Monday, April 25, 2005

ஓடுவதற்கு முன் ஒரு நிமிஷம்

சைனாவுக்கு போகவேண்டுமானாலும்
சைக்கிளிலேயே செல்லும்
என் தந்தை
என்னைப்
பக்கத்து தெருவிற்குக் கூட
பைக்கில் போக சொல்லுகிறார்

இவரை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?

தேர்வு சமயங்களில்
இரவு முழுவதும்
படித்துக்கொண்டிருப்பதோ நான்
விழித்துக் கொண்டிருப்பதோ என் தாய்!

அவளை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?

அலுவலகம் செல்லும் அண்ணன்
மடித்து வைத்த சட்டையை
வெட்டியாய் ஊர்சுற்ற போகும் நான்
அணிந்துகொண்டாலும் ஆனந்தப்படுவானே?

அவனை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?

நான் செலவுக்கு
பணம் கேட்கும்பொழுது – தான்
நகை வாங்க வைத்திருக்கும் பணத்தை கூட
புன்னகையோடு தருவாளே
என் தங்கை!

அவளை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?

கோபத்தில் தம்பியை அடித்துவிட
அது அப்பாவரும் நேரம் என்பதால்
என்னை காட்டிக்கொடுக்காமல்
அழுகையை அடக்கி கொள்வானே

அவனை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?

இப்படி
எனக்காக அழுவதற்கு
எத்தனையோ இதயங்களிருக்க
என்னை அழவைக்கும்
நீ எனக்கு வேண்டாமடி!

- ரசிகவ் ஞானியார்

1 comment:

SHIVAS said...

கொன்னுட்டிங்க போங்க.

தேன் கூடு