நேற்று அலுவலகம் முடிந்து துபாய் படகுத்துறையின் ஓரத்தில்; கடற்காற்றை ரசித்துக்கொண்டே வந்து கொண்டிருந்தபொழுது இடதுபுறம் உள்ள அந்தச் சாலையில் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் கார்களுக்கு மத்தியில் சாலையை கடக்கவா? வேண்டாமா? என்று தவித்துக்கொண்டிருந்தார் ஒரு பெரியவர். சுமார் 55 வயதிருக்கும் அவருக்கு. நடிகர் பூர்ணம் விஸ்வநாதன் மாதிரி இருப்பார்.
அந்தச்சாலையில் ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு விபத்தைக் நான் கண்டிருக்கின்றேன். ஆகவே ஒரு விதமான கலக்கத்தில் அந்தப்பெரியவரின் மீது கவனத்தைத் திருப்பினேன்.
ஒரு வழிப்பாதை என்பதனால் ஒரு பக்கம் மட்டும் பார்த்தாலே போதும். ஆனால் அந்தப்பெரியவரோ அதிகப்படியான பயத்தில் இரண்டு பக்கமும் தலையைத் திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டிருக்கின்றார்.
மிக வேகமாக ஒரு கார் வருகிறது..சர்ரென்று சீறிக்கொண்டு பேரிரைச்சலோடு சென்று விடுகின்றது. அந்த சத்தத்தை வைத்தே எவ்வளவு வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றது என கணித்து விடலாம்.
இங்குள்ள சாலைகளில் எல்லாம் பாகிஸ்தானியர்கள் மற்றும் அரபு நாட்டைச் சார்ந்தவர்கள்தான் கண்மூடித்தனமாக சாலைகளில் ணபைணயப வளைவுகளோடும் முந்தைய வண்டியோடு போட்டியிட்டுக் கொண்டும் முந்திக்கொண்டும் செல்வார்கள்.
அந்தப்பெரியவர் இன்னமும் தயங்கிக்கொண்டிருக்கின்றார். தூரத்தில் கவனிக்கிறார் கண்ணுக்கெட்டிய தூரத்தில் எந்தக் காருமே இல்லை. உடனே சாலையை கடந்துவிடவேண்டும் என்று மெல்ல மெல்ல சாலையில் பயத்துடன் இறங்கினார். அதிகாலைக் குளிரில் ஆற்று தண்ணீரில் கால் வைக்க தயங்குபவர்களைப்போல தயங்கினார்.
அவருக்கு ஏதும் ஆகிவிடக்கூடாதே என்ற பயமும் அவர் தயக்கத்துடன் சாலையில் கால்வைக்கும் நிலையைப் பார்த்து சிரிப்பும் வந்தது எனக்கு.
அவர் முன்னேறுவதாய்த் தெரியவில்லை. மெல்ல மெல்ல முதலிரவுக்கு அடியெடுத்து வைக்கும் புதுப்பெண்ணைப்போல ( எல்லாம் சினிமாவுல பார்த்ததுதாங்க..) தயக்கத்துடன் முன்னேறுகிறார்.
அப்பொழுது கண்ணுக்கெட்டிய தூரத்தில் அந்தக்கார் சீறிக் கொண்டு வந்துகொண்டிருந்தது. ஸ்போர்ட்ஸ் டைப் கார் போல முன்பக்கம் கூர்மையாக இருந்ததை வைத்தும் அதன் வேகத்தையும் வைத்தும் அந்தக் காரை ஒரு அரபிதான் ஓட்டிவருகின்றான் என்று தெரிந்து கொண்டேன்.
அந்தக்கார் கடைசி டிராக்கில் வந்து கொண்டிருந்தது. இவரோ முதல் டிராக்கில் இருந்து முன்னேறிக்கொண்டிருக்கிறார். அந்தக் கார் கடப்பதற்கு முன் தான் கடந்து விடலாம் என்ற எண்ணத்தில் கடக்கும் வேகத்தை அதிகப்படுத்துகிறார்.
அந்தக்காரும் கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் புயல்காற்றில் அலைபாய்ந்து வருகின்ற காகிதம் போல தடுமாறி வருகின்றது. அந்தக் காருக்கும் அந்தப்பெரியவருக்குமிடையே என் இதயம் வேறு சிக்குண்டது துடித்துக்கொண்டிருந்தது.
அவர் இரண்டாவது டிராக் வரை வந்து விட்டு பின் அந்தக் காரின் வேகம் கண்டு பயந்து போய் போகலாமா இல்லை திரும்பி விடலாமா என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார். நான் திடுக்கிட்டுப் போனேன். என்னடா இவர் போகாமல் தயங்குகிறார் என்று..
அவரால் இப்போது திரும்பி வரவும் முடியாது ஏனெ;றால் முதல் டிராக்கிலும் ஒரு கார் வந்து கொண்டிருக்கிறது. திரும்பி வந்தால் முதல் டிராக்கில் வருகின்ற கார் மோதிவிடக்கூடும். இரண்டாவது டிராக்கிலேயே எவ்வளவு நேரம்தான் நின்று கொண்டிருப்பது? இதிலும் சில நொடிகளில்; கார்கள் வரக்கூடும். மூன்றாவது டிராக்கை வேகமாய் கடப்பதுதான் புத்திசாலித்தனம்.
ஆனால் அவரோ மூன்றாவது டிராக்கை கடக்க எத்தனித்து பினனர்; பின்வாங்கி விட -இவர் கடக்கப்போகிறாரா இல்லையா என்ற தடுமாற்றத்தில் அந்தக் காரும் தடுமாற - அந்த நேரத்தில் அந்தப் பெரியவரின் செருப்பு அவரது காலை விட்டு வெளியே வர
அவர் செருப்பை எடுக்க முற்பட்டால் தன் மீது கார் மோதிவிடும் எனப் பயந்து செருப்பை இரண்டாவது டிராக்கிலேயே விட்டு விட்டு அவர் பாய்ந்து கடந்து விட்டார்.
சீறிக்கொண்டு வந்த அந்தக்காரோ பிரவுதேவா ஆட்டத்தை சாலையில் ஆடிவிட்டு அந்தப் பெரியவரின் மீது கோபத்தைக் காட்டுவதற்காக ஒரு நீண்ட ஹாரனை எழுப்பிவிட்டுச் சென்றது.
நமது ஊர் என்றால் வண்டியை விட்டு இறங்கி வந்து " கஸ்மாலம்..வீட்டுல சொல்லிக்கினு வந்துட்டியா.." என்ற வசனங்கள் பறந்திருக்கும். ஆனால் இங்கே அதற்கெல்லாம் நேரமில்லை...அந்த அளவிற்கு அவசரம்..அவசரம்..
ஆகவே ஒரு நீண்ட ஹாரனை எழுப்பி கோபத்தை வெளிக்காட்டுவார்கள்.
அந்தப் பெரியவர் நீண்டப் பெருமூச்சுடன் சாலையைக் கடந்து அந்தப்பக்கம் நின்றுகொண்டு அவர் விட்டு வந்த செருப்பை எப்படி எடுப்பது என்று யோசிக்க ஆரம்பித்தார். மூன்று டிராக்கிலும் கார்கள் வந்து கொண்டேயிருந்தது.
கவனித்துக் கொண்டிருந்த நான் அவர் மீண்டும் செருப்பை எடுப்பதற்காக வந்து விபத்தில் மாட்டிக்கொள்வாரோ எனப் பயந்து அவரிடம் நான் எடுத்து தருவதாக சைகையில் காட்டினேன்.
சாலையைக் கடந்த கார்கள் அந்தச் செருப்பை கொஞ்சம் தள்ளி கொண்டு போய் போட்டன. அந்தக் கார்களில் செருப்பு பட்டு வந்த சத்தங்களை கேட்டு நான் பயந்து போய் நின்றேன். என்னடா கார்கள் வேகமாக வருகின்றதே..எடுக்கவா வேண்டாமா என்று..? சரி அவரோ வயதானவர்..எடுக்க வந்து விபத்தில் மாட்டிக்கொண்டால் ஆபத்து என்று நினைத்து நானே எடுக்க முற்பட்டேன்.
தூரத்தில் ஒரே ஒரு சிறிய Mitsubishi பிக்கப் மட்டும் வந்து கொண்டிருந்தது. சரி போய்விடலாம் என்று சாலையில் இறங்க அந்தக் காரின் வேகம் அதிகரிப்பதை கண்டு மீண்டும் சாலைக்கு வந்து விட்டேன். அந்தப் பிக்கப்பும் செருப்பை எடுத்து கொஞ்சம் தள்ளி கொண்டு போய் போட்டது.
அந்தப் பெரியவரோ செருப்பு அறுந்து போய்விடுமோ என்று பயந்து சாலையின் மறுமுனையிலிருந்து செருப்பை எடுத்து தருமாறு என்னை அவசரப்படுத்தினார்
நான் அவரிடம் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்பது போல கைகளை குவித்துக் காட்டினேன்.
பின்னர் சுமார் 3 நிமிடங்களுக்குப் பிறகு சாலையில் கார்கள் கண்ணுக்குத் தட்டுப்படவில்லை- இதுதான் சமயம் என்று ஓடிச்சென்று அந்தச் செருப்பை எடுத்து சாலையின் மறுபக்கம் வீசிவிட்டு மறுபடியும் எனது பக்கம் வந்து விட்டேன்..
அவர் மகிழ்ந்து போய் "தேங்க்யூ" என்று என்னைப்பர்த்து கத்தி மரியாதையாய் கை அசைத்தார். பின் நானும் கையசைத்து விட்டு நடக்க ஆரம்பித்தேன்.
செருப்பை எடுத்துக் கொடுத்தது ஒன்றும் அவ்வளவு பெரிய உதவி இல்லை என்றாலும் யாரோ முன்பின் அறியாத அந்தப் பெரியவரின் முக மகிழ்ச்சியில் என் மனசில் யாரோ மயிலிறகால் தடவிக் கொடுத்த மாதிரி மன அமைதியைக் கொடுத்தது.
இந்தியாவில் எந்தச் சாலையிலாவது என்னுடைய தந்தையும் இப்படி கடந்து செல்ல முற்படும்போது அவருக்கும் யாராவது உதவி செய்யமாட்டார்களா..? என்று எனக்குள்ளும் ஒரு சுயநலம் இருக்கத்தான் செய்தது.அந்தச் சிறிய சம்பவம் எனக்கு ஒரு பாடத்தையும் கற்றுக் கொடுத்தது.
வாழ்க்கையில் எந்த ஒரு முடிவும் எடுப்பதற்கு முன் திட்டமிடுதல் அவசியம். சரியாக திட்டமிட்டப் பிறகு பின்வாங்குவதும் தயங்குவதும் தடுமாற்றத்தையே தரும் என்று அந்தப் பெரியவரின் தடுமாற்றத்தில் இருந்து உணர்ந்தேன்.
- ரசிகவ் ஞானியார்