Thursday, February 15, 2007
ஆங்கிலேயருக்கு செக் வைத்த செம்மல்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இருக்கிறது வ உ சி மைதானம்.வருடா வருடம் சுதந்திர தினம் குடியரசு தினத்தில் கலெக்டர் வந்து கொடியேற்ற மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இனிதே நடந்து முடியும். அத்தோடு கூட்டங்கள் கலைந்துவிடும்.
ஆனால் அந்த மைதானத்தின் பெயர் கொண்ட வ.உ.சி யை எத்துணை பேர் நினைத்துப்பார்த்திருக்க கூடும் என்றுத் தெரியவில்லை.
பாரதியின் இறுதிச் சடங்கில் ஆட்களின் எண்ணிக்கையை விடவும்
ஈக்களின் எண்ணிக்கைதான் அதிகம் என்று வைரமுத்துவின் கவிதை ஒன்றில் வாசித்திருக்கின்றேன். கேட்கும்பொழுதே பதறுகின்றது நெஞ்சம்.
அதுபோலவே வஉசி 6 ஆண்டு காலம் சிறைதண்டனை அனுபவித்துவிட்டு கண்ணணூர் சிறையிலிருந்து வெளியே வந்தபொழுது அவரை வரவேற்க ஒரு காங்கிரஸார் கூட இல்லை என்று அவரது மகன் வாலேஸ்வரன் வருத்தப்பட்டிருக்கின்றார்.
முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்ற கூற்றுப்படி வியாபார வர்க்கமாக வந்து நம்மை ஆண்ட வெள்ளையர்களை வியாபாரம் வழியாகவே விரட்டியடிக்க வேண்டும் என்று விருப்பப்பட்ட வஉசி சுதேசி கப்பல் இயக்கத்தை ஆரம்பித்தார். இதன்மூலம் வெள்ளையனின் வியாபார வளத்தை முறியடிக்கலாம் என்று முயற்சி மேற்கொண்டு தோல்வியுற்றார்.
1872 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரன் என்ற ஊரில் பிறந்தார் வஉசி.
இவங்க அப்பா பெயர் உலகநாதம் பிள்ளை. அம்மா பெயர் பரமாயியம்மாள்.
தூத்துக்குடி செயிண்ட் பிரான்சிஸ் உயர்நிலைப்பள்ளியில் படித்துவிட்டு கால்டுவெல் கல்லூரியில் மெட்ரிகுலேஷன் படிப்பில் தேறினார்.
வக்கீலாக வேண்டும் என்று விரும்பி வக்கீலுக்குப் படித்து வெற்றிகண்டார். தனது ஊரிலையே வக்கீல் தொழிலை ஆரம்பித்தவர் 1900 ம் ஆண்டு தூத்துக்குடிக்கு தனது வக்கீல் தொழிலை மாற்றிக்கொண்டார்
1906 ம் ஆண்டு சுதேசி கப்பல் கம்பெனியை நிறுவினார். கம்பெனியின் தலைவர் பாண்டித்துரை சாமி காரியதரிசியாக வஉசி
ஆரம்பத்தில் கப்பலை குத்தகைக்கு எடுக்கத் திட்டமிட்டவர் பின்பு சொந்தமாகவே கப்பலை வாங்கிவிட்டார். இதற்குண்டான பணத்திற்காக ஊர் ஊராக சென்று ஷேரை விற்க ஆரம்பித்தார். ஆங்கிலேயர்கள் இதனைக் கண்டு சும்மாவா இருப்பார்கள். அவருக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தார்கள்.
இருந்தாலும் அந்தத் தொந்தரவுகளையெல்லாம் முறியடித்து சுதேசி கப்பல் வியாபாரம் சிறப்பாக நடத்தினார்
1908 ம் ஆண்டு திருநெல்வேலியில் தேசாபிமானி சங்கத்தை ஏற்படுத்தி விடுதலை வேட்கையைத் தூண்டினார்.
சுப்பிரமணியம், சிவாவும் வஉசியும் பேசுகிறார்கள் என்றாலே ஆங்கிலேயர்கள் கிடுகிடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். அந்த அளவிற்கு அலைமோதும் மக்கள் கூட்டத்தை திரட்டுவார்கள்.
மார்ச் மாதம் 9 ம் தேதி தூத்துக்குடியில் பெரிய ஊர்வலம் நடத்தியதை ஆங்கிலேயர்கள் கண்டித்து அவரை திருநெல்வேலியை விட்டு வெளியேற வேண்டும் எனவும் தேசிய இயக்கத்தில் சேரக்கூடாது என்று வாக்குறுதி தருமாறு உத்தரவிட்டது.
ஆனால் வஉசி அதனை ஏற்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேயர்கள் வஉசியையும் சுப்ரமணிய சிவாவையும் கைது செய்தார்கள்.
இதனால் நாடே கொந்தளித்தது. துப்பாக்கிச்சூடு கலவரங்கள் நீடித்தன. வஉசி மீதும் சுப்ரமணிய சிவா மீதும் அரசு வழக்கு தொடர்ந்து வஉசிக்கு அந்தமானில் 20 ஆண்டு காலச் சிறையும் சிவாவுக்கு 10 ஆண்டு சிறையும் கொடுத்தது
ஆனால் வஉசி மேல் முறையீடு செய்து தண்டனையை 6 ஆண்டுகளாக குறைத்தார். கோவை சிறையில் அடைக்கப்பட்டார்
சிறையில் அவரை ஆங்கிலேயர்கள் செக்கிழுக்க வைத்து துன்புறுத்தியதால் அவர் மிகவும் உடல் நலம் குன்றிப்போனார். இவர் சிறை சென்றவுடன் இவரது கப்பல் கம்பெனி சரியான தலைமையின்றி சீரழிந்து நஷ்டத்திற்குள்ளாகியது. பங்குதாரர்கள் எல்லாம் இவரால்தான் நஷடமாகியது என்று குறை சொல்ல ஆரம்பிக்க மனம் உடைந்து போனார் வஉசி.
1921 ல் விடுதலையானார். அப்பாழுது சென்னையில் நீதிபதியாக இருந்த வாலஸ் அவருக்கு வக்கீல் பட்டத்தை திரும்ப வாங்கிக்கொடுத்தார்.
1920 ல் காந்தியின் சாத்வீகப் போராட்டங்களை காங்கிரஸ் பரிசீலிக்க ஆரம்பிக்க சாத்வீக போக்கு பிடிக்காமல் காங்கிரஸை விட்டு விலகினார். பின்பு பலரின் வற்புறுதலுக்கு இணங்க 1927 ல் மீண்டும் இணைந்தார்.
சிறையில் செக்கிழுத்ததால் அவர் உடல் நலம் ஏற்கனவே குன்றிக் காணப்பட்டது. இந்நிலையில் வறுமையும் அவரை வாட்ட மிகவும் இளைத்துப் போய்விட்டார்.
சுதந்திரத்திற்காகப் போராடியவர் சுதந்திரத்திற்கு இன்னும் 11 ஆண்டுகளே மீதமிருந்த நிலையில் இந்திய சுதந்திக் காற்றைச் சுவாசிக்கமலையே 1936 ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி வஉசி மறைந்து போனார்.
பின்னர் 1949 ல் இராஜாஜி கவர்னராக இருக்கும்பொழுது வஉசி பெயரில் கப்பல் ஒன்றை மிதக்க விட்டார்;.
பின்பு அவரைப் பற்றிய புத்தகமான கப்பலோட்டிய தமிழன் வெளியிடப்பட்டு அதுவே திரைப்படமாகவும் பின்னாளில் எடுக்கப்பட்டது.
இப்பொழுதும் அந்த வஉசி மைதானத்தைக் கடக்கும்பொழுதெல்லாம் எனது வாகனத்தின் சப்தம் செக்கிழுப்பது போலவே கேட்டுக்கொண்டிருக்கின்றது
யாரேனும் பாளையங்கோட்டை வஉசி மைதானம் வர நேரிட்டால் செக்கிழுத்துவிட்டுச் செல்லுங்கள் இல்லை இல்லை செக்கிழுத்தவரின் நினைவை இழுத்து விட்டுச் செல்லுங்கள்.
- ரசிகவ் ஞானியார்
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
காங்கிரசுக் கட்சி பெரும் மனிதர் வ.உ.சிக்குச் செய்த துரோகத்திற்கு மன்னிப்பே கிடையாது.
அன்றிருந்த சென்னை மாகாணத்திலே காங்கிரசுக்கட்சிக்குப் பெயரே நாயுடு{வரதராஜலு நாயுடு} நாயக்கர்{பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்} முதலியார்{திரு.வி.கலியாணசுந்தர முதலியார்} கட்சி என்றுதான் பெயர்.அவர்கள் உழைப்பிலே வளர்ந்து அவர்கள் அனைவருக்கும் பெருந்துரோகம் இழைத்தக் கட்சி காங்கிரசு.கடைசியில் நாயுடுவும் நாயக்கரும் சேர்ந்து காமராசரை வற்புறுத்தி ராசகோபாலாச்சாரியாரை{ராஜாஜி} எதிர்த்து முதலமைச்சராக்கித் தமிழ்நாட்டில் காங்கிரசில் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்தனர்.
//Thamizhan said...
காங்கிரசுக் கட்சி பெரும் மனிதர் வ.உ.சிக்குச் செய்த துரோகத்திற்கு மன்னிப்பே கிடையாது.//
நன்றி தகவலுக்கு
//பாரதியின் இறுதிச் சடங்கில் ஆட்களின் எண்ணிக்கையை விடவும்
ஈக்களின் எண்ணிக்கைதான் அதிகம் என்று வைரமுத்துவின் கவிதை ஒன்றில் வாசித்திருக்கின்றேன். கேட்கும்பொழுதே பதறுகின்றது நெஞ்சம்.// எனக்கு அழுகையே வருகிறது.
//இப்பொழுதும் அந்த வஉசி மைதானத்தைக் கடக்கும்பொழுதெல்லாம் எனது வாகனத்தின் சப்தம் செக்கிழுப்பது போவே கேட்டுக்கொண்டிருக்கின்றது//
//யாரேனும் பாளையங்கோட்டை வஉசி மைதானம் வர நேரிட்டால் செக்கிழுத்துவிட்டுச் செல்லுங்கள் இல்லை இல்லை செக்கிழுத்தவரின் நினைவை இழுத்து விட்டுச் செல்லுங்கள்.// மிகவும் அழுத்தமான உணர்ச்சிபூர்வமான வாக்கியங்கள்.
வ.உ.சி ஐயாவின் நினைவு கூறும் இந்த நல்ல பதிவை தந்தமைக்கு நன்றி நிலவு நண்பன்.
//இப்பொழுதும் அந்த வஉசி மைதானத்தைக் கடக்கும்பொழுதெல்லாம் எனது வாகனத்தின் சப்தம் செக்கிழுப்பது போலவே கேட்டுக்கொண்டிருக்கின்றது//
நண்பா! உங்களோடு நானும் அந்த சத்தத்தைக் கேட்கிறேன். மெய் சிலிர்க்கிறது - இந்த வரிகள் உணர்வுகளின் உண்மை வெளிக்காட்சி.
நாட்டுக்காக பாடுபட்ட ஒருவர் வறுமையில் வாடி கிடந்தார் என்பதை விட, பட்டாடை உடுத்திய பரம்பரையில் பிறந்து தம் சொத்து சுகமெல்லாம் நாட்டுக்காகவே செலவிட்ட மனிதர் அவர். அவரை போற்ற ஒரு பிறவி போதாது.
அவர் சுதந்திர போராட்ட தியாகி மட்டுமல்ல. சிறந்த ஆன்மீகவாதியும், சிறந்த மொழிபெயர்ப்பாளரும் கூட.
முடிந்தால் அவரின் சாந்திக்கு மார்க்கும் எனும் புத்தகம் படியுங்கள்.
நன்றி,
விவேதா (விஜய்)
//விவேதா said...
//இப்பொழுதும் அந்த வஉசி மைதானத்தைக் கடக்கும்பொழுதெல்லாம் எனது வாகனத்தின் சப்தம் செக்கிழுப்பது போலவே கேட்டுக்கொண்டிருக்கின்றது//
நண்பா! உங்களோடு நானும் அந்த சத்தத்தைக் கேட்கிறேன். மெய் சிலிர்க்கிறது - இந்த வரிகள் உணர்வுகளின் உண்மை வெளிக்காட்சி.
//
விமர்சனத்திற்கு நன்றி நண்பா..கண்டிப்பாக தாங்கள் கூறிய புத்தகத்தை படிக்க முயல்கின்றேன்..
//மாசிலா said...
வ.உ.சி ஐயாவின் நினைவு கூறும் இந்த நல்ல பதிவை தந்தமைக்கு நன்றி நிலவு நண்பன்.
//
வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி மாசிலா
Post a Comment