Friday, November 02, 2007

ஒரு கருவின் கதறல்



பூமியில் இருக்கின்ற அம்மாவுக்கு,


சொர்க்கத்திலிருந்து
உன் குழந்தை எழுதும்
முதல் கடிதம் இது.

இல்லை இல்லை
உன்
கரு எழுதுகின்ற
கடிதம் இது.


உருத்தெரியாமல் போய்விட்ட எட்டு மாத கரு பேசுகிறேன்.

பூமியில் வாழ வருவதற்கு முன் தெருவில் தீக்கிரையாக்கப்பட்ட கருவின் முனகல் சப்தம் இது.


வேடிக்கையாக இருக்கிறது அம்மா..
கடிதங்கள் சுமக்கும்
கருக்களுக்கு மத்தியில்
ஒரு
கருவே இங்கு
கடிதம் எழுதுகிறது பாரேன்..?


உன்னுடைய வடிவில் இறைவனை சந்திக்க நினைத்தேன். இப்பொழுது இறைவனின் முகத்தில் உன்னை கண்டு கொண்டிருக்கின்றேன்.

ம்..ஆமாம்மா..நான் இப்போது இறைவனின் மடியில் தவழ்ந்து கொண்டிருக்கின்றேன். அவன் என்னை உலகத்தில் எல்லோரைவிடவும் அதிகமாக விரும்புகின்றான்.

என்னம்மா நீ நக்கலாக சிரிப்பது போல தெரிகின்றது. "ம் என்னடா உலகத்தில் யார் யார் எப்படி எப்படி என்னை விரும்புவார்கள் என்று தெரிவதற்கு முன்னரே என்னை அழித்து விட்டார்களே..? எனக்கு எப்படி யார் அதிகமாய் விரும்புவார் என்று தெரியும் என்கிறாயே...? "

யார் எப்படியோ தெரியாதம்மா ஆனால் நீ என்னை அதிகமாய் விரும்பியிருக்கிறாய் என்று உன் வயிற்றிலிருக்கும்போது நீ தந்த ஸ்பரிசத்திலிருந்து மெல்ல மெல்ல உணர்ந்தேன்.

நான் உன்னுடைய குழந்தையாக மாற நினைத்தேன். ஆனால் என்ன நடந்தது என்று இதுவரை உணர முடியவில்லை. ஏனம்மா என்னை கருவில் அழித்தார்கள்?


உன் வயிற்றினுள் இருக்கும் அந்த அறையில் நான் மெய் மறந்து இருந்தேன் தெரியுமா..?
அந்த பாதுகாப்பான இருட்டறை எவ்வளவு சுகமாய் இருந்தது?




எந்த குழாய் வழியாகவோ வருகின்ற உணவுகள்..

யாரோ எனக்கும் சேர்த்து மூச்சு விடுவது போன்ற உணர்வுகள்..

நீ அங்குமிங்கும் நடக்கும்போது மேகங்களுக்கு மத்தியில் நான் உலா வருவது போன்ற கனவுகள்..

திடீரென்று ஆசிர்வதித்து விட்டு மறைந்து போகும் கைகள்..எனக்கு முளைத்துள்ள குட்டி குட்டி விரல்கள்...

எல்லாம் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது அம்மா..

அந்த இருட்டு உலகத்தில் எப்பொழுதும் யோசனையுடனும் தூக்கத்துடனும் என்னுடைய பொழுதுகள் கழிந்து கொண்டிருந்தன..

அவ்வப்போது நீ சமைக்கும்போது வருகின்ற குக்கர் விசிலின் சத்தம் கேட்டு நானும் பதிலுக்கு விசில் கொடுக்க நீ பரவசப்பட்டு ஒரு தட்டு தட்டுவாயே..?

உன்னை நானும் என்னை நீயும் இதுவரை பார்த்ததில்லை என்றாலும் உனக்கும் எனக்கும் உள்ள அந்த நெருங்கிய உறவுக்கு என்ன பெயர் வைப்பது என்று இதுவரை என்னால் சொல்ல முடியவில்லையம்மா.


எப்போதும் வயிற்றில் காதுவைத்து என் சத்தங்கள் கேட்டு மகிழ்ந்து என்னைவிடவும் ஒரு குழந்தையாக மாறி கத்துவாரோ என் தந்தை..

அந்தச் சத்தங்கள் எல்லாம் தொப்புள் கொடி வழியாக என்னைத் தொட்டுக்கொண்டிருந்தன..எவ்வளவு சுகமாய் இருந்தது தெரியுமா..?

பின்னர் உன்னைச்சுற்றிய உறவினர்களின் கேலி கிண்டல்கள் எல்லாம் கேட்டு கேட்டு அவர்களின் குரல் எனக்குள் பதிந்து போயிற்று..

வெளியே வந்ததும் முதல் வேலையாக உன்னை கேலி செய்தவர்களின் முகத்திலெல்லாம் ஒண்ணுக்கு அடித்து விடலாம் என திட்டமிட்டிருந்தேன் தெரியுமா..?

2002 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 வது நாள் நாம் தங்கியிருந்த குஜராத் மாநிலம் நரோடா பாடியாவில் திடீரென்று எனக்குள் பூகம்பம் வந்தது போன்ற உணர்வு...என்ன நடந்ததென்று தெரியவில்லை என்னைத் தூக்கிக்கொண்டு நீ ஓடுகிறாய் என்று நினைக்கின்றேன்....

பல வித்தியாசமான குரல்கள் எல்லாம் என்னைச் சுற்றிக் கேட்கின்றது..

"கௌஸர் பானு..இங்க வந்திரு..சீக்கிரம் வா..அந்த அயோக்கியங்க வராங்கம்மா..."

என்று உன் பெயரைச் சொல்லி யாரோ பதறிப்போய் கத்துகிறார்கள். அதன்பிறகு உன்னைச்சுற்றி எத்தனையோ காலடித்தடங்கள் என் காதுகளுக்கு கேட்கிறது. ஏதோ சில கோஷங்கள் வேறு...

உறவினர்கள் கேலி பேசும்பொழுது உன் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கும். அந்த அதிர்வினில் எனக்குள் வருகின்ற தொப்புள் கொடிகள் கூட மகிழ்ந்து இதமாய் விரியும்..

ஆனால் இன்று உன்னைச் சுற்றிய அந்தப் பேச்சுகளில் நீ மகிழ்வதாய் தெரியவில்லை. உன் இதயம் வழக்கத்தை விடவும் அதிகமாய் பயத்தில் துடிக்க தொப்புள் கொடிகளில் உஷ்ணக் காற்று அடிக்கிறதம்மா.. ..
எனக்கும் அந்தக் குரல்கள் இதுவரை பழக்கப்படவில்லை.. "என்னம்மா ஆயிற்று ? ..யாரவர்கள்..? "

திடீரென்று நீ கதறி அழ ஆரம்பிக்கின்றாய்.."வேண்டாம் ..வேண்டாம் விட்டுறுங்க .."என்று கெஞ்சுகிறாய்..

தந்தையின் குரல் வேறு பதட்டத்தோடும் உன்னைச் சுற்றி கதறியபடியும் கேட்கிறது..




ஒரு அரை மணி நேரமாவது நீடித்திருக்கும் அந்தக் குரல்களும் அப்பாவின் கதறல்களும் , அதன்பிறகுதானம்மா அந்த உச்சக்கட்ட பயங்கரம் நடந்தது.
ஒரு கூர்மையான சூலாயுதம் ஒன்று மெல்ல மெல்ல இருட்டறையைத் துளைத்துக் கொண்டு என்னை நோக்கி வருவதைக் கண்டேன்..
அந்த சூலாயுதம் துளைத்த ஓட்டை வழியாக பார்த்தால் சுற்றி எவரெவர்களோ ஆயுதங்களோடு நான் இருந்த இருட்டறையின் இருட்டை விடவும் மிகவும் இருட்டாய் உன்னைச் சுற்றிக் கொண்டு நிற்பதை..


நான் பயத்தில் அலற ஆரம்பித்து விட்டேன் அம்மா. ஆனால் என்னுடைய அலறல் உங்களுடைய காதுகளுக்கு கேட்டிருக்குமா என்று எனக்குத் தெரியாது.. ?

பயங்கர சப்தத்துடன் விழுகின்ற அருவியின் அருகே ஒரு கட்டெறும்பின் கதறல் யாருக்கு கேட்கும்.?

வெள்ள நீர் வீட்டுக்குள் நுழைந்து விடஇ குடிநீரைப் பற்றி யாரும் கவலைப்படுவதுண்டோ..?


நான் கதறுகிறேன்..என்னுடைய கதறலையும் மிஞ்சி நீ கதறுகிறாய் அம்மா.. பாரேன் கதறலில் கூட நம் குரல்கள் ஒரே சீரில் ஒலிக்கின்றது..
வெகு தூரத்தில் இருந்து சில பெண்களின் குரல்கள் வேறு பரிதாபமாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது பாம்பின் வாயில் மாட்டிக்கொண்ட தவளையின் முனகலாய்;.

என்னுடைய வலியைவிடவும் அந்தப்பெண்களின் அபாயக் கதறல்கள் என்னை மிகவும் காயப்படுத்துகிறது. யாரம்மா அந்தப் பரிதாபக் குரலுக்குச் சொந்தக்காரர்கள்.?

அந்த அபாயச் சப்தங்களுக்கிடையே என்னுடைய வலியின் கதறல்கள் யாரையும் பொருட்படுத்தவில்லை..

அந்த சூலாயுதம் முதலில் நம்மை இணைத்த தொப்புள் கொடிகளை அறுத்தெறிந்து பின் என்னுடைய பிஞ்சு வயிற்றில் வந்து நிற்கிறது அம்மா.. நான் மறுபடியும் கதறுகின்றேன்..

நம் கதறல்களின் சப்தத்தோடு சுற்றியுள்ளவர்களின் கோஷ சப்தங்கள் ஓங்கி ஒலிக்கின்றது.

சிரிப்புச் சப்தங்களும் கேட்கின்றது... அவர்கள் யாரம்மா..புதியாய் உலகத்தில் தோன்றிவிட்ட மிருக ஜாதிகளோ..?
அந்த சூலாயுதம் என் சதைகளில் குத்தி உருவப்படும்பொழுது எனக்குண்டான வலியை கேட்கும் சக்தியும் உனக்கு இல்லை..அந்த வலியில் கதறுகின்ற உனது வலியை உணரும் சக்தியும் எனக்கு இல்லாமல் போயிற்று..

"அம்மா அம்மா காப்பாற்றுங்கள் என்னை..ரொம்ப வலிக்கிறது அம்மா..தாங்க முடியவில்லை....
என்னை விட்டு விடச்சொல்லுங்களேன்.."

"இனிமேல் இந்த உலகத்தின் எவர் கருவுக்கும் அனுப்பிவிடாதே என்று இறைவனிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்.. அவர்களிடம் சொல்லி என்னைக் காப்பாற்றுங்கள் அம்மா
"

வலி பொறுக்க முடியாமல் நான் மீண்டும் மீண்டும் கத்துகிறேன்.. எனது வயிற்றின் வழியாக பாய்ந்த அந்த சூலாயுதம் எனது குட்டி கண்கள் , குட்டி மூக்கு, குட்டி உதடுகள் , பட்டு விரல்கள் எல்லாம் தாறுமாறாய் கிழித்துப் போகிறது.

பட்டுகளை அழித்து
புடவை!
ஏனிந்த
மொட்டுக்களை அழிக்கும் மடமை?


என்னுடைய கைகளை மட்டும் தனியே பிய்த்துப் போட்டது அந்த சூலாயுதம்.. என் கால் விரல்களின் சதைகள் அந்த சூலாயுதத்தின் முனைகளால் கவ்வப்பட்டு கண் பகுதியில் வந்து ஒட்டிக் கொண்டது.

அத்தோடு அவர்களின் வெறி தணியவில்லை..அந்த சூலாயுதத்தின் கூர்மையான பகுதியின் முனையில் குத்தி அம்மா உன் வயிற்றைக் கிழித்து என்னை வெளியில் தூக்குகிறார்கள். ஆ..அம்மாஆஆஆஆஆ.. அந்த வலியை சொன்னால் மொழிகள் கூட முனகும்......



எல்லோரும் தாயின் வழியாகத்தானே உலகத்தை பார்க்கிறார்கள். நான் மட்டும் சில பேய்களின் வழியாக உலகம் பார்க்கின்றேன். எனக்கு மட்டும் ஏனம்மா விதிவிலக்கு?


சூலாயுதத்தின் முனையிலிருந்து நான் கண்ணைத்திறந்து பார்க்கின்றேன்.... பதறிப்போய்விட்டேனம்மா...


இதயம் இறந்த சிலர்..
நினைவு மறக்கும் வரையிலும்
ஒருவனை அடித்துக்கொண்டிருக்கிறார்கள்!




டயரும் உயிரும்
சமத்துவமாய் எரிக்கப்படுகின்றது..




குடும்பம் குடும்பமாய்
உயிர்கள் கொளுத்தப்பட்டு
மனிதநேயம் மட்டும்
கடலில் கரைக்கப்படுகின்றது.


ஆங்காங்கே
வயது வித்தியாசமில்லாமல் ..
பெண்கள் மீது பலாத்காரங்கள்!

அட தூரத்தில் பாருங்களேன்...
தேசமாதாவையும் ஒருவன்
துரத்திக்கொண்டு ஓடுகின்றான்
கையில் சூலாயுதத்தோடு
!


அய்யோ.. கருவான எனக்கே கண் கலங்குகிறதே..? என்னம்மா இது..
மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் யுத்தம் நடக்கிறதா என்ன..?

அதிர்ச்சியாக இருக்கிறது இந்தியாவில் கூட மனிதர்களைத் தின்னும் கூட்டங்களா..?

இதற்கிடையில் சூலாயுதத்தின் முனையில் என்னைத் தூக்கியவர்கள் யாருடைய பெயரையோ திரும்ப திரும்ப சொல்லி வெற்றி முழக்கமிட்டு எக்காளத்துடன் சிரிக்கிறார்கள்.

நீ சொல்லவேயில்லையம்மா..மனிதர்கள் இவ்வளவு பயங்கரமானவர்களா..?

அந்த வலியிலேயே நான் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கின்றேன். கண்ணை மூடுவதற்கு முன் உன் முகம் பார்க்க முற்பட்டேன் ஆனால் முடியவில்லையம்மா..என்னை நெருப்பில் வீசி அழித்துவிட்டார்கள்..

அய்யோ என்னவெல்லாம் நான் கற்பனை செய்து வைத்திருந்தேன் தெரியுமா..?



*கருவுக்குள் என்னை பாதுகாப்பாய் அடைகாத்த உன் மடியிலே விளையாடி மகிழவேண்டும்
*உன் கண்ணீரைக் என் கைகளால் துடைக்க வேண்டும்
*எப்போதும் உன்னை மகிழ்ச்சி படுத்தி வைக்க வேண்டும்
*குறும்புகள் ஏதும் செய்யாமல் உன் சொல் பேச்சு கேட்டு நடக்க வேண்டும்


இப்படி ஏகப்பட்ட திட்டங்கள் வைத்திருந்தேன்.. உன் மடியில் குழந்தையாக பிறக்க வேண்டும் என்ற ஆசையைத்தவிர எனக்கு வேறு எந்த ஆசையுமில்லையம்மா.. ஆனால் அந்தக் கரு பிரியர்கள் என் கனவுகளை எல்லாம் சூலாயுதத்தில் சுருட்டிக்கொண்டார்கள்.

இப்போது நான் முழுமையாக இறந்து விட்டேன்.. ஆனால் அந்த பயங்கரத்தை என்னால் இன்னமும் மறக்க முடியவில்லை.. உலகத்தின் எந்த மரணமும் இப்படி நிகழ்ந்திருக்க வில்லை..என் கருவை எடுத்த அந்த பயங்கரவாதிகளின் குழந்தைகளுக்கு கூட இப்படி ஒரு மரணம் நிகழக் கூடாது அம்மா..
நான் இறந்து போன சில விநாடிகளில் யாரோ என்னை கைகளில் அமர்த்தி ஒரு அழகான இடத்திற்கு எடுத்துச் செல்வது போல உணருகின்றேன். நான் இன்னமும் அழுதுகொண்டிருக்கின்றேன்..ஆனால் உடலில் எந்த வலியும் இல்லை..



அந்த கைகள் என்னை இறைவனிடம் ஒப்படைக்கின்றது. இறைவன் என்னை ஆசிர்வதிக்கின்றான்.
அவன் என் மீது அன்பு காட்டுகின்றான். என்னை அன்பாக தடவிக் கொடுக்கின்றான். அப்பொழுது தான் உணர்ந்தேன் என்னைக் கருவறையில் தடவிக் கொடுத்து விட்டு மறைந்த கைகளுக்கும் சொந்தக்காரன் இவன் தானோ என்று.

அவனிடம் கேட்டேன். "என்னைக் கொன்றவர்கள் யார். எதற்காக என்னைக் கொன்றார்கள் ". ஒற்றை வார்த்தையில் பதிலளித்தான் "மதவெறி" என்று.

எனக்கு விளங்கவில்லை .."மதவெறி என்றால் என்ன..?"

"உன்னையும் உன்னைக் கொன்றவனையும் படைத்தது நான்தான்.
என் மீது பக்தி இருப்பதாய் நடித்துக்கொண்டு நான் படைத்த உன்னை கொன்று விட்டான். "


என்று கடவுள் சாந்தமாய் பதிலளித்தான்

அவர்களுக்கு என்னதான் தண்டனை..? நான் கோபத்தில் கேட்டேன்.. பிள்ளதாச்சுகள் கோவப்பட்டால் கரு கலங்கிவிடும். ஆனால் இங்கே ஒரு கருவே கோவப்படுவதால் கடவுள் கலங்கிவிட்டான்.

மறுபடியும் ஒற்றை வார்த்தையில் பதிலளித்தான்.. "இறுதி தீர்ப்பு நாள் இருக்கிறது"
நம்பிக்கை இருக்கிறது அம்மா. அவர்கள் ஒருநாள் இறைவனிடம் திரும்பி வந்துதான் ஆகவேண்டும். கரு ஒன்று காத்திருக்கிறது அந்த கறுப்பு நாட்களுக்காய்.


அம்மா..நான் இங்கே இறைவனின் வீட்டில் தங்கியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. இங்கே என்னுடன் விளையாட நிறைய நண்பர்கள் இருக்கின்றார்கள்.

அவர்களின் முகத்தில் மதவெறி இல்லை..கோபம் இல்லை..வன்முறை இல்லை..எல்லா முகங்களிலும் மகிழ்ச்சி மட்டுமே ஒட்டியிருக்கின்றது..

கடவுள் என் காதில் வந்து சொன்னான்.. இங்கே இருப்பவர்கள் யாருமே சுயநலம் இல்லாதவர்களாம்.

ஆகவே நான் இந்த சுயமில்லாத உலகத்தில் உனக்காக காத்திருக்கின்றேன் அம்மா.. உனக்காக மட்டுமல்ல - கருவை எடுத்து கபடி விளையாடிய அந்த மனிதப் போர்வையில் உலவுகின்ற மிருகங்களுக்காகவும் காத்துக்கொண்டிருக்கின்றேன். அவர்களை கண்டிப்பாய் கடவுளிடம் காட்டிக்கொடுப்பேன்..


உலகம் தோன்றிய நாள் முதல் இதுவரை நடந்த கொடுமைக்கார்களுள் முதன்மையானவர்களாக - தண்டிக்க வேண்டிவர்களின் பட்டியலில் அவர்களின் பெயர்களைத்தான் கடவுள் தயாரித்துக்கொண்டிருக்கின்றான். ஆம் இறைவனின் டாப்டென் தண்டனையில் அந்த குஜராத்தை சேரந்த வெறி பிடித்த பக்தர்கள் தான் முதலிடம்.

அம்மா..நம்முடைய கதறலை காது கொடுத்து கேட்காத அந்த சாத்தான்களுக்கு இறைவன் கொடுக்கப் போகும் கடுமையான வேதனையின் வலியை அவர்கள் கண்டிப்பாய் உணரவேண்டும். இந்தக் கருவின் கதறலுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

இறுதியாய் மனிதர்களுக்கு ஒரு சேதி :

மனிதர்களே!
சிசுக்களை மட்டுமல்ல
இனிமேல்...
கொசுக்களைக் கூட
கொல்லாதீர்கள்.

இனி
கோழி முட்டைக்
கருவைக் கூட
வெளியில் எடுத்துவிடாதீர்கள்..




அம்மா..உன்னோடு நான் உலகத்தில் வாழ முடியாத வாழ்க்கையை இங்கே வாழ ஆசைப்படுகின்றேன் ..காத்திருப்பேன் உனக்காக..

இப்படிக்கு

உன் அன்பான கரு


- ரசிகவ் ஞானியார்

Wednesday, October 24, 2007

ஒரு குழந்தை பாடும் தாலாட்டு

ஒரு குழந்தையின் "முன்பே வா" பாடல் கேட்டுப்பாருங்கள். மழலையின் அழகில் மயங்கிப் போவீர்கள். உங்களின் மகிழ்ச்சிக்கு நான் கியாரண்டி.

இதனை அலட்சியப்படுத்தியவர்கள் அதிர்ஷ்டமிலடல்லாதவர்கள். :)



- ரசிகவ் ஞானியார்

Sunday, October 14, 2007

ரசிகவின் ரம்சான் நினைவுகள்

Photo Sharing and Video Hosting at Photobucket

எப்பொழுதுமே எதிரப்பார்ப்புகள் மட்டுமே சுகத்தினை தருகின்றது. ரம்சான் நாளை வரும் நாளை வரும் என்று எதிர்பார்த்தலில் உள்ள ஆனந்தம்; ரம்சான் வந்துவிட்டால் வடிந்துவிடும்.
இதோ அப்படி எதிர்பார்த்து காத்திருந்த ரம்சான் இன்று வந்துவிட்டது.

வரவுகள் இல்லாமல் செலவுகள் மட்டுமே செய்துகொண்டிருந்த இளவயது ரம்சானை விடவும் வரவு செலவுகளை நிர்ணயிக்கும் பொறுப்பில் இருக்கும்பொழுது வருகின்ற இன்றைய ரம்சானில் அந்த இன்பம் கொஞ்சம் குறைந்துதான் போகின்றது.

மறுநாள் ரம்சான் என்றாலே முந்தைய இரவில் தூக்கமே வராது மறுநாள் வெள்ளிக்கிழமை என்றவுடன் வியாழக்கிழமை இரவினில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருக்கும் அந்த துபாய் நாட்களைப் போலவே.

இன்றைய ரம்சானில் என் சிறுவயது ரம்சான் ஞாபகங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளப் பிரியப்படுகின்றேன்.

மனித ஆந்தைகள்

முன்பெல்லாம் நண்பர்கள் நாங்கள் ரம்சான் பண்டிகையின் முந்தைய இரவில் நேரம்போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருப்போம்.

மனித ஆந்தைகளாட்டம் இரவினில் மேலப்பாளையம் பஜார் சாலைகளில் சுதந்திரமாக சுற்றித்திரிந்து, திறந்திருக்கும் கடைகளில் டீ குடித்துவிட்டு, கடைசிவரை விற்றுக்கொண்டிருக்கும், சட்டைகளை பார்த்து" இந்த சட்டைகளை வாங்கியிருக்கலாமே அந்தச் சட்டையை வாங்கியிருக்கலாமோ?" என்று, வாங்கும் எண்ணங்கள் இல்லாமலையே கவனித்துக்கொண்டிருப்போம் வெயிலுக்காக ஷாப்பிங் சென்டருக்குள் நுழைபவர்களைப்போல.

இப்பொழுதெல்லாம் ரம்சானுக்கு முந்தைய இரவில் முன்பு போல பேசுவது கிடையாது. கொஞ்சம் தாமதமாகிவிட்டாலே மனைவியின் திட்டுதலுக்கு பயந்து ஓடிவிடுகின்றார்கள். ( எல்லா இடத்திலையும் அப்படித்தானோ..?)

பேருந்துக் கலாட்டா

டவுணில் சென்று துணியெடுக்க போவதே ஒரு பிக்னிக் மாதிரிதான் செல்வோம். மொத்தமாக ரம்சானுக்கு முந்தைய ஒரு வாரத்தினில் ஒருநாளினை குறித்துக்கொண்டு அன்று நண்பர்கள் படை சூழ புறப்பட்டுவிடுவோம். செல்லுகின்ற வழியில் நண்பர்களோடு செய்கின்ற கூத்துக்கள் சொல்லிமாளாதவை. ஒருமுறை சுமார் பத்து பேரை திரட்டிக்கொண்டு தயிரா கொட்டு என்ற இசைக்கருவியை எடுத்துக்கொண்டு சென்றோம்.

பேருந்து புறப்பட்ட நொடியிலிருந்து நன்றாக தாளம் போடத்தெரிந்த நண்பன், இறந்தவர்களுக்கு அடிக்கப்படும் இசையை அடிக்க , அந்த இசையின் மயக்கத்தில் நண்பர்களில் சிலர் கத்த, சிலர் ஆட்டம் போட, நடத்துனருக்கும் - ஓட்டுனருக்கும் சரியான கோபம்.

பேருந்தில் சரியான கூட்டம் வேறு அதுவும் எங்கள் வயதை ஒத்த நிறைய நண்பர்கள் எங்களோடு சேர்ந்து கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதால் அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

இருவரும் பேருந்தை விட்டு கீழே இறங்கி வந்து, பின்படிக்கட்டு அருகே வரை வந்து பின் டயரை சோதிப்பது போல நோட்டம்விட்டுவிட்டு "இப்படி கத்துனா வண்டியை எடுக்க முடியாது பார்த்துக்கோங்க" என்று வானத்தை பார்த்து சொல்லிவிட்டு மீண்டும் பேருந்தை கிளப்பினார்கள்.

அவர்கள் பேசாமல் இருந்திருந்தாவலாவது நாங்கள் தாளமிடுவதை நிறுத்தியிருக்க கூடும் ஆனால் அவர்களின் அந்த வடிவேலு பாணி செய்கை எங்களுக்குள் மேலும் குஷியை ஏற்படுத்த தாளத்தின் சத்தம் இன்னமும் அதிகமாகியது. பின் பேருந்தில் பயணித்த வயதான சக பயணி ஒருவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க தாளத்தை நிறுத்திவிட்டோம். செம குஷியாக கழிந்தன அந்த நாட்கள்.

நேர்மை = ஐஸ்வண்டிகாரன்

ரம்சான் பண்டிகை என்றால் தொழுகை முடிந்தவுடன் புதுத்துணியின் அழகினை அனைவருக்கும் பறைசாற்றிவிட்டு நண்பர்களோடு கூடி நின்று தெருவுக்குள் நுழைகின்ற ஐஸ்கிரீம் வண்டிதான் ஞாபகத்திற்கு வரும்.

ரம்சான் அன்று அந்த ஐஸ்கிரிம் வாங்கிச் சாப்பிடாவிட்டால் ரம்சானே பூர்த்தி அடையாததுபோல இருக்கும். முதலில் யாரும் ஐஸ்கிரீம் வாங்க மாட்டார்கள். யாரேனும் முதலில் வாங்கினால் எங்கே மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டுமோ எனப்பயந்து அமைதியாக இருந்து விடுவார்கள். பின்னர் யாராவது ஒரு சுயநலக்கார நண்பன் வாங்கி தனியே சாப்பிட ஆரம்பிக்கும்பொழுதுதான் மற்றவர்களுக்கும் ஞானயோதயம் ஏற்பட்டு ஒவ்வொருவராக வாங்குவார்கள்.

அதிலும் அதிகமாக காசு வைத்திருப்பவனை ஐஸ்கிரீமைப் போலவே அவனுடைய காசும் கரையும் வரையிலும் அனைவருக்கும் வாங்கித் தரச் சொல்லி நச்சரித்துவிடுவோம்.

அதில் சுவாரசியமாக சம்பவம் என்னவென்றால், எங்கள் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஒரு வருடம் முந்தி ஒரு ஐஸ்வண்டிக்காரனிடம் வைத்த பாக்கியை அடுத்த வருடம் வந்த அதே ஐஸ்கிரீம் வண்டிக்காரனிடம் வசூலித்துவிட்டார்கள். நீண்ட நாட்கள் அந்த சம்பவத்தைப் பற்றியே சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தோம். அந்த வீட்டுக்காரனின் ஞாபகத்தை மெச்சுவதா அல்லது அந்த ஐஸ்கிரீம் வண்டிக்காரனின் நேர்மையை மெச்சுவதா?

ரம்சான் விளம்பரம்

ரம்சானில் ஆங்காங்கே ஒலிப்பெருக்கி விளம்பரங்கள் ஒலித்துக்கொண்டிருக்கும். அந்த விளம்பரத்தின் வார்த்தைகளும் அது அமைந்துள்ள விதமும் நகைச்சுவையாக இருக்கும்.
ஒரு விளம்பரம் கேளுங்களேன்..ஒரு பீடியின் விளம்பரத்தில்

"அவர் ------------ மார்க் பீடியை வாங்க கடைக்கு குடு குடு குடு குடு குடு குடு குடு குடு குடு குடு குடு குடு குடு வென் ஓடினார். "

"ஆம் அவர் விரும்பிப் பிடிப்பது ---------------- மார்க் பீடிகள் "

வேறு வார்த்தைகள் கிடைக்காமல் குடு என்கிற வார்த்தையிலையே அந்த விளம்பரத்தை ஓட்டிவிடுவார்கள். அப்பொழுதுதான் எங்களுக்குள்ளும் ஒரு திட்டம் தீட்டினோம். அடுத்த ரம்சானில் எப்படியாவது இதுபோன்ற ஒரு விளம்பரத்தை நண்பர்கள் நாம் இணைந்து மிகச் சிறப்பாக நடத்துவோம் என்று முடிவு செய்யப்பட்டது.

உழைப்பும் வெற்றியும்

நாங்கள் எதிர்பார்த்த அடுத்த ரம்சானும் வந்துவிட்டது. நண்பர்கள் சுமார் 1 மாதம் முன்பாகவே வேலையை ஆரம்பித்தோம். அனைத்து கடைகளிலும் சென்று விளம்பரம் சேகரிக்கத் தொடங்கினோம். நாங்கள் இளைஞர்கள் என்பதால் வித்தியாசமாக செய்வார்கள் என்று நம்பி எங்களிடம் விளம்பரங்கள் வந்து குவிந்தன.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்பு தரப்பட்டது.


பொறுப்புகளை எடுத்தாயிற்று அதனை சிறப்பாக செய்து பெயர் எடுக்கவேண்டும் என ஆசைப்பட்டு அனைவரும் கடுமையாக உழைத்தோம்.

நான் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் சரியான வார்த்தைகளை எழுதி கோர்த்துக்கொண்டிருந்தேன்.

சிலர் மதுரைக்கு சென்று அங்குள்ள ஒரு விளம்பர நிறுவனத்தில் நான் எழுதி வைத்திருந்த விளம்பரங்களை இனிமையான குரலில் ஒரு பெண் மூலமாக பேச வைத்தார்கள். பேச வைத்தார்கள் என்பதை விடவும் பாட வைத்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும் அந்த அளவிற்கு இனிமையாக இருந்தது அந்த விளம்பரங்கள்.

முதன் முறையாக விளம்பரங்கள் ஒரு பெண் மூலமாக சொல்லப்படுவதால் மற்ற விளம்பர நிறுவனங்களும் எங்களை ஆச்சர்யத்தோடு பார்த்தன. அதிலதான் யார் கண்டு பட்டுச்சோ தெரியல? ஒரு பிரச்சனை உருவாயிற்று.

வியாபாரமும் பிரச்சனையும்

ரம்சான் முதல் நாள் அன்று ஒலிப்பெருக்கி எல்லாம் கட்டி விளம்பர கேசட்டை ஓடவிட்டோம். போகின்ற வருகின்றவர்களெல்லாம் வந்து வாழ்த்திவிட்டுச் சென்றார்கள். முதன் முயற்சியே வெற்றியை தேடி தந்தது என்று எங்களுக்குள் உற்சாகம் கரைபுரண்டது.

அன்று மாலை ஒரு தொலைபேசி பூத் வைத்திருப்பவர் அவர் கடைக்கு முன்பு கட்டியிருந்த ஒலிப்பெருக்கிகளை அகற்றுமாறு மிரட்டிவிட்டுச் சென்றார். இளரத்தம் அல்லவா..? எங்களுக்கு கோவம் பொத்துக் கொண்டு வர அந்த ஒலிப்பெருக்கிகளை கழற்றி விட்டு அவர் கடைக்கு மிகவும் அருகில் அவர் கடையை நோக்கி சத்தங்கள் செல்லுவது போல வைத்துவிட்டோம். "இப்ப என்ன செய்வே.? இப்ப என்ன செய்வே..? "

அந்தப் படுபாவி போலிஸில் புகார் கொடுத்துவிட்டான். எங்களுக்கோ இவ்வளவு சீரியஸாக விசயம் செல்லுப்போகிறது என்றும் , சும்மா விளையாட்டாக செய்யப்போய் இப்படி வம்பில் மாட்டிவிடுவோம் என்றும் தெரிந்திருக்க நியாயமில்லை.

எந்நேரமும் எங்கள் அலுவலகத்திற்கு போலிஸார்கள் வருவார்கள் என்பதால் விசயம் தெரியாத ஒரு இளிச்சவாய நண்பனை மட்டும் வைத்துவிட்டு நாங்கள் வசூலுக்குச் சென்றோம் .

போலிஸார் வந்து எங்கள் அலுவலக வாசலில் நின்று கொண்டு கடையில் இருந்த நண்பனிடம் அந்த டேப்ரிக்கார்டரை எல்லாம் எடுத்து ஜீப்பில் வைக்கச் சொல்லுமாறு உத்தரவிட ,

அந்த நண்பனோ, "முதலாளி வெளியே போயிருக்கார் சார்" என்க, இன்ஸ்பெக்டருக்கு கோவமே வந்துவிட்டது.

"நான் சொல்லுறேன்.....முதலாளி வரணுமா..? எடுடா டேப்ரிக்கார்டை" என்று அதட்ட அவன் பயந்து போய் ஒலிப்பெருக்கிகளை அணைத்துவிட்டு டேப்ரிக்கார்டர்களையெல்லாம் எடுத்து போலிஸ் ஜீப்பில் வைத்துவிட்டான். போலிஸார் அவனையும் ஏற்றிக்கொண்டார்கள்.

மறைந்து இருந்து இதனைக் கவனித்துக் கொண்டிருந்த நானும் என் நண்பனும் ஓடிப்போய், "சார் சார் நாங்க அனுமதி வாங்கித்தான் சார் நடத்துறோம்..எங்களுக்கு கவுன்சிலரை தெரியும் சார் என்க.. "

"அவர் என்ன முதலமைச்சரோ ..ஸ்டேஷனுக்கு வந்து வாங்கிக்கோங்கடா" என்று அனைத்தையும் பறித்துக்கொண்டு சென்றுவிட்டனர்.

பின்னர் கவுன்சிலரை அழைத்துக்கொண்டு சமாதானம் செய்யப்பட்டு அவர்கள் பறித்துச் சென்றதை வாங்கிக்கொண்டு வந்தோம்.

3 நாட்கள் விளம்பரத்திற்குப் பதிலாக ஒரே நாளில் விளம்பரத்தை முடித்துக்கொண்டாலும் அந்த ஒருநாளில் நாங்கள் போட்ட விளம்பரத்திற்காகவே அனைவரும் 3 நாட்களுக்குண்டான பணத்தையே கொடுத்தனர் .

அந்த வயதில் ஆரம்பித்த வியாபாரமும் அதன் வெற்றியும் சந்தித்த பிரச்சனைகளும் எங்களுக்கு நிறைய அனுபவத்தைக் கற்றுத் தந்தது.

எத்துணை ரம்சான் வந்தாலும் எங்களுக்கு சிறந்த அனுபவம் கற்றுத் தந்த அந்த ரம்சானை எங்களால் இன்னமும் மறக்க முடியாது

பிரியாணிக்குள் மனிதநேயம்


ரம்சான் அன்று எங்கள் வீட்டில் அதிகமாக பிரியாணி சமைப்பார்கள். வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடுவார்களோ இல்லையோ மற்றவர்களுக்கு கொடுத்து விடுவதில் என் தந்தைக்கு அப்படியொரு ஆனந்தம்.

எதேச்சையாகவோ இல்லை எங்களை சந்திக்க வீட்டுக்கு வருகின்ற நண்பர்களோ அந்தப் பிரியாணியில் இருந்து தப்பிக்க முடியாது.

"பொங்கல் -தீபாவளிக்கு அவங்க தராங்க, நாம கொடுக்கலைன்னா நல்லாயிருக்காது " என்று அவருடைய மற்ற மாற்று மதச் சகோதரர்களுக்கெல்லாம் கொடுத்துவிடுவார்.

என்னுடைய கல்லூரி ஆசிரியர் இராமையா சார் அவர்களுக்கு நான் ஒவ்வொரு ரம்சானும் தவறாமல் சென்று பிரியாணி கொடுப்பதை அவர் என்னுடைய திருமணத்தில் வந்து மேடையில் சொன்னபோது எனக்கு மிகுந்த கூச்சமாகிவிட்டது.

பிரியாணி கொடுப்பது ஒரு முக்கியத்துவமே அல்ல ஆனால் பிரியாணியைத் தாண்டிய என் தந்தையின் மனிதநேயம் என்னை எப்பொழுதும் வியப்பில் ஆழ்த்தும்.

Photo Sharing and Video Hosting at Photobucket

இன்றைய ரம்சானுக்கும் பிரியாணி தயாராகிவிட்டது எவர் எவருக்கெல்லாம் கொடுத்துவிடவேண்டும் என்ற பட்டியலும் தயாராகி விட்டது.

ஆகவே நான் கிளம்புறேன் தாமதமாகக் கொடுக்கச்சென்றால், என் தந்தை கோவப்படுவார். நான் வர்றேங்க…

உங்களுக்கும் பிரியாணி வேணுமுன்னா அடுத்த ரம்சானுக்கு என் வீட்டுக்கு வாங்க..இல்லையெனில் முகவரி கொடுங்க பார்சலில் அனுப்புறேன்….

அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.

- ரசிகவ் ஞானியார்

Saturday, October 13, 2007

நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்

அன்பு நண்பர்களே,

Photo Sharing and Video Hosting at Photobucket

அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்..

இந்த ஒரு மாதம் கற்றுத்தந்த, மனித நேயத்தையும்-ஈகைக்குணத்தையும் வாழ்நாள் முழுவதும் இறைவன் நமக்கு தந்துருள்வானாக..

Photo Sharing and Video Hosting at Photobucket

- ரசிகவ் ஞானியார்

Monday, October 08, 2007

வேட்டியை மடிச்சிக்கட்டு

Photo Sharing and Video Hosting at Photobucket

வேஷ்டி கட்டுதலைப் பற்றி முழம் முழமாக எழுதலாம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக வேஷ்டி கட்டுவார்கள். ஒவ்வொருவரின் கட்டுதலும் வித்தியாசமாக இருக்கும்.

வேஷ்டிக்கும் சாரத்திற்கும் வித்தியாசம் இருக்கின்றது. வேஷ்டியை மூடியது போல தைத்தால் அது சாரமாகிவிடும்.

எங்கள் ஊரில் பெரும்பாலும் சாரம்தான் உடுத்துவார்கள். ஆனால் வேஷ்டி என்ற சொல்லையே பெருன்பான்மையோனோர் பயன்படுத்துவார்கள். நான் கூட எனக்கு நினைவு தெரிகின்ற நாள் வரையிலும் வேஷ்டியும் சாரமும் ஒன்றுதான் என நினைத்திருந்தேன்.

Photo Sharing and Video Hosting at Photobucket
மிக அழகாக வேஷ்டி கட்டுபவர்கள் மலையாளிகள்தான் . அவர்களின் வேஷ்டி கட்டும் அழகுக்கும், கம்பீரத்திற்காகவும் எனக்கும் வேஷ்டியின் மீது ஆர்வம் வந்தது.

எங்கள் ஊரில் புதுமாப்பிள்ளைகள்தான் வேஷ்டி கட்டுவார்கள். பெருன்பான்மையானோர் சாரம்தான். ஆனால் சாரம் வீட்டில் இருக்கும்பொழுது மட்டுமல்ல வெளியிலும் எங்கு சென்றாலும் சாரத்திலையே உலா வருவார்கள்.

விளையாடுவதற்கு கஷ்டமாக இருந்தாலும் கிரிக்கெட்டும் சாரத்திலையே விளையாடுவார்கள். சிலர் பந்தை துரத்திக்கொண்டு ஒரு கையால் சாரத்தைப் பிடித்துக்கொண்டு ஓடும் நிலையைப் பார்க்க சிரிப்பாக இருக்கும்.

பெண்கள் சாரம் உடுத்துவதை நான் கேரளாவில்தான் பார்த்திருக்கின்றேன். ஆனால் எங்கள் ஊர் பெண்களும் சாரம் உடுத்துவார்கள். ஆனால் அதில் பழைய பாட்டிகள்தான் அதிகம். அவர்களுக்கு அதுதான் வசதி.

நான் எம்சிஏ படிக்கின்றபொழுது கல்லூரி இறுதிநாள் விழாவில் அனைவரும் வேஷ்டி கட்டி வருவது என்று முடிவு செய்யப்பட்டது. அனைவரும் பேண்ட் அணிந்து கொண்டு வந்து பக்கத்தில் உள்ள நண்பனின் வீட்டிற்குச் சென்று வேஷ்டியை மாற்றிவிட்டு கல்லூரிக்குச் சென்றோம். எனக்கு கட்டத் தெரியவில்லை அவிழ்ந்து அவிழ்ந்து விழுந்தது. கோபியைத்தான் கட்டிவிடச் சொன்னேன். கோபியும் அவிழ அவிழ முகம் சுணுங்காமல் கட்டிவிட்டான்.

எங்கே அவன் சென்றுவிட்டால் வேறு யாரும் உதவிட மாட்டார்களோ என்று பயந்து அன்று முழுவதும் கோபியின் பக்கத்திலையே நின்றேன். எங்களுடைய துரதிருஷ்டமோ என்னவோ அன்று சரியான காற்று வீசியது. என்னைப்போல சிலர் வேஷ்டியை அந்தக் காற்றினில் காப்பாற்ற முடியாமல் தடுமாறிப் போயினர்.

நான் மேடையில் எரிச்சல் என்ற தலைப்பில் கவிதை பாடும்பொழுது கூட சொன்னேன்

எரிச்சல்

கடலை போடும் வேளை
கூப்பிடுகிறான் உயிர்நண்பன்

செல்லும் வழியில் பெண்கள் கல்லூரி

பாதையை மாற்றம் அப்பா

புதிதாய் வேஷ்டி கட்டியுள்ளேன்
புயல் காற்று அடிக்கின்றது



என்னுடைய தர்மசங்கடத்தை மேடையில் அப்படியே சொன்னதால் நிறைய பேருக்கு சிரிப்பை வரவழைத்துவிட்டது.

Photo Sharing and Video Hosting at Photobucket

என்னுடைய சிறு வயதில் நண்பர் நிஸார் என்பவன் வேஷ்டியை வித்தியாசமாக கட்டியிருப்பான். வேஷ்டியை இடுப்பில் இறுக்கிகட்டி விட்டாலும் ஒரு சிறு பகுதி மட்டும் வால் போல தொங்கிக்கொண்டிருக்கும். நாங்கள் அதனைப் பிடித்துக் கொண்டு "ஏய் குதிரை வால் , குதிரை வால் " என்று கிண்டலடிப்போம்.

நான் பெரும்பாலும் பேண்ட்தான் போடுவேன். சிலநேரம் நண்பர்கள் அனைவரும் ஜங்ஷனுக்கு படம் பார்க்க சென்றால் கூட சாரம் அணிந்துதான் வருவார்கள். நான் மட்டும் பேண்ட் அணிந்திருப்பேன்.
" இவனப்பாருடா இவன் பேண்ட்டோட பிறந்திருப்பான் போல…சாரம் உடுத்திட்டு வரவேண்டியதுதானடா" என்று கிண்டலடிப்பார்கள்.

எனக்கு சாரம் உடுத்திக்கு கொண்டு வந்து செல்லும்பொழுது வெளியில் கல்லூரித்தோழிகள் யாரும் பார்த்துவிட்டால் கிராமத்தான் என்று நினைத்து விடுவார்களோ என்று பயந்தேன். ம் வேஷ்டி சாரம் உடுத்தினால் கிராமத்துக்காரர்கள் என்ற நினைப்புதான் இருந்தது. ஆனால் அரசியல்வாதிகள் பெருன்பான்மையானோர் வேஷ்டிதான் உடுத்துகின்றார்கள்.

அரசியல் கறை வேஷ்டியை உடுத்திக்கொண்டு இருப்பவர்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வரும். அரசியல் கட்சிகள் மீது அபிமானம் இருக்க வேண்டியதுதான் அதறாக அவர்களின் கட்சிக்கொடியை வேஷ்டியில் காட்டவேண்டும் என்கிற கட்டாயமில்லை. இந்தப் பழக்கத்தை யார் கொண்டு வந்தார்களோ தெரியாது?. சரி அடிக்கடி கட்சி மாறுகின்ற அரசியல்வாதிகள் அந்தக் கட்சிக் கறை உள்ள வேஷ்டியினை என்ன செய்வார்கள்..? இட்லி அவிக்கவும் வாகனம்; துடைக்கவும் பயன்படுத்துவார்களோ..?

தமிழர்கள் வேஷ்டியின் மீது உள்ள அபிமானம் தமிழ் சினிமாவிலும் எதிரொலித்திருக்கிறது. வேஷ்டியை வைத்து படப்பெயர்களெல்லாம் வந்திருக்கின்றது.

வேட்டியை மடிச்சிக்கட்டு ,

அப்படியென்றால் இந்த வார்த்தை என்ன சொல்ல வருகின்றது. வேட்டியை மடித்துக் கட்டினால் அவன் வன்முறைக்கு தயாராகின்றான் என்று அர்த்தமா..? சரி இதே படத்தை ஹாலிவுட்டில் எடுத்தால் எப்படி எடுப்பார்கள் ஜீன்ஸை கிழித்துப் போடு , கோட் சூட்டை குப்புற போடு என்றா..?

சென்னையில் சில இடங்களில் வேஷ்டி கட்டியவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதே..? அப்படியென்றால் அதுபோன்ற இடங்களுக்கு அரசியல்வாதிகளும் நுழையக்கூடாதோ..? வேஷ்டி கட்டினால் அப்படியென்ன அவமானமாக கருதுகின்றார்களோ தெரியாது?

உங்களோட வேஷ்டி அனுபவங்களையும் எடுத்து விடுங்களேன்.?

- ரசிகவ் ஞானியார்

Tuesday, September 25, 2007

ஊனமுற்றவன்

Photo Sharing and Video Hosting at Photobucket

பேருந்தில் ஏறினால் ...
ஊனமுற்றோர் இருக்கையில்
அமரச்சொல்லி
அடம்பிடிக்கின்றது ...
உன் மீதான காதல் !

இதயமிழந்தாலும்
ஊனமுற்றவனோ..?

- ரசிகவ் ஞானியார்

Wednesday, September 19, 2007

Ex. ரவுடி

Photo Sharing and Video Hosting at Photobucket

தோ இந்தப் படத்தில் இருக்கின்ற நபர் ஒரு முன்னால் ரவுடி. கட்டப்பஞ்சாயத்து என்றாலே இவர் பெயர்தான் அடிபடும். சுமார் 12 வருடங்களுக்கு முன்பு பலரை மிரட்டியே காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தார்.

டன் பிரச்சனை - நிலத்தகறாறு - என்று எல்லாப் பிரச்சனைகள் நடக்குமிடத்திலும் இவர் பிரவேசிப்பார். காசுக்காக அப்பாவிகளை அடித்து , உதைத்து, துன்புறுத்துவது என்று பாதிக்கபட்டவர்களின் சாபத்தை வாங்கியிருக்கின்றார்.

வர் கையில் எப்பொழுதும் பணம் அதிகமாக புரளும். நண்பர்கள் கூட்டத்திற்கோ கேட்கவே வேண்டாம். தன்னுடன் இருக்கின்ற நண்பர்களுக்காக எதையும் செய்ய வல்லவர். தினமும் நண்பர்களுக்கு பிரியாணி – தண்ணி என்று விருந்து வைத்து அமர்களப்படுத்திவிடுவார்.

ருமுறை நண்பர்களுடன் கட்டப்பஞ்சாயத்து செய்துவிட்டு தனது வாகனத்தில் திரும்பிகொண்டிருக்கும் பொழுது பெரிய கல்லில் மோதி தடுக்கி விழுந்து பலமாக அடிபட்டது. இவருடன் கட்டப்பஞ்சாயத்திற்கு சென்ற நண்பர்களோ பயந்து போய் ஓடிவிட்டனர். அப்பொழுதே அவருக்குத் தெரிந்திருக்கும் தன் சுற்றி இருக்கின்ற நண்பர்களின் உண்மையான முகம்.

பின்னர் எங்கள் பகுதியைச் சார்ந்த அவருடைய நண்பர்கள் சிலர் அவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.

ந்த விபத்தில் அவரது ஒரு கால் ஊனமாகி விட்டது. அவரால் சரியாக நடக்கமுடியாது. சில வருடங்கள் தடியின் துணையோடு நடமாடி வந்தார். தடியாக இருக்கவேண்டிய அவரது தடி நண்பர்கள் எல்லாம் எங்கு போனார்களோ தெரியாது? அவரிடம் பணப்புழக்கம் குறைவதைக் கண்டதும் விலகி ஓட ஆரம்பித்தனர்.

வரது கால்கள் ஊனமாகி விட்டதால் யாரும் கட்டப்பஞ்சாயத்து செய்ய அவரை அழைக்கவும் இல்லை. அதனைத் தவிர வேறு தொழிலும் அவருக்குத் தெரியாததால் அவருடைய பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் சென்றுவிட்டது.

ஜானுபாகுவான மார்புடன் கம்பீரமாக அதட்டி பயமுறுத்திக் கொண்டிருந்தவர் எங்களிடம், "தம்பி ஒரு 10 ரூ இருந்தா கொடுங்களேன்" என்று கெஞ்சும் பொழுது அவரது நிலையை நினைத்து வேதனையடையாமல் இருக்க முடியவில்லை.

ப்படி 5 க்கும் 10 க்குமாய் அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கின்றார். அவ்வப்போது நாங்களும் எங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றோம்.

பாருங்களேன் காலம் மனிதர்களை எப்படியெல்லாம் சுருட்டிப் போடுகின்றது என்று?.

"ஆடாதடா! ஆடாதடா! மனிதா!
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவே மனிதா!.. "

என்ற பாடல் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

னக்கு என்ன வருத்தமெனில் அவருடன் அன்று தோள்மீது கை போட்டபடி சுற்றிய நண்பர்கள் இப்பொழுது நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவர் வந்தவுடனையே ஒதுங்கவும், சிலநேரம் அவமதித்தும் அனுப்பி விடுகின்றனர்.

ன்னிடமே இவர் சிலமுறை புலம்பியிருக்கின்றார்

"நான் நல்லா இருந்தப்ப என்கூட எப்படி இருந்தாங்க தெரியுமா இவங்க..? ச்சே பணம் இல்லைன்னு தெரிஞ்சவுடனே ஒதுங்க ஆரம்பிச்சுட்டாங்க.. "

ப்பொழுதெல்லாம் கண்ணுக்கு முன்னாடியே அநியாயத்திற்கான தண்டனைகள் கிடைத்துவிடுகின்றன. அவர் எத்தனை பேரின் வாழ்க்கையை சீரழித்திருப்பார் அதற்கான கடவுள் கொடுத்த தண்டனையாக கூட இது இருக்கலாம்.

ணம் மட்டும் இல்லைனா ஒரு ஜல்லி பைசாவுக்கு நம்மை மதிக்க மாட்டாங்க. சொந்தங்கள் கூட பணம் இருந்தால்தான் நம்மை சொந்தமென்றே பறைசாற்றிக்கொள்ளும்

ப்பொழுது இவர் மனம் திருந்தி, உழைத்து வாழ ஆசைப்பட்டாலும் அவரது உடல்வாகு அவருக்கு ஒத்துழைப்பதில்லை.

தையும் மீறி எங்கேனும் வேலை கேட்டாலும் அவரது முந்தைய நடவடிக்கைகளை சொல்லியே அவரை ஒதுக்கிவிடுகின்றனர். அவருடன் முன்பு ஒட்டி இருந்த நண்பர்கள் கூட அவரது முந்தைய நடவடிக்கைகளை காரணம் காட்டி ஒதுக்குவதுதான் வேதனைக்குரியது.

நீ மேலே உயரும்பொழுது நீ யார் என்று நண்பர்கள் அறிவார்கள்.?
நீ கீழே போகும்போது உண்மையான நண்பர்களை நீ அறிவாய்

யாரோ எழுதிய இந்த வரிகள் எத்துணை நிதர்சனமானது என்பது இவரது வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொண்டேன்.

ந்த புகைப்படத்தில் மட்டுமல்ல இவரது நிஜ வாழ்க்கையுமே இருட்டில் மாட்டிக்கொண்டது


- ரசிகவ் ஞானியார்

Friday, September 14, 2007

முன்னேறியது இந்தியாவா...இந்தியனா..?

ங்கிலாந்தில் மிகப்பெரிய கோடீசுவரர் லட்சுமி மிட்டல். அவரது சொத்து மதிப்பு 13 லட்சத்து 50 ஆயிரம் கோடியாகும். ( இப்பவே கண்ணைக் கட்டுதே)

Photo Sharing and Video Hosting at Photobucket

லக பில்லியனர்கள் பட்டியலில் இந்தியாவைச் சார்ந்தவர்கள் 40 பேர் இடம்பெற்றுள்ளனர்.

லகக் கோடீசுவரர்கள் எண்ணிக்கையில் ஜப்பானை, இந்தியா மிஞ்சிவிட்டதாம்.

லக லட்சாதிபதிகள் வரிசையில் இந்தியா எட்டாவது இடத்தைப் பிடித்திருக்கின்றதாம்

சாப்ட்வேர் இஞ்சினியர்களின் வருடச் சம்பளம் இத்தனை லட்சம், அத்தனை லட்சம் என்று உயர்ந்து கொண்டிருக்கின்றது.

ந்தியாவில் தனி மனித சம்பளம் லட்சங்களைத் தாண்டி கோடிகளை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.

லக கோடீசுவரர்களின் பட்டியலில் இந்தியர்களின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் இருக்கின்றது .

ந்தியர்களின் வளர்ச்சி அதீத வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் இந்த நிலையில் இந்தியாவில்தான் இன்னமும் அடிப்படை வசதிகளையே நிறைவேற்றிக்கொள்ளாத மக்களும் இருக்கின்றார்கள்.

30 கோடிக்கும் மேல் உள்ள மக்கள் 3 வேளை உணவு கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலையில் வறுமைக் கோட்டிற்கு கீழேதான் இருக்கின்றார்கள் என்பது வருத்தமான உண்மை.

Photo Sharing and Video Hosting at Photobucket

கடுமையான வெயிலில் இதோ இந்தத் தாத்தா ஆடு மேய்த்துக் கொண்டிருக்கின்றார். அந்த வெயிலின் சூட்டினை என்னாலையே தாங்க முடியவில்லை ஆனால் வயதான அந்தத் தாத்தா எப்படி சமாளித்துக் கொண்டிருக்கின்றார்? என்ற அனுதாபத்தில் அருகே சென்று விசாரித்தேன் .

"தாத்தா..தாத்தா "

காதினில் கை வைத்துக் கொண்டு மெல்ல என் பக்கம் வந்து கேட்டார்..

"என்னப்பா... என்ன..? "

நான் மறுபடியும் சப்தமிட்டு கேட்டேன். "இந்த வெயிலில் நிற்கிறீங்களே..தலையில் துண்டு போட்டுட்டு நிற்க வேண்டியதுதானே..வெயில் ஜாஸ்தியா அடிக்குதுல்ல.. "

லேசாய் புன்னகை உதிர்த்துவிட்டு "பழகிப்போச்சுப்பா" என்று கூறினார்

"உங்க ஆடுகள் எங்கே..? இந்த வயசுல இந்த வெயிலில ஏன் மேய்க்க வர்றீங்க..? "

"அதோ 10 ஆடுகள் நிற்குது பாருங்க .." என்று சுட்டிக்காட்டிவிட்டு சிரித்தபடி கூறினார் "வேற என்னப்பா செய்ய..? பொழைக்க வேண்டாமா..? "

"சரி எவ்வளவு சம்பளம் கிடைக்குது தாத்தா..? "

"மாசம் 300 ரூ கிடைக்கும் பா…" என்று கூறினார்

அட தினமும் 300 ரூ சம்பளம் வாங்குபவர்களுக்கு மத்தியில் மாசம் 300 ரூபாயா..? இதனால் அவரது அடிப்படை தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாதே..?

"இது எப்படி தாத்தா கட்டுபடியாகும்..?" என்று கேட்டேன்.

"ஏதோ வாழ்க்கை ஓடுதுப்பா" என்று ரொம்பவே ஆதங்கப்பட்டார்.

இந்த வயதிலும் உழைத்துப் பிழைக்க வந்த அந்த தாத்தாவிடம் பணம் ஏதும் கொடுக்க எனக்கு ஒரு மாதிரியாக இருக்க தலையில் உள்ள தொப்பியை கழற்றி கொடுத்தேன்.

Photo Sharing and Video Hosting at Photobucket

"அட நீ போட்டுக்கப்பா எனக்கெதுக்கு..? " என்று என்னிடம் திருப்பித்தர

"இல்லை தாத்தா நீங்க போட்டுக்கோங்க எங்கிட்ட இன்னொன்ணு இருக்குது.. வெயில்ல அலையுறீங்க.. நீங்க போட்டுக்போங்க" என்று வலுக்கட்டாயமாய் அவரது தலையில் தொப்பியை மாட்டினேன்.

வாயெல்லாம் பல் தெரிய மகிழ்ச்சியில் முதன் முதலாய் தொப்பி போட்ட வெட்கத்தில் புன்னகைத்தார். "எதுக்குப்பா போட்டோல்லாம் எடுக்குற?" என்று இன்னமும் மகிழ்ச்சியில் அதிகமாகவே புன்னகைத்தார்

Photo Sharing and Video Hosting at Photobucket

"நல்லதுப்பா..நல்லதுப்பா .. " என்று திருப்பி திருப்பி கூறிவிட்டு தொப்பியையும் கழற்றி கழற்றி மாற்றினார். அவரது முகத்தில் தெரிந்த சந்தோஷத்தினை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

அவரிடம் தொப்பியை மட்டுமல்ல மனசையும் விட்டுவிட்டு வந்துவிட்டேன்.


- ரசிகவ் ஞானியார்

Wednesday, September 12, 2007

ஹையா..எங்க ஊர்ல அமெரிக்க மருத்துவமனை


திருநெல்வேலி பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 கிலோமீ தொலைவில் நாகர்கோவில் செல்லும் சாலையில் இருந்து பிரிந்து செல்கின்றது தண்டித்தான் குளம் என்கிற குக்கிராமம். அதன் அருகே தருவை என்கிற கிராமத்தில் உள்ளது ஒரு அமெரிக்கன் மருத்துவமனை.


Photo Sharing and Video Hosting at Photobucket

"ன்ன கிராமத்தில் அமெரிக்கன் மருத்துவமனையா?" என்ற ஆச்சர்யம்தான் என்னை இந்தப் பதிவு எழுத வைத்தது.


ண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் வீடுகளை தேடித் தேடி ஒவ்வொன்றாக தட்டுப்படுகின்ற கிராமம். சுமார் 1 மணி நேரம் காத்திருந்தால் ஏதாவது ஒரு மனிதர்கள் தட்டுப்படுவார்கள் என்ற அளவுக்குத்தான் மக்கள் தொகை.

ப்படிப்பட்ட கிராமத்தில் அமெரிக்க மருத்துவமனை கட்டிய புண்ணியவான் யார்..? என்கிற ஆச்சர்யத்தோடு கண்ணில் யாரேனும் தட்டுப்படுவார்களா என தேட ஆரம்பித்தேன்.

Photo Sharing and Video Hosting at Photobucket

றுதியில் பக்கத்தில் ஒரு குவாரியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு தொழிலாளியைப் பிடித்து கேட்டேன். "அய்யா இங்க என்ன அமெரிக்கன் மருத்துவமனை? "

ந்தக் கிராமத்தில் படித்த ஒருவர் இப்போது அமெரிக்காவில் வேலை கிடைத்து நன்றாக வாழ்கின்றார் எனவும் அந்த மனிதர் தனது கிராமத்து மக்களுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்று இந்த மருத்துவமனையைக் கட்டினார் எனவும் அவர் கூறியது எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தையே அளித்தது.

ந்த மருத்துவமனையில் மிகவும் குறைந்த கட்டணமே வசூலிப்பதாகவும் சில நேரம் மிகவும் வறியவர்கள் என்றால் கட்டணமே வாங்கமாட்டார்கள் என்றும் கூறினார்

ங்குள்ளவர்களுக்கு உடல் நலம் சரியில்லை என்றால் சுமார் 15 கி.மீ தாண்டித்தான் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதிருக்கின்றது. இந்த மருத்துவமனை இங்குள்ள சொற்ப மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கின்றது என்றும் கூறினார்.

ந்த நாட்டில் இருந்தாலும் தன்னுடைய கிராமத்தையும் மறக்காமல் அங்குள்ளவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் அந்த முகம் தெரியாத மனிதருக்கு இந்தியக் குடிமகன் சார்பில் வாழ்த்துக்கள்.

துபோன்று ஒவ்வொருவரும் தன்னிச்சையாகவோ அல்லது குழுமமாகவோ இணைந்து தான் வளர்ந்த பகுதிகளை தத்தெடுத்து ஏழ்மையைக் கண்டறிந்து அதனைத் துடைப்பதற்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்தால் இனி வரும் இந்தியா ஏழ்மையற்ற இந்தியாவாக மாறிவிடாதா..?



- ரசிகவ் ஞானியார்

Monday, September 10, 2007

யாருடையது இந்தப் பங்களா?

Photo Sharing and Video Hosting at Photobucket

நேற்று நண்பர்களோடு பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு சென்று வந்தேன். ஒவ்வொரு முறை நான் செல்லும்பொழுதும், அம்பாசமுத்திரம் எல்கையைத் தாண்டி விக்கிரமசிங்கபுரம் தொடங்கும் இடத்தில் இதோ இந்தப் பராமரிக்கப்படாத பங்களாவை கவனிக்கத் தவற மாட்டேன்.

சாலையிலிருந்து சிறிது உயரத்தில் அழகான வடிவமைப்பில் கட்டப்பட்டிருக்கின்றது. பேய்ப் படங்களில் காட்டப்படுகின்ற பங்களா போல பயமாகவும் இருக்கும். முன்பு யாரோ நன்றாக வாழ்ந்த இடம் என்று மட்டும் தெரிகின்றது

வீட்டின் முன்னால் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு பாட்டியிடம் கேட்டபொழுது, இது மன்னர் வாழ்ந்த வீடு எனவும். இதனைச் சுற்றி இதுபோன்ற சிறு சிறு வீடுகள் சேதமடைந்து நிறைய இருப்பதாகவும் கூறினார்கள். நாங்களும் அந்த வீட்டினுள் சென்று பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இதே போன்ற வீடுகள் ஆங்காங்கே சேதமடைந்து பராமரிக்கப்படாத நிலையில் இருந்தது.


Photo Sharing and Video Hosting at Photobucket

இப்பொழுது இந்த இடம் மடத்தின் பொறுப்பில் இருக்கின்றதாம். இந்த பங்களாவில் வாழ்ந்த மன்னன் யார்? எங்குள்ளவன்..? ஒரு வேளை ஆங்கிலேயர்கள் தாங்கள் இளைப்பாறிச் செல்வதற்காக கட்டினார்களா..? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

- ரசிகவ் ஞானியார்

Saturday, September 08, 2007

குடிமகன் - ஒரு நேரடி ரிப்போர்ட்

சென்ற பதிவில்தான் ஒரு குடிமகனைப் பற்றி எழுதியிருந்தேன். அதன் ஈரம் காய்வதற்குள் இன்னொரு குடிமகன் . இந்த வாரம் என்ன குடிமகன் ஸ்பெஷலா..?

ன்று (08-09-07) மதியம் சுமார் 2 மணி இருக்கும். திருநெல்வேலி , பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நாகர்கோவில் செல்கின்ற மிகவும் பரபரப்பான சாலை அது. குறுகலான ரோடு என்பதால் சிலநேரம் சாலையை விட்டு வாகனங்கள் இறங்கி செல்ல நேரிடும். அந்தச் சாலையில் "விபத்துக்கள் அடிக்கடி நடக்கும் பகுதி" என்ற எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருக்கும்

ப்படிப்பட்ட சாலையில் இப்படி கால்நீட்டி படுத்திருந்தால் யாருக்குத்தாங்க பதறாம இருக்கும். அந்த நபர் அப்படியே படுத்திருந்தால் சிறிது நேரத்தில் காலே இல்லாமல் போய்விடக்கூடும். பாருங்க எப்படி ஹாயா கால்நீட்டி படுத்திருக்கின்றார் .

ண்ணியடிச்சா தைரியம் தானா வரும் சொல்வாங்க அது உண்மைதான் என்பதை நிருபித்துவிட்டார்.

Photo Sharing and Video Hosting at Photobucket

டுக்கி விழுந்தவரா? இல்லை உண்மையிலையே தண்ணியா? என்று சந்தேகமாகவே இருக்க பக்கத்தில் சென்று பார்த்தேன். லேசாக பூனையைப் போன்று கண்ணைத் திறந்து திறந்து மூடினார். அதே சாராய நெடி. புரிந்துவிட்டது தலைவர் குடிமகன்தான் என்று.

வரைக் கடந்து செல்லும் வாகனங்கள் எல்லாம் அந்த இடத்தில் தடுமாறி சென்று கொண்டிருக்கின்றன...சரி என்ன செய்ய..? ஏதாவது வாகனம் சாலை ஓரத்தில் நகர்ந்தால் கூட அவர் கால் மீதுதான் ஏறும். ஆகவே சாலையில் நீட்டிக்கொண்டிருக்கும் கால்களை பிடித்து அப்படியே ஓரத்தில் வைக்கலாமென்று நினைத்தேன். மெல்ல கால்களைப் பிடித்தேன். சட்டென்று கண் திறந்து விட்டார்.

"என்னடா ஏதாவது திட்டப்போகின்றாரா" என்று சந்தேகத்துடன் அப்படியே கால்களை வைத்துவிட்டேன். மறுபடியும் மயக்க நிலைக்கு சென்று விட்டார். அப்படியே கால்கள் இரண்டையும் பிடித்து சாலை ஓரத்தில் வைத்து விட்டேன்.

Photo Sharing and Video Hosting at Photobucket

வருடைய சட்டைப்பையில் அவரது குடும்ப முகவரியோ அல்லது ஏதாவது தகவல்கள் இருந்தால் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கலாமே என்று உற்று நோக்கினேன்.
கீழே விழுந்து அடிபட்டது போல காயந்து போன இரத்தக்கறைகள். பாக்கெட்டில் கொஞ்சம் பணமும், சில்லறைகளுமாக இருந்தது.

"ரி நமக்கெதுக்கு வம்பு? அப்புறம் ஏதும் பிரச்சனையாயிட்டா சிக்கல்" என்று அவரை சாலையோரத்தில் படுக்க வைத்துவிட்டு சென்றுவிட்டேன்.

றுபடியும் திரும்பி பார்த்தேன் . கண்ணியத்தை இழந்துவிட்டாலும் , கால்களாவது காப்பாற்றப்படும் என்ற நிம்மதியில் சென்றுகொண்டிருக்க, அவரது கால்கள் மறுபடியும் சாலையை நோக்கி அசைந்து கொண்டிருந்தது.

டனே 100 க்கு தெலைபேசி செய்து தகவல் தெரிவித்துவிட்டேன். பரவாயில்லை நமது காவல்துறை, படு வேகமாகத்தான் இருக்கின்றார்கள்
15 நிமிடத்தில் போலிஸ் வேன் வந்து நின்றது.

Photo Sharing and Video Hosting at Photobucket

ரே ஒரு போலிஸ்காரர் மட்டும் இறங்கி அந்த நபரை அங்கையும் இங்கேயுமாக புரட்டினார். அவர் அசைவதாக தெரியவில்லை. பின் அந்த போலிஸ்காரர் முதுகில் வசமாக சாத்தினார். அந்த பலமான அறையில் திடுக்கிட்டு விழித்த, குடிமகனை பிடித்து சாலையின் மறுபக்கம் கொண்டு போய் விட்டனர்.


Photo Sharing and Video Hosting at Photobucket

"யப்பாடா இனி நிம்மதியா இருக்கலாம்ல… "

ரண்டு நிமிடத்தில் அந்தச் சாலையில் சுமார் 50 வாகனங்களாவது கடந்திருக்கும். ஆனால் எல்லாருமே அந்த குடிமகன் படுத்திருந்த இடத்தை வேடிக்கை பார்ப்பதற்காக நிறுத்தி, தலையை வெளியே நீட்டி பரிதாபப்பட்டு செல்கிறார்களே தவிர யாரும் இறங்கி உதவ முன்வருவதாய் தெரியவில்லை.

உறவினர்கள் , நண்பர்கள் என்றால் எப்படி பதறிப்போவோம்..? மனிதர்கள் அனைவரையுமே உறவினர்களாய் நினைக்க கூடாதா..?

- ரசிகவ் ஞானியார்

Thursday, September 06, 2007

ஒரு காலாட்படையே கவிழ்ந்துகிடக்கின்றதே?

ன்று காலையில் நான் எனது இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த பொழுது எதிரே அந்த மனிதர் தடுமாறி தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கின்றார்

ன்னடா... நேராக வருகிறாரா? இல்லை எனக்கு இடது புறம் போகப்போகின்றாரா? வலது புறம் போகப்போகின்றாரா? என்று கணிக்க முடியாத அளவுக்கு வந்துகொண்டிருக்கிறார். அவரின் தடுமாற்றம் என்னை ரொம்பவே தடுமாற்றியது.

ண்டியின் வேகத்தைக் குறைத்துவிட்டு என்னதான் நடக்குதென்று பாரக்கலாமென்று அவருடைய போக்கில் விட்டுவிட்டேன். அவர் வேகமாய் வந்து இடது பக்கமாய் திரும்பி ஒரு மரத்தின் வேரில் முட்டி மோதி தொங்கிக்கொண்டிருந்தார்.

கிளையில் தொங்கியவர்களைக் கண்டிருக்கின்றேன். இவர் என்னடா வேரில் தொங்குகின்றார்?

நான் தப்பித்ததேன் என்று நிம்மதியாக இருந்தாலும், அவர் விழுந்துவிட்டாரே? பாவம் பெரிய மனிதர்.. ஏதாவது உதவி செய்யலாம் என்று வாகனத்தை நிறுத்தி விட்டு மெல்ல பக்கத்தில் சென்றேன்.

வருடைய வாகனத்தின் பின்னால் எழுதப்பட்டிருந்தது Ex-Army என்று. மிடுக்காக இராணுவத்தில் பணியாற்றியவரா இப்படி கவனமில்லாமல் வாகனத்தை ஓட்டுகிறார் என்று பக்கத்தில் சென்றால் ஏதேதோ உளறுகின்றார்.

மிகவும் பக்கத்தில் சென்றதும்தான் அந்த வாசனையும் அவருடைய போதையும் காட்டிக்கொடுத்தது. அந்த மதிப்புமிக்க இந்தியக் குடிடிடிடிடிடிமகன் போதையில் விழுந்திருக்கின்றார் என்று.

க்கத்தில் துணிகளை தேய்த்துக் கொடுக்கும் கடைக்காரர், நிகழ்ந்த சம்பவத்தை கண்டும் காணாமல் அலட்சியமாக தனது பணியை தொடர்ந்து கொண்டிருந்தார்.

ல்லையில் குளிரில் நின்று நம்மை காத்தவரை, இப்படி அநாதையாக விட மனமின்றி அந்த கடைக்காரரை அழைத்தேன்.

"ஹலோ வாங்க கொஞ்சம் உதவி பண்ணுங்க..யாருன்னு தெரியல "

"அட போப்பா இவருக்கு வேற வேலை இல்லை தினமும் குடிச்சிட்டு வந்து விழுந்து கிடப்பார்..பக்கத்துலதான் அவருடைய ஆபிஸ்.."
என்று சொல்லிவிட்டு யாருடைய கலைந்த சட்டையின் மடிப்பினையோ தேய்த்துக்கொண்டிருக்கின்றார் தன்னுடைய மனம் கலைந்துபோனது தெரியாமல்.

ரி பாவம் என்று வேரில் தொங்கிக்கொண்டிருக்கும் மனிதரை உசுப்பி இன்னொரு ஆட்டோ ஓட்டுனரின் உதவியுடன் மெல்ல அந்த மரத்தின் பக்கத்தில் உள்ள சிமெண்ட் தரையில் படுக்க வைத்தோம்.

தன் பின்னர் தகவல் தெரிந்து அவரது அலுவலகத்தில் இருந்து யாரோ வந்து முகத்தில் தண்ணீர் தெளிக்க ஆரம்பித்தார்கள்.

ந்தக் குடியில் அப்படி என்னதான் இருக்கோ தெரியலைங்க..? பக்கத்துல கொண்டு வந்தாலே ஒரு மோசமான வாசைனை வீசுது. இதை எப்படி குடிக்கிறாங்கன்னு ஆச்சர்யமாக இருக்கு?

பாருங்க இந்தியாவையும், இந்தியக் குடிமகன்களை காக்கும் மிகப்பெரும் பொறுப்பில் இருந்தவர் இப்படி அனாதையாக சாலையில் ..........பார்க்கவே வேதனையாக இருக்குங்க…

Photo Sharing and Video Hosting at Photobucket

வருடைய மனைவி - குழந்தைகள் - உறவினர்கள் எல்லாம் இந்த நிலையில் இவரைக் கண்டுவிட்டால் அதன் பின்னர் எப்படி இவருக்கு மரியாதை கொடுப்பார்கள்.? அது சரி அதுக்கெல்லாம் கவலைப்பட்டா எப்பவோ குடிமகன்கள் திருந்தியிருப்பார்களே?


ரு
காலாட்படையே
கவிழ்ந்து கிடக்கின்றதே?

தடுமாறி விழுந்தது
நீ மட்டுமல்ல ...
உன்னுடைய சுயமரியாதையும்தான் !

இந்தியாவின் பாதுகாப்புக்காக ...
தீவிரவாதிகளோடு போரிட்டிருப்பாய்!

ஆனால்
குடும்ப மரியாதையை
பாதுகாக்க இயலாமல் ...
போதை என்னும் தீவிரவாதியிடம்
சரணடைந்துவிட்டாயே?

உன்னால்
கொடிநாள் குடிநாளாகிப் போனது!

உண்மையைச் சொல்
நீ
முன்னால் கொடிமகனா? குடிமகனா?


- ரசிகவ் ஞானியார்

Wednesday, September 05, 2007

ஒரு ஆசிரியர் ஒளிந்திருக்கிறார்


[முன்பே எழுதிய எனது கவிதையினை மீள் பதிவாக ஆசிரியர் தினத்திற்காக வெளியிடுகின்றேன்... அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்..]




எனக்கு
"அ..ஆ.." போட கற்றுக்கொடுத்த - நான்
"ஆய்" போட்டதை கையிலெடுத்த
அந்த ஆசிரியர்கள்
ஞாபகம் வந்து போகிறார்கள்...
தூரத்தில்
புள்ளியாய் ஊர்ந்து போகின்ற
வாகனங்களைப்போல..

*****
ஒரு
காலைநேரத்து கண்மூடிய
கடவுள் வாழ்த்துப்பாடலின்போது....
நானும் காதரும்
சாக்பீஸை திருட
குனிந்து வந்ததைக் கண்டு..
டவுசரில் தூசி கிளம்ப அடித்த
பெயர் மறந்து போன
அரக்கி என்று பட்டப்பெயரின் சொந்தக்காரி
ஐந்தாம் வகுப்பு ஆசிரியை!

*****
எப்பொழுதும்
பிரம்பை வைத்திருப்பார்
ஆனால்
ஈக்களின் இடப்பெயர்ச்சிக்குத்தான்
பெரும்பாலும்
பிரம்பை பயன்படுத்தியிருக்கிறார்!

எப்பொழுதாவது வந்து போகும்
கார்ப்பரேஷன் தண்ணீரைப்போல...
நினைவில் வந்து போகின்ற
ஆறாம் வகுப்பு ஜோதிகா மிஸ்!


*****

கையை மறந்தாலும்..
குடையை மறக்காமல் வருகின்ற
வெள்ளையனின் ஆங்கிலத்தை மட்டும்
விரட்டாமல் வைத்திருக்கும் ...
ஏழாம்வகுப்பு சுப்பிரமணி வாத்தியார்!

*****
"பேசாதீங்கடா
பேசாதீங்கடா" என்று
உயிர் கொடுத்து கத்தி

"கண்ணாடியை தூக்கி
எறிஞ்சிறுவேன்
பேசாதீங்கடா "

"நாலணா தரேண்டா
பேசாதீங்கடா"
என்று கெஞ்சி கெஞ்சி கோபப்படும்
எட்டாம் வகுப்பு இபுறாகீம் வாத்தியார்!

*****
கொட்டாவி விட்டால்
கோபப்படுவார் எனத்தெரிந்தே..
கொட்டாவி விட்டுக்கொண்டே
நாங்கள் பாடம் கவனிக்க...
"கொட்டாவி ஒரு கெட்ட ஆவி" என
தத்துவம் உதிர்த்தபடியே...
பொறுமையாய் பாடம் நடத்திய
ஒன்பதாம் வகுப்பு சித்திக் வாத்தியார்!

*****
நான்
செண்டம் வாங்குவேன் என நம்பியிருந்து
இடைத்தேர்வில் நான்
பூஜ்யம் எடுத்து..
தெண்டமாய் போய்விட்டதை
தாங்கமுடியாமல் தனியே அழைத்து
"யாரையாவது லவ் பண்றியா"
என்று உரிமையாய் கேட்ட
பத்தாம் வகுப்பு சகுந்தலா மிஸ்!

*****
தத்து பித்து என்று
ஏதோ எழுதிக்கொடுத்ததை பார்த்து..
"இது கவிதை இல்லடா.."
இதுதான் கவிதை என்று
கம்பன் - பாரதி
இளங்கோவடிகள் கவிதைகளை
இலக்கிநயத்தோடு விவரித்த
பதினோராம் வகுப்பு பிரபாவதி மிஸ்!

*****
"வேதிச்சமன்பாடு என்றால் என்ன?"

என்று கேள்விகள் கேட்டபடி
தனது கைக்குட்டையால்
உதடு துடைத்தபடி..
கீச்சுக்குரலில் பாடம் நடத்தும்,
இரண்டு மாணவர்களை
காதல் கடிதம் கொடுக்கத் தூண்டிய அழகாய்
அந்த
பன்னிரெண்டாம் வகுப்பு
பிர்லா ஜெயந்தி மிஸ்!
*****
இப்படி
எல்லோருமே ..
என் அறிவின் கூட்டுப்புழுக்கள்!

ஆசிரியர்களின்
ஆசிர்வாதம் இல்லாவிட்டால்
நான்
கவிதை எழுதியிருக்கமாட்டேன்!
பலசரக்கு கடையில்...
கணக்குதான் எழுதிகொண்டிருப்பேன்!

என் கவிதைகளில்
ஒவ்வொரு வரிகளிலும்..
ஒரு ஆசிரியர்
ஒளிந்திருக்கிறார்!

அவர்கள் மட்டும்
"அ" போட கற்றுத்தராவிட்டால்...
எல்லோரும் என்னை
"சீ" போட்டிருப்பார்கள்!

அவர்கள் இல்லையென்றால்..
நான்
ரசிகவும் ஆகியிருக்கமாட்டேன் - யாரும்
ரசிக்கும்படியும் ஆகியிருக்கமாட்டேன்!


இருந்தாலும்
மனசுக்குள்
நெருடிக்கொண்டேயிருக்கிறது.....


நாங்கள்
உலகமெல்லாம் சுற்றி
பயணித்து வந்தாலும்
உலகம் கற்றுகொடுத்த நீங்களோ
இன்னமும் அந்த
பள்ளி சுவர்களுக்குள்ளேயே...

"ஒரு இரண்டு இரண்டு
இரு ரெண்டு நாலு
மூவிரண்டு ஆறு
நாலிரண்டு எட்டு"

என்று
கத்திக்கொண்டிருப்பதை காணும்போதும்


"எம் பையனுக்கு
ஏதாவது
வேலை வாங்கி கொடுப்பா!"
என்று
எங்களிடமே கெஞ்சும்போதும்

சாலையில் எங்கேனும்
சந்தித்துக்கொள்ளும் போது
பைக்கில் இருந்துகொண்டே
நாங்கள் சொல்கின்ற
அலட்சியமான வணக்கத்திற்கும்
பதறிப்போய்
தனது சைக்கிள் விட்டு இறங்கி
பதில் சொல்லும் மரியாதையை
நினைக்கும்போதும்...

மனசுக்குள்
நெருடத்தான் செய்கிறது!
பால்கார பையனை
ஏக்கத்தோடு பார்க்கின்ற...
முதியோர் இல்லவாசிகள் போல...

*****
-ரசிகவ் ஞானியார்-

Saturday, September 01, 2007

வாழ்க்கைப் பயணம்

Photo Sharing and Video Hosting at Photobucket

நீ யாராகிலும் இருக்கலாம்

உன் எண்ணங்கள் ...
உன் பழக்கங்கள் ...
உன் கலாச்சாரம் ...
வேறாயிருக்க கூடும் !

என் பயணம் முழுவதும் ...
நீ வேண்டும் !

உன் ஜாதி , மதம் , மொழி பற்றி
எனக்குக் கவலையில்லை

என் பயணம் ...
உன்னால் இனிமையாக வேண்டும்
அவ்வளவுதான்!

எனக்காக நீயும் ...
உனக்காக நானும் ...
சின்ன சின்ன விட்டுக்கொடுத்தல்கள் !

காத்திருந்து உணவுண்ணும்
கண்ணியம் !

நீ எனக்குமாய் ...
நான் உனக்குமாய் ...
தவணை முறை பாதுகாப்புகள் !

தங்குகின்ற இடம் ...
யாருக்கும் நிரந்தரமில்லை!
நட்பு நிரந்தரமாகட்டும் !

பேச்சு, சிரிப்பு, அன்பு
எல்லாம் ...
பொய்யின்றி கடைசிவரை !

என் பயணத்தின்
இறுதிவரையிலும் இப்படியே ...
இனிய துணையாக
அமைந்துவிட்டால் ...

அழகாகவே இருக்ககூடும்
இரயில்பயணமும், வாழ்க்கையும் !

- ரசிகவ் ஞானியார்

Thursday, August 30, 2007

வலைப்பதிவர்களுக்கு ஒரு போட்டி

Photo Sharing and Video Hosting at Photobucket

2019 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1 ம் தேதி உலகத்திற்கே விடுமுறை நாள். அன்று பூமியை மிகப்பெரிய விண்கல் ஒன்று தாக்கப் போகின்றது. இதுபோன்ற ஒரு விண்கல்லின் தாக்குதலினால்தான் உலகம் முன்பு டைனோசர் என்ற உயிரினங்களை இழந்தது. இப்பொழுது விழப்போகின்ற இந்தகல் பூமிக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தப்போகின்றது என்ற நாசாவின் மிரட்டும் மின்னஞ்சல் ஒன்று வந்திருக்கின்றது.

ந்த விண்கல்லானது பூமியை இதோ இப்படித்தான் வந்து தாக்கப்போகின்றதாம்.

Photo Sharing and Video Hosting at Photobucket

து போன்ற ஒரு புரளி முன்பு தோன்றியது. 2000 ம் ஆண்டு உலகம் அழியப்போகின்றது என்று. அதற்கு முந்தைய நாள் ஒரு கிராமமே பிரியாணி போட்டு சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருந்தது என்று பத்திரிக்கை செய்தியில் படிக்க நேர்ந்தது. அடப்பாவிகளா சாகப்போறதுக்கு முந்தைய நாள் பிரியாணிதான் தங்களின் கடைசி லட்சியமா..?

னால் நமக்கு அப்படிப்பட்ட விண்கலத்தினால் பாதிப்பு இல்லை ..ஏன்னா கண்ணா இப்படிச் ஜுடு..


Photo Sharing and Video Hosting at Photobucket

து உண்மையா பொய்யா என்று ஆராய்வதற்காக இந்தப் பதிவை எழுதவில்லை. சும்மா ஒரு கற்பனைக்காக உண்மையிலையே 2019 ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி உலகம் அழியத்தான் போகின்றது என்று எல்லா நாட்டு விஞ்ஞானிகளும் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் என்னவெல்லாம் செய்யக்கூடும்.? உலகம் அழியப்போவதற்குள் இதையெல்லாம் செய்து விடுவேன் என்று மனதில் தேங்கிய எண்ணங்களையெல்லாம் நிறைவேற்றுவீர்களா..? தாங்கள் என்னவெல்லாம் செய்வீர்கள் ? தங்களின் ஆசைகள் என்னென்ன என்பதை சுவாரசியமாக எழுதுங்களேன். யாருடையது ரசிக்கத்தக்கதாக இருக்கின்றதோ அவர்களுக்கு 500 ரூ மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக அனுப்பி வைக்கப்படும்;.

போட்டியின் விதிகள் :

1. த்தனை வரிகளுக்குள் இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் எல்லாம்
இல்லை. ஒரு வரியிலும் இருக்கலாம் ஒரு பத்தியாகவும் இருக்கலாம்.
ஆனால் சுருக்கமாகவும் சுவாரசியமாகவும் இருந்தால் நல்லது.

2. போட்டியில் பங்கு பெறுபவர்கள் எந்த நாட்டிலும் இருக்கலாம் ஆனால்
பரிசு தமிழ்நாட்டிற்குள் இருக்கும் அவர்கள்; பரிந்துரைக்கும் ஒருவருக்கு
வழங்கப்படும்.

3. கடைசிதேதி மற்றும் நேரம் : 03-09-07 - இந்திய நேரம் : இரவு 12 மணி


ப்ப நீங்க ஆரம்பியுங்க...ம் ஸ்டார்ட் மியுஸிக்..


அன்புடன்

ரசிகவ் ஞானியார்

Monday, August 27, 2007

ஒரு கிலோ செய்தி எவ்வளவு ரூ?

ஒரு நாள் பத்திரிக்கை படிக்காவிட்டாலும் அன்றைய பொழுதே விடியாதது போல நினைக்கின்ற அளவுக்கு பத்திரிக்கை ஆர்வலர்கள் அதிகமாக இருக்கின்றார்கள். காலையில் பத்திரிக்கை படிக்காவிட்டால் பலருக்கு அலுவலகத்தில் வேலை ஓடாது.

எனக்கும் அப்படித்தான் ஒருநாள் பத்திரிக்கை படிக்கவில்லையென்றால் கூட ஏதோ உலகத்தொடர்பை துண்டித்துவிட்டு நாம் இருக்கின்றோமோ என்ற உணர்வு ஏற்படும்.நம்மில் நிறைய பேருக்கு அப்படியே.

ஆனால் அந்தப் பத்திரிக்கைகள் நியாயமான முறையில்தான் செய்திகளை வெளியிடுகின்றார்களா? ஜனநாயகத்தின் முக்கியமான தூண்களில் பத்திரிக்கைத் துறையும் ஒன்று. அப்படிப்பட்ட துறை கறை படிந்து இருக்கலாமா..? எத்துணை பொறுப்பாய் செய்திகளை வெளியிடுவேண்டும். அப்படித்தான் நடக்கின்றதா இப்பொழுது? சமூக அக்கறையோடுதான் பத்திரிக்கைத் துறை இருக்கின்றதா..?

எனக்குத் தெரிந்து பெருன்பான்மையான பத்திரிக்கைகள் பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கின்றனரே தவிர சமூகஅக்கறை என்பது துளி கூட இல்லை.

கல்லூரிக் காலத்தில் நான் பத்திரிக்கை ஒன்றிற்கு நேர்முகத்தேர்வு செல்ல நேரிட்டது. என்னிடம் கேட்கப்பட் கேள்வி ஒன்று

"சாலையில் ஒரு பெண் சென்றுகொண்டிருக்கின்றாள் அப்பொழுது பேருந்தில் சென்று கொண்டிருந்த வாலிபர் அந்தப் பெண் மீது எச்சில் துப்பி விடுகின்றார். அதனால் அந்தப்பெண் கோபமடைந்து பேருந்தை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றாள். இதனால் அந்தச் சாலையில் பரபரபரப்பு ஏற்பட்டது."


"இதுதான் சம்பவம். இந்தச் சம்பவத்திற்கு எப்படி தலைப்பு கொடுப்பீர்கள் ?" என்றார்


"பெண்ணின் மீது எச்சில் துப்பிய வாலிபருடன் சண்டை – போக்குவரத்து பாதிப்பு என்று எழுதுவேன் சார்"


அந்த அதிகாரி சிரிக்க ஆரம்பித்து," அப்படி எழுதினால் சாதாரணமாகிவிடும். எப்படி எழுதவேண்டும் தெரியுமா?" என்று அவர் அந்த தலைப்பை கூறினார்.

"பட்டப்பகலில் பருவப்பெண் பாவாடையில் எச்சில் துப்பிய வாலிபர்"

மிகப் பிரபலமான பத்திரிக்கையில் பெரிய பொறுப்பில் இருக்கின்ற அவரே அப்படி கூறியது எனக்கு மிகவும் வேதனையாகிவிட்டது. தகவல்கள் சரியாக நியாயமாக மக்களிடம் சென்று சேரவேண்டும். இதுதான் பத்திரிக்கைகளின் பொறுப்பு. ஆனால் மக்களை கிளுகிளுப்புண்டாக்கி அதன் மூலம் சம்பாதிக்கும் இதுபோன்ற பத்திரிக்கைகள என்ன செய்வதாம்?

தகவல்கள் சரியாகத் தருவது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் மக்கள் வாங்கவேண்டும் என்பதற்காக தகவல்களை குழப்பி உண்மையை திரித்து கூறுகின்ற பத்திரிக்கைகள் ஏராளம்.

பத்திரிக்கைகள் சாதி மதம் சாராமல் அரசியலைச் சாராமல் இருக்கவேண்டும். இல்லையெனில்; தகவல்கள் முழுமையாகவும் உண்மையாகவும் மக்களைப் போய் சேராது.

தாங்கள் இருக்கின்ற இனத்தை – அல்லது அரசியல் கட்சியைப் பற்றி உயர்வாகவே எழுதுவார்களே தவிர அதிலுள்ள குறை எழுதுவதற்கு இன்னொரு பத்திரிக்கைதான் வரவேண்டும்.

அரசாங்கமும், பத்திரிக்கைகள் தொடங்குவதற்கு அல்லது இப்பொழுது வைத்திருப்பவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டும்.

எந்தச் செய்திகளையும் வெளியிடும் சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக தவறான தகவல்களை வெளியிடுகின்றது என்றால் அந்தப் பத்திரிக்கையின் உரிமையாளருக்கு மற்றவர்களுக்கு பாடம் தருகின்ற அளவுக்கு தண்டனை தரப்படவேண்டும்.

சமீபத்தில் இங்குள்ள ஒரு கல்லூரியில் மாணவ மாணவிகளை அதிகமாக ஏற்றி சென்ற கல்லூரிப்பேருந்து ஒன்றுக்கொன்று மோதியதால் சில மாணவிகள் மாணவர்கள் காயம் அடைந்தனர். அதில் ஒரு மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இந்தச் செய்தி சில மாணவர்கள் மூலம் பத்திரிக்கைக்கு கிடைக்கின்றது. ஆனால் அந்தக் கல்லூரியின் உரிமையாளரோ தன்னுடைய கல்லூரியின் பெயர் பத்திரிக்கையில் வந்துவிடக்கூடாது என்பதற்காக பணம் கொடுத்து காவலர்களின் மற்றும் பத்திரிக்கைகளின் கைகளை கட்டிப்போட்டுவிடுகின்றார். அந்தச் செய்தி எந்தப்பத்திரிக்கைகளிலுமே வரவில்லை.


பின் 3 நாட்கள் கழித்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் தருவதாக கூறிய பணம் முழுமையாக தரப்படவில்லை என்று கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தபொழுதுதான் பொதுமக்களுக்கு செய்தி தெரியவருகின்றது. இனிமேலும் செய்தி வெளியிடாவிட்டால் பத்திரிக்கை பெயர் கெட்டுவிடும் என்று பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட ஆரம்பித்தது.

செய்திகளே விலைக்கு வாங்கப்படும்பொழுது எப்படி அவர்கள் பத்திரிக்கைகளை நாம் வாங்குவது. ? எப்படி அவர்கள் வெளியிடுகின்ற செய்திகளை நம்பி படிப்பதாம்? இது போன்ற காசுக்கு மாரடிக்கும் கூட்டங்களை எல்லாம் அடையாளம் கண்டு அகற்றிவிடவேண்டும். இல்லையென்றால் செய்திகளும் விளம்பரகள் போல ஆகிவிடும்.

சில மாலைப் பத்திரிக்கைகள் மிகவும் மோசமாக தரம் தாழ்ந்து செய்திகளை வெளியிடுகின்றன. கிளுகிளுப்புக்காகவே வார்த்தைகள் மோசமாக பயன்படுத்தப்படுகின்றன. என் நண்பர் ஒருவர் இதுபோன்ற ஒரு பத்திரிக்கைக்கு மஞ்சள் பத்திரிக்கை என்றே பெயர் வைத்திருக்கின்றார்.

பெரும்பாலும் அந்தப் பத்திரிக்கைகளில் கற்பழிப்பு, பாலியல் சம்பந்தமான செய்திகளையே தலைப்பில் போட்டு விளம்பரப்படுத்தி பத்திரிக்கைளை விற்கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் இந்தச் செய்திகளை படிக்கும்பொழுது மிகவும் மனவேதனை படும் அளவிற்கு அவர்களின் விவரிப்புகளும் கற்பனைகளும் ஊறிப்போய்கிடக்கும்.

ஒருவேளை சூடான செய்திகள் என்று அவர்கள் சொல்வது இதற்காகத்தானோ?

அதுவும் பாலியல், கற்பழிப்பு சம்பந்தமான செய்திகளை வெளியிடும்பொழுது பெண்களின் முகத்தை அப்பட்டமாக வெளியிடுவது அந்தப் பெண்களின் எதிர்காலத்தை பாதிக்கின்ற செயல். அந்த நேரத்தில் அந்தப் பத்திரிக்கைக்கு செய்திகள் கிடைத்தால் போதும். ஆனால் அந்தப் பெண்களின் நிலைமையை யோசித்துப் பார்த்தார்களா? தங்கள் குடும்பப் பெண்கள் பாதிக்கப்படும்பொழுது இதுபோன்று வெளியிடுவதற்கு அவர்களுக்கு தைரியம் வருமா?

காந்தியடிகள் சொன்னது போல, பிறருடைய துன்பத்தை அவர்களுடைய மனநிலையில் இருந்து பார்த்தால்தான் அதனுடைய ஆழமும் வேதனையும் தெரியும் என்பதுபோல பாதிக்கப்பட்டவர்களின் நிலையில் இருந்து பார்க்கவேண்டும்.


பத்திரிக்கைகளின் இதுபோன்ற கிளுகிளுப்பான தலைப்புகளைப் பார்த்து அந்தப் பத்திரிக்கைகளை வாங்குகின்ற மக்கள் இருக்கின்ற வரை பத்திரிக்கைகளும் தங்களை மாற்றிக்கொள்ளப்போவதில்லை.


பெங்களுரில் நடந்த குண்டுவெடிப்பு பற்றி பிரபல மாலை நாளிதழ் நேற்று ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது எப்படி தெரியுமா..?


பெங்களுர் குண்டு வெடிப்பு விஷேஷ படங்கள்

பார்த்துவிட்டு அதிர்ந்தேன். குண்டுவெடித்ததில் அப்படியென்ன விஷேஷத்தை கண்டுவிட்டார்களோ இவர்கள்..? இதுபோன்ற சோகமான நிகழ்வுகள்தான் விஷேஷம் என்ற அர்த்தத்தில் தமிழில் வருகின்றதா..?

சக மனிதர்கள் மரணங்கள் - அழுகுரல்கள் - ஓலங்கள் - கண்ணீர்கள் இவர்களுக்கு எப்படி விஷேஷமாக தெரிகின்றது? மனசாட்சியே இல்லாமல் எப்படி இவர்களால் இப்படி தலைப்பிட முடிகின்றது? இந்த தலைப்பினை படிக்கின்ற பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?

குண்டுவெடிப்பு சோகப்படங்கள் - துயரக் காட்சிகள் என்று எழுதப்பட்டிருந்தால் இவர்கள் சமூக அக்கறை உள்ள பத்திரிக்கைகள் என்று சொல்லலாம்.

ஆனால் சமூக அக்கறையாவது, விளக்கெண்ணையாவது என்று அலட்சியம் செய்துவிட்டு பணத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு திரிகின்ற இதுபோன்றவர்கள் சமூகத்தில் இருந்து களையப்படவேண்டியவர்கள்.

அரசாங்கம் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு இதுபோன்ற சமூக அக்கறையற்ற பத்த்திரிக்கைளின் போக்கை கண்டிக்க வேண்டும். உடனே எழுத்துச் சுதந்திரம் - பத்திரிக்கை சுதந்திரம் என்று கொடிபிடிக்கின்ற அவர்களுக்கு அவர்களின் பொறுப்பை –- இந்திய ஜனநாயகத்தின் முக்கிய தூண்களான அவர்களின்; சேவை சார்ந்த முக்கிய பணிகளை – பத்திரிக்கைத் துறையின் தர்மத்தை எடுத்துரைப்பது மிக அவசியமான ஒன்றாகும்.


- ரசிகவ் ஞானியார்

Thursday, August 23, 2007

துபாயா.. அபிதாபியா.. சார்ஜாவா..

Photo Sharing and Video Hosting at Photobucket


வெற்றிக்கொடி கட்டு படத்துல வடிவேலுவை வைத்து சேரன் துபாய் காமெடி பண்ணியிருப்பாரு பார்த்தீங்களா..? அவர் எந்த அனுபவத்துல அப்படி காமெடி வச்சாருன்னு தெரியல? ஆனா நிஜமாகவே இதுபோன்ற அலட்டல்கள் முன்பு எங்கள் ஊரில் இருந்து வெளிநாடு சென்றவர்கள் செய்வதுண்டு.

சிறுவயதில் எனக்குத் தெரிந்து வெளிநாடு சென்றுவிட்டு எளிமையாக வந்தவர் எனது நண்பரின் தந்தை ஒருவர் . அவர் சிங்கப்பூர் சென்றுவிட்டு ஒவ்வொரு 3 அல்லது 4 வருட இடைவெளியிலும் வருவார். அவர் வந்துவிட்டால் புது டேப் - வெளியில் அலரும் ஸ்பீக்கர் - செண்ட் வாசனை என்று கமகமக்கும். ஆனால் சென்று விட்டு வந்த எனது நண்பனின் தந்தையை விடவும் அவர்கள் வீட்டில் உள்ளவர்களின் அலட்டல் சில சமயம் தாங்க முடியாது. புதிய டேப்பில் சத்தம் அதிகம் வைப்பது – டிவி டெக் வாடகைக்கு எடுத்து தெருவில் வைத்து படம் போடுவது என்று அலட்டல்கள் ஆரம்பித்துவிடும்.

ம்ம துபாய்காரங்க என்ன அவுகளுக்கு குறைச்சலா என்ன..? எனது ஊரில் உள்ள பல இளைஞர்கள் துபாய் சென்றுவிட்ட வந்தவர்களின் அலட்டலுக்காகவே துபாய் செல்ல விரும்புவார்கள். அந்த அளவுக்கு அலட்டல்ங்க.

துபாயிலிருந்து அந்த இளைஞர் இந்த தேதிக்கு வருகிறேன் என்று தொலைபேசி வந்தவுடனையே இவர்கள் குடும்பத்தோடு விமான நிலையம் செல்ல தீர்மானித்துவிடுவார்கள். இதில் சொந்தக்காரர்களில் , அவர்களை கூப்பிடவில்லை , இவர்களைக் கூப்பிடவில்லை என்று குறைவேறு.

துபாயிலிருந்து வருகிறவர்களுக்கே இடம் இல்லாதபடிக்கு ஆட்களை அதிகமாக வேனில் ஏற்றிக்கொண்டு கிளம்பிவிடுவார்கள்.

அட அந்த திருவனந்தபுரம் செல்லும் சாலை மிக மோசமான சாலை. அடிக்கடி விபத்து நேரிடும் பகுதி..அதில இப்படி அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிக்கொண்டு போகணுமா..? யாராவது ரெண்டு பேர் மட்டும் போனா பத்தாதா..? சொன்னா கேக்குறாங்களா..? சரி விமான நிலையத்தை பார்க்கிற ஆசையில இருக்கலாம்.

துபாயிலிருந்து வருகிறவர் விமானநிலையத்தில் கொண்டு வந்த சொர்ணத்தை காப்பாற்றி எலெக்ட்ரானிக் அயிட்டங்ளை சுற்றி சாக்லேட் ,சோப்பு, துணிமணிகள் வைத்து சுற்றி பெட்டிக் கட்டிக்கொண்டு வருவார்.
துணியை வைத்து சுத்துனா ஸ்கேன்ல தெரியாமலா போகும்…? என்ன ஆளுங்கய்யா..?

ஸ்டம்ஸில் கஷ்டப்பட்டு எதுவுமே இல்லைங்க வெறும் சாக்லேட் துணிமணிகள்தான் என்று பொய் ஒன்றைச் சொல்லி ,பெட்டியை இழுத்து வருவதற்குள் அவருக்கு போதும் போதும் ஆகிவிடும்.

னால் வெளியில் உள்ளவங்களுக்கு இது தெரியுமா..? "விமானம் வந்து எவ்வளவு நேரமாச்சு.? இன்னும் வரக்காணோம்..முதல் ஆளா வரவேண்டடியதுதானே..?" என்று எரிச்சல்படுவார்கள்.
அட இதென்ன திருநெல்வேலி பேருந்து நிலையமா? விட்டவுடன் நேரா வெளியே வர்றதுக்கு..விமான நிலையம்பா..

வர் வெளியே வந்தவுடன் நேராக ஓடிப்போய்….........

கட்டித்தழுவுவாங்கன்னு பார்த்தீங்களா.? இல்லைங்க அவரு கொண்டு வர்ற பெட்டியை வாங்கிக்குவாங்க..

செண்டிமெண்ட் பேத்தல்கள் கொஞ்சநேரம் நடக்கும். அப்புறம் வேனில் வரும்பொழுதே அவர் இல்லாமல் இருக்கும்பொழுது, ஊரில் நடந்தவைகள் அனைத்து தேதிவாரியாக உறவினர்கள் சொல்லிவிடுவார்கள்.

வர் ஊரில் வந்து இறங்கியவுடனையே அலட்டல்களின் காட்சிகள் அரங்கேறிவிடும். அவரு கொண்டு வந்த பெட்டியை அவரு சீக்கிரம் திறந்து விடக்கூடாது. அட அவரு கஷ்டப்பட்டு சம்பாதிச்சுட்டு வர்றாரு அவரு திறக்க கூடாதாங்க? சரி அவங்க அம்மா, அப்பா யாராச்சும் திறக்கலாம். ஆனா திறக்க கூடாதாம். சொந்தக்காரர்களில் அவங்க வரலை,இவங்க வரலை,எல்லாரும் வந்தவுடன்தான் பெட்டியை திறக்கணுங்கிற கூத்து நடக்கும் பாருங்க எங்க ஊர்ல..வேடிக்கைதான்..

வரு என்ன பெட்டிக்கடையா திறக்கப்போறாரு..? பெட்டியைத்தானே திறக்க போறாரு.. அதுக்கு ஏங்க சொந்தக்காரங்க எல்லாரும் வரணும்..? யாராச்சும் சொந்தக்காரங்கல விட்டுட்டு திறந்திட்டார்னு அந்த சொந்தக்காரர் கோவப்பட்டுட்டு வீட்டுக்கு வரமாட்டாராம். "அவன் என்ன மதிக்கலை..நான் அவனுக்கு எவ்வளவு செஞ்சிருப்பேன்னு " சண்டை போட ஆரம்பிச்சுறுவாங்க.. ஆமாங்க இது உண்மைதான் எங்க ஊர்ல இதனால் மனக்கசப்பானவங்க நிறைய பேர் இருக்காங்க தெரியுமா..?

ரி எப்படியோ பெட்டிக்கு திறப்பு விழா பண்ணியாச்சா..? அப்புறம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு துணிமணிகள் - நறுமணப்பொருட்கள் - எலக்ட்ரானிக் சாதனங்கள் - குழந்தைகளுக்கு பொம்மைகள் - சாக்லேட் - சொர்ணம் - சோப்புகள் - சப்பு சவரு என்று எடுத்து பிரித்து வைத்துவிடுவார்கள்.

ல்லா நண்பர்களுக்கும் வாங்கி வர முடியாவிட்டாலும் உயிர் நண்பர்களுக்காகவாவது ஏதாச்சும் வாங்கி வரணுமே? துபாய்ல ஈரானிய மார்க்கெட்டில் இரண்டு திர்ஹமுக்கு அள்ளி வரலாம் பொருட்களை . பார்ப்பதற்கு விலை உயர்ந்த பொருள் போலவே இருக்கும். ஆனா விலை கம்மி தரமும்தான். அங்கபோய் உயிர் நண்பர்களுக்கெல்லாம் ஒவ்வொரு பொருள் வாங்கிப் போட்டிருப்பாங்க..அதை எடுத்து கொடுத்திருவாங்க..

ந்த ஆளு துபாய்ல இருந்து வந்துட்டாருங்கிறதை மறுநாள் காலையில் அவர்கள் வீட்டில் இருந்து அலருகிற சத்தத்தில் வருகிற இந்திப் பாடலை வைத்து புரிந்து கொள்ளலாம்.

ப்புறம் இவரு ஊர்ல இருக்கிற நாள் வரையிலும் நண்பர்களோடு படம் பார்க்கச் சென்றால் இவர்தான் டிக்கெட் எடுப்பாராம்…மத்தவங்க பணம் கொடுக்குறேன்னு சொன்னாலும்..

"டேய் டிக்கெட் 30 ரூ தானே..அங்க எனக்கு வெறும் 3 திர்ஹம்தாண்டா.. என்று திர்ஹம் - ரூ கதையளப்பார்கள்."

(அங்க அவனுங்க 1 திர்ஹமுக்கு அழுவாங்க)

னது நண்பன் ஒருவன் ஊரில் பிச்சைகாரியிடம் 5 ரூ போட்டுவிட்டு பெருமையாகச் சொன்னான். "துபாய்ல வெறும் ½ பில்ஸ்தானடா" என்று.

னா இவனுங்க விடுமுறை முடியும் பொழுது தான் தெரியும் உண்மையான நிலைமை..முதலில் தாம் தூம்னு செலவழிக்கிறவனுங்க..திரும்பவும் துபாய்க்கு செல்கிற நாட்கள் வரும்பொழுது அப்படியே கமுக்கமா அடக்கி வாசிப்பாங்க..பின்னே கொண்டு வந்த காசெல்லாம் செலவழிச்சிடுவாங்க.. யார்கிட்ட காசு கேட்டாலும் கவுரவம் போயிடும்.. அதனால வீட்டை விட்டு வெளியே வர மாட்டாங்க..

வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ஆற்றில் குளிக்கப்போகிற பொழுது சைக்கிளின் பின்புறம் துபாய்ல இருந்து கொண்டு வந்த பூப்போட்ட துண்டுக்கு (ஈரானி மார்க்கெட்ல 2 திர்ஹம் துண்டுதான்) நடுவுல அரபு எழுத்துக்கள் வெளியே தெரிகிறது போல உள்ள சோப்பினை வைத்துகொண்டு செல்வார்கள். அந்த அரபு எழுத்து பதிந்த சோப்பினை காண்கிறவர்கள் தலைவரை துபாய் பார்ட்டின்னு நினைப்பாங்களே… அதுக்குத்தான்..

ப்புறம் துபாய் தமிழ் பஜார்ல மொலினா என்கிற சிங்கப்பூர் கடையில் வாங்கிய சிங்கப்பூர் வேஷ்டியை உடுத்துட்டுதான் வலம் வருவாங்க..அதுதான் தலைவரு துபாய் பார்ட்டின்னு பளிச்சினு காட்டிக்கொடுக்கும்..

செண்ட் அடிக்காம வெளியே வந்திறமாட்டாறு தலைவரு.. அப்படி அடிச்ச செண்ட்ல மயங்குன கூட்டம்தான்ங்க, இதுபோல நாமும் செண்ட் அடிக்கணும்னு பறந்து இப்போ துபாய்ல சுத்திகிட்டு இருக்காங்க..

துபாய் பற்றியோ, அரபு நாடுகள் பற்றியோ, வெளிநாடு அனுபவம் சற்றும் இல்லாத நண்பர்களை கூட்டி வச்சிட்டு அடிக்கிற அரட்டைதாங்க தாங்க முடியாது.

"இங்க இருக்கிற எல் ஐ சி எல்லாம் என்ன கட்டிடம்..அங்க வந்து பாருங்க ஒரு தெருவுல போனோம்னா தலையை உயர்த்திக்கிட்டேதான் போகணும்.. அந்த அளவுக்கு உயரமான கட்டிடங்களை பார்க்கலாம்..அது மாதிரி ஒரு கட்டிடத்திலதான் நான் தங்கியிருக்கேன்.."

"அங்கல்லாம் லிப்ட் நாமாத்தான் பட்டனை அழுத்தணும்..போத்தீஸ்ல மாதிரி ஆட்கள் எல்லாம் இருக்கமாட்டாங்க.. நான் தினமும் லிப்ட்ல நானாக ஏறி நானாக இறங்கிவேன் தெரியுமா?"

"நைட்ல எவ்வளவு நேரம் வேணுமின்னாலும் சுத்தலாம் தெரியுமா..? வியாழக்கிழமை இரவுல நண்பர்கள் எல்லாம் ஒன்று கூடி பீச்சுக்கு போய்ட்டு வருவோம்..கிரிக்கெட் விளையாடுவோம்.."

"ஒரு கார்டு கொடுப்பாங்க அந்த கார்டை வச்சிக்கிட்டுதான் நாம எங்கே வேண்டுமானாலும் போகணும். கார்டை தொலைச்சோம்னா அவ்வளவுதான் ஜெயில்ல போட்டுறுவாங்க.."

"வெள்ளிக்கிழமையானா போதும் தமிழர்கள் எல்லாம் ஒண்ணா ஒரு இடத்துல கூடுவோம். "
(உண்மையில வெள்ளிக்கிழமைதான் நல்லா தூங்குவாங்க)..

"டேய் இந்திலாம் தெரியுமாடா உனக்கு? " என்று எந்த அப்பாவியாவது கேட்டுவிட்டால் போதும்

"தெரியுமாவா..? கான காயா..? ஆப் கா நாம் கியா ஹே? தும் பாகல்..? "என்று தமக்குத் தெரிந்த லோக்கல் இந்தியை நண்பர்களுக்கு மத்தியில் அவிழ்த்து விடுவார்கள்..

"அங்க இந்தி தெரியலைன்னா அவ்வளவுதான்.. நாங்க ஆபிஸ்ல இந்திதான் பேசுவோம் தெரியமா.. சும்மா சரளமா பேசுவோம்.."

( ஆனா அங்க போனாதான் தெரியும் இவங்க பேசுற இந்தியோட லட்சணம்… இந்தி தெரிஞ்சவன் எவனாவது கேட்டான்னா காறித் துப்பிடுவான்..அந்த அளவுக்கு இந்தி மோசமாக இருக்கும்)

"ஒரு டிவி 150 திர்ஹம்தான்…

1 திர்ஹம் கொடுத்தா 1 பெப்சி டின் வாங்கிடலாம்…

நான் தினமும் பெப்ஸிதான் குடிப்பேன்.."

( ஆமா சாப்பாட்டுக் காசை மிச்சப்படுத்தி பெப்ஸி மட்டும்தான் குடிப்பாரு இவரு :) )

ப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே நிறைய இளைஞர்களை துபாய் கொண்டு தள்ளிய புண்ணியம் இதுபோன்ற எங்களின் முன்னோடி இளைஞர்கள் பலரைச் சாரும். அவர்கள் மட்டும் அலட்டல் காட்டாமல் இருந்தாங்கன்னா நிறைய பேருக்கு வெளிநாடு மோகமே இருந்திருக்காது..

நானும் துபாய் அப்படி இப்படி என்று நண்பர்களிடம் கதையளக்கலாம் என்று வந்தால் எல்லாப் பயலுவலுமே துபாய்க்கு வந்துட்டானுங்க..என்ன பண்றது..? பார்க்கலாம் யாராவது ஒரு அப்பாவியாவது துபாய் பற்றி கேக்காமலா போகப்போறான் ? அவன்கிட்ட வச்சுக்கறேன் என்னுடைய பீலாவை.. இதைப் படிக்கிற யாராச்சும் கேப்பீங்களாங்க..?

ப்படி நிறைய பேர் இருக்காங்க அலட்டல்வாதிகள். வெளிநாடு சென்றுவிட்டு அதனைப் பற்றிய நன்மை/தீமைகளை மற்றவர்களுக்கு விளக்கி சொல்வதை விட்டுவிட்டு, இப்படி அலட்டியதனால்தான் நிறைய இளைஞர்கள் நாமளும் போய்ட்டு வந்தா இப்படி ஆடம்பரமா இருக்கலாம்னு வீட்டை விற்று ,நகையை விற்று, வட்டிக்கு வாங்கி, வெளிநாடு போய்ட்டு கடைசியில இங்கே இருக்கிற ஆடம்பரத்தையும் இழந்து, ஏழைகளாக திரும்பிவருகின்றார்கள்.

நான் நகைச்சுவையாக அவர்களைப் பற்றி எழுதினாலும் நிஜமாகவே அவர்களைப் பற்றி நினைக்கும்பொழுது மனம் கனத்துப் போகிறது என்பதுதான் உண்மை.


- ரசிகவ் ஞானியார்

Wednesday, August 22, 2007

சென்னை: ரஜினிகாந்த சாதாரணமா நடந்து போனார்..


Photo Sharing and Video Hosting at Photobucket

சென்னையைப் பற்றி தனது ஞாபகங்களை எழுதிய அகிலனின் பதிவுகள் எனக்குள்ளும் சென்னை ஞாபகங்களை தூண்டிவிட்டது. சென்னை என்ற வார்த்தைக்கு எப்பொழுதுமே ஒரு பிரமாண்டம் இருக்கத்தான் செய்கின்றது.

லைநகரம் என்பதால் மட்டுமல்ல நடிகர்களின் கோட்டை என்பதால் சென்னைக்கு எப்பொழுதுமே மவுசுதான். இளவயதில் சென்னை என்றாலே அது பணக்காரர்களுக்கு மட்டும்தானோ என்று எண்ணத்தோன்றியது.

சென்னையிலிருந்து வருடத்திற்கு ஒருமுறை எங்கள் ஊருக்கு வந்துசெல்லும் எனது சொந்தங்களை விண்ணிலிருந்து வருபவர்களைப் போல வியந்து பார்த்திருக்கின்றேன். சென்னைப் பலகாரம் - சென்னை சாக்லேட் என்று ஒவ்வொரு முறையும் அவர்கள் கொண்டு வருவதால் சென்னையைப் பார்க்க வேண்டுமென்கிற ஆவல் எனக்கு அதிகம் ஏற்பட்டது.

நான் எட்டாம் வகுப்பு படிக்கும்பொழுதுதான் எனது உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக முதன்முதலில் சென்னையை எட்டிப்பார்த்தேன். மெரினா பீச் - கலங்கரை விளக்கம் மாமல்லபுரம் என்று செம குஷியாக சுத்தினேன்.

ப்பல்கள் வழிதவறிச் செல்லாமல் இருப்பதற்காக அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கத்தில் நான் வழிதவறிச் சென்றுவிட்டேன். சில அடி தூரம் சென்று விட்டு திரும்பி பார்த்தால் என்னை கைபிடித்து அழைத்து வந்த அம்மாவையோ உறவினர்களையோ அந்தக் கூட்டத்தில் என்னால் காண முடியவில்லை.

ழுகை வேறு முட்டிக்கொண்டு வருகின்றது. பின் அங்கேயே சில நிமிடங்கள் சுற்றிக்கொண்டிருந்தேன். ஒருவழியாக கண்டுபிடித்துவிட்டேன். இதில் என்ன வேடிக்கை என்னவென்றால் நான் காணாமல் போனதோ பின் மீண்டும் இணைந்ததோ அவர்களுக்கு எதுவும் தெரியாது..


ங்களது நண்பன் ஒருவன் சிறுவயதிலையே வீட்டை விட்டு வெளியேறி சென்னையில் உறவினர்களுடன் வியாபாரத்தை கவனித்து வந்தான். அவன் ஒவ்வொரு முறை சென்னையில் இருந்து வரும்பொழுதும் அவனைச்சுற்றி ஒரு கூட்டம்தான்.

"நான் டீ குடிச்சிக்கிட்டு இருந்தேன். அப்போ ரஜினிகாந்த் சாதாரணமா நடந்து போவார்..நாங்க கண்டுக்கவே மாட்டோம்.."

"விஜயகாந்த் பக்கத்துல நின்று புகைப்படம் எடுத்திருக்கேன் தெரியுமா.."

"தினமும் எங்க கடைக்கு முன்னாலதான் சினிமா சூட்டிங் நடக்கும்..எங்களுக்கு அது பழகிப்போச்சு யாருமே பார்க்க மாட்டோம்.."

"ஒருநாள் எங்க கடைக்கு நடிகர் செந்தாமரை வந்தார் தெரியுமா..?"

என்று அவன் கதையளந்து கொண்டே செல்வான். அது உண்மையோ பொய்யோ சோதித்து பார்க்கின்ற வயது இல்லை. அப்படியே நம்பிவிடுவோம்.

நாங்கள் நடிகர்களை என்றாவது ஒருநாள் பார்க்க மாட்டோமா? சினிமா சூட்டிங் எப்படி நடக்கிறது என்று காண்போமா? என்ற ஆவலில் இருக்கின்றோம் ஆனால் இவன் என்னடா வென்றால் இவற்றைச் சுற்றியே வாழ்ந்து வருகின்றான். நடிகர்களை பார்த்தும் இவ்வளவு அலட்சியமாய் இருக்கின்றான் என்று அவன் மீது பொறாமைப் படுவோம். இதற்காகவேனும் சென்னையில் பிறந்தோமா என்று தோன்றும்.

அது மட்டுமல்ல,

"மெட்ராஸ்ல பேருந்தில் பெண்கள் பக்கத்துல உட்கார்ந்தாலும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க தெரியுமா? "

என்று சென்னைப் பெண்களின் நாகரீகம் பற்றி அதிகமாய் பேசுவான். அதில் மயங்கி சென்னைக்கு செல்லத் துடித்தவர்கள் பலபேர்

"நான் பைக்கை எடுத்தேன்னா சும்மா 100ல தான் பறப்பேன். அப்படியே ரவுண்டு அடிச்சிதான் பைக்கை எடுப்பேன். பைக் சும்மா ப்ளைட் மாதிரி பறக்கும் தெரியுமா?" என்று தன்னைப் பற்றியும் அடிக்கடி அவன் பாடிய சுயபுராணம் ஒருநாள் உடைந்தது.

ங்கள் நண்பன் ஒருவனின் பைக்கை ஒருநாள் கொடுத்து அவன் சொன்ன ஹீரோத்தனத்தை செய்யச்சொன்னோம். அவன் முதலில் தயங்கினான். பின் தன் ஹீரோயிஸம் கெட்டுவிடக்கூடாதே என்று பைக்கை எடுத்தான். அவ்வளவுதான் எங்களுக்கெல்லாம் சிரிப்பு வந்துவிட்டது. ஆமாங்க பைக்கை ஓட்டவே தெரியலை..தடுமாறி தடுமாறி சென்றான்.

ப்புறம் வந்து, "இந்த மண்சாலைக்கெல்லாம் இந்த பைக் சரிப்படாது" என்று மழுப்ப ஆரம்பித்தான். இப்படி சென்னை சென்று விட்டு வருபவர்களின் ஹீரோயிஸமும் சென்னையைப் பற்றிய ஆவலை அதிகப்படுத்தியது.

பின் படிப்பு சம்பந்தமாக வேலை சம்பந்தமாக சென்னைக்கு அடிக்கடி செல்ல நேரிட்டது. ஒவ்வொரு சம்பவங்களையும் சொல்ல ஆரம்பித்தால் இந்த ஒரு பதிவு போதாது. கன்னித்தீவு கதை போல நீண்டு கொண்டே இருக்கும்.

னால் அந்த சிறு வயது ஆவல் இப்பொழுது துளி கூட இல்லை. எல்லாம் போலித்தனமான நகர வாழ்க்கையாக மாறிவிட்டது.

ரு பக்கம் பார்த்தால் பிரமாண்டம் பிரமாண்டம் பிரமாண்டமான வளர்ச்சி. மறுபக்கம் பார்த்தால் 3 வேளை உணவு முறையை 1 வேளையாக மாற்றிக்கொண்டு திரிகின்றவர்கள்.

கைநிறைய பணம் இருந்தும் செலவழிக்கத் தெரியாத / வீண் விரயம் செய்கின்ற இளைஞர்கள் இருக்கின்ற இதே சென்னையில்தான் இன்னமும் காலையில் நாஷ்டாவுக்கு வழியில்லாவிட்டாலும், மடிப்பு கலையாத ஆடையில் பசியோடு நேர்முகத்தேர்வுக்கு சென்று கொண்டிருக்கும் இளைஞர்களும் இருக்கின்றார்கள்.

- ரசிகவ் ஞானியார்

Saturday, August 11, 2007

பிணத்தோடு விளையாடி.. பிணத்தோடு உறவாடி..



செத்த பிணத்தைச் சுற்றி
அழுதபடி
சாகப்போகின்ற பிணங்கள்


- யாரோ


இக்கவிதையின் அர்த்தங்களை அவ்வளவு எளிதாய் நாம் அலட்சியம் செய்ய முடியாது. மரணம் நமக்கு நெருக்கமானவர்களுக்கு வரும்பொழுதுதான் நாம் உணர ஆரம்பிக்கின்றோம் நமக்கும் ஒருநாள் வந்திடுமோ என்று?

தினம் தினம் செத்த பிணத்தை சுற்றி நிற்கின்ற சாகப்போகின்ற பிணங்களைப் பார்த்து அதிர்ச்சியில் வந்திருக்கின்றேன்..

ம்....மருத்துவக்கல்லூரியில் பிணங்களோடு தங்கள் வாழ்க்கையைக் கழித்துக்கொண்டிருக்கும் பிணவறைப்பகுதி ஊழியர்களையும் மருத்துவர்களை பற்றியும்தான் குறிப்பிடுகின்றேன்.

Photo Sharing and Video Hosting at Photobucket

சென்ற மாதம் (15-07-07) திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் பிணவறைப்பகுதியில் பணிபுரியும் மருத்துவர் ஒருவரின் கணிப்பொறியை சரிசெய்வதற்காக நண்பருடன் சென்றிருந்தேன். அரசாங்க மருத்துவமனை என்றாலே உள்ளே செல்வதற்கு ஒரு தயக்கம் இருக்கும். அதுவும் பிணவறைப்பகுதி என்றால் கேட்கவா வேண்டும்.

Photo Sharing and Video Hosting at Photobucket

எத்தனையோ அழுகுரல்களையும், சோக ஓலங்களையும் கேட்டு சலித்துப்போன அந்தக் கட்டிடம் அமைதியாக காட்சியளித்தது. இரயில் மோதி விபத்துக்குள்ளான உடல்கள் - பேருந்தில் நசுங்கிய மனிதர்கள் - தற்கொலை செய்து கொண்டவர்கள் என்று எத்தனையோ பிணங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அந்தப் பிணவறையை மெல்ல எட்டிப்பார்த்தபடி பயத்தோடும் திகிலோடும் கடந்தேன். உடல் லேசாய் சிலிர்த்துக் கொண்டது.
பிணங்கள் ஏதேனும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறதா? என்று லேசாய் எட்டிப்பார்த்தேன் நல்லவேளை எதுவுமில்லை.. இன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் பிணத்திற்கும் விடுமுறையோ?

அந்தக் கட்டிடத்தின் முன்னால் வந்து நிற்கும்பொழுதே பைக் - கைகள் - இதயம் என்று அனைத்துமே நடுங்க ஆரம்பிக்கின்றது. உள்ளே செல்வதற்கு 1 சதவிகிதம் கூட தைரியமில்லாமல் அந்த இடத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டே தயங்கி தயங்கிதான் சென்றேன்.

Photo Sharing and Video Hosting at Photobucket

நான் கல்லூரியில் படிக்கும்பொழுது இந்தச் சாலை வழியாகத்தான் கிண்டலடித்தபடி செல்லுவோம். ஆனால் இந்த பிணவறைப்பகுதியை கடக்கும்பொழுது மட்டும் அனைவருமே தன்னிச்சையாக மௌனமாகிவிடுவோம். எப்பொழுதும் வாயிலில் யாராவது ஒருவரோ அல்லது ஒரு சிறு கூட்டமோ தங்கள் உறவினர்களை, பிரியமானவர்களை இழந்து சோகத்துடன் பரிதவித்துக் கொண்டிருப்பார்கள்.

ஒருநாள் பரிட்சை நேரத்தில் இந்த இடம் வழியாக கடந்து சென்றபொழுது ஒரு பெண்மணியின் பயங்கற கதறல் ஆர்ப்பாட்டம். யாரையோ இழந்து ஓலமிட்டுக்கொண்டிருந்தார்கள். அந்தக் காட்சியை கண்டு மனசு உறைந்து விட்டது. பரிட்சை அறையிலும் அந்தக் காட்சியே திரும்ப திரும்ப வந்து கொண்டிருக்க எதையும் எழுத பிடிக்காமல் ஆசிரியரிடம் நிலைமையைச் சொல்லி அப்படியே பேபப்ரை மடித்து கொடுத்தேன். அந்த ஆசிரியரோ, பரிட்சை எழுதாததற்கு நான் கூறிய வித்தியாசமான காரணத்தை ஆச்சர்யமாய் பார்த்தபடி சரி அதுக்கென்ன அடுத்த தடவை பார்த்துக்கொள்ளலாம்" என்று கூறிவிட்டார். என் நிலைமைய புரிந்து கொண்ட அந்த ஆசிரியருக்கு நன்றிகள் .

அதன்பிறகு அந்த வழியாக செல்வதை பெரும்பாலும் தவிர்த்துக்கொள்வேன். எதற்காக அந்தச் சம்பவத்தை சொல்கிறேனென்றால் சாதாரணமாக கடந்து சென்றதற்கே மனதில் இத்தனை ரணங்கள் என்றால் அங்கேயே பிணவறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு எப்படி இருக்கும்?. எனக்கு சென்றுவிட்டு வந்த நிமிடத்திலிருந்து பித்து பிடித்தது போல இருக்கின்றது. எதையும் சாப்பிடத் தோன்றவில்லை

Photo Sharing and Video Hosting at Photobucket

மூளை ,எலும்பு, கை, கால், தலை என்ற வார்த்தைகளை நாம் கசாப்புக் கடைகளில்தான் உபயோகிப்போம் ஆனால் தினம் தினம் இந்த வார்த்தைகளை மனித உறுப்புகளோடு ஒப்பிட்டு மனிதர்களிடமிருந்து பிரித்தெடுத்து ஒட்டி.. .....ச்சே கேட்கும்பொழுதே ஜீரணிக்க முடியவில்லை..

நீங்கள் எப்பொழுதேனும் கோழிக்கறி வாங்குவதற்கு கோழிக்கடைக்குச் சென்றிருக்கின்றீர்களா? சென்றால் கண்டிருக்க கூடும். கோழிகள் மொத்தமாக அடைபட்டிருக்கும்.
கடைக்காரன் ஏதாவது ஒரு கோழியை எடுக்க முற்படும்பொழுது எல்லாக் கோழிகளும் அப்படியே பதுங்கி பயந்து மூலையில் சென்று ஒட்டிக்கொள்ளும். அவற்றில் ஒன்றைப் பிடித்து மற்ற கோழிகளின் கண்முன்னாலையே அதனை அறுத்து பல பாகங்களாக பிரித்தெடுக்கும்பொழுது அந்தக் கோழிகளுக்கு எவ்வளவு மிரட்சி கண்களில் தெரியும் தெரியுமா..? நான் பலமுறை கவனித்திருக்கின்றேன். அறுக்கப்பட்ட கோழியின் வலியை விடவும் அதனைப் பார்த்துக்கொண்டிருக்கும் மற்ற கோழிகளுக்குத்தான் வலிகள் அதிகம்

இதே நிலைமைதான் இந்தப் பிணவறையில் வேலைபார்ப்பவர்களுக்கும். தினம் தினம் ஏதாவது ஒரு பிணத்தைப் பிரித்தெடுத்து தைக்கும்பொழுது தான் வாழ்கின்ற நாட்களில் இவ்வளவு ஆட்டம் போடுகின்றோமே? நமக்குள் இருப்பதும் இதுபோன்ற வெற்று எலும்புகள் ,சதைகள் , இரத்தப் பிடிப்புகள்தானே என்று உணர்ந்துகொள்வார்கள்.

அங்குள்ள ஊழியர் ஒருவர் கூறினார்

"தம்பி! நேத்து ஒரு பிணம் வந்துச்சு ஆளைப்பார்த்தா முறுக்கு மீசையோடு சும்மா திடகாத்திரமா இருந்தார். ஆனால் சாதாரணமாக நாங்கள் கிழித்து தைத்துக்கொண்டிருந்தோம். வாழும்பொழுதுதான் நீ நான் என்று மல்லுக் கட்டிக்கொண்டு நிற்கின்றோம். ஆனால் இப்ப பாருங்க எல்லாருக்கும் இந்த நிலைமைதான்" என்று அவர் சாதாரணமாக சொன்னாலும் அவருடைய பேச்சில் நிறைய பக்குவம் தெரிந்தது.

"ச்சே என்ன வாழ்க்கைப்பா இது" என்று சலித்துக்கொண்டார். .

1 கிலோ சர்க்கரை, அரை கிலோ பருப்பு, 1 லிட்டர் எண்ணெய் என்று பட்டியலிடுவது போல இங்கேயும் பட்டியலிட்டுக்கொண்டிருக்கிறார்கள் எப்படி தெரியுமா?

------------------------------------ஜனவரி-- பிப்ரவரி-- மார்ச்-- ஏப்ரல்

விபத்து ------------------------5------------ 1------------2----------- 3

தூக்கு -----------------------1------------- 3 - - -------NIL----------7

விஷம் ---------------------- 4

எரிந்தவர்கள் ------------------4--------------3 -

கொலை ---------------------------------------1---------- - 2


இப்படி பட்டியலிட்டிருக்கின்றார்கள். பார்த்ததும் அதிர்ந்து போய்விட்டேன். இதில் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் ஒரு நிஜ படத்தை தொங்கவிட்டிருக்கின்றார்கள். சென்ற வருடம் மட்டும் 800 க்கும் மேற்பட்ட பிணங்கள் வந்தது. இந்த வருடம் இப்பொழுதே அந்த எண்ணிக்கை வந்துவிட்டது என்று வளர்ச்சி விகிதத்தை பட்டியலிடுகின்றார்.

வருடங்கள் வாரியாக, மாதங்கள் வாரியாக எழுதப்பட்டிருந்தது செத்தவர்களின் எண்ணிக்கையையை.
சாதிக்கலவரம், மதக்கலவரம், காதல்தோல்வி, விபத்து, வரதட்சணை கொடுமை ,பழிக்குப் பழி என்று எத்தனையோ காரணங்கள் அங்கே. ஆனால் இறந்தவர்களின் மதங்கள், சாதிகள், எல்லாம் எழுதப்படவில்லை வெறுமனே பிணம் அவ்வளவுதான்..


சாலையில் எங்கேனும் விபத்தைக் காண நேர்ந்தாலே அது ஜீரணமாக 1 நாள் ஆகின்றது.

பிணத்தோடு விளையாடி
பிணத்தோடு உறவாடி
பிணத்தோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே


என்று பிணங்களோடு வாழ்நாளைக் கழிக்கின்ற அந்த ஊழியர்களை நினைத்து பரிதாபப்படத்தான் தோன்றுகின்றது. ஆனால் பிணத்தோடு பணிபுரிந்து சிலருக்கு இதயம் மரத்துப் போகின்றது. பிணம் வாங்க வருபவர்களிடம் அவர்களின் துக்கத்தை அலட்சியப்படுத்திவிட்டு பணத்தையே முதன்மையாக கருதும் சில ஊழியர்களைத் தவிர மற்றவர்கள் பார்ப்பது தொழில் அல்ல தியாகம் எனலாம்..

- ரசிகவ் ஞானியார்

Tuesday, August 07, 2007

படிக்காமல் விட்டுவிடாதீர்கள்

" என்னடா வாழ்க்கை இது" என்று சலித்துக் கொண்டு வாழ்க்கையை வீணடிப்பவர்களுக்கும் , நம்பிக்கையை இழந்து தவிக்கின்ற இளைஞர்களுக்கும் பேராசிரியர் தஸ்தகீரின் இந்தக் கல்விப் பயணம் சிறந்த வழிகாட்டியாக இருக்கின்றது

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Friday, August 03, 2007

என்றும் துணையிருப்போம் ஆசிப்...

Photo Sharing and Video Hosting at Photobucket

"நண்பர் ஆசிப் மீரானின் துணைவியார் இயற்கை எய்திவிட்டார்கள்" என்ற செய்தி வலைப்பதிவர்கள் பலருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆசிப் மீரானுக்கு எங்களது ஆறுதல்கள் என்று சாதாரணமாய் சொல்லிவிட்டு செல்ல முடியவில்லை. கனவுகளோடு விடுமுறைக்கு வந்துவிட்டு இனிமையான நினைவுகளோடு திரும்பிச் செல்ல நினைத்திருப்பார். ஆனால் இப்படி சோகமயமாகிவிட்டது.

ஆசிப்மீரானின் தந்தை திரு அப்துல் ஜப்பார் அவர்கள் தனது மறு-மகளைப் பற்றி எழுதியுள்ளது இன்னமும் மனதை சோகமயமாக்குகின்றது.

"இந்தப் பூப்பந்தில் வதியும் கோடிக்கணக்கான ஜீவராசிகளில் அவளும் ஒருத்தி. ஆனால் நிச்சயம் லட்சத்தில் ஒரு பெண். எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை ஓர் இனிய தேவதை. "

"எங்கள் வீட்டில் விருந்தாளியாகத் தங்கிச்சென்ற ஒரு பிரபல கவிஞர், " இறைவனுக்கு இணை வைப்பது பாவமில்லை எனில் இவளை நான் தெய்வம் என்பேன்" அன்று கவிதை நயத்தோடு சொல்லிச் சென்றார். "

"பெரியவர்களிடம் காட்டும் பண்பும் - பணிவும், கணவனிடம் காட்டும் அன்பும் - பரிவும், குழந்தைகளிடம் காட்டும் பாசமும் - நேசமும், குடும்பத்தினரிடம் காட்டும் கனிவும் - கருணையும், சமூகத்தில் நடந்து கொண்ட கண்ணியமும் - கௌரவமும் யாஸ்மினை ஒரு தனிப்பிறவி என்றே சொல்ல வைத்தன. "

"இரவு பதினொன்றரை மணிக்கு மனசாட்சியே இல்லாததா மருத்துவ உலகம் என்று எண்ணுமளவுக்கு அந்த இரக்கமற்ற இடிச் செய்தியை எங்கள் தலைகளில் இறக்குகிறார்கள் --- யாஸ்மின் இறந்து விட்டாள். "

அப்துல் ஜப்பாரின் இந்த எழுத்துக்கள் ஆசிப்பின் துணைவியாரைப் பற்றி அறியாதவர்களையும் கண்ணீர் விட வைத்துவிடுகின்றது.

இந்த இழப்பிற்கு எந்த நிகழ்வுகளாலும் ஈடு செய்யவே முடியாது எனினும், இந்த இழப்பின் சக்தியை தாங்கும் மனவலிமையை ஆசிப்பிற்கும் அவர்களது குடும்பத்திற்கும் இறைவன் வழங்குவானாக என்று பிரார்த்திக்கின்றேன்.

உங்கள் இன்பத்திலும், துன்பத்திலும் என்றும் துணையிருப்போம் ஆசிப்... இறைவன் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் சாந்தியும் சமாதானமும் தருவானாக...


- ரசிகவ் ஞானியார்

தேன் கூடு