவியை இதோ இந்த கீழ்கண்ட வங்கி கணக்கில் செலுத்தலாம்
Syed Hafiz,
The Saudi British Bank
A/C No. 009017195150,
Sanayah branch, Riyadh.
Or
Syed Hafiz,
ICICI Bank,
A/C No. 00040144156,
Mumbai branch, India.
மேலே குறிப்பிட்டுள்ள நபர் எனக்கு சொந்தமோ நண்பரோ இல்லைப்பா..அவரின் முகம் கூட எனக்குத் தெரியாது. அவருக்கும் எனக்கும் உள்ள ஒரே உறவு முறை அவரும் நானும் மனித வர்க்கம் என்ற நெருங்கிய பந்தம்தான்.
இவருக்கு செய்கின்ற உதவியினால் எனக்கு கிடைக்கின்ற லாபம் என்ன..? எனது இறைவன் சொர்க்கம் கொடுப்பானோ இல்லையோ அந்தக்குழந்தைகளுக்கு இதன் மூலம் கிடைக்கின்ற உதவிகளில் என்னுடைய மனதிருப்தி இருக்கின்றது.
நீங்கள் விழி வைத்தால் அந்த குழந்தைகளின் வலி போகும்.
விழி வைத்து வழி கொடுப்பீர்களா? இல்லை
அழ வைத்து வலி கொடுப்பீர்களா?
வாடகை வீடாம் பூமியிலே
மனிதநேயம் ஒரு கதவு
பாடையிலே நீ போகுமுன்னே
பத்துபேருக்கு உதவு
- ரசிகவ் ஞானியார்
Saturday, January 28, 2006
பேராசிரியர் அப்துல்காதர்
என்னுடைய கணித துறை பேராசிரியர் . மலையாளம் கலந்த தமிழில் பேசுபவர். யாருடைய வகுப்பை தவறவிட்டாலும் இவருடைய வகுப்பை நான் தவறாமல் கலந்துகொள்வேன். அந்த அளவிற்கு தன்னுடைய பாடம் நடத்தும் திறமையால் எங்களை சுண்டியிழுப்பார்
அவர் உடை அணிந்து வரும் அழகே தனி அழகுதான். மலையாள நடிகர் முரளி தெரியுமா..அதான்பா ஜெமினி படத்துல விக்ரமுக்கு உதவுற போலிஸ்காரராக வருவாரே..அவர மாதிரி இருப்பார்
யாராவது தவறு செய்தால் போதும் மலையாளம் கலந்த தமிழில் கண்டிப்பார். நான் கல்லூரி மாணவர்ப்பேரவையின் சார்பாக ஒருமுறை கல்லூரி போராட்டத்தில் கலந்துவிட்டு தாமதமாய் வந்தபொழுது ,
எந்தப்பா நீ கோலேஜ்க்குதான் ( அப்படித்தான் உச்சரிப்பார் College- ஐ) செகரெட்டரி எனக்கு இல்ல..புரியுதா. என்று மலையாளம் கலந்த தமிழில் கடிந்து கொண்டார்.
அவர் மீது எனக்கு மிகுந்த மதிப்பு இருப்பதால் அவர் பேசினால் நான் ஒன்றுமே சொல்ல மாட்டேன்.
மதியம் ஒருமுறை கட் அடித்துவிட்டு கல்லூரியிலிருந்து நண்பர்கள் மொத்தமாக கல்லூரியை விட்டு வெளியே போகும்போது எதிரில் அவர் தன்னுடைய வெள்ளை அம்பாசிடரில் வந்து கொண்டிருக்க நாங்கள் கல்லூரியை கட் அடித்துச் செல்வது தெரிந்தால் சத்தம் போடுவாரோ எனப்பயந்து மீண்டும் அவர் வரும் திசைக்கு எதிர்திசையில் அதாவது மீண்டும் கல்லூரி நோக்கியே செல்லுவதுபோல சென்றோம்.
அவர் வாகனம் கடந்து சென்றவுடன் மீண்டும் பேருந்து நிலையத்தை நோக்கி கால்களை திருப்பினோம்.
மறுநாள் அவர் கட் அடித்த எல்லா மாணவர்களையும் கொஞ்ச நேரம் வெளியில் நிறுத்தி வைத்துவிட்டு பின் அனுமதியளித்துவிட்டார்.
படிங்கப்பா படிங்க..கோலோஜ் முடிஞ்சு வெளியே போனாதான் தெரியும் கஷ்டம்..இப்பவே படிங்கப்பா..
அவரை மிகவும் விரும்பியதற்கு காரணம் அவரின் உடையழகு - பாடம் எடுக்கின்ற முறை - நாகரீகமான அணுகுமுறையைக் காட்டிலும் மிக முக்கிய காரணம் என்னவென்றால் நான் விரும்பும் பெண்ணுக்கு அவர்தான் மறக்கு முடியாத ஆசான் அதுதான் முக்கிய காரணம். என்ன நியுட்டனின் 3 வது விதி ஞாபகம் வருதா?
- ரசிகவ் ஞானியார்
Tuesday, January 24, 2006
சுப்பிரமணிக்கு கல்யாணம் டோய்

யார் இந்த சுப்பிரமணி? இளங்கலை கணிதம் பயிலும்போது என்னுடைய கல்லூரியில் சீனியர். பிறகு நான் எம்.சி.ஏ படிக்கும்போது வகுப்புதோழராக மாறினார்.
இன்று வந்த மெயிலில் இன்விடேஷன் ப்ரம் சுப்பிரமணி என்று வந்ததுமே பரபரப்பாய் திறந்து பார்த்தேன். அவருடைய திருமண அழைப்பிதழ். வருகின்ற ஞாயிறன்று திருநெல்வேலியில் உள்ள ராஜ்மஹால் மண்டபத்தில் வைத்து காலை 9 மணிக்கு நடைபெறுகின்றது.
மணமகளின் பெயர் : ஆர் சுபாஸ்ரீ
மணமகன் பெயர் : வி. சுப்பிரமணியன்
நாங்கள் வகுப்பறை தோழர்கள் என்பதை விடவும் டீக்கடை தோழர்கள் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் வகுப்பறையை விடவும் டீக்கடைகளில்தான் எங்களின் சந்திப்புகள் அடிக்கடி நிகழும்.
டீக்கடை சம்பாஷணைகள் மிகவும் சுவாரசியமாக இருக்கும். க்ளாஸ் கட் அடித்து விட்டு அல்லது இரண்டு க்ளாஸ்க்கு இடைப்பட்ட நேரத்தில் பாளையங்கோட்டை ஹைகிரவுண்டில் உள்ள விஎம்எஸ் கல்யாண மண்டபத்திற்கு எதிரே டீக்கடைதான் எங்களின் குட்டி வகுப்பறை. வருகைப்பதிவேட்டை வகுப்பறையில் எடுப்பதை விடவும் டீக்கடையில் எடுத்தால் வருகை எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
கிண்டல்
"அண்ணே ரெண்டு டீ - க்ளாஸை கழுவி போடுங்கண்ணே "என்று ஆரம்பிப்பேன்.
சுப்பிரமணி கொஞ்சம் பயந்த சுபாவம். "ஞானி அடி வாங்கப்போறோம் ஒருநாள். அவர் காதுல கேட்டுற போதுடா" என்று பயந்துபோவார்.
அந்த டீக்கடை மாஸ்டரின் காதினில் கேட்டாலும் சிரித்துக்கொண்டே இருப்பார் ஒன்றும் சொல்ல மாட்டார்
"அண்ணே இந்த ஏரியாவுல நல்ல டீக்கடை எங்கண்ணே இருக்கு" என்று கேட்டுவிட்டு டீ மாஸ்டருடன் சேர்ந்தே சிரிப்போம்.
மதிய வேளையில் மொத்தமாக சென்று அந்த டீக்கடையின் பக்கத்தில் உள்ள கடையில் புரோட்டா சாப்பிடுவோம். சாப்பிடும்போது ஹலோ அந்த பாட்டை மாத்துங்க இந்த பாட்டை மாத்துங்க .ஹிந்தி பாட்டு போடுங்க..தமிழ் பாட்டு போடுங்க..என்று ஒரே நமச்சல்தான்.
தர்மசங்கடம்
பின்னர் அங்குள்ள விஎம்எஸ் திருமண மண்டபத்தில் நடைபெறும் யார் வீட்டு திருமண விழாவுக்கோ நாங்கள் சென்று விருந்தினர்கள் போல சாப்பிட்டுவிட்டு வருவோம்.
ஒருநாள் அப்படித்தான் எல்லோரும் ஒரு திருமண விழாவிற்கு நாங்கள் அழைக்காத விருந்தினர்களாய் சாப்பிடச் சென்றபொழுது எங்கள் குழுவில் உள்ள ஒருவனின் அண்ணனும் வந்துவிட்டான்.
டேய் அது என்னோட கஸ்டமர் ஒருவரோட திருமணம்டா உனக்கு யாரைடா தெரியும் இங்கே ..என்று அந்த அண்ணன்காரன் கேட்க
நாங்கள் குறுக்கே புகுந்து இல்லைண்ணே பொண்ணோட மாமாப்பையன் எங்ககூடதான் படிக்கிறான் அவன்தான் இன்வைட் செய்தான் என்று ஏதோதோகூறி சமாளிக்க வேண்டியதாகிப் போய்விட்டது
பந்தயம்
பின்னர் எம்சிஏ வகுப்பறையின் வாசலில் அமர்ந்துகொண்டு தேவதைகளை ரசிப்பது. ஒரு நாள் முதலாண்டு பெண்ணிடம் பேச முடியுமா என்று என்னிடம் பந்தயம் கட்டினார்.
நான் என்ன பேசுவது எனத்தெரியாமல் ஒரு துண்டுச் சீட்டில்
gnaniyar2k@rediffmail.com
www.rediffmail.com
India
என்று எழுதி அந்தப்பெண்ணிடம் சென்று ஹலோ உங்களுக்கு பாளையங்கோட்டை என்ஜிஓ காலனி பக்கம்தானே.
ஆமா என்று பயந்தபடி சொல்ல
இந்த அட்ரஸ் எங்கேன்னு சொல்லுங்களேன் ப்ளீஸ் என்று கூறி அவளிடம் அந்த துண்டு சீட்டைக் கொடுக்க அவளோ சீரியஸாய் பார்த்துவிட்டு படித்ததும் என்னை நிமிர்ந்து பார்த்து ,
இந்த அட்ரஸ் எங்க வீட்டு பக்கம்தான்.
எங்க வீட்டுப்பக்கத்துல ஒரு பர்வுசிங் செண்டர் இருக்கு அங்கதான் இருக்கு என்று போட்டாலே ஒரு போடு. எனக்கு அவமானமாய் போய்விட்டது
அவரிடம் வந்து காலரை தூக்கிக்கொண்டேன்.பார்த்தீங்களா பேசிட்டேன் என்று. ஆனால் அங்க அந்தப்பொண்ணு என்ன பேசினான்னு அவர் கேட்கவேயில்லை.
குரூப் ஸ்டெடி
நாங்கள் குரூப் ஸ்டெடி வைக்கும் நாட்கள் ஜாலியாக இருக்கும். சுப்பிரமணி திருநெல்வேலி ஜங்ஷனில் உள்ள சிந்துபூந்துறை என்ற பகுதியில் தனது நண்பனின் அறையில் தங்கியிருந்து படித்து வந்தார் அவரது பூர்வீகம் தென்காசி.
நானும் சில நண்பர்களும் தேர்வு சமயங்களில் அங்கு வந்துதான் ஒன்றாக படிப்போம்.
பிட் எழுதுவது
எந்த கேள்விகள் எல்லாம் வரும் என்று அலசுவது
இடையிடையே போரடிக்காமல் இருக்த திருநெல்வேலி ஜங்ஷன் பேருந்து நிலையம் வந்து டீ அடிப்பது
வகுப்பறையின் எதாவது பிகர்களைப்பற்றி பேசுவது என்று மிகவும் ஜாலியாக இருக்கும். படிப்பது 40சதவிகிதம் தான். மற்ற 60 சதவிகிமும் நாட்டு நடப்புகள்தான்.
திடீரென்று யாருக்காவது போன் செய்து டேய்! நீ படிச்சிட்டியா! நீ படிச்சிட்டியா! என்று தொலைபேசி செய்து தொல்லை கொடுப்போம்.
இரவு முழுவதும் படித்து விட்டு பரிட்சைக்கு சென்று திரும்பி அந்த அறையில் வைத்து ச்சே இது எனக்கு தெரிஞ்ச கொஸ்டின்தான் எழுதாம போயிட்டேனே
ச்சே இது நான் எழுதுன கொஸ்டின்தான் பிட் எடுக்காம போயிட்டேனே என்று ஆளாளுக்கு புலம்ப ஆரம்பித்துவிடுவோம்.
அந்த சுப்பிரமணி மட்டும் எதுவுமே புலம்பமாட்டார். பிட் அடித்தால் எங்கே மாட்டிக் கொள்வோமோ என்று பயந்து பிட் அடிக்கமாட்டார். பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டு எழுதியிருக்கலாம் . ஆனால் அவர் பிட் அடித்து நான் கேள்விப்பட்டதில்லை.
பரிட்சை நேரங்களில் பாளையங்கோட்டையில் உள்ள சேவியர் கல்லூரியில் வைத்து மாலை நேரங்களில் மரத்தடியில் அமர்ந்து படிப்போம். அங்கு வீசுகின்ற காற்றைப்போலவே பாடங்களும் மிக மென்மையாக மனதில் பதியும். எனக்குண்டான சந்தேகங்களை அழகாக தீர்த்து வைப்பார்.
நான் படிக்க சோம்பல் படும்பொழுதெல்லாம் இன்னும் ஒரே ஒரு கொஸ்டின்தான் ஞானி படிச்சுருவோம் என்று ஊக்கம் கொடுத்து என்னை படிக்க வைப்பார். பின்னர் படித்ததை அவர் என்னிடமும் நான் அவரிடமும் ஒப்பித்துக்கொள்வோம். மறக்கமுடியாத நாட்கள் அவை.
கோபம்
கல்லூரியின் கடைசி நாளில் எல்லோரும் ஆட்டோகிராப் வாங்கிக்கொண்டிருக்க நான் அவருடைய ஆட்டோகிராப் டைரியை எடுத்து அதில் வகுப்பு தோழி ஒருத்தி அவருக்கு எழுதியதை வகுப்பின் முன்சென்று வாசித்தேன்
சுப்பிரமணி உங்களை முதன்முதலாக பாளையங்கோட்டை பெல் பின்ஸ் நிறுவனம் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போதுதான் பார்த்தேன் என்று ஆரம்பிக்கும் அந்தப் பெண் எழுதிய ஆட்டோகிராப்.
நான் வாசிப்பதை தெரிந்து எழுதிய அந்தப்பெண்ணும் வெட்கப்பட மாணவர்கள் கத்த ஆரம்பிக்க சுப்பிரமணிக்கு தர்ம சங்கடமாகப் போய்விட்டது. பின்னர் அந்த டைரியை என்னிடமிருந்து கோவமாய் பிடுங்கினார்.அதன்பிறகு யாரிடமுமே ஆட்டோகிராப் வாங்கவில்லை
அவர் என்மீது கோவப்பட்டாலும் எதுவுமே திட்டாமல் என்னிடம் பேசபாமல்அமைதியாக இருந்தார். ஆனால் கோவத்தில் திட்டுவதை விடவும் அவரின் அமைதி என்னை மிகவும் பாதித்தது. பின்னர் அவரிடம் மன்னிப்பு கேட்டேன்.
திருமணவாழ்த்து
அவருடைய திருமணத்திற்கு எதிர்பாராத விதமாக சென்று டேய் நம்ம சுப்பிரமணிக்கு கல்யாணம் டோய் என்று மற்ற நண்பர்கள் மத்தியில் கத்தி அவரை கிண்டலடிக்க ஆசையாக இருக்கிறது.
கல்யாண மேடையில் அவரது மனைவியிடம் ஹலோ உங்க ஆளு காலேஜ்ல என்ன சேட்டை செய்வார் தெரியுமா என்று கூறி அவரது மனைவியையும் அவரையும் வெட்கப்படவைப்பது என்று ஏதோதோ கனவுகள்
ம் எல்லாம் வெறும் கனவுதான்.
அவருடைய திருமணத்திற்கு
நிறைய நண்பர்கள் வரக்கூடும். ஆனால் இந்த
நிலவு நண்பனால் மட்டுமே வரமுடியாது. ஆகவேதான் அந்த ஞாபகத்தில் இந்த பதிவு.
இந்த பதிவுக்கு விமர்சனம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை எனக்காக ஒரு வாழ்த்தை எனது நண்பனுக்கு தெரிவித்துவிட்டுப்போங்களேன்பா.
"அட முகம் தெரியாத நண்பர்கள் கூட நம்முடைய திருமணத்திற்காக வாழ்த்து அனுப்பியிருக்கிறார்களே ரொம்ப நன்றிடா ஞானி.."என்று அந்த நண்பர் மகிழ்ச்சியடையக்கூடும்.
ஏனென்றால் அவருடய திருமண பரிசாக இந்த பதிவைத்தான் அனுப்பபோகிறேன். அவர் இன்றோ நாளையோ இதனை படிக்ககூடும்.
நண்பா!
மாணவனாய் இருந்து
மணமகனாய் மாறுகிறாய்.
எப்பொழுதும் மாறாமல்
என்னுடைய நண்பனாய்
நீ இருப்பாய் என்ற நம்பிக்கையில் ..
வாழ்த்துகிறேன்
உன் திருமணத்தில்
தெளிக்கப்படுகின்ற
பன்னீரில் எனது - ஆனந்தக்
கண்ணீரும் கலந்திருக்கும்
கடல்தாண்டி வருவதற்கு...
இயலவில்லை நண்பா!
நான்
வரவில்லையென்று நீ
வருத்தப் படாதே!
வாசலில் கையேந்தி நிற்கின்ற
ஏதாவது ஒரு பிச்சைகாரனின்
வயிற்றுப்பசியை நிரப்பு!
இங்கே
உன் திருமணவிருந்தின் சுவையறிவேன் நான்.
- ரசிகவ் ஞானியார்
Monday, January 23, 2006
ரவுடிகள் ஜாக்கிரதை

சண்டைக்கோழி
கல்லூரி வாழ்க்கை முடிந்து எல்லோரும் விடைபெற்றுச்செல்ல கதாநாயகன் தன் கல்லூரி நண்பனுடன் அவனது ஊருக்கு சென்று சில நாட்கள் தங்க நேரிடும்போது சந்தர்ப்ப வசத்தால் ஊரில் உள்ள ஒரு ரவுடியின் பகைமைக்கு உள்ளாகின்றான். அந்த ரவுடியால் அந்த நண்பனின் குடும்பத்தில் உள்ள அனைவரும் பாதிக்கப்பட நண்பனின் குடும்பத்தையும் தனது உயிரையும் எப்படி காப்பாற்றிக்கொள்கிறான் என்பதுதான் கதை
கதாநாயகன் : விஷால்
கதாநாயகி : மீரா ஜாஸ்மின்
சண்டைக்கோழி - ரவுடிகள் காலி

சரவணா
கல்லூரி வாழ்க்கை முடிந்து எல்லோரும் விடைபெற்றுச்செல்ல கதாநாயகன் முடிந்து தன் கல்லூரி நண்பனுடன் அவனது ஊருக்கு சென்று சில நாட்கள் தங்க நேரிடும்போது ஊரில் உள்ள ஒரு ரவுடியை பகைக்க நேரிடுகிறது. அந்த ரவுடி நண்பனின் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொன்றுவிட அந்த ரவுடிகளிடமிருந்து கதாநாயகியை அதாவது நண்பனின் தங்கையை எப்படி காப்பாற்றுகிறான் என்பதுதான் கதை
பிரகாஷ்ராஜ் போலிஸாராக வந்து கலக்குகிறார்
கதாநாயகன் : சிம்பு
கதாநாயகி : ஜோதிகா
சரவணா - இனி பார்ப்பேனா?

ஆதி
தனது குடும்பத்தில் உள்ள அனைவரையும் ரவுடிகள் கொன்றுவிட ரவுடியை பழிவாங்கக் கிளம்புகிறார் கதாநாயகன். அதேபோல பழிவாங்க கிளம்பும் கதாநாயகியோடு பழகி காதல்கொள்ளுகிறார். கடைசியில்தான் தெரிகிறது இருவரும் ஒரே குடும்பம் என்று
பிரகாஷ்ராஜ் போலிஸாராக வந்து கலக்குகிறார்
கதாநாயகன் : விஜய்
கதாநாயகி : த்ரிஷா
ஆதி - ரவுடிகளுக்கும் ரசிகர்களுக்கும் பீதி
பரமசிவன்
தனது குடும்பத்தில் உள்ள அனைவரையும் சட்டத்தைக்காக்கும் போலிஸார்களே கொன்றுவிட அவர்களை கொன்றுவிட்டு சிறைச்சாலையில் மரணதண்டனை அனுபவிக்கும் கதாநாயகனை தப்பிக்கவைத்து நாட்டை அழிக்க வந்துள்ள தீவிரவாதிகளை அழிக்கும் கதை.
பிரகாஷ்ராஜ் போலிஸாராக வந்து கலக்குகிறார்

பரமசிவன் - பார்ப்பவன் எவன்?
எல்லாவற்றிற்கும் ரவுடிகள் ஜாக்கிரதை என்று ஒரே பெயராக வைத்தால் நன்றாக இருக்கும்.
- ரசிகவ் ஞானியார்
Sunday, January 22, 2006
மாமாப்பயலுவ

நேற்று துபாய் - டெய்ரா என்னும் பகுதியில் உள்ள சப்கா பேருந்து நிலையம் அருகே உள்ள படகுத்துறைப் பகுதியிலிருந்து அறை நோக்கி வந்து கொண்டிருந்தேன்.
எதிரே பங்காளி நாட்டைச் சேர்ந்த ஒருவன் என்னை நோக்கி கண்களை மேலும் கீழும் அசைத்தான் அந்த சைத்தான். எனக்கு புரிந்துவிட்டது அவன் மாமாப்பய என்று.
அவனுடைய அந்த கண்ணசைப்புக்கு என்ன அர்த்தம் என்றால் என்னிடம் எல்லா நாட்டு பெண்களும் இருக்கின்றது நீ வர்றியா என்று பொருள். தொலைக்காட்சியில் ஊமைச் செய்திப் பார்த்திருப்பீர்களே அதுபோல இமைகளை மேலும் கீழும் சுருக்கி மெதுவாக பக்கம் வந்து காதில் ஓதுவான் மன்ந்த என்று.
( இந்தியில் மன்ந்த என்றால் வேணுமா என்று பொருள்)
ஒருமுறை என்னிடம் அவன் அப்படி கேட்டபொழுது எனக்கு என்னையே எரித்துக்கொள்வது போன்று எனக்கு அவமானமாய் தோன்றும்.ச்சே நம்மகிட்ட வந்து கேட்டுட்டானே என்று
இது ஒன்றும் புதிதல்ல. எனக்கு மட்டும் கிடைக்கின்ற அனுபவம் இல்லை. அந்தப்பகுதியை கடப்பவர்கள் வழக்கமாக பார்த்து புளித்துப் போன விசயம். அந்தப்பகுதியை யார் கடந்து சென்றாலும் அவன் கண்களிடம் இருந்து தப்பிக்க முடியாது.
நாம் அவனுடைய கண்களிலிருந்து தப்பிக்க ஒரே வழி என்ன வென்றால் அவன் நம்மை பார்க்குமுன் நாம் தலைகுனிந்து கொள்ளுவதுதான். அப்படியே அவன் பார்த்தாலும் அவனுடைய பார்வையை அலட்சியப்படுத்தி சென்று விடவேண்டும்.
என்னை அவன் பார்க்கும்பொழுதெல்லாம் அப்படித்தான் தலைகுனிந்துகொண்டோ அல்லது அலட்சியப்படுத்தியோ சென்றுவிடுவேன். எனக்கு அவன் அப்படி சைகை காட்டும்பொழுதெல்லாம் அப்படியே அவனைப் பிடித்து
மாமாப்பயல உனக்கு அறிவில்லையாடா.. பொம்பளய கூட்டிக்கொடுக்கிறாயே இப்படி ஒரு கேவலமான தொழிலைச் செய்கிறாயே..வெட்கமா இல்ல உனக்கு என்று கேட்கவேண்டும்போல இருக்கும்
ஆனா கேட்டால் அவ்வளவுதான் அவனுடைய சாதியைச் சார்ந்த பலர் சுற்றிக்கொண்டு இருப்பார்கள். பாய்ந்து வந்து தாக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆகவே கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்க வேண்டும்.
டேய் அவங்களுக்கெல்லாம் வேறு வழியில்லைடா பாவம்டா..
என்று என்னுடைய நண்பர் அவர்கள் மீது பரிதாபப்பட்டிருக்கிறார்.
அவங்களெல்லாம் என்ன சுதந்திர போராட்ட தியாகிகளா..? அவர்கள் என்ன வலுக்கட்டாயமாகவா இந்த தொழிலுக்கு வந்திருக்கிறார்கள்.. என்று நான் பலமுறை அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றேன்.
மாமாப்பயலுகள் பெரும்பாலும் பங்காளிகள்தான். பெரும்பாலும் பங்காளிகள் லாண்டரிக்கடைகள் தான் வைத்திருப்பார்கள். இங்கே குறைந்த சம்பளத்தில் வேலை பார்ப்பதால் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணி இதுபோன்ற முதலீடில்லாத பார்ட் டைம் பார்க்கிறார்கள். சிலர் கல்லிவல்லி விசாவில் ( முறையற்ற விசா) இருந்து கூட இந்த தொழிலில் ஈடுபடுவார்கள்.
அவர்கள் இந்தத் தொழிலில் காட்டும் அக்கறையையும் தொழில் நுணுக்கத்தையும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் எக்ஸிகியுட்டியாக வேலைபார்த்தால் அந்த நிறுவனத்தை எங்கேயோ கொண்டு சென்று விடுவார்கள். அந்த அளவிற்கு திறமையாக வாடிக்கையாளர்களை கவருவார்கள்.
இந்த மாமாக்களின் புகைப்படத்தை எடுப்பதற்குள் மூச்சே போய்விட்டது. நான் எடுப்பதை அறிந்து அவன் தனது முகத்தை திருப்பிக்கொண்டான்

பெரும்பாலும் ஏதாவது சந்தின் முனையில் - அவர்களது வாழ்க்கையைப்போலவே பாதி இருட்டு, பாதி வெளிச்சம் உள்ள பகுதிகளில் - போலிஸார் வந்தாலும் தப்பித்து செல்லக்கூடிய வசதியோடுதான் நிற்பார்கள்.
ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிப்பார்கள் என்று தெரியாது. பத்திரிக்கையாளன் போல யாரையாவது அழைத்து பேட்டி எடுக்கலாம் என்று கூட நினைத்தேன் . அப்புறம் நான் பேட்டி எடுப்பதைப்பார்த்துவிட்டு ஊர்க்காரர்கள் எவராவது ரேட் பேசுவதாக தவறாக நினைத்துகொள்வார்களோ எனப் பயந்து சூழ்நிலைகளின் இறுக்கம் கருதி அந்த முயற்சியை விட்டுவிட்டேன் .
எப்படியும் ஒரு நாளைக்கு குறைந்து இந்திய மதிப்புக்கு 1000 ரூ வரை சம்பாதிக்க கூடும். வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் வியாழக்கிழமை இரவுகளிலும், குளிர் காலங்களிலும் அதிகமாக பொருள் ஈட்டுவார்கள்.

இருட்டுக்குள் அந்த மாமாப்பசங்களுடன் பேரம் பேசுகின்ற நிறைய பாகிஸ்தானியர்களைப் பார்த்திருக்கின்றேன். கொஞ்சமாய் அதிகமாய் அதிகமாய் கொஞ்சமாய் என்று தமிழ் முகங்களையும் கண்டிருக்கின்றேன்.
அப்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன். அவர்களின் பெற்றோர்களோ அல்லது மனைவியோ அவர்கள் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருப்பார்கள். அவர்களின் நம்பிக்கையை திர்ஹத்தால் முலாம் பூசுகிறார்கள் இந்தத் தமிழர்கள்.
"கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும் அது பொதுவில் வைப்போம்"
ஒரு ஊரில் ஒரு பெண் கற்பிழந்து விட்டால் என்றால் எங்கேயோ ஒரு ஆணும் கற்பிழந்து விட்டான் என்றுதானே அர்த்தம் என்று அன்றே சொன்ன பாரதியின் புரட்சிதான் ஞாபகம் வருகிறது.
மனைவியை அங்கே தவிக்க விட்டுவிட்டு இங்கே கண்டவளுடன் உறவு கொள்ளுவது எவ்வளவு பெரிய நம்பிக்கைத் துரோகம்..? அடப்பாவி உனக்குள்ள உணர்ச்சிதானடா அவளுக்கும் இருக்கிறது. உன் கற்பைமட்டும் ஏன் நீ கடலில் கரைத்துவிட்டாய்..?
எப்படி வரப்போகிற பொண்டாட்டி பத்தினியா இருக்கணும்னு நீ விரும்புறியோ அதுபோல நீயும் பத்தனனா இருக்க வேண்டாமாடா..?
ஆசைப்பட்ட பொருளை வாங்க முடியாமல் விலை மட்டும் பார்த்து ஏங்குபவர்களைப்போல ஒரு சிலர் சாலையோரம் நிற்கின்ற மாமாப்பயலுகளிடம் விலைப்பட்டியலை மட்டும் கேட்டு அதில் குளிர் காய்கின்றனர்.
என்னுடைய நண்பர் ஒருவர் மிகவும் பக்தியாளர். அவர் ஒரு முறை கடைவீதியில் வந்துகொண்டிருக்கும்பொழுது ஒரு மாமாப்பய கையைப்பிடித்து அழைத்திருக்கின்றான். அவர் மிகவும் அமைதியானவர். நண்பர் அவனிடம் கோபப்படாமல் கேட்டிருக்கிறார்
"உன்னுடைய மதம் உனக்கு இந்த வேலை செய்யத்தான் கத்துக்கொடுத்திருக்கிறதா..? இது பாவமில்லையா.? "
அவனோ அலட்சியமாக "வர்றதா இருந்தா வா..இல்லைனா -------------- போயா "என்று திட்டி அனுப்பியிருக்கிறான்
எங்களிடம் வந்து அவர் வருத்தப்பட்டு சொல்ல எங்களுக்கோ சிரிப்புதான் வந்தது. "அவன்கிட்ட போய் ஏன் நீங்க அட்வைஸ் பண்ணிணீங்க.."என்று அவரைக் கடிந்து கொண்டோம்..
மாமாக்கள் தொல்லை ஒருபுறமிருக்க முதலாளிகளே சிலநேரம் களத்தில் இறங்கி விடுவார்கள். அதான்பா அந்த விலை மாதுக்களைச் சொல்றேன்.
பெரும்பாலும் கறுப்பின மற்றும் ரஷ்யா மற்றும் சைனாவைச்சார்ந்த அழகிகள்தான் இந்தத்தொழிலில் ஈடுபடுகிறார்கள். ச்சே அவர்களைப் போய் ஏன் அழகிகள் என்று சொன்னேன். ?
விபச்சாரம் செய்த அழகிகள் கைது.
குற்றாலத்தில் பிடிபட்ட விபச்சார அழகிகள்
செல்போன் மூலம் விபச்சாரத்திற்கு அழைத்த அழகிகள் 3 கைது
என்று பத்திரிக்கைகளில் இதுபோன்ற செய்திகளைப் படித்த பழக்கத்தினால் அப்படிச் சொல்லி விட்டேன். அவர்களை ஏன் அழகிகள் என்று எழுத வேண்டும். அழகிகள் அல்ல அழுக்கிகள்.
அந்த அழுக்கிகள் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பாதையின் ஓரமுள்ள இருட்டுச் சந்துக்குள் அரைகுறை ஆடையில் நின்றுகொண்டு சிரிப்பது - கண்ணடிப்பது , அத்து மீறிய செயலாக கையைப்பிடித்து இழுப்பது என்று தொழில் நுணுக்கத்தை காட்டிக்கொண்டிருப்பார்கள்.
கொஞ்சம் மனம் தளர்ந்தவனாக இருந்தால் அவ்வளவுதான் பணம் இழந்துவிடுவான். பணம் மட்டுமல்ல அடிக்கடி கற்பையும் , ஊரில் உள்ளவர்கள் அவர்கள் மீது வைத்த நம்பிக்கையையும்.
எப்போவாவது வருகின்ற பாலை மழையைப்போல போலிஸார்களின் உஷார் நடவடிக்கைகளை கண்டிருக்கின்றேன். திடீரென்று அவர்கள் நிற்கின்ற அல்லது பகுதியைச் சூழ்ந்து கொண்டு ஒவ்வொருவராய் கைது செய்து வேனில் ஏற்றிக்கொண்டிருப்பார்கள். ஆனால் மாமாப்பயலுக மட்டும் எப்பவுமே மாட்டுவதில்லை.
மாட்டிக்கொண்ட அழுக்கிகளும் அந்த மாமாப்பயலுகளை காட்டிக்கொடுக்காமல் தொழில் தர்மத்தை காப்பார்கள். செய்யும் தொழிலே தெய்வமல்லவா..?
தமிழ்நாட்டில் தூத்துக்குடியைச் சார்ந்த ஒரு இளைஞன் இங்கே உள்ள அரசாங்கப் பணியில் இருக்கின்றான். தனது சக நண்பர்கள் இரவு நேர நடன விடுதிக்கு வற்புறுத்தி அழைத்ததால் அங்கே செல்ல ஆரம்பிக்க இறுதியில் அங்குள்ள நடனப்பெண்களில் ஒருத்தியின் மீது ஆர்வம் கொண்டு அவள் மீது பைத்தியமாகி தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் லோன் எடுத்து அந்தப்பெண்ணோடு சுற்றி செலவழித்துவிட்டான். இப்போது எடுத்த லோனை அடைபப்பதற்காக ஊருக்கும் பணம் அனுப்ப முடியாமல் கடனில் தவித்து சீரழிந்து கொண்டிருக்கிறான்.
எனது பகுதியைச் சார்ந்த ஒருவர் இந்த நபருடன் கூட்டுசேர்ந்து நடன விடுதிக்குச் சென்று தகாத பழக்கம் ஏற்பட்டு சம்பாதித்த காசுக்களை எல்லாம் இங்கேயே இழந்து
கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்
இதுபோன்ற எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள் மாமாக்களின் இலக்கு. நடனவிடுதியின் வாசலில் உள்ளே இருந்து வருபவர்களையும் துரத்திச் சென்று பேரம் பேசிக்கொண்டிருப்பார்கள்.
ஒருமுறை நான் நண்பர்களோடு பக்கத்தில் உள்ள கோல்ட்சூக் என்னும் பேருந்து நிலையத்திற்கு கிரிக்கெட் விளையாட சென்றபொழுது வழியில் விலைமாதுக்கள் கற்பை சிதைத்த துண்டை எடுத்து பல்லில் ஒட்ட வைத்த தங்கத்துண்டைக் காட்டி சிரித்துக்கொண்டே பக்கத்தில் வந்த எனது நண்பனை அந்த கறுப்பின அழுக்கி ( அழுக்கி என்று அவர்கள் செய்யும் காரியத்தைதான் குறிப்பிட்டேன் தவிர அவர்களின் நிறத்தை வைத்து அல்ல ) வந்து இடித்து சைகை காட்டியிருக்கிறாள்.
அவன் பயந்து போய் கையில் கொண்டு வந்த கிரிக்கெட் மட்டையை அப்படியே போட்டுவிட்டான். அந்த பெண்ணின் தொடுதலில் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவன் மிகவும் நடுக்கத்துடனே இருந்தான். ச்சே இப்படி பண்ணிட்டாளே என்று புலம்பல் வேறு. அவனைப்பார்க்க பாவமாய் இருந்தது.
கிரிக்கெட் விளையாடிவிட்டு திரும்பி வரும்பொழுது அந்த விலைமாதுக்களை பயமுறுத்துவதற்காக அவர்களை நோக்கி நாங்கள் வேகமாய் ஓடிச்செல்ல அவர்களோ நாங்கள் கையில் கிரிக்கெட் மட்டை ஸ்டெம்ப் வைத்துக்கொண்டு ஓடிவருவதைக்கண்டு அடிக்க வருகிறார்களோ எனப்பயந்து தலைதெறிக்க ஓடி தூரத்தில் சென்று திரும்பி பார்த்தார்கள். எங்களுக்கோ சிரிப்பாக இருந்தது அவர்கள் தலைதெறிக்க ஓடியதைப்பார்க்க.
பின்னே என்னங்க..? கையைப்பிடித்து இழுத்து விபச்சாரத்திற்கு அழைப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்தானே..? அது எவ்வளவு பெரிய அவமானச்செயல். அவர்களுக்கு எங்கே அவமானம் இருக்கப்போகிறது. ஆனால் இழுக்கப்பட்டவனுக்கு இருக்குமல்லவா?
----------------------------------------
நான் இருக்கின்ற பில்டிங் அருகேயே ஒரு ஹோட்டலில் விபச்சார வியாபாரம் அமோகமாய் நடக்கின்றது. இரவும் பகலும் காற்றை விடவும் அதிகமான மாமாக்கள் சுற்றிக்கொண்டிருப்பார்கள்.அப்பொழுதெல்லாம் நான் பக்கத்தில் உள்ள பூத்திலிருந்து போலிஸார்க்கு போன் செய்து இங்கே விபச்சாரம் நடக்கிறது என்று தெரிவிக்க நினைப்பேன்.
போலிஸாரும் தகவல் கிடைத்தால் இங்கே வந்து சோதனையிட்டு அனைவரையும் கைது செய்து அழைத்துச்சென்று விடுவார்கள். பின்னர் ஒரு வார துக்க அனுஷ்டித்தப்பிறகு மீண்டும் ஆரம்பித்து விடுவார்கள். போன் செய்த விசயம் மட்டும் ஹோட்டல் நிர்வாகத்திற்கோ அல்லது மாமாப்பயலுக்கோ தெரிய வந்தால் அப்புறம் உயிருக்கே ஆபத்து என்பதால் அமைதியாய் போகவேண்டியதிருக்கிறது.

நேற்று இரவு அந்த ஹோட்டலின் புகைப்படப்படத்தைப் பிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ஹோட்டல் நிர்வாகமோ அல்லது மாமாப்பயலுகள் யாரும் கவனிக்க கூடாதே என்ற பயத்தில் அந்த ஹோட்டலுக்கு அருகே நண்பனை நிற்க வைத்து அவனை புகைப்படம் எடுப்பது போல் எடுக்க நேர்ந்தது.
---------------------------------------------
ஒரு முறை எனது அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு மலையாளி மிகவும் குஷியோடு இன்னொரு மலையாளி நண்பனிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். என்னவென்று விசாரித்தால் நடிகை ஷகிலா விசிட் விசாவில் துபாய் வந்திருக்கிறாளாம். அவளின் தொலைபேசி எண் கிடைத்துவிட்டதென்று குதிக்கிறார்கள்.
ஒருவன் ஷகிலாவிடம் தொலைபேசியில் பேச ஆரம்பித்துவிட்டான். கால்மணி நேரத்திற்கும் மேலாக பேசிக்கொண்டே இருக்கின்றான். நான் அப்பொழுது இன்னொரு நண்பனிடம் கூறினேன்.
என்னைக்காவது பெத்த தாய்ட்ட இவன் இவ்வளவு நேரம் பேசியிருப்பானாடா?
நான் சொல்வதைக்கேட்டு அவன் சிரிக்க ஆரம்பித்துவிட்டான். அவனுக்கு அது காமெடியாய் தெரிந்திருக்கிறது. எனக்கோ அது கழிசடையாய்; தெரிந்தது.
-----------------------------------------------
இங்கே பாகிஸ்தானியர்கள் மற்றும் பங்காளிகள்தான் வீட்டை விட்டு பிரிந்து அதிகமான காலங்கள் இங்கேயே தங்கிவிடுகிறார்கள். வீட்டைப் பிரிந்து என்பதை விடவும் வீட்டை மறந்து என்றுதான் சொல்லவேண்டும்.
சில இந்தியர்களும் அவ்வாறு வீட்டை விட்டு பிரிந்து அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற வேட்கையில் இங்கேயே தங்கிவிடுகிறார்கள். எனக்குத் தெரிந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் 8 வருடங்களாக இங்கேயே தங்கியிருக்கிறார். நல்லவேளை அவருக்கு திருமணமாகவில்லை.
ஆனால் திருமணத்திற்குப் பிறகு கூட சிலர் மனைவியைப் பிரிந்து நீண்ட நாட்கள் இங்கே தங்குகிறார்கள். காலப்போக்கில் தங்களது உடல்தேவைகளை பூர்த்தி செய்ய இப்படி உலகளாவிய அளவில் உடலுறவு கொள்ள ஆரம்பித்து வாழ்க்கையை நரகமாக்கிக்கொள்ளுகிறார்கள்.
ஆனால் இவர்களின் வருகைக்காக அங்கே கனவோடும் கற்போடும் காத்துக்கொண்டிருக்கும் மனைவிமார்களுக்கு இவர்களின் அதே உணர்ச்சிதானே இருக்கும் என்பதை மறந்து போய்விட்டனரா முட்டாள்கள்.?
இதுபோன்ற ஆட்களை குறிவைத்துதான் மாமாக்கள் உருவாகிக்கொண்டு இருக்கிறார்கள். இல்லை உருவாக்கப்படுகிறார்கள்.
மாமாக்கள் இவர்கள் மனிதக்குறைகள்.
இதனை அரசாங்கம் தடைசெய்யாததற்கும் கண்டு கொள்ளாததற்கும் முக்கிய காரணம் தங்களின் நாட்டுப் பெண்களின் கற்பை பாதுகாப்பதற்காத்தான்.
இதற்கெல்லாம் தீர்வு என்னவென்றால் மற்ற நாட்டுக்காரர்களுக்கு கண்டிப்பாக 2 அல்லது 3 வருடங்களுக்குப் பிறகு இத்தனை மாதங்கள் என்று கட்டாய விடுமுறை அளித்து அனுப்பி விட வேண்டும். இங்கேயே விடுமுறையே இல்லாமல் நீண்ட நாட்கள் தங்குவதற்கு அனுமதியளிக்கக் கூடாது.
இதனால் குற்றங்கள் கொஞ்சம் குறைய வாய்ப்பு உண்டு. ம் என்னதான் சட்டதிட்டங்கள் இயற்றினாலும் தனி மனித ஒழுக்கம் ஏற்படாதவரை ஏதும் புண்ணிமில்லைப்பா..
டேய் டான்ஸ் கிளப்புக்கு வர்றியா என்று யாராவது என்னிடம் கேட்டால் அவர்களுக்கு ஒரே ஒரு பதில்தான் வைத்திருக்கிறேன்.
படைத்தவன் பார்க்காத இடம் ஒன்றில் தவறுசெய்ய ஆசைப்படுகிறேன்.? எங்கேயிருக்கிறது அந்த இடம்?
- ரசிகவ் ஞானியார்
Tuesday, January 17, 2006
இதுதான் தமிழ்நாடு

அன்வர் ராஜா
தமிழ்நாடு என்பதில் பெருமிதம் கொள்வோம் தரையில் விழுந்தே பல சாதனைகள் புரிவோம்
தோளில் விழுந்தால் துண்டு மரியாதைப்படும்! காலில் விழுந்தால் மரியாதை துண்டிக்கப்படும்!
ஜீவானந்தம்
பிறப்பொக்கும் பெரிதுவக்கும் தன் மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
ஜெயக்குமார்
வளைந்து விட்டு
மூங்கிலாய் மீண்டுவிடு
வளைந்தே இருந்தால்
மனிதா நீ மாண்டுவிடு
பாண்டு ரங்கன்
வளைக்க வை
வளையாதே
மரித்துப் போகும்
மரியாதை
பன்னீர் செல்வம்
அருவியாய் விழு
சுனாமியாய் எழு
பொன்னையன்
சிந்திய கௌரவத்தை
பொறுக்கவோ
கோர்க்கவோ?
செம்மலை
யாரங்கே
தன்மானத்தை
தரையில் போட்டது?
சண்முகநாதன்
அம்மா இங்கே வா வா
ஆசிர்வாதம் தா தா
காலில் விழும் எனக்கு
கட்சியில் இருக்கு கணக்கு
தளவாய் சுந்தரம்
கல்தோன்றா மண்தோன்றா காலத்தே
முன் விழுந்த மூத்த குடி
தம்பி துரை
"துறை"க்காக
துரை இங்கே
கறையானதேனோ?
வைத்தியலிங்கம்
விழுந்தால் கட்சி
விழுந்தது கட்சி
வளர்மதி
எழுந்திரு அஞ்சலி
எழுந்திரு
வேலுச்சாமி
பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
எதனைக் கண்டான்...மனிதனைப் படைத்தான்?
- ரசிகவ் ஞானியார்
Monday, January 16, 2006
யதார்த்தம் - திரைப்பட விமர்சனம்

மிக அழகான மனதின் உள்ளுணர்வுகளை படம்பிடிக்கின்ற கதை இது. முதல்பாதி முழுவதும் கல்லூரி குறும்புகள் கலாட்டாக்கள் என்று கலகலப்பாய் நகர்கின்றது. பின் பாதி முழுவதும் வாழ்க்கையின் யதார்த்தங்களோடு நடைபெறுகின்ற போராட்டங்களைப்பற்றி சொல்லுகிறது.
உண்மையில் இப்படிப்பட்ட கதையை தைரியமாய் மக்கள் முன் வைத்த இயக்குநரை பாராட்டாமல் இருக்க முடியாது.
கதையின் ஆரம்பமே ஒரு கல்லூரியில் நடைபெறுகின்ற போராட்டத்தோடு கேமிரா நகர்வதைக் காட்டியிருக்கின்றார். போராட்டத்தின்போது சாலை விளக்குகளை கல்லெறிந்து உடைப்பது, பேருந்தை வழிமறிப்பது ,என்று பொதுச்சொத்தை சேதப்படுத்தும் மாணவர்கள் உப்புச் சப்பில்லாத விசயத்துக்கெல்லாம் போராடுகின்ற ஒரு யதார்த்தமான போராட்டத்தை அழகாய் படம்பிடித்துள்ளார் இயக்குநர்.
கேமிரா சுழன்று எல்லா மாணவர்களின் யதார்த்தத்தையும் முக உணர்சிகளையும் காட்டிக்கொண்டே இருப்பது சென்னையிலோ, மதுரையிலோ எங்கோ ஒரு கல்லூரியில் நடைபெறுகின்ற நிஜமான போராட்டத்தைக் காட்டுகின்றது.
இதற்காக இயக்குனர் செய்த தந்திரம் என்ன தெரியுமா? நிஜமாகவே திருநெல்வேலியில் உள்ள ஒரு கல்லூரிக்குச் சென்று அங்குள்ள மாணவர்பேரவை தலைவரிடம் கலந்தாலோசித்து சில மாணவர்களின் உதவியோடு உண்மையான கல்லூரிப்போராட்டத்தையே காட்டியிருக்கிறார். அங்கு படப்பிடிப்பு நடக்கிறது என்று யாருக்குமே தெரியாது கல்லூரி மாணவர்பேரவை தலைவருக்கும் , ஒரு சில மாணவர்களையும் தவிர.
கதை இரண்டு மாணவர்களுக்குள் நடைபெறுகின்ற கைகலப்புகள் , அவர்கள் வகுப்பறையில் செய்கின்ற குறும்புகள் என்று மிகவும் ஜாலியாய் போகிறது கதை.
இவர்களின் அத்துமீறிய குறும்பில் அவமானம் தாங்காமல் அழுதுவிடுகின்ற அந்த தமிழ் ஆசிரியர் ஒரு கட்டத்தில் "என்னுடைய பதவிக்கு நீங்க மதிப்பு கொடுக்க வேண்டாம்பா..எனக்கு உங்க அப்பா வயசு இருக்கும். அந்த வயசுக்காவது மதிப்பு கொடுங்கப்பா "என்று கூறி கண்கலங்கும்போது மாணவர்கள் மொத்தமாய் எழுந்து நின்று மன்னிப்பு கோருகின்ற காட்சி மிகவும் உணர்ச்சிமயமான காட்சி.
மாணவர்கள் இளமையின் துடிப்பில் சேட்டைகள் செய்தாலும் அவர்களுக்குள்ளும் ஒரு நல்ல உணர்வுகள் உறங்கிக்கொண்டிருக்கிறது என்பதை அழகாய் விளக்கும் காட்சி அது.
அந்த சூரஜ் மற்றும் கோபி என்ற இரண்டு மாணவர்களுக்குள்ளும் கல்லூரியில் இடம் கிடைப்பது முதல் - படிப்பு விளையாட்டு காதல் என்று எல்லா விசயத்திலும் மோதல் ஏற்பட்டுக்கொண்டு இருக்கும்
சூரஜ் எப்போதுமே தன்னுடைய கொள்கையில் விடாப்பிடியாக இருப்பான். தான் நினைத்ததை அடைந்தே தீரவேண்டும் என கடுமையாக போராடுபவன்.
ஆகவே அவன் எல்லா விசயத்திலும் வெற்றிப்பெற்றுக்கொண்டே இருப்பான். இன்னொரு மாணவன் கோபிக்கு அதனால் அவன் மீது பொறாமை
கல்லூரியில் படிக்கும் நிஷா வின் மீது இருவருக்குமே காதல் வர அந்தப்பெண்ணோ சூரஜ்ஜை விரும்புகிறாள்.
தன்னுடையை காதல் விசயத்திலும் சூரஜ் நம்மை ஜெயித்துவிட்டானே என்று கோபிக்கு அவன் மீதான கோபம் - வெறுப்பு மேலும் அதிகமாகியது.
சூரஜ் - நிஷாவின் காதல் காட்சிகளும் மிகவும் யதார்த்தமாய் படம் பிடிக்கப்பட்டிருக்கும் தயங்கி தயங்கி நிஷாவிடம் அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லுவது,
அவளுக்கு குட்மார்னிங் சொல்வதற்காகவே அவள் வருவதற்கு முன்பே கல்லூரிக்கு வந்து அவள் வரும் பாதையில் யதேச்சையாய் நிற்பதுபோல் நின்று குட்மார்னிங் சொல்வது,
நிஷா தன் குடும்பத்தோடு சினிமா தியேட்டருக்கு வருகிறாள் என்று தெரிந்து அந்த தியேட்டருக்கு வந்து இடைவேளையில் அவள் குடும்பத்துடன் அறிமுகமாவது,
கல்லூரி விடுதியில் குடித்துவிட்டு அவள் பெயரை சொல்லி உளருவது என்று படு யதார்த்தமான காட்சிகள். இந்தப்படத்திற்கு வசனகர்த்தாவே யதார்த்தம்தான்.
அவர்களுடைய கல்லூரி வாழ்க்கை முடிந்து அவர்கள் வாழ்க்கைக்குள் நுழைகிறார்கள். சூரஜ் பெரிய தொழில் அதிபராகின்றான். கோபியோ ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிகின்றான்.
சூரஜின் வளர்ச்சியை எப்படியாவது தடுத்த நிறுத்த வேண்டும் என நினைத்து அவனுடைய அலுவலகத்தின் முக்கிய தகவல்கள் உள்ளடக்கிய கணிப்பொறியில் வைரஸைப் புகுத்தி விடுகின்றான்.
இப்படியான சின்ன சின்ன முயற்சிகளில் சூரஜ் ஜெயித்துவிட, பின்னர் அவனுடைய தொழில் முறை எதிரிகளோடு கைகோர்த்துக்கொண்டு அவனுடைய வெற்றிக்கு காரணம் அவனுடய தன்னம்பிக்கையை காயப்படுத்துவது என்று திட்டமிட்டு அவனுடைய தன்னம்பிக்கையை - முயற்சியை எப்படி மனரீதியாக அவனை சிதைக்கின்றான் என்பதுதான் கதை.
தன்னம்பிக்கை இழந்து மனரீதியாக ஒடிக்கப்பட்ட அவனுக்கு அவனுடைய காதலி நிஷா கொஞ்சம் கொஞ்சமாய் அவனுக்கு தைரியம் கொடுத்து அவனுக்கு வெற்றிகள் தேடிக்கொடுப்பாள். இதிலிருந்து இயக்குனர் காதல் தன்னம்பிக்கையைத் தரும் என்று மறைமுகமாக சொல்லியிருக்கிறார்
காதலி - சூரஜ்க்கு ஒரு கதை சொல்லுவாள் அந்த கதை மிகவும் சுவாரசியமானது.
ஜெயிலில் இருந்து தப்பி வந்த கைதி ஒரு போலிஸைக்கண்டதும் வழியில் கிடக்கும் சைக்கிளை எடுத்துக் வேகமாய் ஓட்டிச்செல்ல செல்லும் வழியில் ஒரு கணம் அந்தக் கைதி தனக்கு சைக்கிள் ஓட்டத்தெரியாதே எப்படி நாம் சைக்கிள் ஓட்டுகிறோம் என்று உணரும்போது சைக்கிள் ஓட்டமுடியாமல் தடுமாறி கீழே விழுந்து போலிஸாரிடம் மாட்டிக்கொள்வான்.
அவனுடைய லட்சியமும், எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்ற வெறியும் அவனை சைக்கிள் ஓட்டவைத்தது என்ற கதையின் மூலம் மறுபடியும் சூரஜ்க்கு புத்துணர்ச்சி கொடுத்து அவனை கொஞ்சம் கொஞ்சமாய் எப்படி வெற்றியடையச்செய்கிறாள் என்பதை திரையில் காணுங்கள்.
திருப்பிக் கொடுப்போம்
திருப்பிக்கொடுப்போம்
இறைவன் தருகின்ற சொர்க்கம் கூட
திருப்பிக் கொடுப்போம்
திரும்பி வருவோம்
திரும்பி வருவோம்
இன்னொரு ஜென்மமும் இங்கேயே
திரும்பி வருவோம்.
என்று வகுப்பறையில் வைத்து கல்லூரி மாணவர்கள் பாடும் பாடல் அனைவர்களுக்கும் தங்களது கல்லூரியை ஞாபகபடுத்தும்.
கதையில் பாடல்கள் கதையின் சூழலோடு அமைந்துள்ளது. கல்லூரி கலை விழாக்களில் பாடுகின்ற பாட்டு, கல்லூரிப்போரட்டத்தின் போது மாணவர்கள் பாடுகின்ற கானா பாட்டு, மற்றும் வகுப்பறையில் பாடுகின்ற பாட்டு என்று 3 பாட்டுக்கள்தான்.
அரிவாள் துப்பாக்கி களுக்கு மத்தியில் தன்னம்பிக்கையை முறியடித்து தோல்வியுற வைப்பது என்பது ஒரு வித்தியாசமான சிந்தனை. கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம்
யதார்த்தம் ஒரு பதார்த்தம்.
- ரசிகவ் ஞானியார்
Saturday, January 14, 2006
நொண்டி - பழசு
Monday, January 09, 2006
ஒண்ணுக்கு அடித்தவனும் தீவிரவாதியா..?

"விஞ்ஞானி பூரி கொல்லப்பட்ட சம்பவத்தில் சென்னையைச் சேர்ந்த தீவிரவாதி பஷீர் பிடிபட்டான். "
இப்படித்தான் வெற்றிகரமாய் முழங்கிக்கொண்டும் தனக்கு கிடைத்த தகவல்களை திரட்டி தயிராக்கி செய்தி வெளியிட்டுக்கொண்டிருந்தது ஊடகங்கள்.
கடந்த 28.12.05 அன்று பெங்களுரில் இந்திய அறிவியல் மைய துப்பாக்கி தாக்குதல் சம்பவத்தில் விஞ்ஞானி பூரி சுட்டுக்கொல்லப்பட்டார்.
இது சம்பந்தமாக நடந்த விசாரணையில் ஆந்திராவைச்சேர்ந்த அப்துல்ரகுமான் என்ற நபரை கைது செய்தனர். அவரிடமிருந்து கிடைத்த தகவல்படி மங்களுர் அருகில் உள்ள பட்கலை சேர்ந்த பஷீரை சென்னையில் பெங்களுர் தனிப்படை போலீசார் கைது பெங்களுர் அழைத்து வந்தனர்.
பஷீரைப்பற்றிய முழுமையான விசாரணைகள் நடந்து முடியாத நிலையில் சென்னையில் தீவிரவாதி பஷீர் பிடிபட்டான் என்று வானத்திலிருக்கும் தொலைக்காட்சியும் சில கட்சித் தொலைக்காட்சியும் மற்றும் சில புகழ்பெற்ற பத்திரிக்கைகளும் படு நாகரீகமாக எடுத்துரைத்தார்கள். இவர்கள் பார்வையில் ஒண்ணுக்கு அடித்துக் கொண்டிருந்தவைனெல்லாம் தீவிரவாதியாம்.
விசாரணையே நடைபெறாத நிலையில் அவர்களுக்கு எப்படி பஷீர் தீவிரவாதி என்று தெரிந்தது? ஒருவேளை அவர்களுக்கும் விஞ்ஞானி பூரி சுட்டுக்கொல்லப்பட்டச் சம்பவத்தில் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ..?
ஒருவேளை பிடித்துச் சென்றவர்கள் இந்த தொலைக்காட்சிகளுக்கும் பத்திரிக்கைகளுக்கும் இரகசிய தகவல்கள் அனுப்பியிருக்க கூடுமோ..? அப்படியென்றால் நமது தேசப் பாதுகாப்பின் மீது எப்படி முழு நம்பிக்கை வரும்?
நேற்று 08.01.06 பஷீரைப் பிடித்துச் சென்ற போலிஸார்கள் பஷீர் ஒரு அப்பாவி என்று விடுதலை செய்துவிட்டார்கள். அதனைச் சொல்லும்போது அந்தத் தொலைக்காட்சிகள்
"பஷீர் விடுதலை செய்யப்பட்டார் "என்று கூறியது. இப்பொழுது தீவிரவாதி என்றப் பட்டத்தை எங்கே தொலைத்தார்களாம்? அவர்கள் தனது மூன்றாவது கண்களால் கண்டுபிடித்த தீவிரவாதிப் பட்டம் இப்போது எங்கே சென்றது? பட்டம் கொடுப்பதற்குத்தான் பல்கலைக்கழகங்கள் இருக்கிறதே இவர்களுக்கேன் வேண்டாத வேலை..?
மக்களுக்கு செய்தி தருகின்ற ஊடகங்கள் ஜனநாயகத்தின் முக்கிய தூண்களில் ஒன்று.
காலையில் தேநீரோடு பத்திரிக்கைகள் படிக்கைவில்லையென்றால் சிலர் தற்கொலை கூட செய்து கொள்வார்கள்.
ஓய்வுபெற்ற அப்பாக்களின் இரண்டாவது மனைவியே இந்தப் பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சி செய்திகள்தான்.
அலுவலகம் செல்கின்ற அவசரத்தில் கூட அவர்கள் நீங்கள் தருகின்ற செய்திகளை உள்வாங்கிக்கொண்டு செல்லும் எத்தனை எத்தனைப் பேரைக் கண்டிருக்கின்றோம்.
இப்படி மக்களின் உச்சகட்ட நம்பிக்கைகளை ஏன் சீரழிக்கின்றீர்கள். ஊடகங்கள் முதலில் மக்களின் நம்பிக்கைத்தன்மையை பெறவேண்டும். ஆனால் இதுபோன்ற பொய்யான தகவல்களை தந்து கொண்டிருந்தால் ஊடகங்களின் போலியான முகத்தை மக்கள் சீக்கிரமே உணர்ந்து கொள்வார்கள்.
அந்த தனிமனிதன் பஷீரின் மனநிலைக்கு வாருங்கள். தீவிரவாதி என்ற அந்த வார்த்தை அவர்மீது சமுதாயத்தின் தனி மனித மதிப்பை இழக்கச்செய்து விடாதா.?
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவரின் குழந்தைகள் வெளியில் யாருடன் விiளாயாடினால் கூட பக்கத்து வீட்டுக்காரர்கள் தன் குழந்தைகளை அந்தக்குழந்தைகளோடு விளையாட விடாமல் தடுக்க நேரிடும். அதில் அந்த பிஞ்சு உள்ளங்கள் பாதிக்கப்படாதா..?
இனிமேல் அவரை எப்படி சுற்றியுள்ள சமூகம் மதிக்கும். ஒருவேளை இவன் தீவரவாதியாக இருப்பானோ என்ற மூன்றாம் தர கண்ணோட்டத்தில் பார்க்காதா..? அந்த பஷீரின் மன உளைச்சலுக்கு என்ன மருந்து தரப்போகிறது இந்த ஊடகங்கள்.
விசாரணை நடைபெறுவதற்கு முன்னரே தீவிரவாதி பஷீர் என்று அறிவித்த அவர்கள் இப்பொழுது விசாரண முடிந்து அவரை விடுதலை செய்த பிறகு தாங்கள் தீவரவாதி என்று சொல்லியதற்காய் மன்னிப்பு கேட்குமா..?
வித்தியாசமாய் இருக்கட்டுமே இப்படி செய்தி சொன்னால்தான் என்ன?
"விஞ்ஞானி பூரி சுட்டுக்கொன்ற வழக்கில் பிடிப்பட்ட பஷீர் என்பவரை நாங்கள் அறிவீனத்தனமாய் தீவிரவாதி என்று குறிப்பிட்டு அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்காய் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம் "
என்று செய்தி சொன்னால் மக்களுக்கு அந்த ஊடகங்கள் மீது பலமான நம்பிக்கை வராதா..?
- ரசிகவ் ஞானியார்
Sunday, January 08, 2006
சேது சமுத்திரத்திட்டம் சரித்திரமா இல்லை தரித்திரமா?

சேது சமுத்திரத்திட்டம் இது தமிழர்களின் 150 வருட கனவாகும்.
1860 ம் ஆண்டு பிரிட்டிஷ் கமாண்டர் ஏ டி டெய்லர் என்பவரால் சுமார் 50 லட்சம் பண முதலீட்டில் ( அன்றைய மதிப்பு ) இந்த SSCP [Sethusamudram Ship Canal Project ] திட்டத்திற்கு விதையிடப்பட்டது. 1952 ல் சர் ராமசாமி முதலியார் என்பவர் இத்திட்டத்திற்கான ஆவணங்களை தாக்கல் செய்தார்.
ஆனால் எல்லாவற்றிற்கும் அடிகோலாக சிந்து நதி மிசை நிலவினிலே என தொடங்கும் பாரதியின் கவிதையில் 'சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்' என்ற வரிகள் சேது சமுத்திரத்திட்டம் அமைவதற்கு ஒரு பாலமாகியது. ஒரு நூற்றாண்டுச் சிந்தனையை உருவாக்கி சென்றுள்ளான் பாரதி.
சேது சமுத்திரத்திட்டத்தின் முன்னோடி கம்பர்தான். தனது இராமாயணக்காவியத்தில் கடத்திச்செல்லப்பட்ட சீதையை மீட்பதற்காக இராமனும் தோழர்களும் கடலில் பாலம் அமைத்து இலங்கைக்குச் சென்றதாக கூறி இத்திட்டத்திற்கு வித்திட்டார்.

அந்த நேரத்திலையே இலங்கைக்கு பாலம் அமைக்கலாம் என்ற அவரது கற்பனையை பாராட்டாமல் இருக்க முடியாது.
சரி இந்த நவீன கம்பர்கள் அறிமுகப்படுத்திய சேது சமுத்திரத்திரத் திட்டம் என்றால் என்ன? அதற்குண்டான அவசியம்தான் என்ன..?
அநேகப் பேருக்கு இத்திட்டம் பற்றி முழுமையாக தெரியாது. சேது சமுத்திரத் திட்டம் என்றால் கடலுக்கு நடுவே பாம்பன் பாலத்தைப் போல ஒரு பாலம் வரப்போகிறது என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். சிலர் எதற்கென்றேத் தெரியாமல் எதிர்க்கிறார்கள்.

2005 ம் ஆண்டு ஜுலை மாதம் 2ம் தேதி சேதுத்திட்டத்தின் ஆரம்ப விழா பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது.
மன்னார் வளைகுடாவையும் பாக்ஜலசந்தியையும் இணைக்கும் ஆடம்ஸ் பாலப்பகுதியில் ஒரு கால்வாய் தோண்டும் திட்டமே சேது சமுத்திரத் திட்டம்

இந்தியாவின் ஒரு துறை முகத்திலிருந்து இன்னொரு துறைமுகத்திற்குப் போக நாம் இலங்கையைச் சுற்றிக்கொண்டு போகும் நிலை. தலையைச்சுற்றி மூக்கைத் தொடுகின்ற கதைதான்.
உதாரணமாக சென்னைத் துறைமுகத்திலிருந்து ஒரு சரக்கு கப்பல் தூத்துக்குடித் துறைமுகத்திற்கு வரவேண்டுமானால் இலங்கையைச்சுற்றி சுமார் 700 கிமீ ( 435 மைலகள்) பயணப்பட்டுத்தான் போகவேண்டியது இருக்கிறது. 3 நாட்கள் பயணப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தை அடைய வேண்டியதிருக்கிறது. இது எவ்வளவு பெரிய கால தாமதம். இந்த கால அவகாசத்தை குறைத்தோமானால் எவ்வளவோ பரிமாற்றங்கள் நடைபெற்றுப்போகும்.
சரி இந்தக் கால அவகாசத்தைக் குறைப்பதற்கு என்னதான் செய்யவேண்டும்.? கப்பல்கள் இலங்கையைச்சுற்றாமல் நேரடியாக தூத்துக்குடித் துறைமுகம் செல்ல என்னதான் வழி? கப்பல்கள் ஏன் நேரடியாக தூத்துக்குடித் துறைமுகத்திற்கு செல்லக் கூடாது.?
கப்பல்கள் இலங்கையைச்சுற்றி செல்வதற்கான காரணம் தூத்துக்குடி துறைமுகத்திற்குச் செல்லும் வழியில் பாக்ஜலசந்திப் பகுதியில் ஆழம் குறைவாக இருப்பதே ஆகும். ஆழம் குறைவானப் பகுதியில் பெரிய கப்பல்களால் பயணப்பட முடியாது.
ஆகவே சேதுசமுத்திரக் கடல் பகுதியில் உள்ள மன்னார் வளைகுடாவையும் பாக்ஜலசந்தியையும் இணைக்கும் ஆடம்ஸ் பாலப்பகுதியில் ஒரு கால்வாய் தோண்டி அதனை ஆழப்படுத்தியும் அகலப்படுத்தியும் கப்பல்களை நேரடியாக வரச்செய்யலாம்.
சேதுசமுத்திரக் கால்வாய்
நீளம் - 167 கிமீ
(இதில், 89 கிலோ மீட்டர் அளவிற்கு மட்டுமே அகழ்வுப் பணி நடைபொறவிருக்கின்றது. ஆதம் பாலம் அருகே 35 கிமீ மற்றும் பாக் ஜலசந்திப்பகுதியில் 54 கிமீ மீதமுள்ள தூரத்திற்கு கடலில் போதுமான ஆழம் இருப்பதால் அப்பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்பட மாட்டாது. )

ஆழம் - 12 மீட்டர்
அகலம் - 300 மீட்டர்
இக்கால்வாயின் இரு வழி கப்பல் போக்குவரத்து அனுமதிக்கப்படும்.
திட்டச்செலவு : 2233 கோடி ரூபாய்
இந்தப் பொறுப்பு இந்திய அகழ்வுப்பணி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடலை ஆழப்படுத்தி கால்வாய் அமைக்கும் மூலம் ஆயிரக்கணக்கில் செலவாகும் கப்பல்களின் எரிபொருள் செலவும் மற்றும் கோடிக்கணக்காய் இழப்பாகும் சரக்குக் கட்டணச் செலவும் மிகவும் குறைந்து போகும்.
இதனால் வணிகர்கள் அதிகமான வாணிகப்பரிமாற்றத்தை மேற்கொள்வார்கள். வெளிநாட்டுக்கப்பல்கள் வந்து இளைப்பாறும். அந்திய முதலீடுகள் வரத்துவங்கி தமிழகத்தின் பொருளாதாரம் உயரும்
மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்திப்பகுதியில் சுமார் 138 கிராமங்களும் சிறுநகரங்களும் இருக்கின்றன. அவர்களின் கதி என்ன..?
தோண்டப்படப்போவது கால்வாய் மட்டுமல்ல அவர்களின் வாழ்க்கையும்தான். அங்கிருந்து அள்ளப்படப்போகும் ஒருகோடியே இருபது லட்சம் கன மீ மண்கள் மற்றும் இதர கழிவுப் பொருட்கள் தரையில் கொட்டப்படப்போகிறதா இல்லை அவர்களின் தலையில் கொட்டப்படப்போகிறதா..?
மீன்பிடி தொழில் இல்லாமல் அவர்களது வருமானம் பாதிக்கப்படும். அந்த அவமானத்தில் தற்கொலைகள் அதிகரிக்கும்.அந்த ஒட்டுமொத்தக் குடும்பங்களும் எங்கே இடம்பெயரக்கூடும்.?
துறைமுகம் சேருவதற்கு தூரங்கள் குறைந்துவிடும் ஆனால் அவர்களின் வளமையான வாழ்க்கைக்கு தூரங்கள் அதிகரித்து விடுமே? தூரங்களைக் குறைத்து அவர்களின் பாரங்களை அதிகரிக்கப்போகிறோமா..?
சேதுக் கால்வாயின் மூலம் மண்கள் மட்டுமல்ல மன்னார் வளைகுடாப் பகுதியின் வளமையும் தோண்டப்பட்டு விடுமோ என்ற அச்சம்தான் பரவலான குறையாக எடுத்துரைக்கப்பட்டு வருகின்றது..? அப்படி என்ன வளமை மன்னார் வளைகுடாப்பகுதியில்..?
மன்னார் வளைகுடாப்பகுதி வளமை
மன்னார் வளைகுடாப்புதியில் இந்தியாவிலேயே மிகவும் செழுமை வாய்ந்த கடற்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது மற்றும் உலகத்திலையே மிகவும் வளமை வாய்ந்த கடற்பகுதிகளுள் இதுவும் ஒன்று.
அந்தப்பகுதிக்கே உரித்தான 3268 தாவர வகைகளும் 327 வகை தாவரங்களும் உள்ளன். அதுமட்டுமல்ல 3300 க்கும் மேற்பட்ட உயிரினங்களான கடற்பசு - கடற்குதிரை - டால்பின் - கடல் ஆமைகள் - - கடல் விசிறி - கடல் பஞ்சு - சிப்பி - சங்குகள் இந்தப்பகுதியில் காணப்படுகிறது. உலகத்தின் வேறு எந்தப்பகுதிகளிலும் இல்லாத குட்டிப்போட்டு பால் கொடுக்கும் கடற்பசு போன்ற அரிய உயிரினங்களும் இங்கே கிடைப்பதால்தான் செழுமைவாய்ந்த பகுதியாக அறிவிக்கப்பட்டது.
அது மட்டுமல்ல இந்தப்பகுதியில்தான் பவளப்பாறைகளும் அதிகமாய் காணப்படுகின்றது.
பவளப்பாறைகள் என்றால் முத்துக்கள் பவளங்களால் ஆன பாறைகள் அல்ல. அவைகள் ஒருவிதமான நுண்ணுயிரிகளின் கூட்டமைப்பு.
பவளப்பாறைகள் ( Corel Reef )
பவளப்பாறைகள் என்றால் என்ன? பவளப்பாறைகள் என்பது தெளிவான நீரில் வசிக்கக் கூடிய லட்சக்கணக்காண நுண்ணுயிரிகளைக்கொண்ட ஒரு அமைப்பாகும்.

சூரிய ஒளிகள் இவற்றின் மீது விழுகின்ற பொழுது அந்த நுண்ணுயிரிகள் பிராண வாயுகளை உற்பத்திச் செய்கின்றது. இந்தப் பிராணவாயுக்கள் அங்குள்ள மீன்களின் சுவாசத்திற்குப் பயன்படுகிறது
இதனைப்பற்றி ஆராய்ந்து வருகின்ற அரசு அமைப்புகள் சில பொதுநல அமைப்புகள் அறிஞர்கள் மற்றும் கட்சி சாராத ஆராய்ச்சியாளர்கள் என்ன கூறுகிறார்கள்..?
மத்திய அரசு இந்த திட்ட விளைவுகள் பற்றி முழு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இதுபோன்ற சுற்றுபுறச் சூழ்நிலை ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்ற நாக்பூரில் உள்ள நீரி (NEERI - National Enviroinment Engineering Research Institute ) என்ற அமைப்பினைக் கேட்டுக்கொண்டது. அந்த நீரி அமைப்பு முழுமையாக ஆராய்ந்து EIA அறிக்கை ஒன்றை சமர்பித்துள்ளார்கள்.
இந்திய அரசாங்கத்தின் அறிக்கை ( EIA Report )
இத்திட்டத்தினால் மன்னர் வளைகுடாப்பகுதியில் கடற்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் வராது
ஆதம் பாலம் பகுதிகளில் பவளப்பாறைகளே காணப்படவில்லை.
பவளப்பாறைகள் இருக்குமிடத்தை விட்டு 20 கிமீ தூரத்தில்தான் இந்த அகழ்வுப்பணி நடைபெறப்போவதால் பவளப்பாறைகளுக்கு பாதிப்பு இல்லை.
தோண்டப்படும் மண்கள் பாம்பன் - மண்டபம் மற்றும் இராமேஸ்வரக் கடலோரப்பகுதிகளில் கொட்டப்படும்.
இந்த அறிக்கையின் முழு விவரங்களையும் இந்த கீழ்கண்ட இணையத்தில் படித்துக்கொள்ளலாம்.
Courtesy : http://sethusamudram.gov.in/EIA.asp
பல சாதகமான அறிக்கைகளை உள்ளடைக்கி உள்ளது இந்த அறிக்கை. ஆனால் கடல் உயிரனங்களையும் சுற்றுப்புறத்தையும் ஆராய்ந்ததில் கொடுத்த முக்கியத்துவத்தை பாதிக்கப்படப்போகும் கடலோர மக்களின் பாதிப்பைப் பற்றி எதுவுமே கூறவில்லை.
மனிதம் அமைப்பின் அறிக்கை
"மனிதம் என்ற அமைப்பு தமிழ்நாட்டு கடற்கரைப்பகுதிகளான நாகப்படடினம் ( நாகூர் - 18.07.04) ராமேஸ்வரம் ( தூத்துக்குடி- 19.07.04 ) ) திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் ( 20.07.04) திருவனந்தபுரம் ( 21.07.04 ) பகுதிகளுக்குச் சென்று மீனவர்கள் கல்வியாளர்கள் அரசியல்வாதிகள் கடல் மற்றும் சுற்றுபுறச்சூழல் ஆய்வாளர்களைச் சந்தித்து ஆய்வுகளைத் திரட்டினர். அவர்களின் அறிக்கை இதோ:
நாங்கள் சந்தித்த பெரும்பான்மையான மக்களுக்கு சேது சமுத்திரத்திட்டம் என்ற பெயரைத்தவிர வேறு எந்த தகவலுமே தெரியவில்லை. தெரிந்த சிலரும் எதற்கென்றே தெரியாமல் எதிர்க்கிறார்கள்.
ராமேஸ்வரத்தில் உள்ள சுவாமி பிரானவந்தா 2000 ம் ஆண்டு இத்திட்டத்தை ராமேஸ்வரத்தில் உள்ள கிழக்கு கோதண்டராம் கோயில் பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று மக்களிடம் கையெழுத்து வேட்டை நடத்தி அதனை அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கும் பாதுகாப்புத் துறை மந்திரி ஜார்ஜ் பெர்னான்டெஸ் க்கும் அனுப்பினார்.
நாங்கள் சந்தித்த ஓய்வுபெற்ற சில கப்பல்துறைப் பொறியார்களை சந்தித்தப்பொழுது அவர்கள் இத்திட்டத்தினால் எந்தவிதமான லாபமும் இருக்கப்போவதில்லை என்று உறுதியாக கூறினர்.
மத்திய அரசின் கூற்றுப்படி சேது சமுத்திரத் திட்டத்தால் 36 மணி நேரம் மிச்சப்படுத்தலாம் . ஆனால்
அ ) இந்த திட்டம்படி கால்வாய் அகலப்படுத்தப்பட்டால் 15 டுமதல் 30 அடி மிதவை ஆழத்தில் பயணிக்கக்கூடிய கப்பல்கள் மட்டுமே பயணப்பட முடியும்
ஆ) அகலப்படுத்தப்படப்போகிற சேது சமுத்திரக் கால்வாய் வழியாக கப்பல்கள் அதிவேகமாக பயணிக்க முடியாது. மிக வேகமாக வருகின்ற கப்பல்கள். இந்தக் கால்வாயை கடப்பதற்கு அதன் வேகத்தைப் பாதியாக குறைத்துக்கொள்ள வேண்டும்
கப்பல்கள் இந்த கால்வாயை கடப்பதற்கு சுமார் 20 முதல் 24 மணி நேரம் தேவைப்படும்.
(திட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பு 3 நாட்கள் சுற்றவேண்டும்.திட்டம் ஆரம்பித்தால் 2 நாட்கள். ஒரு நாளை மிச்சப்படுத்த 2000 கோடியா? )
அது மட்டுமல்ல அந்தப்பகுதியை கடப்பதற்கு கண்டிப்பாக வரி வசூலிக்கப்படும மற்றும் சென்னை மற்றும் விசாகப்பட்டினம் வருகின்ற கப்பல்கள் மட்டும்தான் இந்த வழியைப் பயன்படுத்தப்போகிறது. தினமும் எத்தனை கப்பல்கள் இந்த வழியாக பயணிக்கப் படபோகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். தூத்துக்குடி துறைமுகத்தில் பணிபுரிந்த ஓய்வுபெற்ற கப்பல் துறைப் பொறியாளர்களின் கூற்றுப்படி தினமும் 2 அல்லது 3 கப்பல்கள் கூட இந்த வழியாக பயணப்படாது. ஆகவே இந்தச் சேது சமுத்திரத் திட்டம் அரசாங்கத்திற்கு எந்த விதமான முன்னேற்த்தையும் கொண்டுவரப்போவதில்லை.
இந்த திட்டத்தின் சேர்மன் திரு ரகுபதி ஐஎஎஸ் அவர்களிடம் இந்தத்திட்டத்தைப் பற்றி கேட்டபொழுது சரியான தகவல்கள் தர மறுத்துவிட்டார். அந்த திட்டத்தைப்பற்றி எந்த தகவலுமே தெரியாத அவருடைய பி ஆர் ஓ விடம் இதுபற்றி விசாரிக்கச் சொல்லிவிட்டார். மேலும் அவர் இது சம்பந்தமான விளக்கங்களுக்கு; மக்கள் மத்தியில் ஏதேனும் அவர்கள் பொது விளக்க கூட்டம் நடத்தினால் அதன் மூலம் தகவல்கள் பெற்றுக்கொள்ளுமாறு கூறினார்
மேலும் நாங்கள் சுற்றுப்புற ஆலோசகர்களைச் சந்தித்தபொழுது அவர்கள் ஒரு விசயத்தை ஒட்டுமொத்தமாய் ஏற்றுக்கொண்டனர். அதாவது இந்தச் சேது சமுத்தித் திட்டம் கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தும். பவளப்பாறைகள் மற்றும் கடற்கரைப்பகுதி மக்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களுக்கு மிக அதிகமான பாதிப்பை இந்தத் திட்டம் ஏற்படுத்தும்
என்று."
பசுமை இயக்கம் - இந்த கால்வாய் தோண்டும் நடவடிக்கை மிகப்பெரும் பாதிப்பைத் தரும் என்று இலங்கையைச் சேர்ந்த பசுமை இயக்கம் ஆணித்தரமாய் கூறுகின்றது.
இது சம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கூற்று என்ன?
டி வைத்தீஸ்வரன் ( Senior Research fellow ICAR research program )
200 முதல் 600 வகையான அலங்கார மற்றும் உணவுக்குண்டான மீன வகைகள் அந்தப்பகுதியில் உள்ளன. 1992 - 1996 ல் 55325 டன் மீன்கள் கிடைத்தது. 2001 ம் ஆண்டில் 205700 டன் பதிவாகியுள்ளது. அந்த வளரச்சிகளுக்கு காரணம் அங்குள்ள பவளப்பாறைகள்.
உலகத்தில் மொத்தம் 35 வகையான ஹிப்போகேம்பஸ் (Hippocampus ) என்ற கடற் குதிரைகள் வகை மீன்கள் இருப்பதாக கடற்வாழ் உயிரின ஆராய்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது. அவற்றில் ஒரு வகை இந்த மன்னார் வளைகுடாப் பகுதியில் 15 மீ ஆழத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது
பேராசிரியர் வீ கே வெங்கடரமணி
மீன்வளக் கல்லூரியின் முதன்மை ஆராய்ச்சியாளர்
அந்த வகையான மீன்கள் மருத்துவத் துறையில் பெரும் பங்கு வகிக்கின்றது. பல மூளைச் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துவதற்குண்டான மருந்துகள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது. சீனா மற்றும் தாய்லாந்துப் பகுதியில் இந்த மீனை 300 ஆண்டுகளாக சில நோய்களை குணப்படுத்துவதற்காக பயன்படுத்திக்கொண்டு வருகின்றனர்.
நன்றி : தி இந்து நாளிதழ் ( 04.08.2004)
சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சமூகவியல் துறை சுதர்சன்
கடற்பகுதியும் கடல் பன்முகத்தன்மையும் தொடர்ச்சியான மாசடைதலுக்கு உள்ளாகலாம்
கப்பல்களில் கசியும் எண்ணெய்களால் பாதிப்பு ஏற்படக்கூடும்
பாரம்பரிய மீன்பிடித் தொழிலாளர்களுக்கு வருமானமிழப்பு ஏற்படும்
ஆர் பாலு - மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர்
மீனவர்களுக்கோ சுற்றுப்புறச் சூழலுக்கோ பாதிப்பு ஏற்படாதபடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிக்கிடையே பயணச்செலவு பயணநேரம் குறைகிறது
இந்தியக் கடலோர பாதுகாப்பை தீவிரப்படுத்தலாம்.
கடலோர மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்
தமிழ்நாடடின் வணிக பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்
அதி நவீன கருவிகள் பயன்படுத்தப்படுவதால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது.
இந்து முண்ணணிதலைவர் ராமகோபாலன் :
இராமர் கட்டிய அந்தப்பாலம் இன்னமும் சிதைந்து போய் கடலுக்கடியில் இருப்பதாகவும் அந்தப்பாலத்திற்கு சேதமில்லாமல் சேதுக்கால்வாய் அமைய வேண்டும் என்று இந்து முண்ணணிதலைவர் ராமகோபாலன் சென்னை திருவெல்லிக்கேணியில் கையெழுத்து இயக்கம் நடத்துகிறார்.
"17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராவணனை அழித்து சீதாப்பிராட்டியை மீட்பதற்காக தர்மத்தின் வடிவமான ஸ்ரீராமபிரான் தனுஷ்கோடிக்கும், இலங்கைக்கும் இடையே மகத்தானதொரு பாலத்தைக் கட்டினார். இயற்கைச் சீற்றங்களால் எத்தனையோ அழிவு நடந்தாலும் அழிக்க முடியாத வரலாற்று பொக்கிஷமாக கடலுக்கு அடியில் அந்த பாலம் இன்றும் இருக்கிறது.
இந்த உண்மையை கடந்த சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் விண்வெளி ஆய்வின் மூலம் புகைப்படத்துடன் வெளியிட்டு உள்ளது. இப்போது தொடங்கியுள்ள திட்டத்தின்படி ஸ்ரீராமபிரான் கட்டிய பாலம் இடிபடும் நிலை ஏற்பட்டு உள்ளது. "
பவளப்பாறைகள் அழிப்பு
பல நுண்ணுயிர்களைக் கொண்ட இந்த பவளப்பாறைகளானது மணல் துகள்கள் விழுந்தாலே மண்டையைப்போட்டுவிடும்.
இந்தப் பகுதியில் கால்வாய் தோண்டப்படும்பொழுது அதிலுள்ள படிமங்கள் இவற்றை அழிப்பதற்கு காரணமாக அமைந்துவிடும்.
நாம் சுவாசிக்கின்ற ஆக்சிஜனை உற்பத்திச் செய்வதால் அவைகள் அழிக்கப்படும்பொழுது காற்று மண்டலத்தில் ஆக்சிஜன் குறைவு ஏற்படுகின்றது இதனால் ஏற்படும் வானிலை மாற்றங்களால் பருவமாற்றங்கள் சீர்குலைந்து மழையின் அளவு குறைந்துவிடும்.
இந்த பவளப்பாறைகளின் ஆக்சிஜன் உற்பத்தியால்தான் வருடத்திற்கு 900 மமீ மழை கிடைக்கிறது.
பவளப்பாறைகளின் அழிப்பால் கடற்அரிப்பு ஏற்பட்டு சுற்றியுள்ள கிராமங்கள் கடலில் மூழ்கும் அபாயங்கள் நேரிடலாம். கடற் அரிப்பினையும் புயல் அபாயத்தையும் தடுப்பது இந்தப் பவளப்பாறைகள்தான்
நாம் என்ன செய்யப்போகிறோம்.? பவளப்பாறையை அழித்து அவல நிலையை அடையப்போகிறோமா..?
இயற்கையோடு தொட்டு பிடித்து விளையாடப்போகிறோமா..?
மீனவர்களுக்கு கட்டுப்பாடு
கப்பல் போக்குவரத்துகளால் அந்தப்பகுதியில் மீன்களின் வரத்தும் குறைந்து போகும் அதுமட்டுமல்ல கடல் போக்குவரத்தினால் மீனவர்கள் கப்பல் பயணிக்காத இந்த குறிப்பிட்ட நேரத்தில்தான் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டு பின்னர் நாளடைவில் மீனவர்களால் கப்பல்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நொண்டிச்சாக்குகள் கூறப்பட்டு இந்தப்பகுதிக்கு அவர்கள் செல்லவேக் கூடாது என்ற கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படலாம்.
மீன்கள் அதிகமாக கிடைக்கும் அந்தப்பகுதியைவிட்டு மீனவர்கள் எங்கு செல்லக்கூடும். சுமார் 138 க்கும் மேற்பட்ட கிராமங்கள் தொழில் இல்லாமல் முடங்கிவிடுவார்களே..? அவர்களுக்கு அரசாங்கம் தரவேண்டிய நிவாரணங்களதான் என்ன?
மீனவர்களுக்கு மட்டுமல்ல கடல் உணவு உற்பத்தியில் நமது நாட்டுக்கு கிடைக்கும் அந்நிய செலவாணியும் முடக்கப்படும். கடலுணவு 1992 ம் ஆண்டில் 55325 டனனிலிருந்து 2001 ம் ஆண்டு 205700 டன்னாக உயர்ந்துள்ளது. 10500 சகிமீ பரப்பளவுள்ள கடற்பரப்பில் 20 கிமீ பகுதி நடைபெறப்போகும் கட்டுமானப்பணிகளால் மீன் உற்பத்தி மற்றும் கடல் உணவுகள் முற்றிலுமாக குறைந்துவிடும்.
கடல் உயிரினங்களையும் கரை உயிரினங்களையும் காப்பது அவசியமல்லவா..?
கடலில் மீன் அழுதால்
கரை அறியாது என்று வைரமுத்து எழுதினார்.
கடலில் மீனவர்கள் அழுதாலும் அப்படித்தானோ..?
உயிரின இடப்பெயர்ச்சி
இந்த கால்வாய் தோண்டப்படும்பொழுது பல கணிக்க முடியாத மாற்றங்கள் நிகழப்போகின்றது. அவற்றுள் ஒன்று உயிரின இடப்பெயர்ச்சி. பல உயிரினங்கள் இங்கிருந்து வெளியேற்றப்படலாம் பல புதிய உயிரினங்கள் நுழையக்கூடும். ஒரு சூழ்நிலையில் புதிய உயிரினங்கள் நுழைவதால் அவற்றுள் பல மாற்றங்கள் ஏற்படக்கூடும்.
மனிதனையே எடுத்துக்கொள்ளுங்களேன் ஒரு புதிய சூழ்நிலைக்கு மாறும்போது அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு பயிற்சி எடுத்து தன்னை மாற்றிக்கொள்ள நேரிடுகின்றான்
ஆனால் அங்குள்ள தாவரங்களுக்கு யார் பயிற்சி கொடுத்து புதிய சூழ்நிலைகளை உட்கொள்ள வைப்பது. அங்கு இடம்பெயரப்போகின்ற புதிய உயிரினங்களால் அங்குள்ள தாவரங்கள் பாதிப்புக்குள்ளாகும்.
மீனவர்களின் ஆக்ரமிப்புகள் அகற்றப்படுதல்
கட்டுமானப்பணிக்காக மீனவர்களின் ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படலாம் என்ற அச்சம்தான் மீனவர்களிடையே மிகுந்த பதட்டத்திற்கு முழு காரணம்.
முன்மாதிரிக் கால்வாய்கள்
பனாமா - சூயஸ் கால்வாயை வெட்டினார்களே அதற்கு ஏதேனும் பாதிப்பு வந்ததா இல்லையே. அங்குள்ள சூழ்நிலைகளில் எந்த மாற்றமும் இல்லையே..? என்று கேள்விகள் எழுப்புகிறார்கள்
நல்ல தொலைநோக்கான கேள்விதான். ஆனால் பனாமா - சூயஸ் கால்வாய்களோடு நம் சேதுக் கால்வாயை இணைக்க முடியாது. ஏனென்றால் அவைகள் நிலங்களை வெட்டி கடல்கள் இணைக்கப்பட்டன. ஆனால் நாமோ கடலை வெட்டி கடலை இணைக்கப்போகிறோம்.
கடல் ஒரு அதிசயம். அது அடிக்கடி மாறும் தன்மை கொண்டது. ஆகவே அதன் சரியான மாற்றத்தை யாராலும் கணிக்க முடியாது. கடல் கைக்குழந்தை அல்ல நம் இழுத்த இழுப்புக்கெல்லாம் வருவதற்கு..
அலைபோல தாலாட்டுவதாய் வந்து திடீரென்று சுனாமியைப் பீய்ச்சி அடித்ததே..? அதனால் எத்துணை அழிவுகள் ஞாபகமில்லையா..?
பாக்ஜலசந்திப் பகுதியில் உள்ள அதிகமான நீரோட்டத்தினால் மண் அள்ளும் பணி பாதிக்கப்பட்டு இத்திட்டம் தோல்வியுறக்கூடும் என்று ஓய்வுபெற்ற சில கப்பல்துறைப் பொறியாளர்கள் கூறுகிறார்கள்.
அப்படியென்றால் 2000 கோடிப்பணம் தண்ணீரிலும் கண்ணீரிலும் நனைக்கப்படப்போகிறதா?
சேதுக் கால்வாயில் கப்பல்கள் பயணம் செல்வதற்கு தனியாக வழிகாட்டிக்கப்பல்கள் அமைக்கப்படும் என்று நீரி அமைப்புச் சொல்கிறது. இந்த செலவினத்தை கப்பல் கம்பெனிகள்தான் செலுத்த வேண்டும். அவற்றை வைத்துக் கணக்கிடும்பொழுது சுற்றிச் செல்லுகின்ற செலவும் இந்த வரிவிதிப்புச் செலவுகளும் சமமாவது மட்டுமல்ல அவர்கள் சுற்றிச் செல்லும் தூரமும் அந்த அளவிற்கு குறைக்கப்படப்போவதில்லை.
வேலைவாய்;ப்பு அதிகரிக்குமா இல்லை கடற்பகுதியை நம்பியுள்ள மக்களின் வேலைவாய்ப்பு பறிபோகுமா..?
நன்மைகள்
தூத்துக்குடி துறைமுக வளர்ச்சி
ராமேஸ்வரம் மற்றும் சுற்றுப்புறக் கடலோரபகுதிகளின் மீன்பிடித்தொழில் வளரச்சி
ராமநாதபுரம் நாகப்பட்டினம் தூத்துக்குடி கட்டமைப்பு வளர்ச்சி
கடற்படைகள் கிழக்குப்பகுதியிலிருந்து மேற்குப்பகுதிக்கு அதிவேகமாக பயணிக்கமுடியும் என்பதால் கடற் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படும்
அந்தப்பகுதியில் நெடுஞ்சாலைகள் - மின்சார வசதி - குடிநீர் வசதி மற்றும் ரயில் பாதை மேம்படுத்தப்படும்
வாணிகத்தொடர்பான தொழிற்சாலைகள் அதிகரிக்கும்
வேலைவாய்ப்பு அதிகரித்து சுற்றுப்புற கிராம மக்களுக்கு பொருளாதாரம் உயரும்
அன்னிய முதலீடு அதிகரிப்பதால் தமிழக பொருளாதாரம் உயரும்
பாதிப்புகள்
பவளப்பாறைகள் - கடற் வாழ் உயிரினங்கள் - தாவரங்கள் அழிப்பு
மீன் உற்பத்தி குறைந்து மீனவர்களின் வாழ்க்கை வறுமைக்கு தள்ளப்படும்
இவற்றையெல்லாம் மறுத்து கூறப்படுகின்ற காரணங்களையும் கொஞ்சம் அலசுவோம்
மண் தோண்டுதல்
கடலில் மண்தோண்டுவது என்பது இந்தத் தென்பகுதி மக்களுக்கு ஒரு விநோதமான புதிய செயலாகவேப் படுகின்றது. ஆனால் கடலில் மண்தோண்டுவது - ஒரு இடத்திலிருந்து மணலை தோண்டி இன்னொரு இடத்தில் கொட்டுவது எல்லாம் சகஜமப்பா..
உதாரணமாக கொச்சியில் ஆண்டுக்கு 1 கோடி கனமீட்டர் தோண்டி அரபிக்கடலில் கொட்டப்படுகின்றது. அரபிக்கடல் மீன்கள் அழுததாக செய்தி வரவில்லையே..?
நெதர்லாந்தில் ஆண்டுக்கு 4 கோடி க.மீட்டர் அத்திலாந்துக் கடலுக்குள் கொட்டப்படுகின்றது. மீன்கள் என்ன மூச்சு முட்டியா செத்துவிட்டது..?
சென்னை மற்றும் கல்கத்தா துறைமுகங்களில் அடிக்கடி மணல் தோண்டும் பணிகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. அதனால் கடல் கொந்தளித்துவிட்டதா என்ன?

மண்தோண்டும் பணியில் இந்திய தூர்வாரும் கழகத்தின் DR- XII Dredging corporation of India என்ற கப்பல் ஈடுபடுத்தப்படுகிறது.
இந்திய தூர்வாரும் கழகம் கரையோரத்தில் படியும் மணலை ஆழ்கடலுக்குள் கொட்டி துறைமுகத்தை அழகுபடுத்தும் பணி நீண்ட காலமாகவே செய்து வருகிறது. அதற்கு தெரியாதா என்ன? கடல்சூழல் பாதிக்கப்படுமா இல்லையா என்று..? ஆகவே அவைகள் இப்பணியில் ஈடுபடும்பொழுது சுற்றுச்சூழலும் கடற்சூழலும் கெடாமல் பாதுகாத்துக்கொள்ளும்.
பெட்ரோலியக்கசிவுகள்
உலகத்தில் உள்ள அனைத்து கடல்களிலும் கப்பல்கள் பயணித்துக்கொண்டுதான் இருக்கின்றது. எல்லா கப்பல்களிலும் எண்ணெய்கசிவுகள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது. அந்த கசிவுகளை உணவாக்கும் நுண்ணுயிரிகள் கூட கடலில் இருப்பதால் அந்தக் கசிவுகள் காலப்போக்கில் மறைந்து விடும்.
பல ஆறுகளின் சந்திப்பில் வருகின்ற சேருகள் வங்கக் கடலிலிருந்து பாக் ஜலசந்திப்பகுதியில் புகுகின்றது. அப்பகுதியில் உள்ள உயிரினங்களுக்கு இதுபோன்ற கலங்களில் வருகின்ற சேறுகள் உரமாகின்றது. கடலின் கலங்கல் நிலை முதனிலை உற்பத்திக்கு உரமாகின்றது மீன் பெருக்கத்திற்கும் உதவுகின்றது.
ஆகவே எண்ணெய்க்கசிவு உலகளாவிய நடைமுறைதான்.
சுனாமியினால் இந்த கால்வாய்த்திட்டம் பாதிக்கப்படுமா?
1881 - 1883 - 2004 சுனாமிகளால் கடலின் குறிப்பிடத்தக்க உள் மாற்றம் எதுவும் நடைபெறவில்லை.
சுனாமி அடிக்கடி மையங்கொள்ளும் பனாமா கால்வாயும் தெடர்ந்து செயல்பட்ட வண்ணம்தான் இருக்கின்றது.
ஆகவே சுனாமியால் இந்த சேதுக் கால்வாயுக்கு பாதிப்பு வராது.
ஒட்டுமொத்த எதிர்ப்புகளிலிருமிருந்தும் பொதுவானதொரு கருத்தை எடுத்தோமென்றால் பவளப்பாறைகள் மற்றும் மீனவர்களின் வாழ்க்கை என்ற இரண்டு நிலைகள்தான் மேலோங்கி நிற்கின்றன.
பவளப்பாறைகளுக்கான தீர்வு :
சரி அவற்றுற்குண்டான தீர்வுகள்தான் என்ன?
பவளப்பாறைகளை நாம் வளர்க்க முடியும் என்று மறவன்புலவு க. சச்சிதானந்தன் ( ஐ.நா மன்னாள் ஆலோசகர் ) கூறுகிறார் :
"செயற்கையாக ஒதுக்கிடங்களை அமைத்துக் கொடுத்தால் பவளப் பாறைகள் காலப்போக்கில் வளர்ந்து வருமல்லவா?
துறைமுகத்தில் நீண்டகாலம் பழுதடைந்து கவனிப்பாரற்றுக் கிடக்கும் கப்பல்களின் அடிப்பாகங்களில் பவளக் குடலிகள் ஒட்டுகின்றன, வளர்கின்றன் சுண்ணப் பாறைகளாகவும் பெருகுகின்றன. இவற்றுடன் மட்டியும் சிப்பியும் சேர்ந்து ஒட்டிக் கொள்கின்றன. இத்தகையன செயற்கைச் சூழல்கள்.
பாக்கு நீரிணையில் பவளப் பாறை வளரும் ஒதுக்கிடங்களின் நீரோட்ட வேகத்தையும் ஒட்டுத் தரையின் சூழல் தன்மைகளையும் அளந்தும் தெரிந்தும் ஆய்ந்தால், அதையொட்டிய சூழலை வேறிடத்தில் அமைத்தால் அங்கும் சுண்ணப் பாறைகளைப் பவளக் குடலிகள் கட்டியெழுப்ப முயலுமல்லவா?" ஆதாரம் : http://thamizharkaalvaai.blogspot.com/2005/10/blog-post.html
மீனவர்களின் பிரச்சனை:
மீனவர்களின் வாழ்க்கையை நாம் கண்டிப்பாக கருத்தில் கொள்ள வேண்டும். சேது சமுத்திரத்திட்டத்திற்கு சாதகமான நீரி அறிக்கையே அங்குள்ள மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறுகிறது. ஆகவே அவர்களை மொத்தமாக இடப்பெயர்ச்சி செய்வது என்பது நடைமுறைக்கு சாத்தியமல்ல. சொந்த மண்ணை விட்டு வருவதற்கு யாருக்குத்தான் விருப்பமிருக்கும். எந்த நாட்டிலோ சென்று உழைத்து கைநிறையை பணம் சம்பாதித்தாலும் சொந்த நாட்டினை நினைத்து ஏங்குவோர் எத்தனை எத்தனை பேர் ..?
ஆகவே அவர்களை இடப்பெயர்ச்சி செய்ய வைப்பது என்பது புத்திசாலித்தனமல்ல. வேண்டுமானால் அந்தப்பகுதியை அரசாங்கம் தத்து எடுத்து சுற்றுலாத்தளமாக மாற்றி அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயரச் செய்யலாம்.
06.01.06 அன்று சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி அவர்கள்
தமிழக மக்களின் பல ஆண்டு கனவான சேது சமுத்திர திட்டம் நடந்து வருகிறது. பனாமா, சூயஸ் கால்வாய்களைப் போல பாக் ஜலசந்தியில் சேது சமுத்திர திட்டம் பெரும் பயன்தரும். இந்த விஷயத்தில் சிலர் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து குரல் எழுப்பி வருகின்றனர். சுற்றுச்சூழல் குறித்த விஷயத்தில் மத்திய அரசு மிகவும் கவனமாக செயல்படுகிறது.
அதற்கிடையில் அவற்றுக்கெதிராக கண்டனங்களும் சுற்றுப்புற கிராம மக்கள் மற்றும் மீனவர்களின் போராட்டங்களும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன

மன்னார் பகுதியில் உள்ள மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் சேது சமுத்திரத் திட்டத்திற்கு எதிராக 19.07.2005 அன்று காலை 11.30 மணி அளவில் மன்னார் மாவட்ட தலைமை அலுவவலகத்திற்கு எதிராக போராட்டம் மேற்கொண்டனர்.
மற்றும் சேது சமுத்திரத்திட்டத்திற்கு எதிரான தேசிய இயக்கமும் மக்கள் - சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுப்புற ஆய்வாரள்களை வைத்து போராட்டம் நடத்தியது.
கல்தோன்றா மண்தோன்றா காலத்து மொழியாம் தமிழ்பேசும் இந்த மக்கள்
கடலில் கல்தோண்டி மண்தோண்டி கனவுகளும் தோண்டப்பட்டு புதைவார்களோ..? இல்லை சேது திட்டத்தின் பொருளாதார எழுச்சியில் எழுவார்களா..?
தமிழக மக்களின் 150 ஆண்டு கால கனவுகளுக்கு இங்கே வெளிச்சம் கொடுக்க நினைப்பது தவறில்லை. ஆனால் கடலுக்குள் இருந்து கதறிக்கொண்டிருக்கும் அவர்களின்
சப்தங்களை கப்பல்களின் இரைச்சல்கள் தொலைத்துவிடக்கூடாது.
சேது சமுத்திரத்திட்டத்தில் தோண்டப்படுவது மண்ணா இல்லை மீனவர்களின் வாழ்க்கையா..? இது சரித்திரப்புகழ் வாய்ப்பதும் தரித்திரப்புகழ் வாய்ப்பதும் அரசாங்கத்தின் சுயநலம் பாராத நடவடிக்கைகளில்தான் இருக்கின்றது.
நன்றி : மறவன்புலவு க. சச்சிதானந்தன் ( ஐ.நா மன்னாள் ஆலோசகர் )
நன்றி : பரஞ்சோதி
நன்றி : மதிவாணன்
நன்றி : ஏ.ரஜீவன்
நன்றி : தினமலர்
நன்றி : குருஜி
http://sethusamudram.tamilar.org/
http://www.sanctuaryasia.com/takeaction/writeltr_mannar.php
- ரசிகவ் ஞானியார்
Wednesday, January 04, 2006
துபாய் ஆட்சியாளர் மரணம்
துபாய் ஆட்சியாளர் ஷேக் மக்தூம் பின் ரஷீத் அல் மக்தூம் ( வயது 62) அவர்கள் இன்று அதிகாலை ஆஸ்திரேலியாவில் வைத்து மரணம் அடைந்தார். ( Vice Precident and Prime Minister of UAE and Ruler of Dubai )
இந்த மரணம் ஆட்சியாளர்களை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
அவரது சகோதரர் ஷேக் மஹ்மூது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் ஷேக் மக்தூமுக்குப் பதிலாக துபாய் ஆட்சியாளராக வரலாம் என எதிர்பர்க்கப்படுகிறது.
அமீரக அரசின் செய்தி :
"அமீரகத்தினை மிகப்பெரிய வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்று அமீரக மக்களின் வளமான வாழ்க்கைக்கு ஒரு தூணாக விளங்கிய அமீரக வரலாற்றுப்புகழ் ஷேக் மக்தூம் பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் மரணம் மிகப்பெரிய இழப்பாகும்.
மேலும் கூறியதாவது ஷேக் மக்தூம் அவர்கள் மக்கள் மீது மிகவும் அன்பானவர். ஆவரின் நினைவுகள் மக்களின் உள்ளத்தில் எப்போதும் பதிக்கப்பட்டிருக்கும். அமீரகத்தின் தேசியக்கொடி அவரது மரணம் அனுஷ்டிக்ப்படும் 40 நாட்களும் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் "
அமீரகத்தின் ஆட்சியாளர் ( President of UAE ) ஷேக் கலீபா பின் செய்யது அல் நாயன் அவர்கள் ஷேக் மக்தூம் பின் ரஷீத் அல் மக்தூம் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்தார்.
அவரது நல்லடக்கம் நாளை வியாழக்கிழமை பர்துபாயில் உள்ள உம் குரைர் மயானத்தில் வைத்து நடைபெறும் என்றும் காலை பத்து மணி அளவில் ஜபீல் பள்ளிவாசலில் வைத்து பிரார்த்தனைகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது
அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் 7 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்ரீத் பண்டிகை வருவதால் 14.01.2006 வரை அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அலுவலகங்களுக்கு விடுமுறை. தனியார் அலுவலகங்களுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்படலாம்.
டேய் அப்படின்னா 4 நாளைக்கு லீவுதான்டா செம ஜாலி என்று அந்த மரணத்தில் கூட ஆதாயம் தேடுபவர்களை நினைத்தால்தான் வருத்தமாக இருக்கிறது
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்
- ரசிகவ் ஞானியார்
Tuesday, January 03, 2006
படம் பார்க்க வாரீயளா - தொடர்ச்சி
சினிமாவில் இஸ்லாமிய கதாபாத்திரத்தை காட்டுபோது கைலி உடுத்திக்கொண்டு தலையில் ஒரு தொப்பி அணிந்து கொண்டு கழுத்தில் புலிப்பல் வடிவில் ஒரு தாயத்து அணிந்துகொண்டு அச்சாக்கே பச்சா என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகித்து கொண்டு இருப்பார்.
கதாநாயகன் செண்டிமென்டாக கழுத்திலோ அல்லது கையிலோ
786 என்ற எண் அணிந்த பட்டையை அணிந்திருப்பான். இந்தியாவில் எந்த முஸ்லிமும் அப்படி அணிந்திருப்பதாக நான் பார்த்ததும் இல்லை கேள்விப்பட்டதுமில்லை.
கோர்ட் சீனில் கதாநாயகனோ அல்லது கதாநாயகனின் வக்கீலோ நகைச்சுவையாக பேச உடனே பார்வையாளர்கள் பகுதியில் இருந்து சிரிப்பலை கிளம்பும். உடனே நீதிபதி அந்த இத்துப்போன கட்டையால் ஆர்டர் ஆர்டர் என்று மேஜையைத் தட்டுவார்.
கிராமத்திலிருந்து சென்னைக்கு வரும் கதநாயகன் கண்டிப்பாக ஒரு மஞ்சள் பையை கையில் வைத்துக்கொண்டு எல்ஐசி பில்டிங்கையோ அல்லது சென்டிரல் இரயில் நிலையத்தையோ கடந்து செல்வான்.
பெண்ணின் கழுத்திலிருந்து தாலியை வில்லன் புடுங்கும்போது கடலலைகள் எல்லாம் அப்படியே பாறைகளில் தெறித்து நிற்கும்,பறவைகள் அப்படியே ஸ்தம்பித்துப் போய் பறந்த நிலையிலேயே நின்றுவிடும், பலமான சூறைக்காற்றில் தென்னை மரங்கள் ஆடும்.
ஏதாவது பெண் கெடுக்கப்படுகின்ற காட்சியில் அதனை நேரடியாக காட்டினால் ஆபாசமாக இருக்கும் என நினைத்து ஒரு புலி மானை துரத்துவது போன்று அல்லது கிளி ஒன்று கூண்டக்குள் அங்குமிங்கும் சிதறி ஓடி படபடப்பதுபோலவும் காட்டுவார்கள். பாருங்கனே; வித்தியாசமான சிந்தனையை ..உண்மையில் இந்தக்காட்சிதான் மிகவும் ஆபாசமாக இருப்பது போல தோன்றும்.
பின்னர் அந்தப் பெண் தலைமுடி கலைந்து ஆடைகள் ஆங்காங்கே கிழிக்கப்பட்டு குங்குமங்கள் கலைந்து மூலையில் குத்த வைத்துக்கொண்டு அழுதுகொண்டிருப்பாள்.
கிராமத்து முரட்டு பண்ணையாரின் எல்லா பையன்களும் பம்புசெட்டில் ஏழைப் பெண்ணை தூக்கிச்சென்று கெடுத்துவிடுவார்கள்.
மற்றும் சில நண்பர்களிடமிருந்து:
கைப்புள்ளை : 1960 - 70 களில் வரும் பழைய படங்களில் வரும் ஒரு பிரபலமான வசனம் குறிச்சிட்டு வாங்க டிபன் சாப்பிடலாம். ஏன் குளிக்காம வந்தா விரட்டி விடுவாங்களா என்ன..?
கதாநாயகி கிறிஸ்த்துவ மதமாக இருந்தாலோ அல்லது கிறிஸ்த்துவ கதாநாயகனை மணக்கிறாள் என்றாலோ ஒரு பெரிய வெள்ளை நிற கவுன் அணிந்து கையில் குளோஸ் அணிந்து கொண்டு இருப்பாள். நான் இதுவரை பார்த்த தமிழ்நாட்டு கிறித்துவ முறை திருமணங்களில் மணப்பெண் புடவைதான் அணிந்திருப்பாள்.
கோர்ட் சீனில் வரும் நீதிபதி கறுப்பு நிற கோட் அணிந்துகொண்டு அந்த கோட்டில் ஒரு சிவப்பு நிற ரிப்பன் சுற்றப்பட்டடிருக்கும். எனக்கு தெரிந்தவரை எந்த ஒரு நீதிபதியும் இப்படி சிவப்பு ரிப்பன் சுற்றியிருப்பதாக நான் கேள்விப்பட்டதில்லை. இந்த விசயத்தில் தெளிவாக இருக்கிற நம்ம ஊர் விருமாண்டி நீதிபதி கூட சிவப்பு ரிப்பன்தான் அணிந்திருந்தார்.
கதாநாயகனோ கதாநாயகிளோ அல்லது அவர்களது நண்பர்களோ உறவினர்களோ கத்தி குத்திப்பட்டோ குண்டடிப்பட்டோ கிடக்கும்போது 5 நிமிடம் வசனம் பேசிவிட்டுத்தான் மண்டையைப் போடுவார்கள். அதுவே வில்லனோ அல்லது வில்லன் ஆட்களாகவோ இருந்தால் உடனே மண்டையைப்போட்டுவிடுவார்கள்.
தமிழ்படத்தில் வரும் அரபு நாட்டு சேக் கூட இந்தியில் பேசுவான்
நிலா : மாறு வேடத்தை மறந்திட்டீங்களே? கன்னத்தில ஒரு மச்சம் மட்டும் வச்சிக்கிட்டு எம்.ஜி.ஆர். மாறு வேடத்தில வருவாராம்! நம்ம டெண்டு கொட்டாயில படம் பாக்கற வாண்டுக்குக் கூடத் தெரியும் அது வாத்தியாருன்னு. ஆனா வில்லனுக்கு மட்டும் தெரியாமப் போயிரும்!
பூங்குழலி : முதலிரவுக் கதாநாயகியோ அல்லது சோரம்போன பெண்ணோ அறையில் இருந்து வெளியே வரும்போது அவர்கள் என்னதான் புதுமைப் பெண்ணாக இருந்தாலும், அவர்களின் முகத்தில் குங்குமம் ஈஷிக்கொண்டு இருக்கும்
- ரசிகவ் ஞானியார்


