Monday, February 05, 2007

மண்நேசர்கள்

Photobucket - Video and Image Hosting



கொல்லைப்புறத்தில்
காய்கின்ற துணிகள்,

சேகரித்து வைத்த
பழைய கடிதங்கள்,

கல்லூரி ஞாபகக்குறிப்பேடு,

அத்தாட்சிகளே இல்லாமல்போன
நண்பர்களின் ..
முகவரி கிழிசல்கள்,

நேற்று இரவு
அம்மா இட்ட
மருதாணிப் பிசிறுகள்,

தந்தையின் ஞாபகமாய்
இரத்தம் சிதறிய
தோள் துண்டுகள்,

தாயின் ஞாபகமாய்
குண்டுகளால் துளைத்தெடுக்கப்பட்ட..
சேலை முந்தானைகள்,

இவற்றோடு
அதிகமான கவலைகள்,

எல்லாம் சேகரித்து
அகதி வந்திருக்கின்றேன்...
அகதி வந்திருக்கின்றோம்!

சீதையை மீட்க..
கடல் தாண்டி வந்தான் அனுமன்!
நாங்களும் அனுமர்கள்தான்
எங்கள்
உயிரையும் கற்பையும் மீட்க...
பல உடல்தாண்டி வந்திருக்கின்றோம்!

கடலோரம் பொறுக்கி வந்த ..
சங்குகளில் எல்லாம்
கடல் ஓசையல்ல,
எங்கள்
தலைமுறைகளின் ..
வெற்றிச்சப்தம் மட்டுமே
ஒலித்துக்கொண்டேயிருக்கின்றது!

கால் கடித்துவிட்டு
மண்ணுக்குள் மறைந்துபோகும்..
நண்டுகள் எல்லாம்
நம்பிக்கையூட்டிக் கொண்டிருக்கின்றது!

உதிக்கும் சூரியன்
எங்கள்
கண்களின் வெறிக்கு முன்னால்
கற்பிழந்து போகின்றது!

வானத்துப்பறவைகள்தான்
எங்கள்
எதிர்கால எடுத்துக்காட்டு!


நம்பிக்கையிருக்கிறது
ஒரு விடியலில் சேதி வரும்!
விட்டுச்சென்ற படகுகள் எல்லாம்..
ஒருநாள் திரும்பகூடும்
சுதந்திரக்காற்றை ரொப்பிக்கொண்டு..

அகதிகளாய் அல்ல..
சொந்தங்களாய் திரும்புவோம்!

காத்திருக்கின்றோம்
இராமேஸ்வரம்
மற்றும்
நம்பிக்கைகளின் கரையோரங்களில்..



- ரசிகவ் ஞானியார்

Saturday, February 03, 2007

முந்தைய இரவு

Photobucket - Video and Image Hosting

ஓட்டை வீடான..
ஓட்டு வீடு,
மாடி வீடாக..
மாறிப்போனது!

நகைக்கடை விளம்பர
நகைகள்..
வீட்டுப்பெண்களின்
கைகளிலும், கழுத்திலும்..
ஏறத்துவங்கின!

கடன்காரர்களின் வருகை..
குறைய ஆரம்பித்தது!

கனவாகப்போய்விடுமோ? என்ற
தங்கையின் திருமணம்
நான் இல்லாவிடினும்
லட்சம் இருந்ததால்..
லட்சணமாய் முடிந்தது!

அயல்நாட்டிலிருந்து
காசோலை மூலமாய்
வாழ்க்கை நடத்தியவன்..
இப்பொழுது
காசோடு வந்திருக்கின்றேன்!
இழந்துபோன காலத்திற்கும்
சேர்த்து வாழ..


தந்தையின் நினைவைச்சுமந்து
தனியாய் ஆடிக்கொண்டிருந்த..
சாய்வு நாற்காலிச்சப்தம் வந்து
காதுகளில் ..
கிறீச்சிடுகிறது!

தந்தையின் இறுதிநாட்களுக்கு கூட
வரமுடியாமல்..
விசாவினால் விலங்கிடப்பட்ட
எனக்கு,

யாரேனும் திருப்பித்தரக்கூடுமா?
தந்தையின் இறுதிச்சடங்குக்கு
முந்தைய நாளை?

நிம்மதி இல்லாமல் போகின்ற
இந்த பகலின்..
முந்தைய இரவுக்காக
காத்திருக்கின்றேன்!

யாரேனும் திருப்பித்தாங்களேன்?



- ரசிகவ் ஞானியார்

Thursday, January 25, 2007

ஒரு நிஜ எம்டன்

"எனது தந்தை இருக்கின்றாரே அவர் வீரப்பன் மாதிரி. தான் தவறுகள் செய்துவந்தாலும் தன்னை பிடிக்க தேடி வந்த காவலர்களை சுட்டுக்கொன்றுவிட்டு தன்மீது தவறு இல்லாதவனாய் காட்டிக்கொண்ட வீரப்பன் போலத்தான் என் தந்தையும். இது சரியல்ல என்று தெரிந்தும் அந்த தவறை தெரிந்தே செய்பவன் "


என்னடா பெற்றெடுத்த தந்தையை ஒருமையில் வெறுப்பில் அழைக்கும் அந்த நபர் யார்?


ஒரு பதிவில் ( ஏதாவது செய்யணும் சார்) மகன்களால் விரட்டப்பட்ட தந்தையின் பரிதாப நிலையைப்பற்றி மனம் வருந்தி எழுதியிருந்தேன். அதற்கு எதிர்மாறாக தனது தந்தையின் கொடுமையாலும் ஆதிக்க மனப்பான்மையாலும் வீட்டை விட்டு வெளியேறி வாழ்க்கையோடும் போராடிக்கொண்டிருக்கும் மனிதரைப்பற்றியது இது..?


அவர் பெயர் காஜாமைதீன். வயது 32க்குள் இருக்கும். நல்ல திடகாத்திரமான உடல் அமைப்பு. படிப்பில் ஆர்வமின்றி எட்டாம் வகுப்போடு பள்ளியை முடித்துவிட்டு தந்தையோடு தொழிலில் ஈடுபட்டார். கல்வியறிவுதான் இல்லையென்றாலும் உலக அறிவு அனுபவங்கள் ஏராளம்.


கவிதை இலக்கியத்தில் ஆர்வம் அதிகம். நல்ல கவிதைகளை படித்து பாராட்டும் குணம் உடையவர். மனிதநேயம் பற்றிய கவிதைகள் வாசித்துக் காட்டினால் இவர் கண்களில் கண்ணீர் திரள்கள் வந்துவிடும்


எந்தப்பிரச்சனை என்றாலும் இவரை அணுகினால் அதற்கு ஒரு தீர்வு சொல்லுவார். சட்டரீதியாக எந்த எந்த பிரச்சனைக்கு யார் யார் முறையாக அணுகுவது

அதிகாரத்தில் உள்ளவர்கள் தவறு செய்யும்பொழுது அதனை உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பது

இளைஞர் நல மன்றம் விளையாட்டுத் திடல் சிறுவர் பூங்கா அமைப்பது

இரத்ததான முகாம், இலவச மருத்துவ பரிசோதனை என்று எல்லாவிதமான சமூக சேவைகளும் மக்கள் மனிதநேய அமைப்பு என்ற பெயரில் சமூகத்திற்காக சேவைபுரிந்துகொண்டிருக்கின்றார். இவர் மற்றவர்களுக்கு உதவுகின்ற அளவுக்கு வசதியானவர் அல்ல இருந்தாலும் தன்னால் முடிந்தவரை உதவுபவர்.


யாருக்கேனும் இரத்தம் தேவைப்பட்டால் என்னுடைய தொலைபேசி அழைக்கின்ற முதல் நபர் இவர்தான். உடனே தன்னுடைய குடும்பத்தில் உள்ள அவசரம் போல பம்பரமாய் இயங்குபவர்.


சாலையில் நடந்து செல்லும்பொழுது எந்தப்பகுதியிலாவது அசுத்தமாகி ,துப்புரவு செய்யாமல், கழிவுநீர் ஓடிக்கொண்டிருந்தால், உடனே பேப்பரும் பேனாவும் எடுத்து அதற்குண்டானஅதிகாரிகளிடம் தெரிவிப்பது அல்லது புகைப்படம் எடுத்து பத்திரிக்கைகளுக்கு குறையாக சுட்டிக்காட்டி அனுப்பி வைப்பார்


எந்த விசயத்தைப் பற்றி கேட்டாலும் அழகாய் பதிலளிப்பார். இவர் மட்டும் படித்திருந்தால் இவரின் சேவையால் அவரைச்சுற்றியுள்ள சமூகத்திற்கு இதைவிடவும் ஒரு முக்கிய பங்கு கிடைத்திருக்கும்.


இப்படி சுற்றியுள்ள மக்களால் அன்புக்குரியவராக கருதப்படுகின்ற இவர்தான் சொல்கின்றார் தனது தந்தையைப் பற்றி.


"எனது தந்தை வீரப்பன் மாதிரி... .................................."



சுற்றியுள்ள மக்கள் எல்லாரும் மதிக்கின்றார்கள் ஆனால் பெற்றெடுத்த தந்தையால் புரிந்துகொள்ளமுடியவில்லை. தவறு யார் மீது?


பக்கத்தில் உள்ள பொருளின் மதிப்பை நாம் என்றுமே உணர்வதில்லை. அது நம்மை விட்டு விலகிய பிறகுதான் இழப்பின் வலியை உணருவோம்.


தன்னை அடிமையாகவே வளர்க்க ஆசைப்பட்ட தந்தையின் அடிமைத்தனத்திலிருந்து மீண்டு சுதந்திரமாய் தனிவியாபாரத்தில் ஈடுபட்டு வாழ்க்கையில் வெற்றிக்காக போராடிக்கொண்டிருப்பவர்.


"எங்க அப்பா இருக்காரே ஒரு சாடிஸ்ட்..யாரும் சந்தோஷமா இருக்குறது அவருக்கு பிடிக்காது..ஒரு உதாரணம் சொல்றேன் கேட்டுக்கோங்க.. "

"எனது தங்கையின் கணவர் வெளிநாடு சென்று விட்டு 2 வருடம் கழித்து வந்திருக்கின்றார். அவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கின்றது. எனது தங்கையின் குழந்தை என் வீட்டில் இருக்கின்றது. எனது தங்கை கணவர் வீட்டில் இருந்தாள்.அப்பொழுது எனது தந்தை சொல்லுகின்றார்.. :"


"இந்த குழந்தையை கொண்டு போய் அவர்கிட்டேயே போய் விடுங்க..அப்பத்தான் குழந்தை வளர்ப்போட கஷ்டம் அவருக்கும் தெரியும்.. "


"நல்ல தகப்பனா இருந்தா என்னங்க செய்யணும்? சரி 2 வருடம் கழிச்சி மாப்பிள்ளை வந்துறுக்காரே - மகளும் மாப்பிள்ளையும் சந்தோஷமா இருக்கணும் குழந்தையை கொஞ்சநேரம் நாம வச்சிருப்போங்கிற எண்ணம் வருதா..? "

"யாரும் சந்தோஷமா இருக்குறது அவருக்கு பிடிக்காது.. "

"நம்ம குழந்தை யார் வீட்டு பிள்ளையையோ அடிச்சிட்டு வந்திருக்கு. அடிபட்ட குழந்தையின் சொந்தக்காரங்க வந்தா என்ன பண்ணுவோம் நாம? "

"நம்ம குழந்தையை கண்டிப்போம். இல்லைனா நாம அடிப்போம். இல்லை வலி அதிகம் உணராதபடி அடிப்போம்.ஆனா எங்கப்பன் என்ன பண்ணுனான்னு தெரியுமா.. அடிபட்ட குழந்தைக்கு சொந்தக்காரங்களை விட்டே என்னை அடிக்க வைச்சான்.. இது எங்கேயாவது நடக்குமாங்க..? "


"என்னை இதுநாள் வரைக்கும் ஒரு அடிமைமாதிரிதான் நடத்துனான். எனக்குன்னு ஒரு தனிப்பட்ட முடிவு எடுக்க முடியாது. நல்லதோ கெட்டதோ வியாபாரத்துல அவர் சொல்றபடிதான் கேக்கணும். நான் ஒரு முடிவு சொன்னா அதை அலட்சியப்படுத்திவிடுவார். "

"வியாபார முன்னேற்த்திற்காக நான் சில வழிகள் சொன்னால் அதனை அலட்சியப்படுத்திவிடுவார். "


"எனக்கு கல்யாணமான பிறகு கூட என் பொண்டாட்டிக்கு வடை கூட என்னால வாங்கிக்கொடுக்க முடியாது. அதற்காகவே அவனுக்கு தெரியாம மறைச்சி மறைச்சி கொண்டு வருவேன். மீறி பார்த்துட்டான்னா சத்தம் போட ஆரம்பிச்சுடுவான்.. "


"அது மட்டுமல்ல என்னோட மனைவியை மதிக்கிறதே கிடையாது. வீட்டுக்கு வாழ வந்தவகிட்ட மரியாதையா நடந்துக்க வேண்டாமா..? அவளும் மனுஷிதானுங்க.. "


"இதையெல்லாம் எதிர்த்து கேட்டா வீட்டை விட்டு போகச்சொல்றாரு. நான் ஏன் வீட்டை விட்டு போகணும்? "

"என்னுடைய அம்மாவின் தங்கை திருமணம் ஆகி விவாகரத்து பெற்றுவிட்டார்கள். அவர்களுக்கு இவன் ஒரு இடத்தில் இரண்டாவது திருமணம் செய்து வைக்க முயற்சி செய்தான்."

"சரி நல்லதுதான் பண்றானுன்னு பார்த்தா.. கல்யாணம் பண்ணி வச்சிட்டு எனது அம்மாவின் தங்கைக்கு, தற்போதைய கணவர் தந்த வீட்டை தனது பெயருக்கு மாற்ற முயற்சிக்கின்றார். இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.? "


தந்தையின் தவறான போக்கை எண்ணி மனம் குமுறுகின்றார். தன்னை அடக்கி வைத்த தந்தையின் ஆளுமைக்குள் இருந்து வெளிவரத்துடிப்பவர் தந்தையின் தவறை தட்டிக்கேட்க நினைத்ததால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டவர்.


"நான் செத்து என்னுடைய பாடிதான் இந்த வீட்டை விட்டு போகும். அதுவரைக்கும் இங்கதான் இருப்பேன்னு" ஒரு தடவ ஒரு பையனை விட்டு அவங்க அப்பாகிட்ட சொல்லச்சொன்னாரு.

அந்தப்பையன் போய் சொல்லிட்டு முகம் வெளிறிப்போய் வந்து சொன்னான்


உங்கப்பா சொல்றாரு.:
"செத்தபிறகு வேணுமின்னா உங்க பாடியை வீட்டுக்கு கொண்டுவந்துட்டு அடக்கம் பண்ண அனுப்பலாம்னு சொல்றாருங்க என்று அந்தப்பையன் கூற எனக்கு அவரது தந்தையின் மீது பெரும் வெறுப்பு கிளம்பிற்று. அப்படி என்ன மகன் மீது அந்த அளவிற்கு வெறுப்பு? "
எந்த தந்தையாவது மகனை இப்படிச் சொல்வாங்களாங்க..? என்னு என்னிடம் புலம்பினார் .

உங்க மேல உங்க தந்தைக்கு அப்படியென்னங்க கோவம்?


"என் மேலயா...அய்யய்யோ அவனுடைய குணமே அப்படித்தான்ங்க.. "

"உங்களுக்கு அவனைப்பற்றி தெரியாது "

"என்னை வீட்டை விட்டு போகச்சொன்னான். நான் போகமாட்டேன்னு சொன்னதால எலெக்ட்ரிக் ஆபிஸ் சென்று எங்க வீட்டுல கரண்டை கட் பண்ண வச்சுட்டான்னா பாருங்களேன் எந்த அளவுக்கு மோசமா இருக்கான்னு.? "

ஏன் கரண்ட் போனா அவருக்கும் இடைஞ்சல்தானே..?


"அதான்ங்க..தான் கொசுக்கடியில் இருந்தாலும் சரி நான் சந்தோஷமா இருக்க கூடாது.. அதற்குத்தான் நான் வச்சேன் பாரங்க ஆப்பு.. "

"பக்கத்து வீட்டுல இருந்து என்னுடைய அறைக்கு மட்டும் தனியா கரண்ட் கொடுத்துட்டேன். அது அவனுக்கு எரிச்சலாகி மறுபடியும் புகார் கொடுத்துறுக்கான்.நான் திருட்டுத்தனமா பக்கத்து வீட்டுல இருந்து கரண்ட் எடுக்குறேன்னு.. "

"நான் உடனே எலெக்ட்ரிக் ஆபிஸ் சென்று இது தந்தை - மகன் பிரச்சனைதான் என்று விளக்க வேண்டியதாகிப்போய்விட்டது "


இப்படியெல்லாமாங்க செய்வார் ஒரு தந்தை?


"நிறைய இருக்கு சொல்றதுக்கு. அவர் தீயை பஞ்சை போட்டு அணைக்கும் முயற்சியி-ல் ஈடுபடுறாரு.. தான் போலியாய் வாழ்றதை பெருமையா நினைக்கிறாரு.. "

நான் வேணுமின்னா உங்கப்பாகிட்ட பேசிப்பார்க்கவா..?

"இல்லை வேண்டாம் எனக்காக என்னுடைய நண்பர்கள் அவமானப்படறது எனக்குப்பிடிக்காது "

அவருடை கடைசிகாலத்துல பணத்தை எங்கோ கொண்டுபோகப்போறாரு . நீங்க அவருக்கு ஒரே ஆண்மகன்தானே பின்ன ஏன் இப்படி பண்றாரு?


"அவனுக்கு மகன் தேவையில்லை ஒரு அடிமை தேவை. ஆனால் என்னால் அடிமையாக இருக்க முடியாது. "

என்னை என்னவெல்லாம் சொல்லியிருக்காரு தெரியுமா. ?

"எனக்கு மரியாதை இல்லை. என்னுடைய மனைவிக்கு மரியாதை இல்லை.

அவருடைய ஆளுமைக்குள் அவரைச் சார்ந்து இருக்கிறதால நான் தனியே போய் என்ன பண்ணிறமுடியுமுன்னு கர்வத்துல இருக்காரு. "

"அவர் சொன்ன வார்த்தைகள்தான் என்னை வளர்த்துக் கொண்டிருக்கின்றது. கண்டிப்பா என்னுடைய உழைப்பால நான் முன்னேறிக்காட்டுவேன்" என்று தன் உழைப்பின்மீது உள்ள நம்பிக்கையில் கூறினார்.

அப்பொழுது எனக்கு ஞாபகம் இருந்த பாவிஜய்யின் சில கவிதைகளை சொன்னேன்.


தோல்வியைச் சந்திக்காத யாரையும்

வெற்றிவந்து சந்திக்காது



தோல்வியே அடையாத ஒருவன்

இதுவரை இருந்ததில்லை

தோல்வியோடு மட்டுமே ஒருவன்

இதுவரை இருந்ததில்லை



உனக்குப் பத்துபேரில்

ஒரு எதிரியும் இல்லையென்றால்

நீ முன்னேறவே இல்லை


இந்த தன்னம்பிக்கை வரிகளை நான் எடுத்துச் சொல்லியபொழுது மிகவும் ரசித்தார்.

"போலிஸ்ல போய் புகார் கொடுத்துட்டாரு. அவங்க வந்து என்னய சமாதானப்படுத்தி வீட்டை காலிபண்ணச்சொல்றாங்க.. "

"முன்னாடி ஒரு தடைவை தெரியாத்தனமா பினாமி பெயர்ல வாங்குவதற்குப் பதிலா என் பெயர்ல வீடு வாங்குனதால இப்போ அந்த வீட்டுக்கு நான் போயிட்டேன். "

"இப்போ நான் என் மனைவியையும் என் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தனியே சென்றாலும் என்னுடைய ரேஷன்கார்டை வைத்து பொருட்கள் வாங்கி விற்று வருகின்றார். என்னுடைய ரேஷன்கார்டை திருப்பி தர மறுக்கிறார். "


"நான் உடனே அந்த ரேஷன் கார்டை அவருக்கு தெரியாமல் எடுத்து கேஸ் சிலிண்டர் எனக்கு கேட்டு எழுதி மண்ணெண்ணெய் வேண்டாம்னு சொல்லிட்டேன். இது கூட அவருக்கு சரியான கடுப்பு "


"என்னுடைய நிலைமை என் குழந்தைக்கு வரக்கூடாது. நான் எனது தந்தையை பார்த்து கேட்ட கேள்விகளை என் பையன் என்னைப்பார்த்து கேட்கக்கூடாது. அப்படித்தான் என்னுடைய பையனை நான் வளர்க்கின்றேன் "


"இப்ப நான் என்னுடைய மனைவிக்கு தைரியமா வடை வாங்கி கொண்டுபோக முடியுது "

"வியாபாரத்துல தனிப்பட்ட முடிவு எடுத்து வெற்றிகரமா கொண்டு செல்ல முடியுது "

"அவர விட்டு வரும்பொழுது என்னுடைய பணம் 0 சதவிகிதம் இப்போ கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிட்டு வருகின்றேன். "

"உங்களுக்கு தவளை கதை தெரியுமா ?" என்று ஒரு தவளைக் கதையை சொல்ல ஆரும்பித்தார்


இரண்டு தவளைங்க ஒரு பால் கிண்ணத்துல தவறி விழுந்துடுச்சாம். ஒரு தவளை நினைச்சிதாம் நாம அவ்வளவுதான் இதுல இருந்து வெளியே வரவே முடியாது. இதுலேயே இருந்து செத்துறுவோம். அப்படின்னு நினைச்சு நினைச்சே இறந்துபோயிடுச்சாம்.


இன்னொரு தவளை என்ன பண்ணுச்சாம்..? அந்தப்பால்ல தனது கால்களால அடிச்சி அடிச்சி போராடிக்கொண்டிருந்துச்சாம். அது கால்களால் அடிக்க அடிக்க அந்தப் பால் எல்லாம் வெண்ணெயாய் மாற அந்த வெண்ணெயில் ஏறி தப்பிச்சுடுச்சாம்.


"நானும் அந்த இரண்டாவது தவளை மாதிரி.. போராடிக்கொண்டு இருக்கின்றேன். "

என்று ஒரு அருமையான கதையை அவர் சொல்லி முடித்து தன்னுடைய போராட்டத்தின் வீரியத்தை உணர்த்தியிருக்கிறார் பாருங்களேன்.

இப்பொழுது இவர் தனது தந்தையின் தொழிலான ஜவுளிக்கடையில் இருந்து பிரிந்து தந்தையின் கடை அருகில் தனியாக ஒரு ஜவுளிக்கடையை நடத்திவருகின்றார்.

"இப்ப கூட என்னை அழைத்து நாம ஒண்ணா தொழில் செய்வோம் வா என்று அழைத்தால் சந்தோஷமாக ஒரு நல்ல மகனா நடந்து பொறுப்பை நான் சுமந்து வியாபாரத்தை பெருக்க என்னால் முடியும். ஆனா அவனுக்கு என்னை அடிமைப்படுத்தாத வாழ்க்கை பிடிக்காது. "

சமீபத்தில் வெளியான எம்டன் மகன் படத்தின் கதையை கேட்டு கூட இவர் ஆதங்கப்பட்டார்.

" நாசர் மாதிரி கதாபாத்திரங்கள் ஏன்தான் இருக்காங்களோ? பெத்த மகனை மத்தவங்களுக்கு முன்னால அவமானப்படுத்துறாங்க. ஏன் இப்படி செய்யுறாங்க..? "

இவருடைய தற்போதைய குறிக்கோள் :வியாபாரம் - வெற்றி - முன்னேற்றம் மட்டும்தான்.

அடிமையாக வாழப்பிடிக்கவில்லை என சுயமரியாதையை விட்டுவிடக்கூடாது என்று வாதிட்டு தந்தையால் விரட்டப்பட்டு வாழ்க்கையில் போராடிக்கொண்டிருக்கும் காஜா போன்றவர்களின் போராட்டம் மற்ற இளைஞர்களுக்கு ஒரு நம்பிக்கை.

அவர் வாழ்க்கையில் வெற்றிபெற நாமும் பிரார்த்தித்துக் கொள்வோம்.


- ரசிகவ் ஞானியார்

Tuesday, January 23, 2007

இறைவனின் சிறப்புக் குழந்தைகள்

"அட அநாதைப்பயலே.. "

"நீ ஒரு அநாதைடா.. "


என்று சினிமாத்தனமான வசனங்கள் நிறைய கண்டிருக்கின்றோம். ஆனால் அவ்வாறு சொல்லப்படும்பொழுது அந்த அநாதைகளின் மனநிலை எப்படியிருக்கும்?


Photobucket - Video and Image Hosting

பார்த்திபனின் கிறுக்கல்கள் கவிதைத் தொகுப்பில் ஒரு கவிதை:

இன்னொரு மனிதன்

இருக்கும்வரை

எவனுமே அநாதையில்லை.


இந்த மனிதநேய உணர்வுகள் அனைவருக்கும் வந்துவிட்டால் அநாதைகள் என்ற வார்த்தை அநாதையாகிவிடும்.

தந்தை தாயை இந்தியாவில் விட்டுவிட்டு அயல்தேசத்தில் பணிபுரிபவர்களிடம் கேட்டுப்பார்த்தால் தெரியும் பிரிவின் வலி. வீட்டில் இருக்கும்பொழுது அம்மா சமைத்துக்கொடுப்பதைக் குறைசொல்லிக்கொண்டிருப்பார்கள். ஆனால் அதனை விடவும் திருப்தியில்லாத உணவு கிடைக்கும்பொழுதுதான் அம்மாவின் சமையல் அருமை புரிய ஆரம்பிக்கும்.

குறைசொல்லியே ...
சாப்பிட்ட நான்,
இப்பொழுது
குறைகளை மட்டும்தானம்மா ..
சாப்பிடுகின்றேன்!


கொஞ்சநேரம் அம்மா வீட்டில் இல்லையென்றாலே மனசு என்னவோ மாதிரி இருக்கின்றது. ஆனால் அம்மா அப்பாவே இல்லாத வாழ்க்கை என்பது நினைத்துப்பார்க்கவே முடியாத ஒன்று.

இன்று திருவனந்தபுரம் சென்று விட்டு வரும்பொழுது பாதையில் ஒரு மொட்டை மனிதர் வெயிலில் கிழிந்த அழுக்கு ஆடையணிந்து கையில் வெற்று தண்ணீர் பாட்டிலுடன் நடந்து கொண்டிருந்தார்.

பார்ப்பதற்கு பாவமாய் இருந்தது. நண்பனிடம் காரை நிறுத்தச்சொல்லிவிட்டு கையில் வைத்திருந்த கேக் பொட்டலத்தை அவரிடம் கொடுத்தேன். ஆவலுடன் வாங்கி தின்று கொண்டே அந்த கடும் வெயிலில் நடந்து சென்றார். ஆனால் அடுத்தவேளை உணவுக்கு அவருக்கு யார் கொடுப்பது? எங்கு செல்வார்?

நான் கொஞ்சநேரம் உணவருந்த தாமதமாகிவிட்டாலே அம்மாவின் குரல் ஓங்கி கேட்க ஆரம்பித்துவிடும்

"அங்க என்னடா பண்றே..வந்து சாப்பிடுடா "

"டேய் என்னடா இன்னமுமா சாப்பிடலை.."

நமக்கு பசிக்குமோ, இல்லையோ? நம்முடைய பசியை தாங்கிக்கொள்ளும் சக்தி எந்த தாய்க்கும் கிடையாது.

ஆனால் அந்த மொட்டை மனிதர் சாப்பிட தாமதமாகி விட்டாலோ அல்லது சாப்பாடே கிடைக்கவில்லையெனில் அவருக்கு யார் வந்து கேட்ககூடுமோ..?

"தாயின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்.

இறைவன் தான் எங்கும் வந்துகொண்டிருக்கமுடியாது என்றுதான் அன்னையை படைத்ததாக தாயின் பெருமையைப்பற்றி சிறப்பித்துக் கூறுவார்கள்.

ஆனால் இறைவன் தாயில்லாமல் இருப்பவர்களுக்கு தானே நேரடிக் கண்காணிப்பில் வைத்திருக்கின்றானோ..?

உடல் ஊனமுற்றவர்களை, மாற்றுத்திறன் உடையவர்கள் என்று அழைப்பது போல அநாதைகளை, அநாதைகள் என்று அழைக்காதீர்கள், இறைவனின் சிறப்புக் குழந்தைகள் என்று அழையுங்களேன் ப்ளீஸ்..


"இறைவனின் சிறப்புக்குழந்தைகள் காப்பகம் "

"டேய்! நீ அப்பா அம்மா இல்லாத இறைவனின் சிறப்புக் குழந்தைடா "


என்று சொல்ல ஆரம்பித்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும் எண்ணிப்பாருங்கள்.? யாரிடம் முறையிட்டு இவற்றை மாற்றச் சொல்வது?

அது மட்டுமல்ல இதுபோன்ற வெளியில் திரிகின்ற இறைவனின் சிறப்புக் குழந்தைகளை அரசாங்கம் கவனித்து அவர்களுக்கு ஏதேனும் தொழில் கற்றுக்கொடுக்கலாமே..?



-ரசிகவ் ஞானியார்

Sunday, January 21, 2007

ஏதாவது செய்யுங்க அன்புமணி அய்யா..?



Photobucket - Video and Image Hosting
மந்ருந்ந்ந்துந்ச்ந் சீந்ட்ந்டுந்


"என்னடா என்ன எழுதியிருக்கான்னு குழப்பமா இருக்கா? மருந்து சீட்டுங்கிறதான் இப்படி எழுதியிருக்கேன்பா.. "


நேற்று எனது உறவினரின் ஒருவருக்கு மாத்திரைகள் வாங்குவதற்கா மருத்துவர் எழுதிக்கொடுத்த கோழிக்கிறுக்கல்களை எடுத்துக்கொண்டு பார்மஸிக்குச் சென்றேன்.


அவன் பார்த்த உடனையே 2 மாத்திரைகள் எடுத்துக் கொடுத்தான்.


"ஹலோ என்ன தந்திருக்கீங்க "


"குரோசின் சார் அதானே எழுதியிருக்கு "


"குரோசின் இல்லைங்க நல்லா படிச்சுப் பாருங்க..குராடன்" - வேறு ஒரு மருந்து எழுதப்பட்டிருந்தது.


"அய்யோ! சாரி சாரிங்க அவங்க அதுமாதிரிதான் எழுதியிருக்காங்க என்ன செய்ய? "என்று மாத்திக் கொடுத்தார்


னக்கு மருந்து கடைக்காரர் மீது ஆத்திரம் வரவேயில்லை. மாறாக அதனை எழுதிக்கொடுத்த டாக்டர்மீதுதான் கோபமாக வந்தது.

டாக்டர்னா என்னங்க கொம்பா முளைச்சிருக்கு? ஏன் இப்படி கோழி கிறுக்குற மாதிரி கிறுக்குறாங்க.. இல்லை அவங்க மருத்துவ படிப்பில் ஏதேனும் சட்டதிட்டம் இருக்கா..இப்படித்தான் எழுதணும்னு? ஒழுங்கா தெளிவா எழுதுன அவங்க கௌரவம் குறைஞ்சாங்க போயிடும்.

Photobucket - Video and Image Hosting

ல்லை மருத்துவக் கல்லூரிக்கும் கோழிகளுக்கும் கையெழுத்து விசயத்தில் பரஸ்பர ஒப்பந்தம் பண்ணியிருக்காங்களோ..? அல்லது அவங்க எல்கேஜியில எழுத பழகியதை இன்னமும் மறக்காமல் இருக்கின்றார்களா?


ரு டாக்டர் இப்படி எழுதுனா சரி கையெழுத்து அப்படி என்று அவர் தலையெழுத்தை நொந்து கொள்ளலாம் . ஆனால் சொல்லிவைத்தாற்போன்று எல்லா மருத்துவர்களும் இப்படித்தான் எழுதுறாங்க..

து மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட விசயங்க..அதனால மருத்துவர்கள் எல்லாம் கவனமா எழுதிக் கொடுக்கணுங்குறதுதான் என்னோட கோரிக்கை..

ரு திரைப்படத்தில் மருத்துவக் கல்லூரி மாணவனாக நடித்த விவேக் ஒரு காட்சியில்

"அய்யா என்னய்யா எழுதியிருக்கீங்க ஒண்ணுமே புரியமாட்டேங்குது ? "


"சும்மா விக்ஸ்ங்கிறதத்தான்டா அப்படி சுத்தி சுத்தி
எழுதியிருக்கின்னு."

இது நகைச்சுவையாக அவர் சொன்னாலும் சிந்திக்க வேண்டிய விசயம். அப்படி எழுதுனாத்தான் மக்கள் அவரை ஒரு பக்குவப்பட்ட மருத்துவராக ஏற்றுக்கொள்வார்களோ..?


நான் கூட ஒரு கவிதையில் குறிப்பிட்டிருந்தேன்


மெடிக்கல் ரெப்பின் காதல் கவிதை


கடைசி வரை புரியவேயில்லையடி ...

உனது
காதல் !

அந்த

டாக்டரின் கையெழுத்துப்போலவே !



இப்படி கோழிகிறுக்கல்களினால் என்றேனும் பயங்கர உயிர்ப்பலிகள் நேர்ந்தவுடன்தான் அரசாங்கம் இதனைக் கவனிக்குமோ?


எதுக்கெல்லாமோ போராடுறாங்க..இதுக்கு மக்கள் எல்லாம் ஒன்று கூடி போராடக்கூடாதாங்க..


ஏதாவது செய்யுங்க அன்புமணி அய்யா..?



- ரசிகவ் ஞானியார்.

Thursday, January 18, 2007

தயவுசெய்து வாங்கிக்கோங்க

ன்னோட பதிவுகள் எல்லாம் புடிக்கலைய்யா... அப்படியே கீழே வாங்க....

::
::

::
::

::
::

::
::

::
::

::
::

::
::

::
::

::
::

::
::

::
::

Photobucket - Video and Image Hosting

நல்லாயிருக்குன்னு சொல்லு சொல்லுவியா..சொல்லுவியா...


- ரசிகவ் ஞானியார்

Tuesday, January 16, 2007

எண்(ன்) குழப்பம்


Photobucket - Video and Image Hosting



ன்று வங்கியில் பணம் எடுப்பதற்காக சென்று செக்கில் One Hundred Thousand Only (100,000/-) என்று எழுதி அவர்களிடம் கொடுத்தேன். வாங்கிய அதிகாரி ஏதோ நான் கொலைக்குற்றம் செய்தது போல குதிக்கிறார்.

ந்தச் செக்கை பக்கத்தில் உள்ள அதிகாரியிடம் கொடுத்து விவாதிக்கின்றார். அவர் அவருக்கு பக்கத்தில் உள்ள பெண் ஊழியரிடம் காண்பித்த நக்கலாகச் சிரிக்கிறார்.


"இல்லை சார் திருப்பிக் கொடுத்துறுங்க.. "


"இது என்ன இப்படி எழுதியிருக்காங்க" என்று ஆளாளுக்கு சத்தம் போட நான்


"சார்.. சார்ர்ர்.. என்று கத்தினேன்.


என்னடா வங்கியில் இப்படி கத்துகிறார் என்று அவர்கள் திரும்பி பார்க்க.


"வெளிநாடுகளில் எல்லாம் இப்படித்தான் சார் எழுவாங்க..அதான் அப்படி எழுதிட்டேன். "- என்று கூறினேன்


"எந்த நாடு சார்? "


"துபாய்ல .."


"நீங்க இப்ப இந்தியால இருக்கீங்க சார் முதல்ல இந்தியாவுக்கு வாங்க..? "


"அப்படின்னா நான் பணத்தை வங்கியில் போடும்பொழுது இருந்த செக்கில் இப்படித்தானே எழுதியிருந்துச்சு அப்ப யாரும் ஒண்ணுமே சொல்லலையே. பணம் போடும்போது கண்டுக்கமாட்டீங்க..எடுக்கும்போது மட்டும் நக்கலா பார்க்குறீங்க..இது என்ன நியாயம் சார்? "


"அந்த செக் துபாய்ல இருந்து வந்ததுனால அவங்க வழக்கப்படி எழுதியிருக்காங்க.." என்று விளக்கமளித்தார்.


ப்படியோ விவாதத்திற்குப் பிறகு பணத்தைக் கொடுத்துவிட்டார்கள். பணத்தைப்பெற்றுக்கொண்டு நக்கலடித்த ஊழியர்களைப் பார்த்து லேசாய் புன்னகை சிந்திவிட்டு நகர்ந்தேன்.


ப்படியே கண்களுக்கு முன்னால் ஒரு கொசுவர்த்தி சுருள் ஒன்று வலம் வருகின்றது. அதான்ங்க ப்ளாஷ்பேக்..

Photobucket - Video and Image Hosting


நான் துபாயில் வேலைக்கு சேர்ந்தபொழுது இதே பிரச்சனை ஏற்பட்டது
யாருக்கோ பணம் கொடுப்பதற்காக சுமார் 2,50,000 பணத்தை Two Lakhs Fifty Thousand என்று எழுதினேன்.


ப்புதல் வாங்குவதற்காக மேலாளரிடம் கொண்டு சென்றபொழுது அந்த எகிப்து மேலாளர் என்னைக் கடிச்சித் துப்பிட்டாருப்பா..


"என்ன எழுதியிருக்கீங்க ?"


" சரியாத்தானே எழுதியிருக்கேன்" என்று மறுபடியும் நான் எழுதியதை சரிபார்த்தேன்.


"இது என்ன Lakhs ..?"என்று விநோதமாய் கேட்டார்


ன்னடா முட்டாப்பசங்களா இருக்காங்க லட்சம்னா என்னன்னு தெரியாதா இவங்களுக்கு என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு 2 லட்சம் என்று விளக்கினேன்.


ஒன்றுமே பேசவில்லை சரியாய் எழுதிவிட்டு வருமாறு கூறினார்.


நான் குழப்பத்துடன் வந்து அமர்ந்தேன். எதைத் திருத்தச் சொல்றார். ஒருவேளை ( , )கமா எதுவும் போடாமல் விட்டுவிட்டோமா என்று பார்த்தேன் சரியாகத்தான் போட்டிருந்தேன்.

னது அலுவலகத்தில் வேலை பார்க்கும் இந்திய நண்பரிடம் கேட்டேன்.
அவர்தான் விளக்கினார். "இவங்க இப்படி எழுதமாட்டாங்க என்று Two Hundred Fifty Thousand என்று எழுதிக்காட்டினார்.


ப்பொழுதான் எனக்கு விளங்கியது அட இவனுங்க லட்சத்தை உபயோகிக்க மாட்டங்க என்று. லட்சத்தையெல்லாம் ஆயிரத்தில் தான் உச்சரிக்கின்றார்கள். லட்சம் என்பது இந்தியாவில் மட்டும்தானா? இல்லை மற்ற நாடுகள் எங்கேனும் கடைப்பிடிக்கின்றார்களா? யாராவது சொல்லுங்களேன்.



- ரசிகவ் ஞானியார்

Friday, January 12, 2007

விடைபெறுகின்றேன்

Photobucket - Video and Image Hosting

ன்
சந்திப்பினால் வருகின்ற
சந்தோஷங்கள் எல்லாம் ...
விடைபெறும் பொழுது
விலகி விடுகின்றது !

வ்வொரு விடைபெறுதலும்
நம் சந்திப்பின்
சாட்சியாக இருப்பதால் ......

ன்னை
சந்திப்பதை காட்டிலும் ...
விடைபெறுதலிலையே
விருப்பம் அதிகம்!

கவே
விடைபெறுகின்றேன்!

- ரசிகவ் ஞானியார்

என் இனிய ஜனநாயக எண்ணெய் வியாபாரியே

Photobucket - Video and Image Hosting

ன் இனிய
ஜனநாயக எண்ணெய் வியாபாரியே!

ன்
கறுப்படைந்த கலாச்சாரத்தில்..
தூக்குதண்டனைதான்
ராஜ உபசாரமா?

ன்
எண்ணெய் வியாபாரத்திற்கு..
இன்னொரு பெயர்
ஜனநாயகமா?

தூக்கிலிடப்பட்டது..
சதாம் மட்டுமல்ல
உன்னுடைய பாதுகாப்பும்தான்!

வன் விளையாடி மகிழ்ந்த
சிறுவயதுக் கோலிக்குண்டுகள்..
உன்
அசுரப்பார்வைக்கு ஏன்..
அணுகுண்டாய் தெரிந்தது?

Photobucket - Video and Image Hosting

ரணத்தை அவன் ..
மகிழ்ச்சியோடு அழைத்தான்!
மரணபயத்தை நீ..
கறுப்புத்துணி அணிந்து
மறைத்தாய்!

வளையை தொண்டைக்குள்
தக்கவைத்த
பாம்பு எப்படி..
பச்சாதாபம் காட்டும்?

ந்த சரித்திரத்தையும்..
ஒரு
மரணம் வந்து
முடித்துவிடாது!

வன்
உயிர் பிரிந்தது
இறப்பு அல்ல!
அது
கண்களுக்கு மறைக்கப்பட்ட
உயிர்பித்தல்!


வன்
மரணிக்கும்பொழுது விட்ட
கடைசி மூச்சுக்காற்று...
இன்னமும்
ஈராக்கில்தான் சுற்றிக்கொண்டிருக்கிறதாம்!

னது
சாம்ராஜ்யம்
சமுத்திரமாகிவிட்டதாக நினைக்கின்றாய்!
ஆனால் புரிந்துகொள்
உனது
பாதுகாப்புதான்..
பனித்துளியாகிவிட்டது!


தீவிரவாதி என்று
நீ
பட்டம் சூட்டியவன்..
தியாகியாகிவிட்டான்!

தியாகி போல நடிக்கின்ற ..
நீ
தீவிரவாதியாகிவிட்டாய்!

ப்பாவிகளைக் கொன்றதற்கு
மரணதண்டனையா?
ஒத்துக்கொள்கிறேன்
ஆனால்
உனக்கான தூக்குக்கயிறு
சதாமின்
காலடியில் அல்லவா
கண்டுபிடித்திருக்க வேண்டும்!

ராக்கில் நீ வெட்டிய
ஒவ்வொரு
பதுங்குகுழிக்குப்
பக்கத்திலும்
உனக்கும் ஒரு குழி
தோண்டப்பட்டது ..
உன்
சாட்டிலைட்டுக்கு தெரியவில்லையா?

தாமின்
புதைகுழியில் இருந்து
புறப்படுகின்ற..
புற்களை வெட்டிவிடு!
யாருக்குத் தெரியும்?
அதிலிருந்து கூட உனக்கு
ஆயுதம் தயாராகலாம்!

னக்கு
குண்டு போட்டு
குண்டு போட்டு..
களைத்துவிட்டது!
எங்களுக்கு
செத்து செத்து..
சோர்வாகிவிட்டது!

Photobucket - Video and Image Hosting

புஷ்ஷே!
எந்த புத்தாண்டில் ...
நீ சபதம் எடுக்கப்போகின்றாய்?
மனிதனாய் மாறப்போவதாக!

தாமைப்போலவே
இந்தக் கவிதையும்
முடிந்துவிட்டது
ஆனால்
முற்றுப்பெறவில்லை........


- ரசிகவ் ஞானியார்

Tuesday, January 09, 2007

கொஞ்சும் வலி

Photobucket - Video and Image Hosting

ன்
ஞாபகக்கொசு
கடித்துவிட்டுச் சென்றதில்
என் இதயமெல்லாம்
காதல் என்னும்
சிக்கன் குனியா..

- ரசிகவ் ஞானியார்

Friday, January 05, 2007

ஏதாவது செய்யணும் சார்..?



"ம்பி கோர்ட்டுக்கு எப்படி போகணும்..?"

சுமார் 70 வயது இருக்கும் அந்தப் பெரியவர்க்கு. அழுக்கு ஆடையணிந்தாலும் கண்ணியமான தோற்றம். கையில் ஒரு பாலிதீன் பை.

"ந்த ரோட்டுல நேராக போனீங்கன்னா ஒரு ரோடு வரும். அங்கிருந்து பஸ்ல போகணும்..பக்கம்தான் ரெண்டு ஸ்டாப்புக்கு பிறகு இறங்கிருங்க.. "

என்று சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே தனது பெரிய பாலிதீன் பையை சரிப்படுத்திக்கொண்டு நான் கூறியதை காதில் வாங்கியும், வாங்காததுமாய் நான் சுட்டிக்காட்டிய திசையைநோக்கி மெதுவாய் நடக்க ஆரம்பித்தார்

டக்க முடியாமல் அவர் விந்தி நடக்கின்றதைப்பார்த்து இதயம் லேசாய் சிந்தியது உடனே அவரை அழைத்தேன்..

"லோ என் வண்டியில வாங்க நான் உங்களை அந்த ஸ்டாப்புல இறக்கி விடுறேன்" என்று நான் அவரை அழைத்தேன்..

ப்படி யாராவது சொல்ல மாட்டார்களா? என்று ஏங்கியது போல் ஒரு பார்வை பார்த்து தனது வயதுக்குண்டான முக சுருக்கங்களில் மலர்ச்சி அரும்ப என்னை நோக்கி வந்தார்

பார்ப்பதற்கு பாவமான தோற்றம். முகத்தினில் அனுபவம் கலந்த முதிர்ச்சி. பார்வையில் ஒரு விதமான ஏக்கம்.

என் அருகே வந்து எனது வண்டியில் ஏறிக்கொண்டார். கண்களில் லேசாய் திரண்டிருக்கும் நீர்த்துளிகளோடு

"ம்பி ரொம்ப நன்றிப்பா.. என்னால உங்களுக்கு தொந்தரவு..
நான் சங்கரன்கோவிலில் இருந்து வருகின்றேன்.."
என்றார்

"ம்.."என்றேன்;.

"நான் நல்லா வாழ்ந்தவன்பா..இப்படியெல்லாம் வாழணும்னு தலை விதி"
என்று அவர் நொந்து புலம்பும்பொழுதே தெரிந்துகொண்டேன். அவர் மனதில் ஆழமாய் ஏதோ ஒரு சோகம் ஓடிக்கொண்டிருக்கின்றது.

"ஏன் என்ன ஆச்சுங்க..?" மெல்ல கேட்டேன்

"ன்னுடைய பசங்களால இப்படி ஆயிட்டேன். யாருமே என்னை கவனிக்கறது இல்லைப்பா.." அழுகுற தொனியில் கூறினார்

"ங்க பசங்க என்ன பண்றாங்க..?" ஆறுதலாய் கேட்டேன்

"ம் பொறுப்பத்த பயலுவ.. மனுசங்களா அவங்க.." என்று திட்டினார்

நான் இதனை எதிர்பார்த்தேன்.
"ஏன்..? அவங்க உதவுறது இல்லையா..? "

"வங்கவங்க நல்லா வாழுறானுங்க..என்னைய தனியா விட்டுட்டானுங்க.." என்று ஏக்கத்தோடும் ஒருவிதமான சலிப்போடும் கூறியபடி தொடர்ந்தார்

"நான் டிப்ளமோ சிவில் படிச்சேன்..பெங்களுர்ல நல்ல வேலை -கை நிறைய சம்பளம் அதுமட்டுமல்ல மிலிட்டரியில வேற கொஞ்ச நாள் சர்வீஸ் பண்ணினேன்..
நான். நடந்ததே இல்லைப்பா எங்கே போனாலும் கார்தான்....இப்ப பாவிங்க நடக்க வச்சுட்டானுங்க.."

புரிந்துகொண்டேன் ஒரு காலத்தில் நல்லா வாழ்ந்தவர். இப்போ வயதானவுடன் மகன்களின் ஆதரவு கிடைக்காமல் துரத்திவிடப்பட்டவர் என்று.

"எதுக்கு கோர்ட்டுக்கு போறீங்க..?"

"ரு வழக்கு சம்பந்தமாக மனு ஒன்று கேட்டேன். அனுப்புறேன்னு சொன்னவங்க இழுத்தடிக்குறாங்கப்பா அதான் நேர்ல வந்து பார்க்கலாம்னு வந்தேன்.."

ன்ன வழக்கு என்று சொல்ல மறுக்கின்றார். சரி எதற்கு நோண்டி நோண்டி கேட்க வேண்டும் என விட்டுவிட்டேன். பின் அவர் இறங்க வேண்டிய இடம் நெருங்கும்பொழுது

"ப்பா..யப்பா.. இப்படி பண்ணிட்டாங்களே நல்லா வாழ்ந்தேனே" என்று புலம்பிக்கொண்டே வந்தார். ஒருவித ஏக்கத்தில் குரல் பிசிறிப்போய் அவர் அப்படி கூறியது எனக்கு மனசே சரியில்லாமல் போனது..

வரைப் பார்க்கின்ற வழிப்போக்கர்கள் கூட பரிதாப்பட்டு அவருக்கு ஏதாவது உதவவேண்டும் என்று நினைப்பார்கள். அந்த அளவிற்கு அமைதியான முகம். ஆனால் அவருடைய மகன்களுக்கு எப்படி மனசு வந்தது இவரை அநாதையாக்குவதற்கு? அவரின் மகன்களின் மீது கோபம் கோபமாய் வந்தது.

"ங்கே இறங்கிக்கோங்க..தூத்துக்குடி வண்டி வரும் அதில ஏறி நீதிமன்றம்னு சொல்லுங்க இறக்கி விட்டுறுவாங்க.."என்று சொன்னேன்..

அவரும் மெதுவாய் இறங்கினார்.

"கால் விளங்காம போயிடுச்சுப்பா அதான் இறங்குவதற்கு சிரமமா இருக்கு" என்று சொல்லியபடி மெதுவாய் இறங்கினார்..

திரும்பி பார்த்தேன்
விந்தி விந்தி நடக்கின்றது
அவருடைய
கால்களும் கனவுகளும்.


விளங்காமல் போனது அவருடைய கால்கள் அல்ல, அவருடைய மகன்கள்தான் என்று மனசுக்குள் எண்ணிக்கொண்டு அப்பொழுது கடந்து போன மணல்லாரியை விடவும் அதிகமான மனபாரத்தோடு விடைபெற்றேன்.

ந்தப்பெரியவரைப்போல எத்தனையோ பேர் சொந்த மகன்களால் துரத்தப்பட்டு வீதியில் அலைந்து கொண்டிருக்கின்றார்கள்.

ரு காலத்தில் நன்றாக வாழ்ந்து, குழந்தைகளை கள்ளம் கபடமில்லாமல் கொஞ்சி மகிழ்ந்து , தன்னுடைய வருமானத்தில் முக்கால்வாசியை குழந்தைகளின் படிப்புக்காய் செலவிட்டு, அவர்களை முன்னேறவிட்டுவிட்ட பிறகு கடைசிகாலங்களில் அவர்கள் தங்களை காப்பாற்றுவார்கள் என்று எண்ணிய அவர்களது கனவுகளில் மண்ணை அள்ளி வீசுகின்றார்கள் மகன்கள்.

வனுங்கள எல்லாம் தேசத்துரோகிகள் என்று தூக்குத்தண்டனை கொடுத்தால்தான் என்ன..?

நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த

நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்....



னைவியை அடித்தால் தண்டனை என்ற சட்டத்தைப்போல தந்தையை அல்லது தாயை வீட்டை விட்டு விரட்டிய மகன்களுக்கும் தண்டனை தரவேண்டும் என்று ஒரு சட்டம் இயற்றக்கூடாதா..?

கண்டிப்பா ஏதாவது செய்யணும் சார்?



- ரசிகவ் ஞானியார்

Saturday, December 23, 2006

தன்னம்பிக்கையின் மனித வடிவம்

3 மாதத்திற்கு முன் புதுமைப்பித்தனின் நூற்றாண்டு விழா ஒன்றிற்கு செல்ல நேரிட்டது. அதில் நான் சந்தித்த ஒரு கண்தெரியாத நண்பரைப்பற்றிய ஒரு நினைவு.

ரு கண்தெரியாத மாணவர் ஒருவரை இன்னொரு மாணவர் அழைத்து வந்து ஒரு இருக்கையில் அமர வைத்தார். எனக்கு குறிப்பு எழுதுவதற்கு பேப்பர் தேவைப்பட்டதால் அந்த கண்தெரியாத மாணவர் வைத்திருந்த நோட்டுப்புத்தகத்தில் இருந்து கிழித்துக்கொள்ளலாம் என்று நினைத்து அவர் அருகே சென்று அமர்ந்தேன்.

அவரிடம் மெல்ல கேட்டேன். "உங்க நோட்டிலிருந்து சில பேப்பர்ஸ் தரமுடியுமா? நான் கொஞ்சம் குறிப்பெடுக்க வேண்டும்"

அவரும் "இதோ கிழித்துக்கொள்ளுங்கள் ஆனால் பிசிறில்லாமல் இருக்கட்டும் " என்று நோட்டுப்புத்தகத்தை தந்தார். பிசிறில்லாமல்..எவ்வளவு சுத்தமான தமிழ்..

நோட்டுப்புத்தகத்தை திறந்தபொழுது எழுதப்பட்டுள்ள கவிதைகள் என்னைக் கவர்ந்தது.

நீங்க கவிதை எழுதுவீங்களா.?

"ஆமா கொஞ்சம் கொஞ்சம் எழுதுவேன்..மனசுல தோன்றியதை யாரிடம் சொல்லமுடியும்..ஆகவே என் மனதின் வடிகால் கவிதை" என்று கூறினார்

வரைப்பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் இன்னமும் அதிகமாயிற்று. "படிக்கலாமா" என்று அனுமதி கேட்டு படிக்க ஆரம்பித்தேன். கவிதைகள் புரிவதற்கு கொஞ்சம் சிரமமாக இருந்தது.

அதில் ஒரு கவிதை இதோ:

காலம் தன்னை
நீட்டியும் குறுக்கியும்
பாதை எங்கிலும் விரிய

இவ்வளவு பொய்க்காசுகள்
எப்படியோ இவர்களால்
அள்ளி வரமுடிகிறது

கலை ததும்பும்
சித்திரக்கோட்டைகளை
அப்பட்டமாக பேரம்பேசும்
சில்லறைப்பேச்சுகளை
பதியம் போட்ட
எனது ப்ரியமான ஏடுகளை
எந்த நிபந்தனையும் அற்ற
தீயிடம் சமர்ப்பிக்கின்றேன்

இப்படிக்கு
சாம்பல் தூதன்


அவரிடம் மெல்லக் கேட்டேன்.

இந்தக் கவிதைக்கு அர்த்தம் என்ன என்று?

"விதை எனக்கும் உலகத்திற்கும் உள்ள விசயம். உலகம் என்னை எப்படி புரிந்து கொள்கிறது என்பதை கவிதையின் மூலமாக வெளிப்படுத்துகின்றேன் " என்றார்.

சம்பந்தமில்லாமல் பதில் அளிக்கிறாரா இல்லை எனக்குத்தான் அவர் சொல்வது புரியவில்லையா? என்று தெரியாமல் பக்கத்தில் உள்ள நண்பர் ஷாபியிடம் கேட்டேன்.

" என்ன ஷாபி ? இந்தக் கவிதையின் அர்த்தம் என்ன..? "

"எல்லாருமே பொய்யர்களாகவே இருக்கின்றார்கள். யாருமே என்னை புரிந்து கொள்ளவில்லை " என்பதைத்தான் இந்தக்கவிதையில் சொல்லியிருக்கின்றார் என்று சுருக்கமாக கூறி முடித்துவிட்டார்.

நீங்க எங்க படிக்கிறீங்க..?

ரமேஷிடம் மெல்லக் கேட்டேன்..
"எம்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயில்கின்றேன் என்றார்"

ஏதாவது புத்தகம் போட்டிருக்கீங்களா..?

"ம் இரவின் உயரம் என்ற ஒரே ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கின்றேன்.."


அப்பொழுது விழா ஆரம்பிப்பதற்குண்டான சலசலப்புகள் அதிகமாகியதால் அவரிடம் பேச்சைக் குறைத்துக்கொண்டு விழாவில் கவனம் செலுத்தினேன்.

விழா முடியும் தருவாயில் அந்த கண்தெரியாத மாணவர் ரமேஷ் என்னிடம் தன்னை வாசற்படி வரை கொண்டு வந்து விடுமாறு கேட்டுக்கொள்ள நான் அவரை கைப்பிடித்து அழைத்துச் சென்றேன். போகும் வழியில் அவரிடம் ஒரு சின்ன பேட்டி.

உங்க வீட்டுல எத்தனை பேர்?

"3 பேருங்க 1 அண்ணன் 1 தம்பி"

அவங்க என்ன பண்றாங்க?

"அண்ணன் டாக்டர் -- தம்பி ஊர்ல படிக்கின்றான்"

பெற்றோர்?

"அப்பா கோழி வியாபாரம்
அம்மா பால் வியாபாரம்
நான் புத்தக வியாபாரம்"

ஏன்? அப்பா அம்மா பணம் அனுப்ப மாட்டாங்களா?

"அவங்க கை அந்த அளவுக்கு நீளமில்லை "( அழகாய் பதில் அளித்தார்)

நீங்க ஊர்லையே இருக்க வேண்டியதுதானே?

"பெற்றோர்கள் உதவுவதே இல்லை. அவர்களுக்கு சரியான திட்டமிடுதல் கிடையாது. அவர்கள் தேடலில் மூழ்கி விட்டார்கள் . பொறுப்பில்லை "

என்று பதில் சொல்லிக்கொண்டே வந்தவர் தேவநேயப்பாவாணர் நூலகத்தின் வெளியே வந்ததும் "நீங்க போங்க சார் நான் இனிமேல் போயிருவேன் " என்றர்.

"இல்லை ரோட்டை க்ராஸ் பண்ணித்தானே போகனும். நான் அந்த பஸ் ஸ்டாப் வரைக்கும் வந்து விடுறேன்" என்று கூறி பேட்டியை தொடர்ந்தேன்.

"அப்பப்ப பணம் அனுப்புவாங்க..யு. ஜி வரைக்கும் படிக்க வச்சாங்க..அதுக்குப்புறம் நான்தான் பார்த்துக்குறேன்.."

"வீட்டுக்குப் போனா சாப்பாடு கிடைக்கும். ஆனா மரியாதை...?"

என்று அவர் சொல்லிக்கொண்டிருப்பதை கண்ணீரோடு கவனித்தேன்.
அப்ப அண்ணன் டாக்டர்னு சொன்னீங்க..?

"ஆமா..கண் தெரியாத எனக்கு செலவழிச்சா நான் காப்பாத்துவேனான்னு அவர்களுக்கு சந்தேகம் . அதனால அண்ணனை மட்டும் படிக்க வச்சாங்க.."

"அவனுக்கு அங்க கடன் அதிகம் .. அவன் பணம் அனுப்ப முடியாது.."

"என்செலவுக்கு நானே உழைக்கின்றேன். நாம பெரியாரோட சுயமரியாதை புத்தகமெல்லாம் படிக்கின்றோம் மத்தவங்கிட்ட கைநீட்ட முடியுமா..? சுயமரியாதை என்னாகுறது..?" என்று தான் வார விடுமுறையில் இரயிலில் புத்தகம் விற்பதாக கூறினார்.

அவரை கைப்பிடித்து அழைத்து வரும்பொழுது வாசற்படிகளிலும் சாலையிலும் இரண்டு முறை தடுமாறி விழப்பார்த்தேன் நான்.

அவரோ "பார்த்து வாங்க சார் இங்கே ஒரு மேடு இருக்கும்" என்று என்னிடம் கூறி என்னை பார்வையில்லாதவனாக்கினார். அவர் என் கைப்பிடித்தாலும் வெகு அலட்சியமாக நடந்து வந்ததை கண்டு ஆச்சர்யப்பட்டேன்.


பேருந்து நிலையம் வந்ததும் கூட்ட நெரிசல் உள்ள ஒரு பேருந்தில் அவரை ஏற்றிவிட அவர் நான் நின்றிருந்த திசையை நோக்கி டாட்டா காட்டிவிட்டு சென்றுகொண்டிருந்தார்.

எனக்கு நம்பிக்கை என்ற வார்த்தைகள் முழு உருவமாகி விழாவுக்கு வந்து விட்டு
சென்றதைப் போல ஒரு உணர்வு.


இதுதான் அவருயை தொலைபேசி எண்
"மு. ரமேஷ் - 9942191838 . "

யாரேனும் எந்த வகையிலாவது அவருக்கு உதவ முடிந்தால் உதவுங்களேன்.

அவருடைய கவிதைக்கு வாழ்த்தோ அல்லது தனியாக இரயிலில் புத்தகம் விற்று சம்பாதிக்கும் அவருடைய தன்னம்பிக்கையை பாராட்டியோ பேசுங்களேன். அவர் கொஞ்சம் உற்சாகமடையக்கூடும்.

- ரசிகவ் ஞானியார்

Wednesday, December 20, 2006

புதுமைப்பித்தன் நூற்றாண்டு விழா


இடம் : தேவநேயப்பாவாணர் நூலக அரங்கம் - மௌண்ட் ரோடு -
சென்னை
நாள் : 10.09.2006 ஞாயிற்றுக்கிழமை

நேரம் : 3.30 மணி


தமிழ்நாடு கலை இலக்கியப்பேரவை நடத்தும் "புதுமைப்பித்தன் நூற்றாண்டு விழா "

என்ற அறிவிப்பை திணமணியில் கண்டதும் நண்பர் ஷாபியும் நானும் அந்த விழாவுக்கு செல்ல வேண்டும் என திட்டமிட்டோம்.

சென்னையில் சுற்றிப்பார்க்க அல்லது பொழுதுபோக்க எத்தனையோ இடங்கள் இருக்க நாங்கள் இந்த விழாவுக்கு செல்ல முடிவெடுத்தது சென்னை இரைச்சல்களிலிருந்து தப்பித்து இதயத்திற்கு அமைதி கொடுப்பதற்கும் முக்காடு போட்டு தன்னை மறைத்துக்கொண்டு பைக்கில் பறக்கின்ற பார்த்துப் பார்த்துச் சலித்துப் போன சில புனிதமான காதல் காட்சிகளை விட்டு தப்பிப்பதற்கும் மன அமைதிக்காகவும் மற்றும் அந்த விழாவுக்கு வரப்போகின்ற முதுபெரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களைச் சந்திப்பதற்காகவும்தான்.

ரியாக 3.30 மணிக்கு தேவநேயப்பாவாணர் நூலக அரங்கத்தை அடைந்ததும் விழா ஏற்பாடுகளை கவனித்துக்கொண்டு இருந்த சில முதியவர்கள் எங்களை வித்தியாசமாய் பார்த்தார்கள். "என்னடா இலக்கிய விழாவுக்கு இளைஞர்களா? " என்ற ஆச்சர்யத்தில் பார்த்தார்களோ என்னவோ? அல்லது எங்களைப்போன்ற இளைஞர்களை அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றேன்


மெல்ல சென்று முன்னால் சென்று அமர்ந்தோம். கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வர ஆரம்பித்தார்கள். ஆச்சர்யமாக இருந்தது இளைஞர்களும் வயதானவர்களுக்கு சம எண்ணிக்கையில் வர ஆரம்பித்தார்கள்.

வைரமுத்து ஒரு கவிதையில் சொல்லியது போல பாரதியாரின் இறுதி ஊர்வலத்தில் ஈக்களின் எண்ணிக்கையை விட ஆட்களின் எண்ணிக்கை குறைவு என்று. அதுபோல இருக்கைகளின் எண்ணிக்கையானது ஆட்களின் எண்ணிக்கைவிட அதிகமாக இருந்தது. வாழும்காலத்தில் எந்த இலக்கியவாதிகளும் சரியாக மதிக்கப்படவில்லை என்பார்கள் ஆனால் வாழ்ந்து முடிந்தாலும் மதிப்புகள் சரியாக கிடைக்கவில்லையோ?

சிறுகதைக்கு ஒரு வடிவம் கொடுத்து தமிழ் சிறுகதை வளர்ச்சிக்கு ஒரு முக்கிய அங்கமாக விளங்கிய புதுமைப்பித்தனின் நூற்றாண்டு விழா எவ்வளவு பெரிய விழாவாக கொண்டாடப்பட்டிருக்கவேண்டும். ஆனால் சென்னையில் ஒரு மூலையில் யாருக்கும் தெரியாமல் நடந்து கொண்டிருக்கின்றது.

தனை எழுதிக்கொண்டிருக்கும் இடைவெளியில் "வாழ்க ஒழிக" என்ற கோஷமின்றி எந்தவித ஆரவாரமின்று முதுபெரும் எழுத்தாளர் திரு வல்லிக்கண்ணன் அவர்கள் என் இருக்கையை கடந்து சென்றார்கள்.

ப்பொழுது விழாவுக்கு வந்த கண்தெரியாத மாணவர் ஒருவரிடம் இருந்து விழா பற்றிய குறிப்புகளை எழுதுவதற்கு சில காகிதங்களை கடன் வாங்கினேன்.


முன் வரிசையில் அமர்ந்திருந்த வல்லிக்கண்ணன் அவர்களிடம் சென்று மரியாதை நிமித்தமாக பார்த்து விட்டு வரலாம் என்று அவர் அருகே சென்று ,

"ஐயா..ஞாபகம் இருக்கிறதா"

"தெரியலையே யாரு..நீங்க.."

"பானிபட் இதயங்கள் புத்தகம்" என்று ஆரம்பித்தவுடனையே கண்டுபிடித்துவிட்டார்..

"என்ன தம்பி நல்லாயிருக்கீங்களா..? உங்க நண்பர் நல்லாயிருக்காரா? "என்று விசாரித்தார்.

நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு விழாவுக்கு வருகிறவர்களை நோட்டமிட ஆரம்பித்தேன்.

யார் யாரையோ எங்கை எங்கையோ பார்த்த மாதிரி ஞாபகம்..

மக்குத் தெரிந்த அல்லது நம்மைத் தெரிந்த வலைப்பூ நண்பர்கள் எவரேனும் வந்திருக்க கூடுமோ? என்று திரும்பி திரும்பி பார்த்தேன்.

அதோ தூரத்தில் ஜோல்னாப்பையோடு ஒருவர் வந்துகொண்டிருந்தார். அவரையோ ஏதோ பத்திரிக்கையில் பார்த்ததாக ஞாபகம்.

நீண்ட தாடியோடும் கையில் குறிப்பெடுக்க காகிதங்களும் பேனாவோடும் ஒரு வயதானவர் முன் இருக்கையில் வந்து அமர்கின்றார். பத்திரிக்கையாளரா அல்லது வலைப்பதிவாளரா என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னால் திரும்பி பார்த்து ஆச்சர்யப்பட்டேன். 40 சதவிகித இளைஞர்கள் ஆக்ரமித்து இருந்தார்கள். தான் வாழும்காலத்தில் இல்லாத அல்லது தான் பிறக்கும் பொழுது இல்வுலகில் இல்லாத ஒரு இலக்கியவாதியின் நூற்றாண்டு விழாவுக்கு வந்திருக்கிறார்கள் என்றால் அது அவரது எழுத்துக்கு கிடைத்த மரியாதை.

காதுக்கு இரைச்சலாக ஏதோ ஒரு பாட்டு ஒலிபரப்பிக்கொண்டிருந்தார்கள். நான் ஷாபியின் காதில் கிசுகிசுத்தேன்.. "பேசாமல் இதற்கு வாளமீனு பாட்டையாவது போட்டுவிடலாம் "என்று கூற பின்னால் இருந்த அந்தப்பெரியவர் நான் கிசுகிசுத்ததை காதில் வாங்கினாரோ என்னவோ சிரிக்க ஆரம்பித்தார்.

ப்பொழுது விழாவுக்கு வந்திருந்தவர்களை வாழ்த்திவிட்டு வந்திருந்த முக்கியமானவர்களை அழைத்து மேடையில் உள்ள இருக்கையில் அமர வைத்தார்கள்.

அப்பொழுது

14.08.06 அன்று இலங்கையில் நடந்த தாக்குதலில் 61 மாணவிகள் இறந்ததற்காகவும்

கடந்த வாரம் இயற்கை எய்திய தமிழ்த்திரு டி எஸ் மணி அவர்களுக்காகவும் மற்றும்

20.06.06 அன்று இறந்து போன சுரதா அவர்களுக்காகவும் 5 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.



ருத்தரங்க தலைமை உரையை முனைவர் ராஜபாண்டியன் அவர்கள் ஆரம்பித்தார். இவரைப்பற்றி குறிப்பிடும்பொழுது ,

தமிழ் ஆசிரியர்கள்
இலக்கியம் படிப்பார்கள்
இலக்கியம் படிப்பார்கள்
இலக்கியம் படிப்பார்கள்
ஆனால் இவர் இலக்கியம் படைப்பார்
என்று புகழ்ந்து கூறினார்கள்

"3000 ஆண்டு பழமை வாய்ந்த காலாக கவிதை விளங்குகின்றது. மேல்நாட்டின் நூல்களின் வாயிலாக வந்த சிறுகதையை புதுமைப்பித்தன் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார் "

"வவெசு அய்யரின் "குளத்தங்கரை அரசமரம் " சிறுகதைக்கு ஒரு தடத்தைக் கொடுத்தது. "

"புதுமைப்பித்தனின் சமகால எழுத்தாளர்கள் அனைவருமே சிறுகதையில் தடம் பதித்தார்கள். "

"இனி அய்யா
நான் செத்தபிறகு
நிதி திரட்டாதீர்கள்
நினைவை செதுக்கி
கல்லில் வடித்து காக்காதீர்கள்

என்று புதுமைப்பித்தனே தனது கவிதை ஒன்றில் குறிப்பிட்டிருக்கின்றார். பின் எதற்கு இந்த விழா.? இதனைப்பார்த்து மற்றவர்கள் சாதிக்க வேண்டும் என்பதும் வாழும் தலைமுறையினர்கள் புதுமைப்பித்தனை மறந்துவிடக்கூடாது என்பதற்காகவும்தான். "

"வாழும்பொழுது பாராட்டமாட்டார்கள். இல்லாதபோதுதான் பாராட்டுவோம். புதுமைப்பித்தனின் நிழலில் ஒதுங்கி நாம் சாதிக்க வேண்டும். "

"42 ஆண்டு காலம் வாழ்ந்த படைப்பாளி 92 சிறுகதைகள் படைத்திருக்கின்றார். ( கட்டுரை - மொழிப்பெயர்ப்பு தவிர்த்து)

உப்பு புளி கணக்கைப்பார்த்தால்
எப்போ எழுதுவது சமுதாயத்திற்கு?
- பாரதி

இப்படி சமுதாயத்திற்காக கவலைப்பட்டவர்களுள் பாரதிக்கு அடுத்து புதுமைப்பித்தன்தான். "

""எங்க அப்பா எப்போதும் புகையிலை போடுவார்" என்று அவரது அவர் மகள் கூறினார். அவர் புகைப்பழக்கத்திற்கு அடிமை இல்லை. பசியை மறப்பதற்காக புகையிலை போடும் பழக்கத்தை ஆரம்பித்தார். "

புதுமைப்பித்தனைப்பற்றி நிறைய தகவல்கள் அக்கூட்டத்தில் பரிமாறப்பட்டன . மேலும் கனாசு என்பவர் மிகவம் மேன்மைபடுத்தி கூறியதாவது

சிவனுக்கு நாயன்மார்கள் தமிழ் செய்தது போல
சிறுகதைக்கு புதுமைப்பித்தன் தமிழ் செய்தார்


தி.க.சி யை ஒருவர் கடுமையாக விமர்சித்தார். இவர் மட்டும் சிறுகதைக்கு ஒருவர் என்று எப்படி சொல்லலாம். பன்றி பல குட்டிகள் போடும் ஆனால் யானை ஒரு குட்டிதான் போடும் ஆகவே சிறுகதைக்கு புதுமைப்பித்தன் ஒருவர்தான் என்று மோசமான உதாரணம் ஒன்றை எடுத்து விட்டார்


திருநெல்வேலியில் உள்ள ம.தி.தா இந்துக்கல்லூரியில் புதுமைப்பித்தன் தனது பி.ஏ பட்டத்தை படித்தவர். இதே கல்லூரியில்தான் வ.உ.சி மற்றும் பாரதி அவர்களும் படித்தார்கள். இது அக்கல்லூரிக்கே உள்ள பெருமை. அந்த திருநெல்வேலியில் நானும் வசிக்கின்றேன் என்பது எனக்குப்பெருமை.


புதுமைப்பித்தன் கதையில் மட்டுமல்ல கவிதையிலும் பேச்சுத்தமிழையே கையாண்டார். அவர் பிறந்த ஊர் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஆகும். மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய இலக்கிய ஆர்வத்திற்கு அவரது பெற்றோர்களும் ஆதரவு தரவில்லை.

"தமிழ்ச்சிறுகதையை உலகப்பார்வைக்கு கொண்டவந்த பெருமை புதுமைப்பித்தனைச் சாரும் "என்று புதுமைப்பித்தனை பாராட்டினார்.

பின் நெய்வேலி பாலு என்பவர் தனது தொடக்க உரையில் கூறியதாவது

சிறுகதை வடிவம் ஐரோப்பியாவில் இருந்து வந்தது. பெரும்பாலும் நடுத்தரவர்க்கத்து பகுதிகள்தான் சிறுகதைக்கு தோற்றுவாயாகவும் வடிகாலாகவும் இருந்திருக்கின்றது.

முதலாம் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் அச்சு இயந்திரம் இந்தியாவுக்கு வந்தபிறகு சிறுகதையின் வடிவம் மேலும் பலம் பெற ஆரம்பித்தது

இந்து முஸ்லிம் ஒற்றுமை, வெள்ளைனை விரட்டுதல், காந்தீயச் சிந்தனையை வலியுறுத்துதல்,
சம்பந்தமான சிறுகதைகள் வெளிவரஆரம்பித்தன.

மொழிப்பெயர்ப்பு கதைகளும் யதார்த்தமான மக்கள் வாழ்வியல் கதைகளும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது

ஜெயகாந்தன், அசோகமித்ரன், ஆதவன் போன்றோர்களின் தனிமனித முக்கியத்துவம் பெற்ற கதைகள் வெளிவந்தன.

ஞ்சை மாவட்ட பண்ணை அடிமைகளின் துன்பத்தை மையமாக எழுதிய இந்திரா பார்;த்தசாரதியின் "குருதிப்புனல்" கதை மிகவும் சர்ச்சையை உண்டாக்கியது.

பின்னர் ஒரு காலகட்டத்தில் யதார்த்தம் - நம்பிக்கை - நம்பிக்கை மறுப்பு - அவநம்பிக்கை கதைகள் வந்துகொண்டிருந்தன.

ந்தக்களத்திலிருந்து அப்படியே மாறி தலித்தியம் - பெண்ணியம் - சுற்றுச்சூழல் - தமிழ் தேசியம் சம்பந்தமான கதைகள் வெளிவந்தன.

தற்பொழுதுள்ள நிலையில் நல்ல தமிழ் எங்கும் இல்லை. மின் ஊடகம் பத்திரிக்கைகளின்; ஆங்கில மோகத்தால் தமிழ் களை இழந்து வருகின்றது. நல்ல படைப்புகள் முற்போக்கு சிந்தனைகள் உள்ள கதைகள் வரவேண்டும்.

பின் புதுச்சேரி பஞ்சாங்கம் என்பவர் பேசும்பொழுது புதுமைப்பித்தனின் 'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்' என்ற கதையைப்பற்றி குறிப்பிடும்பொழுது,

டவுளை தெருவுக்கு அழைத்துவந்து கேள்விகேட்கின்றார் புதுமைப்பித்தன்.
"பெண்ணைத் தீக்குளிக்க வைத்த
அவர் கால்பட்டா
நான் பெண்ணாகவேண்டும்
நான் மீண்டும் கல்லாவேன்"
என்று இராமனைப்பார்த்து அகலிகை கேட்பதாக கதை இருக்கின்றது.

இது மிகுந்த சர்ச்சைக்குள்ளாக்கப்;பட்டது. ஆனால் சர்ச்சைகளுக்குப் பயந்தால் பாரதியார் புதுமைப்பித்தன் தோன்றியிருக்கமுடியாது.

தாய்மொழியின் அவசியத்தைப்பற்றி பேசினார். நமது கண்களுக்கும் மூளைக்கும் இடையே மொழி வந்து நிற்கின்றது.

நாம் மொழியைக் கையாள்கின்றோம் என நினைத்துக்கொண்டிருக்கின்றோம் ஆனால் உண்மையில் மொழிதான் நம்மைக் கையாள்கின்றது.தாய்மொழிக்கல்வி இல்லாமல் தமிழன் முன்னேறவே முடியாது.

வெளிநாட்டிற்கு தனது அறிவை விற்றுவிட்டு வெறும் நுகர்வோராக நாம் மாறி வருகின்றோம் என்று பின் நவீனத்துவம் பேசுகின்றது.

சினிமாக்களில் கதாநாயகர்களை உச்சத்திற்கு சென்று காட்டுகின்றார்கள். ஏன் இந்த பெருங்கதையாக்கம்? மனிதர்களை மனிதர்களாக காட்டுங்களேன்.

சின்னவயதில் நிலாவெளிச்சத்தில் ஆற்றுப்படுகையில் விளையாடியது எல்லாம் கனவாகத்தான் இருக்கின்றது. இப்பொழுதுள்ள தலைமுறைகள் கேமிராவில் மட்டும்தான் நிலாவை பார்க்கின்றார்கள்.

என்று நிறைய பேசிவிட்டு "இன்னும் முடிக்கலையா?" என்று யாரோ கேட்பது புரிகின்றது." இதோ முடித்துக்கொள்கின்றேன் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் " என்று தனது உரையை ஆர்வத்தில் தொடர்ந்தார்.


பின் நவீனத்துவம் பாதிக்கப்பட்டவர்கள் பக்கமே பயன்படுகின்றது. பெண்ணிம் தலித்திய சிந்தனை மேலாதிக்கம் பெற்றிருக்கிறது என்றால் பின் நவீனத்துவ சிந்தனையால்தான்.

என்று பல கருத்துக்களை பேசிவிட்டு உரையை முடித்துக்கொண்டார்.


பின்பு காட்டேறி என்பவர் வந்து சிறுகதைகள் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கவேண்டும் என்று கூறி "நந்தனார் தெரு" என்ற சிறுகதையைப்பற்றி குறிப்பிடும்பொழுது

நகராட்சியில் கழிப்பறை வேண்டி மனுகொடுத்து மனுகொடுத்து ஓய்ந்து போய்விட்டனர். பின் நகராட்சி அலுவலகம் முன்பு மலம் கழித்து விட்டனர். ஒரு பலகையில்

"இந்த நிலை தொடரவேண்டுமா? இப்படிக்கு நந்தனார் தெரு மக்கள்" என்று எழுதியிருக்கின்றார்.

இப்படி சிறுகதையின் மூலம் தங்கள் உணர்வுகளை வெளிக்கொணர விரும்புகின்றார்கள்.

பின்பு புதுமைப்பித்தன் நினைவுநாளில் அவர்கள் நடத்திய சிறுகதைப்போட்டிக்கு வந்த சிறுகதைகள் குறித்து பீர் முகம்மது என்பவர் பேசினார்.

ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு விவசாயி இறந்து கொண்டிருக்கின்றான் இதனைத் தடுக்க வேண்டும்.

திராவிட இலக்கியங்களை சாகடிப்பதே திராவிட இயக்கங்களின் சாதனை என்ற அதிரடியாக கூறினார்.

பின் வல்லிக்கண்ணன் அவர்கள் பேச வந்தார்.

புதுமைப்பித்தனின் 100 ஆண்டுவிழாவினை திருநெல்வேலியில் 5 அமைப்புகள் தனித்தனியே விழா எடுத்திருக்கின்றார்கள்.

மனிதன் மற்றும் அவனது வாழ்க்கை இதுவே சிறுகதையின் மூலம். இதனை மையமாக கொண்டுதான் எல்லா சிறுகதைகளும் அமைகின்றன. இந்தப்போட்டிக்கு வந்த சிறுகதைகளும் அப்படியே.

போட்டிக்கு வந்த சிறுகதையில் தமிழ் அடிப்படை தவறுகள் நிறைய உள்ளன.

புதுமைப்பித்தனின் நினைவு சிறுகதைப்போட்டிக்கு ஒருவர் புதுமைப்பித்தனின் கதையையே காப்பியடித்து எழுதி அனுப்பியிருக்கின்றார் என்று அவர் கூறியபோது கூட்டத்தில் சிரிப்பலை.

தனித்துவம் - சொல்லாற்றல் - வாழ்க்கையை பார்க்கும் சுயபார்வை - தனி நடை - தத்துவ நோக்கு மற்றும் ஆழ்ந்த அழகான கருத்துக்கள் படைப்பில் தெரியவேண்டும்

கதையின் மூலம் பிரச்சாரத்தை வெளிப்படுத்தலாம் ஆனால் பிரச்சாரம் செய்வதாய் தெரியக்கூடாது. கதையில் பிரச்சாரம் வெளியிட்ட கந்தர்வனின் கதைகளை முன்னோடிகளாச் சொல்லலாம்.

புதிதாக கதை எழுதுபவர்கள் முன்னோடிகளின் கதைகளை நன்கு படித்து எழுத ஆரம்பித்தது பின் அவர்களையும் மிஞ்சும் வண்ணம் எழுதவேண்டும்.

ண்மைகளை சரியாகவும் தைரியமாகவும் தாக்கம் ஏற்படுத்தும் விதமாக படைப்புகள் இருக்க வேண்டும்

ஆழமாக படித்தால் என்றுமே கதைக்கு பஞ்சமே கிடையாது. என்று தனது உரையை முடித்தார்.

பின் நாடகம் நடத்தும் முன் அதன் கதையை காவல்துறையிடனிரிடம் காட்டி அனுமதி பெறவேண்டும் என்கிற ஆங்கிலேய அடக்குமறை சட்டம் தொடரும் நிலையை ரத்துசெய்யவேண்டும் என்றும்

தேவநேயப்பாவாணர் அரங்கை குளிர் சாதன அரங்காக மாற்றி இன்னும் பல அரங்குகள் ஏற்படுத்தவேண்டும் என்றும் தீர்மானங்கள் கொண்டுவந்தனர்.

விழா முடிந்ததும் வல்லிக்கண்ணன் அவர்கள் அரங்கை விட்டு வெளியே வந்து ஆட்டோவுக்காக தனியாக காத்திருந்தது மனசை என்னவோ செய்தது.
இப்பொழுது புதுமைப்பித்தன் மற்றும் வல்லிக்கண்ணன் ஆகியோர்கள் இறந்து
விட்டாலும் அவர்களுடைய எழுத்துக்கள்மூலம் இன்றைய தலைமுறையினர்கள் அவரைப்பற்றி கண்டிப்பாக தெரிந்துகொள்ளவேண்டும்.


- ரசிகவ் ஞானியார்

Friday, December 15, 2006

நன்றிக்கடன்

Photobucket - Video and Image Hosting


அலட்சியமாய் களைந்த
ஆடைகளையெல்லாம்
பொறுக்கி எடுத்து ...
துவைத்து வைப்பாள்!

தன் வயிறு
காய்வதைப்பற்றி
கவலைப்படாமல் ...
துணிகளை காயவைப்பதில்
கவனமாய் இருப்பவள்!


மிச்சம் ஏதுமின்றி
தின்று வீசிய
பாத்திரங்களை ...
பத்திரமாய் பூசி விடுவாள் !

நாங்கள் வேண்டாமென்று
ஒதுக்கிய உணவுகள் ...
அவளுக்கு அமுதம் !

சொந்தக்குழந்தை
வீட்டில் அநாதையாய் இருக்க...
எங்கள் வீட்டுக்குழந்தைகளை
சொந்தமாக்குபவள்!

ஒருநாள் வராவிடினும் ...
வீட்டை கூவம் என்று அழைப்போம் !

இப்படி
விவரம் தெரிந்த நாள்முதல்
அறிவிக்கப்படாத உறவாக ..
வலம் வருபவள்!

இன்று காலைதான் செய்தி வந்தது:
என் வீட்டு
வேலைக்காரி இறந்துவிட்டாளாம்!
அய்யோ!
நாளை
தேங்கும் வேலையை
யார் செய்வதாம்?


- ரசிகவ் ஞானியார்

Thursday, December 14, 2006

பேச்சிலர்கள் பார்க்க வேண்டாம்..

காலையில் நேரத்துக்கு நாஷ்டா தயார் பண்ணவில்லையா..இதோ வாங்கிக்கோங்க...

பளார்..பளார்..பளார்...


Photobucket - Video and Image Hosting

எந்தப்பொண்ணுடனாவது பேசிக்கொண்டிருந்தீங்களா...இதோ வாங்கிப்போங்க...

டிஷ்யும்..டிஷ்யும்...டிஷ்யும்


Photobucket - Video and Image Hosting


பார்ட்டிக்கு கூட்டிட்டுப் போவில்லையா...இதோ வாங்கிக்கோங்க...

டமார்...டமார்...டமார்


Photobucket - Video and Image Hosting


ஆகவே பேச்சுலர்களே உஷாரா இருங்கப்பா...? அனுபவஸ்தர்கள் சொன்னா கேட்டுக்கோங்க..

Photobucket - Video and Image Hosting

- ரசிகவ் ஞானியார்

Monday, December 11, 2006

என்னாச்சு இந்தப்பொண்ணுக்கு?

Photobucket - Video and Image Hosting

இதோ இந்தப் படத்தில் தெரியும் பெண் திருநெல்வேலி ஜங்ஷன் பேருந்து நிலையம் அருகே ஆதரவற்ற நிலையில் அலங்கோலமாக சுற்றிக்கொண்டிருந்தார். மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் கிடைப்பதை சாப்பிட்டுக்கொண்டு அநாதையாய் வலம் வந்துகொண்டிருந்தார்.

இந்நிலையில் பேருந்து நிலையம் அருகே உடனிருந்த ஒரு பிச்சைக்காரர் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட, இந்தப்பெண் உடனே ஒரு பேப்பர் எடுத்து ஏதோ எழுதி அந்தப்பிச்சைக்காரனிடம் கொடுத்து பக்கத்தில் உள்ள மருந்துகடையில் சென்று கொடுக்குமாறு சொல்ல, அந்த மருந்து கடைக்காரர் உட்பட அந்தப்பகுதியில் உள்ள அனைவருக்கும் ஆச்சர்யம்.

அந்த பேப்பரில் ஒரு தரமான மருத்துவர் எழுதிக்கொடுக்கும் மாத்திரைகள் போலவே எழுதப்பட்டிருந்தது. ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட பெண் இப்படி எழுதிக்கொடுத்தது அந்தக் கடைக்காரருக்கு சந்தேகம் வரவே , மெல்ல அந்தப்பெண்ணிடம் பேச்சுக்கொடுத்தார். அந்தப்பெண்ணும் அந்தக்கடைக்காரரிடம் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடுவதைக் கண்டு அவர் மேலும் ஆச்சர்யமடைந்தார்.

அந்தப்பெண் தன் பெயர் புஷ்பலதா என்றும் தான் ஒரு டாக்டர் என்றும் கூறியிருக்கின்றார். அதுமட்டுமல்ல தான் சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்ததாகவும் சொல்லியிருக்கின்றார். அத்துடன் தன்னுடைய குடும்பத்தினரின் தொலைபேசி எண்களையும் கொடுத்திருக்கின்றார். அதில் தொடர்பு கொண்டு பேசியபொழுது யாரும் சரியாக பதிலளிக்கவில்லை.

இந்தச்சம்பவம் உள்ளுர் பத்திரிக்கையில் வெளிவந்தவுடன் இந்தப்பெண்ணிற்கு உதவிசெய்ய பல தன்னார்வு தொண்ட நிறுவனங்களும் மற்றும் பலரும் உதவ முன்வந்திருக்கின்றனர். ஆனால் இந்தப்பெண் எவருடனும் செல்ல மறுத்துவிட்டார். அந்தப்பெண்ணின் அலங்கோலமான நிலையைக்கண்டு பரிதாப்பட்ட போலிஸார்கள் அவரை நெல்லை சமூக சேவை அமைப்பான சரணாலயத்தில் ஒப்படைத்தனர்.

பின் நெல்லை மாவட்ட மருத்துவ சங்கத்தின் செயலாளர் டாக்டர் அன்புராஜன், அந்தப்பெண்ணை தனது மருத்துவமனையில் வைத்து தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தினார். அதனைத்தொடர்ந்து அந்தப்பெண் முழுவதுமாக குணமடைந்தார்.

தற்பொழுது அந்தப்பெண் பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பீஸ் டிரஸ்ட் மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றார். அதுமட்டுமல்ல அங்கு வரும் நோயாளிகளுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து வருகின்றார்.


நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் புஷ்பலதா :

Photobucket - Video and Image Hosting

அவர் தனது வாழ்க்கையில் என்ன நடந்தது ஏன் அவருக்கு மனநிலை பாதிக்கப்ட்டது? யார் சென்னையில் இருந்து இங்கு அழைத்துவந்தார்? என்ற தகவல்களை கேட்டபொழுது,

"எனக்கு கடந்த கால வாழ்க்கையில் ஏற்பட்ட துயரமான சம்பவங்கள் இப்பொழுது தெரிய வருகின்றது. அது ஒரு சோகமான நிகழ்வு. எனக்குத் தெரியாமலையே அச்சம்பவம் நடைபெற்றுவிட்டது . நான் இப்பொழுது முழுமையாக குணமடைந்துவிட்டேன். இந்த மருத்துவமனையில் டூட்டி டாக்டராக பணிபுரிகின்றேன்."

"எனக்கு சமூகசேவையிலும் ஆர்வம் அதிகம். ஆகவே பக்கத்து கிராமங்களான நாலுமாவடி பாவூர்சத்திரம் - எட்டயபுரம் - கடையநல்லூர் போன்ற பகுதிகளுக்குச் சென்று இலவசமாக மருத்துவமுகாம்கள் ஏற்படுத்தி சிகிச்சை அளிக்க விரும்புகின்றேன். "

"வீட்டிற்கு தொலைபேசி செய்தும் பேசிவிட்டேன். எனது அண்ணன் விசயம் கேள்விப்பட்டு என்னைப் பார்க்க வந்துள்ளார். நான் எனது குடும்பத்தினரை காண விரும்புகின்றேன். ஆகவே அடுத்தவாரம் சென்னை செல்கின்றேன்.இது எனக்கு கிடைத்த மறுவாழ்வு..என்னால் மறக்கவே முடியாது"

என்று மிகத்தெளிவாக அவர் பேட்டியளித்தார்.

மனநிலை சரியில்லாமல் சுற்றிக்கொண்டு திடீரென்று டாக்டரான இந்தப்பெண்ணைப்பற்றித்தான் நெல்லை மக்கள் பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.

நானும் இதுபோன்ற மனநிலை சரியில்லாதவர்களை இந்தப்பகுதியில் கண்டிருக்கின்றேன். அதிலும் வருத்தத்திற்குரிய விசயம் என்னவென்றால் வயதானவர்கள்தான் அதிகம் காணப்படுவார்கள்.

நான் சென்றமாதம் கூட இந்தப்பகுதியில் சுற்றிக்கொண்டிருக்கும் மனநிலை சரியில்லாவர்களிடம் மெல்ல விசாரித்து, அவர்களின் நிலைக்கு காரணத்தை ஆராயலாமா? என்று ஹைகிரவுண்ட்டில் உள்ள ஒரு மனநிலை சரியில்லாதவரை எனது நண்பருடன் பின்தொடர்ந்தேன்.

அவருக்கு வயது சுமார் 25 முதல் 30 க்குள் இருக்கும். கைகளில் ஒரு அழுக்குப்பையோடு தாடியை தடவிக்கொண்டே சென்றார். அருகில் உள்ள கடைக்காரர் ஒருவரிடம் விசாரித்தபொழுது "அந்தநபர் ஒருவார காலமாகத்தான் இந்தப்பகுதியில் சுற்றிக்கொண்டிருக்கின்றார்" என்று கூறினார்.

பக்கத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்த அந்த நபர் எங்களைப்பார்த்து திடீரென்று முனக ஆரம்பித்தார். பின் நாங்கள் பக்கத்தில் வருகிறோம் எனத்தெரிந்ததும் பயந்து போய் அங்கிருந்து விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தார்.

அவரைப் பின்தொடர்வதை யாராவது பார்த்து ஏதாவது தவறாக நினைத்துக்கொள்வார்களோ என நினைத்து பின் தொடர்வதை விட்டுவிட்டோம். பின் எங்கேயாவது நான் பைக்கில் செல்லும்பொழுது கண்ணில் தென்படுவார். இன்னமும் மனது உறுத்திக்கொண்டுதான் இருக்கின்றது. அந்த இளைஞருக்கு என்ன ஆகியிருக்கும் ஏன் மனநிலை சரியில்லாமல் போனது என்று.

இதுபோன்று மனநிலை சரியில்லாவர்களை விசாரித்து அவர்களைப் பற்றி எழுதி தெருவில் சுற்றிக்கொண்டிருக்கும் அவர்களை ஏதாவது காப்பகத்தில் சேர்க்கலாமே என்று நான் எனக்குத் தெரிந்த பிரபல வாரப்பத்திரிக்கை நிருபர் ஒருவரிடமும் இதுபற்றிக் கூறினேன். அவரும் எழுதுவதாக வாக்களித்துள்ளார். இந்தப்புஷ்பலதா போன்று எத்தனை புஷ்பலதாக்கள் மனநிலைசரியில்லாமல் சுற்றிக்கொண்டிருக்கின்றார்களோ..?

வாழுகின்ற காலத்தில் நல்லபடியாக வாழ்த்திருப்பார்கள். ஆனால் ஏதோ ஒரு
சூழ்நிலை அவர்களை இப்படி மனநிலை சரியில்லாவர்களாக ஆக்கியிருக்கின்றது. அவர்களை பாதுகாக்க வேண்டியதும் அரசாங்கத்தின் கடமைதான். ஆகவே அரசாங்கமும் இவர்கள் விசயத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமா..?

- ரசிகவ் ஞானியார்

Saturday, November 25, 2006

நெல்லையை மிரட்டும் இரண்டு

நெல்லையில் சமீபகாலமாக இரண்டு விசயங்கள் மக்களை பயமுறுத்திக்கொண்டு வருகின்றது. ஒன்று தொடர் கொள்ளை மற்றொன்று தொடர் மழை இரண்டையுமே தடுக்க முடியாமல் அதிகாரிகள் தவித்துக்கொண்டு இருக்கின்றனர்.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் என்பது புதிய செய்தி அல்ல. எந்த ஆற்றில் தண்ணீர் வற்றினாலும் தாமிரபரணியில் மற்றும் தண்ணீர் வற்றவே செய்யாது. அதனால்தான் வற்றாத ஜீவநதி என்று பெயர் பெற்றது. ஒவ்வொரு மழைக்காலங்களிலும் கரையோர மக்கள் எச்சரிக்கப்படுவார்கள். ஆனால் இந்த முறை ஊரையே எச்சரிக்கவேண்டிய நிலை வந்திருக்கின்றது.

Photobucket - Video and Image Hosting

பல குளங்கள் ஒன்றாக உடைந்து நெல்லையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்களை அவதிக்கு உண்டாக்கி வருகின்றது. ஆற்றில் சென்று குளிப்பவர்கள் வீட்டின் வாசலில் குளிக்கின்றார்கள்.

Photobucket - Video and Image Hosting

நேற்று தாமிரபரணி பாலத்தை நண்பனோடு கடக்கும்பொழுதே பாலத்தின் உயரத்தை தொடவா வேண்டாமா என்று பட்டிமன்றம் நடத்தியபடியே தண்ணீர் வேகமாக சென்று கொண்டிருந்தது.

பாலத்தை கடக்கும்பொழுது கிழே நிற்பவர்கள் எறும்பு போல காட்சி அளிப்பார்கள். அந்தப்பாலத்தையே மூழ்கடிக்கும் வண்ணம் தண்ணீர் வந்திருக்கிறது என்றால் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் எவ்வளவு ஆழம் இருந்திருக்கும் என்று.


நண்பனோடு பாலத்தில் நின்றுகொண்டு வெள்ளத்தை வேடிக்கைபார்த்துக்கொண்டு இருக்கும்பொழுதே காவலர்கள் வந்து எச்சரித்தனர். தம்பி நிற்காதீங்க..போங்க..போங்க... என்று.
என்னடா வெள்ளம் பார்க்க விடமாட்டேன்கிறாங்கன்று எரிச்சலடைந்தபடியே சென்றுவிட்டேன்.

ஆனால் சில மணி நேரத்திற்குப்பிறகு நாங்கள் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பகுதிகளை மூழ்கடித்தபடி கரைபுரண்டு வெள்ளம் வந்துகொண்டிருக்கிறது என்ற செய்திகேட்டு சென்று பார்த்தால் பாலத்தின் இந்தப்புறம் கொடிகள் கட்டப்பட்டு யாரையும் அனுமதிக்கவில்லை. நெடுஞ்சாலைத்துறையும் காவல்துறை அதிகாரிகளும் சுற்றிக்கொண்டிருந்தனர்.

நெல்லை குற்றாலம் சாலைகளில் கழுத்து அளவிற்கு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது. சுற்றியுள்ள டவுண் பேட்டை பகுதிகள் நெல்லையில் இருந்து துண்டிக்கப்படும் அளவிற்கு ஒவ்வொரு வீடுகளிலும் சாதி மதம் பார்க்காமல் வெள்ளம் புகுந்து கடல்களின் நடுவே தீவு போல அந்தப்பகுதிகள் காட்சி அளித்தது.



Photobucket - Video and Image Hosting

வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட மக்களை தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி மீட்டு வந்தனர். இன்னும் கொஞ்சம் மழை பெய்தால் அவ்வளவுதான் அந்தப்பகுதியே முற்றிலுமாக மூழ்கடித்துவிடும்.

இதுபோன்ற வெள்ளத்தை நான் 1992 ம் ஆண்டு தான் கண்டிருக்கின்றேன். எனது ஊரில் உள்ள 50 க்கும் மேற்பட்ட தெருக்களில் தண்ணீர் ஓடியது. திருநெல்வேலி பேருந்து நிலையம் எல்லாம் வெள்ளத்தில் மூழ்கியது. ஆனால் அந்த வெள்ளத்திற்கு இது கொஞ்சம் பரவாயில்லை.

மழை வருவதற்கு முன்பே வடிகால்கள் வெட்டுதல் மற்றும் குளங்களை எல்லாம் சீரமைத்தல்; போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் வெள்ள அபாயங்களிலிருந்து தப்பிக்கலாம். வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று அலட்சியமாக இருப்பதனால்தான் இப்படி மாட்டிக் கொள்ள வேண்டியதிருக்கிறது. இதன்பிறகாவது அதிகாரிகள் மெத்தனமாக இருக்காமல் மழைக்காலம் வரும் முன்பே தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களா?

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு

A wise man in peace time prepares for a war
(இதை யாராவது சரியாக தமிழில் மொழிபெயர்ங்களேன் )

அடுத்து தொடர் கொள்ளை..

சமீப காலமாக தொடர் கொள்ளைகள் அதிகரித்துவிட்டன. நகரின் ஒதுக்குப்புறங்களில் மட்டும் நடந்திருந்தால் மக்கள் நிம்மதியாக இருந்திருப்பார்கள் ஆனால் 24 மணிநேரமும் விழித்துக்கொண்டிருக்கும் திருநெல்வேலியின் பேருந்து நிலையம் அருகே கூட கொள்ளைகள் நடந்திருப்பது மக்களை பீதியில் இருக்க வைத்திருக்கிறது

நெல்லையில் கட்டபொம்மன் நகர் சாந்தி நகர் ரஹ்மத் நகர் அன்பு நகர் - ஸ்டேட் பேங்க காலனி பேட்டை நெல்லை ஜங்ஷன் - பாளை பஸ் நிலையம் என்று கொள்ளைகள் தொடரந்த வண்ணம் இருக்கின்றது.

Photobucket - Video and Image Hosting

பெரும்பாலும் ஆள் இல்லாமல் பூட்டிக்கிடக்கின்ற வீடுகளில்தான் இதுபோன்ற கொள்ளைகள் நடைபெறுகின்றது. அதுவும் வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்று விட்டு திரும்பும் 1 மணிநேர இடைவெளியில் கூட வீட்டைத்திறந்து கொள்ளையடித்து சென்று விடுகின்றது. ஒரே தெருவில் ஒரே நாளில் இரண்டு மூன்று வீடுகளில் கூட கொள்ளைகள் நடந்திருக்கின்றது.

பாளையங்கோட்டை அன்புநகர் அருகே ஆள் இல்லாமல் பூட்டிக் கிடக்கும் வீட்டின் பின்புறம் வழியாக கதவை கொள்ளையர்கள் நோண்டிக்கொண்டிருந்தபொழுது பின்புறம் உள்ள வீட்டில் உள்ள ஒரு பெண்மணி டாய்லெட் செல்ல, பின்புற கதவை திறந்தபொழுது இரண்டுபேர் கதவை திறக்க முயன்று கொண்டிருப்பதைக் கண்டு, யாரு ..என்று கேட்க அவர்கள் தப்பித்து ஓட ஆரம்பித்தனர்.

அந்தப் பெண்மணியிடம் விசாரித்தபொழுது எனது கணவரே ஒரு போலிஸ்காரர்தான். மாறுவேடத்தில் நெல்லையில் உள்ள கொள்ளையனைப் பிடிக்க சுற்றிக்கொண்டிருக்கின்றார். எனது வீட்டின் பின்புறமே திருடன் வந்திருக்கின்றான் பாருங்களேன்..

பின்பு காவலர்களின் கெடுபிடி அதிகரித்ததைக் கண்டு நெல்லையின் இன்னொரு பகுதியான பேட்டைக்கு அந்தக் கொள்ளை கும்பல் இடம்பெயர்ந்திருக்கின்றது.

பேட்டையில் உள்ள ஒருவர் வீட்டை பூட்டிவிட்டு வங்கிக்கு சென்றபொழுது அந்த நேரத்தில் வந்து வீட்டின் முன்புற கதவை உடைத்திருக்கின்றனர் தாங்கள் உடைப்பது யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக அங்கு காய்ந்து கொண்டிருந்த சீலையை திரைச்சீலை போல வீட்டின் கதவு முன்பு கட்டி கதவை உடைத்து கொள்ளையடித்திருக்கின்றனர்.

பாருங்களேன் அந்த நபர் இத்தனை மணிக்கு வங்கிக்கு செல்லுவார் என்று தெரிந்து வந்து கொள்ளையடித்துவிட்டு சென்றிருக்கின்றனர்.

பின்பு பாளை மகாராஜா நகர் பகுதியில் விஞ்ஞானி ஒருவர் குடும்பத்தோடு கோயிலுக்கு சென்று திரும்புவதற்குள் அவரது வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளார்கள்.

திருநெல்வேலி பேருந்து நிலையம் அருகே உள்ள வெல்கம் என்ற போட்டோ ஸ்டுடியோவில் இரவு 12.30 மணிக்கு கொள்ளையடித்துள்ளனர். அதில் என்ன வேடிக்கை என்றால் 12 மணிக்குத்தான் கடை ஊழியர்கள் கடையை அடைத்த விட்டுச் சென்றிருக்கின்றனர்

போலிஸார்களின் கண்களில் மண்ணைத்தூவி விட்டுவிட்டு கொள்ளையடித்துக்கொண்டிருக்கும் அந்தக்கும்பலை பிடிக்கும் தீவிர முயற்சியில் நெல்லை கமிஷனர் உமா கணபதி சாஸ்திரி அவர்கள் புதிய புதிய திட்டங்களை வகுத்து கொள்ளையனை பிடிக்க முழு முயற்சி எடுத்துக்கொண்டிருக்கின்றார்.

கொள்ளை நடக்கும் பகுதிகளில் வாகனசோதனை போலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.மற்றும் தெருவுக்கு ஒரு போலிஸ் என்பது போல எங்கு பார்த்தாலும் போலிஸ்மயமாக காட்சி அளிக்கின்றது.

ஒன் டு ஒன் என்ற புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி பழைய குற்றவாளிகளை கணக்கில் எடுத்து அவர்கள் ஒரு போலிஸ் வீதம் அவர்களது நடமாட்டங்களை கண்காணிக்கின்றனர்.

Photobucket - Video and Image Hosting

மேலும் கொள்ளையனைப்பற்றி மக்கள் கொடுத்த அடையாளங்களை கம்ப்யூட்டரில் வரைந்து அவற்றை பொது இடங்களில் ஒட்டியுள்ளனர். அவன் சிவப்பாக உயரமாக இருக்கும் அந்த நபர் வடமாநிலங்களை சேர்ந்தவனாக இருக்குமோ என்று போலிஸார்களுக்கு துப்பு கிடைக்க நெல்லையில் சாலையோரமாய் கடை வியாபாரம் வைத்திருக்கும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களிடம் துளைத்து துளைத்து விசாரிக்கின்றனர்.

Photobucket - Video and Image Hosting

ஒரு வீடு பூட்டி கிடக்கிறது என்று எப்படி கொள்ளையர்களுக்கு தகவல் கிடைக்கின்றது. அவர்கள் தெருத்தெருவாக பகல் நேரங்களில் கண்காணிக்கின்றார்களா? அல்லது அவர்களுக்கு யாராவது தகவல் கொடுக்கின்றார்களா என்று விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.

இங்கே நெல்லையில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டதை உணர்ந்த கொள்ளையர்கள் மெதுவாக இடம் பெயர்ந்து தென்காசி மேலகரத்தில் ஒரு வீட்டில் கொள்ளை நடத்தியுள்ளனர். உடனே காவலர்கள் உஷாராகி தென்காசி டு நெல்லை பேருந்துகள் வாகனங்கள் என்று சோதனைகளில் இறங்கியுள்ளனர்.

இறுதியாக அவனைப்பற்றிய தகவல் தெரிவிப்பவர்களுக்கு பரிசு என்று பொதுமக்களுக்கு அறிவிப்பு கொடுக்க ஆரம்பித்திருக்கின்றார்கள். வீட்டை பூட்டிவிட்டு வெளியூர்களுக்கு செல்லுபவர்கள் அருகிலுள்ள காவல்துறைக்கு தகவல் தெரிவியுங்கள் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

ஆனால் ஆலயம் போகும்போது - ஷாப்பிங் போகும்போது - வங்கிக்கு போகும்போது என்று ஒவ்வொரு முறையும் காவல்துறையிடம் தகவல் தெரிவித்துக்கொண்டா இருக்க முடியும்?

இப்பொழுது மழை வெள்ளத்தினால் அந்தக் கொள்ளைகள் கொஞ்சம் குறைந்திருக்கின்றது. ஒருவேளை நிலைமையின் பதட்டத்தை குறைக்க கொள்ளையர்கள் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றார்களோ என்னவோ..?

கொள்ளை நடக்கின்ற பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் தானியங்கி வீடியோ கேமிராக்களைப் பொருத்தி கண்காணிக்கலாம். ஆனால் இதள் மூலம் கொள்ளையர்கள் பிடிபடுவார்களோ இல்லையோ தவறு செய்யும் மற்றவர்களும் பிடிபட்டுப் போவார்கள்.

வெள்ளச் சேதமும் கள்ளச் சேதமும் இப்பொழுது குறைந்து கொண்டு வருகின்றது.

நடைபெற்ற தொடர்கொள்ளையினால் நெல்லை மக்கள் இன்னமும் பயத்தில் தான் இருக்கின்றார்கள். நிம்மதியாக வீட்டை பூட்டி விட்டு செல்லமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக வடியத்தொடங்கிவிட்டது. போக்குவரத்துகள் எல்லாம் சீராகிக்கொண்ட இருக்கின்றது. ஆனால் கடைசியாக கிடைத்த தகவல்படி நேற்று ( 24.11.06) பாளையங்கோட்டையில் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற ஒருவரது வீட்டில் கொள்ளை நடந்துள்ளது.
தொடர்மழை - தொடர் கொள்ளை
ஆள் இருக்கின்ற வீட்டிலும் நுழைந்துவிடும்

ஆள் இல்லாத வீட்டில்தான் நுழைவான்

பகல் இரவு என்று நேரகாலம் பார்க்காமல் வரும்
பெரும்பாலும் இரவில்தான்

கையில் கிடைத்ததை அள்ளிக்கொண்டு ஓடும்
விலையுயர்ந்த பொருள் - பணம் என்று தேடிப்பிடித்து
சுருட்டுவான்

எவ்வளவு மக்கள் கூடி நின்று எதிர்த்தாலும்
தகர்த்துவிட்டு நுழையும் மக்கள் கூடி நின்று எதிர்த்தால் ஓடிவிடுவான்



யாருக்கும் பயப்படாது - காவல்துறைக்கு பயப்படுவான்

தனிப்படை அமைத்தால் தனிப்படையும் தண்ணியில்தான்!
தனிப்படை அமைத்தால் ஒருவேளை பிடிபடலாம்

வரும்முன் வானிலை அறிக்கையில் சொல்லிவிடுவார்கள்

மக்களின் மனநிலை அறிக்கைதான் சொல்லும்

வீட்டுக்குள் இருக்கும்போதும் பயம்
வீட்டைவிட்டு வெளியே சென்றால் பயம்.

வருவது தெரிந்தால் மாடிக்கு சென்று விடவேண்டும்
வருவது தெரிந்தால் வாசலுக்கு வந்துவிடவேண்டும்

வந்தால் இடம் சுத்தமாகிவிடும் -

வந்தால் பொருட்கள்
சுத்தமாகிவிடும்


பாதுகாப்பு கோரி கடவுளிடம் பிரார்த்திக்கலாம்
பாதுகாப்பு கோரி காவல்துறையிடம் புகார்
கொடுக்கலாம்.



இந்த தொடர் கொள்ளையை தடுக்க எவ்வாறெல்லாம் நடவடிக்கை எடுக்கலாம் என்று நண்பர்கள் தங்களுக்கு உண்டான யோசனையை தெரிவித்தால் காவல்துறைக்கு உதவியாக இருக்கும்.


- ரசிகவ் ஞானியார்

Friday, November 24, 2006

மனித(ம்) உறக்கம்

Photobucket - Video and Image Hosting

குளிரில் நடுங்கிய
பூனையின் முனகலாய்..

எவரோ வீசிச்சென்ற
ரொட்டித்துண்டுகளை தரையில் பரப்பி...
வாழ்க்கையையும் ,
ரொட்டித்துண்டுகளையும்,
தேடித் தேடிச் சாப்பிட்டு...

அழுக்குத்துணியில்
தன்னையும் ..
தன்மானத்தையும்...
போர்த்தியபடி கிடக்க,

உற்று நோக்கினேன்..
மனசின் ஓரத்தில்
மதப்பற்று!
மத அடையாளம் தெரியவில்லை!

இந்தியனாய் இருக்க கூடுமோ..?
தேசப்பற்று..
திமிறிக்கொண்டு வந்தது!

தமிழனாய் இருக்குமோ?
மொழிப்பற்றும் மீறி வந்தது!


வேலை தேடி வந்து..
வீதியில் நிற்பவனா?
விசா எடுத்தவன்..
விரட்டி விட்டிருப்பானோ..?


விசாரித்தால்
ஏழ்மை ஒட்டிக்கொள்ளுமென்ற அச்சத்தில்
மனிதம் தவறியபடி..
மனிதர்களின் அவசரங்கள்!

மனசாட்சியினை
பணங்களின் தேவைகள்..
பறித்துவிட்டனவே!

மனிதத்தை
மண்ணெண்ணையில் எரித்துவிட்டு..
சுயநலங்கள்
சாப்ட்வேரில் சமாதியாகின்றது!

பாவிகளா
எவனுமே விசாரிக்க மாட்டீர்களா..?
கதறுகிறது நெஞ்சம்..
"நான்" எங்கே போனேனோ..?


காட்டுமிராண்டிகள் எல்லாரும்..
கவனிக்காமல் செல்லுகின்றனர்!


இந்த
காட்டுமிராண்டியால் முடிந்தது
ஒரு கவிதை மட்டுமே..

நானும் மனிதனாவதெப்போது..?




- ரசிகவ் ஞானியார்

Thursday, November 23, 2006

உங்க மனசுல யாருங்கோ

Photobucket - Video and Image Hosting

விஜய் தொலைக்காட்சியில் நான் ரசித்து பார்க்கின்ற நிகழ்ச்சிகளில் கிராண்ட் மாஸ்டரும் ( யார் மனசுல யாரு) ஒன்று.

நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படுகின்றது..

யார் மனசுல யாரு ..? உங்க மனசுல யாரு. இப்போ பார்ப்போமா ?கிராண்ட் மாஸ்டர் ஆரம்பிக்கின்றார்.


அவங்க இப்ப உயிரோட இருக்காங்களா..?

ஆமாம் ஆனால் நிகழ்ச்சி முடியும் பொழுது உறுதியா சொல்லமுடியாது


இப்ப எங்க இருக்காங்க?

என் மனசுல

அரசியல், கலை, இலக்கியம் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா..?

இது சம்பந்தமான அறிவு இல்லை


இயற்பியல், கணிதம், கணிப்பொறி, இவற்றில் ஏதாவது?

ஆமாம் எல்லாப்பாடமும் உண்டு


அவங்க படிக்கிற கல்லூரி காயிதே மில்லத், ஸ்டெல்லா மேரீஸ்..?

ஆமாம்..


காயிதே மில்லத்..?

ஆமாம்


அவங்க விரும்பி அணியுற உடை சுடிதார்?

ஆம்


அவங்களுக்கு பிடிச்ச கலர் பச்சை கருநீலம் கறுப்பு?

ஆம்


கருநீலம்?

ஆம்

உங்களுக்கு பிடிச்ச கலர் அவங்கதானே?

ஆம்


தினமும் காலேஜ்க்கு அவங்க கொண்டுபோற மதிய உணவு தயிர்சாதம் - தோசை - முட்டை சோறு இவற்றில் ஒன்றா?

ஆமாம்


தயிர்சாதம்?


ஆம்

அவங்களுக்கு பிடிச்ச பூ ரோஜா - மல்லிகை - பிச்சுப்பூ?

ஆம்


ரோஜா..?

ஆம்


ரோஜாப்பூவை வித்தியாசமா இடப்பக்கம் வச்சிட்டு வருவாங்களா..?

ஆம்

உங்கள அடிச்சதனால அவங்க செருப்பு சமீபத்துல அறுந்து போச்சா?

ஆம்

இப்ப புதுசா கறுப்பு கலர் பாட்டா செருப்பு வாங்கியிருக்காங்களா?

ஆம்

தினமும் வெள்ளை நிற கைனடிக் வண்டியில வருவாங்களா..?

ஆம்

அவங்க வண்டி நம்பர் டி என் 72 பி 1717 தானே..?

ஆம்..

"அடப்பாவி நம்மகிட்டேயே கள்ளம் பறைஞ்சிட்டியேடா மவனே..அது என் பொண்ணுடா.."
அலறுகிறார் கிராண்ட் மாஸ்டர்..

நீங்களும் இந்த நிகழ்ச்சியில பங்கு பெறனும்னா ஏதாவது பெண்கள் கல்லூரி முன்னால நின்னுக்கிட்டு ஏதாவது ஒரு பொண்ணை லவ் பண்ண ஆரம்பிங்க..உங்க லவ் உண்மையா இருந்துச்சுன்னா..நீங்க தான் அடுத்த போட்டியாளர்..யார்..மனசுல யாரு..? பை..

- ரசிகவ் ஞானியார்

Wednesday, November 01, 2006

விபத்தும் விபத்து சார்ந்த இடமும்

Photobucket - Video and Image Hosting

நேற்று நண்பனோடு திருநெல்வேலி ஹைகிரவுண்ட் நோக்கி விரைந்து பைக்கில் சென்று கொண்டிருந்தபொழுதுதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

எனது பைக் சேவியர் கல்லூரியைத் தாண்டி வேகமாய் சென்று கொண்டிருந்தது.தூரத்தில் வரும்பொழுதே கவனித்துவிட்டேன். அந்த சான்ரோ கார் திரும்புவதற்கு முயற்சித்து முயற்சித்து பின்வாங்கியது.
நானும் வாகனத்தில் நெருங்கி விட , அந்த நேரத்திலும் அந்தக் கார் திரும்ப முயற்சித்து பின்வாங்கிவிட, தைரியமாக விரட்டி சென்றேன்.

எதிர்பாராத விதமாக அந்தக்கார் இப்பொழுது சரியாக ரோட்டின் குறுக்கே வரை வந்து திரும்பிவிட , நானும் சட்டென்று ப்ரேக் பிடிக்கமுடியாததால், கார் முழுவதும் திரும்புவதற்குள் சென்றுவிடலாம் என்று எத்தனிக்க , காரும் நான் முந்துவதற்குள் திரும்பிவிடவேண்டும் என அவசரப்பட..

ப்ரேக் முழுவதுமாய் அழுத்தி நிறுத்துவதற்குள் ..ட..மார் என்ற சப்தத்துடன் நாங்கள் வாகனங்களால் முத்தமிட்டுக்கொண்டோம்.

காரின் ஹெட்லைட் மற்றும் முன்பகுதிகள் நொறுங்கி தெறிக்க, எனது பைக்கில் ஹெட்லைட்டும் உடைந்து சிதறி முன்பகுதிகளில் உள்ள சில துண்டுகள் சிதறி விழுந்தன.

மோதிய வேகத்தில் நான் பைக்கில் இருந்து காரின் முன்பகுதியில் விழுந்து உருண்டு கீழே விழுந்துவிட்டேன். நல்லவேளை காரை ஓட்டியவரும் உடனே ப்ரேக் போட்டுவிட கார் என்மீது ஏறாமல் தப்பித்தேன்.

நான் விழுந்த வேகத்தில் உருண்டு கிருஷ்ணா மருத்துவமனையின் ஓரத்தில் விழுந்துவிட பின்னால் வந்த நண்பன் சுதாரித்து குதித்து, ஓடி வந்து தரையில் கிடந்த என்னை எழுப்பிவிட, நல்லவேளை கைகளிலும் மணிக்கட்டிலிலும் அதிகமாக அல்லது குறைவாக என்று சொல்லமுடியாத அளவிற்கு அடிகள்.
கொஞ்சம் உள்ளங்கைகளில் சிராய்ப்புகள்.

நான் கீழே விழுந்த அதிர்ச்சியில் எதிரே வந்த ஜங்ஷன் பேருந்து திடீரென்று ப்ரேக் அழுத்தி நின்றது. நண்பர்களின் மற்றும் உறவினர்களின் மற்றும் சுற்றியிருப்பவர்களின் சுயநலம் இல்லாத ப்ராத்தனைகளும் அன்பும்தான் அந்த பேருந்து ட்ரைவரை ப்ரேக் போட வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் ரசிகவ்வின் வலைப்பதிவுகள் அநாதையாக போயிருக்கும்.

பக்கத்தில் பள்ளிக்கூடம் இருப்பதால் அங்குள்ள மாணவர்களின் மற்றும் சாலையோர பயணிகளின் கூட்டங்கள் சுற்றி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது.

போரில் குண்டு வீசப்பட்ட பகுதிகளைப் போல கண்ணாடிச்சிதறல்கள்.. உடைந்த காரின் முன்பாகம்..பைக்கின் ஹெட்லைட் துகள்கள்..செருப்பு..பேனா..பைக்கில் இருந்து விழுந்த வார இதழ்.. மூக்கு கண்ணாடி.. சில துண்டு துண்டு வொயர்கள்..என்று அந்தப்பகுதி மினி கலவரபூமியாக காட்சியளித்தது.

கீழே விழுந்தவனை வேடிக்கை பார்க்கும்பொழுது அவனுடைய கோபம் - படபடப்பு சுற்றியுள்ளவர்களுக்கு சில சமயம் நியாயமாகத்தெரியாது. ஆனால் இப்பொழுது நான் விழுந்ததும்தான் அந்த படபடப்பை கோபத்தை தெரிந்துகொண்டேன். கார் ஓட்டி வந்த பெரியவர் பந்தாவாக இறங்கி காரின் முன்பகுதியில் உள்ள சேதத்தை பார்த்தார். எனக்கு கோபம் அதிகமாகி வலித்த கைகளை நீட்ட முடியாமல் மடக்கி வைத்துக்கொண்டு, அந்தக் கார் ஓட்டுனரிடம் சண்டைக்குச் சென்றேன்.

"அறிவிருக்கா சார்.. நான்தான் வர்றேன்னு தெரியுதுல..அங்கிருந்தே ஹாரன் அடிச்சிட்டே திரும்புறேன்ல.. பார்த்து திரும்பவேண்டியதுதானே..?"

"நான் சிக்னல் போட்டுட்டுதானே திரும்புனேன்..நீதான் கவனிக்கல.. " சொல்லிக்கொண்டே தனது காரின் முன்பகுதியையே நோட்டமிட்டார்..

"கைல அடிபட்டிருக்குன்னு சொல்றேன்..உங்களுக்கு கார்தான் முக்கியமா படுதோ?.. பார்த்து திரும்ப கூடாது.. ? "என்று நான் கோபப்பட


பக்கத்தில் உள்ள ஆட்டோக்காரர்கள் எல்லாம், எனக்கு ஆதரவாகவும் அந்த சான்ரோ கார் ஓட்டுநருக்கு எதிர்ப்பாகவும் பேச ஆரம்பிக்க,

எனக்கு அடிபட்டிருக்கிறது என்ற பயமும், ஆட்டோக்காரர்களின் ஆதரவும் கண்டு பயந்த அவர் நான் முந்துவதற்குள் தான் முந்திவிடவேண்டும் என்று "போலிஸை கூப்பிட்டுறுவேன்" என்று மிரட்ட,

உடனே நான் 100 க்கு எனது செல்போனிலிருந்து டயல் செய்ய, "உங்கள் தொலைபேசிக்கு இந்த வசதி இல்லை" என்று அழகான தேவதை வரமிட்டுக்கொண்டிருந்தாள்.

"இவ்வளவு வசதி கொடுக்குறாங்க இந்த வசதியை மட்டும் ஏன்பா கொடுக்கலை செல்போனுக்கு" என்று நொந்தபடி பக்கத்தில் உள்ள காயின் பாக்ஸில் சென்று 1 ரூ நாணயத்தை இட்டு 100 ஐ டயல் செய்தேன். வாழ்க்கையில் முதன்முதலாய் 100 க்கு போன் செய்கின்றேன். அதுவே கடைசிமுறையாய் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்.

ரிங்..ரிங்...ரிங்..ரிங்..

"ஹலோ அவசர உதவி.. யார் சார் பேசுறது..?"

அவர்கள் கூறிய தொனியைக் கேட்டவுடன் அவங்களுக்குத்தான் அவசர உதவி தேவையோ என்று நான் நினைத்துக்கொண்டேன்.

"சார் என்னோட பேரு ஞானியார்..இங்கே கிருஷ்ணா மருத்துவமனை அருகே ஒரு கார் என் பைக்ல மோதிடுச்சு சார்.."

"சரி அதுக்கு இப்ப என்ன பண்ணணும்ங்கறீங்க.."

"என்னப்பா இப்படி பொறுப்பில்லாம சொல்றாங்க" என்ற எரிச்சலுடன், "இல்லை சார் எனக்கு கைல அடிபட்டிருக்கு..பைக்குக்கும் சேதம் அதனால் கம்ப்ளெண்ட் பண்ணப்போறேன்.. " என்று கூற

"உங்க வண்டி எண் சொல்லுங்க.. TN72 H 1717 - Splender"

"சரி அந்த வண்டி நம்பர் என்ன..?"

"TN 72 P 303 சாண்ரோ கார் சார்.."

பெயர் - முகவரி - இடம் என்று எல்லாம் கேட்டு விட்டு , "இன்னும் 5 நிமிசத்துல வண்டி வரும் சார் " என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார்கள்.

அதற்குள் என்னுடன் வந்த நண்பன் ஷாஜஹான் தனது உறவினரான பக்கத்து போலிஸ்ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரியும் ஒருவருக்கு போன் செய்து விவரம் கூற, அவர் உடனே வருவதாக வாக்களித்தார்.

அவசர உதவி வருவதற்காக காத்திருந்தோம். அவசர உதவி கொஞ்சம் தாமதமாகவே வந்தது. நண்பர் ஷாஜஹானிடம் காத்திருந்த நேரத்தில் துபாயில் உள்ள விபத்துக்களைப் பற்றி பகிர்ந்து கொண்டேன்

இதே துபாய்னா..மோதியவரும் மோதப்பட்டவரும் இறங்கியவுடன் கைகுலுக்கிவிட்டு போலிசுக்கு போன் செய்வார்கள்.

போன் செய்த 5 நிமிடத்திற்குள் போலிஸ் வந்து வண்டி எப்படி மோதியது? யார் மீது தவறு..? எந்த வாகனம் தவறுதலாய் வந்திருக்கும் என்று அலசி ஆராய்வார்கள். பின் தவறு செய்தவருக்கு சிகப்பு நிற ரிப்போர்ட்டும், தவறு செய்யாதவருக்கு பச்சை நிற ரிப்போர்ட்டும் கொடுத்து விடுவார்கள்.

அதனைக் கொண்டு சென்றால்தான் மெக்கானிக் ஷாப்பில் வண்டியை ரிப்பேர் செய்ய அனுமதியளிப்பார்கள். அதுபோல ஒரு வரைமுறைகள் இங்கும் இருந்தால் எப்படியிருக்கும் என்று நண்பனிடம் விவாதித்துக் கொண்டிருக்கும்பொழுதே மழையும், அவசர உதவி போலிசும் விரைந்து வந்தன.

நான் ஓடிச் சென்று அவர்களிடம் என்னைப்பற்றி கூறி என் முகவரி,எனது வாகன எண், விபத்து நடந்த முறை , மோதியவரின் வாகனம் மற்றும் எண் சொல்லிக்கொண்டிருந்தேன்.

மோதியவரை அழைத்து அவருடைய முகவரியை போலிஸ் கேட்க , அவரோ "வண்டியை எடுத்து ஓரத்துல விடுறேன் சார்..வண்டியை ஓரத்துல விடுறேன் சார்.".என்று அவரிடம் நச்சரிக்க, அந்தப் போலிஸ்காரர் எரிச்சலடைந்து "ஒண்ணும் வேண்டாம் தகவலைக் கொடுத்துட்டுப் போங்க " என்று கோபப்பட்டார்.

அந்தப் பெரியவரும் தகவலைக் கொடுத்துவிட்டு தனது வாகனத்தை ஓரத்தில் நிறுத்துவதற்காக செல்ல இந்தப்போலிஸ்காரர் என்னை அழைத்தார்.

"சார் இங்க வாங்க" என்று போலிஸ்காரர் என்னை அழைக்க , நான் உடனே காருக்குள் ஏற அவரோ, "அட இப்படி சுத்தி இந்த சைடு வாங்க சார்.. " என்க ,

நான் ஜீப்பை சுற்றி அவர் பக்கம் செல்ல அவர், "உங்களுக்கு கைல வலி அதிகமாக இருந்தா நீங்க உடனே போய் ஜி ஹெச்ல அட்மிட் ஆகியிருங்க" என்க நானோ

"பக்கத்துலதான் இந்த கிருஷ்ணா ஹாஸ்பிடல் இருக்கே..இங்கே ஒரு இன்ஜெக்ஷன் போட்டுக்கறேன் சார்.."

"அட நான் சொன்ன மாதிரி செய்யுங்க..ஜி ஹெச்சுக்குப் போனாதான் போலிஸ் கேஸாகும்..அங்க போங்க " என்று கூற

"சரி சார் இப்ப போகவா..?"

"கொஞ்சம் வெயிட் பண்ணுங்க எஸ் ஐ வந்திட்டு இருக்கார்..இதுக்குன்னு தனி எஸ் ஐ போட்டுறுக்காங்க.. அவர் வந்தவுன்ன போங்க" என்று கூறிக்கொண்டிருக்கும்பொழுதே

எனது நண்பன் ஷாஜஹானின் உறவினரான ஏட்டையா வந்து அந்த போலிஸ்காரர்களிடம் சகஜமாக பேச எனக்கு இன்னும் கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

நான் உடனே எனது நண்பன் காஜாவிற்கு போன் செய்து எங்களுக்கு தெரிந்த எங்களது கல்லூரி நண்பரான பிரதீஷ் என்ற லாயரை வரச்சொன்னேன்.

மழையும் , வலியும் அதிகரிக்க கைகளை சிரமப்பட்டு நீட்ட முயன்று மடக்கி வைத்துக்கொண்டேன். அதனைக்கண்ட நண்பனின் உறவினரான போலிஸ்காரர் என்னிடம், "வாங்க முதல்ல ஜி ஹெச்சுக்குப் போய் அட்மிட் ஆகி கேஸை பைல் பண்ணுவோம்" என்று கூறி என்னை அவரது பைக்கில் ஏற்றிக் கொண்டார்.

நேராக கவர்மெண்ட் ஹாஸ்பிடல், ஆக்சிடெண்ட் கேர் பகுதிக்குச் சென்று வரிசையில் அமரச்சொல்லிவிட்டு அங்குள்ள ஊழியர் ஒருவரிடம் "அர்ஜெண்ட்" என்று கண்ணசைக்க அவரும் "சரி சார் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க " என்று சொன்னார்.

மருத்துவமனை என்றாலே எனக்கு அலர்ஜி அதுவும் அரசாங்க மருத்துவமனை என்றால் சொல்லவேண்டுமா..? அந்த வாசனையே எனக்கு குமட்டிக்கொண்டு வந்தது.

பக்கத்தில் உள்ள ஊழியர் ,"என்னாச்சுப்பா..?" என்றார்

"சின்ன ஆக்சிடெண்ட்ங்க.."

"பைல் பண்ணினா போலிஸ் கேஸாயிடும்" என்று அவர் கூற

"அதுக்குத்தான் வந்தோம் "என்று கூறிவிட்டு என்னுடைய முறை வந்ததால் உள்ளே சென்றேன்.

மருத்துவக்கல்லூரி பயிற்சி மாணவர் & மாணவி ஒருவர் அமர்ந்திருக்க, அவர்கள் என்னிடம் எல்லாம் விசாரித்ததார்கள். பின் தோள்பட்டையில் ஊமைக்காயம் பட்டிருப்பதாகவும், கைளை ஸ்கேன் செய்யவேண்டும் என்றும் ரிப்போர்ட் எழுதிவிட்டு ஒரு குறிப்பிட்ட படுக்கையை எனக்காக தேர்வு செய்தார்கள்.

பின்னர் கைகளில் ஒரு ஊசி போட்டுவிட்டு அந்தப்படுக்கையில் மனமில்லாமல் சென்று அமர்ந்தேன்.

அந்த ஏட்டையாவிடம் , "அய்யோ இங்கேயா இருக்க"

"அப்பத்தான் கேஸ் பைல் பண்ணமுடியும்..நம்ம பக்கம் ஸ்ட்ராங்கா இருக்கும்..கொஞ்ச நேரம்தான்பா..நான் போய் வண்டி என்ன ஆச்சு..அந்த எஸ் ஐ வந்தாரா இல்லையான்னு பார்த்துட்டு அங்குள்ள நிலைமையை பார்த்துட்டு வந்துர்றேன்.. "என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

எனக்கு அங்குள்ள சூழல் ஒரு விதமான பயத்தை கொடுத்தது. தயக்கத்துடனையே சென்று எனக்குண்டான படுக்கையில் சென்று அமர்ந்தேன். எனக்கு நீண்ட நாட்களாகவே அரசாங்க மருத்துவமனையைப் பற்றி ஒரு லைவ் ஆர்ட்டிக்கிள் எழுத வேண்டும் என்று ஆசை..ஆனால் எப்படி சூழல் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது பாருங்களேன்?

சில இரத்தக்காயங்கள் ஆங்காங்கே தெரிகின்ற ஒரு போர்வையை விரித்திருந்தார்கள். நான் பட்டும் படாமல் நுனியில் உட்கார்ந்திருந்தேன். சுற்றி நோட்டமிட ஆரம்பித்தேன்.

எனக்கு பக்கத்து படுக்கையில் ஒரு சிறுவனுக்கு கைகள் இரண்டிலும் பலத்த கட்டு போட்டிருக்க அவன் குப்புற படுத்துக் கிடந்தான். அய்யோ பாவம்..நிமிர்ந்து கூட படுக்க முடியவில்லை

இந்தப்பக்கத்தில் ஒருவன் உடலெல்லாம் வெட்டுக்காயத்தோடு முனகிக் கிடந்தான். சட்டைப்பையில் மற்றும் பேண்டில் எல்லாம் இரத்தம் உறைந்து போய் இருந்தது. அவனிடம் ஒரு லேடி டாக்டர் ( பயிற்சி மாணவி ) "என்னப்பா ஆச்சு..?"

அவன் அலட்சியமாக "ஒரு தகறாறு வெட்டிட்டாங்க.." என்று கூற

"எதுக்கு வெட்டினாங்க?" - டாக்டர்

அவன் சொல்லவில்லை மௌனம் சாதித்தான்.எனக்கு அந்தச் சூழல் வயிற்றில் புளியைக் கரைத்தது. அவனுக்கு அந்த லேடி டாக்டர் மயக்க மருந்து கொடுத்து வெட்டுக்காயங்களுக்கு மருந்து அளித்துக்கொண்டிருந்தார் எந்தவித முக சுளிவுகளும் இல்லாமல். மருத்துவத்தொழிலின் புனிதம் கொஞ்சம் கொஞ்சமாய் எனக்கு தெரிய ஆரம்பித்தது.

கொஞ்சம் தூரத்தில் உள்ள ஒரு படுக்கையில் உள்ளவனுக்கு முகத்தில் எல்லாம் வெட்டுக்காயங்கள். அவனை அவனது உறவினர் கைத்தாங்கலாக பாத்ரூம் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். தன்னுடைய உதவியின்றி பாத்ரூம் கூட செல்லமுடியாத நிலைமை எந்த மனிதனுக்கும் வரவே கூடாது..

கவர்மெண்ட் ஆஸ்பிடலில் இருப்பது போல ஒரு கொடுமை எங்கும் கிடையாது. பேசாமல் யாருக்காவது தண்டனை கொடுக்க விரும்பினால் அவனை கவர்மெண்ட் ஆஸ்பிடலில் ஒரு வாரம் தங்க வைத்தால் போதும் என்று சொல்லும் அளவிற்கு சூழல் என்னை மிகவும் பாதித்தது.

ஒரு நோயாளியின் காயங்கள் அவனுடைய நிலைமைகள் பக்கத்து படுக்கையில் உள்ள நோயாளியின் மனநிலையை பாதிக்காத வண்ணம் கேபின் கேபினாக படுக்கை அறையை அமைத்தால்தான் என்ன..? ஏழைகள் அல்லது இலவசமாய் செய்கின்ற எல்லாமுமே அப்படித்தான் இருக்கின்றன. இதற்கு ஒரு தீர்வே கிடையாதா..? என்று விடியுமோ..?

இதையெல்லாம் கவனித்துக் கொண்டு இருக்கும்பொழுதே எனது நண்பன் மற்றும் ஏட்டையா ஆகியோர் வந்தனர். அங்குள்ள நர்சுகளிடம் என்னை வெளியே அழைத்துச் சென்று தேநீர் வாங்கித்தந்துவிட்டு வருவதாக சொல்லி அழைத்துச்சென்று மருத்துவமனைக்கு வெளியே அழைத்துச் சென்று விட்டார்.


"உன்னை அட்மிட் பண்ணியாச்சுன்னு சொன்னவுடனையே அந்த ஆள் சமாதானத்திற்கு வந்திட்டாரு..அந்த எஸ்ஐ யிடம் பேசினேன். அந்த ஆளுக்கு இன்சூரன்ஸ்க்காக ஒரு ரிப்போர்ட் கொடுத்துறலாம். நீங்க கேஸை வாபஸ் வாங்கிருங்கன்னு சொல்லிட்டாரு..ஏன்னா நமக்கும் இன்சுரன்ஸ் இல்லை.."

"அதையும் மீறி அவர் கேஸ் போடணும்னு சொன்னாருன்னா நம்ம மறுபடியும் படுக்கையில சேர்ந்துறலாம் "

என்று கூறிவிட்டு, அந்த எஸ் ஐ யை பார்ப்பதற்காக ஜங்ஷன் சென்றுகொண்டிருக்கும்பொழுது நண்பர் ஷாஜஹான் தான் மறுநாள் துபாய் செல்லவேண்டும் ஆகவே தானும் காவல் நிலையம் வந்தால் சிக்கல் என்று நான் வரவில்லை என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்

உடனே காஜா வந்து எனது வாகனத்தை எடுத்துக்கொண்டு வர நான் அந்த ஏட்டையாவுடன் ஜங்ஷன் சென்றேன். அந்த எஸ் ஐ வெளியில் போய்விட மாலை வரச்சொன்னார்கள்.

3 மணியிலிருந்து 5.30 மணிவரை அங்கு காத்திருந்தும் எஸ் ஐ வராததால் அவருக்கு போன் செய்ய அவரோ வழக்கு போட விரும்பவில்லை என்று எழுதிக்கொடுத்துவிட்டு சென்று விடுமாறு சொல்ல அவ்வாறே எழுதிக்கொடுத்துவிட்டு கிளம்பினேன்.

மனு எழுதும்பொழுது எனக்கு பள்ளிக்கூட காலத்தில் லீவு லட்டர் எழுதியதுதான் ஞாபகம் வந்தது. அங்குள்ள ஒரு காவலர் சொல்லச் சொல்ல நான் எழுதினேன்.

மனுதாரரின் பெயர் : கே. ஞானியார் வயது : 28


--------------------------

திருநெல்வேலி.



பெறுநர் : உயர்திரு போக்குவரத்து துறை ஆணையர் அவர்கள் - திருநெல்வேலி


ஐயா,


நான் இன்று காலை 12.45 மணியளவில் பாளையங்கோட்டை அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு சென்றுவிட்டு ஹைகிரவுண்ட் சென்று கொண்டிருந்தபொழுது எனது வாகனமான TN72 H 1717 - Splender– மீது தனது காரை ( TN 72 P303 ) காரை சட்டென்று திருப்ப முயன்று என் மீது மோதிவிட்டார். என்னுடைய வாகனத்திற்கு சிறு சேதமும் எனக்கு கைகளில் ஊமைக்காயமும் உள்ளங்கையில் சிறு சிராய்ப்பும் ஏற்பட்டள்ளது. நாங்கள் எங்களுக்குள் சமாதானமாகி போய்விட்டபடியால் இது தொடர்பாக போலிஸ் தலையீடு தேவையில்லை என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இப்படிக்கு

கே. ஞானியார்






என்னுடன் காவல் துறையைச் சார்ந்த தெரிந்தவர் ஒருவர் வரப்போய் அங்குள்ள நிலைமைகளை சீராக கொண்டு செல்ல முடிந்தது. இல்லையென்றால் பணம் விரயம் செய்ய வேண்டிய நிலை உருவாகியிருக்கும்.


எனக்கு நேர இருந்த ஒரு பெரிய ஆபத்து நீங்கிவிட்டதோ என்ற ஒருவிதமான திருப்தியிலும் உள் அச்சத்திலும் மன கலக்கத்திலும் மற்றும் அம்மா ஒத்தடம் கொடுத்த கைகளோடும் நினைவுகளின் அசைவுகளோடும் தூங்கப்போகின்றேன்.


- ரசிகவ் ஞானியார்

தேன் கூடு