நேற்று நண்பனோடு
திருநெல்வேலி ஹைகிரவுண்ட் நோக்கி விரைந்து பைக்கில் சென்று கொண்டிருந்தபொழுதுதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
எனது பைக்
சேவியர் கல்லூரியைத் தாண்டி வேகமாய் சென்று கொண்டிருந்தது.தூரத்தில் வரும்பொழுதே கவனித்துவிட்டேன். அந்த
சான்ரோ கார் திரும்புவதற்கு முயற்சித்து முயற்சித்து பின்வாங்கியது.
நானும் வாகனத்தில் நெருங்கி விட , அந்த நேரத்திலும் அந்தக் கார் திரும்ப முயற்சித்து பின்வாங்கிவிட, தைரியமாக விரட்டி சென்றேன்.
எதிர்பாராத விதமாக அந்தக்கார் இப்பொழுது சரியாக ரோட்டின் குறுக்கே வரை வந்து திரும்பிவிட , நானும் சட்டென்று ப்ரேக் பிடிக்கமுடியாததால், கார் முழுவதும் திரும்புவதற்குள் சென்றுவிடலாம் என்று எத்தனிக்க , காரும் நான் முந்துவதற்குள் திரும்பிவிடவேண்டும் என அவசரப்பட..
ப்ரேக் முழுவதுமாய் அழுத்தி நிறுத்துவதற்குள்
..ட..மார் என்ற சப்தத்துடன் நாங்கள் வாகனங்களால் முத்தமிட்டுக்கொண்டோம்.
காரின் ஹெட்லைட் மற்றும் முன்பகுதிகள் நொறுங்கி தெறிக்க, எனது பைக்கில் ஹெட்லைட்டும் உடைந்து சிதறி முன்பகுதிகளில் உள்ள சில துண்டுகள் சிதறி விழுந்தன.
மோதிய வேகத்தில் நான் பைக்கில் இருந்து காரின் முன்பகுதியில் விழுந்து உருண்டு கீழே விழுந்துவிட்டேன். நல்லவேளை காரை ஓட்டியவரும் உடனே ப்ரேக் போட்டுவிட கார் என்மீது ஏறாமல் தப்பித்தேன்.
நான் விழுந்த வேகத்தில் உருண்டு
கிருஷ்ணா மருத்துவமனையின் ஓரத்தில் விழுந்துவிட பின்னால் வந்த நண்பன் சுதாரித்து குதித்து, ஓடி வந்து தரையில் கிடந்த என்னை எழுப்பிவிட, நல்லவேளை கைகளிலும் மணிக்கட்டிலிலும் அதிகமாக அல்லது குறைவாக என்று சொல்லமுடியாத அளவிற்கு அடிகள்.
கொஞ்சம் உள்ளங்கைகளில் சிராய்ப்புகள்.
நான் கீழே விழுந்த அதிர்ச்சியில் எதிரே வந்த
ஜங்ஷன் பேருந்து திடீரென்று ப்ரேக் அழுத்தி நின்றது. நண்பர்களின் மற்றும் உறவினர்களின் மற்றும் சுற்றியிருப்பவர்களின் சுயநலம் இல்லாத ப்ராத்தனைகளும் அன்பும்தான் அந்த பேருந்து ட்ரைவரை ப்ரேக் போட வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் ரசிகவ்வின் வலைப்பதிவுகள் அநாதையாக போயிருக்கும்.
பக்கத்தில் பள்ளிக்கூடம் இருப்பதால் அங்குள்ள மாணவர்களின் மற்றும் சாலையோர பயணிகளின் கூட்டங்கள் சுற்றி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது.
போரில் குண்டு வீசப்பட்ட பகுதிகளைப் போல கண்ணாடிச்சிதறல்கள்.. உடைந்த காரின் முன்பாகம்..பைக்கின் ஹெட்லைட் துகள்கள்..செருப்பு..பேனா..பைக்கில் இருந்து விழுந்த வார இதழ்.. மூக்கு கண்ணாடி.. சில துண்டு துண்டு வொயர்கள்..என்று அந்தப்பகுதி மினி கலவரபூமியாக காட்சியளித்தது.
கீழே விழுந்தவனை வேடிக்கை பார்க்கும்பொழுது அவனுடைய கோபம் - படபடப்பு சுற்றியுள்ளவர்களுக்கு சில சமயம் நியாயமாகத்தெரியாது. ஆனால் இப்பொழுது நான் விழுந்ததும்தான் அந்த படபடப்பை கோபத்தை தெரிந்துகொண்டேன். கார் ஓட்டி வந்த பெரியவர் பந்தாவாக இறங்கி காரின் முன்பகுதியில் உள்ள சேதத்தை பார்த்தார். எனக்கு கோபம் அதிகமாகி வலித்த கைகளை நீட்ட முடியாமல் மடக்கி வைத்துக்கொண்டு, அந்தக் கார் ஓட்டுனரிடம் சண்டைக்குச் சென்றேன்.
"அறிவிருக்கா சார்.. நான்தான் வர்றேன்னு தெரியுதுல..அங்கிருந்தே ஹாரன் அடிச்சிட்டே திரும்புறேன்ல.. பார்த்து திரும்பவேண்டியதுதானே..?""நான் சிக்னல் போட்டுட்டுதானே திரும்புனேன்..நீதான் கவனிக்கல.. " சொல்லிக்கொண்டே தனது காரின் முன்பகுதியையே நோட்டமிட்டார்..
"கைல அடிபட்டிருக்குன்னு சொல்றேன்..உங்களுக்கு கார்தான் முக்கியமா படுதோ?.. பார்த்து திரும்ப கூடாது.. ? "என்று நான் கோபப்பட
பக்கத்தில் உள்ள ஆட்டோக்காரர்கள் எல்லாம், எனக்கு ஆதரவாகவும் அந்த சான்ரோ கார் ஓட்டுநருக்கு எதிர்ப்பாகவும் பேச ஆரம்பிக்க,
எனக்கு அடிபட்டிருக்கிறது என்ற பயமும், ஆட்டோக்காரர்களின் ஆதரவும் கண்டு பயந்த அவர் நான் முந்துவதற்குள் தான் முந்திவிடவேண்டும் என்று
"போலிஸை கூப்பிட்டுறுவேன்" என்று மிரட்ட,
உடனே நான் 100 க்கு எனது செல்போனிலிருந்து டயல் செய்ய,
"உங்கள் தொலைபேசிக்கு இந்த வசதி இல்லை" என்று அழகான தேவதை வரமிட்டுக்கொண்டிருந்தாள்.
"இவ்வளவு வசதி கொடுக்குறாங்க இந்த வசதியை மட்டும் ஏன்பா கொடுக்கலை செல்போனுக்கு" என்று நொந்தபடி பக்கத்தில் உள்ள காயின் பாக்ஸில் சென்று 1 ரூ நாணயத்தை இட்டு 100 ஐ டயல் செய்தேன். வாழ்க்கையில் முதன்முதலாய் 100 க்கு போன் செய்கின்றேன். அதுவே கடைசிமுறையாய் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்.
ரிங்..ரிங்...ரிங்..ரிங்..
"ஹலோ அவசர உதவி.. யார் சார் பேசுறது..?"அவர்கள் கூறிய தொனியைக் கேட்டவுடன் அவங்களுக்குத்தான் அவசர உதவி தேவையோ என்று நான் நினைத்துக்கொண்டேன்.
"சார் என்னோட பேரு ஞானியார்..இங்கே கிருஷ்ணா மருத்துவமனை அருகே ஒரு கார் என் பைக்ல மோதிடுச்சு சார்..""சரி அதுக்கு இப்ப என்ன பண்ணணும்ங்கறீங்க..""என்னப்பா இப்படி பொறுப்பில்லாம சொல்றாங்க" என்ற எரிச்சலுடன்,
"இல்லை சார் எனக்கு கைல அடிபட்டிருக்கு..பைக்குக்கும் சேதம் அதனால் கம்ப்ளெண்ட் பண்ணப்போறேன்.. " என்று கூற
"உங்க வண்டி எண் சொல்லுங்க.. TN72 H 1717 - Splender""சரி அந்த வண்டி நம்பர் என்ன..?""TN 72 P 303 சாண்ரோ கார் சார்.."பெயர் - முகவரி - இடம் என்று எல்லாம் கேட்டு விட்டு ,
"இன்னும் 5 நிமிசத்துல வண்டி வரும் சார் " என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார்கள்.
அதற்குள் என்னுடன் வந்த நண்ப
ன் ஷாஜஹான் தனது உறவினரான பக்கத்து போலிஸ்ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரியும் ஒருவருக்கு போன் செய்து விவரம் கூற, அவர் உடனே வருவதாக வாக்களித்தார்.
அவசர உதவி வருவதற்காக காத்திருந்தோம். அவசர உதவி கொஞ்சம் தாமதமாகவே வந்தது. நண்பர் ஷாஜஹானிடம் காத்திருந்த நேரத்தில் துபாயில் உள்ள விபத்துக்களைப் பற்றி பகிர்ந்து கொண்டேன்
இதே துபாய்னா..மோதியவரும் மோதப்பட்டவரும் இறங்கியவுடன் கைகுலுக்கிவிட்டு போலிசுக்கு போன் செய்வார்கள்.
போன் செய்த 5 நிமிடத்திற்குள் போலிஸ் வந்து வண்டி எப்படி மோதியது? யார் மீது தவறு..? எந்த வாகனம் தவறுதலாய் வந்திருக்கும் என்று அலசி ஆராய்வார்கள். பின் தவறு செய்தவருக்கு சிகப்பு நிற ரிப்போர்ட்டும், தவறு செய்யாதவருக்கு பச்சை நிற ரிப்போர்ட்டும் கொடுத்து விடுவார்கள்.
அதனைக் கொண்டு சென்றால்தான் மெக்கானிக் ஷாப்பில் வண்டியை ரிப்பேர் செய்ய அனுமதியளிப்பார்கள். அதுபோல ஒரு வரைமுறைகள் இங்கும் இருந்தால் எப்படியிருக்கும் என்று நண்பனிடம் விவாதித்துக் கொண்டிருக்கும்பொழுதே மழையும், அவசர உதவி போலிசும் விரைந்து வந்தன.
நான் ஓடிச் சென்று அவர்களிடம் என்னைப்பற்றி கூறி என் முகவரி,எனது வாகன எண், விபத்து நடந்த முறை , மோதியவரின் வாகனம் மற்றும் எண் சொல்லிக்கொண்டிருந்தேன்.
மோதியவரை அழைத்து அவருடைய முகவரியை போலிஸ் கேட்க , அவரோ
"வண்டியை எடுத்து ஓரத்துல விடுறேன் சார்..வண்டியை ஓரத்துல விடுறேன் சார்.".என்று அவரிடம் நச்சரிக்க, அந்தப் போலிஸ்காரர் எரிச்சலடைந்து
"ஒண்ணும் வேண்டாம் தகவலைக் கொடுத்துட்டுப் போங்க " என்று கோபப்பட்டார்.
அந்தப் பெரியவரும் தகவலைக் கொடுத்துவிட்டு தனது வாகனத்தை ஓரத்தில் நிறுத்துவதற்காக செல்ல இந்தப்போலிஸ்காரர் என்னை அழைத்தார்.
"சார் இங்க வாங்க" என்று போலிஸ்காரர் என்னை அழைக்க , நான் உடனே காருக்குள் ஏற அவரோ,
"அட இப்படி சுத்தி இந்த சைடு வாங்க சார்.. " என்க ,
நான் ஜீப்பை சுற்றி அவர் பக்கம் செல்ல அவர்,
"உங்களுக்கு கைல வலி அதிகமாக இருந்தா நீங்க உடனே போய் ஜி ஹெச்ல அட்மிட் ஆகியிருங்க" என்க நானோ
"பக்கத்துலதான் இந்த கிருஷ்ணா ஹாஸ்பிடல் இருக்கே..இங்கே ஒரு இன்ஜெக்ஷன் போட்டுக்கறேன் சார்..""அட நான் சொன்ன மாதிரி செய்யுங்க..ஜி ஹெச்சுக்குப் போனாதான் போலிஸ் கேஸாகும்..அங்க போங்க " என்று கூற
"சரி சார் இப்ப போகவா..?""கொஞ்சம் வெயிட் பண்ணுங்க எஸ் ஐ வந்திட்டு இருக்கார்..இதுக்குன்னு தனி எஸ் ஐ போட்டுறுக்காங்க.. அவர் வந்தவுன்ன போங்க" என்று கூறிக்கொண்டிருக்கும்பொழுதே
எனது நண்பன் ஷாஜஹானின் உறவினரான ஏட்டையா வந்து அந்த போலிஸ்காரர்களிடம் சகஜமாக பேச எனக்கு இன்னும் கொஞ்சம் நம்பிக்கை வந்தது.
நான் உடனே எனது நண்பன் காஜாவிற்கு போன் செய்து எங்களுக்கு தெரிந்த எங்களது கல்லூரி நண்பரான பிரதீஷ் என்ற லாயரை வரச்சொன்னேன்.
மழையும் , வலியும் அதிகரிக்க கைகளை சிரமப்பட்டு நீட்ட முயன்று மடக்கி வைத்துக்கொண்டேன். அதனைக்கண்ட நண்பனின் உறவினரான போலிஸ்காரர் என்னிடம்,
"வாங்க முதல்ல ஜி ஹெச்சுக்குப் போய் அட்மிட் ஆகி கேஸை பைல் பண்ணுவோம்" என்று கூறி என்னை அவரது பைக்கில் ஏற்றிக் கொண்டார்.
நேராக கவர்மெண்ட் ஹாஸ்பிடல், ஆக்சிடெண்ட் கேர் பகுதிக்குச் சென்று வரிசையில் அமரச்சொல்லிவிட்டு அங்குள்ள ஊழியர் ஒருவரிடம் "அர்ஜெண்ட்" என்று கண்ணசைக்க அவரும் "சரி சார் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க " என்று சொன்னார்.
மருத்துவமனை என்றாலே எனக்கு அலர்ஜி அதுவும் அரசாங்க மருத்துவமனை என்றால் சொல்லவேண்டுமா..? அந்த வாசனையே எனக்கு குமட்டிக்கொண்டு வந்தது.
பக்கத்தில் உள்ள ஊழியர் ,"என்னாச்சுப்பா..?" என்றார்
"சின்ன ஆக்சிடெண்ட்ங்க.."
"பைல் பண்ணினா போலிஸ் கேஸாயிடும்" என்று அவர் கூற
"அதுக்குத்தான் வந்தோம் "என்று கூறிவிட்டு என்னுடைய முறை வந்ததால் உள்ளே சென்றேன்.
மருத்துவக்கல்லூரி பயிற்சி மாணவர் & மாணவி ஒருவர் அமர்ந்திருக்க, அவர்கள் என்னிடம் எல்லாம் விசாரித்ததார்கள். பின் தோள்பட்டையில் ஊமைக்காயம் பட்டிருப்பதாகவும், கைளை ஸ்கேன் செய்யவேண்டும் என்றும் ரிப்போர்ட் எழுதிவிட்டு ஒரு குறிப்பிட்ட படுக்கையை எனக்காக தேர்வு செய்தார்கள்.
பின்னர் கைகளில் ஒரு ஊசி போட்டுவிட்டு அந்தப்படுக்கையில் மனமில்லாமல் சென்று அமர்ந்தேன்.
அந்த ஏட்டையாவிடம் ,
"அய்யோ இங்கேயா இருக்க""அப்பத்தான் கேஸ் பைல் பண்ணமுடியும்..நம்ம பக்கம் ஸ்ட்ராங்கா இருக்கும்..கொஞ்ச நேரம்தான்பா..நான் போய் வண்டி என்ன ஆச்சு..அந்த எஸ் ஐ வந்தாரா இல்லையான்னு பார்த்துட்டு அங்குள்ள நிலைமையை பார்த்துட்டு வந்துர்றேன்.. "என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
எனக்கு அங்குள்ள சூழல் ஒரு விதமான பயத்தை கொடுத்தது. தயக்கத்துடனையே சென்று எனக்குண்டான படுக்கையில் சென்று அமர்ந்தேன். எனக்கு நீண்ட நாட்களாகவே அரசாங்க மருத்துவமனையைப் பற்றி ஒரு லைவ் ஆர்ட்டிக்கிள் எழுத வேண்டும் என்று ஆசை..ஆனால் எப்படி சூழல் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது பாருங்களேன்?
சில இரத்தக்காயங்கள் ஆங்காங்கே தெரிகின்ற ஒரு போர்வையை விரித்திருந்தார்கள். நான் பட்டும் படாமல் நுனியில் உட்கார்ந்திருந்தேன். சுற்றி நோட்டமிட ஆரம்பித்தேன்.
எனக்கு பக்கத்து படுக்கையில் ஒரு சிறுவனுக்கு கைகள் இரண்டிலும் பலத்த கட்டு போட்டிருக்க அவன் குப்புற படுத்துக் கிடந்தான். அய்யோ பாவம்..நிமிர்ந்து கூட படுக்க முடியவில்லை
இந்தப்பக்கத்தில் ஒருவன் உடலெல்லாம் வெட்டுக்காயத்தோடு முனகிக் கிடந்தான். சட்டைப்பையில் மற்றும் பேண்டில் எல்லாம் இரத்தம் உறைந்து போய் இருந்தது. அவனிடம் ஒரு லேடி டாக்டர் ( பயிற்சி மாணவி ) "என்னப்பா ஆச்சு..?"
அவன் அலட்சியமாக "ஒரு தகறாறு வெட்டிட்டாங்க.." என்று கூற
"எதுக்கு வெட்டினாங்க?" - டாக்டர்
அவன் சொல்லவில்லை மௌனம் சாதித்தான்.எனக்கு அந்தச் சூழல் வயிற்றில் புளியைக் கரைத்தது. அவனுக்கு அந்த லேடி டாக்டர் மயக்க மருந்து கொடுத்து வெட்டுக்காயங்களுக்கு மருந்து அளித்துக்கொண்டிருந்தார் எந்தவித முக சுளிவுகளும் இல்லாமல்.
மருத்துவத்தொழிலின் புனிதம் கொஞ்சம் கொஞ்சமாய் எனக்கு தெரிய ஆரம்பித்தது.கொஞ்சம் தூரத்தில் உள்ள ஒரு படுக்கையில் உள்ளவனுக்கு முகத்தில் எல்லாம் வெட்டுக்காயங்கள். அவனை அவனது உறவினர் கைத்தாங்கலாக பாத்ரூம் அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.
தன்னுடைய உதவியின்றி பாத்ரூம் கூட செல்லமுடியாத நிலைமை எந்த மனிதனுக்கும் வரவே கூடாது..கவர்மெண்ட் ஆஸ்பிடலில் இருப்பது போல ஒரு கொடுமை எங்கும் கிடையாது. பேசாமல் யாருக்காவது தண்டனை கொடுக்க விரும்பினால் அவனை கவர்மெண்ட் ஆஸ்பிடலில் ஒரு வாரம் தங்க வைத்தால் போதும் என்று சொல்லும் அளவிற்கு சூழல் என்னை மிகவும் பாதித்தது.
ஒரு நோயாளியின் காயங்கள் அவனுடைய நிலைமைகள் பக்கத்து படுக்கையில் உள்ள நோயாளியின் மனநிலையை பாதிக்காத வண்ணம் கேபின் கேபினாக படுக்கை அறையை அமைத்தால்தான் என்ன..? ஏழைகள் அல்லது இலவசமாய் செய்கின்ற எல்லாமுமே அப்படித்தான் இருக்கின்றன. இதற்கு ஒரு தீர்வே கிடையாதா..? என்று விடியுமோ..?
இதையெல்லாம் கவனித்துக் கொண்டு இருக்கும்பொழுதே எனது நண்பன் மற்றும் ஏட்டையா ஆகியோர் வந்தனர். அங்குள்ள நர்சுகளிடம் என்னை வெளியே அழைத்துச் சென்று தேநீர் வாங்கித்தந்துவிட்டு வருவதாக சொல்லி அழைத்துச்சென்று மருத்துவமனைக்கு வெளியே அழைத்துச் சென்று விட்டார்.
"
உன்னை அட்மிட் பண்ணியாச்சுன்னு சொன்னவுடனையே அந்த ஆள் சமாதானத்திற்கு வந்திட்டாரு..அந்த எஸ்ஐ யிடம் பேசினேன். அந்த ஆளுக்கு இன்சூரன்ஸ்க்காக ஒரு ரிப்போர்ட் கொடுத்துறலாம். நீங்க கேஸை வாபஸ் வாங்கிருங்கன்னு சொல்லிட்டாரு..ஏன்னா நமக்கும் இன்சுரன்ஸ் இல்லை.."
"அதையும் மீறி அவர் கேஸ் போடணும்னு சொன்னாருன்னா நம்ம மறுபடியும் படுக்கையில சேர்ந்துறலாம் "
என்று கூறிவிட்டு, அந்த எஸ் ஐ யை பார்ப்பதற்காக ஜங்ஷன் சென்றுகொண்டிருக்கும்பொழுது நண்பர் ஷாஜஹான் தான் மறுநாள் துபாய் செல்லவேண்டும் ஆகவே தானும் காவல் நிலையம் வந்தால் சிக்கல் என்று நான் வரவில்லை என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்
உடனே காஜா வந்து எனது வாகனத்தை எடுத்துக்கொண்டு வர நான் அந்த ஏட்டையாவுடன் ஜங்ஷன் சென்றேன். அந்த எஸ் ஐ வெளியில் போய்விட மாலை வரச்சொன்னார்கள்.
3 மணியிலிருந்து 5.30 மணிவரை அங்கு காத்திருந்தும் எஸ் ஐ வராததால் அவருக்கு போன் செய்ய அவரோ வழக்கு போட விரும்பவில்லை என்று எழுதிக்கொடுத்துவிட்டு சென்று விடுமாறு சொல்ல அவ்வாறே எழுதிக்கொடுத்துவிட்டு கிளம்பினேன்.
மனு எழுதும்பொழுது எனக்கு பள்ளிக்கூட காலத்தில் லீவு லட்டர் எழுதியதுதான் ஞாபகம் வந்தது. அங்குள்ள ஒரு காவலர் சொல்லச் சொல்ல நான் எழுதினேன்.
மனுதாரரின் பெயர் : கே. ஞானியார் வயது : 28
--------------------------
திருநெல்வேலி.
பெறுநர் : உயர்திரு போக்குவரத்து துறை ஆணையர் அவர்கள் - திருநெல்வேலி
ஐயா,
நான் இன்று காலை 12.45 மணியளவில் பாளையங்கோட்டை அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு சென்றுவிட்டு ஹைகிரவுண்ட் சென்று கொண்டிருந்தபொழுது எனது வாகனமான TN72 H 1717 - Splender– மீது தனது காரை ( TN 72 P303 ) காரை சட்டென்று திருப்ப முயன்று என் மீது மோதிவிட்டார். என்னுடைய வாகனத்திற்கு சிறு சேதமும் எனக்கு கைகளில் ஊமைக்காயமும் உள்ளங்கையில் சிறு சிராய்ப்பும் ஏற்பட்டள்ளது. நாங்கள் எங்களுக்குள் சமாதானமாகி போய்விட்டபடியால் இது தொடர்பாக போலிஸ் தலையீடு தேவையில்லை என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
இப்படிக்கு
கே. ஞானியார்
என்னுடன் காவல் துறையைச் சார்ந்த தெரிந்தவர் ஒருவர் வரப்போய் அங்குள்ள நிலைமைகளை சீராக கொண்டு செல்ல முடிந்தது. இல்லையென்றால் பணம் விரயம் செய்ய வேண்டிய நிலை உருவாகியிருக்கும்.
எனக்கு நேர இருந்த ஒரு பெரிய ஆபத்து நீங்கிவிட்டதோ என்ற ஒருவிதமான திருப்தியிலும் உள் அச்சத்திலும் மன கலக்கத்திலும் மற்றும் அம்மா ஒத்தடம் கொடுத்த கைகளோடும் நினைவுகளின் அசைவுகளோடும் தூங்கப்போகின்றேன்.
- ரசிகவ் ஞானியார்