Tuesday, May 10, 2005

தமிழ் வாத்தியாருக்கு ஒரு மன்னிப்பு கடிதம்

அன்புள்ள தமிழ் அய்யாவுக்கு,

ஞாபகமிருக்கிறதா உங்களுக்கு என்னை? கொஞ்சம் பின்னோக்கி ஓட்டுங்கள் உங்கள் ஓட்டை ராஜ்தூத் பைக்கை.
1998 ம் வருடம் சதக்கத்துல்லா அப்பா கல்லூரி தாங்கள் வகுப்பில் தமிழ் பாடம் நடத்திக்கொண்டிருக்கிறீர்கள். நான் கடைசி பெஞ்சில் இடதுபக்கத்திலிருந்து மூன்றாவதாக இருப்பேனே?

மேடையில் கூட சிலசமயம் கவிதை கூட வாசிப்பேனே..
ஞானியார் அய்யா ஞாபகமிருக்கிறதா?
உங்களிடம் முதலில் ஒரு மன்னிப்பு கேட்டுக்கொண்டு நான் மன்னிப்பு கேட்டதன் காரணத்தை சொல்கிறேன்.

சரியாக 11 மணி - நீங்கள் தமிழ் வகுப்பை ஆரம்பித்து விட்டிர்கள். தமிழ் வகுப்புக்கு மட்டும் கணிதம், விலங்கியல் மற்றும் ஆங்கில இலக்கியம் வகுப்பு மாணவர்கள் ஒன்றாக கூடுவார்கள்.
நீங்கள்
"தேமா , புளிமா " என நடத்திக்கொண்டிருக்க
பின்னாலிருந்து ஒரு குரல்
"மாமா , உப்புமா " என எதிரொலித்ததே ஞாபகமிருக்கிறதா? அது நான்தான் அய்யா
பின் ஓர்நாள்
"யானைப்படை, குதிரைப்படை , காலாட்படை...." - என்க

நானோ "பூனைப்படை - எலிப்படை " என எடுத்துவிட நீங்கள் திரும்பி பார்க்கையில் அமைதியாயிருக்க , நீங்களோ கோபப்பட்டு
"எவன்டா அது பண்பற்ற குடும்பத்தில் பிறந்தவன்" என பண்பில்லாமல் பேசினீர்களே ஞாபகமிருக்கிறதா?

என்னதான் இருந்தாலும் நீங்கள் ஒரு ஆசிரியர் அப்படியெல்லாம் பேசியியிருக்கக்கூடாது.
அதனால்தான் மேலும் மேலும் சேட்டை செய்யவேண்டும் போல தோன்றியது.
ஆகவே பல குழுக்களாக பிரிந்து கொண்டு என்ன என்ன வம்புகள் செய்யலாம் என அலிபாபாவும் 40 திருடர்களும் மாதிரி திட்டம் போட ஆரம்பித்தோம்.
முடிவில் வகுப்புபோடு இணைந்துள்ள ஒரு டாய்லெட்டில் வெடி ஒன்றை வைத்துவிட்டு நீங்கள் வருகின்ற சமயம் வெடிக்கவைக்கலாமென திட்டமபோட்டிருந்தோம். ஆனால் அதை தெரிந்து கொண்டா இல்லை எதேச்சயாகவா என தெரியவில்லை , நீங்கள் வகுப்பறைக்கு வரவில்லை. தப்பித்தீர்கள்!

பின்னர் நான் , மஸ்தான் மற்றும் அசன் ஒரு புறமாகவும்

ரமேஷ்-ராஜா-தாஸ் ஒரு புறமாகவும் பிரந்து இருந்து நீங்கள் வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கும் சமயத்தில் என் தலைமையிலான அணி கால்களை வேகமாக தரையில் தட்ட நீங்கள் சத்தம் வரும் திசையான எங்கள் பக்கம் திரும்பி

"கண்டுபிடிச்சுட்டேன்டா அந்த அயோக்கியப்பயல..சத்தம் இங்கிருந்துதாண்டா வருது"

என கூறிக்கொண்டே எங்கள் பக்கம் நெருங்க, அந்த சந்தர்பத்தை பயன்படுத்திக்கொண்டு இன்னொரு திசையிலிருந்து ராஜா தலைமையிலான அணி கால்களை தரையில் தட்ட ஆரம்பிக்க நீங்கள் கடும்கோபத்தோடு அந்த டயலாக்கை அந்தப்பக்கம் விடுவீர்கள் ஞாபகமிருக்கிறதா?

மூன்று வகுப்பு சேர்ந்து ( கணிதம் - ஆங்கில இலக்கியம் -விலங்கியல் ) இருப்பதால் உங்களால் சத்தம் திசை தெரியுமே தவிர யாரிடமிருந்து வருகிறது என தெரியாது..

பின் ஓர்நாள் எனககு தெரிந்த ஒரு மாணவி அந்த பீரியடு வராமல் போக அட்டன்டன்ஸ் எடுக்கும் சமயம் அவள் பெயரின் நம்பர் கூறி நீங்கள் அழைக்க நான் குனிந்துகொண்டு

"எஸ் சார் " என பெண் குரலில் அழைத்தேன் .

நீங்கள் தலைகுனிந்து கொண்டு அட்டன்டன்ஸ் எடுப்பதால் கண்டுபிடிக்கமாட்டீர்கள் என நினைத்தேன்.

ஆனால் குரல் வித்தியாசப்படுவதை உணர்ந்து நீங்கள் தலைநிமர்ந்து சத்தம் வந்த திசையை நோக்கி வந்து , எனக்கு முன்னால் பெஞ்சிலிருந்து என் செய்கையை கண்டும், உங்கள் கோபத்தை கண்டும், அடக்கமுடியாமல் சிரித்துக்கொண்டிருந்த அந்த அப்பாவி மாணவன் முரளியை எல்லோர் முன்னிலையிலும் எழுப்பிவிட்டு திட்டினீர்களே அய்யா.

அப்போது திட்டு வாங்கியும் என்னை காட்டிக்கொடுக்காத அந்த நண்பனை நினைத்து பெருமைப்படுவதா இல்லை
என்னை விட்டு விட்டு யார் யாரையோ பிடித்துக்கொண்டிருக்கும் தங்களை நினைத்து பரிதாப்படுவதா என தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தேன் அய்யா

சேர்ந்து இருந்தால்தானே பிரச்சனை என ஆங்கில இலக்கியம் வகுப்பை மட்டும் மற்ற வகுப்போடு சேர்த்து வைத்தீர்கள் அய்யா..ஞாபகமிருக்கிறதா அய்யா?
நீங்கள் பிரித்து வைத்ததன் பலனை முதல் நாளே உண்ந்து கொண்டீர்கள் . ஆம் பிரித்து வைத்தால் மாணவர்கள் அமைதியாகிவிடுவார்கள் என்ற சந்தோஷத்தில் என்றைக்குமில்லாத உற்சாகத்தோடு அன்று வகுப்பறை வந்துகொண்டிருக்கிறீர்கள்
நீங்கள் எங்கள் வகுப்பறை ஜன்னலை கடந்து எங்கள் வகுப்புக்குள் நுழையுமுன் நாங்கள் ஏற்கனNவு பேசிக்கொண்டது போல மொத்தமா கைதட்டிவிட்டு அமைதியாக இருக்க..
கடுங்கோபம் உங்களுக்கு...ஆதங்கத்தில் சொல்கிறீர்கள்

"நன்றி! நன்றி! வரவவேற்புக்கு நன்றி.. எனக்கு இவ்வளவு மரியாதையா...?"

என கூறிவிட்டு மிகவும் சோகமான நிலைக்கு வந்துவிட்டீர்கள் . பின்னர்தான் தெரிந்தது கைதட்டுகின்ற சலசலப்பில் அத்தனை மாணவ - மாணவிகளுக்கு முன்னால் எவனோ ஒருவன் தங்கள் பெயரை கூறி மரியாதை இல்லாமல் அழைத்திருக்கிறான் என்று
"என் பதவிக்கு மரியாதை கொடுக்க வேண்டாம் என் வயசுக்காவது மரியாதை கொடுங்களேன் "
நீங்கள் பரிதாபமாய் சொல்வதை கேட்டு நான் மிகவும் கஷ்டப்பட்டுவிட்டேன். அய்யா கண்டிப்பாய் அது நான் இல்லை.

நான் தங்களின் பீரியடில் கிண்டல் செய்து பெண்களுக்கு மத்தியில் எழும்புகின்ற சிரிப்பலைக்காகவும் மற்றும் அந்த நேரத்து ஒரு ஹீரோதனத்திற்குத்தானே தவிர,
உண்மையில் தங்களின் மீது அபரிதமான மதிப்பு இருக்கிறது அய்யா !
பெயர் சொல்லியெல்லாம் நான் அழைக்கமாட்டேன்
பின்னர் வருத்தப்பட்டு கொண்டு வகுப்பறையை விட்டு வேகமாக வெளியேசென்று கல்லூரி முதல்வரை அழைத்து வந்து விட்டீர்கள்

அவரும் வந்து,
" யாருப்பா அது மரியாதை இல்லாமல் அவரை அழைத்தது"
என்று கேட்டுவிட்டு ஒவ்வொருவரையாய் நோட்டம்விட முதல் பெஞ்சிலிருந்த ( கடைசி பெஞ்சிலிருந்து மாறி விட்டேன் ) என் மீதும் தங்கள் பார்வை வர
"அட! நீ ஞானியர் தானப்பா!" ( அப்பல்லாம் ரசிகவ் இல்லை )
"மேடையில் கவிதை - வாழ்த்துரை எல்லாம் பண்ணுவாயே நீதானப்பா" என்க
நானும் எதுவுமே நடவாத மாதிரி
"ஆமா சார்" என்க
"நீ இருக்கிற க்ளாஸ்லயாப்பா இப்படி நடக்குது.." என்று கேட்க

எல்லா மாணவர்களின் ஒட்டு மொத்த வயிற்றெரிச்சல் புகை ஜன்னல் வழியாக ஒரு மேகம் கூட்டம் போல செல்வதை நான் மட்டும்தான் கவனித்தேன்

"நீ சொல்லுப்பா யாருப்பா சத்தம் போட்டது"
"எனக்கு தெரியாது சார் "
உடனே அவர் ஒட்டு மொத்த வகுப்பறையையும் வெளியேற்றிவிட்ட பின்னரே தங்களுக்கு ஒரு நிம்மதி எங்களை பழிவாங்கிவிட்டதாக.

அது ப்ராக்டிகல் நேரம் என்பதால் நாங்களும் கெஞ்சி கூத்தாடி அபராதம் கட்டி மன்னிப்பு கடிதம் எழுதி இப்படி ஏதேதோ நிகழ்வுகள் அந்த நேரத்தில்.

இப்படி பல பல நிகழ்வுகள் எனக்கு அந்த நேரத்தில் ஜாலியாக தெரிந்தாலும் தங்களுக்கு எப்படி மனவருத்தத்தை உண்டாக்கியிருக்கும்.

அதனை நான் எம்.சி.ஏ படிக்கும் போது என்னுடைய டியுசன் சென்டரில்கல்லூரி மாணவர்களுக்கு டியுசன் எடுத்தேனே அப்போது உயர்ந்து கொண்டேன் அய்யா ..
பின்னால் இருந்து வரும் கமெண்ட்ஸ்களுக்கு ஆசிரியர்களின் வலி எப்படியிருக்கும் என்று...
தங்களின் இடத்தில் வகுப்பறையின் முன்னால் நின்று பார்த்தால்தான் தெரியும் அதன் உண்மையான வலி.
அதனை நான் இப்போது அறிந்து கொண்டதால்தான் அய்யா !
தங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்..
என்னுடைய செய்கைகளுக்கும் - என்னை தூண்டிய - தூண்டப்பட்ட மாணவர்களின் சார்பில்
எட்டு வருடங்களுக்கு பிறகு ஒரு மன்னிப்பு கடிதம்

மனிதர்கள்கள் மன்னிக்காதவரை
இறைவனும் மன்னிக்க மாட்டான்
ஆகவே மன்னித்துகொள்ளுங்கள் அய்யா
என்னை மட்டுமல்ல
மஸ்தான் - சராசரியை விட குறைவான உயரத்தில் முடியை எண்ணெய் வழிய
இருபக்கமாய் சீவி என்னுடன் கடைசி பெஞ்சில் அமரிந்திருப்பான் -
கணிதப் பிரிவு
அசன் - கொஞ்சம் குள்ளமாக இரண்டாவது பெஞ்சில் அமரிந்திருப்பான் - கணிதப் பிரிவு
ராஜா - எதிரி வானரப்படை தலைவன்..
கொஞ்சம் உயரமாக எப்போதும் பான்பராக் சாப்பிட்டுக்கொண்டு
இருப்பானே.. 1999 ல் நமது கல்லூரியில் என்னுடன் சேரந்து கவிதைப்புத்தகம்
வெளியிட்டானே - ஆங்கில இலக்கியம்
ரமேஷ் - அவனும் ராஜாவின் உயரத்தில் தங்களை அடிக்கடி எதிர்த்து எதிர்த்து பேசுவானே -
விலங்கில் பிரிவு

தாஸ் - கொஞ்சம் சிகப்பாக சராசரி உயரத்தில் எப்பொழுது அயர்ன் செய்த
சட்டை அணிந்து வருவானே - விலங்கியல்
எல்லோரும் சார்பில் மன்னித்துக்கொள்ளுங்கள் அய்யா!
எட்டு வருடம் கழித்து கேட்கின்ற இந்த மன்னிப்பு
தங்கள் காதில் மட்டுமல்ல
இதயம் வரை எட்டும் என நம்புகிறேன்.

மன்னிச்சுக்கோங்கய்யாயாயாயா......
இதயம் நெகிழ்வுடன்
- ரசிகவ் ஞானியார்

2 comments:

meenamuthu said...

அடடா..என்ன அட்டகாசம்!

ஆனாலும் மன்னிப்புக் கடிதம் நிஜம்மாகவே இதயம் நகிழ்த்தி விட்டது ரசிகவ்!அவசியம் ஆசிரியர் இதைப் பாக்கணுமே?

அன்பு
மீனா.

'ரசிகவ் என் வீடு(பதிவு)! தேடிவந்து பின்னூட்டம் கொடுத்ததற்கு நன்றி ஆமா எப்படித் தெரியும்?!

enRenRum-anbudan.BALA said...

Rasigav,
Beautifully written stuff ! Congrats !
Pl. keep writing.

sorry for commenting in English :-((

தேன் கூடு